Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 41

ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—⁠பகுதி 1

ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—⁠பகுதி 1

“ஊழியர்களாகிய நாங்கள் எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.” —2 கொ. 3:3.

பாட்டு 144 உயிர் காக்கும் நற்செய்தி

இந்தக் கட்டுரையில்... *

பைபிள் மாணவர் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது, சபையிலிருக்கிற எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள் (பாரா 1)

1. மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பதும் ஞானஸ்நானம் எடுக்க உதவுவதும் பெரிய பாக்கியம் என்பதை 2 கொரிந்தியர் 3:1-3 எப்படிக் காட்டுகிறது? (அட்டைப் படம்)

உங்கள் சபையில் இருக்கிற யாராவது ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் ரொம்ப சந்தோஷப்படுவீர்கள், இல்லையா? (மத். 28:19) அதுவும், நீங்கள் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தியிருந்தால் சொல்லவே வேண்டாம்! (1 தெ. 2:19, 20) அப்படி ஞானஸ்நானம் எடுப்பவர்கள், தங்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, முழு சபைக்குமே ‘சிபாரிசுக் கடிதமாக’ இருக்கிறார்கள்.2 கொரிந்தியர் 3:1-3-ஐ வாசியுங்கள்.

2. (அ) முக்கியமான எந்தக் கேள்விக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும், ஏன்? (ஆ) பைபிள் படிப்பு என்றால் என்ன? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

2 உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள், கடந்த நான்கு வருஷங்களாக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதோடு, கடந்த நான்கு வருஷங்களாக, ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 2,80,000 பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு உதவியிருக்கிறார்கள். ஞானஸ்நானம் எடுக்காத லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு நேரத்தையும் வாய்ப்பையும் மக்களுக்கு யெகோவா தொடர்ந்து கொடுத்துவருகிறார். இன்னும் கொஞ்சக் காலம்தான் மீதியிருக்கிறது! (1 கொ. 7:29அ; 1 பே. 4:7) அதனால், முடிந்தளவு சீக்கிரமாக ஞானஸ்நானம் எடுக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். *

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 சீஷராக்கும் வேலையைச் செய்வது, இதுவரை இல்லாத அளவு இன்று ரொம்ப முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அதனால், பைபிள் மாணவர்களில் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு நாம் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி கிளை அலுவலகங்களிடம் ஆளும் குழு கேட்டிருக்கிறது. பைபிள் மாணவர்கள் நன்றாக முன்னேறுவதற்கு, பைபிள் படிப்பு எடுப்பவர்களும் சரி, பைபிள் மாணவர்களும் சரி, என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அனுபவமுள்ள பயனியர்களும் மிஷனரிகளும் வட்டாரக் கண்காணிகளும் சொல்லியிருக்கிறார்கள். (நீதி. 11:14; 15:22) அதைப் பற்றி இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்ப்போம். * குறிப்பாக இந்தக் கட்டுரையில், சீக்கிரமாக முன்னேறி ஞானஸ்நானம் எடுப்பதற்கு பைபிள் மாணவர்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வாரம் தவறாமல் படிப்பு நடத்துங்கள்

‘எங்கேயாவது உட்கார்ந்து படிக்கலாமா?’ என்று மாணவரிடம் கேளுங்கள் (பாராக்கள் 4-6)

4. வாசற்படியில் பைபிள் படிப்புகள் நடத்தும் விஷயத்தில் நாம் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

4 சகோதர சகோதரிகள் நிறைய பேர், வாசற்படியில் நின்றுகொண்டே பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். பைபிள்மீது ஆர்வத்தை வளர்க்க இப்படிப் படிப்பை ஆரம்பிப்பது நல்லதுதான். ஆனால், பொதுவாக இப்படிப்பட்ட படிப்புகள் கொஞ்ச நேரம்தான் நடத்தப்படுகின்றன. அதுவும் வாரம் தவறாமல் நடத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. பைபிள் படிப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் வளர்ப்பதற்காக, சகோதர சகோதரிகள் சிலர், அவர்களுடைய ஃபோன் நம்பரை வாங்குகிறார்கள். பிறகு, பைபிள் விஷயங்களைப் பற்றி அவ்வப்போது ஃபோன் செய்து பேசுகிறார்கள் அல்லது மெசேஜ் அனுப்புகிறார்கள். இப்படியே அவர்கள் மாதக்கணக்காகக் கொஞ்ச நேரம் மட்டும் பைபிள் விஷயங்களைப் பேசுகிறார்கள். அதனால், பைபிள் படிப்பு படிப்பவர்களால் முன்னேற்றம் செய்ய முடிவதில்லை. பைபிள் மாணவர்கள் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், படிப்பு நடத்துகிறவர்கள் இன்னும் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும். நிறைய முயற்சியும் எடுக்க வேண்டும்.

5. பைபிள் மாணவர்கள் என்ன செய்ய நாம் உதவ வேண்டுமென்று லூக்கா 14:27-33-லிருந்து தெரிந்துகொள்கிறோம்?

5 தன்னுடைய சீஷர்களாக ஆக நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இயேசு ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினார். கோபுரம் கட்ட விரும்பும் ஒருவரைப் பற்றியும், போருக்குப் போக நினைக்கும் ஒரு ராஜாவைப் பற்றியும் அதில் சொன்னார். கோபுரம் கட்ட விரும்புகிறவர், அதைக் கட்டி முடிக்க முடியுமா என்று ‘முதலில் செலவைக் கணக்கு பார்க்க’ வேண்டுமென்று சொன்னார். அதேபோல், போருக்குப் போக நினைக்கும் ராஜா தன்னுடைய படைவீரர்களால் ஜெயிக்க முடியுமா என்று ‘முதலில் கலந்தாலோசிக்க’ வேண்டுமென்று சொன்னார். (லூக்கா 14:27-33-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், இயேசுவின் சீஷர்களாக ஆக நினைப்பவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். அதனால், ஒவ்வொரு வாரமும் பைபிள் படிப்பு படிக்கச் சொல்லி மாணவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?

6. பைபிள் மாணவர்கள் முன்னேறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்?

6 நீங்கள் வாசற்படியில் பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தால், இன்னும் அதிக நேரம் படிப்பு நடத்த முயற்சி செய்யுங்கள். கூடுதலாக இன்னொரு வசனத்தை நீங்கள் விளக்கிச் சொல்லலாம். இப்படி, இன்னும் அதிக நேரம் படிப்பதற்கு பைபிள் மாணவர்கள் பழகிய பிறகு, ‘எங்கேயாவது உட்கார்ந்து படிக்கலாமா?’ என்று கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதில், பைபிள் படிப்பை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறார்கள் என்பதைக் காட்டும். அவர்கள் இன்னும் சீக்கிரமாக முன்னேறுவதற்கு, ‘வாரத்துல ரெண்டு தடவை படிக்கலாமா?’ என்றுகூட நீங்கள் கேட்கலாம். ஆனால், வாரத்தில் ஓரிரு முறை படித்தால் மட்டும் போதாது, இன்னும் சில விஷயங்களையும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் தயாரியுங்கள்

படிப்புக்காக நன்றாகத் தயாரியுங்கள், எப்படித் தயாரிக்கலாம் என்று மாணவருக்கு சொல்லிக்கொடுங்கள் (பாராக்கள் 7-9)

7. பைபிள் படிப்புக்காக ஒவ்வொரு தடவையும் நீங்கள் எப்படித் தயாரிக்கலாம்?

7 நீங்கள் பைபிளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு தடவையும் நீங்கள் முதலில் தயாரிக்க வேண்டும். படிக்கப்போகும் விஷயத்தை வாசியுங்கள், வசனங்களை எடுத்துப் பாருங்கள். முக்கியமான குறிப்புகளை மனதில் பதிய வையுங்கள். பாடத்தின் தலைப்பையும், துணை தலைப்புகளையும், கேள்விகளையும், “வாசியுங்கள்” வசனங்களையும், படங்களையும் பற்றி யோசித்துப்பாருங்கள். பாடத்தோடு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏதாவது இருக்கின்றனவா என்றும் யோசித்துப்பாருங்கள். பிறகு, பைபிள் மாணவரை மனதில் வைத்து, பாடத்தை எப்படி எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கலாம் என்று முன்கூட்டியே யோசியுங்கள். அப்போதுதான், அவர் அதைச் சுலபமாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடப்பார்.—நெ. 8:8; நீதி. 15:28அ.

8. மாணவருக்காக ஜெபம் செய்வதைப் பற்றி கொலோசெயர் 1:9, 10-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 படிப்புக்காக நீங்கள் தயாரிக்கும்போது, மாணவரைப் பற்றியும் அவருடைய தேவைகளைப் பற்றியும் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். மாணவருடைய மனதைத் தொடும் விதத்தில் பைபிளைக் கற்றுக்கொடுக்க உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (கொலோசெயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) எந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள மாணவருக்குக் கஷ்டமாக இருக்கலாம் என்று முன்கூட்டியே யோசியுங்கள். ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் செய்ய மாணவருக்கு உதவுவதுதான் உங்கள் குறிக்கோள் என்பதை மனதில் வையுங்கள்.

9. படிப்புக்காகத் தயாரிப்பதற்கு நீங்கள் எப்படி மாணவருக்கு உதவலாம்? விளக்குங்கள்.

9 யெகோவாவும் இயேசுவும் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் மாணவர் நன்றியோடு இருக்க வேண்டுமென்று நாம் நினைக்கிறோம். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள அவர் ஆசைப்பட வேண்டுமென்றும் நினைக்கிறோம். அதற்காக, அவருக்கு நாம் தவறாமல் பைபிள் படிப்பு நடத்துகிறோம். (மத். 5:3, 6) ஆனால், படிப்பிலிருந்து முழுமையாகப் பிரயோஜனம் அடைவதற்கு, கற்றுக்கொள்ளும் விஷயங்களில் மாணவர் முழு கவனம் செலுத்த வேண்டும். அப்படிக் கவனம் செலுத்துவதற்கு, ஒவ்வொரு தடவையும் படிப்புக்காகத் தயாரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு நாம் புரியவைக்க வேண்டும். படிப்புக்காக மாணவர் எப்படித் தயாரிக்கலாம்? பாடத்தை அவர் முன்கூட்டியே வாசிக்க வேண்டும், அதில் சொல்லப்பட்டிருக்கிறபடி எப்படி நடந்துகொள்ளலாம் என்றும் யோசிக்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் எப்படி அவருக்கு உதவலாம்? அவரோடு சேர்ந்து ஒரு பாடத்தைத் தயாரியுங்கள். * கேள்விகளுக்கு நேரடியான பதிலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். பதிலை ஞாபகம் வைப்பதற்கு முக்கியமான வார்த்தைகளை மட்டும் கோடு போடுவதற்குச் சொல்லிக்கொடுங்கள். பிறகு, சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லச் சொல்லுங்கள். அப்போது, அவர் பாடத்தை எந்தளவுக்குப் புரிந்துகொண்டார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இன்னொரு விஷயத்தைச் செய்வதற்கும் நீங்கள் அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.

தினமும் யெகோவாவிடம் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள்

யெகோவாவிடம் எப்படிப் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மாணவருக்கு சொல்லிக்கொடுங்கள் (பாராக்கள் 10-11)

10. பைபிளைத் தினமும் வாசிப்பது ஏன் முக்கியம், அதிலிருந்து முழு நன்மை கிடைப்பதற்கு மாணவர் என்ன செய்ய வேண்டும்?

10 மாணவர் உங்களோடு சேர்ந்து வாராவாரம் பைபிளைப் படிப்பது மட்டுமல்லாமல், அவராகவே தினமும் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். அதாவது, யெகோவாவிடம் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி? யெகோவா பேசுவதை அவர் கேட்க வேண்டும், அவரும் யெகோவாவிடம் பேச வேண்டும். யெகோவா பேசுவதைக் கேட்பதற்கு அவர் தினமும் பைபிளை வாசிக்க வேண்டும். (யோசு. 1:8; சங். 1:1-3) jw.org வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை” எப்படி ப்ரிண்ட் செய்து பயன்படுத்தலாம் என்று அவருக்குச் சொல்லிக்கொடுங்கள். * பைபிள் வசனங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப்பார்க்கச் சொல்லுங்கள். கற்றுக்கொள்கிறபடி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதையும் யோசித்துப்பார்க்கச் சொல்லுங்கள். (அப். 17:11; யாக். 1:25) அப்போதுதான், பைபிள் வாசிப்பிலிருந்து அவருக்கு முழு நன்மை கிடைக்கும்.

11. சரியாக ஜெபம் செய்ய மாணவர் எப்படிக் கற்றுக்கொள்வார், அவர் அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?

11 யெகோவாவிடம் தினமும் ஜெபம் செய்யும்படி மாணவரை உற்சாகப்படுத்துங்கள். ஒவ்வொரு தடவை படிப்பை ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் ஜெபம் செய்யுங்கள். அவரோடு சேர்ந்தும் அவருக்காகவும் ஜெபம் செய்யுங்கள். மேலோட்டமாக செய்யாமல் மனதிலிருந்து செய்யுங்கள். அப்போது, இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் எப்படி மனம்விட்டு ஜெபம் செய்யலாம் என்பதை அவர் கற்றுக்கொள்வார். (மத். 6:9; யோவா. 15:16) தினமும் பைபிளை வாசிப்பதும் (யெகோவா பேசுவதைக் கேட்பதும்) ஜெபம் செய்வதும் (யெகோவாவிடம் பேசுவதும்) யெகோவாவிடம் நெருங்கிவர உங்கள் மாணவருக்கு எந்தளவு உதவும் என்பதை யோசித்துப்பாருங்கள். (யாக். 4:8) இந்தப் பழக்கங்களை அவர் வளர்த்துக்கொண்டால், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறுவார். நீங்கள் வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவ வேண்டும்?

யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவுங்கள்

12. யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

12 பைபிள் படிப்பு நடத்தும்போது, மாணவருடைய மனதுக்குப் பிடித்த விதத்தில் சொல்லிக்கொடுத்தால் மட்டும் போதாது. அவருடைய இதயத்தைத் தொடும் விதத்திலும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதயம் என்பது ஒருவருடைய ஆசைகளையும் உணர்ச்சிகளையும் குறிக்கிறது. இதயம்தான் ஒருவரைச் செயல்படத் தூண்டுகிறது. மக்களை சிந்திக்கவைக்கிற விதத்தில் இயேசு கற்றுக்கொடுத்தார் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்திலும் கற்றுக்கொடுத்ததால்தான் அவரை அவர்கள் பின்பற்றினார்கள். (லூக். 24:15, 27, 32) உங்களோடு பைபிள் படிப்பவர், யெகோவா நிஜமானவர் என்பதை நம்ப வேண்டும். அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைத் தன் அப்பாவாகவும் கடவுளாகவும் நண்பராகவும் பார்க்க வேண்டும். (சங். 25:4, 5) அதனால், பைபிள் படிப்பு நடத்தும்போது யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். (யாத். 34:5, 6; 1 பே. 5:6, 7) நீங்கள் எந்தத் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தாலும் சரி, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைச் சிறப்பித்துக் காட்டுங்கள். அன்பு, கருணை, கரிசனை போன்ற அருமையான குணங்களை யெகோவா எப்படிக் காட்டுகிறார் என்பதைப் புரியவையுங்கள். “உன் கடவுளாகிய யெகோவாமேல் . . . அன்பு காட்ட வேண்டும்” என்பதுதான் “மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை” என்று இயேசு சொன்னார். (மத். 22:37, 38) அதனால், யெகோவாமேல் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.

13. யெகோவாவுடைய அருமையான குணங்களைப் பற்றி மாணவருக்கு எப்படிப் புரியவைக்கலாம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

13 நீங்கள் யெகோவாவை எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள், ஏன் நேசிக்கிறீர்கள் என்றெல்லாம் மாணவரிடம் சொல்லுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் நடத்தும் பாடத்தில் இருக்கிற ஒரு வாக்கியத்திலோ வசனத்திலோ யெகோவாவுடைய அன்பு, ஞானம், நீதி, வல்லமை, அல்லது வேறு ஏதாவது குணத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கலாம். அது உங்கள் மனதைத் தொட்டிருக்கலாம். நீங்கள் யெகோவாவை நேசிப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதை மாணவரிடம் சொல்லுங்கள். அப்போது, தானும் யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவருக்கு வரும். (சங். 73:28) ஆனால், ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேற இன்னொரு விஷயத்தையும் அவர் செய்ய வேண்டும்.

சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்துங்கள்

சீக்கிரத்தில் கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்கும்படி மாணவரை உற்சாகப்படுத்துங்கள் (பாராக்கள் 14-15)

14. மாணவர் முன்னேற்றம் செய்வதற்கு சபைக் கூட்டங்கள் எப்படி உதவும் என்று எபிரெயர் 10:24, 25 சொல்கிறது?

14 நம்மோடு பைபிள் படிப்பவர்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றுதான் நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். அப்படியென்றால், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவது ரொம்ப முக்கியம். எவ்வளவு சீக்கிரமாக அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்களோ அவ்வளவு வேகமாக முன்னேற்றம் செய்வதாக அனுபவமுள்ள சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். (சங். 111:1) பைபிள் படிப்பிலிருந்து நிறைய கற்றுக்கொண்டாலும் கூட்டங்களில்தான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் தங்களுடைய மாணவர்களிடம் சொல்கிறார்கள். உங்கள் மாணவரோடு சேர்ந்து எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள். கூட்டங்களுக்கு வந்தால் அவருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்குங்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைப் போட்டுக் காட்டுங்கள். * ஒரு வாரம்கூட கூட்டத்தைத் தவறவிடக் கூடாதென்ற முடிவை எடுக்க அவருக்கு உதவுங்கள்.

15. தவறாமல் கூட்டங்களுக்கு வர மாணவரை நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்?

15 உங்களோடு பைபிள் படிப்பவர் எப்போதாவது மட்டும்தான் கூட்டங்களுக்கு வருகிறாரா? அல்லது, ஒரு தடவைகூட வந்ததில்லையா? அப்படியென்றால், ‘கூட்டத்துக்கு வாங்க’ என்று வெறுமனே அழைப்பதற்குப் பதிலாக, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயத்தை அவரிடம் உற்சாகமாகச் சொல்லுங்கள். அப்போதுதான், கூட்டங்களுக்கு வர வேண்டுமென்ற ஆசை அவருக்கு வரும். காவற்கோபுரத்தை அல்லது வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தை அவருக்குக் கொடுத்து, அடுத்த வார கூட்டத்தில் என்ன படிக்கப்போகிறோம் என்பதைக் காட்டுங்கள். அதில் அவருக்கு எந்த விஷயம் பிடித்திருக்கிறது என்று கேளுங்கள். ஒருவேளை, மற்ற மதங்களின் கூட்டங்களுக்கு அவர் போயிருந்தாலும், நம்முடைய கூட்டத்துக்கு வரும்போது இதுவரை கிடைக்காத புது அனுபவம் அவருக்குக் கிடைக்கும். (1 கொ. 14:24, 25) முன்மாதிரிகளாக இருக்கிற நிறைய பேர் அங்கே இருப்பார்கள், ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறவும் அவர்கள் உதவி செய்வார்கள்.

16. ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேற பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படி உதவலாம், அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

16 ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேற பைபிள் மாணவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? வாராவாரம் படிக்க வேண்டுமென்றும், ஒவ்வொரு படிப்புக்கும் தயாரிக்க வேண்டுமென்றும் நாம் அவர்களிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான், பைபிள் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தினமும் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்படியும், அவரோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ளும்படியும் நாம் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்ற முடிவை எடுக்க அவர்களுக்கு உதவ வேண்டும். (“ ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேற மாணவர்கள் செய்ய வேண்டியவை” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதுமட்டுமல்ல, இன்னும் ஐந்து விஷயங்களையும் நாம் செய்ய வேண்டும். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 153 உன் நெஞ்சம் துள்ளாதோ?

^ பாரா. 5 ஒருவருக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், அவர் யோசிக்கிற விதத்தையும் நடந்துகொள்கிற விதத்தையும் மாற்றிக்கொள்ள உதவ வேண்டும். மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்து, ஞானஸ்நானம் எடுக்க உதவுவது எவ்வளவு முக்கியமான வேலை என்பதை மத்தேயு 28:19 ஞாபகப்படுத்துகிறது. (இதுதான் 2020-க்கான வருடாந்தர வசனம்.) இதை எப்படி இன்னும் திறமையாகச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்ப்போம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: பைபிள் விஷயங்களை ஒருவருக்குத் தவறாமல் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்றால், அவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறீர்கள் என்று அர்த்தம். பைபிள் படிப்பு எப்படி நடக்கும் என்று ஒருவருக்குக் காட்டிய பிறகு, அவருக்கு இரண்டு தடவை படிப்பு நடத்தியிருந்தால், அதுவும் அவர் தொடர்ந்து படிப்பார் என்று தெரிந்தால், அதை பைபிள் படிப்பாக நீங்கள் அறிக்கை செய்யலாம்.

^ பாரா. 3 நம் ராஜ்ய ஊழியத்தில் ஜூலை 2004 முதல் மே 2005 வரை வெளிவந்த “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்” என்ற தொடர்கட்டுரையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளும் இந்தக் கட்டுரைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 9 jw.org® வெப்சைட்டில், லைப்ரரி > வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் > ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... என்ற பகுதியில், தயாரிப்பதற்கு மாணாக்கருக்கு சொல்லிக்கொடுங்கள் என்ற நான்கு நிமிட வீடியோவைப் பாருங்கள்.

^ பாரா. 10 jw.org வெப்சைட்டில் லைப்ரரி > புத்தகங்கள், சிறு புத்தகங்கள்—பைபிளை படிக்க உதவும் என்ற பகுதியில் பாருங்கள்.

^ பாரா. 14 jw.org® வெப்சைட்டில், லைப்ரரி > வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் > ஊழியத்திற்கு உதவும் கருவிகள் என்ற பகுதியில் பாருங்கள்.