Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 44

வளர்ந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வார்களா?

வளர்ந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வார்களா?

“இயேசு வளரவளர ஞானத்தில் பெருகி, கடவுளுடைய பிரியத்தையும் மனிதர்களுடைய பிரியத்தையும் பெற்றுவந்தார்.”—லூக். 2:52.

பாட்டு 88 பிள்ளைகள், தேவன் தந்த சொத்து

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் எடுக்கிற முடிவுகளிலேயே சிறந்த முடிவு எது?

பெரும்பாலும், அப்பா அம்மா எடுக்கிற முடிவுகளுக்கும் பிள்ளைகளுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அப்பா அம்மா நல்ல முடிவுகள் எடுக்கும்போது, சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்வதற்கு பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். கெட்ட முடிவுகள் எடுக்கும்போது, பிள்ளைகளுடைய வாழ்க்கையைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள். அதேசமயத்தில், பிள்ளைகளும் நல்ல முடிவுகளை எடுப்பது முக்கியம். நம் அன்பான அப்பா யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்று எடுக்கிற முடிவைவிட வேறெந்த முடிவு சிறந்ததாக இருக்க முடியும்?—சங். 73:28.

2. என்ன நல்ல முடிவுகளை இயேசுவும் யோசேப்பும் மரியாளும் எடுத்தார்கள்?

2 தங்களுடைய பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்ய உதவ வேண்டும் என்பதில் இயேசுவின் பெற்றோர் உறுதியாக இருந்தார்கள். யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் தங்களுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்பதை அவர்கள் எடுத்த முடிவுகள் காட்டின. (லூக். 2:40, 41, 52) இயேசுவும் நல்ல முடிவுகளை எடுத்தார். யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதற்கு அவை உதவியாக இருந்தன. (மத். 4:1-10) இயேசு அன்பானவராக, உண்மையுள்ளவராக, தைரியமானவராக வளர்ந்தார். யெகோவாவை நேசிக்கிற எந்தவொரு அப்பா அம்மாவுக்கும் இப்படியொரு மகன் இருப்பது எவ்வளவு சந்தோஷத்தையும் பெருமையையும் தரும்!

3. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?

3 இயேசுவின் விஷயத்தில் யெகோவா என்ன முடிவுகளை எடுத்தார்? இயேசுவின் பெற்றோர் எடுத்த முடிவுகளிலிருந்து கிறிஸ்தவப் பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசு எடுத்த முடிவுகளிலிருந்து இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

4. தன்னுடைய மகனின் விஷயத்தில் யெகோவா என்ன முக்கியமான முடிவை எடுத்தார்?

4 இயேசுவுக்கு அருமையான பெற்றோரை யெகோவா தேர்ந்தெடுத்தார். (மத். 1:18-23; லூக். 1:26-38) பைபிளில் இருக்கிற மரியாளின் இதயப்பூர்வமான வார்த்தைகளிலிருந்து யெகோவாவின் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் மரியாள் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. (லூக். 1:46-55) யோசேப்பும் யெகோவாமீது அன்பு வைத்திருந்தார். அவரை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று விரும்பினார். யெகோவாவின் வழிநடத்துதலுக்கு அவர் கீழ்ப்படிந்ததிலிருந்து இதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.—மத். 1:24.

5-6. எல்லா பிரச்சினைகளிலிருந்தும் இயேசுவை யெகோவா பாதுகாக்கவில்லை என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.

5 இயேசுவின் பெற்றோராக இருப்பதற்கு பணக்காரர்களை யெகோவா தேர்ந்தெடுக்கவில்லை. இயேசு பிறந்ததற்குப் பிறகு யோசேப்பும் மரியாளும் கொடுத்த பலியிலிருந்து அவர்கள் ஏழைகள் என்பது தெரிகிறது. (லூக். 2:24) ஒருவேளை, நாசரேத்திலிருந்த தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே யோசேப்பு ஒரு சின்ன தச்சுப் பட்டறை வைத்திருந்திருக்கலாம். அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஏழு பிள்ளைகள் இருந்தார்களே!—மத். 13:55, 56.

6 சில ஆபத்துகளிலிருந்து இயேசுவை யெகோவா காப்பாற்றினார். ஆனால், எல்லா பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கவில்லை. (மத். 2:13-15) உதாரணத்துக்கு, இயேசுவின் குடும்பத்திலிருந்த சிலரும் சொந்தக்காரர்களும் இயேசுமீது விசுவாசம் வைக்கவில்லை. தன்னுடைய குடும்பத்திலிருந்த சிலரே ஆரம்பத்தில் தன்னை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாதபோது இயேசுவுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும்! (மாற். 3:21; யோவா. 7:5) வளர்ப்புத் தந்தையான யோசேப்பு இறந்த துக்கத்தையும் இயேசு சமாளிக்க வேண்டியிருந்திருக்கலாம். அவர் மூத்த மகனாக இருந்ததால் தன்னுடைய அப்பாவின் தொழிலை எடுத்து நடத்த வேண்டியிருந்தது. (மாற். 6:3) வளரவளர, குடும்பத்தை எப்படிக் கவனித்துக்கொள்வது என்பதையும் அவர் கற்றுக்கொண்டார். குடும்பத்தைக் காப்பாற்ற அவர் வியர்வை சிந்தி உழைக்க வேண்டியிருந்திருக்கலாம். நாள் முழுக்க வேலை செய்த பிறகு எவ்வளவு களைப்பாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

பெற்றோர்களே, அறிவுரைக்காக பைபிளை எப்படி நம்பியிருப்பது என்று சொல்லிக்கொடுப்பதன் மூலம் பிரச்சினைகளைச் சந்திக்க உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துங்கள் (பாரா 7) *

7. (அ) தம்பதிகள் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க, நீதிமொழிகள் 2:1-6 எப்படி பெற்றோருக்கு உதவும்?

7 இப்போது, உங்களுடைய விஷயத்துக்கு வரலாம். நீங்கள் கல்யாணமானவரா? குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நாங்க யெகோவாவையும் அவரோட வார்த்தையையும் நேசிக்கிற மனத்தாழ்மையான ஆட்களா?’ ‘எங்கள நம்பி பிள்ளை செல்வத்த யெகோவா கொடுப்பாரா?’ (சங். 127:3, 4) ஒருவேளை, ஏற்கெனவே உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடினமா உழைக்கறது நல்லதுங்கறத என்னோட பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்குறனா?’ (பிர. 3:12, 13) ‘சாத்தானோட இந்த உலகத்துல உடல் ரீதியிலயும் ஒழுக்க ரீதியிலயும் என் பிள்ளைகள பாதுகாக்குறதுக்கு என்னால முடிஞ்சத எல்லாம் நான் செய்றனா?’ (நீதி. 22:3) உங்கள் பிள்ளைகளுக்கு வருகிற எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பது என்பது முடியாத காரியம். ஆனால், பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அவர்களைத் தயார்படுத்த முடியும். எப்படி? உதவிக்காக பைபிளை நம்பியிருப்பது எப்படியென்று படிப்படியாகவும் அன்பாகவும் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம்தான்! (நீதிமொழிகள் 2:1-6-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, உங்களுடைய குடும்பத்தாரோ சொந்தக்காரரோ சத்தியத்தைவிட்டுப் போய்விட்டால், தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பது ஏன் முக்கியம் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். (சங். 31:23) அல்லது, உங்கள் பாசத்துக்குரியவர்கள் யாராவது இறந்துபோனால் அந்தத் துக்கத்தைச் சமாளிக்கவும் மனசமாதானத்தோடு இருக்கவும் பைபிள் எப்படி உதவும் என்பதைப் பிள்ளைகளுக்குக் காட்டுங்கள்.—2 கொ. 1:3, 4; 2 தீ. 3:16.

யோசேப்பிடமிருந்தும் மரியாளிடமிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்

8. உபாகமம் 6:6, 7-ல் இருக்கிற அறிவுரையின்படி யோசேப்பும் மரியாளும் எப்படி நடந்துகொண்டார்கள்?

8 கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கிற ஓர் ஆளாக வளர, இயேசுவுக்கு அவருடைய பெற்றோர் உதவினார்கள். எல்லா பெற்றோர்களுக்கும் யெகோவா கொடுத்த அறிவுரைகளின்படி அவர்கள் நடந்தார்கள். (உபாகமம் 6:6, 7-ஐ வாசியுங்கள்.) யோசேப்பும் மரியாளும் யெகோவாமீது ரொம்ப அன்பு வைத்திருந்தார்கள். அதேபோன்ற அன்பை வளர்த்துக்கொள்ள தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.

9. யோசேப்பும் மரியாளும் தொடர்ந்து என்ன செய்தார்கள்?

9 யோசேப்பும் மரியாளும் தங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து யெகோவாவைத் தொடர்ந்து வழிபட்டார்கள். நாசரேத்திலிருந்த ஜெபக்கூடத்துக்கு வாராவாரம் அவர்கள் போயிருப்பார்கள் என்பதிலும், வருஷத்துக்கு ஒரு தடவை வருகிற பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குப் போயிருப்பார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை! (லூக். 2:41; 4:16) பிள்ளைகளோடு சேர்ந்து எருசலேமுக்குப் போகும்போதும் வரும்போதும், யெகோவாவின் மக்களைப் பற்றிய சரித்திரத்தை இயேசுவுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் அவர்கள் சொல்லியிருக்கலாம். வேதாகமங்களில் இருக்கிற இடங்களையும் போய்ப் பார்த்திருக்கலாம். குடும்பம் பெரிதாக பெரிதாக, யெகோவாவின் வழிபாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தொடர்ந்து செய்வது யோசேப்புக்கும் மரியாளுக்கும் அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது. ஆனால், அந்த விஷயங்களை அவர்கள் தொடர்ந்து செய்ததால் அருமையான பலன்களை அனுபவித்தார்கள். யெகோவாவின் வழிபாட்டை அவர்கள் முதலிடத்தில் வைத்திருந்ததால், குடும்பமாக அவரோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடிந்தது.

10. யோசேப்பிடமிருந்தும் மரியாளிடமிருந்தும் கிறிஸ்தவப் பெற்றோர்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

10 கடவுள்பயமுள்ள பெற்றோர்கள், யோசேப்பிடமிருந்தும் மரியாளிடமிருந்தும் மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தாங்கள் யெகோவாமீது ரொம்ப அன்பு வைத்திருப்பதை தங்கள் சொல்லாலும் செயலாலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற பாடம்தான் அது! பெற்றோர்களே, யெகோவாமீது அன்பை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுவதுதான் நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கிற மிகப் பெரிய சொத்து!! பைபிள் படிப்பது... ஜெபம் செய்வது... கூட்டங்களில் கலந்துகொள்வது... ஊழியத்தில் கலந்துகொள்வது... இவற்றையெல்லாம் தவறாமல் எப்படிச் செய்வதென்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். நீங்கள் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் மிக முக்கியமான பாடங்களில் இவையும் அடங்குகின்றன. (1 தீ. 6:6) உங்கள் பிள்ளைகளுடைய பொருளாதாரத் தேவைகளைப் பார்த்துக்கொள்வது முக்கியம்தான். ஆனால், சாத்தானுடைய இந்த உலகத்துக்கு வரப்போகிற அழிவிலிருந்து உங்கள் பிள்ளைகள் தப்பித்து புதிய உலகத்துக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு, பணம்பொருளோ சொத்துசுகமோ அல்ல, யெகோவாவோடு அவர்களுக்கு இருக்கும் பந்தம்தான் உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். *எசே. 7:19; 1 தீ. 4:8.

பிள்ளைகள் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதற்குப் பெற்றோர்கள் உதவுவதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது (பாரா 11) *

11. (அ) பிள்ளைகளை வளர்க்கிற விஷயத்தில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு 1 தீமோத்தேயு 6:17-19-ல் இருக்கிற ஆலோசனை பெற்றோர்களுக்கு எப்படி உதவும்? (ஆ) குடும்பமாக என்னென்ன குறிக்கோள்களை நீங்கள் வைக்கலாம், என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்? (“ குடும்பமாக என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

11 தங்களுடைய பிள்ளைகள் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவப் பெற்றோர்கள் நிறைய பேர் உதவுகிறார்கள். இதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! குடும்பமாக அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள். கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்கிறார்கள். ஊழியத்தையும் தவறாமல் செய்கிறார்கள். சில குடும்பங்கள், அவ்வளவாக ஊழியம் செய்யப்படாத இடங்களுக்குப் போய் ஊழியம் செய்கிறார்கள். வேறுசிலர், பெத்தேலைச் சுற்றிப்பார்க்கப் போகிறார்கள். அல்லது, கட்டுமான வேலைகளைச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் நிச்சயம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், அதில் சில கஷ்டங்களும் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு யெகோவா ஏராளமான ஆசீர்வாதங்களை அள்ளித்தருவார். (1 தீமோத்தேயு 6:17-19-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட குடும்பங்களில் வளருகிற பிள்ளைகள், வளர்ந்து ஆளானதற்குப் பிறகும் இந்த விஷயங்களையெல்லாம் தொடர்ந்து செய்கிறார்கள். அப்பா அம்மா தங்களை இப்படி வளர்த்ததை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். *நீதி. 10:22.

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

12. வளரவளர இயேசு என்ன செய்ய வேண்டியிருந்தது?

12 இயேசுவின் பரலோகத் தந்தை யெகோவா எப்போதுமே சரியான முடிவுகளைத்தான் எடுக்கிறார். இயேசுவின் வளர்ப்புப் பெற்றோரும் இயேசுவுக்காக சரியான முடிவுகளைத்தான் எடுத்தார்கள். ஆனால், நம் எல்லாருக்கும் இருப்பதுபோல் இயேசுவுக்கும் சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரம் இருந்தது. அதனால், வளரவளர தானாகவே சில முடிவுகளை அவர் எடுக்க வேண்டியிருந்தது. (கலா. 6:5) அவர் நினைத்திருந்தால், தனக்குப் பிரியமான விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. யெகோவாவுக்குப் பிரியமான விஷயங்களைத்தான் எப்போதும் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தார். (யோவா. 8:29) இயேசுவின் உதாரணம் இளைஞர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?

இளைஞர்களே, உங்கள் அப்பா அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் (பாரா 13) *

13. சின்னப் பையனாக இருந்தபோது இயேசு என்ன செய்தார்?

13 சின்னப் பையனாக இருந்தபோது தன்னுடைய பெற்றோருக்கு இயேசு கீழ்ப்படிந்து நடந்தார். ‘இவங்களவிட எனக்கு நிறைய தெரியும்’ என்று நினைத்துக்கொண்டு, அவர்களுடைய சொல்பேச்சை கேட்காமல் இருக்கவில்லை. அவர் “தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்.” (லூக். 2:51) மூத்த மகனாக, அவர் பொறுப்புடன் நடந்துகொண்டார். குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக தன்னுடைய வளர்ப்புத் தந்தையான யோசேப்பிடமிருந்து தச்சு வேலையைக் கற்றுக்கொள்ள அவர் கடினமாக உழைத்தார்.

14. கடவுளுடைய வார்த்தையை இயேசு நன்றாகப் படித்தார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

14 இயேசு எப்படி அற்புதமான விதத்தில் பிறந்தார் என்பதையும், அவரைப் பற்றி கடவுளுடைய தூதர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் யோசேப்பும் மரியாளும் அவரிடம் சொல்லியிருப்பார்கள். (லூக். 2:8-19, 25-38) அவர்கள் சொல்வதைக் கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவராகவே வேதாகமத்தைப் படித்தார். அவர் சின்னப் பையனாக இருந்தபோது, எருசலேமிலிருந்த போதகர்கள் “அவருடைய புத்திக்கூர்மையைப் பார்த்தும் அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் . . .  பிரமித்துப்போனார்கள்.” (லூக். 2:46, 47) பன்னிரண்டு வயதிலேயே, யெகோவாதான் தன்னுடைய தந்தை என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. கடவுளுடைய வார்த்தையை அவர் ஆழமாகப் படித்தார் என்பது இதிலிருந்தெல்லாம் தெரிகிறது.—லூக். 2:42, 43, 49.

15. இயேசு எப்படி யெகோவாவின் விருப்பத்தைச் செய்தார்?

15 யெகோவாவின் விருப்பத்தைப் பற்றித் தெரிந்த பிறகு, அதைச் செய்ய இயேசு தயாராக இருந்தார். (யோவா. 6:38) அப்படிச் செய்யும்போது நிறைய பேர் தன்னை வெறுப்பார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதைப் பற்றி நினைத்துப் பார்ப்பது அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். ஆனாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதென்று அவர் முடிவெடுத்தார். கி.பி. 29-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதுதான் அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது. (எபி. 10:5-7) சித்திரவதைக் கம்பத்தில் வலியில் துடித்துக்கொண்டிருந்தபோதும் யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதில்தான் அவர் குறியாக இருந்தார்.—யோவா. 19:30.

16. இயேசுவிடமிருந்து பிள்ளைகள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

16 அப்பா அம்மா சொல்படி கேட்டு நடங்கள். யோசேப்பையும் மரியாளையும் போலவே உங்களுடைய அப்பா அம்மாவும் தவறு செய்யும் இயல்புடையவர்கள்தான். ஆனால், உங்களைப் பாதுகாக்கிற பொறுப்பையும் உங்களுக்குப் பயிற்சி தருகிற பொறுப்பையும் அவர்களுக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். அவர்களுடைய அறிவுரையைக் கேட்டு நடக்கும்போதும், அவர்களுடைய அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்கும்போதும் நீங்கள் “சீரும் சிறப்புமாக” வாழ்வீர்கள்.—எபே. 6:1-4.

17. யோசுவா 24:15-ன்படி இளைஞர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்?

17 யாருக்கு சேவை செய்வதென்று முடிவெடுங்கள். யெகோவா யார்... அவருடைய விருப்பம் என்ன... அவருடைய விருப்பத்தின்படி எப்படி நடந்துகொள்ளலாம்... இதைப் பற்றியெல்லாம் நீங்கள் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். (ரோ. 12:2) அப்படித் தெரிந்துவைத்திருந்தால், உங்கள் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான முடிவை நீங்கள் எடுப்பீர்கள். அதாவது, யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற முடிவை எடுப்பீர்கள். (யோசுவா 24:15-ஐ வாசியுங்கள்; பிர. 12:1) பைபிளைத் தவறாமல் ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, உங்களுக்கு யெகோவாமீது இருக்கிற அன்பு அதிகமாகிக்கொண்டே போகும். உங்களுடைய விசுவாசமும் பலமாகும்.

18. இளைஞர்கள் என்ன முடிவை எடுக்க வேண்டும், அதனால் என்ன பலன் கிடைக்கும்?

18 யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதற்கு முதலிடம் கொடுங்கள். ‘உங்ககிட்ட இருக்குற திறமைய பயன்படுத்தி வாழ்க்கைல முன்னுக்கு வாங்க. அப்பதான் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும்’ என்று சாத்தானுடைய இந்த உலகம் சொல்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், பணம்பொருளுக்குப் பின்னால் ஓடுபவர்கள் “பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும்” குத்திக்கொள்கிறார்கள். (1 தீ. 6:9, 10) ஆனால், யெகோவா சொல்வதைக் கேட்டு அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கு முதலிடம் கொடுக்கும்போது, வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். ‘ஞானமாகவும் நடந்துகொள்வீர்கள்.’—யோசு. 1:8.

நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?

19. பெற்றோர்கள் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

19 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அவரை முழுமையாக நம்பியிருங்கள். ஞானமான முடிவுகள் எடுப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார். (நீதி. 3:5, 6) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைவிட என்ன செய்கிறீர்கள் என்பதைத்தான் உங்கள் பிள்ளைகள் கவனிப்பார்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அதனால், உங்கள் பிள்ளைகள் யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்கும் விதத்தில் நீங்கள் முடிவுகளை எடுங்கள்.

20. யெகோவாவுக்கு சேவை செய்ய முடிவெடுக்கும் இளைஞர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

20 இளைஞர்களே, வாழ்க்கையில் ஞானமான முடிவுகளை எடுப்பதற்கு உங்களுடைய அப்பா அம்மா உதவுவார்கள். ஆனால், யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. அதனால், இயேசுவைப் போலவே நீங்களும் உங்கள் அன்பான அப்பா யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்று முடிவெடுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் சலிப்புத்தட்டாது. ரொம்பவே திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். (1 தீ. 4:16) இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் நீங்கள் என்றென்றும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்!

பாட்டு 41 வாலிபத்தில் யெகோவாவைச் சேவிப்பீர்

^ பாரா. 5 பிள்ளைகள் வளர்ந்து சந்தோஷமாக யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்று கிறிஸ்தவப் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். பிள்ளைகள் அப்படிச் சேவை செய்ய வேண்டும் என்றால் பெற்றோர்கள் எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்? தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான வெற்றி அடைவதற்கு பிள்ளைகள் தாங்களாகவே எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்? இவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 11 அக்டோபர் 2011 விழித்தெழு! பக். 20-ல் வந்த, “இந்த மாதிரி ஒரு அப்பா-அம்மா கிடைச்சது என் பாக்கியம்“ என்ற பெட்டியையும், மார்ச் 8, 1999 விழித்தெழு! பக். 25-ல் இருக்கிற, “உள்ளம் திறந்து பெற்றோருக்கு கடிதம்” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

^ பாரா. 66 படவிளக்கம்: இயேசு சின்னப் பையனாக இருந்தபோது யெகோவாவை நேசிக்க மரியாள் சொல்லிக்கொடுத்தார். அதேபோல், இன்றிருக்கிற அம்மாக்கள், யெகோவாவை நேசிக்கத் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள்.

^ பாரா. 68 படவிளக்கம்: குடும்பமாக ஜெபக்கூடத்துக்குப் போவதை யோசேப்பு ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். அதேபோல், இன்றிருக்கிற அப்பாக்கள், குடும்பமாக சபைக் கூட்டத்துக்குப் போவதை ரொம்ப முக்கியமானதாக நினைக்கிறார்கள்.

^ பாரா. 70 படவிளக்கம்: தன்னுடைய வளர்ப்புத் தந்தையிடமிருந்து இயேசு கைத்தொழிலைக் கற்றுக்கொண்டார். அதேபோல், இன்றிருக்கிற இளைஞர்களும் தங்களுடைய அப்பாவிடமிருந்து சில திறமைகளைக் கற்றுக்கொள்ள முடியும்.