படிப்புக் கட்டுரை 33
தன்னுடைய மக்களை யெகோவா அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்
‘யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களை . . . உன்னிப்பாகக் கவனிக்கின்றன.’—சங். 33:18.
பாட்டு 4 ‘யெகோவா என் மேய்ப்பர்’
இந்தக் கட்டுரையில்... a
1. சீஷர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி யெகோவாவிடம் இயேசு ஏன் கேட்டார்?
இறப்பதற்கு முந்தின ராத்திரி, இயேசு தன்னுடைய பரலோக அப்பாவிடம் ஒரு முக்கியமான விஷயத்துக்காக ஜெபம் செய்தார். தன்னுடைய சீஷர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி யெகோவாவிடம் கேட்டார். (யோவா. 17:15, 20) யெகோவா எப்போதும் அவருடைய மக்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும், தன்னுடைய சீஷர்களை சாத்தான் வெறித்தனமாகத் தாக்குவான் என்று இயேசுவுக்குத் தெரியும். அந்த மோசமான தாக்குதல்களைச் சமாளிப்பதற்கு யெகோவாவின் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் என்றும் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அப்படி ஜெபம் செய்தார்.
2. பயங்கரமான பிரச்சினைகள் வரும்போது நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை? (சங்கீதம் 33:18-20)
2 சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உலகத்திலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. நம்மை சோர்ந்துபோக வைக்கிற அளவுக்கோ யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போக வைக்கிற அளவுக்கோகூட பயங்கரமான கஷ்டங்கள் வருகின்றன. ஆனால், அதையெல்லாம் நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். யெகோவா நம்மை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார். நமக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்றெல்லாம் பார்க்கிறார். அதையெல்லாம் சமாளிக்க நமக்கு உதவுவதற்கு அவர் எப்போதுமே தயாராக இருக்கிறார். யெகோவா தனக்கு ‘பயந்து நடக்கிறவர்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்’ என்பதைப் புரிந்துகொள்ள உதவும் இரண்டு பைபிள் உதாரணங்களை நாம் பார்க்கலாம்.—சங்கீதம் 33:18-20-ஐ வாசியுங்கள்.
தனிமை உணர்வு வாட்டும்போது
3. நாம் எப்போதெல்லாம் தனிமை உணர்வால் வாடலாம்?
3 யெகோவாவை வணங்குகிறவர்கள் இருக்கிற ஒரு பெரிய குடும்பத்தின் பாகமாக நாம் இருந்தாலும், எப்போதாவது தனிமை உணர்வு நம்மை வாட்டலாம். உதாரணத்துக்கு, இளம் பிள்ளைகள் ஸ்கூலில் மற்ற பிள்ளைகளுக்கு முன்னால் தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி விளக்கும்போது... புதிதாக ஒரு சபைக்கு மாறிப் போகும்போது... தங்களோடு யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போல் உணரலாம். நாமும்கூட சிலசமயங்களில் நம்முடைய கவலைகளைத் தனியாகச் சமாளிக்க வேண்டியிருப்பதாக நினைத்து சோகமாகிவிடலாம். அல்லது, மனதளவில் சோர்ந்து போய்விடலாம். நம்முடைய பிரச்சினைகளையெல்லாம் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்று நினைத்து அதைப் பற்றி அவர்களிடம் பேச நாம் தயங்கலாம். நம்மேல் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும்கூட சிலசமயங்களில் நமக்குத் தோன்றலாம். இப்படி, தனிமை உணர்வு நம்மை வாட்டும்போது நாம் கவலையில் மூழ்கிவிடலாம். உதவிக்கு யாருமே இல்லை என்று நினைக்கலாம். ஆனால், நாம் அப்படி நினைக்க வேண்டும் என்று யெகோவா ஒருநாளும் விரும்புவதில்லை. எப்படிச் சொல்லலாம்?
4. “நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன்” என்று எலியா தீர்க்கதரிசி ஏன் சொன்னார்?
4 கடவுளுக்கு உண்மையாக இருந்த எலியாவின் உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். எலியாவைக் கொன்றுபோடுவதாக யேசபேல் சபதம் செய்திருந்ததால் உயிருக்குப் பயந்து அவர் ஓடிப்போனார். 40 நாட்களுக்கும்மேல் அவர் பயந்து பயந்து வாழ்ந்தார். (1 ரா. 19:1-9) கடைசியில், ஒரு குகையில் அவர் தன்னந்தனியாக இருந்தபோது, யெகோவாவிடம் “[தீர்க்கதரிசிகளில்] நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன்” என்று சொல்லிக் கதறினார். (1 ரா. 19:10) ஆனால், தேசத்தில் மற்ற தீர்க்கதரிசிகளும் உயிரோடுதான் இருந்தார்கள். கொலைவெறி பிடித்த யேசபேலின் கையிலிருந்து 100 தீர்க்கதரிசிகளை ஒபதியா காப்பாற்றியிருந்தார். (1 ரா. 18:7, 13) இருந்தாலும், தான் மட்டும் தன்னந்தனியாக இருப்பதுபோல எலியா ஏன் நினைத்தார்? ஒபதியா காப்பாற்றிய தீர்க்கதரிசிகள் எல்லாரும் இறந்துபோயிருப்பார்கள் என்று அவர் நினைத்தாரா? கர்மேல் மலையில் நடந்த சோதனைக்குப் பிறகும் யாருமே தன்னுடன் சேர்ந்து யெகோவாவை வணங்காததால் தனியாக இருப்பது போல் அவர் நினைத்தாரா? அவர் இவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பது யாருக்குமே தெரியாது என்று நினைத்தாரா? ஒருவேளை தன்னைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை என்று அவர் யோசித்திருப்பாரா? அவர் எதைப் பற்றியெல்லாம் யோசித்துக் கவலைப்பட்டிருப்பார் என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், எலியா ஏன் தனியாக இருப்பதாக நினைத்தார் என்பதை யெகோவா புரிந்துகொண்டார் என்று நமக்கு நன்றாகத் தெரியும். அதோடு, அவருக்கு எப்படி உதவுவது சரியாக இருக்கும் என்றும் யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது.
5. எலியா தனியாக இல்லை என்பதை அவருக்கு யெகோவா எப்படிப் புரியவைத்தார்?
5 எலியாவுக்கு நிறைய வழிகளில் யெகோவா உதவி செய்தார். அவர் மனம்விட்டு பேச யெகோவா அனுமதித்தார். “இங்கே என்ன செய்கிறாய்?” என்று இரண்டு முறை எலியாவிடம் அவர் கேட்டார். (1 ரா. 19:9, 13) ஒவ்வொரு தடவையும் தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் எலியா கொட்டியபோது யெகோவா கவனித்துக்கேட்டார். தன்னுடைய துணை எலியாவுக்கு இருக்கிறது என்பதையும், தனக்கு ரொம்ப சக்தி இருக்கிறது என்பதையும் யெகோவா காட்டினார். தன்னை வணங்குகிற நிறைய பேர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதையும் அவருக்குப் புரியவைத்தார். (1 ரா. 19:11, 12, 18) தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லி, அதற்கு அவர் கொடுத்த பதில்களைக் கேட்ட பிறகு எலியாவின் மனதுக்கு ரொம்ப நிம்மதியாக இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, அவருக்கு சில முக்கியமான பொறுப்புகளையும் யெகோவா கொடுத்தார். அசகேலை சீரியாவின் ராஜாவாகவும், யெகூவை இஸ்ரவேலின் ராஜாவாகவும், எலிசாவை தீர்க்கதரிசியாகவும் அபிஷேகம் செய்யச் சொன்னார். (1 ரா. 19:15, 16) இந்தப் பொறுப்புகளையெல்லாம் கொடுப்பதன் மூலம் முக்கியமான விஷயங்கள்மீது கவனம் செலுத்த எலியாவுக்கு யெகோவா உதவினார். அவருக்கு எலிசாவை ஒரு நல்ல நண்பராகக் கொடுத்தார். தனியாக இருப்பதுபோல உணருகிற சமயங்களில் யெகோவாவின் உதவி உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்யலாம்?
6. நீங்கள் தனிமையில் வாடுவதுபோல் உணர்ந்தால் எப்படி ஜெபம் செய்யலாம்? (சங்கீதம் 62:8)
6 நீங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் பார்க்கிறார். அதுமட்டுமல்ல, நீங்கள் எந்த நேரத்தில் ஜெபம் செய்தாலும் அதைக் கேட்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். (1 தெ. 5:17) தன்னுடைய ஊழியர்கள் ஜெபம் செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷமாகக் கேட்கிறார். (நீதி. 15:8) தனிமையில் வாடும்போது நீங்கள் எப்படி ஜெபம் செய்யலாம்? எலியா செய்தது போல உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டலாம். (சங்கீதம் 62:8-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய கவலைகளையும், அதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதையும் அவரிடம் சொல்லுங்கள். அதையெல்லாம் சமாளிக்க அவரிடம் உதவி கேளுங்கள். உதாரணத்துக்கு, ஸ்கூலில் கூடப் படிக்கிற பிள்ளைகள் உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும்போது உங்களுக்குப் பயமாக இருக்கலாம். தனியாக மாட்டிக்கொண்டது போல் தோன்றலாம். அதுபோன்ற சமயங்களில் தைரியமாக அவர்களிடம் பேசுவதற்கு உதவி கேளுங்கள். உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி ரொம்ப சாதுரியமாக விளக்கிச் சொல்ல ஞானத்தையும் கேட்டு அவரிடம் ஜெபம் செய்யுங்கள். (லூக். 21:14, 15) ஒருவேளை, மனதளவில் நீங்கள் ரொம்ப சோர்ந்துபோய் இருந்தால், அனுபவமுள்ள ஒரு கிறிஸ்தவரிடம் அதைப் பற்றிப் பேச உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நீங்கள் யாரிடம் உங்கள் பிரச்சினையைச் சொல்கிறீர்களோ, அவர்கள் நீங்கள் சொல்வதை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும்படியும் யெகோவாவிடம் கேட்கலாம். உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டும்போது... நீங்கள் செய்யும் ஜெபங்களுக்கு எல்லாம் அவர் எப்படிப் பதில் கொடுக்கிறார் என்பதைப் பார்க்கும்போது... மற்றவர்களுடைய உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது... தனிமையில் வாடுவதுபோல் உணரமாட்டீர்கள்.
7. மாரிசியோவின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
7 யெகோவா நம் எல்லாருக்குமே முக்கியமான வேலையைக் கொடுத்திருக்கிறார். சபை வேலைகளையும் ஊழியத்தையும் நன்றாகச் செய்ய நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் அவர் கவனிக்கிறார் என்றும் அதை உயர்வாக மதிக்கிறார் என்றும் நீங்கள் உறுதியாக நம்பலாம். (சங். 110:3) தனியாக இருப்பதுபோல் நீங்கள் நினைக்கும்போது இந்த வேலைகளை மும்முரமாகச் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்? மாரிசியோ என்ற ஒரு இளம் சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். b அவர் ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச நாளில், அவருடைய உயிர் நண்பர் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக சத்தியத்தை விட்டுப் போய்விட்டார். “அவர் விலகி போனத பார்த்தப்போ என்னோட தன்னம்பிக்கையே போயிடுச்சு. யெகோவாவுக்கு கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியுமா, அவரோட குடும்பத்துல ஒருவனா தொடர்ந்து இருக்க முடியுமானு நான் யோசிச்சேன். நான் தனிமரமா இருக்குற மாதிரி தோணுச்சு. என்னோட கவலைகள யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்கனு நினச்சேன்” என்று மாரிசியோ சொல்கிறார். ஆனால், அவருக்கு எது உதவியது? “நான் அதிகமா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். என்னை பத்தியும், என் மனசுல இருக்குற கவலைகள பத்தியும் யோசிச்சிட்டு இருக்குறத நிறுத்த அது எனக்கு உதவியா இருந்துச்சு. மத்தவங்களோட சேர்ந்து ஊழியம் செஞ்சப்போ என்னோட தனிமை உணர்வெல்லாம் போய் நான் சந்தோஷமா இருந்தேன்” என்று அவர் சொல்கிறார். இன்றைக்கு நம்மால் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நேரில் ஊழியம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களோடு சேர்ந்து கடிதம் மூலமாகவோ ஃபோன் மூலமாகவோ ஊழியம் செய்வது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மாரிசியோவுக்கு வேறு எதுவும்கூட உதவியாக இருந்தது? “சபை வேலைகள நான் மும்முரமா செஞ்சேன். எனக்கு கிடைச்ச மாணவர் நியமிப்புகள நல்லா தயாரிச்சு கொடுக்க முயற்சி செஞ்சேன். இப்படி செஞ்சப்போ யெகோவாவும் மத்தவங்களும் என்னை உயர்வா மதிக்கிறாங்கனு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது” என்று மாரிசியோ சொல்கிறார்.
பயங்கரமான கஷ்டங்கள் நம்மைத் திணறடிக்கும்போது
8. பயங்கரமான கஷ்டங்கள் வரும்போது நமக்கு எப்படி இருக்கும்?
8 இந்தக் கடைசி நாட்களில், கஷ்டங்கள் வரும் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம். (2 தீ. 3:1) ஆனால், திடீரென்று ஒரு பணப் பிரச்சினை வரும் என்றோ ஒரு மோசமான நோய் வரும் என்றோ நம்முடைய அன்பான ஒருவர் இறந்துபோய்விடுவார் என்றோ நாம் எதிர்பார்க்க மாட்டோம். நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அது நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் சோர்ந்துபோய்விடலாம். அதுவும் அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சினை வரும்போது, அல்லது எல்லா பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் வரும்போது நாம் மனமுடைந்து அப்படியே உட்கார்ந்துவிடலாம். ஆனால், யெகோவா நம்மை அக்கறையாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அவருடைய உதவியால் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் நம்மால் தைரியமாக சமாளிக்க முடியும்.
9. யோபுவுக்கு வந்த கஷ்டங்களில் சிலவற்றை சொல்லுங்கள்.
9 கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்த யோபுவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர் கொஞ்சக் காலத்துக்குள்ளேயே பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்தார். அவருக்குச் சொந்தமான மிருகங்கள் சில திருடப்பட்டன, மற்றவை கொல்லப்பட்டன; அவருடைய வேலைக்காரர்களும் கொல்லப்பட்டார்கள்; அதைவிட கொடுமை என்னவென்றால், அவருடைய அருமையான பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். (யோபு 1:13-19) ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களைக் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியில் அவருடைய மனசு சுக்குநூறாகிவிட்டது. இந்தச் சோகத்திலிருந்து மீண்டுவருவதற்குள், அவருடைய உடம்பை உருக்குலைக்கிற பயங்கரமான நோய் அவருக்கு வந்தது. (யோபு 2:7) அவருடைய நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதால் “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது; உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை” என்று சொன்னார்.—யோபு 7:16.
10. கஷ்டங்களை சகிக்க யோபுவுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்தார்? (அட்டைப் படம்.)
10 யோபுவை யெகோவா அக்கறையாகக் கவனித்துக்கொண்டார். ஏனென்றால், யோபுமீது யெகோவாவுக்கு ரொம்பப் பாசம் இருந்தது. அதனால் கஷ்டங்களை சகிக்கவும், அவருக்கு உண்மையாக இருக்கவும் தேவையானதை எல்லாம் செய்தார். யோபுவிடம் யெகோவா பேசியபோது, தனக்கு இருக்கும் எல்லையில்லாத ஞானத்தைப் பற்றியும், தான் படைத்த உயிரினங்கள்மேல் தனக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதைப் பற்றியும் சொன்னார். பிரமிக்க வைக்கும் சில உயிரினங்களைப் பற்றி அவர் சொன்னார். (யோபு 38:1, 2; 39:9, 13, 19, 27; 40:15; 41:1, 2) அதுமட்டுமல்ல, இளைஞராக இருந்த எலிகூ மூலமாக யோபுவைப் பலப்படுத்தினார், ஆறுதல்படுத்தினார். கஷ்டங்களை சகிக்கிற தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா கண்டிப்பாகப் பலன் கொடுப்பார் என்பதை யோபுவுக்கு எலிகூ ஞாபகப்படுத்தினார். அதேசமயத்தில், எலிகூ மூலமாக யெகோவா அன்பான விதத்தில் சில ஆலோசனைகளையும் கொடுத்தார். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த யெகோவாவோடு ஒப்பிடும்போது, நாம் வெறும் தூசுதான் என்பதைப் புரிந்துகொள்ள யோபுவுக்கு எலிகூ உதவினார். (யோபு 37:14) யோபுவுக்கு ஒரு பொறுப்பையும் யெகோவா கொடுத்தார். பாவம் செய்த அவருடைய மூன்று நண்பர்களுக்காக ஜெபம் செய்யச் சொன்னார். (யோபு 42:8-10) இன்றைக்கு நாம் பயங்கரமான கஷ்டங்களை அனுபவிக்கும்போது யெகோவா எப்படி உதவி செய்கிறார்?
11. கஷ்டங்களை அனுபவிக்கும்போது பைபிள் நமக்கு எப்படி ஆறுதல் தருகிறது?
11 யோபுவிடம் பேசியதுபோல், இன்றைக்கு யெகோவா நம்மிடம் நேரடியாகப் பேசுவதில்லை. ஆனால், அவருடைய வார்த்தையான பைபிள் மூலம் நம்மிடம் அவர் பேசுகிறார். (ரோ. 15:4) நமக்கு அருமையான எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து நம்மை அவர் ஆறுதல்படுத்துகிறார். கஷ்டங்களை அனுபவிக்கும்போது நமக்கு ஆறுதல் கொடுக்கிற சில பைபிள் வசனங்களைக் கவனியுங்கள். யெகோவா ‘காட்டுகிற அன்பிலிருந்து [எதுவுமே] நம்மைப் பிரிக்க முடியாது’ என்று அவர் நமக்கு உறுதியாகச் சொல்கிறார், அது பயங்கரமான கஷ்டங்களாக இருந்தாலும் சரி! (ரோ. 8:38, 39) அதோடு, ‘தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருப்பதாக’ அவர் நமக்கு வாக்குக் கொடுக்கிறார். (சங். 145:18) நாம் அவரையே நம்பியிருந்தால் எந்தக் கஷ்டத்தையும் சகிக்க முடியும் என்றும் அந்தக் கஷ்டத்திலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்றும் அவர் நமக்குச் சொல்கிறார். (1 கொ. 10:13; யாக். 1:2, 12) அவர் நமக்குப் பரிசாகத் தரப்போகும் முடிவில்லாத வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு வருகிற கஷ்டங்கள் எல்லாமே தற்காலிகமானதுதான்! சொல்லப்போனால், அது ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும். (2 கொ. 4:16-18) நம்முடைய எல்லா கஷ்டங்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் சாத்தானையும், அவனைப் போலவே நடந்துகொள்பவர்களையும் ஒழித்துக்கட்டுவதாக யெகோவா நமக்கு நம்பிக்கை கொடுக்கிறார். (சங். 37:10) எதிர்காலத்தில் வரப்போகிற கஷ்டங்களைச் சகிக்க உதவுகிற சில ஆறுதலான பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்திருக்கிறீர்களா?
12. பைபிளிலிருந்து நாம் முழுமையாகப் பிரயோஜனம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?
12 நாம் நேரம் ஒதுக்கி பைபிளைத் தவறாமல் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். கற்றுக்கொண்ட விஷயங்களை நாம் கடைப்பிடிக்கும்போது நம்முடைய விசுவாசம் பலமாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பரலோக அப்பா யெகோவாவிடம் நெருங்கிப் போவோம். அப்படிச் செய்யும்போது, சோதனைகளைச் சகிப்பதற்குத் தேவையான பலம் நமக்குக் கிடைக்கும். தன்னுடைய வார்த்தையை நம்பியிருக்கிறவர்களுக்கு யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுக்கிறார். அதன்மூலமாக, எந்தக் கஷ்டத்தையும் சோதனையையும் தாங்கிக்கொள்வதற்கு “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” நமக்குக் கிடைக்கும்.—2 கொ. 4:7-10.
13. “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” கொடுக்கிற ஆன்மீக உணவு கஷ்டங்களைச் சகிக்க நமக்கு எப்படி உதவுகிறது?
13 யெகோவாவின் உதவியோடு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” ஏராளமான கட்டுரைகளையும் வீடியோக்களையும் பாடல்களையும் தயாரித்துக் கொடுக்கிறார்கள். (மத். 24:45) இவையெல்லாம் விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வதற்கும் யெகோவாவோடு எப்போதும் நெருக்கமாக இருப்பதற்கும் நமக்கு உதவுகின்றன. சரியான சமயத்தில் யெகோவா கொடுக்கிற எல்லாவற்றையும் நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சகோதரி யெகோவா கொடுக்கிற இந்த எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருப்பதாகச் சொன்னார். “நான் 40 வருஷமா யெகோவாவுக்கு சேவை செஞ்சிட்டு இருக்கேன். இத்தனை வருஷத்துல, நான் யெகோவாவுக்கு உண்மையா இருப்பேனா, மாட்டேனாங்கறத சோதிச்சு பார்க்கிற மாதிரி நிறைய பிரச்சினைகள் வந்துருக்கு” என்று அந்தச் சகோதரி சொல்கிறார். அவருக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்தன. ஒருவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்து அவருடைய தாத்தாமேல் மோதியதால் அவர் இறந்துபோய்விட்டார். அவருடைய அப்பா-அம்மாவுக்கு மோசமான நோய் வந்ததால் அவர்களும் இறந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, அந்த சகோதரி இரண்டு தடவை புற்றுநோயால் அவதிப்பட்டிருக்கிறார். இவை எல்லாவற்றையும் சகிப்பதற்கு அவருக்கு எது உதவியது? “யெகோவா எப்பவுமே என்னை அக்கறையா பார்த்துக்கிட்டாரு. உண்மையும் விவேகமும் உள்ள அடிமை மூலமா அவர் கொடுத்திருக்கிற ஆன்மீக உணவு, சகிச்சிருக்க எனக்கு உதவி செஞ்சிருக்கு. அதனால, ‘சாகும்வரை நான் கடவுளுக்கு உண்மையாக இருப்பேன்’னு யோபு சொன்ன மாதிரி என்னாலயும் சொல்ல முடியும்” என்று அவர் சொல்கிறார்.—யோபு 27:5, அடிக்குறிப்பு.
14. கஷ்டங்கள் வரும்போது சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார்? (1 தெசலோனிக்கேயர் 4:9)
14 இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் பாசம் காட்டுவதற்கும், ஆறுதல் சொல்வதற்கும் யெகோவா தன்னுடைய மக்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். (2 கொ 1:3, 4; 1 தெசலோனிக்கேயர் 4:9-ஐ வாசியுங்கள்.) நாம் கஷ்டங்களை அனுபவிக்கும்போது எலிகூவை மாதிரியே நம் சகோதர சகோதரிகளும் கடவுளுக்கு உண்மையாக இருக்க நமக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். (அப். 14:22) உதாரணத்துக்கு, டையன் என்ற சகோதரியின் கணவருக்கு மோசமான உடல்நலப் பிரச்சினை வந்தபோது, சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் அவரை உற்சாகப்படுத்துவதற்கும் யெகோவாவோடு அவர் நெருக்கமாக இருப்பதற்கும் எப்படி உதவி செய்தார்கள் என்று பாருங்கள். “நாங்க கஷ்டமான சூழ்நிலையில இருந்தோம். ஆனா, அந்த மாசங்கள்ல, யெகோவா அவரோட பலத்த கைகளால எங்கள பாசமா தாங்குனத உணர முடிஞ்சுது. சபையில இருக்குறவங்க எங்களுக்கு நிறைய உதவி செஞ்சாங்க. எங்கள நேர்ல வந்து பார்த்தாங்க. ஃபோன் பண்ணுனாங்க. அன்பா கட்டி அணைச்சாங்க. நாங்க சகிச்சிருக்குறதுக்கு இதெல்லாமே எங்களுக்கு உதவியா இருந்துச்சு. எனக்கு கார் ஓட்ட தெரியாததால கூட்டங்களுக்கு போறதுக்கும், முடிஞ்சப்பெல்லாம் ஊழியத்துக்கு போறதுக்கும் சகோதர சகோதரிகள் உதவி செஞ்சாங்க” என்று அந்த சகோதரி சொல்கிறார். இந்த மாதிரி அன்பான குடும்பத்தின் பாகமாக இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம், இல்லையா?
யெகோவா நம்மை அக்கறையோடு கவனித்துக்கொள்வதற்காக நன்றியோடு இருங்கள்
15. என்ன கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும் என்று நாம் ஏன் உறுதியோடு இருக்கிறோம்?
15 நம் எல்லாருக்குமே ஏதாவது ஒரு கஷ்டம் கண்டிப்பாக வரும். ஆனால் இதுவரைக்கும் நாம் பார்த்தபடி, அதையெல்லாம் நாம் தன்னந்தனியாக சமாளிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், பாசமான ஒரு அப்பாவாக யெகோவா எப்போதுமே நம்மை அக்கறையாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் நம் கூடவே இருக்கிறார். (ஏசா. 43:2) உதவி கேட்டு நாம் கெஞ்சும்போது அதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார். நமக்கு உதவி செய்வதற்கும் அவர் ஆசையாக இருக்கிறார். கஷ்டங்களை சகித்துக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் நமக்குத் தாராளமாகக் கொடுத்திருக்கிறார். ஜெபம் என்ற பாக்கியத்தைத் தந்திருக்கிறார். பைபிளையும் ஏராளமான ஆன்மீக உணவையும் கொடுத்திருக்கிறார். இக்கட்டான சமயங்களில் நமக்கு உதவி செய்வதற்கு அன்பான சகோதர சகோதரிகளைக் கொடுத்திருக்கிறார். அதனால், என்ன கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிக்க முடியும் என்று நாம் உறுதியோடு இருக்கிறோம்.
16. யெகோவா நம்மை எப்போதும் அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
16 நம்முடைய பரலோக அப்பா நம்மை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! “அவரை நினைத்து நம் இதயம் சந்தோஷப்படுகிறது.” (சங். 33:21) யெகோவா நம்மை அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொள்வதற்கு நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? அவர் நமக்குச் செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் காட்டலாம். அதேசமயத்தில் யெகோவா நம்மை அக்கறையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றால் நம் பங்கிலும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் அவருக்குப் பிடித்ததைச் செய்யவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர் எப்போதுமே நம்மை அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொள்வார்!—1 பே. 3:12.
பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!
a இன்றைக்கு நமக்கு வருகிற பயங்கரமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு யெகோவாவின் உதவி நமக்குத் தேவை. இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது யெகோவா நம்மை எந்தளவுக்குக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வருகிற பிரச்சினைகளை அவர் கவனிக்கிறார். அதையெல்லாம் சமாளிப்பதற்குத் தேவையான உதவியும் செய்கிறார்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.