Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவாவை மனதில் வைத்துதான் ஒவ்வொரு முடிவையும் எடுத்தேன்

யெகோவாவை மனதில் வைத்துதான் ஒவ்வொரு முடிவையும் எடுத்தேன்

வெனிசுவேலாவின் தலைநகர் காராக்ஸில் ஒரு வசதியான வீட்டில் நாங்கள் வாழ்ந்து­கொண்டிருந்தோம். 1984-ஆம் வருஷம், ஒருநாள் காலையில் நான் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது, சமீபத்தில் படித்த காவற்கோபுர பத்திரிகையில் இருக்கிற ஒரு கட்டுரையை யோசித்துக்கொண்டே போனேன். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தது. அப்போது, பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன். ‘இவரு வங்கியில வேல செய்றவருனு நினைப்பாங்களா? இல்லனா, இவரு கடவுளுக்கு சேவ செய்றவரு, குடும்பத்த பாத்துக்கறதுக்காக வேலைக்கு போறாருனு நினைப்பாங்களா?’ என்று மனதுக்குள்ளே யோசித்தபடியே போய்க்கொண்டிருந்தேன். ‘இவரு வங்கியில வேல செய்றவரு’ என்று மட்டும்தான் சொல்வார்கள் என்று தோன்றியது. அதனால், வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன்.

மே 19, 1940-ல் லெபனானில் இருக்கிற அம்யூன் என்ற ஊரில் நான் பிறந்தேன். கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் ட்ரிபலீ என்ற நகரத்துக்கு நாங்கள் குடிமாறிப் போனோம். எங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார்கள். நாங்கள் எப்போதுமே சந்தோஷமாக இருந்தோம். அப்பா அம்மா என்னை நல்லபடியாக வளர்த்தார்கள். நான்தான் கடைக்குட்டி. எனக்கு மூன்று அக்கா, ஒரு அண்ணன். அப்பா அம்மாவைப் பொறுத்தவரைக்கும் பணம் சம்பாதிப்பது எல்லாம் இரண்டாவதுதான். பைபிள் படிப்பது... கூட்டங்களுக்குப் போவது... ஊழியம் செய்வது... இதெல்லாம்தான் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

எங்களுடைய சபையில் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அதில் ஒருவர்தான் மைக்கேல் அபோட். அந்தச் சமயத்தில், அவர்தான் சபை புத்தகப் படிப்பை நடத்துவார். அவருக்கு நியு யார்க்கில் சத்தியம் கிடைத்தது. 1921-ல் லெபனானில் இருந்தவர்களுக்கு முதன்முதலில் அவர்தான் சத்தியத்தைச் சொன்னார். எங்களுடைய சபைக்கு இரண்டு மிஷனரி சகோதரிகள் வந்தார்கள். ஒருவர் பெயர் ஆன், இன்னொருவர் பெயர் க்வென் பீவர். அவர்கள் இரண்டு பேருக்கும் மைக்கேல் நிறைய உதவிகள் செய்தார். அது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நாங்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். நிறைய வருஷங்களுக்கு அப்புறம், அமெரிக்காவில் ஆனைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாளைக்கு அப்புறம் க்வென்னையும் பார்த்தேன். வில்ஃப்ரெட் குஜ் என்ற சகோதரரை அவர் கல்யாணம் பண்ணியிருந்தார். அவர்கள் இரண்டு பேரும் லண்டன் பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்தார்கள்.

லெபனானில் செய்த ஊழியம்

நான் சின்னப் பையனாக இருந்தபோது, லெபனானில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தோம். ஆனாலும், நாங்கள் ஆர்வமாக பைபிள் சத்தியங்களை மற்றவர்களிடம் சொன்னோம். சில மதத் தலைவர்கள் எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். இருந்தாலும், நாங்கள் ஊழியம் செய்து கொண்டேதான் இருந்தோம். சில சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. அதைப் பற்றி இப்போது சொல்கிறேன்.

ஒருநாள் என்னுடைய அக்கா சனாவும் நானும்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். அங்கே ஒரு பாதிரி வந்தார். யாரோ போன் பண்ணி அவரை வரச் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் அக்காவைப் பார்த்து கேவலமாகத் திட்டினார். முரட்டுத்தனமாக அவரைப் பிடித்து படியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அக்காவுக்குக் காயம் ஆகிவிட்டது. இதை எல்லாம் பார்த்து போலீசுக்கு யாரோ போன் பண்ணினார்கள். போலீஸ் அங்கே வந்து அக்காவுக்குக் காயமாகி இருப்பதைப் பார்த்தார்கள். உடனே, அவருக்கு உதவுவதற்கு ஏற்பாடுகளையும் செய்தார்கள். பின்பு, அந்தப் பாதிரியை காவல்நிலையத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவரிடம் துப்பாக்கி இருந்ததைப் பார்த்த போலீஸ் அதிகாரி, “நீங்க என்ன மத தலைவரா? இல்ல ரவுடி கும்பலோட தலைவரா?” என்று கேட்டார்.

இன்னொரு தடவை நடந்த ஒரு சம்பவத்தையும் என்னால் மறக்கவே முடியாது. ஒரு பஸ்ஸை வாடகைக்கு எடுத்து ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் ஊரில் ஊழியம் செய்வதற்காகப் போயிருந்தோம். எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று, ஒரு பாதிரி பெரிய கும்பலைக் கூட்டிக்கொண்டு வந்தார். அவர்கள் எங்களுக்குத் தொந்தரவு கொடுத்தார்கள். எங்கள்மேல் கல்லெறிந்தார்கள். அதில் அப்பாவின் தலையில் காயம் ஆகிவிட்டது. அவருடைய முகம் எல்லாம் இரத்தம்! உடனே, அம்மாவைக் கூட்டிக்கொண்டு அப்பா பஸ்ஸுக்குள் போனார். நாங்கள் எல்லாரும் கவலையோடு அவர்கள் பின்னாலே போனோம். அப்பா முகத்தில் இருந்த இரத்தத்தை எல்லாம் துடைத்துவிட்டு, அம்மா சொன்ன ஒரு வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. “யெகோவாவே, தயவுசெஞ்சு அவங்கள மன்னிச்சிடுங்க. அவங்க என்ன செய்யறாங்கன்னே அவங்களுக்கு தெரியல” என்று சொன்னார்.

ஒரு தடவை சொந்தக்காரர்களைப் பார்ப்பதற்காக ஊருக்குப் போயிருந்தோம். தாத்தா வீட்டில் இருந்தபோது பிஷப் அங்கே வந்தார். அப்பா அம்மா யெகோவாவின் சாட்சிகள் என்பது அவருக்குத் தெரியும். அவர் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய், “நீ ஏன் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கல?” என்று கேட்டார். அப்போது எனக்கு ஆறு வயதுதான். அதனால், நான் சின்ன பையன் என்றும் பைபிளைப் பற்றி இன்னும் நான் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்றும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் சொன்னேன். நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் தாத்தாவிடம், நான் மரியாதை இல்லாமல் பேசுகிறேன் என்று சொன்னார்.

இந்த மாதிரி கசப்பான அனுபவங்கள் கொஞ்சம்தான். நல்ல அனுபவங்கள் நிறைய இருந்தன. பொதுவாக, லெபனானில் இருக்கிற மக்கள் நட்பாகப் பழகுவார்கள், அன்பாக நடந்துகொள்வார்கள். அதனால், அவர்களிடம் பைபிள் பற்றிப் பேச முடிந்தது. நிறைய பைபிள் படிப்புகளையும் நடத்த முடிந்தது.

வேறொரு நாட்டுக்குக் குடிமாறிப் போனோம்

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் வெனிசுவேலாவிலிருந்து லெபனானுக்கு ஒரு சகோதரர் வந்தார். அவர் எங்கள் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். என்னுடைய அக்கா வாஃபாவை அவர் காதலித்தார். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொண்டு வெனிசுவேலாவுக்கு அவர்கள் போய்விட்டார்கள். அக்கா அப்பாவுக்குக் கடிதங்கள் எழுதும்போதெல்லாம் எங்களை வெனிசுவேலாவுக்குக் குடிமாறி வரச் சொல்லி சொல்லிக்கொண்டே இருப்பார். ஏனென்றால், எங்களைப் பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை. கடைசியில் நாங்கள் எல்லாரும் வெனிசுவேலாவுக்கே போய்விட்டோம்.

1953-ல் நாங்கள் வெனிசுவேலாவுக்கு வந்தோம். காராக்ஸில் அதிபர் மாளிகைக்குப் பக்கத்திலேயே குடிவந்தோம். நான் சின்னப் பையனாக இருந்ததால் சொகுசான காரில் அதிபர் போவதையும் வருவதையும் பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. புது நாடு, மொழி, கலாச்சாரம், உணவு, சீதோஷ்ணம் என்று எல்லாமே புதிதாக இருந்ததால் அப்பா அம்மாவுக்குக் கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதற்குப் பழகிக்கொண்டிருந்தார்கள். அதற்குள்ளே, எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய இடி விழுந்தது.

இடமிருந்து வலம்: அப்பா. அம்மா. நான் 1953-ல் வெனிசுவேலாவுக்குக் குடிமாறிப் போனபோது...

எங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவம்

திடீரென்று எங்கள் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அது எங்களுக்குப் புதியதாக இருந்தது. ஏனென்றால், அவர் பலமாக, ஆரோக்கியமாகத்தான் இருந்தார். அவர் உடம்பு சரியில்லாமல் இருந்து நாங்கள் பார்த்ததே இல்லை. அவருக்குப் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தார்கள், அறுவை சிகிச்சையும் செய்தார்கள். ஆனால், ஒரு வாரத்திலேயே அவர் இறந்துவிட்டார்.

அந்தத் துக்கத்தை எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அப்போது எனக்கு வெறும் 13 வயதுதான். நாங்கள் அதிர்ச்சியில் மூழ்கிப் போய்விட்டோம். எங்களுடைய வாழ்க்கையே இருண்டுபோன மாதிரி ஆகிவிட்டது. அப்பா இறந்துவிட்டார் என்பதை அம்மாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே! யெகோவா எங்களுக்கு உதவி செய்ததால் அதையெல்லாம் தாண்டி வர முடிந்தது. எனக்கு 16 வயதானபோது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டேன். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

என்னுடைய அக்கா சனாவும் மாமா ரூபனும் யெகோவாவிடம் நல்ல நட்பை வைத்துக்கொள்ள எனக்கு உதவி செய்தார்கள்

என்னுடைய அக்கா சனா, ரூபன் ஆராவஹூ என்பவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார். அவர் கிலியட் பள்ளியில் படித்துவிட்டு வெனிசுவேலாவுக்குத் திரும்பி வந்திருந்தார். கல்யாணத்துக்கு அப்புறம் அவர்கள் நியு யார்க்குக்குப் போய்விட்டார்கள். நானும் அங்கே போனால், அவர்கள் வீட்டில் தங்கி பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் நினைத்தார்கள். அதனால், நானும் அங்கே போனேன். என்னுடைய அக்காவும் மாமாவும் நான் யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு ரொம்ப உதவியாக இருந்தார்கள். புரூக்ளினில் இருந்த ஸ்பானிஷ் மொழி சபைக்கு நான் போய்க்கொண்டிருந்தேன். அங்கே, முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் நிறைய பேர் இருந்தார்கள். முக்கியமான இரண்டு பேரைப் பற்றி நான் சொல்ல வேண்டும். ஒருவர் மில்டன் ஹென்ஷல், இன்னொருவர், ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ். இவர்கள் இரண்டு பேரும் புரூக்ளின் பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்தார்கள்.

1957-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தபோது...

நல்ல குறிக்கோள்களை வைப்பதைப் பற்றிச் சொல்கிற காவற்கோபுர கட்டுரைகளைப் படித்து அதை ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தேன். அதனால், என்னுடைய பல்கலைக்கழகத்தில் முதல் வருஷம் முடியப்போகும் சமயத்தில், வாழ்க்கையில் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய சபையில் இருக்கிற பயனியர்களும், பெத்தேல் ஊழியர்களும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். நானும் அவர்களை மாதிரியே ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், இன்னும் நான் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. அதனால், சீக்கிரத்திலேயே என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்தேன். மார்ச் 30, 1957-ல் ஞானஸ்நானம் எடுத்தேன்.

முக்கியமான முடிவுகளை எடுத்தேன்

ஞானஸ்நானம் எடுத்த பின்பு, இன்னொரு முக்கியமான முடிவு எடுப்பதைப் பற்றி யோசித்தேன். அதாவது, முழுநேர சேவையில் இறங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை எனக்கு அதிகமாகிக்கொண்டே வந்தது. ஆனால், பல்கலைக்கழகத்திலும் படித்துக்கொண்டு பயனியர் சேவையையும் செய்ய முடியுமா? என்று யோசித்தேன். அதனால், படிப்பை நிறுத்திவிட்டு வெனிசுவேலாவுக்குத் திரும்பிப் போய், அங்கே பயனியர் சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதைப் பற்றி அம்மாவுக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் கடிதங்கள் எழுதினேன். அவர்களும் எனக்குத் திருப்பி கடிதங்கள் எழுதினார்கள். இப்படி, நாங்கள் கடிதத்துக்கு மேல் கடிதம் எழுதிக்கொண்டோம்.

ஜூன் 1957-ல் காராக்ஸுக்கு திரும்பி வந்தேன். ஆனால், குடும்பத்தின் நிலைமை கொஞ்சம் மோசமாக இருந்தது. இன்னொருவருடைய வருமானம் தேவைப்பட்டது. அதனால், நான் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதே சமயத்தில், பயனியர் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனென்றால், நான் அதற்காகத்தான் திரும்பி வந்திருந்தேன். நிறைய வருஷங்களாக வங்கியில் முழுநேர வேலையும் செய்துகொண்டு பயனியர் சேவையும் செய்துகொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் அதுவரைக்கும் இல்லாத அளவுக்கு நான் ரொம்ப பிஸியாக இருந்தேன். ஆனால், ரொம்ப சந்தோஷமாகவும் இருந்தேன்!

என் வாழ்க்கையில் எனக்கு இன்னொரு சந்தோஷமும் கிடைத்தது. சில்வியா என்ற அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். யெகோவாமேல் அவளுக்கு ரொம்ப அன்பு இருந்தது. அவளும் அவளுடைய அப்பா அம்மாவும் ஜெர்மனியிலிருந்து வெனிசுவேலாவுக்குக் குடிமாறி வந்திருந்தார்கள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்த பையன் பெயர் மிஷெல். மகள் பெயர் சமீரா. என்னுடைய அம்மாவையும் எங்கள் கூடவே தங்க வைத்துக்கொண்டோம். குடும்பப் பொறுப்புகள் அதிகமானதால் பயனியர் சேவையை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனாலும், அந்த ஆசை எனக்குள்ளே இருந்துகொண்டே இருந்தது. என்னால் முடிந்தளவுக்கு நிறைய ஊழியம் செய்தேன். விடுமுறைகள் வந்தபோதெல்லாம் நானும் சில்வியாவும் சேர்ந்து துணை பயனியர் ஊழியம் செய்தோம்.

இன்னொரு முக்கியமான முடிவு எடுத்தேன்

நான் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்ததாக ஆரம்பத்தில் சொன்னேன், இல்லையா? அந்தச் சமயத்தில் என் பிள்ளைகள் இன்னும் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சொகுசான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம். வங்கி ஊழியர்களிடம் எனக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனாலும், யெகோவாவின் ஊழியர் என்ற பெயர் எடுக்கவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அந்த ஆசை என் மனதைவிட்டு நீங்கவே இல்லை. அதனால், என் மனைவியும் நானும் உட்கார்ந்து குடும்பத்தின் வரவுசெலவு பற்றிக் கணக்குப் போட்டோம். ஒருவேளை, நான் வேலையை விட்டுவிட்டால் எனக்கு நிறைய பணம் கிடைக்கும். எங்களுக்குக் கடன் இல்லாததால், எளிமையாக வாழ்ந்தால் அந்தப் பணத்தை வைத்து எங்களுடைய வாழ்க்கையை ஓட்ட முடியும் என்று முடிவு எடுத்தோம்.

அந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால், என் மனைவியும் அம்மாவும் எனக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். மறுபடியும் நான் முழுநேர ஊழியர்கள் பட்டியலில் சேரப்போகிறேன் என்பதை நினைத்தபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்கு எந்தத் தடையும் இல்லாத மாதிரி தோன்றியது. ஆனால், எங்கள் எல்லாருக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

இன்ப அதிர்ச்சி

எங்களுடைய மூன்றாவது குழந்தை கேப்ரியேல் பிறந்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது

சில்வியா மறுபடியும் கர்ப்பமானாள். எங்கள் இரண்டு பேருக்கும் அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் பயனியராக ஆக வேண்டும் என்று நான் எடுத்த முடிவு என்ன ஆகும் என்பதைப் பற்றி யோசித்தேன். எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போகிறது என்பதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதற்கு சீக்கிரத்திலேயே நாங்கள் இரண்டு பேரும் மனதளவில் தயாராகிவிட்டோம். ஆனால், நான் போட்ட திட்டமெல்லாம் என்னவாகும்?

நாங்கள் இரண்டு பேரும் கலந்து பேசிய பின்பு, நாங்கள் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தோம். ஏப்ரல் 1985-ல் எங்கள் பையன் கேப்ரியேல் பிறந்தான். ஜூன் 1985-ல் நான் வேலையை விட்டுவிட்டு ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன். கொஞ்சக் காலத்தில், கிளை அலுவலக குழுவில் சேவை செய்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆனால், காராக்ஸில் கிளை அலுவலகம் இல்லாததால் நான் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் பயணம் செய்து கிளை அலுவலகத்துக்குப் போய் வர வேண்டியிருந்தது.

இன்னொரு இடத்துக்குக் குடிமாறினோம்

கிளை அலுவலகம் லா விக்டோரியாவில் இருந்ததால், அதற்குப் பக்கத்திலேயே இருப்பதற்காக நாங்கள் குடும்பமாக அங்கே போவது என்று முடிவு எடுத்தோம். அது உண்மையிலேயே ஒரு பெரிய மாற்றம். குடும்பத்தில் இருக்கிறவர்கள் கொடுத்த ஆதரவை என்னால் மறக்கவே முடியாது. என்னுடைய அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என்னுடைய அக்கா பாஹா ஏற்றுக்கொண்டார். மிஷெலுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால், சமீராவும், கேப்ரியேலும் எங்களோடுதான் இருந்தார்கள். அதனால், அவர்களுடைய நண்பர்களை எல்லாம் விட்டுவிட்டு, அவர்கள் லா விக்டோரியாவுக்கு வர வேண்டியிருந்தது. காராக்ஸ் தலைநகரமாக இருந்ததால் எப்போதுமே ‘ஜேஜே’ என்று இருக்கும். அதை விட்டுவிட்டு ஒரு சின்ன ஊருக்கு வருவது சில்வியாவுக்கும் பெரிய மாற்றமாக இருந்தது. ஒரு சின்ன வீட்டில் வாழ்வதற்கு நாங்கள் எல்லாருமே பழகிக்கொண்டோம். காராக்ஸில் இருந்து லா விக்டோரியாவுக்கு வருவதற்கு இந்த மாதிரி நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தன.

மறுபடியும் சில மாற்றங்கள் நடந்தன. கேப்ரியேலுக்குக் கல்யாணம் ஆனது. சமீரா தனியாக வாழ்வது என்று முடிவு எடுத்தாள். 2007-ல் சில்வியாவையும் என்னையும் பெத்தேலுக்குக் கூப்பிட்டார்கள். இன்று வரைக்கும் நாங்கள் அங்கேதான் சேவை செய்கிறோம். என்னுடைய மூத்த பையன் மிஷெல் மூப்பராகச் சேவை செய்கிறான். அவனுடைய மனைவி மோனிகாவும் அவனும் ஒழுங்கான பயனியர்களாகவும் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். கேப்ரியேல், ஏம்பரா என்ற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, இப்போது இரண்டு பேரும் இத்தாலியில் இருக்கிறார்கள். அவனும் மூப்பராகச் சேவை செய்கிறான். சமீரா ஒழுங்கான பயனியராகச் சேவை செய்வதோடு, பெத்தேலில் ரிமோட் வாலண்டியராகவும் சேவை செய்கிறாள்.

இடமிருந்து வலம்: என்னுடைய மனைவி சில்வியாவுடன், வெனிசுவேலா கிளை அலுவலகத்தில். எங்களுடைய மூத்த மகன் மிஷெலும் அவனுடைய மனைவி மோனிகாவும். எங்களுடைய மகள் சமீரா. எங்களுடைய பையன் கேப்ரியேலும் அவனுடைய மனைவி ஏம்பராவும்

நான் எடுத்த முடிவுகளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்

என் வாழ்க்கை முழுக்க நான் நிறைய முடிவுகள் எடுத்தேன். அதை எல்லாம் நினைத்து நான் சந்தோஷம்தான் அடைகிறேன். யெகோவாவின் அமைப்பில் எனக்குக் கிடைத்த நியமிப்புகளுக்காக ரொம்ப நன்றி சொல்கிறேன். அவரிடம் ஒரு நல்ல நட்பு வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இத்தனை வருஷத்தில் நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். நாம் சின்ன முடிவு எடுக்க வேண்டியிருந்தாலும் சரி, பெரிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அந்தச் சமயத்தில், ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தை’ அவர் கண்டிப்பாகக் கொடுப்பார். (பிலி. 4:6, 7) பெத்தேலில் செய்கிற பரிசுத்த சேவையை சில்வியாவும் நானும் சந்தோஷமாகச் செய்துகொண்டிருக்கிறோம். யெகோவாவை மனதில் வைத்து நாங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவையும் அவர் ஆசீர்வதித்திருக்கிறார்.