Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 43

உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது

உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது

“உண்மையான ஞானம் வீதியில் நின்று சத்தமாக அழைக்கிறது. பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது.”—நீதி. 1:20.

பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!

இந்தக் கட்டுரையில்... a

1. பைபிள் கொடுக்கும் ஞானமான அறிவுரைகளை இன்று எல்லாரும் ஏற்றுக்கொள்கிறார்களா, ஏன்? (நீதிமொழிகள் 1:20, 21)

 நிறைய நாடுகளில், நம் சகோதர சகோதரிகள் வீதிகளில் நின்று சந்தோஷமாக மக்களுக்குப் பிரசுரங்களைக் கொடுத்துவந்திருக்கிறார்கள். நீங்களும் இப்படிப்பட்ட ஊழியத்தைச் செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால், ஞானத்தைப் பற்றி நீதிமொழிகள் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சொல்லோவியம் உங்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். மக்களுக்கு அறிவுரை சொல்வதற்காக ஞானம் பொது இடங்களில் நின்று அவர்களைக் கூப்பிடுவதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. (நீதிமொழிகள் 1:20, 21-ஐ வாசியுங்கள்.) பைபிளிலும் நம் பிரசுரங்களிலும் “உண்மையான ஞானம்” இருக்கிறது. அதுதான் யெகோவா தரும் ஞானம்! இந்த ஞானம் எல்லாருக்குமே ரொம்ப தேவை. ஏனென்றால், இந்த ஞானம் இருந்தால்தான், முடிவில்லாத வாழ்வுக்குப் போகும் பாதையில் அவர்களால் முதல் அடியை எடுத்து வைக்க முடியும். மற்றவர்கள் நம்மிடமிருந்து பிரசுரங்களை வாங்கிக்கொள்ளும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், எல்லாருமே அவற்றை வாங்கிக்கொள்வது இல்லை. சிலருக்கு பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமே இல்லை. இன்னும் சிலர், நம்மைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கிறார்கள். ‘பைபிள் அந்த காலத்து புத்தகம், அது நமக்கெல்லாம் ஒத்துவராது’ என்று யோசிக்கிறார்கள். வேறு சிலர், ஒழுக்கம் சம்பந்தமாக பைபிள் சொல்லும் சட்டங்கள் ரொம்ப கறாராக இருப்பதாக நினைக்கிறார்கள். அந்தச் சட்டங்களின்படி நடக்கிறவர்கள் தங்களையே பெரிய நீதிமான்கள்போல் காட்டிக்கொள்கிறார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆனாலும், யெகோவா ரொம்ப அன்போடு எல்லாருக்கும் உண்மையான ஞானத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். எப்படி?

2. உண்மையான ஞானம் எல்லாருக்குமே கிடைப்பதற்கு யெகோவா என்ன செய்திருக்கிறார், ஆனால் முக்கால்வாசி பேர் இன்று என்ன செய்கிறார்கள்?

2 பைபிள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே கிடைப்பதற்கு யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். யெகோவாவின் ஆசீர்வாதத்தால், பைபிள் பிரசுரங்கள்கூட 1000-த்துக்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. உண்மையான ஞானத்தைக் காதுகொடுத்து கேட்கிறவர்கள், அதாவது பைபிளைப் படித்து அதன்படி நடக்கிறவர்கள், நன்மை அடைவார்கள். ஆனால் முக்கால்வாசி பேர், அதைக் காதில் வாங்கிக்கொள்வது இல்லை. முடிவுகள் எடுக்கும்போது சொந்த புத்தியை நம்புகிறார்கள். இல்லையென்றால், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள். நாம் பைபிள்படி நடப்பதால், அவர்கள் நம்மைக் கேவலமாகக்கூடப் பார்க்கலாம். என்ன காரணங்களால் அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆனால் முதலில், உண்மையான ஞானம் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வது ஞானத்தைத் தரும்

3. நாம் என்ன செய்தால் உண்மையான ஞானம் இருப்பதைக் காட்டுவோம்?

3 ஞானம் என்பது, நமக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து நல்ல முடிவுகளை எடுக்கும் திறனைக் குறிக்கிறது. ஆனால், உண்மையான ஞானம் என்பது அது மட்டுமே கிடையாது. “யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி. மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான் புத்தியை பெறுவதற்கு வழி” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 9:10) அப்படியென்றால், முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு, ‘மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்ள’ வேண்டும். அதாவது, நாம் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நாம் படிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நமக்கு உண்மையான ஞானம் இருப்பதைக் காட்டுவோம்.—நீதி. 2:5-7.

4. ஏன் யெகோவாவினால் மட்டும்தான் நமக்கு உண்மையான ஞானத்தைக் கொடுக்க முடியும்?

4 யெகோவாவினால் மட்டும்தான் நமக்கு உண்மையான ஞானத்தைக் கொடுக்க முடியும். (ரோ. 16:27) ஏன் அப்படிச் சொல்லலாம்? முதலாவதாக, அவர் படைப்பாளராக இருப்பதால் தன்னுடைய படைப்புகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார், முழுமையாகப் புரிந்துவைத்திருக்கிறார். (சங். 104:24) இரண்டாவதாக, யெகோவா செய்யும் எல்லாமே அவருடைய ஞானத்தைக் காட்டுகிறது. (ரோ. 11:33) மூன்றாவதாக, யெகோவா தரும் ஞானமான அறிவுரைகள் எப்போதுமே பிரயோஜனமாக இருக்கின்றன. (நீதி. 2:10-12, 14) நமக்கு உண்மையான ஞானம் வேண்டுமென்றால், இந்த மூன்று முக்கியமான விஷயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதில் வைத்து எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

5. உண்மையான ஞானம் யெகோவாவிடமிருந்து மட்டும்தான் வருகிறது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது?

5 இன்று ஊழியத்தில் நாம் பார்க்கும் நிறைய பேர், இயற்கையில் இருக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து அசந்துபோகிறார்கள், ஆனால் அதையெல்லாம் ஒருவர் படைத்திருக்கிறார் என்பதை அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. எல்லாமே தானாக வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று நினைத்து, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்கிறார்கள். இதனால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது? மக்கள் கடவுளுடைய ஞானத்தைத் தேடாமல் தங்களுடைய சொந்த ஞானத்தை நம்புவதால் இந்த உலகம் நல்லபடியாக மாறிவிட்டதா? மக்களுக்கு உண்மையான சந்தோஷமோ நல்ல எதிர்கால நம்பிக்கையோ கிடைத்திருக்கிறதா? நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்க்கும்போது, “யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை என்று புரிகிறது. (நீதி. 21:30) அப்படியென்றால், உண்மையான ஞானத்துக்காக நாம் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பது ரொம்ப முக்கியம், இல்லையா? ஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்று பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஏன்?

உண்மையான ஞானத்தை ஏன் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை?

6. நீதிமொழிகள் 1:22-25-ன்படி, கடவுள் கொடுக்கும் ஞானத்தை யாரெல்லாம் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்?

6 உண்மையான ஞானம் ‘வீதியில் நின்று சத்தமாக அழைக்கும்போது’ நிறைய பேர் அதைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை. குறிப்பாக, ‘அனுபவமில்லாதவர்களும்,’ ‘கேலி செய்கிறவர்களும்,’ ‘அறிவில்லாதவர்களும்’ அதைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 1:22-25-ஐ வாசியுங்கள்.) கடவுள் கொடுக்கும் ஞானத்தை இவர்கள் ஏன் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்? நாம் எப்படி இவர்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருக்கலாம்? இதைப் பற்றியெல்லாம் இப்போது விவரமாகப் பார்க்கலாம்.

7. சிலர் ஏன் ‘அனுபவமில்லாதவர்களாகவே’ இருக்க ஆசைப்படுகிறார்கள்?

7 ‘அனுபவமில்லாதவர்கள்,’ விவரம் தெரியாதவர்களாகவும் ஏமாளிகளாகவும் இருப்பார்கள்; யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்கள். (நீதி. 14:15, அடிக்குறிப்பு) இப்படிப்பட்ட ஆட்களை நாம் அடிக்கடி ஊழியத்தில் பார்க்கிறோம். இன்று லட்சக்கணக்கான மக்கள், மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் சொல்வதை நம்பி ஏமாந்துபோகிறார்கள். அந்தத் தலைவர்கள் தங்களை ஏமாற்றிவிட்டது தெரியவரும்போது சிலருக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், நீதிமொழிகள் 1:22-ல் சொல்லப்பட்டிருப்பவர்கள், அனுபவமில்லாதவர்களாகவே இருந்துவிட ஆசைப்படுகிறார்கள், அதுதான் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. (எரே. 5:31) பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளவோ, அதன்படி நடக்கவோ அவர்கள் விரும்புவதில்லை; தங்கள் இஷ்டப்படி நடக்கத்தான் விரும்புகிறார்கள். கனடாவில் இருக்கும் கியுபெக்கைச் சேர்ந்த மதப்பற்றுள்ள ஒரு பெண் ஒரு யெகோவாவின் சாட்சியிடம் இப்படிச் சொன்னார்: “எங்களோட பாதிரி எங்கள ஏமாத்துறாருனா அது அவரோட தப்பு, எங்க தப்பு இல்ல!” நிறைய பேர் அந்தப் பெண்ணைப் போலத்தான் நினைக்கிறார்கள். தெரிந்தே ஏமாளிகளாக இருக்கும் இப்படிப்பட்டவர்களைப் போல நடந்துகொள்ள நாம் நிச்சயம் விரும்ப மாட்டோம்!—நீதி. 1:32; 27:12.

8. முதிர்ச்சியும் அனுபவமும் உள்ளவர்களாக ஆவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

8 அனுபவமில்லாதவர்களாக இருந்துவிடுவதற்குப் பதிலாக, ‘புரிந்துகொள்ளும் திறனைப் பொறுத்ததில் . . . முதிர்ச்சி அடைந்தவர்களாக இருங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 14:20) பைபிள் நியமங்களின்படி நாம் நடக்கும்போது முதிர்ச்சியும் அனுபவமும் உள்ளவர்களாக ஆவோம். அப்போது, பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஞானமான முடிவுகளை எடுக்கவும் பைபிள் எப்படி உதவுகிறது என்பதைக் கண்கூடாகப் பார்ப்போம். இந்த விஷயத்தில் நாம் எந்தளவு முன்னேற்றம் செய்கிறோம் என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்ப்பது நல்லது. கொஞ்ச நாளாகவே நாம் பைபிளைப் படித்துக்கொண்டும் கூட்டங்களில் கலந்துகொண்டும் இருந்தால், ஏன் இன்னமும் யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கிறோம் என்பதை யோசித்து பார்க்கலாம். நாம் ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்திருந்தால், பிரசங்கிக்கும் வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் முன்னேற்றம் செய்கிறோமா? பைபிள் நியமங்களின் அடிப்படையில்தான் நாம் முடிவுகளை எடுக்கிறோமா? மற்றவர்களிடம் பழகும்போது கிறிஸ்தவக் குணங்களைக் காட்டுகிறோமா? இந்த விஷயங்களில் நாம் முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால், யெகோவா தரும் நினைப்பூட்டுதல்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும். அவைதான் ‘அனுபவம் இல்லாதவனை ஞானியாக்குகின்றன.’—சங். 19:7, அடிக்குறிப்பு.

9. ‘கேலி செய்கிறவர்கள்’ எப்படியெல்லாம் ஞானத்தை ஒதுக்கித்தள்ளுகிறார்கள்?

9 கடவுளுடைய ஞானத்தை ஒதுக்கித்தள்ளும் இரண்டாவது விதமான ஆட்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்கள்தான் ‘கேலி செய்கிறவர்கள்.’ இப்படிப்பட்டவர்களை சிலசமயம் நாம் ஊழியத்தில் பார்க்கிறோம். மற்றவர்களைக் கிண்டல் செய்வதென்றால் இவர்களுக்கு அப்படியொரு சந்தோஷம்! (சங். 123:4) கடைசி நாட்களில் கேலி செய்கிறவர்களுக்குப் பஞ்சமே இருக்காது என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 3:3, 4) இன்று சிலர், லோத்துவின் மருமகன்களைப் போலவே கடவுளுடைய எச்சரிப்புகளைக் காதில் வாங்குவதில்லை. (ஆதி. 19:14) பைபிள் சொல்கிறபடி நடக்கிறவர்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கிறார்கள். ‘கடவுள்பக்தி இல்லாத காரியங்களைத் தங்களுடைய ஆசைப்படியெல்லாம் செய்வதில்தான்’ அவர்கள் குறியாக இருக்கிறார்கள். (யூ. 7, 17, 18) கேலி செய்கிறவர்களைப் பற்றி பைபிள் சொல்லும் இந்த எல்லா விஷயங்களும், யெகோவாவை ஒதுக்கித்தள்ளும் விசுவாசதுரோகிகளுக்கும் மற்றவர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துகின்றன!

10. சங்கீதம் 1:1-ன்படி, நாம் எப்படிக் கேலி செய்கிறவர்களைப் போல் நடந்துகொள்ளாமல் இருக்கலாம்?

10 கேலி செய்கிறவர்களைப் போல் நாம் நடந்துகொள்ளாமல் இருப்பதற்கு ஒரு வழி, எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களோடு பழகாமல் இருப்பதுதான். (சங்கீதம் 1:1-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், விசுவாசதுரோகிகள் சொல்லும் எதையுமே நாம் கேட்கவும் கூடாது, படித்துப் பார்க்கவும் கூடாது. நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், குறைசொல்லும் பழக்கம் நம்மையும் சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். அதன்பின், யெகோவாவையும் அவருடைய அமைப்பு தரும் வழிநடத்துதலையும் நாம் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவோம். இந்தப் படுகுழியில் விழாமல் இருப்பதற்கு, நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அமைப்பு புதுசா ஏதாவது ஆலோசனையோ விளக்கமோ கொடுக்குறப்போ அத குறைசொல்ற பழக்கம் எனக்கு இருக்கா? பொறுப்புல இருக்குற சகோதரர்கள்கிட்ட நான் குத்தம் கண்டுபிடிச்சிட்டே இருக்கேனா?’ இப்படிச் செய்வதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம் நிறுத்திவிட்டால், யெகோவா நம்மைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்.—நீதி. 3:34, 35.

11. ‘அறிவில்லாதவர்கள்’ யெகோவாவின் சட்டதிட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

11 கடவுளுடைய ஞானத்தை ஒதுக்கித்தள்ளும் மூன்றாவது விதமான ஆட்கள்தான் ‘அறிவில்லாதவர்கள்.’ அவர்கள் கடவுளுடைய சட்டதிட்டங்களின்படி வாழாமல், தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்துகொண்டிருக்கிறார்கள். (நீதி. 12:15) அதனால்தான் அவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். ஞானத்தைக் கொடுக்கும் யெகோவாவையே அவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். (சங். 53:1) பைபிள் ஆலோசனைகள்படி நாம் நடப்பதற்காக ஊழியத்தில் அவர்கள் நம்மைக் கண்டபடி பேசுகிறார்கள். ஆனால் அவர்களாலும் உருப்படியாக எந்த ஆலோசனையையும் நமக்குக் கொடுக்க முடிவதில்லை. “உண்மையான ஞானம் முட்டாளுக்கு எட்டவே எட்டாது. நகரவாசலில் சொல்வதற்கு அவனிடம் எதுவும் இருக்காது” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 24:7) முட்டாள்களுக்கும் உண்மையான ஞானத்துக்கும் ரொம்பத் தூரம்! அதனால்தான், “முட்டாளைவிட்டுத் தூர விலகு” என்று யெகோவா நம்மை எச்சரிக்கிறார்!—நீதி. 14:7.

12. அறிவில்லாதவர்களைப் போல நடந்துகொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

12 இவ்வளவு நேரம் நாம் பார்த்த ஆட்களைப் போல நாம் நடந்துகொள்வதில்லை. கடவுளுடைய ஆலோசனைகளை வெறுப்பதற்குப் பதிலாக, அவருடைய ஆலோசனைகளையும் சட்டதிட்டங்களையும் நாம் நேசிக்கிறோம். கடவுளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தையும் கீழ்ப்படியாதவர்களுக்கு வரும் கஷ்டங்களையும் பற்றி நாம் யோசித்துப் பார்க்கும்போது, கடவுளுடைய ஆலோசனைகளை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்போம். அதனால், யெகோவாவின் ஞானமான அறிவுரைகளை முட்டாள்தனமாக ஒதுக்கித்தள்ளுகிறவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்று கவனியுங்கள். அதன் பிறகு, நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதால் உங்கள் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.—சங். 32:8, 10.

13. யெகோவா தன்னுடைய ஞானமான அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நம்மைக் கட்டாயப்படுத்துகிறாரா?

13 யெகோவா எல்லாருக்குமே ஞானத்தைக் கொடுக்கிறார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அவர் யாரையுமே கட்டாயப்படுத்துவது இல்லை. அதேசமயத்தில், தன்னுடைய ஞானமான அறிவுரைகளைக் கேட்டு நடக்காதவர்களுக்கு என்ன நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். (நீதி. 1:29-32) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதவர்கள் “[அதனால்] வரும் விளைவுகளை முழுமையாக அனுபவிப்பார்கள்.” அவர்களுக்கு வலியும் வேதனையும்தான் மிஞ்சும். கடைசியில் அவர்கள் அழிந்தேபோய்விடுவார்கள்! ஆனால், யெகோவாவின் ஞானமான அறிவுரைகளைக் கேட்டு நடக்கிறவர்களுக்கு அவர் இப்படி வாக்குக் கொடுக்கிறார்: “நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான். ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”—நீதி. 1:33.

உண்மையான ஞானம் நன்மை தருகிறது

கூட்டங்களில் பதில் சொல்லும்போது யெகோவாவுடன் இருக்கும் நம் பந்தம் பலமாகிறது (பாரா 15)

14-15. நீதிமொழிகள் 4:23-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 யெகோவாவின் ஞானமான அறிவுரைகளை நாம் கேட்டு நடந்தால் எப்போதுமே நமக்கு நன்மை கிடைக்கும். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உண்மையான ஞானம் எல்லாருக்குமே சுலபமாகக் கிடைக்கும்படி யெகோவா செய்திருக்கிறார். உதாரணத்துக்கு, எல்லா காலத்துக்கும் ஒத்துவரும் ஏராளமான ஆலோசனைகளை நீதிமொழிகள் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த ஆலோசனைகளின்படி நாம் நடந்தால் நம் வாழ்க்கை எப்போதுமே நன்றாக இருக்கும். அதற்கு நான்கு உதாரணங்களை மட்டும் இப்போது பார்க்கலாம்.

15 உங்கள் அடையாளப்பூர்வ இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள். ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 4:23) நம்முடைய நிஜமான இதயத்தைப் பாதுகாக்க நாம் சத்தான சாப்பாடு சாப்பிடுவோம், நன்றாக உடற்பயிற்சி செய்வோம், கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்போம். அதேபோல், நம்முடைய அடையாளப்பூர்வ இதயத்தைப் பாதுகாப்பதற்கு நாம் தினமும் பைபிளை வாசிக்க வேண்டும்... கூட்டங்களுக்காகத் தயாரிக்க வேண்டும்... அதில் கலந்துகொண்டு பதில் சொல்ல வேண்டும்... மும்முரமாக ஊழியம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கெட்ட பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும். அதற்காக, நம் மனதைக் கெடுக்கும் மோசமான பொழுதுபோக்குகளையும் கெட்ட சகவாசங்களையும் மற்ற விஷயங்களையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும்.

பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும்போது, இருப்பதை வைத்துத் திருப்தியோடு வாழ முடியும் (பாரா 16)

16. நீதிமொழிகள் 23:4, 5-ல் இருக்கும் ஆலோசனை நமக்கு ஏன் ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது?

16 இருப்பதை வைத்துத் திருப்தியாக வாழுங்கள். “சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே. . . . இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்? அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 23:4, 5) சொத்துப்பத்துகள் எப்போதுமே நம்மோடு இருக்காது. ஆனாலும், பணக்காரர்களும் சரி, ஏழைகளும் சரி, ‘பணம்! பணம்!’ என்றுதான் அலைகிறார்கள். பணம் சேர்ப்பதற்காகப் பெரும்பாலும் கெட்ட வழியில் போய் தங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்களோடு இருக்கும் பந்தத்தைப் பறிகொடுக்கிறார்கள், தங்கள் உடல்நலத்தையும் பாழாக்கிக்கொள்கிறார்கள். (நீதி. 28:20; 1 தீ. 6:9, 10) ஆனால் நமக்கு ஞானம் இருந்தால், பணத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். அப்போது, பேராசை என்ற வலையில் சிக்காமல், திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம்.—பிர. 7:12.

யோசித்துப் பேசும்போது நம் வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தாது (பாரா 17)

17. நீதிமொழிகள் 12:18-ல் சொல்லப்பட்டிருக்கும் “ஞானமுள்ளவனின் நாவு” நமக்கு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

17 யோசித்துப் பேசுங்கள். நாம் கவனமாக இல்லாவிட்டால், நம் வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதை ரணமாக்கிவிடும். “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும். ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:18) மற்றவர்களுடைய குற்றம்குறைகளைப் பற்றி அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் நாம் பேசாமல் இருந்தால், சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க முடியும். (நீதி. 20:19) நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுடைய மனதுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமென்றால், கடவுளுடைய வார்த்தை எப்போதுமே நம் மனதில் நிறைந்திருக்க வேண்டும். (லூக். 6:45) பைபிளில் படிக்கும் விஷயங்களைப் பற்றி நாம் ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, நம் வார்த்தைகள் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தருகிற “ஞானத்தின் ஊற்று” போல இருக்கும்.—நீதி. 18:4.

அமைப்பு தரும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது நம்மால் ஊழியத்தை நன்றாகச் செய்ய முடியும் (பாரா 18)

18. நீதிமொழிகள் 24:6-ல் இருக்கும் ஆலோசனை, ஊழியத்தை நன்றாகச் செய்ய நமக்கு எப்படி உதவும்?

18 அமைப்பு தரும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். “திறமையான [அதாவது, “ஞானமான”] வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும். ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 24:6) இந்த அருமையான ஆலோசனையின்படி நடப்பதால், பிரசங்கிக்கும் வேலையையும் கற்பிக்கும் வேலையையும் நம்மால் நன்றாகச் செய்ய முடிகிறது. எப்படி? நம் இஷ்டப்படி ஊழியம் செய்யாமல், அமைப்பு தரும் ஆலோசனைகளின்படி ஊழியம் செய்கிறோம். கூட்டங்களில் நமக்கு ஞானமான ஆலோசனைகள் கிடைக்கின்றன. அங்கே மற்றவர்கள் கொடுக்கும் பேச்சுகளிலிருந்தும் செய்கிற நடிப்புகளிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். அதோடு, நிறைய பிரசுரங்களையும் வீடியோக்களையும் யெகோவாவின் அமைப்பு தயாரித்துக் கொடுக்கிறது. இவையெல்லாம் பைபிளைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகின்றன. இந்தக் கருவிகளைத் திறமையாகப் பயன்படுத்த நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?

19. யெகோவா தரும் ஞானத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (நீதிமொழிகள் 3:13-18)

19 நீதிமொழிகள் 3:13-18-ஐ வாசியுங்கள். பைபிளில் இருக்கும் ஞானமான அறிவுரைகளுக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! இந்த அறிவுரைகள் மட்டும் இல்லையென்றால் நம் வாழ்க்கை என்னவாயிருக்கும்!! நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள ஞானமான அறிவுரைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்த்தோம். இதுபோன்ற ஏராளமான அறிவுரைகளை பைபிளில் யெகோவா பதிவு செய்திருக்கிறார். அவற்றின்படி நடக்க நாம் எப்போதுமே தீர்மானமாக இருக்க வேண்டும். இந்த ஞானமான அறிவுரைகளைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது நமக்கு முக்கியம் இல்லை. “[ஞானத்தை] உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று நாம் முழுமையாக நம்புகிறோம்!

பாட்டு 36 நம் இதயத்தை பாதுகாப்போம்

a இந்த உலகம் தருகிற ஞானம் யெகோவாவின் ஞானத்துக்குப் பக்கத்தில்கூட வர முடியாது. யெகோவாவின் ஞானம் அந்தளவுக்கு உயர்ந்தது! உண்மையான ஞானம் பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது என்று நீதிமொழிகள் புத்தகம் சொல்கிறது. இந்த அழகான சொல்லோவியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, உண்மையான ஞானம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்... சிலர் ஏன் அதைக் காதில் வாங்கிக்கொள்வது இல்லை... ஆனால் நாம் அதைக் கேட்டு நடந்தால் நமக்கு என்ன நன்மை... என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்.