Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 32

இளம் பிள்ளைகளே—ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து முன்னேற்றம் செய்யுங்கள்

இளம் பிள்ளைகளே—ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து முன்னேற்றம் செய்யுங்கள்

“எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும்.”—எபே. 4:15.

பாட்டு 56 யெகோவாவின் வழியில் நடப்போம்

இந்தக் கட்டுரையில்... a

1. நிறைய இளம் பிள்ளைகள் ஏற்கெனவே என்ன நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்?

 ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? அப்படியென்றால், உங்கள் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் உங்களைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். யெகோவாவும் உங்களைப் பார்த்துப் பூரித்துப்போகிறார்! (நீதி. 27:11) இதற்காக நீங்கள் ஏற்கெனவே நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். பைபிளை ஆர்வமாகப் படித்திருக்கிறீர்கள். ஒருவேளை, சில வருஷங்களுக்குக்கூட நீங்கள் படித்திருக்கலாம். அப்படிப் படித்ததால் பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கிறது. அதைவிட முக்கியமாக, பைபிளைக் கொடுத்த கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவர்மேல் அன்பு காட்டவும் ஆரம்பித்திருக்கிறீர்கள். யெகோவாவை நீங்கள் ரொம்ப நேசிக்க ஆரம்பித்ததால் அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் எடுத்த அந்தத் தீர்மானத்தை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்!

2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

 2 ஞானஸ்நானம் எடுப்பதற்காக நீங்கள் தயாரானபோது உங்களுடைய விசுவாசத்தை சோதிக்கிற மாதிரி நிறைய சோதனைகள் உங்களுக்கு வந்திருக்கலாம். வளர வளர, புதிதாக சில சோதனைகளும் உங்களுக்கு வரும். யெகோவாமேல் உங்களுக்கு இருக்கிற அன்பைக் குறைக்கவும், அவரைவிட்டு உங்களை விலகிப்போக வைக்கவும் சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருப்பான். (எபே. 4:14) அதற்கு ஒருபோதும் இடம் கொடுத்துவிடாதீர்கள்! யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருப்பதற்கும், உங்களுடைய அர்ப்பணிப்பின்போது அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கும் எது உங்களுக்கு உதவி செய்யும்? “முதிர்ச்சியை நோக்கி வேகமாக” முன்னேற கடினமாக முயற்சி செய்வது உங்களுக்கு உதவும். (எபி. 6:2) அதை நீங்கள் எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தொடர்ந்து முன்னேற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

3. ஞானஸ்நானம் எடுத்த பின்பும் எல்லா கிறிஸ்தவர்களும் என்ன செய்ய வேண்டும்?

3 எபேசு சபையில் இருந்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனையை ஞானஸ்நானம் எடுத்த பின்பு நாம் எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டும். கிறிஸ்தவர்களாக அவர்கள் “முழு வளர்ச்சி” அடைய வேண்டும் என்று பவுல் சொன்னார். (எபே. 4:13) வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘தொடர்ந்து முன்னேற வேண்டும்’ என்று அவர் சொன்னார். நம்முடைய முன்னேற்றத்தை ஒரு குழந்தையின் வளர்ச்சியோடு பவுல் ஒப்பிட்டுப் பேசினார். புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையைப் பார்க்கும்போது அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். ஆனால், அது எப்போதுமே ஒரு குழந்தையாகவே இருந்துவிட முடியாது. வளர வளர அது ‘குழந்தைத்தனமாக’ நடந்துகொள்வதை விட்டுவிட வேண்டும். (1 கொ. 13:11) கிறிஸ்தவர்களான நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். ஞானஸ்நானம் எடுத்த பின்பும் நாம் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய வேண்டும். அதற்கு உதவும் சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

4. தொடர்ந்து முன்னேற்றம் செய்ய எது உங்களுக்கு உதவும்? விளக்குங்கள். (பிலிப்பியர் 1:9)

4 யெகோவாமேல் தொடர்ந்து அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவை உங்களுக்கு ஏற்கெனவே ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் அவர்மேல் இன்னும் அதிகமாக உங்களால் அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். அதை எப்படிச் செய்யலாம் என்பதற்கு ஒரு வழியை பிலிப்பியர் 1:9-ல் அப்போஸ்தலன் பவுல் சொல்லியிருக்கிறார். (வாசியுங்கள்.) பிலிப்பி சபையில் இருந்தவர்கள், யெகோவாமேல் ‘அதிகமதிகமாக’ அன்பை வளர்த்துக்கொள்வதற்கு ‘திருத்தமான அறிவையும் முழுமையான பகுத்தறிவையும்’ பெற வேண்டும் என்பதற்காக பவுல் ஜெபம் செய்தார். நம்மாலும் யெகோவாமேல் இன்னும் அதிகமாக அன்பு காட்ட முடியும். யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவர்மேல் நமக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாகும். அதோடு, அவருடைய குணங்களை... ஒவ்வொரு விஷயத்தையும் அவர் செய்கிற விதத்தை... நாம் இன்னும் ரசிப்போம். அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் நமக்கு இன்னும் அதிகமாகும். அவருக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருப்போம். யெகோவாவுடைய விருப்பம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் அதைச் செய்யவும் நாம் கடினமாக முயற்சி செய்வோம்.

5-6. யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பு இன்னும் அதிகமாக ஆவதற்கு நாம் என்ன செய்யலாம்? விளக்குங்கள்.

5 இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது, நம்மால் யெகோவாமேல் இன்னும் அதிகமாக அன்பு காட்ட முடியும். ஏனென்றால், இயேசு தன்னுடைய அப்பாவின் குணங்களை அப்படியே காட்டினார். (எபி. 1:3) இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள நான்கு சுவிசேஷப் புத்தகங்களை ஆழமாகப் படிக்கலாம். ஒருவேளை, தினமும் பைபிளைப் படிக்கிற பழக்கம் உங்களுக்கு இல்லையென்றால், இயேசுவைப் பற்றிய பதிவுகளிலிருந்தே நீங்கள் அதைப் படிக்க ஆரம்பிக்கலாம். அப்படிப் படிக்கும்போது முக்கியமாக இயேசுவின் குணங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். மற்றவர்கள் அவரிடம் சுலபமாக நெருங்கி வருகிற மாதிரி அவர் நடந்துகொண்டார். சின்ன பிள்ளைகளைக்கூட அன்பாக அணைத்துக்கொண்டார். (மாற். 10:13-16) தன்னுடைய சீஷர்களிடம் இயேசு நட்பாக, சகஜமாக பழகினார். அதனால், அவர்கள் அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் தங்களுடைய மனதில் இருந்ததை எல்லாம் சொன்னார்கள். (மத். 16:22) தன்னுடைய அப்பா யெகோவாவைப் போலவே இயேசு நடந்துகொண்டார் என்று நாம் பார்த்தோம். அப்படியென்றால் யெகோவாவிடமும் நம்மால் சுலபமாக நெருங்கிப் போக முடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். நாம் அவரிடம் எப்போது வேண்டுமானாலும் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்யும்போது நம்முடைய இதயத்தில் இருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் கொட்டலாம். அவர் நம்மைத் திட்ட மாட்டார். அவர் நம்மேல் ரொம்ப அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்.—1 பே. 5:7.

6 மக்களைப் பார்த்து இயேசு ரொம்பப் பரிதாபப்பட்டார். “மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது; ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்” என்று அப்போஸ்தலன் மத்தேயு எழுதினார். (மத். 9:36) அப்படியென்றால், மக்களைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்? “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (மத். 18:14) இதைக் கேட்பதற்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, இல்லையா? இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகிக்கொண்டே போகும்.

7. முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளுடன் பழகுவது உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?

7 உங்களுடைய சபையில் இருக்கிற முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளுடன் பழகுவதன் மூலமாகவும் நீங்கள் யெகோவாமேல் இன்னும் அதிகமாக அன்புகாட்ட கற்றுக்கொள்ளலாம், தொடர்ந்து முன்னேற்றமும் செய்யலாம். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்று தாங்கள் எடுத்த தீர்மானத்தை நினைத்து அவர்கள் வருத்தப்படுவதே இல்லை. யெகோவாவுடைய சேவையில் அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களை நீங்கள் கேட்கலாம். ஏதாவது தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு அவர்களிடம் ஆலோசனைகூட கேட்கலாம். ஏனென்றால், “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 11:14.

ஸ்கூலில் பரிணாமத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் எப்படி இப்போதே தயாராக இருக்கலாம்? (பாராக்கள் 8-9)

8. ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்?

8 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்.  இரண்டாவது பாராவில் பார்த்தபடி, நீங்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதைத் தடுக்க சாத்தான் முயற்சி செய்வான். அதற்கு அவன் பயன்படுத்துகிற ஒரு வழிதான் சில பைபிள் போதனைகளைப் பற்றிய சந்தேக விதைகளை மனதில் தூவுவது. உதாரணத்துக்கு, ‘கடவுள் நம்மள படைக்கல, பரிணாமத்தினாலதான் நாம வந்தோம்’ என்று சிலர் உங்களை நம்ப வைக்க முயற்சி செய்யலாம். சின்ன வயதில் நீங்கள் அதைப் பற்றி யோசித்திருக்கவே மாட்டீர்கள். ஆனால், வளர்ந்த பிறகு உங்களுக்கு அதைப் பற்றி ஸ்கூலில் கற்றுக்கொடுக்கலாம், ‘நாம பரிணாமத்தினாலதான் வந்தோம்’ என்று உங்கள் டீச்சர் சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படலாம், நம்புகிற மாதிரியும் இருக்கலாம். ஆனால், படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டார்கள். நீதிமொழிகள் 18:17 இப்படிச் சொல்கிறது: “முதலில் வாதாடுகிறவனின் பக்கம்தான் நியாயம் இருப்பதுபோல் தெரியும். ஆனால், எதிர்க்கட்சிக்காரன் வந்து குறுக்கு விசாரணை செய்யும்போது உண்மை புரியும்.” அதனால், ஸ்கூலில் சொல்லிக்கொடுக்கிற விஷயங்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதற்குப் பதிலாக கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற உண்மைகளைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். நம்முடைய பிரசுரங்களை ஆராய்ச்சி செய்துபாருங்கள். முன்பு பரிணாமத்தை நம்பிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகளிடம் பேசுங்கள். நம்மேல் அன்பு வைத்திருக்கிற ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்று எதை வைத்து நம்பினார்கள் என்பதை அவர்களிடம் கேளுங்கள். b அப்படிச் செய்தீர்கள் என்றால், படைப்பாளர் இருப்பதற்கான ஆதாரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

9. சகோதரி மெலிசாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9 படைப்பு என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து படித்தது மெலிசா என்ற சகோதரிக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது. c அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “ஸ்கூல்ல பரிணாமத்த நம்புற மாதிரியே சொல்லிக்கொடுத்தாங்க. ஆரம்பத்துல எனக்கு இருந்த சந்தேகங்கள பத்தி ஆராய்ச்சி செய்யக்கூட எனக்கு பயமா இருந்துச்சு. ஒருவேளை பரிணாமம் உண்மையா இருக்குமோனு நினைச்சு நான் பயந்தேன். ஆனா, யெகோவாதான் படைப்பாளர் அப்படிங்கறத கண்ண மூடிட்டு நாம நம்பணும்னு அவர் எதிர்பார்க்குறதில்ல. ஆதாரங்கள வைச்சு நம்பணும்னுதான் அவர் எதிர்பார்க்கறார். அதனால என்னோட சந்தேகங்கள எல்லாம் தீர்க்குறதுக்காக ஆராய்ச்சி செய்யலாம்னு முடிவு பண்ணுனேன்.” உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் சிற்றேட்டையும் உயிர் படைக்கப்பட்டதைப் பற்றி விளக்குகிற வேறு சில பிரசுரங்களையும் மெலிசா படித்தார். d “எனக்கு தேவையான எல்லா தகவலும் அதுல இருந்துச்சு. இத முன்னாடியே செஞ்சிருக்கலாமேனு நான் யோசிச்சேன்” என்று அவர் சொல்கிறார்.

10-11. ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதற்கு எது உங்களுக்கு உதவும்? (1 தெசலோனிக்கேயர் 4:3, 4)

10 கெட்ட நடத்தையைத் தவிர்த்திடுங்கள். இளம் வயதில் பாலியல் ஆசைகள் ரொம்ப அதிகமாக இருக்கும். ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ள சிலசமயம் மற்றவர்கள் உங்களை வற்புறுத்தலாம். நீங்கள் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் சாத்தானும் விரும்புகிறான். அப்படியென்றால், ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதற்கு எது உங்களுக்கு உதவும்? (1 தெசலோனிக்கேயர் 4:3, 4-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது உங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையுமே அவரிடம் கொட்டுங்கள். தப்பு செய்யாமல் இருக்க உதவச் சொல்லி அவரிடம் கேளுங்கள். (மத். 6:13) நமக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை கிடையாது, நமக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. (சங். 103:13, 14) கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். நாம் ஏற்கெனவே பார்த்த மெலிசாவும் கெட்ட ஆசைகளோடு போராடியிருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “பைபிள தினமும் படிச்சது கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட எனக்கு உதவி செஞ்சுது. நான் யெகோவாவுக்கு சொந்தம், அவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லங்கிறத அது எனக்கு ஞாபகப்படுத்துச்சு.”—சங். 119:9.

11 உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். உங்கள் உணர்ச்சிகளோடு நீங்கள் எப்படிப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி அப்பா-அம்மாவிடம் சொல்லுங்கள். அதையெல்லாம் சொல்வது சுலபம் இல்லைதான். ஆனால், நீங்கள் அப்படிச் செய்வது ரொம்ப முக்கியம். மெலிசா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்: “தைரியத்துக்காக நான் யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுனேன். அப்புறம் என்னோட பிரச்சினைய பத்தி அப்பாகிட்ட போய் பேசுனேன். பேசி முடிச்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு. என்னை நினைச்சு நிச்சயம் யெகோவா பெருமைப்பட்டிருப்பாரு.”

12. நல்ல தீர்மானங்களை எடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?

12 பைபிள் நியமங்களின்படி நடங்கள். வளர வளர நீங்களாகவே தீர்மானம் எடுப்பதற்கு உங்களுடைய அப்பா அம்மா உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் உங்களுக்கு இன்னும் அனுபவம் போதாது என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அப்படியென்றால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைக் கெடுக்கிற ஒரு தப்பான தீர்மானத்தை எடுக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? (நீதி. 22:3) நல்ல தீர்மானங்கள் எடுக்க எது உதவி செய்தது என்று கேரி என்ற சகோதரி சொல்கிறார். முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க சட்டங்கள் தேவையில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். “நான் வெறுமனே சட்டங்கள பார்க்காம அதுக்கு பின்னாடி இருக்குற பைபிள் நியமங்கள பார்க்க வேண்டியிருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஒரு பைபிள் பதிவை வாசிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா யோசிக்கிற விதத்த பத்தி இந்த பதிவு என்ன காட்டுது? சரியான தீர்மானம் எடுக்க உதவுற நியமங்கள் இதுல இருக்குதா? அந்த நியமங்கள்படி நடக்குறப்போ எனக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ (சங். 19:7; ஏசா. 48:17, 18) பைபிளை வாசித்து அதில் இருக்கிற நியமங்களை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி தீர்மானங்கள் எடுப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். நீங்கள் முன்னேற முன்னேற உங்கள் வாழ்க்கையில் வருகிற ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு ஒரு சட்டம் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால், ஒரு விஷயத்தைப் பற்றி யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்திருப்பீர்கள்.

ஒரு இளம் சகோதரி எப்படிப்பட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிறார்? (பாரா 13)

13. நல்ல நண்பர்கள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்யலாம்? (நீதிமொழிகள் 13:20)

13 யெகோவாவை நேசிக்கிறவர்களை உங்களுடைய நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள். ஏற்கெனவே பார்த்தபடி, ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். (நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்.) சாரா என்ற சகோதரியுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். ஒரு சமயத்தில் அவர் சந்தோஷத்தை இழந்து சோர்ந்துபோய்விட்டார். ஆனால், திரும்பவும் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்கிற மாதிரி ஒரு விஷயம் நடந்தது. அதைப் பற்றி சாரா இப்படிச் சொல்கிறார்: “சரியான சமயத்துல எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. ஒரு இளம் சகோதரியும் நானும் காவற்கோபுர படிப்புக்காக ஒவ்வொரு வாரமும் தயாரிச்சோம். இன்னொரு ஃப்ரெண்டு கூட்டங்கள்ல நான் திரும்பவும் பதில் சொல்றதுக்கு உதவி செஞ்சாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸோட உதவியால தனிப்பட்ட படிப்பையும் ஜெபத்தையும் நான் இன்னும் முக்கியமா நினைக்க ஆரம்பிச்சேன். திரும்பவும் நான் யெகோவாகிட்ட ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துகிட்டேன். இழந்த சந்தோஷம் எனக்கு திரும்ப கிடைச்சுது.”

14. ஜூலியனுக்கு எப்படி நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைத்தார்கள்?

14 முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு உங்களுக்கு உதவி செய்கிற நல்ல நண்பர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? மூப்பராகச் சேவை செய்துகொண்டிருக்கிற ஜூலியன் இப்படிச் சொல்கிறார்: “சின்ன வயசுல ஊழியம் செய்யுறப்போ எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அந்த ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப ஆர்வமா ஊழியம் செஞ்சாங்க. ஊழியம் செய்யறது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு புரிஞ்சுக்க அவங்க எனக்கு உதவி செஞ்சாங்க. முழுநேர ஊழியம் செய்றத என்னோட குறிக்கோளா வைச்சேன். அதுமட்டுல்ல, என்னோட வயசுலேயே ஃப்ரெண்ட்ஸ தேடிட்டு இருந்ததுனாலதான் எனக்கு நிறைய நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கலனும் புரிஞ்சுகிட்டேன். அப்புறம் எனக்கு பெத்தேல்ல நல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. பொழுதுபோக்கை எப்படி கவனமா தேர்ந்தெடுக்கணும்னு அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். இதனால யெகோவாகிட்ட இன்னும் நான் நெருக்கமா ஆகிருக்கேன்.”

15. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் தீமோத்தேயுவுக்கு பவுல் என்ன எச்சரிப்பு கொடுத்தார்? (2 தீமோத்தேயு 2:20-22)

15 சபையில் இருக்கிற ஒருவரோடு பழகுவது யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைக் கெடுத்துவிடும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? முதல் நூற்றாண்டு சபையில் இருந்த சிலர் கிறிஸ்தவர்களைப் போல யோசிக்கவோ நடந்துகொள்ளவோ இல்லை என்பது பவுலுக்குத் தெரியும். அதனால், அவர்களைவிட்டு விலகியிருக்கச் சொல்லி தீமோத்தேயுவை அவர் எச்சரித்தார். (2 தீமோத்தேயு 2:20-22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தம் ரொம்ப ரொம்ப விலைமதிப்புள்ளது. அவரோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்வதற்காக நாம் கடினமாக உழைத்திருப்போம். அதனால், அந்த நட்பைக் கெடுத்துப்போடுவதற்கு யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.—சங். 26:4.

தொடர்ந்து முன்னேற குறிக்கோள்களை வைப்பது உங்களுக்கு எப்படி உதவும்?

16. என்ன மாதிரியான குறிக்கோள்களை நீங்கள் வைக்கலாம்?

16 உங்களுக்குப் பிரயோஜனமான குறிக்கோள்களை வையுங்கள். உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கும் உதவுகிற குறிக்கோள்களைத் தேர்ந்தெடுங்கள். (எபே. 3:16) உதாரணத்துக்கு, தவறாமல் பைபிளைப் படிப்பதற்கும் அதை ஆராய்ச்சி செய்வதற்கும் நீங்கள் குறிக்கோள் வைக்கலாம். (சங். 1:2, 3) அல்லது, அடிக்கடி ஜெபம் செய்வதற்கும் இதயத்திலிருந்து ஜெபம் செய்வதற்கும் நீங்கள் குறிக்கோள் வைக்கலாம். ஒருவேளை, பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் ரொம்பக் கவனமாக இருப்பதற்கும், உங்களுடைய நேரத்தை நல்ல விதமாகப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் குறிக்கோள் வைக்கலாம். (எபே. 5:15, 16) தொடர்ந்து முன்னேற்றம் செய்வதற்கு நீங்கள் கடினமாக உழைப்பதைப் பார்க்கும்போது, யெகோவா ரொம்ப சந்தோஷப்படுவார்.

அவர் என்ன குறிக்கோள் வைக்கிறார்? (பாரா 17)

17. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது உங்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும்?

17 மற்றவர்களுக்கு உதவி செய்வதுகூட, ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆவதற்கு உங்களுக்கு உதவும். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (அப். 20:35) உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் நீங்கள் பயன்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். உதாரணத்துக்கு, உங்களுடைய சபையில் இருக்கிற வயதானவர்களுக்கும் உடம்பு சரியில்லாதவர்களுக்கும் உதவி செய்வதை உங்களுடைய குறிக்கோளாக வைக்கலாம். ஒருவேளை, கடையிலிருந்து பொருள்களை அவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். எலெக்ட்ரானிக் கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லிக்கொடுக்கலாம். நீங்கள் ஒரு சகோதரராக இருந்தால், ஒரு உதவி ஊழியராக ஆவதை உங்கள் குறிக்கோளாக வைக்கலாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து நீங்கள் அப்படிச் செய்யலாம். (பிலி. 2:4) மற்ற ஜனங்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்வதன் மூலம் அவர்கள்மேலும் நீங்கள் அன்பு காட்டலாம். (மத். 9:36, 37) முடிந்தவரை, ஏதாவது ஒரு வழியில் முழுநேர சேவையைச் செய்வதை உங்களுடைய குறிக்கோளாக வையுங்கள்.

18. முழுநேர சேவையைச் செய்வது யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு உங்களுக்கு எப்படி உதவும்?

18 முழுநேர சேவை செய்யும்போது யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பயனியராக சேவை செய்கிறபோது உங்களுக்கு ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். அல்லது, பெத்தேலில் சேவை செய்வதற்கோ அமைப்பின் கட்டுமான வேலைகளைச் செய்வதற்கோ வாய்ப்பு கிடைக்கலாம். கேட்லின் என்ற இளம் பயனியர் சகோதரி என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “அனுபவமுள்ள சகோதர சகோதரிகளோட சேர்ந்து ஊழியம் செஞ்சது ஞானஸ்நானம் எடுத்ததுக்கு அப்புறம் முன்னேற எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. அவங்களோட உதாரணத்த பார்த்தது பைபிள ஆழமா படிக்கிறதுக்கும் திறமையா கத்துக்கொடுக்குறதுக்கும் என்னை தூண்டுச்சு.”

19. தொடர்ந்து முன்னேற்றம் செய்யும்போது உங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

19 நீங்கள் தொடர்ந்து முன்னேற்றம் செய்யும்போது உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களில் உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க மாட்டீர்கள். (1 யோ. 2:17) தவறான தீர்மானம் எடுப்பதால் வருகிற வலியையும் வேதனையையும் உங்களால் தவிர்க்க முடியும். அதற்குப் பதிலாக, உண்மையான சந்தோஷமும் வெற்றியும் உங்களுக்குக் கிடைக்கும். (நீதி. 16:3) உங்களுடைய நல்ல உதாரணத்தைப் பார்க்கும்போது சபையில் இருக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருக்குமே ரொம்ப உற்சாகமாக இருக்கும். (1 தீ. 4:12) எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்கிறோம், அவரோடு நெருக்கமான நட்பு வைத்திருக்கிறோம் என்ற சந்தோஷமும் திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.—நீதி. 23:15, 16.

பாட்டு 88 வழிக்காட்டுங்கள் என் தேவனே!

a இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்க்கும்போது யெகோவாவின் ஊழியர்களான நம் எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால், ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து முன்னேற்றம் செய்வதற்கு அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். புதிதாக ஞானஸ்நானம் எடுத்த இளம் பிள்ளைகள் தொடர்ந்து முன்னேற்றம் செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இதைத் தெரிந்துகொள்வது நம் எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கும்.

b jw.org-ல் “உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன?” என்ற தலைப்பிலும் பாருங்கள்.

c சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

d உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? புத்தகம் (ஆங்கிலம்) மற்றும் உயிர் படைக்கப்பட்டதா? என்ற சிற்றேடு (ஆங்கிலம்).