Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 23

நீங்கள் தனியாக இல்லை, யெகோவா உங்களோடு இருக்கிறார்

நீங்கள் தனியாக இல்லை, யெகோவா உங்களோடு இருக்கிறார்

“யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.”​—சங். 145:18.

பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. எப்போதெல்லாம் நம்மை தனிமை உணர்வு வாட்டலாம்?

நம் எல்லாரையுமே சில சமயங்களில் தனிமை உணர்வு வாட்டுகிறது. நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் நமக்கு யாருமே இல்லாதது மாதிரி நாம் நினைக்கலாம். எப்போதெல்லாம் இப்படி நடக்கலாம்? ஒருவேளை, நாம் புது சபைக்குப் போயிருக்கலாம். அங்கே இருக்கிறவர்களோடு பழகுவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கலாம். இல்லையென்றால், பாசமான ஒரு குடும்பத்தில் நாம் வளர்ந்திருக்கலாம். ஆனால், குடும்பத்தாரையும் சொந்தக்காரர்களையும் விட்டுவிட்டு ரொம்ப தூரத்துக்குப் போயிருக்கலாம். இல்லையென்றால், நாம் ரொம்ப பாசம் வைத்திருந்த ஒருவர் இறந்துபோயிருக்கலாம். இன்னும் சிலர், சத்தியத்துக்குப் புதிதாக வந்திருக்கலாம். அவர்களுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அவர்களை ஒதுக்கியிருக்கலாம். இப்படி எல்லாம் நடக்கும்போது தனிமை உணர்வு நம்மை வாட்டலாம். சிலர் அதிலிருந்து சீக்கிரமாக வெளியே வந்துவிடுகிறார்கள். ஆனால், சிலருக்குக் கொஞ்சம் காலம் ஆகலாம்.

2. எந்தக் கேள்விகளுக்கு இப்போது பதில்களைப் பார்ப்போம்?

2 யெகோவாவுக்கு நம்மைப் பற்றி எல்லாமே தெரியும். அவர் நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார். நாம் தனியாக இருப்பதாக நினைத்து கவலைப்படும்போது, யெகோவா அதையும் புரிந்துகொள்கிறார். நமக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அப்படியென்றால், அவர் நமக்கு எப்படி உதவுகிறார்? தனிமை உணர்வைச் சமாளிக்க நாம் என்ன செய்யலாம்? சபையில் இருக்கிற யாராவது தனிமையில் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு எப்படி உதவலாம்? இதற்கெல்லாம் இப்போது பதில்களைப் பார்க்கலாம்.

யெகோவா நம்மேல் அக்கறையாக இருக்கிறார்

ஒரு தேவதூதரை அனுப்பி எலியா தனியாக இல்லை என்று யெகோவா புரிய வைத்தார் (பாரா 3)

3. எலியாமேல் யெகோவா எப்படி அக்கறை காட்டினார்?

3 தன்னை வணங்குகிற எல்லார் மீதும் யெகோவா அக்கறையாக இருக்கிறார். நம் ஒவ்வொருவருடைய பக்கத்திலும் அவர் இருக்கிறார். சோகத்தில் நாம் மூழ்கிவிடும்போது, அதையும் அவர் கவனிக்கிறார். (சங். 145:18, 19) எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்திலேயே ரொம்ப கஷ்டமான ஒரு சமயத்தில் அவர் வாழ்ந்தார். யெகோவாவை வணங்கியவர்களை எதிரிகள் துன்பப்படுத்தினார்கள். முக்கியமாக, எலியாவைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தார்கள். (1 ரா. 19:1, 2) அதுமட்டுமல்ல, தான் மட்டும்தான் மிஞ்சி இருக்கிற ஒரே தீர்க்கதரிசி என்று எலியா நினைத்துக்கொண்டார். (1 ரா. 19:10) அப்போது யெகோவா என்ன செய்தார்? உடனடியாக அவருக்கு உதவினார். தனக்கு பயபக்தியோடு இருக்கிற இஸ்ரவேலர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பதற்காக ஒரு தேவதூதரை அனுப்பினார்.​—1 ரா. 19:5, 18.

4. யெகோவாவுக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது என்பதை மாற்கு 10:29, 30 எப்படிக் காட்டுகிறது?

4 நிறைய தியாகங்கள் செய்துதான் நாம் யெகோவாவை வணங்குகிறோம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை, நம்முடைய குடும்பத்தார்... சொந்தக்காரர்கள்... நண்பர்கள்... ஆகியவர்களின் ஆதரவு நமக்கு இல்லாமல் இருக்கலாம். அப்போஸ்தலன் பேதுருவும் ஒரு தடவை இயேசுவிடம், “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். (மத். 19:27) ஒருவேளை, பேதுரு கவலையோடு இப்படிக் கேட்டிருக்கலாம். அதற்கு இயேசு, யெகோவாவை வணங்குகிற ஒரு மிகப் பெரிய குடும்பம் கிடைக்கும் என்று சொன்னார். (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) அந்தக் குடும்பத்தின் தலைவரான யெகோவாவும் நமக்குத் துணையாக இருப்பதாக வாக்குக் கொடுக்கிறார். (சங். 9:10) தனிமை உணர்வோடு போராடுவதற்கு அவருடைய உதவி நமக்கு வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

தனியாக இருப்பதுபோல் நினைக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

5. யெகோவா நம்மை எப்படியெல்லாம் ஆதரிக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் நமக்கு என்ன நன்மை?

5 யெகோவா எப்படியெல்லாம் உங்களை ஆதரிக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். (சங். 55:22) அப்படி யோசிக்கும்போது, உங்களுடைய சூழ்நிலையைச் சரியாகப் பார்க்க முடியும். கல்யாணம் ஆகாத கேரல் * என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். அவர் குடும்பத்தில் யாருமே சத்தியத்தில் இல்லை. “எனக்கு சோதனைகள் வந்தப்ப எல்லாம் யெகோவா எப்படி எல்லாம் என்னை தாங்கினாருங்கிறத யோசிச்சு பாக்கும்போது நான் தனியா இல்லைங்கறது புரியுது. எதிர்காலத்திலயும் அவர் என்கூட இருப்பாருங்கிற நம்பிக்க வருது” என்று அவர் சொல்கிறார்.

6. தனிமையில் வாடுகிறவர்களுக்கு 1 பேதுரு 5:9, 10 எப்படி உற்சாகத்தைத் தருகிறது?

6 பிரச்சினைகளோடு போராடுகிற சகோதர சகோதரிகளுக்கு யெகோவா எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். (1 பேதுரு 5:9, 10-ஐ வாசியுங்கள்.) ஹிரோஷி என்ற சகோதரர் பல வருஷங்களாக சத்தியத்தில் தனியாக இருக்கிறார். “சபையில இருக்கிற எல்லாருக்குமே ஏதோ ஒரு பிரச்சன இருக்கத்தான் செய்யுது. ஆனாலும், யெகோவாவுக்கு சேவ செய்யறதுக்கு அவங்களால முடிஞ்சதெல்லாம் அவங்க செய்யறாங்க. இத யோசிச்சு பாக்கறப்போ தனியா சத்தியத்தில இருக்கிறவங்களுக்கு உற்சாகமா இருக்கு” என்று அவர் சொல்கிறார்.

7. ஜெபம் செய்வது எப்படி உங்களுக்கு உதவும்?

7 தவறாமல் ஜெபம் செய்யுங்கள், பைபிளைப் படியுங்கள், கூட்டங்களுக்குப் போங்கள். ஜெபம் செய்யும்போது உங்கள் மனதில் இருப்பதை எல்லாம் வெளிப்படையாக யெகோவாவிடம் சொல்லுங்கள். (1 பே. 5:7) இப்போது மேரி என்ற இளம் சகோதரி என்ன சொல்கிறார் என்பதைக் கேட்கலாம். அவருடைய குடும்பத்தில் உள்ள யாருமே யெகோவாவின் சாட்சியாக இல்லாததால் ரொம்ப தனிமையாக இருப்பதாக அவர் நினைத்தார். “என்னோட தனிமைய சமாளிக்கிறதுக்கு நிறைய விஷயங்கள் எனக்கு உதவுச்சு. அதுல முக்கியமான ஒரு விஷயம் யெகோவாகிட்ட உருக்கமா ஜெபம் செய்றது. அவர் உண்மையிலேயே எனக்கு ஒரு அப்பா மாதிரி இருந்தாரு. ஒவ்வொரு நாளும் அவர்கிட்ட நான் பேசுவேன். நிறைய தடவ பேசுவேன். என் மனசில இருக்கறத எல்லாம் அவர்கிட்ட சொல்லுவேன்” என்று அவர் சொல்கிறார்.

பைபிள் ஆடியோ பதிவுகளையும் மற்ற பிரசுரங்களின் ஆடியோ பதிவுகளையும் கேட்பது தனிமை உணர்வைச் சமாளிப்பதற்கு உதவியாக இருக்கும் (பாரா 8) *

8. பைபிளைப் படிப்பதும் ஆழமாக யோசித்துப் பார்ப்பதும் எப்படி உதவும்?

8 தினமும் பைபிளைப் படியுங்கள்; அதுவும் யெகோவாவின் அன்பைப் பற்றிச் சொல்கிற பதிவுகளைப் படித்து ஆழமாக யோசித்துப்பாருங்கள். இப்போது பியாங்கா என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று கேட்கலாம். அவர் குடும்பத்தில் இருக்கிறவர்கள் அவருடைய மனதைக் காயப்படுத்துகிற மாதிரி எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். “பைபிள் பதிவுகள படிச்சு ஆழமா யோசிச்சு பாக்கறதும், என்னை மாதிரியே ஒரு சூழ்நிலையில இருக்கற யெகோவாவின் சாட்சிகளோட வாழ்க்கை சரிதைகள படிச்சு பாக்கறதும் எனக்கு ரொம்பவே உதவியா இருக்கு” என்று அவர் சொல்கிறார். இன்னும் சிலர் ஆறுதலான வசனங்களை மனப்பாடம் செய்கிறார்கள். உதாரணத்துக்கு, சங்கீதம் 27:10-ஐயும் ஏசாயா 41:10-ஐயும் சொல்லலாம். வேறு சிலர், கூட்டங்களுக்குத் தயாரிக்கும்போதும் பைபிளைப் படிக்கும்போதும் ஆடியோ பதிவுகளைப் போட்டுக் கேட்கிறார்கள். இப்படியெல்லாம் செய்யும்போது அவர்களால் தனிமை உணர்வைச் சமாளிக்க முடிகிறது.

9. கூட்டங்களுக்குப் போவது நமக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

9 தவறாமல் கூட்டங்களுக்குப் போவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்படிப் போகும்போது, கூட்டங்களில் சொல்லப்படுகிற விஷயங்கள் உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். அதுமட்டுமல்ல, சகோதர சகோதரிகளோடு பழகுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். (எபி. 10:24, 25) நாம் ஏற்கெனவே பார்த்த மேரி இப்படிச் சொல்கிறார்: “பொதுவா, எனக்கு கூச்ச சுபாவம் ஜாஸ்தி. இருந்தாலும் ஒவ்வொரு கூட்டங்களுக்கு போகணும்கிறதிலயும், ஒரு பதிலாவது சொல்லணும்கிறதிலயும் நான் உறுதியா இருந்தேன். இப்படி பண்ணுனதால சகோதர சகோதரிகள்கிட்ட ஒரு நெருக்கமான நட்ப வெச்சுக்க முடிஞ்சது.”

10. சகோதர சகோதரிகளிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

10 சகோதர சகோதரிகளிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்யும்போது அவர்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை, அவர்கள் உங்களைவிட பெரியவர்களாக இருக்கலாம், சிறியவர்களாக இருக்கலாம், கலாச்சாரமும் வேறாக இருக்கலாம். “வயதானவர்கள் ஞானம் உள்ளவர்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 12:12) அதே சமயத்தில், வயதானவர்கள் இளைஞர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம். தாவீதையும் யோனத்தானையும் பற்றி யோசித்துப்பாருங்கள். தாவீது யோனத்தானைவிட ரொம்ப சின்னவர். இருந்தாலும், அவர்களிடையே ஒரு நெருக்கமான நட்பு இருந்தது. (1 சா. 18:1) அவர்களுக்கு எவ்வளவோ கஷ்டம் இருந்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். (1 சா. 23:16-18) “நம்ம சகோதர சகோதரிகள் உண்மையிலேயே நமக்கு அப்பா மாதிரி, அம்மா மாதிரி, கூடப்பிறந்தவங்க மாதிரி இருக்காங்க. அவங்கள பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவி செய்றாரு” என்று ஐரினா என்ற சகோதரி சொல்கிறார். அவருடைய குடும்பத்தில் அவர் மட்டும்தான் சத்தியத்தில் இருக்கிறார்.

11. மற்றவர்களிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?

11 ஒருவேளை, உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருந்தால், மற்றவர்களிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். ரத்னா என்ற சகோதரியும் கூச்ச சுபாவமுள்ள ஆள்தான். எதிர்ப்புகள் இருந்தாலும் அவர் சத்தியத்துக்கு வந்தார். “சகோதர சகோதரிகளோட அன்பும், ஆதரவும் எனக்கு தேவைங்கறத நான் புரிஞ்சுக்க வேண்டி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். மனதில் இருப்பதை வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்வது கஷ்டம்தான். ஆனால், அப்படிச் சொன்னால்தான் மற்றவர்களுக்கும் உங்களுக்கும் நெருக்கமான நட்பு உருவாகும். உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு எப்போதுமே உதவ வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால், உங்களுக்கு என்ன மாதிரியான உதவி தேவை என்பது நீங்கள் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும்.

12. ஊழியம் செய்வது நல்ல நண்பர்களை உருவாக்க எப்படி உதவும்?

12 நண்பர்களை உருவாக்குவதற்கு முக்கியமான ஒரு வழி, மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதுதான். “ஊழியத்தயும் யெகோவாவோட சேவையில இருக்கிற மத்த வேலைகளயும் சகோதரிகளோட சேந்து செய்ததால எனக்கு நிறைய நண்பர்கள் கிடச்சிருக்காங்க. இவங்கள எல்லாம் பயன்படுத்தி யெகோவா எனக்கு இவ்வளவு வருஷங்களா உதவியிருக்காரு” என்று நாம் ஏற்கெனவே பார்த்த கேரல் என்ற சகோதரி சொல்கிறார். நட்பை வளர்த்துக்கொள்ள நாம் எடுக்கிற முயற்சிகள் ஒருபோதும் வீண்போகாது. ஏனென்றால், தனிமையையும் மற்ற கஷ்டங்களையும் சமாளிப்பதற்கு இந்த நண்பர்களைப் பயன்படுத்தி யெகோவா நமக்கு உதவுகிறார்.​—நீதி. 17:17.

தனிமையில் வாடுகிறவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்?

13. நம் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது?

13 சபையில் எப்போதுமே அன்பும் சமாதானமும் இருக்க வேண்டும்; அப்படி இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. இப்படிச் சபையில் அன்பும் சமாதானமும் இருக்கும்போது யாருமே ‘நான் தனியாக இருக்கிறேன்’ என நினைக்க மாட்டார்கள். (யோவா. 13:35) அதனால், நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். “நான் சத்தியத்த கத்துகிட்டப்ப, சபையில இருக்கிற எல்லாருமே எனக்கு குடும்பம் மாதிரி ஆயிட்டாங்க. அவங்களோட ஆதரவு இல்லாம நான் ஒரு யெகோவாவின் சாட்சியா ஆயிருக்கவே முடியாது” என்று ஒரு சகோதரி சொல்கிறார். சத்தியத்தில் தனியாக இருக்கிறவர்கள் உண்மையில் தனியாக இல்லை. ஏனென்றால், நாம் எல்லாருமே அவர்களுக்கு இருக்கிறோம். நாம் அவர்களுக்கு குடும்பம் மாதிரி இருக்கிறோம். இப்படி அவர்கள் நினைக்க வேண்டுமென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்?

14. புதிதாக கூட்டங்களுக்கு வருகிறவர்களை நண்பர்களாக்கிக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

14 புதிதாக வருகிறவர்களிடம் நட்புக் கரம் நீட்டுங்கள். அவர்கள் முதன்முதலாக கூட்டத்துக்கு வரும்போது அன்பாக வரவேற்பு கொடுங்கள். (ரோ. 15:7) ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். நாட்கள் போகப் போக, அவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்கு, அவர்கள்மேல் அன்பையும் அக்கறையையும் காட்டுங்கள். அவர்களுடைய சொந்த விஷயத்தில் தலையிடாமல் அவர்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சிலர் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அதனால், அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களை தர்மசங்கடப்படுத்தாத மாதிரி சில கேள்விகள் கேட்டு, அவர்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பேசும்போது பொறுமையாக கேளுங்கள். உதாரணத்துக்கு, அவர்கள் சத்தியத்தை எப்படித் தெரிந்துகொண்டார்கள் என்று கேட்கலாம்.

15. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்?

15 முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள், முக்கியமாக மூப்பர்கள், மற்றவர்கள்மேல் அக்கறை காட்டும்போது, சபையில் இருக்கிற எல்லாராலும் யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். இப்போது, மெலிஸா என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய அம்மாதான் அவருக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுத்து வளர்த்தார்கள். “முதிர்ச்சி உள்ள நிறைய சகோதரர்கள் இவ்வளவு வருஷங்களா ஒரு அப்பா மாதிரி இருந்து என்னை நல்லா பாத்துக்கிட்டாங்க. அதுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் பேசனும்னு நினைக்கிறப்ப அத கேக்கிறதுக்கு அவங்க இருப்பாங்க” என்று அவர் சொல்கிறார். மொரிஷியோ என்ற இளம் சகோதரர் என்ன சொல்கிறார் என்று இப்போது பார்க்கலாம். அவருக்கு பைபிள் படிப்பு நடத்தியவர் சத்தியத்தை விட்டுப் போய்விட்டார். அதை நினைத்து அவர் ரொம்ப கவலையில் இருந்தார். யாருமே இல்லாத மாதிரி நினைத்தார். “மூப்பர்கள் என்மேல ரொம்ப அக்கற காட்டினாங்க. என்கூட தவறாம பேசினாங்க. என்கூட சேந்து ஊழியம் செஞ்சாங்க. பைபிள்ல இருந்து அவங்க கத்துக்கிட்ட விஷயங்கள எல்லாம் என்கிட்ட சொன்னாங்க. என்கூட சேந்து விளையாடவும் செஞ்சாங்க. இப்படி எல்லாம் செஞ்சது எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். இப்போது மெலிஸாவும் மொரிஷியோவும் முழுநேர சேவை செய்கிறார்கள்.

சபையில் இருக்கிற யாருக்காவது உங்களுடைய நேரமும் அன்பும் தேவைப்படுகிறதா? (பாரா 16-19) *

16-17. மற்றவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்?

16 தேவையான உதவிகளைச் செய்யுங்கள். (கலா. 6:10) “சின்ன உதவியா இருந்தாலும் சரியான சமயத்துல செய்றது ரொம்ப பிரயோஜனமா இருக்கும்” என்று லியோ சொல்கிறார். குடும்பத்தை விட்டு ரொம்ப தூரத்தில் இருக்கிற ஓர் இடத்தில் அவர் மிஷனரி சேவை செய்கிறார். “ஒருநாள் நான் கார்ல போயிட்டிருந்தப்ப விபத்துல மாட்டிக்கிட்டேன். ரொம்ப நொந்துபோய் வீட்டுக்கு வந்தேன். அப்ப ஒரு தம்பதி என்னை சாப்பாட்டுக்கு கூப்பிட்டாங்க. நாங்க என்ன சாப்பிட்டோம்னு எல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல, ஆனா நான் சொன்னத அவங்க பொறுமையா கேட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவங்ககிட்ட பேசினது என் மனசுக்கு இதமா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார்.

17 மாநாடுகளிலும் நம் அமைப்பு நடத்துகிற மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது என்றால் நமக்கு ஒரே குஷியாக இருக்கும். ஏனென்றால், சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ரொம்ப நேரம் பேச முடியும். நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை அவர்களிடம் பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்த கேரல் என்ற சகோதரி என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “மாநாடுகள்ல கலந்துக்கிறதுன்னாலே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடும். என்னை சுத்தி நூத்துக்கணக்கான பேரு, ஆயிரக்கணக்கான பேரு இருந்தாலும், நான் தனியா இருக்கிற மாதிரி நினப்பேன். ஏன்னா எல்லாரும் அவங்க குடும்பத்தோட சேந்து சந்தோஷமா இருப்பாங்க. எனக்கு மட்டும் யாருமே இல்லையேங்கற அந்த எண்ணம் என்னை போட்டு கஷ்டப்படுத்தும்” என்று அவர் சொல்கிறார். இன்னும் சிலருக்கு வேறு மாதிரியான பிரச்சினைகள் இருக்கலாம். அவர்களுடைய கணவரோ மனைவியோ இறந்துபோயிருக்கலாம். அவர்கள் இறந்த பின்பு முதல் தடவையாக மாநாட்டுக்கு வருவது அவர்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிற யாராவது உங்களுடைய ஞாபகத்துக்கு வருகிறார்களா? அப்படியென்றால், உங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர்களை நீங்கள் கூப்பிடலாம், இல்லையா?

18. இரண்டு கொரிந்தியர் 6:11-13-ல் சொன்னபடி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

18 சகோதர சகோதரிகளுக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சந்தோஷமாகப் பொழுதுபோக்கும் சமயங்களில், வெவ்வேறு சகோதர சகோதரிகளைக் கூப்பிடுங்கள். முக்கியமாக, தனிமையில் கஷ்டப்படுகிறவர்களைக் கூப்பிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, நம்முடைய ‘இதயக் கதவை அகலமாகத் திறக்க’ வேண்டும். (2 கொரிந்தியர் 6:11-13-ஐ வாசியுங்கள்.) நாம் ஏற்கெனவே பார்த்த மெலிஸா இப்படிச் சொல்கிறார்: “நண்பர்கள் அவங்களோட வீட்டுக்கு நம்மள கூப்பிடறப்பவும், அவங்க வெளியில போறப்ப நம்மள கூப்பிடறப்பவும் நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.” உங்களுடைய சபையில் இருக்கிற யாரையாவது நீங்கள் இப்படிக் கூப்பிட முடியுமா?

19. குறிப்பாக எப்படிப்பட்ட சமயங்களில் சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய ஆதரவு தேவை?

19 சில சகோதர சகோதரிகளுக்கு குறிப்பிட்ட சில சமயங்களைச் சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, விடுமுறை நாட்களிலோ... பண்டிகை நாட்களிலோ... சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாருடன் சேர்ந்து இருப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அவர்களுடைய கணவரோ மனைவியோ இறந்த நாளைச் சமாளிப்பது கஷ்டமாக இருக்கலாம். இந்த மாதிரி சமயங்களில், நாம் அவருடன் இருப்பது அவருக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். இப்படி, அவரோடு இருப்பதன் மூலம், நாம் அவரை ‘அக்கறையோடு கவனித்துக்கொள்கிறோம்’ என்பதைக் காட்டலாம்.​—பிலி. 2:20.

20. தனிமை உணர்வைச் சமாளிப்பதற்கு மத்தேயு 12:48-50 எப்படி உதவி செய்யும்?

20 ஒருவர் தனிமை உணர்வால் வாடுகிறார் என்றால், அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒவ்வொருவரைப் பற்றியும் யெகோவா நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமக்கு என்ன தேவையோ அதை யெகோவா செய்கிறார். பெரும்பாலும், சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி அப்படிச் செய்கிறார். (மத்தேயு 12:48-50-ஐ வாசியுங்கள்.) அதனால், நாமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, சகோதர சகோதரிகள் என்ற பரிசைக் கொடுத்த யெகோவாவுக்கு நம்முடைய நன்றியைக் காட்டலாம். என்ன காரணத்துக்காக தனிமை உணர்வு நம்மை வாட்டினாலும் சரி, நாம் தனியாக இல்லை, யெகோவா நம்மோடு இருக்கிறார்!

பாட்டு 46 யெகோவாவே, நன்றி!

^ பாரா. 5 நீங்கள் தனியாக இருக்கிற மாதிரி நினைக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். உங்களுடைய உணர்வுகளை யெகோவா முழுமையாகப் புரிந்துகொள்கிறார். உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார். தனிமை உணர்வுகள் உங்களை வாட்டும்போது நீங்கள் என்ன செய்யலாம்? தனிமையில் இருக்கிறவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதைப் பற்றி எல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 60 படவிளக்கம்: மனைவியை இழந்த ஒரு சகோதரர் பைபிள் ஆடியோ பதிவையும் மற்ற பிரசுரங்களின் ஆடியோ பதிவையும் கேட்கிறார். அது அவருக்கு ரொம்ப பிரயோஜனமான இருக்கிறது.

^ பாரா. 62 படவிளக்கம்: ஒரு அப்பாவும் மகளும் சபையில் இருக்கிற வயதான சகோதரர் ஒருவரைச் சந்தித்து தங்களுடைய அன்பைக் காட்டுகிறார்கள்.