Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 42

உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதில் உறுதியாக இருங்கள்

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லது எது என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; அதையே உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.”—1 தெ. 5:21.

பாட்டு 142 நம்பிக்கை ஒரு நங்கூரம்

இந்தக் கட்டுரையில்... *

1. இன்றைக்கு நிறைய மக்கள் ஏன் குழம்பிப்போகிறார்கள்?

 கிறிஸ்தவ மதத்தில் இன்றைக்கு ஏகப்பட்ட பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கிற எல்லாருமே, ‘நாங்க கடவுளுக்கு பிடிச்ச மாதிரிதான் அவர வணங்கறோம்’ என்று சொல்கிறார்கள். அதனால், மக்கள் குழம்பிப்போகிறார்கள். ‘எல்லா மதங்களயும் கடவுள் ஏத்துக்கிறாரா, இல்ல ஒரே மதத்ததான் ஏத்துக்கிறாரா?’ என்று யோசிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு யெகோவாவின் சாட்சியாக நாம் சொல்லிக்கொடுப்பதுதான் சத்தியம் என்பதையும், நாம் அவரை வணங்குகிற விதம்தான் சரியானது என்பதையும் உறுதியாக நம்புகிறோமா? அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையோடு நம்மால் இருக்க முடியுமா? இப்போது சில ஆதாரங்களைப் பார்க்கலாம்.

2. தான் நம்புவது சத்தியம்தான் என்பதில் பவுல் ஏன் உறுதியாக இருந்தார்? (1 தெசலோனிக்கேயர் 1:5)

2 தான் நம்புவது சத்தியம்தான் என்பதில் அப்போஸ்தலன் பவுல் உறுதியாக இருந்தார். (1 தெசலோனிக்கேயர் 1:5-ஐ வாசியுங்கள்.) ஆனால், ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அவர் அந்த முடிவுக்கு வரவில்லை. கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படித்தார். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்பதை அவர் நம்பினார். (2 தீ. 3:16) இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதற்கு உறுதியான ஆதாரங்களை வேதவசனங்களிலிருந்து அவர் தெரிந்துகொண்டார். ஆனால், அந்த ஆதாரங்களைத்தான் யூத மதத் தலைவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள். கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதாக அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். ஆனால், அவர்களுடைய செயல்களால் கடவுளை நிராகரித்தார்கள். (தீத். 1:16) அவர்களைப் போல் வேதவசனங்களில் தனக்குப் பிடித்த விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, பிடிக்காத விஷயங்களை பவுல் அப்படியே விட்டுவிடவில்லை. “கடவுளுடைய நோக்கங்களில் . . . எல்லாவற்றையும்” மற்றவர்களுக்குச் சொன்னார், அவரும் அதன்படி செய்தார்.—அப். 20:27.

3. நாம் நம்புவது சத்தியம்தான் என்பதில் உறுதியாக இருப்பதற்குக் கண்டிப்பாக எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டுமா? (“ யெகோவாவின் செயல்களும் யோசனைகளும்‘கணக்கில் அடங்காதவை’” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

3 உண்மை மதம் என்றால் எல்லா கேள்விகளுக்கும் அதில் பதில் இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை பைபிளில் அதற்குப் பதில் இல்லை என்றாலும், உண்மை மதம் தங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது எதார்த்தமா? அப்போஸ்தலன் பவுலின் விஷயத்தைப் பார்க்கலாம். ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும்படி’ அவர் மற்றவர்களிடம் சொன்னார். அதே சமயத்தில், தனக்குப் புரியாத நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் அவர் ஒத்துக்கொண்டார். (1 தெ. 5:21) “நமக்கு அரைகுறையான அறிவுதான் இருக்கிறது” என்றும் “நாம் உலோகக் கண்ணாடியில் மங்கலாகப் பார்க்கிறோம்” என்றும் அவர் சொன்னார். (1 கொ. 13:9, 12) எல்லா விஷயங்களையும் பவுலால் புரிந்துகொள்ள முடியவில்லை, நம்மாலும் முடியாது. ஆனால், யெகோவாவைப் பற்றிய அடிப்படை விஷயங்களை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் நம்புவது சத்தியம்தான் என்பதில் உறுதியாக இருப்பதற்குத் தேவையான தகவல்களை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

4. நாம் நம்புவது சத்தியம்தான் என்பதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம், உண்மைக் கிறிஸ்தவர்கள் செய்கிற எந்த விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்?

4 கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று இயேசு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் சொல்லிக் கொடுத்ததையும் இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் எப்படிக் கடவுளை வணங்குகிறோம் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் நம்புவது சத்தியம்தான் என்பதில் உறுதியாக இருக்கலாம். அப்படியென்றால், உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் சிலை வழிபாடு செய்வதில்லை என்றும் ஏன் யெகோவாவின் பெயருக்கு மதிப்பு சேர்க்கிறார்கள் என்றும், சத்தியத்தை நேசிக்கிறார்கள் என்றும் ஒருவர்மேல் ஒருவர் ஆழமான அன்பைக் காட்டுகிறார்கள் என்றும் இப்போது பார்க்கலாம்.

நாம் சிலை வழிபாடு செய்வதில்லை

5. கடவுளை சரியான விதத்தில் வணங்குவதைப் பற்றி இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம், நாம் எப்படி அதன்படி செய்யலாம்?

5 யெகோவாமேல் இயேசு அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால், அவர் பரலோகத்தில் இருந்தபோதும் சரி, பூமியில் இருந்தபோதும் சரி, யெகோவாவை மட்டும்தான் வணங்கினார். (லூக். 4:8) அவருடைய சீஷர்களையும் அதைத்தான் செய்யச் சொன்னார். அவரும் அவருக்கு உண்மையாக இருந்த சீஷர்களும் சிலைகளை வணங்கவே இல்லை. யெகோவா பரலோகத்துக்குரிய உடலில் இருப்பதால் மனிதர்கள் செய்கிற எந்தச் சிலையும் அவருடைய மகிமையைப் பிரதிபலிக்கவே முடியாது! (ஏசா. 46:5) அப்படியென்றால், சிலர் புனிதர்களுடைய சிலைகளை செய்து அதை வணங்குகிறார்களே, அது சரியா? பத்துக் கட்டளைகளில் இரண்டாவது கட்டளை என்ன சொல்கிறது என்று பாருங்கள். “மேலே வானத்திலோ கீழே பூமியிலோ . . . இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது. அவற்றுக்கு முன்னால் தலைவணங்க . . . கூடாது.” (யாத். 20:4, 5) இது எவ்வளவு தெளிவான ஒரு கட்டளை. கடவுளுக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், நிச்சயம் இதன்படிதான் செய்வார்கள்.

6. கடவுளை வழிபடுகிற விஷயத்தில் நாம் யாரைப் போல் நடந்துகொள்கிறோம்?

6 ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் கடவுளை மட்டும்தான் வணங்கினார்கள் என சரித்திர வல்லுநர்கள் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, வழிபாட்டில் உருவங்களைப் பயன்படுத்துகிற அந்த எண்ணத்தையே ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் “வெறுத்தார்கள்” என்று ஹிஸ்டரி ஆஃப் த க்றிஸ்டியன் சர்ச் என்ற புத்தகம் சொல்கிறது. ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் போல்தான், இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகளும் கடவுளை வழிபடுகிறார்கள். புனிதர்களுடைய உருவங்களுக்கு முன்போ தேவதூதர்களுடைய உருவங்களுக்கு முன்போ நாம் ஜெபம் செய்வதில்லை. இயேசுவிடம்கூட நாம் ஜெபம் செய்வதில்லை. நாம் கொடி வணக்கம் செய்வதுமில்லை. ஒரு நாட்டை வழிபடுகிற மாதிரியான எந்தச் செயல்களையும் செய்வதில்லை. என்ன நடந்தாலும் சரி, “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோம்.—மத். 4:10.

7. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜனங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

7 இன்றைக்கு நிறைய பேர் பிரபலமான சர்ச் போதகர்களுடைய பிரசங்கத்தைக் கேட்பதற்கு ஆசைப்படுகிறார்கள். சொல்லப்போனால், அவர்களை கடவுள் மாதிரி பார்க்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களை உயர்த்தி வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய சர்ச்சுகளில் போய் குவிகிறார்கள், அவர்களுடைய புத்தகங்களை வாங்குகிறார்கள். அவர்களை ஆதரிப்பதற்காக ஏராளமான காணிக்கைகளைக் கொண்டுபோய் கொட்டுகிறார்கள். சிலர், அவர்கள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவேளை, இயேசுவே தங்களுக்கு முன்பு வந்து நின்றால்கூட அவ்வளவு சந்தோஷப்படுவார்களா என்று தெரியாது. அந்தளவுக்கு அவர்களைத் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அப்படிக் கிடையாது. எந்த மனிதனையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. முன்நின்று வழிநடத்துபவர்கள்மேல் மதிப்பு மரியாதை வைத்திருந்தாலும் அவர்களை சகோதரர்களாகத்தான் பார்க்கிறார்கள். ஏனென்றால், “நீங்கள் எல்லாரும் சகோதரர்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 23:8-10) மதத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த மனிதனையுமே நாம் அளவுக்கு அதிகமாக உயர்த்துவது இல்லை. அவர்கள் செய்கிற விஷயங்களை நாம் ஆதரிப்பதும் இல்லை. நாம் நடுநிலையோடு இருக்கிறோம், இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்கிறோம். இப்படி, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜனங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறார்கள்.—யோவா. 18:36.

யெகோவாவின் பெயரை நாம் மதிக்கிறோம்

யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை உண்மைக் கிறிஸ்தவர்கள் பாக்கியமாக நினைக்கிறார்கள் (பாராக்கள் 8-10) *

8. தன்னுடைய பெயரை நாம் மகிமைப்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் யெகோவா ஆசைப்படுகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

8 “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று ஒருதடவை இயேசு ஜெபம் செய்தார். அதைக் கேட்டதும், தன்னுடைய பெயரை மகிமைப்படுத்தப்போவதாக பரலோகத்திலிருந்து யெகோவாவே சொன்னார். (யோவா. 12:28) இயேசு ஊழியம் செய்த காலம் முழுவதும் தன்னுடைய தகப்பனின் பெயரை மகிமைப்படுத்தினார். (யோவா. 17:26) அப்படியென்றால், உண்மைக் கிறிஸ்தவர்களும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களிடம் அதைச் சொல்வதையும் பெரிய பாக்கியமாக நினைப்பார்கள் தானே?

9. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளுடைய பெயரை மதித்தார்கள்?

9 முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபை ஏற்படுத்தப்பட்ட கொஞ்சக் காலத்திலேயே யெகோவா, ‘மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்தார்.’ (அப். 15:14) அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களிடம் அதைச் சொல்வதையும் பெரிய பாக்கியமாக நினைத்தார்கள். அவர்கள் செய்த ஊழியத்திலும் அவர்கள் எழுதிய பைபிள் புத்தகங்களிலும் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்கள். * இப்படி, தாங்கள்தான் கடவுளுடைய பெயருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்பதை நிரூபித்தார்கள்.—அப். 2:14, 21.

10. யெகோவாவின் சாட்சிகள்தான் கடவுளுடைய பெயருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

10 இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகள்தான் கடவுளுடைய பெயருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களா? சில ஆதாரங்களைப் பார்க்கலாம். மதத் தலைவர்கள் நிறைய பேர், கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கு தங்களால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறார்கள். அவர்கள் மொழிபெயர்த்த பைபிள்களில் கடவுளுடைய பெயரை எடுத்துவிட்டதோடு, சர்ச்சுகளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்கள். * ஆனால், யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்திருக்கிறார்கள்? கடவுளுடைய பெயருக்கு கொடுக்க வேண்டிய மதிப்புமரியாதையை அவர்கள் மட்டும்தான் கொடுக்கிறார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா? வேறெந்த மதப்பிரிவையும்விட, அவர்கள்தான் கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்கு அதிகமாகத் தெரியப்படுத்துகிறார்கள். இப்படி, யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்கிறார்கள். (ஏசா. 43:10-12) அவர்கள் வெளியிட்டிருக்கிற பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில், கடவுளுடைய பெயர் எங்கெல்லாம் இருந்திருக்க வேண்டுமோ அங்கெல்லாம் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை 24 கோடிக்கும் அதிகமான பிரதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு, கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்கு சொல்வதற்காக 1,000-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரங்களைத் தயாரிக்கிறார்கள்.

நாம் சத்தியத்தை நேசிக்கிறோம்

11. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சத்தியத்தை நேசித்தார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?

11 இயேசு சத்தியத்தை நேசித்தார். அதாவது, கடவுளைப் பற்றிய உண்மைகளையும் அவருடைய நோக்கங்களையும் நேசித்தார். அந்த சத்தியத்தின்படி அவர் வாழ்ந்தார், மற்றவர்களுக்கும் அதை சொல்லிக்கொடுத்தார். (யோவா. 18:37) இயேசுவை உண்மையாகப் பின்பற்றிய சீஷர்களும் சத்தியத்தை ரொம்ப நேசித்தார்கள். (யோவா. 4:23, 24) சொல்லப்போனால், கிறிஸ்தவ மதத்தைப் பற்றிச் சொன்னபோது அதை “சத்திய வழி” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (2 பே. 2:2) அவர்கள் சத்தியத்தை அந்தளவுக்கு நேசித்ததால், மதத் தத்துவங்கள்... மனிதனுடைய பாரம்பரியங்கள்... சத்தியத்துக்கு எதிரான சொந்த கருத்துகள்... இவை எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளினார்கள். (கொலோ. 2:8) இன்றைக்கும் உண்மைக் கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்வதைத்தான் நம்புகிறார்கள், பைபிள் சொல்கிறபடி வாழ்கிறார்கள். இப்படி, ‘தொடர்ந்து சத்தியத்தில் நடப்பதற்கு’ அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள்.—3 யோ. 3, 4.

12. பைபிளைப் புரிந்து வைத்திருப்பதில் மாற்றங்கள் தேவை என்று நம்மை முன்னின்று வழிநடத்துபவர்கள் நினைக்கும்போது என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள்?

12 பைபிளில் இருக்கிற எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்று கடவுளுடைய மக்கள் சொல்வதில்லை. சில சமயங்களில், பைபிள் போதனைகளைப் புரிந்துகொள்வதிலும் அமைப்பை வழிநடத்தும் விதத்திலும் சில தவறுகள் செய்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், காலங்கள் போகப் போகத்தான் திருத்தமான அறிவு பெருகும் என்று பைபிள் சொல்கிறது. (கொலோ. 1:9, 10) யெகோவாவும் சத்தியத்தைப் படிப்படியாகத்தான் வெளிப்படுத்துகிறார். அதனால், அந்தச் சத்திய ஒளி பிரகாசமாக ஆகும்வரை நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். (நீதி. 4:18) சத்தியத்தைப் புரிந்து வைத்திருப்பதில் ஏதாவது மாற்றங்கள் அவசியம் என்று நினைக்கும்போது அமைப்பை முன்னின்று வழிநடத்துபவர்கள் அதைச் செய்வதற்குத் தயங்குவதில்லை. மற்ற கிறிஸ்தவ பிரிவுகளில் இருக்கிறவர்களும் மாற்றங்கள் செய்கிறார்கள். ஆனால், சர்ச்சுக்கு வருபவர்களைப் பிரியப்படுத்துவதற்காகவும் ஊரோடு ஒத்துப்போக வேண்டும் என்பதற்காகவும்தான் அதைச் செய்கிறார்கள். கடவுளுடைய அமைப்பு செய்கிற மாற்றங்கள் அப்படிப்பட்டது கிடையாது. யெகோவாவிடம் மக்கள் நெருங்கி வர வேண்டும் என்பதற்காகவும், கடவுளை எப்படி வழிபட வேண்டும் என்று இயேசு சொன்னாரோ அப்படி வழிபடுவதற்காகவும்தான் மாற்றங்கள் செய்கிறார்கள். (யாக். 4:4) இன்றைக்கு உலகத்தில் பிரபலமாக இருக்கும் கருத்துகளுக்கு ஏற்றபடி அவர்கள் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை. பைபிளை நன்றாகப் புரிந்துகொண்டதால்தான் மாற்றங்கள் செய்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் உண்மையிலேயே சத்தியத்தை நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது.—1 தெ. 2:3, 4.

நாம் ஒருவர்மேல் ஒருவர் ஆழ்ந்த அன்பு காட்டுகிறோம்

13. உண்மைக் கிறிஸ்தவர்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான குணம் என்ன, அதை யெகோவாவின் சாட்சிகள் எப்படிக் காட்டுகிறார்கள்?

13 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் நல்ல குணங்கள் நிறைய இருந்தன. அதில் முக்கியமானது அன்பு. “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:34, 35) இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் அப்படிப்பட்ட அன்பைத்தான் காட்டுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வந்திருந்தாலும், அன்பால் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். வேறெந்த அமைப்பில் இருப்பவர்களும் இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதில்லை. நம்முடைய கூட்டங்களிலும், மாநாடுகளிலும் உண்மையான அன்பைப் பார்க்க முடிகிறது. யெகோவா விரும்பும் விதத்தில்தான் அவரை நாம் வணங்குகிறோம் என்பதற்கு இது ஓர் ஆதாரமாக இருக்கிறது.

14. ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்ட முக்கியமான ஒரு வழியைப் பற்றி கொலோசெயர் 3:12-14 என்ன சொல்கிறது?

14 “ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 4:8) ஒருவரையொருவர் மன்னிக்கும்போதும், ஒருவருடைய குறைகளை இன்னொருவர் பொறுத்துக்கொள்ளும்போதும், அந்த அன்பைக் காட்ட முடியும். அதோடு, சபையில் இருக்கிற எல்லாரிடமும் தாராள குணத்தைக் காட்டவும் உபசரிக்கவும் நாம் வாய்ப்புகளைத் தேடுகிறோம். ஒருவேளை, யாராவது நம்மைப் புண்படுத்திவிட்டால், அவர்களிடமும் இந்தக் குணங்களைக் காட்டுகிறோம். (கொலோசெயர் 3:12-14-ஐ வாசியுங்கள்.) இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதுதான் உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கிறது.

நமக்கு ‘ஒரே விசுவாசம்’ இருக்கிறது

15. வேறென்ன வழிகளில் நாம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே கடவுளை வழிபடுகிறோம்?

15 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் கடவுளை வழிபடுகிறோம் என்பதை இதுவரை பார்த்தோம். அமைப்பு சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளையும் முதல் நூற்றாண்டில் இருந்த அப்போஸ்தலர்களைப் போல் நாம் செய்கிறோம். உதாரணத்துக்கு, பயணக் கண்காணிகள்... மூப்பர்கள்... உதவி ஊழியர்கள்... என்ற ஏற்பாடு அப்போது இருந்தது. இப்போதும் அதே ஏற்பாடு இருக்கிறது. (பிலி. 1:1; தீத். 1:5) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் செக்ஸைப் பற்றியும் கல்யாணத்தைப் பற்றியும் கடவுளுடைய சட்டம் சொல்வதை மதிக்கிறோம். இரத்தத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பைபிள் சொல்கிற விஷயங்களுக்கு மரியாதை தருகிறோம். மனம் திருந்தாதவர்களிடமிருந்து சபையைப் பாதுகாக்கிறோம்.—அப். 15:28, 29; 1 கொ. 5:11-13; 6:9, 10; எபி. 13:4.

16. எபேசியர் 4:4-6-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

16 நிறைய பேர் தன்னுடைய சீஷர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள் என்றும், ஆனால் அவர்கள் உண்மையிலேயே சீஷர்கள் கிடையாது என்றும் இயேசு சொன்னார். (மத். 7:21-23) கடைசி நாட்களில், நிறைய பேர் ‘பக்திமான்களைப் போல் காட்டிக்கொள்வார்கள்’ என்று பைபிள் முன்கூட்டியே சொல்லியிருக்கிறது. (2 தீ. 3:1, 5) ஆனால், கடவுள் ஏற்றுக்கொள்வது ‘ஒரே விசுவாசத்தை’தான் என்றும் அது தெளிவாகச் சொல்கிறது.—எபேசியர் 4:4-6-ஐ வாசியுங்கள்.

17. இயேசுவைப் பின்பற்றி உண்மையான ஒரே விசுவாசத்தைக் காட்டுபவர்கள் யார்?

17 ஒரே உண்மையான விசுவாசத்தை இன்றைக்குக் காட்டுபவர்கள் யார்? அதற்கான ஆதாரங்களை இதுவரை நாம் பார்த்தோம். கடவுளை வழிபடுவதைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதையும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடவுளை எப்படி வழிபட்டார்கள் என்பதையும் பார்த்தோம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, யெகோவாவின் சாட்சிகள்தான் அந்த ஒரே விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒரு யெகோவாவின் சாட்சியாக இருப்பதும் யெகோவாவைப் பற்றிய சத்தியத்தையும், அவருடைய நோக்கங்களையும் பற்றித் தெரிந்திருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்! அதனால், நாம் எல்லாரும் முழு நிச்சயத்துடன் சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொள்ளலாம்.

பாட்டு 3 என் பலமும் நம்பிக்கையும் நீரே!

^ உண்மை வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்? முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அவர் சொன்னதை எப்படிப் பின்பற்றினார்கள்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவின் சாட்சிகளும் அதே மாதிரிதான் செய்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் பார்ப்போம்.

^ ஜனவரி 1, 2011 காவற்கோபுரத்தில் பக்கம் 18-ல் இருக்கிற “ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

^ உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்கள் தங்களுடைய மத ஆராதனைகளிலும் பாடல்களிலும், ஜெபங்களிலும் கடவுளுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என்று 2008-ல் போப் பதினாறாம் பெனடிக்ட் சொன்னார்.

^ பட விளக்கம்: கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தியிருக்கிற புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை 200-க்கும் அதிகமான மொழிகளில் யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதனால், தங்களுடைய சொந்த மொழியில் ஜனங்களால் அதைப் படிக்க முடியும்.