Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

என் தீர்மானத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார்

என் தீர்மானத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார்

அது 1939! நாங்கள் நடுராத்திரியில் எழுந்து வண்டியைக் கிளப்பினோம். ஒரு மணி நேரத்துக்கும்மேல் வண்டியை ஓட்டிக்கொண்டு, அமெரிக்காவின் மிஸ்சௌரி மாகாணத்தின் தென்மேற்கில் இருக்கும் ஜோப்லின் என்ற சின்ன ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த ஊரில் இருந்த ஒவ்வொரு வீட்டின் கதவுக்கு அடியில் மடமடவென துண்டுப்பிரதிகளை வைத்தோம். பிறகு, அவசர அவசரமாக எங்கள் காரில் ஏறி, மற்ற சகோதரர்களைப் பார்ப்பதற்காகப் போனோம். அதற்குள் விடிய ஆரம்பித்துவிட்டது! சூரியன் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே நாங்கள் ஏன் ஊழியத்துக்குப் போனோம்? அவசர அவசரமாக ஏன் அந்த இடத்தைக் காலி செய்தோம்? இதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

நான் 1934-ல் பிறந்தேன். நான் பிறப்பதற்கு 20 வருஷங்களுக்கு முன்பிருந்தே என் அப்பா ஃப்ரெட் மாலஹனும் என் அம்மா எட்னாவும் பைபிள் மாணாக்கர்களாக இருந்தார்கள். யெகோவாவை நேசிக்க எனக்குக் கற்றுக்கொடுத்ததற்காக நான் அவர்களுக்கு மிகவும் நன்றியோடு இருக்கிறேன். தென்கிழக்கு கேன்சஸ்ஸில் இருக்கிற பார்சன்ஸ் என்ற சின்ன ஊரில்தான் நாங்கள் வாழ்ந்தோம். எங்கள் சபையிலிருந்த பெரும்பாலானவர்கள் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்! எங்கள் குடும்பத்தில், நாங்கள் எல்லாரும் தவறாமல் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போவோம். சனிக்கிழமை மத்தியானம் பொதுவாக தெரு ஊழியம் செய்வோம். (இன்று பொது ஊழியம் என்று சொல்கிறோம்.) சிலசமயங்களில், நாங்கள் களைத்துப்போவோம். அப்போது, ஊழியம் முடிந்த உடன் அப்பா எங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுப்பார்.

எங்கள் சபை சிறியது; ஆனால், எங்கள் பிராந்தியமோ ரொம்பப் பெரியது! நிறைய சின்னச் சின்ன ஊர்களும் பண்ணைகளும் எங்கள் பிராந்தியத்தில் இருந்தன. நாங்கள் கொடுக்கும் பிரசுரங்களுக்குப் பணம் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய வீட்டில் விளைந்த காய்கறிகளையும் கோழிகளையும் முட்டைகளையும் (அதுவும், கூட்டிலிருந்து) தருவார்கள். பிரசுரங்களுக்காக அப்பா ஏற்கெனவே நன்கொடைகளைக் கொடுத்துவிடுவார்; அதனால், அவர்கள் கொடுக்கும் பொருள்கள் எங்கள் சாப்பாட்டுக்கு உதவியாக இருந்தன.

ஊழியம்

ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக என் அப்பா அம்மா ஒரு ஃபோனோகிராஃபை வாங்கியிருந்தார்கள். நான் ரொம்பவே சின்னப் பையனாக இருந்ததால் அதை என்னால் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்துவதில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சின்னச் சின்ன உதவிகளைச் செய்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது. தங்களுடைய மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலும் சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சுகளை அவர்கள் போட்டுக்காட்டுவார்கள்.

என் அப்பா அம்மாவோடு, சவுண்டு காருக்கு முன்னால்

1936 மாடல் ஃபோர்ட் கார் எங்களிடம் இருந்தது. அந்த காரின் மேல் அப்பா ஒரு பெரிய ஒலிபெருக்கியை வைத்து, அதை ஒரு சவுண்டு காராக மாற்றினார்! ஊழியத்தில் அது மிகவும் பிரயோஜனமாக இருந்தது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக முதலில் இசையை நாங்கள் போடுவோம். அதன் பிறகு, பைபிள் பேச்சைப் போடுவோம். ஆர்வமுள்ள மக்களுக்கு பிரசுரங்களையும் கொடுப்போம்.

ஒரு தடவை, கேன்சஸ் மாகாணத்தைச் சேர்ந்த செரீவேல் என்ற ஒரு சின்ன ஊரிலிருந்த பூங்காவுக்குள் எங்கள் சவுண்டு காரை அப்பா ஓட்டிக்கொண்டு போனார். அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் மக்கள் அங்கே சாவகாசமாக இருந்தார்கள். போலீஸார் வந்து சவுண்டு காரை பூங்காவுக்கு வெளியே கொண்டுபோகும்படி சொன்னார்கள். அதனால், பூங்காவில் இருந்தவர்களுக்கும் நன்றாகக் கேட்கும் விதத்தில் அடுத்த தெருவில் காரைக் கொண்டுபோய் அப்பா நிறுத்தினார். அப்பாவோடும் அண்ணனோடும் இப்படி ஊழியம் செய்தது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது.

அந்தக் காலத்திலெல்லாம், கடுமையான எதிர்ப்பு இருந்த பகுதிகளில் விசேஷ ஊழியம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போல், நடுராத்திரியில் எழுந்துபோய் ரகசியமாக துண்டுப்பிரதிகளையும் சிறு புத்தகங்களையும் கதவுக்கு அடியில் வைத்துவிடுவோம். பிறகு, எங்களில் யாரையாவது போலீஸார் கைது செய்திருக்கிறார்களா என்று பார்ப்பதற்காக, நாங்கள் எல்லாரும் ஊருக்கு வெளியே சந்தித்துக்கொள்வோம்.

நாங்கள் செய்த ஊழியத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருந்தது. விளம்பர அட்டைகளை அணிந்துகொண்டு நாங்கள் ஊர்வலமாகப் போவோம். ஒரு தடவை சகோதரர்கள் எங்கள் ஊருக்கு வந்து, “மதம் ஒரு கண்ணியும் மோசடியும்” என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்த அட்டைகளை அணிந்துகொண்டு ஊர்வலமாகப் போனார்கள். அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு ஊருக்குள் 11கிலோமீட்டர் தூரம்வரை போனார்கள். பிறகு எங்கள் வீட்டுக்கே திரும்பினார்கள். நல்லவேளை யாரும் அவர்களைத் தடுக்கவில்லை! என்ன நடக்கிறது என்று மக்கள் ஆர்வமாகப் பார்த்தார்கள்.

இளவயதில் இருந்தபோது நடந்த மாநாடுகள்

மாநாடுகளுக்காக நாங்கள் அடிக்கடி டெக்ஸஸுக்குப் போனோம். அப்பா ஒரு ரயில்வே கம்பெனியில் வேலை செய்ததால், இலவசமாகவே ரயிலில் பயணம் செய்ய முடிந்தது. இப்படித்தான் மாநாடுகளுக்கும் சொந்தக்காரர்களைப் பார்ப்பதற்கும் நாங்கள் போவோம். அம்மாவின் அண்ணன் ஃப்ரெட் விஸ்மரும் அவருடைய மனைவி யுலேலியும் டெக்ஸஸிலிருந்த டெம்ப்பில் என்ற இடத்தில் வாழ்ந்தார்கள். 1900-த்துக்கு கொஞ்சம் வருஷங்களுக்குப் பிறகு, தன்னுடைய இள வயதிலேயே, மாமா ஃப்ரெட் விஸ்மர் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுத்திருந்தார். என் அம்மாவுக்கும், கூடப்பிறந்த மற்றவர்களுக்கும் அவர் சத்தியத்தைப் பற்றிச் சொன்னார். மத்திய டெக்ஸஸ் பகுதியிலிருந்த சகோதரர்களுக்கு அவரை நன்றாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால், அவர் மண்டல ஊழியராக சேவை செய்தவர். (இன்று வட்டாரக் கண்காணி என்று சொல்கிறோம்.) அவர் ரொம்ப அன்பானவர்; எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்; அவர் முகத்தில் எப்போதும் சந்தோஷம் தெரியும். எனக்கு அவர் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார்.

1941-ல் மிஸ்சௌரியிலிருந்த செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் நடந்த ஒரு பெரிய மாநாட்டுக்காக நாங்கள் ரயிலில் போனோம். “ராஜாவின் பிள்ளைகள்” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபோர்டு கொடுக்கவிருந்த பேச்சைக் கேட்பதற்காக, இளம் பிள்ளைகள் எல்லாரையும் மேடைக்குப் பக்கத்தில் உட்காரவைத்தார்கள். அந்தப் பேச்சின் முடிவில், அங்கிருந்த 15,000 இளம் பிள்ளைகளுக்கும் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சகோதரர் ரதர்ஃபோர்டும் அவருடைய உதவியாளர்களும் பிள்ளைகள் என்ற ஒரு புதிய புத்தகத்தை எங்கள் எல்லாருக்கும் கொடுத்தார்கள்.

1943 ஏப்ரல் மாதத்தில், “செயல்படுவதற்கான ஓர் அழைப்பு” என்ற மாநாட்டில் கலந்துகொண்டோம். அது கேன்சஸ் மாகாணத்திலிருக்கிற காஃபிவெல் என்ற இடத்தில் நடந்தது. எல்லா சபைகளிலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்ற ஒரு புதிய பள்ளி நடக்கும் என்று அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் பயன்படுத்துவதற்காக, 52 பாடங்கள் அடங்கிய ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. அதே வருஷத்தில் கொஞ்ச நாள் கழித்து என்னுடைய முதல் மாணாக்கர் பேச்சைக் கொடுத்தேன். அந்த மாநாடு எனக்கு இன்னொரு விதத்திலும் விசேஷமானதாக இருந்தது. ஏனென்றால், அந்த மாநாட்டில்தான் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். பக்கத்திலிருந்த ஒரு பண்ணையின் குளத்தில் ஜில்லென்றிருந்த தண்ணீரில் எனக்கும் இன்னும் சிலருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

பெத்தேலில் சேவை செய்ய ஆசைப்பட்டேன்

1951-ல் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அப்போது, என் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. என் அண்ணன் ஜெரி, பெத்தேலில் சேவை செய்திருந்தார். நானும் அங்கே சேவை செய்ய வேண்டுமென்று ரொம்பவே ஆசைப்பட்டதால், அதற்காக விண்ணப்பித்தேன். சீக்கிரத்தில் அழைப்பும் வந்தது. 1952 மார்ச் 10-ல் பெத்தேல் சேவையை ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல தீர்மானமாக இருந்தது! ஏனென்றால், கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்ய அது எனக்கு உதவியது.

பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் தயாரிக்கிற அச்சகத்தில் வேலை செய்வேன் என்று நினைத்தேன். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. உணவு பரிமாறும் வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு, சமையலறையில் நியமிக்கப்பட்டேன். அங்கே வேலை செய்தது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது; நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்! நான் ‘ஷிஃப்ட்’ முறையில் வேலை செய்ததால், மற்ற வேலைகளைச் செய்ய பகலில் கொஞ்ச நேரம் கிடைத்தது. அதனால், அடிக்கடி பெத்தேலிலிருந்த நூலகத்துக்குப் போய், அங்கிருந்த புத்தகங்களைப் படிப்பேன். இப்படி, என்னுடைய தனிப்பட்ட படிப்பைச் செய்வேன். என் விசுவாசத்தையும் யெகோவாவோடு இருந்த நட்பையும் இது பலப்படுத்தியது. காலமெல்லாம் பெத்தேலில் சேவை செய்ய வேண்டுமென்ற என்னுடைய தீர்மானம் இன்னும் பலமானது. 1949-ம் வருஷத்திலேயே என் அண்ணன் பெத்தேலிலிருந்து போய்விட்டார். பெட்ரிஷியா என்ற சகோதரியைக் கல்யாணம் செய்துகொண்டு பெத்தேலுக்குப் பக்கத்திலேயே, அதாவது புருக்லினிலேயே குடியிருந்தார். புதிதாக பெத்தேலுக்கு வந்திருந்த என்னை அவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்கள்; பக்கபலமாக இருந்தார்கள்.

நான் பெத்தேலுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, பெத்தேல் ஊழியர்களாக இருந்த சகோதரர்களில் யாரையெல்லாம் பெத்தேல் பேச்சாளர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் சகோதரர்கள், புருக்லினைச் சுற்றி 320 கி.மீ. தூரம்வரை (200 மைல்) இருந்த சபைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சபைகளில் அவர்கள் பொதுப் பேச்சு கொடுக்க வேண்டியிருந்தது. அதோடு, சபையாரோடு சேர்ந்து ஊழியமும் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பட்டியலில் என் பெயரும் சேர்க்கப்பட்டது. எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும், சபைகளைப் போய்ச் சந்தித்தேன், பேச்சுகளையும் கொடுத்தேன். அப்போதெல்லாம் ஒரு மணிநேரத்துக்கு பொதுப் பேச்சு கொடுக்க வேண்டியிருந்தது! சபைகளைச் சந்திக்க, நான் பொதுவாக ரயிலில்தான் பயணம் செய்வேன். 1954-ல் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அது ஞாயிற்றுக்கிழமை மத்தியானம்! குளிர் காலம்! நியு யார்க்குக்குப் போக வேண்டிய ரயிலில் ஏறினேன்; சாயங்காலத்தில் நான் பெத்தேலுக்குப் போய்ச் சேர வேண்டியிருந்தது. ஆனால், புயல் காற்றும் பயங்கர பனியுமாக இருந்ததால் ரயில் என்ஜின்கள் வேலை செய்யவில்லை. திங்கள்கிழமை காலை ஐந்து மணிக்குதான் நியு யார்க்குக்குப் போய்ச் சேர்ந்தேன். அதனால், உடனடியாக ஒரு சுரங்க ரயிலில் ஏறி புருக்லினுக்குப் போனேன். அப்படியே பெத்தேல் சமையலறையில் வேலை செய்ய போய்விட்டேன். ஆனால், கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ராத்திரி முழுவதும் தூங்காததால் ரொம்ப களைப்பாகவும் இருந்தது. ஆனால், சபைகளில் சேவை செய்ததோடும் புதிய சகோதர சகோதரிகளோடு பழகியதோடும் ஒப்பிடும்போது நான் செய்த தியாகங்களெல்லாம் ஒன்றுமே இல்லை!

WBBR ஸ்டுடியோவில் ஒலிபரப்புக்காகத் தயாரானபோது

பெத்தேலுக்கு வந்த சில வருஷங்களிலேயே, WBBR என்ற நம்முடைய ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒலிபரப்பப்பட்ட பைபிள் படிப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். 124, கொலம்பியா ஹைட்ஸ் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில்தான் WBBR-ன் ஸ்டுடியோ இருந்தது. நிறைய வருஷங்கள் பெத்தேலில் சேவை செய்த சகோதரர் அலெக்ஸாண்டர் ஹெச். மேக்மில்லன் அந்த ரேடியோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்வார். நாங்கள் அவரை சகோதரர் மேக் என்றுதான் கூப்பிடுவோம். இளம் சகோதரர்களான எங்கள் எல்லாருக்கும் அவர் ஓர் அருமையான முன்மாதிரி. ஏனென்றால், பல கஷ்டங்களின் மத்தியிலும் அவர் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்.

WBBR-ஐ விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட துண்டுப்பிரதி

1958-ல் என்னுடைய நியமிப்பு மாற்றப்பட்டது. கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற மிஷனரிகளோடு சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். பக்தி வைராக்கியமுள்ள இந்தச் சகோதர சகோதரிகளுக்கு விசா எடுத்துக் கொடுப்பதற்கும், பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கும் உதவினேன். அப்போதெல்லாம் விமான டிக்கெட்டின் விலை ரொம்பவே அதிகம்! அதனால், ஆப்பிரிக்காவுக்கு அல்லது ஆசியாவுக்குப் போகும் கிலியட் பட்டதாரிகள், சரக்குக் கப்பலில்தான் போவார்கள். காலங்கள் போகப்போக விமான டிக்கெட்டுகளின் விலை குறைந்தது; அதனால், பெரும்பாலான மிஷனரிகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்துக்கு விமானத்திலேயே போனார்கள்.

பட்டமளிப்பு விழாவுக்கு முன் கிலியட் சான்றிதழ்களை எடுத்துவைத்தபோது

மாநாட்டுக்குப் போவதற்காகச் செய்த பயணங்கள்

1960-ல், அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு தனி விமானங்களை ஏற்பாடு செய்தேன். 1961-ல் நடக்கவிருந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்பவர்களுக்காகத்தான் அந்த ஏற்பாடு! அதில் ஒரு மாநாடு ஜெர்மனியில் இருக்கும் ஹேம்பர்கில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக நானும் விமானத்தில் போனேன். அந்த மாநாடு முடிந்ததும், நானும் பெத்தேலிலிருந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து ஒரு வாடகை காரில், ஜெர்மனி வழியாக இத்தாலிக்குப் போனோம். ரோமிலிருந்த கிளை அலுவலகத்தைப் போய்ப் பார்த்துவிட்டு, பிரான்சுக்குப் போனோம். பிறகு, பிரனீஸ் மலைத்தொடரைக் கடந்து ஸ்பெயினுக்குப் போனோம். ஸ்பெயினில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்தது. பார்சிலோனாவிலிருந்த சகோதரர்களுக்கு சில பிரசுரங்களை எங்களால் கொடுக்க முடிந்தது. பார்ப்பதற்குப் பரிசுகள்போல் இருக்க வேண்டுமென்பதற்காக, பிரசுரங்களை அழகான காகிதங்களில் சுற்றி கொடுத்தோம். அவர்களைச் சந்தித்தது சிலிர்ப்பூட்டுகிற அனுபவமாக இருந்தது! அங்கிருந்து கிளம்பி ஆம்ஸ்டர்டாமுக்குப் போனோம். பிறகு, விமானத்தில் நியு யார்க்குக்கு வந்து சேர்ந்தோம்.

1962-ல், 583 சகோதர சகோதரிகளுடைய பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் அடுத்தடுத்து நடக்கவிருந்த சர்வதேச மாநாடுகளில் இந்தச் சகோதர சகோதரிகள் கலந்துகொள்ளவிருந்தார்கள். 1963-ல் நடந்த “நித்திய நற்செய்தி” மாநாடுதான் அது! ஐரோப்பா, ஆசியா மற்றும் தென் பசிபிக்கில் நடக்கவிருந்த மாநாடுகளுக்கு இவர்கள் போகவிருந்தார்கள். பிறகு, ஹவாயில் இருக்கிற ஹோனலுலூவிலும், கலிபோர்னியாவில் இருக்கிற பாஸடீனாவிலும் நடக்கவிருந்த மாநாடுகளுக்குப் போகவிருந்தார்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களைப் பார்ப்பதற்காக லெபனான் மற்றும் ஜோர்டானுக்கு சுற்றுலா போகவிருந்தார்கள். அவர்கள் போவதற்குத் தேவையான விசாக்களையும், விமான டிக்கெட்டுகளையும், ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் எங்கள் இலாகாதான் செய்தது.

புதிய துணையோடு பயணம்

1963-ம் வருஷம் இன்னொரு விதத்திலும் எனக்கு விசேஷமானதாக இருந்தது. ஜூன் 29-ல் நான் லைலா ரொஜர்ஸை கல்யாணம் செய்துகொண்டேன். அவள், மிஸ்சௌரி மாகாணத்தைச் சேர்ந்தவள்; 1960-ல் பெத்தேல் சேவையை ஆரம்பித்திருந்தாள். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து, லைலாவும் நானும் உலகம் முழுவதும் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக கிரீஸ், எகிப்து மற்றும் லெபனானுக்குப் போனோம். அங்கிருந்து ஜோர்டானுக்கு விமானத்தில் போனோம். நம்முடைய வேலை அந்த நாட்டில் தடை செய்யப்பட்டிருந்ததால், அங்கிருந்த அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு விசா கொடுக்க மறுத்துவந்தார்கள். அதனால், அங்கே போய்ச் சேர்ந்தவுடன் என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சகோதர சகோதரிகள் ஒரு கூட்டமாக விமான நிலையத்தில் நின்றுகொண்டு, “யெகோவாவின் சாட்சிகளுக்கு நல்வரவு!” என்று சொல்லும் ஒரு பெரிய ‘பேனரை’ பிடித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் சந்தோஷத்தில் பூரித்துப்போனோம்! பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களையும், ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் வாழ்ந்த இடங்களையும், இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஊழியம் செய்த இடங்களையும், எங்கிருந்து கிறிஸ்தவம் “பூமியெங்கும்” பரவியதோ, அந்த இடங்களையும் பார்ப்பது ரொம்ப சுவாரஸ்யமானதாக இருந்தது.—அப். 13:47.

கடந்த 55 வருஷங்களாக என்னுடைய எல்லா நியமிப்புகளையும் நல்லபடியாகச் செய்ய லைலா எனக்கு ஆதரவாக இருந்துவருகிறாள். நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு நாங்கள் பல தடவை போயிருக்கிறோம். அப்போதெல்லாம், அங்கிருந்த சகோதர சகோதரிகளை எங்களால் உற்சாகப்படுத்த முடிந்தது. அவர்களுக்குத் தேவையான பிரசுரங்களையும் மற்ற பொருள்களையும் கொண்டுபோய்க் கொடுக்க முடிந்தது. ஸ்பெயினைச் சேர்ந்த காடிஸில் இருக்கிற சிறைக்குப் போய், அங்கிருந்த சில சகோதரர்களை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஒரு பேச்சு கொடுக்க முடிந்ததை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.

1969-ல் நடந்த “பூமியில் சமாதானம்” என்ற மாநாட்டுக்கு பெட்ரிஷியா மற்றும் ஜெரி மாலஹனோடு போய்க்கொண்டிருந்தபோது

1963-லிருந்து சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும் சகோதர சகோதரிகளுடைய பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்திருக்கிறேன். குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, தூர கிழக்கு பகுதிகள், ஹவாய், நியுசிலாந்து மற்றும் பியூர்டோ ரிகோ ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மாநாடுகளுக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். மறக்க முடியாத நிறைய மாநாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் லைலாவுக்கும் கிடைத்தது. அதில் ஒன்றுதான் 1989-ல் போலந்தில் இருக்கிற வார்ஸாவில் நடந்த ஒரு பெரிய மாநாடு. ரஷ்யாவிலிருந்த நிறைய சகோதர சகோதரிகளால் அந்த மாநாட்டுக்கு வர முடிந்தது. அதுதான் அவர்கள் கலந்துகொண்ட முதல் மாநாடு! தங்கள் விசுவாசத்துக்காக சோவியத் யூனியனில் பல வருஷங்கள் சிறைவாசம் அனுபவித்த உண்மையுள்ள சகோதர சகோதரிகளை அந்த மாநாட்டில் சந்தித்தோம்.

நான் ரொம்பவே அனுபவித்துச் செய்த இன்னொரு நியமிப்பும் இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற பெத்தேல் குடும்பங்களையும் மிஷனரிகளையும் போய்ச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்புதான் அது! அப்படி நாங்கள் செய்த கடைசி சந்திப்பில், தென் கொரியாவுக்குப் போயிருந்தோம். சுவான் சிறையிலிருந்த 50 சகோதரர்களை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்கள் எல்லாரும் நம்பிக்கையான மனநிலையோடு இருந்தார்கள். எந்தத் தடையும் இல்லாமல் ஊழியம் செய்யும் ஒரு சமயத்துக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்தது எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தது!—ரோ. 1:11, 12.

வளர்ச்சி சந்தோஷத்தைத் தருகிறது

இத்தனை வருஷங்களாக யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறேன். 1943-ல் நான் ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில் வெறும் 1,00,000 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது 80,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் 240 நாடுகளில் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள். கிலியட் பட்டதாரிகளுடைய கடின உழைப்பு, இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணம்! இப்படிப்பட்ட மிஷனரிகள் நிறைய பேரோடு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்யவும், நியமிக்கப்பட்ட இடங்களுக்குப் போக அவர்களுக்கு உதவவும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுடைய சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்று இள வயதிலேயே தீர்மானித்ததையும், பெத்தேலுக்கு விண்ணப்பித்ததையும் நினைத்து நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன். இத்தனை வருஷங்களாக யெகோவா எனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார். பெத்தேல் சேவையை நாங்கள் அனுபவித்துச் செய்தது மட்டுமல்லாமல், கடந்த 50 வருஷங்களாக புருக்லினில் இருக்கும் நிறைய சபைகளோடு சேர்ந்து ஊழியம் செய்யும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உண்மையான நண்பர்கள் நிறைய பேர் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

லைலாவின் உதவியோடு இன்றும் நான் பெத்தேலில் சேவை செய்கிறேன். அவள் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறாள். இப்போது எனக்கு 84 வயதுக்குமேல் ஆகிவிட்டது. இருந்தாலும், அர்த்தமுள்ள வேலை செய்ய முடிவதையும், கிளை அலுவலகத்துக்கு வரும் மெயில்களைக் கையாளுவதில் உதவ முடிவதையும் நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

லைலாவோடு இன்று

யெகோவாவுடைய பிரமாண்டமான அமைப்பின் பாகமாக இருப்பதும், மல்கியா 3:18 சொல்வது எவ்வளவு உண்மை என்பதை ருசிப்பதும் உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விஷயம்! அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள்.” ஒவ்வொரு நாளும் சாத்தானின் உலகம் மோசமாகிக்கொண்டே போகிறது. மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை, சந்தோஷமும் இல்லை. ஆனால், யெகோவாவை நேசிக்கும் மக்கள் கடினமான இந்தக் காலத்திலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நல்ல எதிர்காலம் நிச்சயம் வரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அந்த நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வது உண்மையிலேயே ஒரு பெரிய பாக்கியம்! (மத். 24:14) கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியைச் சீக்கிரத்தில் பூஞ்சோலையாக மாற்றும். அந்த நாளுக்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம்! அந்தச் சமயத்தில், இந்தப் பூமியிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல ஆரோக்கியம் இருக்கும்; சந்தோஷத்துக்குக் குறைவே இருக்காது; அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்!