படிப்புக் கட்டுரை 42
ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்—பகுதி 2
“உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து.”—1 தீ. 4:16.
பாட்டு 143 இருண்ட உலகில் பேரொளி!
இந்தக் கட்டுரையில்... *
1. சீஷராக்கும் வேலையை உயிர்காக்கும் வேலை என்று எப்படிச் சொல்கிறோம்?
சீஷராக்கும் வேலை உயிர்காக்கும் வேலை! எப்படிச் சொல்கிறோம்? “நீங்கள் புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று இயேசு கட்டளை கொடுத்தார். (மத். 28:19, 20) “ஞானஸ்நானம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது” என்று அப்போஸ்தலன் பேதுருவும் சொன்னார். (1 பே. 3:21) அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது. ஞானஸ்நானம் எடுப்பவர்களால்தான் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதனால், இயேசுவின் பலியிலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவி செய்ய வேண்டும்.
2. மற்றவர்களை சீஷர்களாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று 2 தீமோத்தேயு 4:1, 2 சொல்கிறது?
2 மற்றவர்களை சீஷர்களாக்குவதற்கு, “கற்பிக்கும் கலையை” நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். (2 தீமோத்தேயு 4:1, 2-ஐ வாசியுங்கள்.) ஏன்? ‘நீங்கள் புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்குங்கள்’ என்று இயேசு சொன்னபோது, “அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றும் சொன்னார். இந்த வேலையில் ‘நிலைத்திருக்க’ வேண்டுமென்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். “இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்” என்று சொன்னார். அதனால்தான், பவுல் சொன்னபடி, ‘நம் மீதும் நம் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.’ (1 தீ. 4:16) அப்படியென்றால், மற்றவர்களை சீஷர்களாக்குவதற்கு நல்ல விதத்தில் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
3. எதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
3 பைபிளில் இருக்கும் உண்மைகளை லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தவறாமல் சொல்லிக்கொடுத்து வருகிறோம். அவர்களில் இன்னும் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு நாம் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி
முந்தின கட்டுரையில் பார்த்தோம். அது சம்பந்தமான இன்னும் ஐந்து விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.பைபிள் பேசட்டும்!
4. பைபிள் படிப்பு நடத்தும்போது நீங்கள் ஏன் சுயக்கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
4 பைபிளில் இருக்கும் விஷயங்களைப் பேசுவதென்றால் நமக்கு ரொம்ப பிடிக்கும். அதற்காக, பைபிள் படிப்போ காவற்கோபுர படிப்போ சபை பைபிள் படிப்போ நடத்தும்போது நாம் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. பைபிளைப் பேசவிட வேண்டும். ஒரு பைபிள் வசனத்தையோ விஷயத்தையோ பற்றி உங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டு இருக்காதீர்கள். * அதற்குப் பதிலாக, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுங்கள். பைபிளைப் பேச விடுங்கள். (யோவா. 16:12) நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது எந்தளவுக்கு பைபிள் விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தீர்கள் என்றும், இப்போது எந்தளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள் என்றும் யோசித்துப்பாருங்கள். அந்தச் சமயத்தில், பைபிளின் அடிப்படை போதனைகள்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். (எபி. 6:1, 2) வருஷங்கள் போகப்போகத்தான் நீங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டீர்கள். அதனால், ஆரம்பத்திலேயே உங்கள் மாணவருக்கு எல்லாவற்றையும் சொல்லித்தர வேண்டுமென்று நினைக்காதீர்கள்.
5. (அ) ஒன்று தெசலோனிக்கேயர் 2:13-ன்படி, பைபிள் மாணவர் எதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம்? (ஆ) மாணவரைப் பேச வைப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
5 நாம் சொந்தமாக எதையும் சொல்லித்தராமல் பைபிளிலிருந்துதான் சொல்லித்தருகிறோம் என்பதை மாணவருக்குப் புரியவைக்க வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.) அதை எப்படிச் செய்யலாம்? நீங்களே பேசிக்கொண்டிருக்காமல் அவரைப் பேசச் சொல்லுங்கள். பைபிள் வசனங்களை நீங்களே எப்போதும் விளக்கிக்கொண்டிருக்காமல், அவருக்கு என்ன புரிந்தது என்று கேளுங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களைத் தனக்குப் பொருத்திப்பார்க்க அவருக்கு உதவுங்கள். வாசிக்கும் வசனங்களைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், எப்படி உணருகிறார் என்று தெரிந்துகொள்ள கேள்விகளைக் கேளுங்கள். (லூக். 10:25-28) உதாரணத்துக்கு, “இந்த வசனத்துல யெகோவாவோட எந்த குணத்த பத்தி தெரிஞ்சுக்குறீங்க?” “இந்த விஷயம் உங்களுக்கு எப்படி பிரயோஜனமா இருக்கும்?” “இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றெல்லாம் கேளுங்கள். (நீதி. 20:5) மாணவருக்கு எந்தளவு தெரியும் என்பது முக்கியம் கிடையாது. தெரிந்ததை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதும், எந்தளவுக்கு அதன்படி நடந்துகொள்கிறார் என்பதும்தான் முக்கியம்.
6. அனுபவமுள்ள சகோதர சகோதரிகளை உங்களுடைய பைபிள் படிப்புகளுக்குக் கூட்டிக்கொண்டு போவது ஏன் நல்லது?
6 உங்களுடைய பைபிள் படிப்புக்கு அனுபவமுள்ள சகோதர சகோதரிகளைக் கூட்டிக்கொண்டு போகிறீர்களா? நீங்கள் எப்படிப் படிப்பு நடத்துகிறீர்கள் என்றும், எந்தளவுக்கு பைபிளைப் பேச விடுகிறீர்கள் என்றும் அவர்களிடம் கேளுங்கள். கற்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 18:24-26-ஐ ஒப்பிடுங்கள்.) கற்றுக்கொள்ளும் விஷயங்களை மாணவர் புரிந்துகொள்கிறாரா என்று உங்களோடு வருபவரிடம் கேளுங்கள். ஒரு வாரத்துக்கோ சில வாரங்களுக்கோ உங்களால் படிப்பு நடத்த முடியாதபோது, உங்களோடு வந்தவரை நடத்தச் சொல்லலாம். அப்போது, படிப்பு தடைபடாமல் நடக்கும். படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மாணவர் புரிந்துகொள்வார். அது “உங்களுடைய” படிப்பு என்றும், வேறு யாரும் நடத்தக் கூடாது என்றும் ஒருபோதும் நினைக்காதீர்கள். மாணவர் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டுமென்றுதானே நீங்கள் ஆசைப்படுவீர்கள்?
ஆர்வத்துடிப்போடும் உறுதியோடும் பேசுங்கள்
7. படிக்கிற விஷயங்களில் ஆர்வம் காட்ட மாணவருக்கு எது உதவும்?
7 பைபிள் உண்மைகளை நீங்கள் எவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள் என்பதையும், அவற்றில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதையும் மாணவர் பார்க்க வேண்டும். (1 தெ. 1:5) அப்போது, படிக்கிற விஷயங்களில் அவரும் ரொம்ப ஆர்வம் காட்டுவார். பைபிள் நியமங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் உதவியிருக்கின்றன என்பதைப் பற்றிப் பொருத்தமான சமயங்களில் சொல்லுங்கள். அப்போது, தன்னுடைய வாழ்க்கைக்கும் அவை உதவியாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொள்வார்.
8. உங்கள் மாணவருக்கு உதவ நீங்கள் வேறு என்ன செய்யலாம், ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
8 உங்களுடைய பைபிள் மாணவர் ஏதாவது பிரச்சினையோடு போராடிக்கொண்டு இருக்கிறாரா? அப்படியென்றால், அதே பிரச்சினையை சில சகோதர சகோதரிகள் எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். அப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் யாரையாவது அவருடைய படிப்புக்குக் கூட்டிக்கொண்டு போங்கள். அல்லது, jw.org வெப்சைட்டில், “பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது” என்ற தலைப்பில் வருகிற மனதைத் தொடும் அனுபவங்களை நீங்கள் சொல்லலாம். * பைபிளின்படி நடப்பது எவ்வளவு ஞானமானது என்பதைப் புரிந்துகொள்ள, அப்படிப்பட்ட கட்டுரைகளும் அது சம்பந்தமான வீடியோக்களும் உங்கள் மாணவருக்கு உதவும்.
9. படிக்கிற விஷயங்களைப் பற்றிக் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேச மாணவரை நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
9 உங்கள் மாணவருக்குக் கல்யாணம் ஆகியிருந்தால், அவருடைய கணவனோ மனைவியோ பைபிள் படிப்பில் கலந்துகொள்கிறாரா? ஒருவேளை கலந்துகொள்ளவில்லை என்றால், அவரையும் அழையுங்கள். படிக்கிற விஷயங்களைப் பற்றிக் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேசும்படி மாணவரை உற்சாகப்படுத்துங்கள். (யோவா. 1:40-45) இதை எப்படிச் செய்யலாம்? “நீங்க கத்துக்கிட்ட விஷயத்த உங்க குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட எப்படி விளக்குவீங்க?” அல்லது “எந்த வசனத்த காட்டி இந்த விஷயத்த உங்க நண்பர்கிட்ட விளக்கி சொல்வீங்க?” என்று நீங்கள் கேட்கலாம். அப்போது, பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித்தர மாணவருக்குப் பயிற்சி கொடுக்கிறீர்கள்! அவர் தகுதி பெறும்போது, ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாக ஆகி ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பிக்கலாம். அவருக்குத் தெரிந்த யாராவது பைபிள் படிக்க ஆசைப்படுகிறார்களா என்று அவரிடம் கேளுங்கள். அப்படி யாராவது இருந்தால், அவரை உடனடியாகச் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவையும் காட்டுங்கள். *
சகோதர சகோதரிகளை நண்பர்களாக்கிக்கொள்ள உதவுங்கள்
10. ஒன்று தெசலோனிக்கேயர் 2:7, 8 சொல்கிறபடி, நாம் எப்படி பவுலைப் போல் நடந்துகொள்ளலாம்?
10 மாணவர்மீது உண்மையான அக்கறை காட்டுங்கள். அவரையும் எதிர்கால சகோதரராக, சகோதரியாகப் பாருங்கள். (1 தெசலோனிக்கேயர் 2:7, 8-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக இந்த உலகத்தில் இருக்கிற நண்பர்களை விட்டுவிட்டு வருவதும் மற்ற மாற்றங்களைச் செய்வதும் அவருக்கு சுலபமாக இருக்காது. அதனால், சகோதர சகோதரிகளை நண்பர்களாக்கிக்கொள்ள அவருக்கு உதவ வேண்டும். பைபிள் படிப்பு நடத்தும்போது மட்டுமல்ல, மற்ற சமயங்களிலும் அவரோடு நேரம் செலவிடுவதன் மூலம் அவருக்கு ஒரு நல்ல நண்பராக இருங்கள். உதாரணத்துக்கு, அவருக்கு ஃபோன் செய்து பேசலாம், மெசேஜ் அனுப்பலாம், அல்லது நேரில் போய்ப் பார்க்கலாம். அப்போது, அவர்மீது நீங்கள் உண்மையான அக்கறை காட்டுவதை அவர் புரிந்துகொள்வார்.
11. நாம் என்ன ஆசைப்படுகிறோம், ஏன்?
11 “ஒரு பிள்ளையை வளர்க்க கிராமத்தில் இருக்கிற எல்லாருடைய முயற்சியுமே தேவை” என்று ஓர் ஆப்பிரிக்க பழமொழி சொல்கிறது. அதேபோல், “ஒரு சீஷரை உருவாக்க சபையில் இருக்கிற எல்லாருடைய முயற்சியும் தேவை.” அதனால்தான், நன்றாக பைபிள் படிப்பு நடத்துபவர்கள் மற்ற சகோதர சகோதரிகளை தங்கள் பைபிள் மாணவருக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்கள். அதனால், அந்தச் சகோதர சகோதரிகளைப் பற்றி மாணவரால் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மாணவர் யெகோவாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ள அவர்களாலும் உதவ முடிகிறது. மாணவருக்கு பிரச்சினைகள் வரும்போது, தேவையான ஆறுதலையும் அவர்களால் தர முடியும். ‘சபையில நானும் ஒரு ஆளு, நானும் இந்த குடும்பத்துல ஒருத்தர்தான்’ என்று மாணவர் உணர வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். நம்முடைய சகோதர சகோதரிகளுடைய அன்பால் அவர் ஈர்க்கப்பட வேண்டுமென்றும் ஆசைப்படுகிறோம். இப்படி நம்முடைய அன்பை ருசிக்க ஆரம்பிக்கும்போது, யெகோவாவை நேசிக்க உதவாத மற்ற நெருக்கமான நட்புகளை முறித்துக்கொள்வது அவருக்கு சுலபமாக இருக்கும். (நீதி. 13:20) ஒருவேளை அவருடைய நண்பர்கள் அவரை ஒதுக்கித்தள்ளும்போது, யெகோவாவின் அமைப்பில் உண்மையான நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு வரும்.—மாற். 10:29, 30; 1 பே. 4:4.
அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதன் அவசியத்தைப் புரியவையுங்கள்
12. அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி நம்முடைய மாணவர்களிடம் ஏன் பேச வேண்டும்?
12 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி உங்கள் மாணவரிடம் பேசத் தயங்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் அவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்குக் காரணமே, அவர் ஞானஸ்நானம் எடுத்து சீஷராக ஆக வேண்டும் என்பதற்காகத்தான்! அவருக்குத் தவறாமல் படிப்பு நடத்த ஆரம்பித்த சில மாதங்களிலேயே, அதுவும் அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்த உடனே, அவர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகி, யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் படிப்பு நடத்துகிறீர்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
13. ஞானஸ்நானம் என்ற குறிக்கோளை அடைய மாணவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?
13 உங்கள் மாணவர் படிப்படியாக சில விஷயங்களைச் செய்வதன் மூலம் ஞானஸ்நானம் என்ற குறிக்கோளை அடைகிறார். முதலில், யெகோவாவைப் பற்றித் யோவா. 3:16; 17:3) பிறகு, யெகோவாவிடமும் சகோதர சகோதரிகளிடமும் நட்பை வளர்த்துக்கொள்கிறார். (எபி. 10:24, 25; யாக். 4:8) கடைசியாக, கெட்ட பழக்கங்களை விட்டுவிடுகிறார். மனம் திருந்துகிறார். (அப். 3:19) அதேசமயத்தில், அவர் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சொல்கிறார். (2 கொ. 4:13) பின்பு, யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார். (1 பே. 3:21; 4:2) அவர் ஞானஸ்நானம் எடுக்கிற அந்த நாள் நம் எல்லாருக்கும் ஒரு பொன்னாள்! இப்படி, ஞானஸ்நானம் என்ற குறிக்கோளை அடைவதற்காக அவர் ஒவ்வொரு படியையும் எடுத்துவைக்கும்போது, தாராளமாகவும் மனதாரவும் அவரைப் பாராட்டுங்கள். தொடர்ந்து முன்னேறும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.
தெரிந்துகொண்டு அவரை நேசிக்கிறார். அவர்மீது விசுவாசம் வைக்கிறார். (உங்கள் மாணவருடைய முன்னேற்றத்தை அவ்வப்போது மதிப்பிடுங்கள்
14. உங்கள் மாணவருடைய முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
14 அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க மாணவருக்கு உதவும்போது உங்களுக்குப் பொறுமை தேவை. ஆனால் ஏதாவதொரு கட்டத்தில், உண்மையிலேயே அவர் யெகோவாவுக்கு சேவை செய்ய விரும்புகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இயேசுவோட கட்டளைக்கு கீழ்ப்படியறதுக்கு அவர் முயற்சி செய்றாரா, இல்லனா பைபிள்ல இருக்குற விஷயங்கள வெறுமனே தெரிஞ்சுக்கிட்டா போதும்னு நினைக்கிறாரா?’
15. மாணவர் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள நீங்கள் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
15 மாணவர்களுடைய முன்னேற்றத்தை அடிக்கடி மதிப்பிடுவது அவசியம். அதற்கு வேறுசில கேள்விகளையும் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவ பத்தி அவரு என்ன நினைக்கிறாருங்குறது அவரோட பேச்சுல தெரியுதா?’ ‘யெகோவாகிட்ட அவரு ஜெபம் செய்றாரா?’ (சங். 116:1, 2) ‘பைபிள நல்லா அனுபவிச்சு படிக்கிறாரா?’ (சங். 119:97) ‘தவறாம கூட்டங்களுக்கு வர்றாரா?’ (சங். 22:22) ‘கத்துக்கிட்ட விஷயங்களுக்கு ஏத்த மாதிரி வாழ்க்கையில ஏதாவது மாற்றங்கள் செஞ்சிருக்காரா?’ (சங். 119:112) ‘கத்துக்கிட்ட விஷயங்கள குடும்பத்துல இருக்குறவங்ககிட்டயும் நண்பர்கள்கிட்டயும் சொல்ல ஆரம்பிச்சிருக்காரா?’ (சங். 9:1) ‘எல்லாத்துக்கும் மேல, யெகோவாவின் சாட்சியா ஆகணும்னு அவரு ஆசைப்படுறாரா?’ (சங். 40:8) இந்தக் கேள்விகளில் ஒன்றுக்காவது ‘இல்லை’ என்பது உங்கள் பதிலாக இருந்தால், சாதுரியமாக அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அதைப் பற்றி மாணவரிடம் அன்பாகவும் வெளிப்படையாகவும் பேசுங்கள். *
16. படிப்பை எப்போது நீங்கள் நிறுத்த வேண்டியிருக்கலாம்?
16 படிப்பைத் தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பதைத் தெரிந்துகொள்ள அவ்வப்போது இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘படிப்புக்காக அவரு தயாரிக்குறது இல்லையா?’ ‘கூட்டங்களுக்கு வர்றதுக்கு அவருக்கு இஷ்டம் இல்லையா?’ ‘கெட்ட பழக்கங்கள
விடாம இருக்குறாரா?’ ‘பொய் மதத்தோட இன்னும் அவருக்கு சம்பந்தம் இருக்கா?’ இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ‘ஆமாம்’ என்றிருந்தும் தொடர்ந்து அவருக்கு பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தால், ‘நனையவே கூடாது’ என்று நினைக்கும் ஒருவருக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ஆசைப்படுவதுபோல் இருக்கும்! கற்றுக்கொண்ட விஷயங்களை மதிக்காமலும், கற்றுக்கொண்டதன்படி வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யாமலும் இருப்பவருக்கு தொடர்ந்து படிப்பு நடத்துவதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?17. ஒன்று தீமோத்தேயு 4:16-ன்படி, பைபிள் படிப்புகளை நடத்துகிற எல்லாரும் என்ன செய்ய வேண்டும்?
17 சீஷராக்கும் வேலையை நாம் முக்கியமானதாக நினைக்கிறோம். ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு முன்னேற நம்முடைய மாணவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறோம். அதனால்தான், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது பைபிளைப் பேசவிடுகிறோம். ஆர்வத்துடிப்போடும் உறுதியோடும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம். சகோதர சகோதரிகளை நண்பர்களாக்கிக்கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். அதோடு, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரியவைக்கிறோம். அவ்வப்போது அவர்களுடைய முன்னேற்றத்தை மதிப்பிட்டுப் பார்க்கிறோம். (“ ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு மாணவர் முன்னேற படிப்பு நடத்துபவர் செய்ய வேண்டியவை” என்ற பெட்டியைப் பாருங்கள்.) உயிர் காக்கும் இந்த வேலையைச் செய்ய முடிந்ததை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம். மாணவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் நாம் செய்யலாம்!
பாட்டு 139 உறுதியாய் நிற்க உதவும்!
^ பாரா. 5 யெகோவாவுக்குப் பிடித்த விதத்தில் யோசிக்கவும் நடந்துகொள்ளவும் பைபிள் மாணவர்களுக்கு உதவுகிற பாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் கலையை நாம் எப்படி இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.
^ பாரா. 4 செப்டம்பர் 2016 வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில் “பைபிள் படிப்பு நடத்தும்போது தவிர்க்க வேண்டிய படுகுழிகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ பாரா. 8 எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் என்ற பகுதியில் பாருங்கள்.
^ பாரா. 9 jw.org வெப்சைட்டில் பைபிள் போதனைகள் > பைபிள் படிப்புக் கருவிகள் > பைபிளைச் சொல்லிக்கொடுப்பவரிடம் படியுங்கள் என்ற பகுதியில் பாருங்கள்.
^ பாரா. 15 மார்ச் 2020 காவற்கோபுரத்தில் வந்த “யெகோவாமீது இருக்கிற அன்பு ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்டும்!” என்ற கட்டுரையையும் “ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
^ பாரா. 77 படவிளக்கம்: ஒரு சகோதரி, தன்னுடைய பைபிள் படிப்புக்கு அனுபவமுள்ள ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டுபோகிறார். படிப்பு நடத்தும்போது எப்படி அதிகம் பேசாமல் இருக்கலாம் என்பதை அனுபவமுள்ள அந்தச் சகோதரி, படிப்பு நடத்திய சகோதரியிடம் பிற்பாடு சொல்கிறார்.
^ பாரா. 79 படவிளக்கம்: நல்ல மனைவியாக இருப்பது எப்படியென்று பைபிள் படிப்பில் ஒரு பெண் தெரிந்துகொள்கிறார். பிறகு, அதைப் பற்றித் தன் கணவரிடம் சொல்கிறார்.
^ பாரா. 81 படவிளக்கம்: பைபிள் படிப்பு படிக்கும் அந்தப் பெண், சபையில் கிடைத்த நண்பர் ஒருவருடைய வீட்டுக்குத் தன்னுடைய கணவரோடு போய் சந்தோஷமாக நேரம் செலவிடுகிறார்.