படிப்புக் கட்டுரை 36
யெகோவாவின் மக்கள் நீதியை நேசிக்கிறார்கள்
“நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத். 5:6.
பாட்டு 9 யெகோவா நம் ராஜா!
இந்தக் கட்டுரையில்... a
1. யோசேப்புக்கு என்ன சோதனை வந்தது, அந்தச் சமயத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார்?
யாக்கோபின் மகன் யோசேப்புக்கு ரொம்பப் பெரிய சோதனை வந்தது. அவருடைய எஜமான் போத்திபாரின் மனைவி, அவரோடு தப்பான உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்தாள். “என்னோடு படு!” என்று யோசேப்பை அவள் வற்புறுத்தினாள். இருந்தாலும் யோசேப்பு அவளுடைய ஆசைக்கு இணங்கவில்லை. ‘யோசேப்பு ஏன் அவளோட ஆசைக்கு இணங்கல?’ என்று சிலர் யோசிக்கலாம். ஏனென்றால், போத்திபார் வீட்டில் இல்லை. அதுமட்டுமல்ல, யோசேப்பு அந்த வீட்டில் ஒரு அடிமையாக இருந்தார். அதனால், அவளுடைய ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவருடைய வாழ்க்கையையே அவளால் சீரழிக்கக்கூட முடியும். இருந்தாலும் யோசேப்பு தப்பு செய்யக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார். ஏனென்றால், “நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?” என்று அவர் சொன்னார்.—ஆதி. 39:7-12.
2. பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவது யெகோவாவுக்கு எதிராகச் செய்யும் ஒரு பெரிய தவறு என்று யோசேப்புக்கு எப்படித் தெரியும்?
2 இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப் பிறகுதான், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது” என்ற சட்டத்தை யெகோவா கொடுத்தார். (யாத். 20:14) அப்படியிருக்கும்போது, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவது யெகோவாவுக்கு எதிராகச் செய்யும் ஒரு “பெரிய தவறு” என்று யோசேப்புக்கு எப்படித் தெரிந்திருந்தது? யெகோவாவைப் பற்றி யோசேப்பு நன்றாகப் புரிந்துவைத்திருந்தார். அதனால், ஒழுக்கக்கேட்டைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. உதாரணத்துக்கு, யெகோவா திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தபோது, ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைத்தான் கொடுத்தார் என்பது அவருக்குத் தெரியும். அதோடு, இரண்டு சந்தர்ப்பங்களில் அவருடைய கொள்ளுப்பாட்டி சாராளை அடைய முயற்சி செய்தவர்களிடமிருந்து அவளை யெகோவா காப்பாற்றினார். அதேபோல் ஈசாக்கின் மனைவி ரெபெக்காளையும் யெகோவா காப்பாற்றினார். (ஆதி. 2:24; 12:14-20; 20:2-7; 26:6-11) யோசேப்பு இந்த விஷயங்களை எல்லாம் நன்றாக யோசித்துப்பார்த்திருப்பார். அதனால், யெகோவாவின் பார்வையில் எது சரி, எது தவறு என்பதைப் புரிந்திருப்பார். யோசேப்பு யெகோவாவை ரொம்ப நேசித்ததால் அவருடைய நீதியான நெறிமுறைகளையும் நேசித்தார். அதனால், சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 நீங்கள் நீதியை நேசிக்கிறீர்களா? கண்டிப்பாக நேசிப்பீர்கள், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கவனமாக இல்லையென்றால் இந்த உலகம் எதை நீதி என்று நினைக்கிறதோ அதையே நாமும் ஏற்றுக்கொண்டு, அப்படியே நடக்க ஆரம்பித்துவிடுவோம். (ஏசா. 5:20; ரோ. 12:2) அதனால், நீதி என்றால் என்ன என்பதையும் நீதியை நேசிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம். அதற்குப் பிறகு, என்ன மூன்று வழிகளில் யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை நாம் இன்னும் அதிகமாக நேசிக்கலாம் என்றும் பார்ப்போம்.
நீதி என்றால் என்ன?
4. தங்களை நீதிமான் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
4 சிலர் தங்களை நீதிமான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பெருமைபிடித்தவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களைக் குறை சொல்கிறார்கள். தங்களால்தான் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். உண்மையில், இப்படிப்பட்ட குணங்கள் கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இயேசு பூமியிலிருந்தபோது வாழ்ந்த மதத் தலைவர்கள், தங்களுடைய பார்வையில் எது சரியாக இருந்ததோ அதைச் செய்துவிட்டு தங்களை நீதிமான்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்களை இயேசு பயங்கரமாகக் கண்டித்தார். (பிர. 7:16; லூக். 16:15) தன்னையே பெரிய நீதிமான் என்று நினைத்துக்கொள்கிற ஒருவர் உண்மையிலேயே ஒரு நீதிமான் கிடையாது.
5. பைபிளின்படி நீதி என்றால் என்ன? உதாரணம் கொடுங்கள்.
5 நீதி என்பது ரொம்ப அருமையான ஒரு குணம். சுருக்கமாகச் சொன்னால், யெகோவாவுடைய பார்வையில் எது சரியோ அதைச் செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. பைபிளில் “நீதி” என்ற அர்த்தத்தை தரும் வார்த்தைகள், யெகோவாவின் உயர்ந்த நெறிமுறைகள்படி வாழ்வதைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, வியாபாரிகள் “சரியான எடைக்கற்களை” பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (உபா. 25:15) “சரியான” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தையை “நீதியான” என்றும் மொழிபெயர்க்கலாம். அப்படியென்றால், கடவுளுடைய பார்வையில் நீதிமானாக இருக்க வேண்டுமென நினைக்கிற ஒரு கிறிஸ்தவர் வியாபாரம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் சரியாகவும் நேர்மையாகவும் இருப்பார். நீதியாக நடந்துகொள்கிற ஒருவர் நியாயத்தை நேசிப்பார். யாராவது அநியாயமாக நடத்தப்படுவதைப் பார்க்கும்போது அவருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அதுமட்டுமல்ல, நீதியாக நடக்க விரும்புகிற ஒருவர், யெகோவாவை ‘முழுமையாகப் பிரியப்படுத்த’ விரும்புவார். அதனால், அவர் எடுக்கிற தீர்மானத்தைப் பற்றி யெகோவா என்ன நினைப்பார் என்று யோசித்துப்பார்ப்பார்.—கொலோ. 1:10.
6. எது சரி, எது தவறு என்று யெகோவாவினால்தான் சரியாகத் தீர்மானிக்க முடியும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (ஏசாயா 55:8, 9)
6 யெகோவாதான் நீதியின் ஊற்றுமூலராக இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அதனால்தான், அவர் ‘நீதியுள்ள கடவுள்’ என்று அழைக்கப்படுகிறார். (எரே. 50:7) யெகோவாதான் எல்லாவற்றையும் படைத்தவர். அதனால் எது சரி, எது தவறு என்பதை அவரால் மட்டும்தான் சரியாகத் தீர்மானிக்க முடியும். நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் எது சரி, எது தவறு என்று நம்மால் முடிவு செய்ய முடியாது. ஆனால், யெகோவா பரிபூரணராக இருப்பதால் அவருக்கு அது நன்றாகத் தெரியும். (நீதி. 14:12; ஏசாயா 55:8, 9-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி நம்மால் வாழ முடிகிறது. (ஆதி. 1:27) அப்படி வாழ வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். யெகோவா அப்பாவை நாம் ரொம்ப நேசிப்பதால் நம்மால் முடிந்தவரை அவரைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.—எபே. 5:1.
7. நமக்கு ஏன் நம்பகமான நெறிமுறைகள் தேவை? உதாரணத்தோடு விளக்குங்கள்.
7 எது சரி, எது தவறு என்ற விஷயத்தில் யெகோவா கொடுக்கிற நெறிமுறைகளின்படி நடப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம். பணத்தின் மதிப்பை ஒவ்வொரு வங்கியும் அவர்களாகவே நிர்ணயித்துக்கொண்டால் என்ன ஆகும்? ஒரு மீட்டர், ஒரு அடி போன்ற அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்டுமான கம்பெனியும் அவர்களாகவே நிர்ணயித்துக்கொண்டால் என்ன ஆகும்? குழப்பம்தான் மிஞ்சும். அதேபோல் நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கிற விஷயத்தில் ஒவ்வொரு மருத்துவரும் தனக்குப் பிடித்த அளவுக்கு மருந்து-மாத்திரை கொடுத்தால் என்ன ஆகும்? நோயாளிகள் சிலர் இறந்துபோகக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற விஷயத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான நெறிமுறைகள் இருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு தரும். அதேபோல் சரி எது, தவறு எது என்ற விஷயத்தில் கடவுள் கொடுக்கிற நெறிமுறைகள்தான் நமக்குப் பாதுகாப்பு தரும்.
8. நீதியை நேசிக்கிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன?
8 தன்னுடைய நெறிமுறைகளின்படி வாழ முயற்சி செய்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 37:29) மனிதர்கள் எல்லாருமே யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழும்போது எவ்வளவு ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நாம் அப்படி வாழவேண்டும் என்பதுதான் யெகோவாவின் ஆசை. நீதியை நேசிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதை இவ்வளவு நேரம் பார்த்தோம். இந்தக் குணத்தை இன்னும் அதிகமாக நேசிக்க நாம் என்ன செய்யலாம்? அதற்கு உதவுகிற மூன்று வழிகளை இப்போது பார்க்கலாம்.
யெகோவாவின் நெறிமுறைகளை இன்னும் அதிகமாக நேசியுங்கள்
9. நீதியை நேசிக்க எது நமக்கு உதவும்?
9 முதல் வழி: எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க உரிமையுள்ளவரை நேசியுங்கள். நாம் நீதியை நேசிக்க வேண்டும் என்றால் எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க உரிமையுள்ள யெகோவாவை நேசிக்க வேண்டும். அவரைப் பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ ஆசைப்படுவோம். இப்படி யோசித்துப்பாருங்கள்: ஆதாமும் ஏவாளும் யெகோவாவை நேசித்திருந்தால், கண்டிப்பாக அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள், இல்லையா?—ஆதி. 3:1-6, 16-19.
10. யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள ஆபிரகாம் என்ன செய்தார்?
10 ஆதாம்-ஏவாள் செய்த தவறை நிச்சயம் நாம் செய்ய விரும்ப மாட்டோம். அவர்களைப் போல நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு நாம் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவருடைய குணங்களை உயர்வாக மதிக்க வேண்டும்; அவர் எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் நாம் தொடர்ந்து செய்தோம் என்றால் யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பு நிச்சயம் அதிகமாகும். ஆபிரகாமைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் யெகோவாவை ரொம்ப நேசித்தார். ஒருசமயம், யெகோவா எடுத்த முடிவை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவர் யெகோவாவுக்கு எதிராக நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவர் யெகோவாவை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். சோதோமையும் கொமோராவையும் அழிக்கப்போவதாக ஆபிரகாமிடம் யெகோவா சொன்னபோது அவருக்கு எப்படியிருந்தது என்று கவனியுங்கள். “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” கெட்டவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் அழித்துவிடுவாரோ என்று நினைத்து ஆரம்பத்தில் ஆபிரகாம் பயந்தார். அதனால், மனத்தாழ்மையாகத் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். யெகோவாவும் அவருக்குப் பொறுமையாகப் பதில் சொன்னார். கடைசியில், ஆபிரகாம் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டார். யெகோவா எல்லா மனிதர்களுடைய இதயத்தையும் ஆராய்கிறார் என்பதையும் கெட்டவர்களோடு சேர்த்து நல்லவர்களையும் ஒருபோதும் அழிக்க மாட்டார் என்பதையும் புரிந்துகொண்டார்.—ஆதி. 18:20-32.
11. யெகோவாமேல் அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்ததை ஆபிரகாம் எப்படிக் காட்டினார்?
11 சோதோம் கொமோரா நகரங்களின் அழிவைப் பற்றி யெகோவாவோடு பேசிய விஷயங்கள் ஆபிரகாமின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதனால், யெகோவா அப்பாமேல் அவருக்கு இருந்த அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆபிரகாமுக்கு யெகோவாமேல் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதைக் காட்டுகிற விதமாக பல வருஷம் கழித்து அவருக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அவருடைய செல்ல மகனையே பலிகொடுக்கும்படி யெகோவா கேட்டார். ஆனால், இந்தத் தடவை கடவுளைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால், அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. யெகோவா சொன்னதை அப்படியே செய்தார். இருந்தாலும், அதற்காகத் தயாரானபோது அவருடைய மனசு எவ்வளவு வலித்திருக்கும்! ஆனால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்ட விஷயங்களை ஆபிரகாம் நிச்சயம் ஆழமாக யோசித்துப்பார்த்திருப்பார். அநியாயமாக, அன்பே இல்லாமல் யெகோவா ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, தன்னுடைய செல்ல மகனை யெகோவாவினால் திரும்பவும் உயிரோடு கொண்டுவர முடியும் என்றும்கூட ஆபிரகாம் நம்பினார். (எபி. 11:17-19) சொல்லப்போனால், ஈசாக்கின் மூலமாக ஒரு தேசமே உருவாகும் என்று யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் ஈசாக்குக்குப் பிள்ளைகளே இல்லை. ஆபிரகாம் யெகோவாமேல் உயிரையே வைத்திருந்ததால் யெகோவா நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வார் என்று உறுதியாக நம்பினார். அதனால்தான், அவருக்குக் கஷ்டமாக இருந்தாலும் விசுவாசத்தோடு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்.—ஆதி. 22:1-12.
12. ஆபிரகாமைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? (சங்கீதம் 73:28)
12 ஆபிரகாமைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? அவரைப் போலவே நாமும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது நம்மால் யெகோவாவிடம் நெருங்கிப்போக முடியும். அவரை இன்னும் அதிகமாக நேசிக்க முடியும். (சங்கீதம் 73:28-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்க நம்முடைய மனசாட்சிக்குப் பயிற்சி கொடுக்கவும் முடியும். (எபி. 5:14) இப்படியெல்லாம் செய்தால், தவறு செய்வதற்கு யாராவது நம்மைத் தூண்டினாலும் அதைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம். யெகோவா அப்பாவின் மனதைக் கஷ்டப்படுத்தும் விதமாக எதையாவது செய்வதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதோடு, அவரோடு இருக்கிற பந்தத்தைக் கெடுக்க நாம் எதையுமே அனுமதிக்க மாட்டோம். வேறு எந்த விதங்களில் நாம் நீதியை நேசிக்கிறோம் என்பதைக் காட்டலாம்?
13. நாம் நீதியைத் தேடுகிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (நீதிமொழிகள் 15:9)
13 இரண்டாவது வழி: நீதியை நேசிக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்யுங்கள். நம் உடலைப் பலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை நாம் நேசிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இது கஷ்டமான விஷயம் கிடையாது. ஏனென்றால், யெகோவா நியாயமான கடவுள். நம்மால் முடியாததை நம்மிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார். (சங். 103:14) அதுமட்டுமல்ல, ‘நீதியை நாடுகிறவர்களை [அதாவது, தேடுகிறவர்களை] அவர் நேசிப்பதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 15:9-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சேவையில் ஒரு குறிக்கோளை அடைய நாம் முயற்சி செய்தால், அதற்காகக் கடினமாக உழைப்போம். நீதியைத் தேடுவதற்கும் அதைத்தான் நாம் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் படிப்படியாக முன்னேறுவதற்கு யெகோவா நமக்குத் தொடர்ந்து உதவி செய்வார்.—சங். 84:5, 7.
14. “நீதி” என்ற ‘மார்புக் கவசம்’ எதைக் குறிக்கிறது, அது நமக்கு ஏன் தேவை?
14 நீதியாக நடப்பது ஒரு பாரமான விஷயம் இல்லை என்பதை யெகோவா அன்பாக ஞாபகப்படுத்துகிறார். (1 யோ. 5:3) உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது நமக்கு ஒரு பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பு நமக்குத் தினமும் தேவை. நாம் போட்டுக்கொள்ள வேண்டிய முழு கவசத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னது நமக்கு ஞாபகம் இருக்கும். (எபே. 6:14-18) அதில் எது நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கிறது? “நீதி” என்ற ‘மார்புக் கவசம்.’ அது யெகோவாவின் நீதியான நெறிமுறைகளைக் குறிக்கிறது. மார்புக் கவசம் ஒரு போர் வீரனுடைய இதயத்தைப் பாதுகாப்பதுபோல் யெகோவாவின் நீதியான நெறிமுறைகள் நம் இதயத்தில் இருக்கிற ஆசைகளையும் எண்ணங்களையும் யோசனைகளையும் பாதுகாக்கிறது. அதனால், நீதி என்ற மார்புக் கவசத்தை எப்போதுமே போட்டுக்கொண்டிருப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்!—நீதி. 4:23.
15. நீதி என்ற மார்புக் கவசத்தை நீங்கள் எப்படிப் போட்டுக்கொள்ளலாம்?
15 நீதி என்ற மார்புக் கவசத்தை நீங்கள் எப்படிப் போட்டுக்கொள்ளலாம்? ஒவ்வொரு நாளும் நீங்கள் தீர்மானம் எடுக்கும்போது யெகோவாவின் நீதியான நெறிமுறைகளைப் பற்றி யோசித்துப்பார்ப்பதன் மூலமாக நீங்கள் அதைப் போட்டுக்கொள்ளலாம். எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுவது, என்ன பாடல்களைக் கேட்பது, என்ன பொழுதுபோக்கில் ஈடுபடுவது, எந்த மாதிரியான புத்தகங்களை வாசிப்பது போன்ற விஷயங்களை எல்லாம் முடிவு செய்வதற்கு முன்பு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எப்படிப்பட்ட விஷயங்களால என் மனசை நிரப்புறேன்? இந்த மாதிரி விஷயங்கள் யெகோவாவுக்கு பிடிக்குமா? இல்லன்னா ஒழுக்கக்கேடு, வன்முறை, பெருமை, சுயநலம், இந்த மாதிரி யெகோவா வெறுக்கிற குணங்கள அது எனக்குள்ள வளர்க்குமா?’ (பிலி. 4:8) நீங்கள் எடுக்கிற தீர்மானம் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருந்தால் யெகோவாவின் நீதியான நெறிமுறைகள் உங்களுடைய இதயத்தைப் பாதுகாக்கும்.
16-17. யெகோவாவின் நீதியான நெறிமுறைகளின்படி நம்மால் எப்போதும் வாழ முடியும் என்பதை ஏசாயா 48:18-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
16 யெகோவாவின் நீதியான நெறிமுறைகளின்படி எப்போதும் வாழ முடியுமா என்று நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், ஏசாயா 48:18-ல் யெகோவா சொல்லியிருக்கிற உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். (வாசியுங்கள்.) நம்முடைய ‘நீதி கடல் அலைகளைப் போல இருக்கும்’ என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். கடற்கரையில் நின்று அதன் அலைகளைப் பார்க்கும்போது என்றைக்காவது ஒருநாள் இந்த அலைகள் இல்லாமல் போய்விடுமோ என்று நீங்கள் கவலைப்படுவீர்களா? கண்டிப்பாகக் கவலைப்பட மாட்டீர்கள்! ஏனென்றால், ஆயிரக்கணக்கான வருஷங்களாக அந்த அலைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இனியும் அது வரும் என்று உங்களுக்குத் தெரியும்.
17 உங்களுடைய நீதி கண்டிப்பாக அந்தக் கடல் அலைகளைப் போல இருக்க முடியும்! எப்படி? ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புவார் என்று யோசித்துப்பாருங்கள். பிறகு அவருக்குப் பிடித்ததையே செய்யுங்கள். ஒரு தீர்மானத்தை எடுப்பதோ அல்லது அதன்படி நடப்பதோ எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும்சரி நம்முடைய அன்பான அப்பா யெகோவா எப்போதும் உங்கள் கூடவே இருந்து உங்களைப் பலப்படுத்துவார். ஒவ்வொரு நாளும் அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி நடக்க உங்களுக்கு உதவி செய்வார்.—ஏசா. 40:29-31.
18. நாம் செய்வதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு நாம் ஏன் மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது?
18 மூன்றாவது வழி: மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை யெகோவாவிடம் விட்டுவிடுங்கள். யெகோவாவின் நீதியான நெறிமுறைகளின்படி வாழ நாம் கடினமாக முயற்சி செய்கிறோம். அதேசமயத்தில், நாம்தான் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது. யெகோவாவுக்குப் பிடித்தபடி மற்றவர்கள் நடக்கிறார்களா இல்லையா என்று முடிவு செய்யும் உரிமை நமக்கு இல்லை. யெகோவாதான் ‘இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருக்கிறார்’ என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஆதி. 18:25) மற்றவர்களை நியாயந்தீர்க்கிற அதிகாரத்தை யெகோவா நமக்குக் கொடுக்கவில்லை. சொல்லப்போனால், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.—மத். 7:1. b
19. நியாயந்தீர்க்கிற உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நம்பியதை யோசேப்பு எப்படிக் காட்டினார்?
19 நீதியாக நடந்துகொண்ட யோசேப்பைப் பற்றி மறுபடியும் பார்க்கலாம். அவரை மோசமாக நடத்திய அவருடைய அண்ணன்களைக்கூட அவர் நியாயந்தீர்க்கவில்லை. அவர்கள் அவரைக் கொடுமைப்படுத்தினார்கள், அடிமையாக விற்றார்கள். அவர் செத்துப்போய்விட்டதாக தங்கள் அப்பாவையும் நம்ப வைத்தார்கள். பல வருஷங்கள் கழித்து யோசேப்பு மறுபடியும் அவர்களைப் பார்த்தார். அப்போது, அவர் ரொம்பப் பெரிய ஒரு அதிகாரியாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் அவர்களைக் கடுமையாக நியாயந்தீர்த்து பழிவாங்கியிருக்கலாம். உண்மையில் அவர்கள் மனம் திருந்தியிருந்தாலும் யோசேப்பு அப்படி ஏதாவது செய்து விடுவாரோ என்று நினைத்துப் பயந்தார்கள். ஆனால், “பயப்படாதீர்கள். உங்களைத் தண்டிக்க நான் என்ன கடவுளா?” என்று யோசேப்பு அவர்களிடம் சொன்னார். (ஆதி. 37:18-20, 27, 28, 31-35; 50:15-21) இப்படிச் சொல்வதன் மூலமாக நியாயந்தீர்க்கிற உரிமை யெகோவாவுக்குத்தான் இருக்கிறது என்பதை அவர் மனத்தாழ்மையாக ஒத்துக்கொண்டார்.
20-21. நம்மையே பெரிய நீதிமானாக நினைத்துக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
20 யோசேப்பைப் போலவே நாமும் நியாயந்தீர்க்கிற விஷயத்தை யெகோவாவிடமே விட்டுவிடுகிறோம். உதாரணத்துக்கு, நம்முடைய சகோதர சகோதரிகள் என்ன உள்நோக்கத்தோடு ஒரு விஷயத்தைச் செய்கிறார்கள் என்று நாம் ஊகிப்பதில்லை. ஏனென்றால், மற்றவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. யெகோவாவால் மட்டும்தான் மற்றவர்களுடைய ‘உள்நோக்கத்தை ஆராய’ முடியும். (நீதி. 16:2) எல்லா பின்னணியையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த மக்கள்மேலும் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால் “உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்” என்று அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். (2 கொ. 6:13) நம்முடைய சகோதர சகோதரிகளை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக அவர்கள்மேல் நாம் அன்புகாட்ட வேண்டும்.
21 சகோதர சகோதரிகளை மட்டுமல்ல, மற்றவர்களையும் நாம் நியாயந்தீர்க்கக் கூடாது. (1 தீ. 2:3, 4) ஒருவேளை யெகோவாவை வணங்காத உங்களுடைய குடும்பத்தாரைப் பார்த்து ‘இவங்கெல்லாம் எங்க சத்தியத்துக்கு வரப் போறாங்க’ என்று யோசிப்பீர்களா? நிச்சயம் யோசிக்க மாட்டீர்கள். ஏனென்றால், அப்படிச் செய்வது அகங்காரமாக நடப்பதுபோல் இருக்கும். நம்மையே பெரிய நீதிமானாக நினைத்துக்கொள்வது போல் இருக்கும். மனம் திருந்துவதற்கான வாய்ப்பை “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு” யெகோவா இப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். (அப். 17:30) நம்மையே பெரிய நீதிமானாக நினைத்துக்கொண்டோம் என்றால் நாம் உண்மையில் நீதிமான் கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
22. நீதியை நேசிக்க வேண்டும் என்பதில் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள்?
22 யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை நேசிக்கும்போது நாம் ரொம்ப சந்தோஷமாக இருப்போம். நம்முடைய சந்தோஷம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். அதனால், நம்மிடமும் யெகோவாவிடமும் அவர்கள் இன்னும் நெருக்கமாக ஆவார்கள். ‘நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களாக’ இருப்பதற்கு நாம் எப்போதுமே தீர்மானமாக இருக்க வேண்டும். (மத். 5:6) நீதியாக நடக்க நீங்கள் கடினமாக உழைப்பதை யெகோவா பார்க்கிறார். அதைப் பார்த்து அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இந்த உலகம் அநீதி என்ற சாக்கடையில் நாளுக்கு நாள் மூழ்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதை நினைத்து கவலைப்படாதீர்கள். “நீதிமான்களை யெகோவா நேசிக்கிறார்” என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!—சங். 146:8.
பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை
a இந்த மோசமான உலகத்தில், நீதிநேர்மையோடு நடக்கிற மக்களைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம். இருந்தாலும், இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் நீதியான வழியில் நடக்கிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை. நீங்கள் நீதியான வழியில் நடப்பதற்குக் காரணம், நீங்கள் யெகோவாவை நேசிக்கிறீர்கள். யெகோவா, நீதியை நேசிக்கிற கடவுள். இந்த அருமையான குணத்தை நாம் இன்னும் அதிகமாக நேசிக்க என்ன செய்யலாம்? அதைத் தெரிந்துகொள்வதற்கு, நீதி என்றால் என்ன... நீதியை நேசிப்பதால் நமக்கு என்ன நன்மை... என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்தக் குணத்தை இன்னும் அதிகமாக நேசிக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.
b சில சமயங்களில், மோசமான பாவத்தை செய்தவர்களை மூப்பர்கள் நியாயந்தீர்க்க வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் உண்மையிலேயே மனம் திருந்திவிட்டார்களா என்பதை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம். (1 கொ. 5:11; 6:5; யாக். 5:14, 15) ஆனாலும், மற்றவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதையும் யெகோவாவின் சார்பாக தீர்ப்பு சொல்கிறார்கள் என்பதையும் அவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்கள். (2 நாளாகமம் 19:6-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவாவைப் போலவே அவர்களும் நியாயமாகவும் இரக்கத்தோடும் பாரபட்சம் இல்லாமலும் தீர்ப்பு சொல்கிறார்கள்.