Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையைப் பேசுங்கள்

உண்மையைப் பேசுங்கள்

“ஒருவரோடு ஒருவர் உண்மை பேச வேண்டும்.”—சக. 8:16.

பாடல்கள்: 64, 63

1, 2. மனிதர்களுடைய வாழ்க்கைக்கு உலைவைக்க சாத்தான் எதைப் பயன்படுத்தினான்?

சில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, தொலைப்பேசி, மின் விளக்கு, கார், ஃப்ரிட்ஜ் போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், வேறுசில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிகரெட், துப்பாக்கி, கண்ணிவெடி, அணுகுண்டு போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், இவை எல்லாவற்றையும்விட மனிதர்களுடைய வாழ்க்கைக்கு உலைவைக்கிற இன்னொன்று இருக்கிறது. அது ரொம்ப காலமாகவே இருந்துவருகிறது! அதுதான், பொய்! உண்மை அல்ல என்று தெரிந்திருந்தும் ஒருவரை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுகிற தகவல்தான் பொய்! முதன்முதலில் பொய் சொன்னது யார்? பிசாசுதான்! அவன் ‘பொய்க்குத் தகப்பனாக இருக்கிறான்’ என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44-ஐ வாசியுங்கள்.) முதன்முதலில் அவன் எப்போது பொய் சொன்னான்?

2 ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு, ஏதேன் தோட்டத்தில் அவன் முதன்முதலில் பொய் சொன்னான். யெகோவா தங்களுக்காகப் படைத்திருந்த அழகான பூஞ்சோலையில் ஆதாமும் ஏவாளும் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டிருந்த சமயம் அது! “நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை” சாப்பிடக் கூடாது என்றும், அதைச் சாப்பிட்டால் அவர்கள் செத்துப்போவார்கள் என்றும் ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொல்லியிருந்தார். இந்த விஷயம் சாத்தானுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், அவன் ஒரு பாம்பைப் பயன்படுத்தி, “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்” என்று ஏவாளிடம் சொன்னான். இதுதான் முதன்முதலில் சொல்லப்பட்ட பொய்! அதோடு, “நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என்றும் சொன்னான்.—ஆதி. 2:15-17; 3:1-5.

3. கெட்ட எண்ணத்தோடுதான் சாத்தான் பொய் சொன்னான் என்று ஏன் சொல்லலாம், அந்தப் பொய்யால் ஏற்பட்ட விளைவு என்ன?

3 அவன் சொன்ன பொய்யை நம்பி ஏவாள் பழத்தைச் சாப்பிட்டால் அவள் நிச்சயம் செத்துப்போவாள் என்று சாத்தானுக்குத் தெரியும். இதிலிருந்து, கெட்ட எண்ணத்தோடுதான் அவன் பொய் சொன்னான் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடைசியில், அவன் நினைத்த மாதிரியே நடந்தது. ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால் செத்துப்போனார்கள். (ஆதி. 3:6; 5:5) ஆதாம் செய்த பாவத்தால், “மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” சொல்லப்போனால், ஆதாமின் சந்ததியில் வந்தவர்கள் “ஆதாம் செய்ததுபோல் . . . பாவம் செய்யாதபோதிலும், மரணம் ஒரு ராஜாவாக அவர்கள்மீது ஆட்சி செய்துவந்தது.” (ரோ. 5:12, 14) அதனால்தான், இன்று நாம் பரிபூரணமானவர்களாகவும் இல்லை; கடவுள் நினைத்ததுபோல் என்றென்றும் உயிர் வாழவும் முடிவதில்லை. மனிதர்களுடைய ஆயுள் வெறும் ‘70 வருஷமாகவும், நிறைய தெம்பு இருந்தால் 80 வருஷமாகவும்’ இருக்கிறது; அதுவும் “துன்ப துயரங்களால்தான்” நிறைந்திருக்கிறது. (சங். 90:10) இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் சாத்தான் சொன்ன பொய்தான் காரணம்!

4. (அ) எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) சங்கீதம் 15:1, 2-ல் சொல்லியிருப்பதுபோல் யார் யெகோவாவின் நண்பராக இருக்க முடியும்?

4 “சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று சாத்தானைப் பற்றி இயேசு சொன்னார். இன்றும் அவன் மாறவில்லை; பொய்களைப் பரப்புவதன் மூலம் அவன் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றிவருகிறான்.’ (வெளி. 12:9) ஆனால், சாத்தானிடம் ஏமாற நாம் விரும்புவோமா? இல்லை! அப்படியென்றால், மூன்று கேள்விகளுக்கு நாம் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (1) சாத்தான் இன்று எப்படி மக்களை ஏமாற்றிவருகிறான்? (2) மக்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்? (3) யெகோவாவோடு இருந்த நட்பை ஆதாம் ஏவாள் இழந்ததுபோல நாமும் இழந்துவிடாமல் இருக்க, எல்லா சமயங்களிலும் எப்படி உண்மையைப் பேசலாம்?சங்கீதம் 15:1, 2-ஐ வாசியுங்கள்.

சாத்தான் எப்படி மக்களை ஏமாற்றிவருகிறான்?

5. மக்களை சாத்தான் இன்று எப்படி ஏமாற்றுகிறான்?

5 சாத்தான் நம்மை ஏமாற்றாதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும். “அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதானே” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (2 கொ. 2:11) இன்றிருக்கும் பொய் மதம், ஊழல் நிறைந்த அரசியல், பேராசை பிடித்த வர்த்தகம் உட்பட இந்த உலகம் முழுவதையும் சாத்தான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். (1 யோ. 5:19) அதனால், சாத்தானும் அவனுடைய பேய்களும் அதிகாரம் படைத்த மனிதர்களை, ‘பொய்யர்களாக’ ஆக்கியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. (1 தீ. 4:1, 2) உதாரணத்துக்கு, கெடுதல் உண்டாக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்காக அல்லது மக்களின் பணத்தைச் சுருட்டுவதற்காகச் சில வியாபாரிகள் தங்கள் விளம்பரங்களில் பொய்களை அள்ளி வீசுகிறார்கள்.

6, 7. (அ) மதத் தலைவர்கள் சொல்லும் பொய்களால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) பொய் மதத் தலைவர்கள் சொல்லும் எந்தப் பொய்யை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?

6 மதத் தலைவர்கள் பொய்களைச் சொல்லும்போது, இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனென்றால், அவர்கள் சொல்லும் பொய்களை நம்பி கடவுள் வெறுக்கும் காரியங்களை ஒருவர் செய்துவிட்டால், என்றென்றும் வாழும் வாய்ப்பை அவர் இழந்துவிடலாம். (ஓசி. 4:9) இயேசுவின் காலத்திலிருந்த மதத் தலைவர்கள் மக்களை ஏமாற்றினார்கள். அதனால், “வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஒரு நபரை உங்கள் மதத்துக்கு மாற்றுவதற்காகக் கடல் வழியாகவும் தரை வழியாகவும் பயணம் செய்கிறீர்கள்; ஆனால், அந்த நபர் உங்களில் ஒருவராகும்போது அவரை உங்களைவிட இரண்டு மடங்கு கெஹென்னாவுக்கு [அதாவது, நிரந்தர அழிவுக்கு] ஆளாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் இயேசு தைரியமாகச் சொன்னார். (மத். 23:15) “கொலைகாரனாக” இருக்கும் தங்கள் தகப்பனான பிசாசைப் போல்தான் அந்த மதத் தலைவர்கள் இருப்பதாக அவர் சொன்னார்.—யோவா. 8:44.

7 இன்றும்கூட மதத் தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பாதிரிமார்கள், குருக்கள், ரபீக்கள், சுவாமிகள், அல்லது வேறு சில பட்டப்பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அன்றிருந்த பரிசேயர்களைப் போல, இவர்களும் கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற “உண்மையை . . . மூடிமறைக்கிறார்கள்,” “கடவுளைப் பற்றிய உண்மையை” கற்றுத்தராமல் பொய்களைக் கற்றுத்தருகிறார்கள். (ரோ. 1:18, 25) அவர்கள் கற்றுத்தரும் பொய்களில், எரிநரகம், அழியாத ஆத்துமா, மறுஜென்மம் போன்றவையும் அடங்கும். அதோடு, ஓரினச்சேர்க்கையையும், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்வதையும் கடவுள் ஏற்றுக்கொள்வதாகப் பொய் சொல்கிறார்கள்.

8. சீக்கிரத்தில் எந்தப் பொய்யை அரசியல்வாதிகள் சொல்வார்கள், அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

8 மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல்வாதிகளும் பொய் சொல்லியிருக்கிறார்கள். சீக்கிரத்தில், அவர்கள் ஒரு பெரிய பொய்யைச் சொல்வார்கள். அதாவது, இந்த உலகத்தில் ‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ கொண்டுவந்துவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால், “எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவர்களுக்கு அழிவு வரும்.” அதனால், நிலைமைகள் முன்னேறி வருவதாகச் சொல்லும் அரசியல்வாதிகளை நம்பக் கூடாது. ‘இரவில் திருடன் வருவதுபோல் யெகோவாவின் நாள் வரும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்.’ அதுதான் உண்மை!—1 தெ. 5:1-4.

மக்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்?

9, 10. (அ) மக்கள் ஏன் பொய் சொல்கிறார்கள், அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? (ஆ) யெகோவாவைப் பற்றிய எந்த விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது?

9 அதிகாரம் படைத்தவர்கள் மட்டும்தான் இன்று பொய் பேசுகிறார்களா? இல்லை! யு. பட்டாசார்ஜி என்ற எழுத்தாளர் எழுதிய, “நாம் ஏன் பொய் சொல்கிறோம்?” என்ற ஆங்கிலக் கட்டுரை இப்படிச் சொல்கிறது: “பொய் என்பது மனிதனுடைய ஆழ்மனதில் பதிந்திருக்கும் ஒரு பண்பாகவே ஆகிவிட்டது.” வேறு வார்த்தைகளில் சொன்னால், பொய் சொல்வதை சகஜமானதாகவும் இயல்பானதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். தங்களைப் பாதுகாப்பதற்காகவும், தவறுகளை அல்லது குற்றங்களை மூடிமறைப்பதற்காகவும் மக்கள் அடிக்கடி பொய் சொல்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காகவும் சுயலாபத்துக்காகவும் மக்கள் பொய் பேசுகிறார்கள். அதோடு, “முன்பின் தெரியாதவர்களிடமும், கூடவேலை செய்பவர்களிடமும், நண்பர்களிடமும், நாம் நேசிப்பவர்களிடமும்” பொய் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று சிலர் உணர்வதாக மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரை சொல்கிறது.

10 இப்படிப் பொய் சொல்வதால் கடைசியில் என்ன ஆகிறது? ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை போய்விடுகிறது. அதோடு, உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு மனைவி தன் கணவருக்கு உண்மையாக இல்லாமல் இன்னொருவருடன் தவறான உறவு வைத்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். தன் தவறை மறைக்க அவள் தன் கணவரிடம் பொய் சொல்கிறாள். இந்த விஷயம் அந்தக் கணவருக்குத் தெரியவந்தால் அவர் அப்படியே இடிந்துபோய்விடுவார், இல்லையா? இன்னொரு சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள். ஒரு கணவர் தன் மனைவியையும் பிள்ளைகளையும் வீட்டில் கொடுமைப்படுத்துகிறார்; ஆனால், வெளியில் பாசமாக இருப்பதுபோல் நடிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களை ஏமாற்றிவிடலாம்; ஆனால், யெகோவாவை ஏமாற்ற முடியாது. ஏனென்றால், “எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது.”—எபி. 4:13.

11. அனனியா மற்றும் சப்பீராளுடைய அனுபவம் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது? (ஆரம்பப் படம்)

11 கடவுளிடம் பொய் சொல்லும்படி, ஒரு கிறிஸ்தவத் தம்பதியை சாத்தான் தூண்டியதைப் பற்றிய பதிவு பைபிளில் இருக்கிறது. அனனியாவும் அவருடைய மனைவி சப்பீராளும்தான் அந்தத் தம்பதி! அப்போஸ்தலர்களை ஏமாற்ற அவர்கள் முயற்சி செய்தார்கள். ஒரு நிலத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தில் கொஞ்சத்தை மட்டுமே அப்போஸ்தலர்களிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். ஆனால், சபையிலிருந்த மற்றவர்கள் தங்களைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக, விற்ற பணம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டதாக அப்போஸ்தலர்களிடம் சொன்னார்கள். ஆனால், அவர்கள் பொய் சொன்னது யெகோவாவுக்குத் தெரிந்திருந்ததால், அவர்களைத் தண்டித்தார்.—அப். 5:1-10.

12. கெட்ட எண்ணத்தோடு பொய்களைச் சொல்லி, மனம் திருந்தாமல் இருப்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும், ஏன்?

12 பொய் பேசுபவர்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்? கெட்ட எண்ணத்தோடு பொய்களைச் சொல்லி, மனம் திருந்தாமல் இருப்பவர்களுக்கு, சாத்தானுக்குக் கிடைக்கப்போகிற அதே தண்டனைதான் கிடைக்கும். ‘நெருப்பு எரிகிற ஏரியில்’ அவர்கள் தள்ளப்படுவார்கள்! அதாவது, நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்! (வெளி. 20:10; 21:8; சங். 5:6) ஏன்? ஏனென்றால், ‘அருவருப்பான காரியங்களைச் செய்கிறவர்களை’ பார்ப்பது போல்தான், இப்படிப்பட்ட பொய்யர்களையும் யெகோவா பார்க்கிறார்.—வெளி. 22:15, அடிக்குறிப்பு.

13. யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும், அதைத் தெரிந்துவைத்திருப்பது எதைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது?

13 ‘பொய் சொல்ல கடவுள் ஒரு சாதாரண மனுஷன்’ கிடையாது என்றும், அவரால் ‘பொய் சொல்லவே முடியாது’ என்றும் நமக்குத் தெரியும். (எண். 23:19; எபி. 6:18) ‘பொய் பேசும் நாவை’ ‘யெகோவா வெறுக்கிறார்.’ (நீதி. 6:16, 17) அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்றால், நாம் உண்மை பேச வேண்டும். அதனால், நாம் ‘ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்வதில்லை.’—கொலோ. 3:9.

நாம் ‘உண்மை பேசுகிறோம்’

14. (அ) உண்மைக் கிறிஸ்தவர்கள் எந்த விதத்தில் பொய் மதங்களைச் சேர்ந்தவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள்? (ஆ) லூக்கா 6:45-ல் சொல்லப்பட்டிருக்கும் நியமத்தை விளக்குங்கள்.

14 பொய் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் என்ன வித்தியாசம்? நாம் ‘உண்மை பேசுகிறோம்.’ (சகரியா 8:16, 17-ஐ வாசியுங்கள்.) ‘உண்மையான பேச்சின் . . . மூலம் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம்’ என்று பவுல் சொன்னார். (2 கொ. 6:7) “இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்” என்று இயேசுவும் சொன்னார். (லூக். 6:45) அப்படியென்றால், நேர்மையான ஒரு நபர் உண்மையைப் பேசுவார். முன்பின் தெரியாதவர்களிடமும், கூடவேலை செய்பவர்களிடமும், நண்பர்களிடமும், அவருடைய அன்பானவர்களிடமும் பொய் சொல்ல மாட்டார். இப்போது, எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க நாம் முயற்சி செய்கிறோம் என்பதை எந்தெந்த வழிகளில் காட்டலாம் என்று பார்க்கலாம்.

இந்தச் சகோதரி செய்யும் தவறு என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா? (பாராக்கள் 15, 16)

15. (அ) இரட்டை வாழ்க்கை வாழ்வது ஏன் தவறு? (ஆ) நண்பர்களின் தொல்லையைச் சமாளிக்க இளம் கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

15 நீங்கள் ஓர் இளைஞரா? அப்படியென்றால், உங்கள் நண்பர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட ஆசையால் சில இளைஞர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். குடும்பத்தோடும் சபையோடும் இருக்கும்போது ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பதுபோல் நடிக்கிறார்கள். ஆனால், சோஷியல் மீடியாவிலும் யெகோவாவை வணங்காத நண்பர்களோடு இருக்கும் சமயங்களிலும் ரொம்பவே வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் மோசமாகப் பேசலாம், அடக்கமில்லாத உடைகளை உடுத்தலாம், அசிங்கமான வார்த்தைகள் இருக்கும் பாடல்களை ரசிக்கலாம், போதை தலைக்கேற குடிக்கலாம், போதை மருந்துகளைப் பயன்படுத்தலாம், ரகசியமாகக் காதலிக்கலாம் அல்லது வேறு ஏதாவது மோசமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடமும், சகோதர சகோதரிகளிடமும், யெகோவாவிடமும் பொய் சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம்! (சங். 26:4, 5) யெகோவாவைப் புகழ்வதாகச் சொல்லிவிட்டு, அவர் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டிருந்தால், அவர் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார். (மாற். 7:6) அதனால், “உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும். நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட” என்ற நீதிமொழியை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது.—நீதி. 23:17. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

16. முழுநேர சேவைக்கான விண்ணப்பத்தில் இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் எழுத வேண்டும்?

16 ஒருவேளை நீங்கள் ஒழுங்கான பயனியர் சேவையைச் செய்ய அல்லது பெத்தேல் சேவை போன்ற விசேஷ முழுநேர சேவையைச் செய்ய ஆசைப்படலாம். அதற்கு, ஒரு விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றியும், உங்களுடைய பொழுதுபோக்கைப் பற்றியும், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அந்த விண்ணப்பத்தில் கேட்டிருப்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் எழுதுவது ரொம்ப முக்கியம். (எபி. 13:18) ஒருவேளை, யெகோவா வெறுக்கிற ஒரு காரியத்தை நீங்கள் செய்திருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்; அல்லது, ஏதோ ஒரு விஷயம் உங்கள் மனசாட்சியை உறுத்திக்கொண்டே இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதைப் பற்றி நீங்கள் மூப்பர்களிடமும் சொல்லவில்லை! இப்போது என்ன செய்வது? அவர்களிடம் உதவி கேளுங்கள். சுத்தமான மனசாட்சியோடு யெகோவாவை வணங்குவதற்கு அவர்கள் உதவுவார்கள்.—ரோ. 9:1; கலா. 6:1.

17. நம்மைத் துன்புறுத்துகிறவர்கள் நம் சகோதரர்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

17 நம்முடைய வேலை தடை செய்யப்பட்ட ஒரு நாட்டில் நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதிகாரிகள் உங்களைக் கைது செய்கிறார்கள்; உங்கள் சகோதரர்களைப் பற்றிக் கேட்கிறார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எல்லா விவரங்களையும் அவர்களிடம் சொல்ல வேண்டுமா? ரோம ஆளுநர் இயேசுவிடம் கேள்வி கேட்டபோது அவர் என்ன செய்தார்? “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது” என்ற பைபிள் நியமத்தைப் பின்பற்றி, சிலசமயங்களில் அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. (பிர. 3:1, 7; மத். 27:11-14) இதுபோன்ற சூழ்நிலையில் நாம் விவேகமாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்துகொள்ள வேண்டும். நம் சகோதரர்களை ஆபத்தில் சிக்கவைத்துவிடக் கூடாது.—நீதி. 10:19; 11:12.

எப்போது பேசாமல் இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும் என்பதை நீங்கள் எப்படித் தீர்மானிப்பீர்கள்? (பாராக்கள் 17, 18)

18. நம் சகோதரர்களைப் பற்றி மூப்பர்கள் கேள்விகள் கேட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

18 சபையிலிருக்கும் ஒருவர் ஏதோ ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதைப் பற்றி உங்களுக்குத் தெரியவருகிறது. சபையை ஒழுக்க ரீதியில் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பு மூப்பர்களுக்கு இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லும்படி அவர்கள் கேட்கலாம். இப்போது என்ன செய்வீர்கள்? அதுவும், பாவம் செய்தவர் உங்கள் நெருங்கிய நண்பராகவோ உங்கள் சொந்தக்காரராகவோ இருந்தால் என்ன செய்வீர்கள்? “உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உள்ளதை உள்ளபடியே சொல்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:17; 21:28) அதனால், உங்களுக்குத் தெரிந்திருக்கும் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் மூப்பர்களிடம் சொல்லும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. எல்லா உண்மைகளும் தெரிந்தால்தான், தவறு செய்தவர் மறுபடியும் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவர்களால் உதவ முடியும்.—யாக். 5:14, 15.

19. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

19 “உள்ளத்தில் உண்மையாக இருப்பவர்கள்மேல் நீங்கள் பிரியமாக இருக்கிறீர்கள்” என்று தாவீது தன்னுடைய ஜெபத்தில் சொன்னார். (சங். 51:6) உள்ளத்தில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம் என்று தாவீதுக்குத் தெரிந்திருந்தது. உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லா சமயங்களிலும் ‘ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுகிறார்கள்.’ பொய் மதத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து நாம் வித்தியாசமாக இருக்கிறோம் என்பதைக் காட்ட இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் பைபிளிலிருக்கும் உண்மைகளை மக்களுக்குச் சொல்வது! நம்முடைய ஊழியத்தில் அதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 15 இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிற்றேட்டில் இருக்கிற, “கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்?” என்ற கேள்வி 6-ஐப் பாருங்கள். அதோடு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் தொகுதி 2 (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், “இரட்டை வாழ்க்கை—இதைப் பற்றி யாருக்குத் தெரிந்திருக்க வேண்டும்?” என்ற அதிகாரம் 16-ஐப் பாருங்கள்.