உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவின் காலத்தில் மக்கள் என்னென்ன வரிகளை எல்லாம் கட்ட வேண்டியிருந்தது?
ஆரம்பக் காலத்தில், உண்மை வழிபாட்டை ஆதரிப்பதற்காக இஸ்ரவேலர்கள் பணம் கொடுத்து வந்தார்கள். ஆனால், இயேசுவின் காலத்தில் யூதர்கள் நிறைய வரிகளைக் கட்ட வேண்டியிருந்தது. அது அவர்களுடைய வாழ்க்கையை ரொம்ப பாரமாக்கிவிட்டது.
வழிபாட்டுக் கூடாரம் இருந்த சமயத்திலும் ஆலயம் கட்டிய பின்பும் வயதுவந்த யூத ஆண்கள் ஒவ்வொருவரும் உண்மை வழிபாட்டை ஆதரிப்பதற்காக அரை சேக்கலை, அதாவது (இரண்டு திராக்மாக்களை) கொடுக்க வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டில் ஏரோது கட்டிய ஆலயத்தைப் பராமரிப்பதற்கும் அங்கே பலி செலுத்துவதற்கும் இந்த வரியை பயன்படுத்தினார்கள். வரி கட்டுவதைப் பற்றி இயேசு என்ன நினைக்கிறார் என்று யூதர்கள் சிலர் பேதுருவிடம் கேட்டார்கள். வரி கட்டுவது தப்பு என்று இயேசு சொல்லவில்லை. சொல்லப்போனால், காசு எடுத்துக்கொண்டு வந்து வரி கட்டச் சொல்லி பேதுருவிடம் அவர் சொன்னார்.—மத். 17:24-27.
இஸ்ரவேலர்கள் தங்களுக்குக் கிடைத்த விளைச்சலில் அல்லது வருமானத்தில் பத்திலொரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். (லேவி. 27:30-32; எண். 18:26-28) ஆனால், இயேசுவின் காலத்தில் இருந்த மதத் தலைவர்கள் ஒவ்வொரு காய்கறியிலும், சொல்லப்போனால் “புதினாவிலும் சதகுப்பையிலும் சீரகத்திலும்”கூட, பத்திலொரு பாகத்தைத் தர வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்தினார்கள். பத்திலொரு பாகத்தைக் கொடுக்கும் பழக்கத்தை இயேசு தப்பு என்று சொல்லவில்லை. ஆனால், இந்தச் சட்டத்தை வேத அறிஞர்களும் பரிசேயர்களும் தவறாகப் பயன்படுத்தியதைத்தான் கண்டனம் செய்தார்.—மத். 23:23.
ரோமர்களின் ஆட்சியில் யூதர்கள் நிறைய வரிகளைக் கட்டினார்கள். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் பணத்தையோ பொருளையோ நில வரியாகக் கட்ட வேண்டியிருந்தது. 20-லிருந்து 25 சதவீதத்தை அவர்கள் வரியாகக் கட்டினார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு யூதரும் தலைவரியையும் கட்ட வேண்டியிருந்தது. இந்த வரியைப் பற்றித்தான் பரிசேயர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு, “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர் சொன்னார். (மத். 22:15-22) வரி கட்டுவதைப் பற்றி நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
பொருள்களை ஏற்றுமதி செய்யும்போதும் இறக்குமதி செய்யும்போதும் சுங்க வரி கட்ட வேண்டியிருந்தது. துறைமுகங்களிலும் பாலங்களிலும் சாலை சந்திப்புகளிலும் ஊர்களின் அல்லது சந்தைகளின் நுழைவாயில்களிலும் அதை வசூலித்தார்கள்.
ரோமர்களின் காலத்தில் எக்கச்சக்கமான வரிகள் இருந்தன. வரி கட்டி கட்டியே மக்கள் நொந்துபோனார்கள். அதைப் பற்றி ரோம வரலாற்று ஆசிரியர் டாஸிட்டஸ் சொன்னார். இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்தில், அதாவது ரோமப் பேரரசன் திபேரியு காலத்தில், “சிரியாவிலும் யூதேயாவிலும் இருந்த மக்கள் வரி கட்டி கட்டியே ஓய்ந்துபோனார்கள். அதனால், வரியைக் குறைக்கச் சொல்லி கெஞ்சிக் கேட்டார்கள்” என்று அவர் சொன்னார்.
வரி வசூலித்த விதமும் மக்களை ரொம்ப பாரமாக்கியது. வரி வசூலிப்பவர் என்ற பதவியைக் கொடுப்பதற்காக ஏலம் விடப்பட்டது. யார் நிறைய பணம் கொடுத்தார்களோ அவர்களுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது. இந்த வரி வசூலிப்பவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக வரிப்பணத்தைவிட அதிகமாக மக்களிடம் வசூலித்தார்கள். இப்படி வசூலிப்பதற்காக, அவர்களுக்குக் கீழே நிறைய பேரை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். வரி வசூலிப்பதற்காக சகேயுவும் அவனுக்குக் கீழே நிறைய பேரை வேலைக்கு வைத்திருந்தான். (லூக். 19:1, 2) வரிப்பணத்தை வாங்க வந்தவர்களை மக்களுக்கு ஏன் பிடிக்காமல் போனது என்றும் அவர்களை ஏன் மக்கள் கேவலமாக நினைத்தார்கள் என்றும் இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.