Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 22

ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

“நீங்கள் ஒவ்வொருவரும்  . . . ஞானஸ்நானம் எடுங்கள்.”​—அப். 2:38.

பாட்டு 72 இருள் நீக்கி ஒளி ஏற்றுவோம்

இந்தக் கட்டுரையில்... *

1. கூடிவந்திருந்த மக்களிடம் பேதுரு என்ன சொன்னார்?

வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு மொழி பேசுகிறவர்களும் ஒன்றாகக் கூடி வந்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், அற்புதமான ஒரு விஷயம் நடக்கிறது. யூதர்களில் சிலர் அங்கே கூடி வந்திருக்கிற மக்களுடைய மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய மொழிகளில் பேசுவதைப் பார்த்து அந்த மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் அந்த யூதர்களும் அப்போஸ்தலன் பேதுருவும் சொல்வதுதான். இயேசு கிறிஸ்துமேல் விசுவாசம் வைத்தால் மீட்பு கிடைக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த விஷயம் மக்களின் மனதை ஆழமாகத் தொடுகிறது. அதனால், “நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார்கள். அதற்கு பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும்  . . . ஞானஸ்நானம் எடுங்கள்” என்று சொல்கிறார்.​—அப். 2:37, 38.

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை வைத்திருக்கும் ஓர் இளைஞருக்கு ஒரு சகோதரர் தன்னுடைய மனைவியோடுகூட பைபிள் படிப்பு நடத்துகிறார் (பாரா 2)

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்? (அட்டைப் படம்)

2 அடுத்து நடந்த விஷயம்தான் ரொம்பவே ஆச்சரியமான ஒரு விஷயம். ஒரே நாளில், 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்துவின் சீஷர்களாக ஆனார்கள். அன்று ஆரம்பித்த அந்தச் சீஷராக்கும் வேலை இன்று வரைக்கும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்று சில மணிநேரங்களிலேயே யாரும் ஞானஸ்நானம் எடுத்துவிட மாட்டார்கள். அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு சில மாதங்களோ, ஒரு வருஷமோ, அதைவிட அதிக காலமோ எடுக்கலாம். நீங்கள் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தால், அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் எந்தளவு உதவ வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஞானஸ்நானம் எடுக்க பைபிள் மாணவர்களுக்கு எப்படி உதவலாம்? இதைப் பற்றி அடுத்து வருகிற பாராக்களில் கவனிக்கலாம்.

கற்றுக்கொண்டபடி செய்ய பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

3. பைபிள் மாணவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமானால் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று மத்தேயு 28:19, 20 சொல்கிறது?

3 பைபிள் மாணவர்கள் என்னவெல்லாம் கற்றுக்கொண்டார்களோ, அதை ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே செய்ய வேண்டும். (மத்தேயு 28:19, 20-ஐ வாசியுங்கள்.) அப்படிச் செய்யும்போது, இயேசுவின் உதாரணத்தில் வருகிற ‘புத்தியுள்ள மனுஷனை’ மாதிரி அவர்கள் இருப்பார்கள். அந்த மனுஷன் ஆழமாகத் தோண்டி பாறைமேல் அஸ்திவாரம் போட்டு வீட்டைக் கட்டினான். (மத். 7:24, 25; லூக். 6:47, 48) அப்படி என்றால், அந்தப் புத்தியுள்ள மனிதன் மாதிரி இருப்பதற்கு, அதாவது கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு, பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? அதற்கு மூன்று வழிகள் உள்ளன.

4. ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு தொடர்ந்து முன்னேற மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்? (“ குறிக்கோள்களை வைக்கவும் அதை அடையவும் மாணவருக்கு உதவுங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

4 குறிக்கோள்களை வைப்பதற்கு மாணவர்களுக்கு உதவுங்கள். இதைச் செய்வது ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம். ரொம்ப தூரத்தில் இருக்கிற ஓர் இடத்துக்கு நீங்கள் போய்க்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். போகும் வழியில் அழகான இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆங்காங்கே நிறுத்தி அவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டே நீங்கள் போகிறீர்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் போய்ச்சேர வேண்டிய இடம் அவ்வளவு தூரமாக இருப்பதுபோல் உங்களுக்குத் தோன்றாது. பைபிள் மாணவர்கள் வைக்கிற சின்னச் சின்ன குறிக்கோள்கள்தான் அந்தப் பயணத்தில் வருகிற அழகான இடங்கள். அப்படிக் குறிக்கோள்கள் வைக்கும்போது, தூரத்தில் இருக்கிற ஞானஸ்நானம் என்ற குறிக்கோளை அடைவது அவர்களுக்குக் கஷ்டமாகத் தெரியாது. அதற்கு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் இருக்கிற “குறிக்கோள்” என்ற பகுதியை பயன்படுத்துங்கள். அந்தப் பாடத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி நடந்துகொள்வதற்கு மாணவர் என்ன குறிக்கோளை வைக்கலாம் என்பதைப் பற்றி அவரிடம் பேசுங்கள். ஒருவேளை, அவர் வேறு ஏதாவது குறிக்கோளையும் வைக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதைப் பற்றியும் அவரிடம் பேசுங்கள். “வேறு ஏதாவது” என்ற பகுதியில் அதைப் பற்றி எழுதச் சொல்லுங்கள். சின்னச் சின்ன குறிக்கோள்களை வைப்பதற்கும் எதிர்காலத்தில் பெரிய குறிக்கோள்களை அடைவதற்கும் தவறாமல் இந்தப் பகுதியை மாணவருடன் சேர்ந்து கலந்து பேசுங்கள்.

5. மாற்கு 10:17-22-ல் சொன்னபடி, பணக்கார வாலிபனிடம் என்ன செய்யச் சொல்லி இயேசு சொன்னார், ஏன்?

5 வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள். (மாற்கு 10:17-22-ஐ வாசியுங்கள்.) ‘உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு என் பின்னால் வா’ என்று ஒரு பணக்கார வாலிபனிடம் இயேசு சொன்னார். அப்படிச் செய்வது உண்மையிலேயே கஷ்டம்தான். (மாற். 10:23) இருந்தாலும், இயேசு அப்படிச் செய்யச் சொன்னார். ஏனென்றால், அவன்மேல் அவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தார். இப்போது நம்முடைய விஷயத்துக்கு வரலாம். சில மாற்றங்களைச் செய்யும்படி பைபிள் மாணவர்களிடம் சொல்வதற்கு நாம் தயங்கலாம். ஏனென்றால், அந்த மாற்றங்களைச் செய்வதற்கு இன்னும் அவர் தயாராகவில்லை என்று நாம் நினைக்கலாம். உண்மைதான், பழைய பழக்கவழக்கங்களை களைந்து போட்டுவிட்டு, புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள கொஞ்சம் காலம் எடுக்கும். (கொலோ. 3:9, 10) ஆனால், மாற்றங்கள் செய்வதைப் பற்றி எவ்வளவு சீக்கிரம் நீங்கள் அவர்களிடம் பேசுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் அவர்கள் மாற்றங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். இப்படிப் பேசும்போது, அவர்கள்மேல் நீங்கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.​—சங். 141:5; நீதி. 27:17.

6. மாணவரை யோசிக்க வைக்கிற மாதிரி சில கேள்விகளை நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?

6 படிக்கிற விஷயத்தைப் பற்றி மாணவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு கேள்விகளைக் கேளுங்கள். இப்படிக் கேட்பதை நீங்கள் வழக்கமாக வைத்தால், போகப் போக முக்கியமான சில விஷயங்களைப் பற்றிப் பேசுவது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். இதைச் செய்வதற்கு இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, 04-வது பாடத்தில், “நீங்கள் யெகோவாவின் பெயரைச் சொல்லும்போது அவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற ஒரு கேள்வி இருக்கிறது. 09-வது பாடத்தில், “என்னென்ன விஷயங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?” என்ற ஒரு கேள்வி இருக்கிறது. இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பத்தில் மாணவருக்குக் கொஞ்சம் நேரம் ஆகலாம். ஆனால், வசனங்களையும் படங்களையும் பயன்படுத்தி அவரே யோசித்துப் பார்ப்பதற்கு நீங்கள் பயிற்சி கொடுக்க வேண்டும்.

7. மற்றவர்களுடைய அனுபவங்களை பயன்படுத்தி எப்படி உதவலாம்?

7 என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவர் புரிந்துகொண்ட பின்பு, அதைச் செய்வதற்கு உதவுவதற்காக சிலருடைய அனுபவங்களைச் சொல்லுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில், “அலசிப் பாருங்கள்” அல்லது “ஆராய்ந்து பார்க்கலாம்” பகுதியில் இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. * கூட்டத்துக்கு வருவதற்கு உங்கள் மாணவர் கஷ்டப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, 14-வது பாடத்தில், “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கிற யெகோவா என்னைக் கவனித்துக்கொண்டார் என்ற வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள். ஆனால், அந்த வீடியோவில் வருகிறவருடன் உங்கள் மாணவரை ஒப்பிட்டுப் பேசிவிடாதீர்கள். “அவங்களால முடிஞ்சதுன்னா உங்களால கண்டிப்பா முடியும்” என்று சொல்லி விடாதீர்கள். அந்த முடிவுக்கு மாணவரே வரட்டும். பைபிளில் சொல்லியிருக்கிற மாதிரி நடந்துகொள்வதற்கு அந்த வீடியோவில் வந்தவருக்கு எவை உதவின என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். ஒருவேளை, ஒரு வசனத்தையோ... அல்லது நடைமுறையில் அவர் செய்த ஏதாவது ஒரு விஷயத்தையோ... நீங்கள் சொல்லலாம். முடிந்தபோதெல்லாம் அவருக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவினார் என்பதைச் சொல்வதற்கு மறந்துவிடாதீர்கள்.

8. யெகோவாவை நேசிப்பதற்கு மாணவருக்கு எப்படி உதவலாம்?

8 யெகோவாவை நேசிக்க மாணவருக்கு உதவுங்கள். அதற்கு யெகோவாவின் குணங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகளைத் தேடுங்கள். யெகோவா சந்தோஷமான கடவுள் என்பதையும், அவரை நேசிக்கிறவர்களுக்கு அவர் எப்போதுமே துணையாக இருப்பார் என்பதையும் புரிந்துகொள்ள உதவுங்கள். (1 தீ. 1:11; எபி. 11:6) பைபிளில் இருக்கிற விஷயங்களின்படி செய்வதால் மாணவருக்கு என்ன நன்மை என்பதையும் யெகோவாவுக்கு அன்பு இருப்பதால்தான் அதை எல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதையும் விளக்குங்கள். (ஏசா. 48:17, 18) யெகோவாமேல் அன்பு அதிகமாக, அதிகமாக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு அதிகமாகும்.​—1 யோ. 5:3.

சகோதர சகோதரிகளோடு பழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்

9. தியாகங்கள் செய்வதற்கு மாற்கு 10:29, 30 பைபிள் மாணவருக்கு எப்படி உதவியாக இருக்கும்?

9 மாணவர் ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேற வேண்டுமானால், அவர் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஒரு பணக்கார வாலிபனிடம் அவனுடைய சொத்துக்களை எல்லாம் விட்டுவிட்டு வரச் சொல்லி இயேசு சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களுடன் பைபிள் படிக்கும் மாணவரும் வசதிவாய்ப்புகளை விட்டுவிட்டு வர வேண்டியிருக்கலாம். ஒருவேளை, அவர் செய்யும் வேலை பைபிளோடு ஒத்துப்போகவில்லை என்றால் அதையும் அவர் விட வேண்டியிருக்கலாம். வேறு சிலர், யெகோவாவை நேசிக்காத நண்பர்களை விட வேண்டியிருக்கலாம். இன்னும் சிலரை, அவர்களுடைய குடும்பத்தாரே ஒதுக்கிவிடலாம். இந்த மாதிரி சவால்களைச் சமாளிப்பது கஷ்டம்தான் என்று இயேசுவும் சொன்னார். ஆனால், அவர்கள் செய்கிற இந்தத் தியாகங்கள் எல்லாம் ஒருபோதும் வீண்போகாது என்றும் சொன்னார். ஏனென்றால், யெகோவாவை வணங்கும் ஒரு பெரிய குடும்பம் கிடைக்கும் என்று அவர் வாக்குக் கொடுத்தார். (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) இந்தக் குடும்பம் என்ற அற்புதமான பரிசில் இருந்து பிரயோஜனம் அடைவதற்கு உங்கள் பைபிள் மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

10. மானுவெல் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

10 மாணவரின் நண்பராக ஆகுங்கள். மாணவர்மேல் உண்மையிலேயே அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். இதைப் பற்றி மெக்சிகோவில் இருக்கிற மானுவெல் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்: “எனக்கு படிப்பு எடுத்தவரு, ஒவ்வொரு தடவ படிப்பு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும் ‘நீங்க எப்படி இருக்கீங்க?’னு என்னை கேப்பார். அதனால மத்த விஷயங்களகூட என்னால தாராளமா அவர்கிட்ட சொல்ல முடிஞ்சது. அவர் உண்மையிலேயே என்மேல அக்கறை வெச்சிருந்தார்.”

11. மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கும்போது அவர்கள் எப்படிப் பிரயோஜனம் அடைவார்கள்?

11 சீஷர்களுக்காக இயேசு எப்படி நேரம் ஒதுக்கினாரோ அதே மாதிரி உங்களுடைய பைபிள் மாணவர்களுக்காக நீங்களும் நேரம் ஒதுக்குங்கள். (யோவா. 3:22) முடிந்தபோதெல்லாம் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிற பைபிள் மாணவர்களைக் காபி குடிக்கவோ... சாப்பாட்டுக்கோ... பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்க்கவோ... உங்கள் வீட்டுக்குக் கூப்பிடுங்கள். முக்கியமாக, விடுமுறை நாட்களில் நீங்கள் கூப்பிடலாம். ஏனென்றால், அந்தச் சமயத்தில் தனிமையில் இருப்பது மாதிரி அவர்கள் நினைக்கலாம். “பைபிள் படிப்பிலிருந்து நான் யெகோவாவ பத்தி எவ்வளவு கத்துகிட்டேனோ, அதே அளவுக்கு என்கூட படிப்பு நடத்தறவர்கூட சேந்து பழகுன சமயத்திலயும் கத்துக்கிட்டேன். தன்னோட மக்கள்மேல யெகோவா எவ்வளவு அக்கறை வெச்சிருக்கறாருங்கறதயும் அவரோட மக்கள் எவ்வளவு சந்தோஷமா இருக்கறாங்கன்றதயும் நான் பாத்தேன். இந்த மாதிரி ஒரு வாழ்க்கைக்காகதான் நான் ஏங்கிட்டு இருந்தேன்” என்று உகாண்டாவில் இருக்கிற கஸீபி சொல்கிறார்.

வெவ்வேறு சகோதர சகோதரிகளை உங்களுடைய பைபிள் படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போகும்போது கூட்டங்களுக்கு வருவது அவர்களுக்குச் சுலபமாக இருக்கும் (பாரா 12) *

12. பைபிள் படிப்புக்கு வெவ்வேறு சகோதர சகோதரிகளை ஏன் கூட்டிக்கொண்டு போக வேண்டும்?

12 வெவ்வேறு சகோதர சகோதரிகளை பைபிள் படிப்புக்கு கூட்டிக்கொண்டு போங்கள். சில சமயங்களில் நீங்கள் மட்டும் போவதோ அல்லது ஏற்கெனவே கூட்டிக்கொண்டு போனவர்களையே கூட்டிக்கொண்டு போவதோ உங்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால், வெவ்வேறு சகோதர சகோதரிகளைக் கூட்டிக்கொண்டு போவது பைபிள் மாணவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். “எனக்கு பைபிள் படிப்பு நடத்தினவரோட கூடவந்த ஒவ்வொருத்தரும் வித்தியாசமான விதங்கள்ல சில விஷயங்கள விளக்குவாங்க. அதனால, ஒரு விஷயத்த வேற வேற கோணங்கள்ல என்னால பாக்க முடிஞ்சது. நிறைய பேரோட ஏற்கனவே பழகிட்டதால முதல் தடவையா கூட்டங்களுக்கு போனப்போ என்னால சகஜமாக இருக்க முடிஞ்சது” என்று மால்டோவாவில் வாழ்கிற திமித்திரி சொல்கிறார்.

13. கூட்டங்களுக்கு வருவதற்கு பைபிள் மாணவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும்?

13 கூட்டங்களுக்கு வருவதற்கு பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள். ஏனென்றால், அப்படி ஒன்றாகக் கூடிவரச் சொல்லி யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். (எபி. 10:24, 25) கூட்டங்களுக்கு வருவது நம் வழிபாட்டின் ஒரு பாகம். அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகள் நமக்குக் குடும்பம் மாதிரி இருக்கிறார்கள். நாம் கூட்டங்களுக்குப் போவது அவர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாக உணவு சாப்பிடுவது மாதிரி இருக்கிறது. உங்கள் பைபிள் மாணவர் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால் கூட்டங்களுக்கு வருவது ரொம்ப முக்கியம். அதனால், அவருக்கு உதவி செய்யுங்கள். ஆனால், கூட்டங்களுக்கு வருவதற்கு அவர்கள் கஷ்டப்படலாம். அப்படி என்றால் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகம் அவர்களுக்கு எப்படி உதவும்?

14. கூட்டங்களுக்கு வருவதற்கு பைபிள் மாணவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

14 மாணவரைக் கூட்டங்களுக்குக் கூப்பிடுவதற்கு, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் இருக்கிற 10-வது பாடம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்தப் பாடத்தில் இருப்பதுபோல் செய்து பார்க்கச் சொல்லி, அனுபவமுள்ள சில சகோதர சகோதரிகளிடம் கேட்கப்பட்டது. அவர்களும் அதன்படி செய்து நல்ல பலன்களைப் பார்த்திருக்கிறார்கள். அதற்காக, 10-வது பாடம் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. முடிந்தளவு சீக்கிரமாகவே கூப்பிடுங்கள், அதுவும், தொடர்ந்து அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மாணவருக்கு என்ன பிரச்சினையோ அதற்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். ஒருவேளை, கூட்டத்துக்கு வருவதற்கு அவர்கள் கொஞ்சம் காலம் எடுத்துக்கொண்டால், சோர்ந்து விடாதீர்கள். பொறுமையாக இருங்கள், தொடர்ந்து கூப்பிட்டுக்கொண்டே இருங்கள்.

பயத்தைச் சமாளிக்க பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்

15. பைபிள் மாணவர்கள் எதையெல்லாம் நினைத்து பயப்படலாம்?

15 நீங்கள் பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்த சமயத்தைப் பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யெகோவாவின் சாட்சி ஆவதை நினைத்து நீங்கள் பயந்தீர்களா? ஒருவேளை, வீடு வீடாகப் போய் ஊழியம் செய்வது உங்களால் முடியவே முடியாது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இல்லையென்றால், குடும்பத்தில் இருக்கிறவர்களையோ நண்பர்களையோ நினைத்து நீங்கள் பயந்திருக்கலாம். அப்படி என்றால், உங்களுடன் பைபிள் படிக்கிறவர்களின் உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்த மாதிரி பயம் வருவது இயல்புதான் என்று இயேசுவும் சொன்னார். ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியாத அளவுக்குப் பயத்திலேயே மூழ்கிவிடக் கூடாது என்றும் அவர் சொன்னார். (மத். 10:16, 17, 27, 28) பயத்தைச் சமாளிக்க சீஷர்களுக்கு இயேசு எப்படி உதவினார்? நீங்கள் எப்படி பைபிள் மாணவர்களுக்கு உதவலாம்?

16. சத்தியத்தை மற்றவர்களிடம் சொல்வதற்கு மாணவருக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

16 பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்வதற்கு மாணவருக்குப் படிப்படியாகப் பயிற்சி கொடுங்கள். இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக ஊழியத்துக்குப் போனபோது அவர்களுக்குப் பதட்டமாக இருந்திருக்கும். ஆனால், யாரிடம் பிரசங்கிப்பது? என்ன பிரசங்கிப்பது? என்று இயேசு அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். (மத். 10:5-7) நீங்கள் எப்படி இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம்? யாரிடம் சத்தியத்தைச் சொல்வது என்பதைத் தெரிந்துகொள்ள மாணவருக்கு உதவுங்கள். உதாரணத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த யாருக்காவது ஏதாவது ஒரு பைபிள் சத்தியம் ஆறுதலாக இருக்குமா என்று யோசித்துப் பார்க்கச் சொல்லுங்கள். பின்பு, அதை எப்படி எளிமையாக அவரிடம் சொல்லலாம் என்று சொல்லிக் கொடுங்கள். பொருத்தமான சமயங்களில், இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் இருக்கிற “யாராவது இப்படிச் சொன்னால்” “யாராவது இப்படிக் கேட்டால்” என்ற பகுதியைப் பயன்படுத்தி பயிற்சி கொடுங்கள். இப்படிச் செய்யும்போது, முக்கியமாக பைபிளைப் பயன்படுத்தி எப்படிச் சாதுரியமாகவும் எளிமையாகவும் மற்றவர்களுக்குப் பதில் சொல்லலாம் என்பதைச் சொல்லிக்கொடுங்கள்.

17. பைபிள் மாணவர்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு மத்தேயு 10:19, 20, 29-31-ஐ நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?

17 யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு மாணவருக்கு உதவுங்கள். தன்னுடைய சீஷர்கள்மேல் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருப்பதால் அவர்களுக்கு உதவுவார் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (மத்தேயு 10:19, 20, 29-31-ஐ வாசியுங்கள்.) இதே விஷயத்தை நீங்களும் உங்கள் மாணவருக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்கள் மாணவரின் இலக்குகளைப் பற்றி ஜெபத்தில் சொல்வதன் மூலம் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்கு உதவுங்கள். “எனக்கு பைபிள் படிப்பு எடுத்தவர் அடிக்கடி என்னோட இலக்குகள பத்தி ஜெபத்தில சொல்லுவாரு. அவரோட ஜெபத்துக்கு பதில் கிடச்சத பாத்தப்ப நானும் ஜெபம் செய்ய ஆரம்பிச்சேன். கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போறதுக்கு என்னோட புது வேலையில எனக்கு லீவு கிடச்சப்ப யெகோவாவோட உதவி எனக்கு இருக்குங்கிறத நான் புரிஞ்சுகிட்டேன்” என்று போலந்தில் இருக்கிற பிரான்சிசெக் சொல்கிறார்.

18. பைபிள் படிப்பு எடுப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா எப்படிப் பார்க்கிறார்?

18 பைபிள் மாணவர்கள்மீது யெகோவா ரொம்ப அக்கறை வைத்திருக்கிறார். தன்னிடம் நெருங்கி வருவதற்கு அவர்களுக்கு நாம் உதவி செய்வதை அவர் உயர்வாக மதிக்கிறார். அதற்காக, நம்மையும் அவர் ரொம்ப நேசிக்கிறார். (ஏசா. 52:7) ஒருவேளை, இப்போது உங்களுக்கு பைபிள் படிப்பு எதுவும் இல்லை என்றாலும், மற்றவர்களுடைய பைபிள் படிப்புக்குப் போவதன் மூலம் அந்த மாணவர்கள் முன்னேறுவதற்கு உங்களாலும் உதவ முடியும்.

பாட்டு 60 உயிர் காக்கும் நற்செய்தி

^ பாரா. 5 தன்னுடைய சீஷர்களாக ஆவதற்கு மற்றவர்களுக்கு இயேசு எப்படி உதவினார் என்றும் நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் இருக்கிற சில அம்சங்களைப் பற்றியும் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுக்க பைபிள் மாணவர்களுக்கு உதவவே இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

^ பாரா. 7 வேறு சில அனுபவங்களை இங்கே எல்லாம் நீங்கள் பார்க்கலாம்: (1) யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு-ல் “பைபிள்” என்ற தலைப்புக்குப் போங்கள். அதற்குக் கீழே, “நடைமுறையான பயன்கள்” என்ற பகுதி இருக்கும். அதில், “‘பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது’ (காவற்கோபுர தொடர் கட்டுரைகள்)” என்ற பகுதியில் பாருங்கள். (2) JW லைப்ரரி-ல் மீடியா என்ற பகுதிக்குக் கீழே “பேட்டிகளும் அனுபவங்களும்” என்ற தலைப்பில் பாருங்கள்.

^ பாரா. 62 படவிளக்கம்: ஓர் இளைஞருக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக ஒரு சகோதரர் தன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொண்டு போகிறார். மற்ற சமயங்களில் வெவ்வேறு சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு போகிறார்.