Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்று இஸ்ரவேலர்கள் போர் செய்தார்கள்—நாம் ஏன் செய்வதில்லை?

அன்று இஸ்ரவேலர்கள் போர் செய்தார்கள்—நாம் ஏன் செய்வதில்லை?

“பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் எதிரா சண்ட போட மாட்டேன்னு யாராவது சொன்னீங்க, எல்லாரும் செத்தீங்க!!” இரண்டாவது உலகப் போர் சமயத்தில் ஒரு நாசி அதிகாரி இப்படித்தான் சில யெகோவாவின் சாட்சிகளை மிரட்டினார். அவருடைய மிரட்டலுக்கெல்லாம் நம் சகோதரர்களில் ஒருவர்கூட மசியவில்லை. இத்தனைக்கும் நாசி படைவீரர்கள் பக்கத்திலேயே ஆயுதங்களோடு நின்றுகொண்டிருந்தார்கள். நம் சகோதரர்களுக்கு எப்பேர்ப்பட்ட தைரியம்! போர் செய்வதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளான நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு இது ஒரு அருமையான உதாரணம். மற்றவர்கள் நம்மைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாலும் நாம் எந்தப் போருக்கும் போவதில்லை.

ஆனால், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற எல்லாருமே நம்மைப் போன்று யோசிப்பது கிடையாது. “அவங்கவங்க நாட்ட காப்பாத்த கிறிஸ்தவங்க சண்ட போடலாம். சொல்லப்போனா, சண்ட போடணும்” என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ‘அன்னைக்கு இஸ்ரவேலர்கள் கடவுளோட மக்களா இருந்தாங்க. அவங்களே போர் செஞ்சாங்க! அப்புறம் ஏன் கிறிஸ்தவர்கள் போர் செய்ய கூடாது?!’ என்று அவர்கள் கேட்கலாம். அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அன்று இருந்த இஸ்ரவேலர்களின் சூழ்நிலையே வேறு என்று நீங்கள் விளக்கலாம். அவர்களுக்கும் இன்று இருக்கும் கடவுளுடைய மக்களுக்கும் உள்ள ஐந்து வித்தியாசங்களை இப்போது பார்க்கலாம்.

1. கடவுளுடைய மக்கள் எல்லாருமே ஒரே தேசமாக இருந்தார்கள்

அன்று, யெகோவாவின் மக்களான இஸ்ரவேலர்கள் ஒரே தேசமாக இருந்தார்கள். “மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக இருப்பீர்கள்” என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். (யாத். 19:5) அவர் கொடுத்த ஒரு நிலப் பகுதியில்தான் அவர்கள் எல்லாரும் வாழ்ந்துவந்தார்கள். அதனால், போருக்குப் போகும்படி யெகோவா சொன்னபோது, அவர்கள் மற்ற தேசங்களோடுதான் போர் செய்தார்கள். அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளவில்லை, ஒருவரை ஒருவர் கொலை செய்யவும் இல்லை. a

இன்று, யெகோவாவை வணங்குகிறவர்கள் “எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும்” சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். (வெளி. 7:9) அதனால், அவர்கள் இன்னொரு நாட்டுக்கு எதிராகப் போருக்குப் போனால், அங்கு வாழும் அவர்களுடைய சகோதர சகோதரிகளையே எதிர்த்து சண்டை போட வேண்டியிருக்கும். அவர்களைக் கொலைகூட செய்ய வேண்டியிருக்கும்.

2. யெகோவாதான் இஸ்ரவேலர்களைப் போருக்குப் போகச் சொன்னார்.

அன்று, இஸ்ரவேலர்கள் எப்போது போருக்குப் போக வேண்டும், ஏன் போக வேண்டும் என்றெல்லாம் யெகோவாதான் முடிவு செய்தார். உதாரணத்துக்கு, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் இருந்த கானானியர்களுக்கு எதிராகப் போர் செய்யும்படி யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். ஏனென்றால், கானானியர்கள் பேய் வணக்கத்தில் மூழ்கியிருந்தார்கள், ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்தார்கள், தங்கள் பிள்ளைகளையும் நரபலி கொடுத்தார்கள். இப்படிப்பட்ட மோசமான பழக்கங்கள் இஸ்ரவேலர்களுக்கு ஒட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக யெகோவா கானானியர்களை ஒழித்துக்கட்டச் சொன்னார். (லேவி. 18:24, 25) வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலர்கள் குடியேறிய பிறகு, சிலசமயம் எதிரிகள் அவர்களை அடக்கியொடுக்க முயற்சி செய்தார்கள். அதுபோன்ற சமயங்களில், அந்த எதிரிகளோடு போர் செய்ய யெகோவா அவர்களை அனுமதித்தார். (2 சா. 5:17-25) ஆனால், போருக்குப் போகலாமா வேண்டாமா என்று இஸ்ரவேலர்களே முடிவெடுக்க யெகோவா ஒருநாளும் அனுமதிக்கவில்லை. அவரை மீறி போருக்குப் போனபோதெல்லாம் அவர்கள் பயங்கரமான விளைவுகளைச் சந்தித்தார்கள்.—எண். 14:41-45; 2 நா. 35:20-24.

இன்று, யெகோவா யாரையும் போர் செய்யச் சொல்வதில்லை. எல்லா நாடுகளும் சொந்த லாபத்துக்காகத்தான் போர் செய்கின்றன. இடத்துக்காக, பணத்துக்காக, சொந்த கொள்கையைப் பரப்புவதற்காக, அல்லது அரசியல் காரணங்களுக்காக அவை போர் செய்கின்றன. சிலர், தங்களுடைய கடவுளுக்காகவும் மதத்துக்காகவும் சண்டை போடுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். கேட்டால், ‘எங்க கடவுள எதிர்க்கிறவங்கள நாங்க அழிக்கிறோம், இல்லனா அவங்க எங்க மதத்த அழிச்சிருவாங்க’ என்று சொல்கிறார்கள். ஆனால், யெகோவாவின் மக்கள் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு சண்டை போடுவதில்லை. ஏனென்றால், யெகோவாவே உண்மை மதத்தைப் பாதுகாக்கப்போவதாகவும் தன் எதிரிகளை ஒழித்துக்கட்டப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். அதை அவர் எதிர்காலத்தில் அர்மகெதோன் போரில் செய்வார். (வெளி. 16:14, 16) அப்போது, பூமியில் இருக்கும் அவருடைய மக்கள் போர் செய்ய மாட்டார்கள். பரலோகத்தில் இருக்கும் அவருடைய படைவீரர்கள்தான் சண்டை போடுவார்கள்.—வெளி. 19:11-15.

3. யெகோவாமேல் விசுவாசம் வைத்தவர்களை இஸ்ரவேலர்கள் கொல்லவில்லை

எரிகோவுக்கு எதிராகப் போர் செய்தபோது, யெகோவா ராகாபையும் அவளுடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். இன்று போர் செய்கிறவர்கள் கடவுளுக்கு உண்மையாக இருக்கிறவர்களைக் காப்பாற்றுகிறார்களா?

அன்று, இஸ்ரவேலர்கள் போருக்குப் போனபோது கடவுள்மேல் விசுவாசம் காட்டியவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். யாரை அழிக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தாரோ அவர்களை மட்டும்தான் அழித்தார்கள். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். யெகோவா இஸ்ரவேலர்களிடம் எரிகோவை அழிக்கச் சொன்னார். ஆனால், அங்கு வாழ்ந்த ராகாப் விசுவாசம் காட்டினாள். அதனால், ராகாபையும் அவளுடைய குடும்பத்தையும் இஸ்ரவேலர்கள் அழிக்காமல் விட்டுவிட்டார்கள். (யோசு. 2:9-16; 6:16, 17) கிபியோனியர்கள் யெகோவாமேல் பயபக்தி காட்டியதால், அவர்களுடைய நகரத்தையே இஸ்ரவேலர்கள் அழிக்காமல் விட்டுவிட்டார்கள்.—யோசு. 9:3-9, 17-19.

இன்று, நாடுகள் போர் செய்யும்போது எல்லாரையும் கொல்கிறார்கள். அவர்கள் கடவுள்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்களா இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. சொல்லப்போனால், அப்பாவி ஜனங்களைக்கூடக் கொன்று குவிக்கிறார்கள்.

4. இஸ்ரவேலர்கள் கடவுள் கொடுத்த சட்டங்களின்படி போர் செய்தார்கள்

அன்று, இஸ்ரவேல் படைவீரர்கள் யெகோவா கொடுத்த சட்டங்களின்படி போர் செய்ய வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு, கடவுள் சிலசமயங்களில் அவர்களிடம், “ஒரு நகரத்தைத் தாக்குவதற்காக அதை நெருங்கும்போது, முதலில் உங்களோடு சமாதானம் செய்யச் சொல்லி அங்குள்ள ஜனங்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்” என்று சொல்லியிருந்தார். (உபா. 20:10) இஸ்ரவேல் படைவீரர்கள் தங்களையும் தங்கள் முகாமையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும்கூட யெகோவா சொல்லியிருந்தார். (உபா. 23:9-14) சுற்றியிருந்த தேசங்கள் ஒரு நகரத்தைத் தாக்கப் போனபோது அங்கிருந்த பெண்களை அவர்கள் கற்பழித்தார்கள். ஆனால், இஸ்ரவேலர்கள் அப்படிச் செய்யக் கூடாதென்று யெகோவா சொல்லியிருந்தார். சொல்லப்போனால், அடிமையாகப் பிடித்துவந்த பெண்ணைக் கல்யாணம் செய்வதாக இருந்தால்கூட ஒரு மாதத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும் என்று யெகோவா சொல்லியிருந்தார்.—உபா. 21:10-13.

இன்று, நிறைய நாடுகளின் தலைவர்கள், போர் சம்பந்தப்பட்ட சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். பொது மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த விதிமுறைகளை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அந்த விதிமுறைகளை மீறிவிடுகிறார்கள்.

5. கடவுளே தன்னுடைய தேசத்துக்காகப் போர் செய்தார்

கடவுள் எரிகோவில் இஸ்ரவேலர்களுக்காகச் சண்டை போட்டதுபோல் இன்று எந்தத் தேசத்துக்காவது சண்டை போடுகிறாரா?

அன்று, இஸ்ரவேலர்களுக்காக யெகோவா போர் செய்தார். அற்புதங்கள் செய்துகூட அவர்களை ஜெயிக்க வைத்தார். உதாரணத்துக்கு, எரிகோ நகரத்தைப் பிடிக்க இஸ்ரவேலர்களுக்கு யெகோவா உதவினார். எப்படி? யெகோவா சொன்னது போலவே இஸ்ரவேலர்கள் ‘போர் முழக்கம் செய்த உடனே, நகரத்தின் மதில் பொலபொலவென இடிந்து விழுந்தது.’ அதனால், அவர்கள் சுலபமாகப் போய் அந்த நகரத்தைப் பிடித்தார்கள். (யோசு. 6:20) எமோரியர்களை எப்படி அவர்கள் தோற்கடித்தார்கள்? “எதிரிகள்மேல் வானத்திலிருந்து பெரிய ஆலங்கட்டிகளை யெகோவா விழ வைத்தார். . . . சொல்லப்போனால், இஸ்ரவேலர்களின் வாளுக்குப் பலியானவர்களைவிட ஆலங்கட்டி மழைக்குப் பலியானவர்கள்தான் அதிகம்.”—யோசு. 10:6-11.

இன்று, யெகோவா எந்தத் தேசத்துக்காகவும் போர் செய்வது கிடையாது. அவருடைய அரசாங்கம் “இந்த உலகத்தின் பாகமல்ல.” அந்த அரசாங்கத்தின் ராஜா இயேசுவே இதைச் சொல்லியிருக்கிறார். (யோவா. 18:36) ஆனால், இன்று இருக்கிற மனித அரசாங்கங்கள் எல்லாமே சாத்தான் கையில் இருக்கின்றன. இன்று நடக்கிற பயங்கரமான போர்களுக்குப் பின்னால் இருப்பதும் அவன்தான். இந்தப் பயங்கரமான போர்களில் அவனுடைய கொடூர புத்தி தெரிகிறது.—லூக். 4:5, 6; 1 யோ. 5:19.

உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களோடு சமாதானமாக இருப்பார்கள்

இதுவரை பார்த்ததுபோல, அன்று இருந்த இஸ்ரவேலர்களின் சூழ்நிலைக்கும் நம் சூழ்நிலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால், நாம் போர் செய்யாமல் இருப்பதற்கு அது மட்டுமே காரணம் இல்லை. இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கடைசி நாட்களில் தன்னுடைய மக்கள் “போர் செய்ய இனி . . . கற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார். போர் செய்யக் கற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்றால், எப்படி அவர்கள் போருக்குப் போவார்கள்? (ஏசா. 2:2-4) அதுமட்டுமல்ல, தன்னுடைய சீஷர்கள் “உலகத்தின் பாகமாக” இருக்க மாட்டார்கள் என்று கிறிஸ்துவும் சொன்னார். அதாவது, இந்த உலகத்தில் நடக்கும் போர்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்.—யோவா. 15:19.

இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சண்டை போடக் கூடாது என்று மட்டுமல்ல, அதற்குக் காரணமாக இருக்கிற கோபம், பகை, விரோதம் போன்ற குணங்களையே விட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். (மத். 5:21, 22) அதுமட்டுமல்ல, ‘சமாதானம் பண்ணுகிறவர்களாக’ இருக்க வேண்டும், எதிரிகள்மேல்கூட அன்பு காட்ட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.—மத். 5:9, 44.

இதையெல்லாம் நாம் எப்படிச் செய்யலாம்? போருக்குப் போக வேண்டும் என்றெல்லாம் நாம் ஒருவேளை நினைக்க மாட்டோம். ஆனால், நம் மனதில் பகை இருந்தால், சபையில் பிரச்சினையோ பிரிவினையோ வர வாய்ப்பிருக்கிறது. அதனால், நமக்குள் பகையோ விரோதமோ லேசாக எட்டிப் பார்த்தால்கூட, அதை ஒழித்துக்கட்ட உடனே முயற்சி செய்ய வேண்டும்.—யாக். 4:1, 11.

யாரோடும் சண்டை போடுவதற்குப் பதிலாக, எல்லாரோடும் சமாதானமாகவும் அன்பாகவும் இருக்கத்தான் நாம் முயற்சி செய்கிறோம். அதற்காகத்தான் பாடுபடுகிறோம். எல்லா போர்களுக்கும் யெகோவா முடிவுகட்டப்போகும் அந்த நாளுக்காக நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். (யோவா. 13:34, 35) ஆனால் அதுவரை, இந்த உலகத்தின் போர்களிலும் சண்டைகளிலும் கலந்துகொள்ளாமல் நடுநிலையோடு இருக்க நாம் தீர்மானமாக இருக்கிறோம்.—சங். 46:9.

a சில சமயங்களில், இஸ்ரவேல் கோத்திரங்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டன. யெகோவாவுக்கு அது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. (1 ரா. 12:24) ஆனால், ஒரு கோத்திரம் அவருக்கு உண்மையில்லாமல் போனபோது அல்லது பெரிய பாவங்களைச் செய்தபோது அந்தக் கோத்திரத்துக்கு எதிராகப் போர் செய்ய மற்ற கோத்திரங்களை யெகோவா அனுமதித்தார்.—நியா. 20:3-35; 2 நா. 13:3-18; 25:14-22; 28:1-8.