Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகோதரர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்டும் மற்ற சகோதரர்களும் ஐரோப்பாவுக்குப் போனபோது

1920​—⁠நூறு வருஷங்களுக்கு முன்பு

1920​—⁠நூறு வருஷங்களுக்கு முன்பு

1920-ஆம் வருஷத்தின் ஆரம்பம். தங்களுக்கு முன்னால் இருந்த வேலைகளைச் செய்ய யெகோவாவின் மக்கள் புதுத்தெம்பு பெற்றார்கள். அந்த வருஷத்தின் வருடாந்தர வசனமாக இந்த வசனத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்: “கர்த்தர் என் பெலனும், கீதமுமானவர்.”—சங். 118:14, தமிழ் O.V. (BSI) பைபிள்.

ஆர்வத்தோடு ஊழியம் செய்த அந்தச் சகோதர சகோதரிகளை யெகோவா பலப்படுத்தினார். அந்த வருஷத்தில் பயனியர்களுடைய [அப்போது, கால்பார்ட்டர்கள்] எண்ணிக்கை 225-லிருந்து 350-ஆக உயர்ந்தது. அதோடு, முதல் தடவையாக 8,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் [அப்போது, க்ளாஸ் வர்க்கர்ஸ்] தங்களுடைய ஊழியத்தைத் தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை செய்தார்கள். அவர்களுடைய முயற்சிகளை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார்.

ஆர்வத்துடிப்போடு செயல்படுகிறார்கள்

“இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!“ என்ற தலைப்பில் 1920, மார்ச் 21-ஆம் தேதி சகோதரர் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்ட் பேச்சு கொடுத்தார். அந்தச் சமயத்தில் அவர்தான் பைபிள் மாணாக்கர்களை முன்நின்று வழிநடத்திக்கொண்டு இருந்தார். ஆர்வமுள்ளவர்களை அந்தப் பேச்சுக்கு அழைப்பதற்குத் தங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் பைபிள் மாணாக்கர்கள் செய்தார்கள். 3,20,000 அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சிக்காக நியு யார்க் நகரத்திலிருந்த ஒரு பெரிய மன்றத்தை வாடகைக்கு எடுத்தார்கள்.

“இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!“ என்ற பேச்சைப் பற்றி செய்தித்தாளில் வந்த விளம்பரம்

பைபிள் மாணாக்கர்கள் எதிர்பார்த்ததைவிட கூட்டம் குவிந்தது. அந்த மன்றத்துக்குள் 5,000-க்கும் அதிகமானவர்கள் வந்தார்கள். இருக்கைகள் இல்லாததால் மீதி 7,000-க்கும் அதிகமான பேர் திரும்பிப் போய்விட்டார்கள். “சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் நடத்திய கூட்டங்களிலேயே இதுதான் மிகப் பெரிய கூட்டம், இது மக்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்தது” என்று காவற்கோபுரம் சொன்னது.

“இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!” என்ற செய்தியைச் சொல்வதில் பைபிள் மாணாக்கர்கள் பேர்போனவர்களாக இருந்தார்கள். அந்தச் சமயத்தில், பிரசங்க வேலை இன்னும் பெரிய அளவில் செய்யப்பட வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியாமல் இருந்தாலும் அவர்கள் ஆர்வமாகப் பிரசங்கித்தார்கள். 1902-ல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்த ஐடா ஓம்ஸ்டெட் என்ற சகோதரி இப்படிச் சொன்னார்: “எல்லா மனுஷங்களுக்கும் அற்புதமான ஆசீர்வாதங்கள் காத்திருக்குதுனு எங்களுக்கு நல்லா தெரிஞ்சிருந்துச்சு. அதனால, பார்க்கறவங்ககிட்ட எல்லாம் நல்ல செய்திய சொன்னோம்.”

சகோதரர்களே பிரசுரங்களை அச்சடித்தார்கள்

நியு யார்க், புருக்லினில் இருந்த 35 மிர்டில் அவன்யுவில் ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் பெத்தேலுக்குப் பக்கத்திலேயே இருந்தது. சகோதரர்களுக்குத் தொடர்ந்து ஆன்மீக உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெத்தேலிலிருந்த சகோதரர்கள் ஒரு அச்சடிக்கும் இயந்திரத்தை வாங்கினார்கள். பிறகு, அதில் பிரசுரங்களை அச்சடிக்க ஆரம்பித்தார்கள்.

ஜனவரி 1920-ல் லீயோ ப்பெல்லும் வால்டர் கெஸ்லரும் பெத்தேலுக்கு வந்தார்கள். அவர்கள் வந்த முதல் நாளில் என்ன நடந்ததென்று வால்டர் சொன்னார்: “நாங்க போய் சேர்ந்ததும் அச்சக கண்காணி எங்கள பார்த்து, ‘மத்தியான சாப்பாட்டுக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கு’ அப்படினு சொன்னாரு. கட்டிடத்தோட கீழ்த்தளத்துல, அட்டைப் பெட்டிகள்ல புத்தகங்கள் இருந்துச்சு. அதையெல்லாம் கொண்டுவர சொன்னாரு.”

அடுத்த நாள் என்ன நடந்தது என்பதைப் பற்றி லீயோ இப்படிச் சொன்னார்: “அந்தக் கட்டிடத்தோட தரைத்தளத்துல இருந்த சுவர்கள கழுவுறதுதான் எங்களோட வேலை. சுவர்கள் ரொம்ப அழுக்கா இருந்துச்சு. அந்த மாதிரியான வேலைய நான் செஞ்சதே இல்ல. ஆனா அது கடவுளோட வேலை, அது எனக்கு கிடைச்ச ஒரு பாக்கியம்.”

காவற்கோபுரத்தை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம்

சில வாரங்களிலேயே, பெத்தேலில் இருந்த சகோதரர்கள் காவற்கோபுரத்தை சுறுசுறுப்பாக அச்சடிக்க ஆரம்பித்தார்கள். முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த அச்சு இயந்திரத்தில் பிப்ரவரி 1, 1920 காவற்கோபுரம் அச்சடிக்கப்பட்டது. மொத்தம் 60,000 பிரதிகளை அச்சடித்தார்கள். அதேசமயத்தில், கீழ்த்தளத்தில் ஒரு பெரிய அச்சு இயந்திரத்தை அமைத்தார்கள். ஏப்ரல் 14, 1920 இதழிலிருந்து த கோல்டன் ஏஜ் பத்திரிகையையும் அச்சடிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சகோதரர்களின் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

“அது கடவுளோட வேலை, அது எனக்கு கிடைச்ச ஒரு பாக்கியம்”

“நாம் ஒன்றுசேர்ந்து சமாதானமாக வாழ்வோம்”

யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள் புத்துயிர் பெற்று மறுபடியும் ஒற்றுமையாக அவருக்கு சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால், 1917-லிருந்து 1919 வரை இருந்த கடினமான காலப்பகுதியில் பைபிள் மாணாக்கர்கள் சிலர் அமைப்பைவிட்டு வெளியே போய்விட்டார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக என்ன முயற்சி எடுக்கப்பட்டது?

ஏப்ரல் 1, 1920 காவற்கோபுரத்தில், “நாம் ஒன்றுசேர்ந்து சமாதானமாக வாழ்வோம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதில் அன்பான இந்த வார்த்தைகள் இருந்தன: “கடவுளுடைய சக்தியைப் பெற்றிருக்கிற எல்லாரும் . . . நடந்ததை மறந்துவிட்டு, . . . ஒரே உடலாய் ஒன்றுசேர்ந்து சேவை செய்யத் தயாராக இருப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

இந்த அன்பான வார்த்தைகள், நிறைய பேருடைய மனதைத் தூண்டின. ஒரு தம்பதி இப்படி எழுதினார்கள்: “எல்லாரும் பிரசங்க வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு வருஷத்துக்கும் மேல் சும்மா இருந்துவிட்டோம். அது தவறென்று தெரிகிறது. . . . இனிமேல் நாங்கள் இதுபோல் செய்யவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” புத்துயிர் பெற்ற இதுபோன்ற சகோதர சகோதரிகளுக்கு முன்னால் ஏராளமான வேலைகள் இருந்தன.

நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம் வினியோகிக்கப்படுகிறது

நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் 1918-ல் தடை செய்யப்பட்டபோது, ஏராளமான பிரதிகளை பைபிள் மாணாக்கர்கள் சேர்த்து வைத்திருந்தார்கள். பிறகு, அதைப் பத்திரிகை வடிவில் அச்சிட்டு ஜூன் 21, 1920-லிருந்து மும்முரமாக வினியோகிக்க ஆரம்பித்தார்கள்.

பயனியர்கள் மட்டுமல்ல, பிரஸ்தாபிகள் எல்லாரும் இந்த வினியோகிப்புக்காக அழைக்கப்பட்டார்கள். “‘ஒன்று செய்வேன், நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகத்தை வினியோகிப்பேன்’ என்பதுதான் ஒவ்வொருவரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்” என்று ஜூன் 1920-ல் வந்த புல்லட்டின் சொன்னது. (இப்போது, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகம்.) இந்த வினியோகிப்புக்காக சகோதர சகோதரிகள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்டதாகவும், அவர்களில் நிறைய பேருக்கு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது அதுதான் முதல் தடவை என்றும் எட்மண்ட் ஹூப்பர் சொன்னார். “நாங்க எதிர்பார்த்ததவிட செய்றதுக்கு நிறைய வேலைகள் இருக்குதுங்குறத நாங்க புரிஞ்சுக்க ஆரம்பிச்சோம்” என்றும் அவர் சொன்னார்.

ஐரோப்பாவில் மறுபடியும் வேலை ஒழுங்கமைக்கப்படுகிறது

முதல் உலகப் போரின் சமயத்தில், மற்ற நாடுகளிலிருந்த பைபிள் மாணாக்கர்களைத் தொடர்புகொள்வது கஷ்டமாக இருந்தது. அதனால், அந்த நாடுகளிலிருந்த சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தவும், ஊழிய வேலைகளை ஒழுங்கமைக்கவும் சகோதரர் ரதர்ஃபோர்ட் விரும்பினார். ஆகஸ்ட் 12, 1920-ல், அவரும் நான்கு சகோதரர்களும் இங்கிலாந்துக்கும் மற்ற நாடுகளுக்கும் தங்களுடைய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்கள்.

சகோதரர் ரதர்ஃபோர்ட் எகிப்தில்

ரதர்ஃபோர்ட் இங்கிலாந்துக்குப் போனபோது, அங்கே மூன்று மாநாடுகளும் 12 பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. இவற்றில் கிட்டத்தட்ட 50,000 பேர் கலந்துகொண்டார்கள். ரதர்ஃபோர்டின் இந்தச் சந்திப்பைப் பற்றி காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நண்பர்களுக்குப் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைத்தது. இன்னும் ஒற்றுமையாகவும் அன்பாகவும் அவர்கள் சேவை செய்தார்கள். வாடிப்போன பலருடைய இதயங்கள் மலர்ந்தன.” பாரிஸுக்குப் போனபோது, “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை!“ என்ற பேச்சை சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்தார். பேச்சை ஆரம்பித்தபோதே மன்றத்தில் கூட்டம் நிரம்பிவழிந்தது. இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக 300 பேர் சொன்னார்கள்.

லண்டனிலிருந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் கொடுக்கவிருந்த பேச்சைப் பற்றிய விளம்பர போஸ்டர்

அடுத்தடுத்த வாரங்களில், சகோதரர் ரதர்ஃபோர்டும் அவரோடு போயிருந்த மற்ற சகோதரர்களும் ஏதன்ஸ், கெய்ரோ, ஜெருசலேம் ஆகிய இடங்களுக்குப் போனார்கள். இந்த நகரங்களில் ஆர்வம் காட்டியவர்களுக்குத் தொடர்ந்து உதவ, ஜெருசலேமுக்குப் பக்கத்திலிருந்த ராமாலாவில் சகோதரர் ரதர்ஃபோர்ட் ஒரு கிளை அலுவலகத்தை ஏற்படுத்தினார். பிறகு, அவர் மறுபடியும் ஐரோப்பாவுக்குப் போய் மத்திய ஐரோப்பிய கிளை அலுவலகத்தை ஏற்படுத்தினார். அங்கேயே பிரசுரங்களை அச்சடிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

அநீதி வெளிச்சத்துக்கு வருகிறது

போலீசாரால் எடுக்கப்பட்ட எமா மார்ட்டினுடைய போட்டோ

செப்டம்பர் 1920-ல், த கோல்டன் ஏஜ் பத்திரிகை எண் 27 சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. 1918-ல் பைபிள் மாணாக்கர்களுக்கு நடந்த கொடுமைகளை இது வெளிச்சம்போட்டுக் காட்டியது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பெரிய அச்சு இயந்திரம், இந்தப் பத்திரிகையின் 40 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளை அச்சடிப்பதற்காக ராப்பகலாக ஓடிக்கொண்டிருந்தது.

சகோதரி எமா மார்ட்டின்மீது போடப்பட்ட வித்தியாசமான வழக்கைப் பற்றி இந்தப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது. கலிபோர்னியாவில் இருக்கிற சான் பெர்னார்டினோவில் பயனியராக அவர் சேவை செய்துவந்தார். மார்ச் 17, 1918-ல், அவரும் சகோதரர்கள் ஈ. ஹாம், ஈ. ஜே. சோனென்பெர்க், ஈ. ஏ. ஸ்டீவென்ஸ் ஆகியோரும் பைபிள் மாணாக்கர்கள் நடத்திய ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு இன்னொருவரும் போயிருந்தார். ஆனால், பைபிளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்காக அவர் போகவில்லை. “அரசாங்க வக்கீல் அலுவலகம் கேட்டுக்கிட்டதுனால . . . நான் அந்த கூட்டத்துக்கு போனேன். ஏதாவது ஆதாரம் கிடைக்குமானு பார்க்குறதுக்கு என்னை அனுப்பிச்சாங்க” என்று பிற்பாடு அவர் ஒத்துக்கொண்டார். அவர் எதிர்பார்த்த ஆதாரம், அதாவது நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம், அவருக்குக் கிடைத்தது. சில நாட்களுக்குப் பிறகு, சகோதரி மார்ட்டினும் மூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டார்கள். தடை செய்யப்பட்ட அந்தப் புத்தகத்தை அவர்கள் வினியோகித்ததாகவும், அதன் மூலம் உளவு சட்டத்தை மீறியதாகவும் சொல்லி அவர்கள்மீது குற்றம் சுமத்தினார்கள்.

அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் நிறைய தடவை மேல்முறையீடு செய்தார்கள். அதற்குமேல் அப்படிச் செய்வதற்கு சட்டத்தில் இடமில்லாததால் மே 17, 1920-ல் அவர்கள் சிறைக்குப் போனார்கள். ஆனால், சீக்கிரத்தில் காட்சி மாறவிருந்தது.

ஜூன் 20, 1920-ல், சான் பிரான்ஸிஸ்கோவில் ஒரு மாநாடு நடந்தது. சகோதரி மார்ட்டினுக்கும் மற்ற மூன்று சகோதரர்களுக்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி அந்த மாநாட்டில் சகோதரர் ரதர்ஃபோர்ட் சொன்னார். அதைக் கேட்டபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லாரும் சேர்ந்து அமெரிக்க அதிபருக்கு ஒரு டெலிகிராம் அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்தார்கள். அதில் இப்படி எழுதி அனுப்பினார்கள்: “உளவு சட்டத்தை மீறியதாகச் சொல்லி . . . திருமதி மார்ட்டினுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை . . . அநியாயமானது. கூட்டாட்சி அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி . . . திருமதி மார்ட்டினை . . . சிக்க வைத்திருக்கிறார்கள். அவரை சிறையில் தள்ள வேண்டும் என்பதற்காக அவர்மீது வழக்கை ஜோடித்திருக்கிறார்கள். இந்த அநியாயமான செயலை . . . நாங்கள் கண்டனம் செய்கிறோம்.”

சகோதரி மார்ட்டின், சகோதரர்கள் ஹாம், சோனென்பெர்க், மற்றும் ஸ்டீவென்ஸுடைய தண்டனையை அடுத்த நாளே அதிபர் உட்ரோ வில்சன் ரத்து செய்தார். அநியாயமாக அவர்கள் அனுபவித்த சிறைத் தண்டனையும் முடிவுக்கு வந்தது.

1920-ல் தலைமை அலுவலகத்தில் ஏராளமான வேலைகள் நடந்தன. அந்த வருஷம் முடிவடையப்போகிற சமயத்தில், அந்த வருஷம் முழுவதும் நடந்ததை நினைத்து பைபிள் மாணாக்கர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். (மத். 24:14) அடுத்து வந்த வருஷத்தில், அதாவது 1921-ல், பிரசங்க வேலை இன்னும் சூடுபிடித்தது.