படிப்புக் கட்டுரை 41
உண்மையான சந்தோஷம்—உங்கள் கையில்!
“யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள். அவருடைய வழிகளில் நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.”—சங். 128:1.
பாட்டு 110 “யெகோவா தரும் சந்தோஷம்”
இந்தக் கட்டுரையில்... a
1. ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கும்போது சந்தோஷம் கிடைக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?
உண்மையான சந்தோஷம் என்பது அவ்வப்போது மட்டும் நம் மனதில் எட்டிப்பார்க்கும் ஒன்றல்ல, அது என்றென்றும் நம் மனதில் தங்கியிருக்கும். எப்படி? “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் [“தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள்,” அடிக்குறிப்பு] சந்தோஷமானவர்கள்” என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னார். (மத். 5:3) படைப்பாளரான யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்க வேண்டும் என்ற தீராத ஆசையோடுதான் மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அதைத்தான் “ஆன்மீகத் தேவை” என்று அவர் சொன்னார். அதுமட்டுமல்ல, யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” என்பதால், அவரை வணங்குகிறவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்.—1 தீ. 1:11.
2-3. (அ) யாரெல்லாம்கூட சந்தோஷமாக இருக்க முடியும் என்று இயேசு சொன்னார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம், அது ஏன் முக்கியம்?
2 பிரச்சினைகளே வராமல் இருந்தால்தான் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? அப்படி இல்லை. ஆச்சரியமான ஒரு விஷயத்தை மலைப்பிரசங்கத்தில் இயேசு சொன்னார். குற்றவுணர்ச்சியால் அல்லது கஷ்டங்களால் ‘துக்கப்படுகிறவர்களால்கூட’ சந்தோஷமாக இருக்க முடியும் என்று அவர் சொன்னார். அதேபோல், ‘நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்களும்,’ தன்னுடைய சீஷர்களாக இருப்பதால் ‘கேவலமாகப் பேசப்படுகிறவர்களும்’ சந்தோஷமானவர்கள் என்று சொன்னார். (மத். 5:4, 10, 11) ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?
3 இயேசு சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, உண்மையான சந்தோஷம் நம் சூழ்நிலையைப் பொறுத்து இல்லை. ஆன்மீகப் பசியை நாம் எந்தளவுக்குத் தீர்த்துக்கொள்கிறோம் என்பதையும்... கடவுளிடம் எந்தளவுக்கு நெருங்கிப்போகிறோம் என்பதையும்... பொறுத்துதான் இருக்கிறது. (யாக். 4:8) இதையெல்லாம் நாம் எப்படிச் செய்யலாம்? உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவும் முக்கியமான மூன்று படிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ளுங்கள்
4. உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவும் முதல் படி என்ன? (சங்கீதம் 1:1-3)
4 முதல் படி: நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதர்களுக்கும் சரி, மிருகங்களுக்கும் சரி, உயிர்வாழ உணவு தேவை. ஆனால், மனிதர்களுக்கு மட்டும்தான் ஆன்மீக உணவும் தேவை. அதனால்தான் இயேசு, “உணவால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்” என்று சொன்னார். (மத். 4:4) அப்படியென்றால், ஒருநாள்கூட நாம் ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ளாமல் இருக்கக் கூடாது. அதாவது, ஒருநாள்கூட பைபிளைப் படிக்காமல் இருக்கக் கூடாது. ‘யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறவனும், அதை ராத்திரியும் பகலும் . . . வாசிக்கிறவனும் சந்தோஷமானவன்’ என்று சங்கீதக்காரன் சொன்னார்.—சங்கீதம் 1:1-3-ஐ வாசியுங்கள்.
5-6. (அ) நாம் பைபிளிலிருந்து எதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்? (ஆ) பைபிளைப் படிப்பது எப்படியெல்லாம் நமக்கு உதவும்?
5 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார். அதனால், சந்தோஷமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டுமென்று பைபிளில் சொல்லியிருக்கிறார். நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன... கடவுளிடம் நாம் எப்படி நெருங்கிப்போகலாம்... நம் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்... எதிர்காலத்தில் ஒரு அருமையான வாழ்க்கையை அவர் எப்படி நமக்குக் கொடுக்கப்போகிறார்... என்றெல்லாம் அவர் பைபிளில் சொல்லியிருக்கிறார். (எரே. 29:11) இந்த உண்மைகளை நாம் படிக்கப் படிக்க, நம் மனம் சந்தோஷத்தால் நிரம்பி வழிகிறது!
6 வாழ்க்கைக்குத் தேவையான நல்ல நல்ல ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன என்று நமக்குத் தெரியும். அந்த ஆலோசனைகளின்படி நடந்தால் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். பிரச்சினைகளால் நீங்கள் சோர்ந்துபோகும் சமயத்திலெல்லாம், இன்னும் அதிக நேரம் பைபிளைப் படியுங்கள், அதைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று இயேசு சொல்லியிருக்கிறார்.—லூக். 11:28.
7. பைபிளை எப்படிப் படித்தால் ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும்?
7 கடவுளுடைய வார்த்தையை ரசித்து ருசித்துப் படியுங்கள். அப்போதுதான் அது உங்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். உங்களுக்கு ரொம்ப பிடித்த உணவை யாராவது சமைத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால், நீங்கள் அதை அவசர அவசரமாகச் சாப்பிட்டிருக்கலாம். இல்லையென்றால், வேறு எதையோ யோசித்துக்கொண்டே சாப்பிட்டிருக்கலாம். சாப்பிட்டு முடித்த பிறகு, நிதானமாக ருசித்து ருசித்து சாப்பிட்டிருக்கலாமே என்று யோசித்திருப்பீர்கள். பைபிளைப் படிக்கும்போதும் இதேபோல் உங்களுக்கு நடந்திருக்கிறதா? அதை அவசர அவசரமாகப் படித்ததால் அதிலுள்ள விஷயத்தை ருசிக்காமல் போயிருக்கிறீர்களா? அப்படியென்றால், நேரமெடுத்து கடவுளுடைய வார்த்தையை ரசித்து ருசித்துப் படியுங்கள். காட்சிகளை மனத்திரையில் ஓடவிடுங்கள், குரல்களைக் கேளுங்கள், வாசிப்பதை யோசியுங்கள். இப்படியெல்லாம் படித்தால் உங்களுக்கு இன்னும் நிறைய சந்தோஷம் கிடைக்கும்.
8. “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தங்கள் பொறுப்பை எப்படி நன்றாகச் செய்கிறார்கள்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
8 ஏற்ற வேளையில் ஆன்மீக உணவைக் கொடுப்பதற்காக ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு நியமித்திருக்கிறார்; அவர்கள் நமக்கு ஏராளமான உணவைக் கொடுக்கிறார்கள். b (மத். 24:45) முக்கியமாக பைபிளை வைத்துத்தான் அவர்கள் எல்லா உணவையும் தயாரித்துக் கொடுக்கிறார்கள். (1 தெ. 2:13) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அது நமக்கு உதவி செய்கிறது. அதனால்தான், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும், jw.org வெப்சைட்டில் வரும் கட்டுரைகளையும் நாம் படிக்கிறோம். அதோடு, வார நாளிலும் வார இறுதியிலும் நடக்கும் சபைக் கூட்டங்களுக்குத் தயாரிக்கிறோம். JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைக்கூட ஒவ்வொரு மாதமும் தவறாமல் பார்க்கிறோம். இப்படி, ஆன்மீக உணவை நாம் நன்றாக சாப்பிடும்போது, உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவும் இரண்டாவது விஷயத்தை நம்மால் செய்ய முடியும்.
யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி வாழுங்கள்
9. உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவும் இரண்டாவது விஷயம் என்ன?
9 இரண்டாவது படி: நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி வாழ வேண்டும். “யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள். அவருடைய வழிகளில் நடக்கிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங். 128:1) யெகோவாவுக்குப் பயந்து நடப்பது எதைக் குறிக்கிறது? அவர்மேல் அளவுகடந்த மரியாதை வைத்திருப்பதால் அவருக்குப் பிடிக்காத எதையும் செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது. (நீதி. 16:6) அப்படியென்றால், பைபிளில் யெகோவா கொடுத்திருக்கிற சட்டதிட்டங்களின்படி வாழ நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். (2 கொ. 7:1) யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்யும்போதும், அவருக்குப் பிடிக்காததை வெறுக்கும்போதும் நாம் சந்தோஷமாக இருப்போம்.—சங். 37:27; 97:10; ரோ. 12:9.
10. கடவுளுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்வதோடு வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்? (ரோமர் 12:2)
10 ரோமர் 12:2-ஐ வாசியுங்கள். சரி எது, தவறு எது என்று தீர்மானிக்கும் அதிகாரம் யெகோவாவுக்கு இருக்கிறது என்று ஒருவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவதும் முக்கியம். இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். நெடுஞ்சாலையில் எவ்வளவு வேகத்தில் வண்டியை ஓட்டலாம் என்று சட்டம் போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று ஒருவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்வதை அவர் எப்படிக் காட்டுவார்? அந்த சட்டத்துக்குக் கீழ்ப்படிவதன் மூலம் காட்டுவார். அதேபோல், யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி வாழ்வதுதான் சிறந்தது என்பதை நாம் தெரிந்துவைத்திருப்பது மட்டும் போதாது, அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவதும் முக்கியம். (நீதி. 12:28) யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி வாழ்வதுதான் சிறந்தது என்பதை தாவீதும் புரிந்துவைத்திருந்தார். அதனால்தான் அவர் யெகோவாவிடம், “வாழ்வின் பாதையை நீங்கள் எனக்குக் காட்டுகிறீர்கள். உங்களுடைய சன்னிதியில் அளவில்லாத சந்தோஷம் உண்டு. உங்களுடைய வலது பக்கத்தில் முடிவில்லாத மகிழ்ச்சி உண்டு” என்று சொன்னார்.—சங். 16:11.
11-12. (அ) நாம் மனக் கஷ்டத்தில் இருக்கும்போது அல்லது சோர்ந்துபோயிருக்கும்போது, எதைச் செய்யாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்? (ஆ) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பிலிப்பியர் 4:8 நமக்கு எப்படி உதவும்?
11 நாம் மனக் கஷ்டத்தில் இருக்கும்போது அல்லது சோர்ந்துபோயிருக்கும்போது, அதிலிருந்து விடுபட எதையாவது செய்ய வேண்டுமென்று நினைப்போம். இது இயல்புதான். ஆனால், யெகோவா வெறுக்கும் எதையாவது செய்துவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும்.—எபே. 5:10-12, 15-17.
12 “நீதியானவை எவையோ, . . . சுத்தமானவை எவையோ, . . . விரும்பத்தக்கவை எவையோ, . . . ஒழுக்கமானவை எவையோ” அவற்றையே யோசித்துக்கொண்டிருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியர்களுக்கு எழுதினார். (பிலிப்பியர் 4:8-ஐ வாசியுங்கள்.) பவுல் இங்கே பொழுதுபோக்கைப் பற்றிச் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவர் தந்த அறிவுரை, பொழுதுபோக்கை சரியாகத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவும். இப்படிச் செய்து பாருங்கள்: ஒரு பாடலைக் கேட்பதற்கு முன்போ, ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன்போ, ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்போ, ஒரு வீடியோ கேமை விளையாடுவதற்கு முன்போ அந்த வசனத்தில் பவுல் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயத்தோடும் அது ஒத்துப்போகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இப்படிச் செய்தால், கடவுளுக்கு எதுவெல்லாம் பிடிக்கும், எதுவெல்லாம் பிடிக்காது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். யெகோவாவுடைய உயர்ந்த சட்டதிட்டங்களின்படி வாழவும் முடியும். (சங். 119:1-3) அப்போது, உங்கள் மனசாட்சி சுத்தமாக இருக்கும். (அப். 23:1) அதோடு, உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவுகிற மூன்றாவது விஷயத்தையும் உங்களால் செய்ய முடியும்.
யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்
13. உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க உதவும் மூன்றாவது படி என்ன? (யோவான் 4:23, 24)
13 மூன்றாவது படி: நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். யெகோவாதான் நம்மைப் படைத்தவர், அதனால் அவரைத்தான் நாம் வணங்க வேண்டும். (வெளி. 4:11; 14:6, 7) யெகோவா விரும்பும் விதத்தில் அவரை வணங்குவதுதான், நம் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” நாம் அவரை வணங்க வேண்டும். (யோவான் 4:23, 24-ஐ வாசியுங்கள்.) அதாவது, கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியிலும், கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியங்களின்படியும் நாம் அவரை வணங்க வேண்டும். நாம் வாழும் நாட்டில் நம் வேலைக்குக் கட்டுப்பாடுகளோ தடைகளோ போடப்பட்டிருந்தாலும், நாம் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் ஒரே காரணத்துக்காக 150-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். c ஆனாலும் ஜெபம் செய்யவும்... பைபிள் படிக்கவும்... கடவுளைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லவும்... தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்! மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசும்போது அல்லது துன்புறுத்தும்போது நாம் சந்தோஷமாக இருக்கலாம். ஏனென்றால், யெகோவா நம்மோடு இருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.—யாக். 1:12; 1 பே. 4:14.
நிஜ அனுபவம்
14. தஜிகிஸ்தானில் இருக்கும் ஓர் இளம் சகோதரருக்கு என்ன நடந்தது, ஏன்?
14 நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நாம் பார்த்த மூன்று படிகளின்படி செய்யும்போது உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்பது உறுதி. நிறைய பேருடைய அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. உதாரணத்துக்கு, தஜிகிஸ்தானில் இருக்கும் 19 வயது ஜோவிடன் பபஜானோவுக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். அவர் ராணுவ சேவை செய்ய மறுத்துவிட்டதால் அக்டோபர் 4, 2019 அன்று, எதிரிகள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய், மாதக்கணக்காக சிறையில் அடைத்து வைத்தார்கள். ஒரு குற்றவாளியைப் போல நடத்தினார்கள். இந்த அநியாயம் உலகத்துக்கே தெரியவந்தது. ராணுவ உறுதிமொழி எடுக்கச் சொல்லியும், ராணுவ உடையைப் போட்டுக்கொள்ளச் சொல்லியும் அவர்கள் அவரை அடித்துக் கட்டாயப்படுத்தியதாகச் செய்திகளில் வெளியானது. அதன் பிறகு, அவர் ஒரு குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்புக் கொடுத்து, கட்டாய வேலை முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். கடைசியில், அந்த நாட்டின் ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இவ்வளவு பிரச்சினை வந்தபோதும்கூட ஜோவிடன் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார், தன் சந்தோஷத்தை இழக்கவே இல்லை. ஏனென்றால், அவர் எப்போதும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்தார்.
15. சிறையில் இருந்தபோதுகூட ஜோவிடன் எப்படி ஆன்மீக உணவை எடுத்துக்கொண்டார்?
15 சிறையில் பைபிளோ நம் பிரசுரங்களோ இல்லாதபோதுகூட ஜோவிடன் தொடர்ந்து ஆன்மீக உணவை எடுத்துக்கொண்டார். எப்படி? அந்த ஊரிலிருந்த சகோதர சகோதரிகள் தினமும் அவருக்கு உணவு கொண்டுவந்தபோது, அந்தக் கவர்மேல் தினவசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். இப்படி, அவரால் தினமும் பைபிளைப் படித்து அதைப் பற்றி யோசிக்க முடிந்தது. அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, இன்னும் துன்புறுத்தலை அனுபவிக்காதவர்களுக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “இப்ப சுதந்திரம் இருக்குறப்பவே அத முழுசா பயன்படுத்திக்குறது ரொம்ப முக்கியம். பைபிளயும் நம்ம பிரசுரங்களயும் படிச்சு யெகோவாவ பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சுக்கணும்.”
16. ஜோவிடன் எதைப் பற்றி மட்டும் யோசித்தார்?
16 நம் சகோதரர் யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி நடந்தார். அவர் கெட்ட ஆசைகளுக்கு இடம் கொடுத்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மோசமான விஷயங்களைச் செய்யவும் இல்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவைப் பற்றியும் யெகோவா மதிக்கும் விஷயங்களைப் பற்றியுமே யோசித்தார். யெகோவாவின் படைப்புகளுடைய அழகைப் பார்த்துப் பார்த்து அவர் ரசித்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் பறவைகளின் பாட்டு சத்தத்தைக் கேட்டுத்தான் எழுந்தார். ராத்திரி தூங்கப்போவதற்கு முன்பு நிலாவையும் நட்சத்திரங்களையும் பார்த்து ரசித்தார். “யெகோவா கொடுத்த இந்த பரிசை பத்தியெல்லாம் யோசிச்சப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது, நிறைய உற்சாகம் கிடைச்சுது” என்று அவர் சொல்கிறார். யெகோவா கொடுத்திருக்கும் எல்லா விஷயங்களுக்காகவும், பைபிளில் அவர் தந்திருக்கும் எல்லா அறிவுரைகளுக்காகவும் நாம் நன்றியோடு இருந்தால், நம் மனம் சந்தோஷத்தால் நிரம்பும். அந்த சந்தோஷம், தொடர்ந்து சகித்திருக்க நமக்கு உதவும்.
17. ஜோவிடனைப் போன்ற சூழ்நிலையில் இருக்கும் ஒருவருக்கு 1 பேதுரு 1:6, 7-ல் இருக்கும் வார்த்தைகள் எப்படிப் பொருந்தும்?
17 ஜோவிடன் யெகோவாவின் வணக்கத்துக்கு முதலிடம் கொடுத்தார். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று அவர் புரிந்துவைத்திருந்தார். ஏனென்றால், “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (லூக். 4:8) யெகோவாவை வணங்குவதை விட்டுவிடச் சொல்லி படைத்தலைவர்களும் படைவீரர்களும் ஜோவிடனைக் கட்டாயப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில், ஒவ்வொரு நாள் காலையிலும் ராத்திரியிலும் அவர் உருக்கமாக ஜெபம் செய்தார். விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க யெகோவாவிடம் உதவி கேட்டார். ரொம்ப அநியாயமாக நடத்தப்பட்டபோதும் தன்னுடைய விசுவாசத்தை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. எதிரிகள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய், அடித்து, சிறையில் தள்ளுவதற்கு முன்பு அவரிடம் இல்லாத ஒன்று இப்போது அவரிடம் இருக்கிறது—அதுதான், சோதிக்கப்பட்ட விசுவாசம்! அதை நினைத்து அவர் இப்போது ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.—1 பேதுரு 1:6, 7-ஐ வாசியுங்கள்.
18. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
18 உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவாவுக்குத் தெரியும். இந்தக் கட்டுரையில் பார்த்த மூன்று விஷயங்களின்படி நாம் செய்யும்போது, எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். அப்போது, “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற மக்கள் சந்தோஷமானவர்கள்!” என்று நம்மாலும் சொல்ல முடியும்!—சங். 144:15.
பாட்டு 89 கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்
a நிறைய பேருக்கு உண்மையான சந்தோஷம் என்பது எட்டாக் கனியாக இருக்கிறது. ஏனென்றால், தப்பான இடத்தில் அதைத் தேடுகிறார்கள். உதாரணத்துக்கு, சுகபோகமும் பணமும் புகழும் செல்வாக்கும் சந்தோஷம் தரும் என்று நினைத்து அதையெல்லாம் தேடிப்போகிறார்கள். ஆனால், இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று சொன்னார். உண்மையான சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க நாம் செய்ய வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
b ஆகஸ்ட் 15, 2014 காவற்கோபுரத்தில் வந்த “‘ஏற்ற வேளையில்’ உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c விவரங்களைத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் “விசுவாசத்துக்காக சிறைவாசம்” என்று டைப் செய்து தேடிப்பாருங்கள்.
d பட விளக்கம்: ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகப்படுவது போலவும், சகோதர சகோதரிகள் சுற்றிலும் நின்று அவருக்கு ஆதரவு காட்டுவது போலவும் நடித்துக் காட்டப்பட்டுள்ளது.