படிப்புக் கட்டுரை 45
யெகோவாவின் ஆன்மீக ஆலயத்துக்கு நன்றியோடு இருங்கள்
“வானத்தையும் பூமியையும் . . . படைத்தவரை வணங்குங்கள்.”—வெளி. 14:7.
பாட்டு 93 கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்
இந்தக் கட்டுரையில்... a
1. ஒரு தேவதூதர் என்ன சொல்கிறார், உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு தேவதூதர் உங்களிடம் பேசினால், அவர் சொல்வதை நீங்கள் கவனித்துக் கேட்பீர்களா? இன்று ஒரு தேவதூதர் ‘எல்லா தேசத்தினரிடமும் கோத்திரத்தினரிடமும் மொழியினரிடமும் இனத்தினரிடமும்’ பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்? “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; . . . வானத்தையும் பூமியையும் . . . படைத்தவரை வணங்குங்கள்.” (வெளி. 14:6, 7) யெகோவாதான் ஒரே உண்மையான கடவுள்... அவரைத்தான் எல்லாரும் வணங்க வேண்டும்... என்று அந்தத் தேவதூதர் சொல்கிறார். மாபெரும் ஆன்மீக ஆலயத்தில் தன்னை வணங்கும் வாய்ப்பை யெகோவா உங்களுக்கும் தந்திருக்கிறார். அதை நினைக்கும்போது நன்றி பொங்குகிறதா?
2. யெகோவாவின் ஆன்மீக ஆலயம் என்றால் என்ன? (“ ஆன்மீக ஆலயம் என்பது...” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
2 ஆன்மீக ஆலயம் என்றால் என்ன? அதைப் பற்றி நாம் எங்கிருந்து தெரிந்துகொள்வது? ஆன்மீக ஆலயம் என்பது ஒரு நிஜ கட்டிடம் கிடையாது. இயேசு கொடுத்த பலியின் அடிப்படையில் தன்னை வணங்குவதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுதான் அது. முதல் நூற்றாண்டில், யூதேயாவில் வாழ்ந்துகொண்டிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இதைப் பற்றி விளக்கியிருக்கிறார். b
3-4. யூதேயாவில் இருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தது, பவுல் எப்படி அவர்களுக்கு உதவி செய்தார்?
3 எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஏன் இந்தக் கடிதத்தை எழுதினார்? ஒருவேளை, இரண்டு காரணங்களுக்காக எழுதியிருக்கலாம். முதல் காரணம், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக. ஏனென்றால், அவர்களில் நிறைய பேர் இதற்குமுன் யூத மதத்தில் இருந்தவர்கள். இப்போது கிறிஸ்தவர்களாக, அவர்களுக்கு பிரமாண்டமான ஒரு ஆலயம் கிடையாது... பலி கொடுக்க பலிபீடம் கிடையாது... சேவை செய்ய குருமார்களும் கிடையாது. அதனால், யூத மதத் தலைவர்கள் அவர்களைக் கேலி கிண்டல் செய்திருக்கலாம். இவையெல்லாம் அந்தக் கிறிஸ்தவர்களை ரொம்பவே சோர்ந்துபோக வைத்திருக்கும். அவர்களுடைய விசுவாசம்கூட பலவீனமாகியிருக்கலாம். (எபி. 2:1; 3:12, 14) மறுபடியும் யூத மதத்துக்கே போய்விடலாம் என்றுகூட சிலர் யோசித்திருக்கலாம்.
4 இரண்டாவது காரணம் இதுதான்: ‘திட உணவை’ அதாவது, ஆழமான பைபிள் போதனைகளை புரிந்துகொள்ள எபிரெய கிறிஸ்தவர்கள் முயற்சி செய்யவில்லை என்பதை உணர்த்துவதற்காக எழுதினார். (எபி. 5:11-14) அநேகமாக, அவர்களில் சிலர் திருச்சட்டத்தையே பிடித்துக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்த பலிகள் பாவத்தை முழுமையாக நீக்க முடியாது என்பதை பவுல் அவர்களுக்குப் புரியவைத்தார். அதனால்தான், திருச்சட்டம் ‘நீக்கப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார். அதன் பிறகு, ஆழமான உண்மைகளை பவுல் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். இயேசுவுடைய பலியின் அடிப்படையில் கிடைத்திருக்கிற ‘மேலான நம்பிக்கையை’ பற்றி அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். அந்த நம்பிக்கையால்தான் “நாம் கடவுளிடம் நெருங்கிப் போகிறோம்” என்றும் அவர்களிடம் சொன்னார்.—எபி. 7:18, 19.
5. எபிரெயர் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற எந்த விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஏன்?
5 எபிரெய கிறிஸ்தவர்கள் முன்பு செய்துகொண்டிருந்த வணக்கத்தைவிட இப்போது கிறிஸ்தவர்களாக அவர்கள் செய்கிற வணக்கம் ரொம்ப சிறந்தது என்பதை பவுல் அவர்களுக்கு விளக்கினார். யூத வழிபாட்டில் செய்யப்பட்ட விஷயங்கள் “வரப்போகிற காரியங்களின் நிழல் மட்டுமே, கிறிஸ்துதான் நிஜம்” என்று அவர் சொன்னார். (கொலோ. 2:17) ஒரு பொருள்மேல் வெளிச்சம் படும்போது அதன் நிழல் தரையில் விழும். அந்த நிழல் பார்ப்பதற்கு ஓரளவுக்கு அந்த பொருளைப் போலவே இருந்தாலும், அது நிஜமாகாது. அதேமாதிரிதான் முன்பு இருந்த யூத வணக்கமுறை எதிர்காலத்தில் வரவிருந்த நிஜத்துக்கு, அதாவது ஆன்மீக ஆலய ஏற்பாட்டுக்கு, வெறுமனே ஒரு நிழலாக இருந்தது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக யெகோவா செய்திருக்கும் அந்த ஏற்பாட்டைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அந்த ஏற்பாட்டின்படி நாம் அவரை வணங்கும்போதுதான், நம் வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார். இப்போது எபிரெயர் புத்தகத்தில் சொல்லியிருக்கிற ‘நிழலையும்’ (முன்பு இருந்த யூத வணக்கமுறை) ‘நிஜத்தையும்’ (கிறிஸ்தவ வணக்கமுறை) ஒப்பிட்டுப் பார்க்கலாம். அப்போது ஆன்மீக ஆலயம் என்றால் என்ன என்பதையும், அதில் நமக்கு என்ன பங்கு என்பதையும் நன்றாக புரிந்துகொள்வோம்.
வழிபாட்டுக் கூடாரம்
6. வழிபாட்டுக் கூடாரத்தை எதற்காக பயன்படுத்தினார்கள்?
6 நிழல். வழிபாட்டுக் கூடாரத்தை கி.மு. 1512-ல் மோசே ஏற்படுத்தினார். பவுல் இதை வைத்துதான் பேச ஆரம்பித்தார். (“யூத வணக்கத்தின் நிழல்—கிறிஸ்தவ வணக்கத்தின் நிஜம்” என்ற படத்தைப் பாருங்கள்.) வழிபாட்டுக் கூடாரம் பார்ப்பதற்கு, ஒரு கூடாரம் மாதிரிதான் இருந்தது. இஸ்ரவேலர்கள் ஒரு இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்கு மாறி போகும்போது அதைக் கழற்றி எடுத்துக்கொண்டு போவார்கள். இதை கிட்டத்தட்ட 500 வருஷங்களுக்கு பயன்படுத்தினார்கள், அதாவது எருசலேமில் ஒரு நிரந்தரமான ஆலயத்தை கட்டும் வரை பயன்படுத்தினார்கள். (யாத். 25:8, 9; எண். 9:22) இந்த ‘சந்திப்புக் கூடாரம்தான்’ இஸ்ரவேலர்களுடைய வணக்கத்தின் மையமாக இருந்தது. இங்கே வந்துதான் யெகோவாவை வணங்கினார்கள், பலிகளையும் கொடுத்தார்கள். (யாத். 29:43-46) ஆனால் இந்த வழிபாட்டுக் கூடாரம் வெறுமனே ஒரு நிழல் தான். எதிர்காலத்தில் கிறிஸ்தவர்களுடைய வணக்கமுறையில் இதன் நிஜம் வரவிருந்தது.
7. ஆன்மீக ஆலயம் எப்போது செயல்பட ஆரம்பித்தது?
7 நிஜம். அன்று இருந்த வழிபாட்டுக் கூடாரம் ‘பரலோக காரியங்களின் நிழலாக இருந்தது,’ அதாவது யெகோவாவுடைய மாபெரும் ஆன்மீக ஆலயத்துக்கு அடையாளமாக இருந்தது. இந்த “கூடாரம் [அல்லது, வழிபாட்டுக் கூடாரம்], இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது” என்று பவுல் சொன்னார். (எபி. 8:5; 9:9) அப்படியென்றால், எபிரெயர்களுக்கு பவுல் இந்த கடிதத்தை எழுதிய சமயத்தில் ஆன்மீக ஆலயம் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டு இருந்தது தெரிகிறது. கி.பி. 29-ல் அது செயல்பட ஆரம்பித்தது. அந்த வருஷத்தில் இயேசு ஞானஸ்நானம் எடுத்தார், கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார். ஆன்மீக ஆலயத்தில் யெகோவாவுடைய “மாபெரும் தலைமைக் குருவாக” சேவை செய்ய ஆரம்பித்தார். c—எபி. 4:14; அப். 10:37, 38.
தலைமைக் குரு
8-9. எபிரெயர் 7:23-27 காட்டுகிற மாதிரி, இஸ்ரவேலில் இருந்த தலைமைக் குருக்களுக்கும் மாபெரும் தலைமைக் குருவாக இருக்கிற இயேசுவுக்கும் என்ன வித்தியாசம்?
8 நிழல். மக்களுடைய சார்பாக யெகோவாவுக்கு முன் நிற்கிற பொறுப்பு தலைமைக் குருவுக்கு இருந்தது. வழிபாட்டுக் கூடாரம் நிறுவப்பட்ட சமயத்தில், முதல் தலைமைக் குருவாக ஆரோனை யெகோவா நியமித்தார். ஆனால், இஸ்ரவேலில் இருந்த குருமார்களை பற்றி பவுல் இப்படி சொன்னார்: “குருமார்கள் தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு மரணம் தடையாக இருந்தது; அதனால், அடுத்தடுத்து வேறு பலர் குருமார்களாக நியமிக்கப்பட வேண்டியிருந்தது.” d (எபிரெயர் 7:23-27-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, குருமார்களும் பாவிகளாக இருந்ததால் தங்களுடைய பாவங்களுக்காகவும் அவர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இஸ்ரவேலில் இருந்த தலைமைக் குருமார்களுக்கும் மாபெரும் தலைமைக் குருவான இயேசு கிறிஸ்துவுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் பார்த்தீர்களா?
9 நிஜம். ‘மனிதனால் இல்லாமல் யெகோவாவினால் அமைக்கப்பட்ட உண்மையான கூடாரத்தில் சேவை செய்கிறவராக’ நம் தலைமைக் குரு இயேசு இருக்கிறார். (எபி. 8:1, 2) இயேசுவைப் பற்றி பவுல் சொல்லும்போது, “அவர் என்றென்றும் உயிரோடு இருப்பதால் அவருக்கு அடுத்து வேறு யாரும் குருவாக நியமிக்கப்பட வேண்டியதில்லை” என்றார். அதுமட்டுமல்ல, இயேசு “களங்கமில்லாதவர், பாவிகளைப் போல இல்லாதவர்” என்றும், இஸ்ரவேலில் இருந்த தலைமை குருமார்களைப் போல் அவர் ‘தன்னுடைய பாவங்களுக்காக தினமும் பலி கொடுக்க வேண்டியதில்லை’ என்றும் சொன்னார். சரி, இப்போது பலிபீடங்களைப் பற்றியும் பலிகளைப் பற்றியும் பார்க்கலாம்.
பலிபீடங்களும் பலிகளும்
10. பலிபீடத்தின் மேல் செலுத்தப்பட்ட பலிகள் எதற்கு அடையாளமாக இருந்தன?
10 நிழல். வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வெளியே ஒரு செம்பு பலிபீடம் இருந்தது. அங்கேதான் யெகோவாவுக்கு மிருகப் பலிகளை செலுத்தினார்கள். (யாத். 27:1, 2; 40:29) ஆனால், அந்த பலிகளால் மக்களுடைய எல்லா பாவங்களுக்கும் ஒரு நிரந்தரமான மன்னிப்பை வாங்கி தர முடியவில்லை. (எபி. 10:1-4) தொடர்ந்து செலுத்தப்பட்ட இந்த மிருக பலிகள், மனிதர்களை ஒட்டுமொத்தமாக பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்ற போகிற ஒரு பலிக்கு அடையாளமாக இருந்தது.
11. எந்த பலிபீடத்தின்மேல் இயேசு தன்னையே பலியாக கொடுத்தார்? (எபிரெயர் 10:5-7, 10)
11 நிஜம். மனிதர்களுக்காக தன்னுடைய உயிரை மீட்பு பலியாக கொடுக்க வேண்டும் என்பதும், அதற்காகத்தான் யெகோவா தன்னை இந்த பூமிக்கு அனுப்பினார் என்பதும் இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். (மத். 20:28) அதனால்தான் இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவாவுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்தார். (யோவா. 6:38; கலா. 1:4) இயேசு தன்னையே ஒரு அடையாளப்பூர்வ பலிபீடத்தில் பலியாக கொடுத்தார். பாவமே இல்லாத தன்னுடைய மனித உயிரை எல்லாருக்காகவும் பலியாக கொடுக்க வேண்டும் என்ற கடவுளுடைய ‘விருப்பம்தான்’ அந்த அடையாளப்பூர்வ பலிபீடம். இயேசு “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” தன்னுடைய உயிரை பலியாகக் கொடுத்ததால், யாரெல்லாம் அவர்மேல் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர் கொடுத்த பலியின் அடிப்படையில் அவர்கள் எல்லாருடைய பாவங்களையும் யெகோவா மொத்தமாக மன்னிக்கிறார். (எபிரெயர் 10:5-7, 10-ஐ வாசியுங்கள்.) அடுத்து, வழிபாட்டுக் கூடாரத்துக்குள் இருந்த சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
பரிசுத்த அறையும் மகா பரிசுத்த அறையும்
12. பரிசுத்த அறைக்குள் யார் போவார்கள்? மகா பரிசுத்த அறைக்குள் யார் போவார்?
12 நிழல். வழிபாட்டுக் கூடாரமும் பின்பு எருசலேமில் கட்டப்பட்ட ஆலயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு உள்ளே இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று, ‘பரிசுத்த அறை,’ இன்னொன்று ‘மகா பரிசுத்த அறை.’ இரண்டிற்கும் நடுவில் ஒரு திரைச்சீலை இருந்தது. (எபி. 9:2-5; யாத். 26:31-33) பரிசுத்த அறைக்குள் ஒரு தங்க குத்துவிளக்கும், தூபபீடமும், படையல் ரொட்டி வைக்கப்பட்ட ஒரு மேஜையும் இருந்தது. இந்த பரிசுத்த அறைக்குள் வந்து சேவை செய்வதற்கு “அபிஷேகம் செய்யப்பட்ட” குருமார்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. (எண். 3:3, 7, 10) மகா பரிசுத்த அறைக்குள் தங்கத்தால் ஆன ஒப்பந்தப் பெட்டி இருந்தது. அது யெகோவாவுடைய பிரசன்னத்துக்கு அடையாளம். (யாத். 25:21, 22) மகா பரிசுத்த அறைக்குள் போவதற்கு தலைமைக் குருவுக்கு மட்டும்தான் அனுமதி இருந்தது. வருஷத்துக்கு ஒரு தடவை பாவப் பரிகார நாள் அன்று திரைச்சீலையை தாண்டி அவர் அந்த அறைக்குள் போவார். (லேவி. 16:2, 17) மிருகங்களுடைய இரத்தத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய பாவங்களுக்காகவும் தேசத்தில் இருந்த எல்லாருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்வதற்காக போவார். காலங்கள் போகப்போக வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்த எல்லா விஷயங்களுக்கும் என்ன அர்த்தம் என்று யெகோவா தன்னுடைய சக்தியை பயன்படுத்தி படிப்படியாக விளக்கினார்.—எபி. 9:6-8. e
13. பரிசுத்த அறையும் மகா பரிசுத்த அறையும் இன்று எதை குறிக்கிறது?
13 நிஜம். சில கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் யெகோவாவுக்கும் இடையே ஒரு விசேஷ உறவு இருக்கிறது. இந்த 1,44,000 பேர் பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து குருமார்களாக சேவை செய்வார்கள். (வெளி. 1:6; 14:1) இவர்கள் பூமியில் இருக்கும்போதே, கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு கடவுளுடைய மகன்களாக இருப்பதை பரிசுத்த அறை குறிக்கிறது. (ரோ. 8:15-17) மகா பரிசுத்த அறை, பரலோகத்தை, அதாவது யெகோவா இருக்கும் இடத்தை, குறிக்கிறது. பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்த ‘திரைச்சீலை’ இயேசுவின் மனித உடலை குறிக்கிறது. இயேசு மனிதராக இருந்தபோது, ஆன்மீக ஆலயத்தின் மாபெரும் தலைமைக் குருவாக பரலோகத்துக்குள் அவரால் போக முடியவில்லை. அந்த உடலை தியாகம் செய்து உயிர்தெழுப்பப்பட்ட பிறகு, அவரால் பரலோகத்துக்குள், அதாவது ஆன்மீக ஆலயத்தின் மகா பரிசுத்த அறைக்குள், போக முடிந்தது. அவர் பரலோகத்துக்கு போனபிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட மற்றவர்களும் பரலோகத்துக்கு போவதற்கான வழியை திறந்துவைத்தார். இவர்களும் பரலோகத்துக்குள் போக வேண்டுமென்றால், இயேசுவைப் போலவே தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டுதான் போக வேண்டும்.—எபி. 10:19, 20; 1 கொ. 15:50.
14. எபிரெயர் 9:12, 24-26 காட்டுவதுபோல் யெகோவாவின் ஆன்மீக ஆலய ஏற்பாடு எந்த விதத்தில் உயர்ந்ததாக இருக்கிறது?
14 மீட்புப் பலியின் அடிப்படையில் தன்னை வணங்குவதற்கு யெகோவா ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார். இயேசுவை தலைமைக் குருவாக நியமித்திருக்கிறார். இது எவ்வளவு உயர்ந்த ஏற்பாடு! இஸ்ரவேலில் இருந்த தலைமைக் குரு, மனிதர்கள் கட்டிய மகா பரிசுத்த அறைக்குள் மிருகங்களின் இரத்தத்தை எடுத்துக்கொண்டு போனார். ஆனால் இயேசு, யெகோவாவின் முன் நிற்பதற்காக ‘பரலோகத்திற்கே போனார்.’ அதைவிட பரிசுத்தமான இடம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? மனிதர்களின் ‘பாவத்தைப் போக்குவதற்கு அவர் தன்னையே பலியாக கொடுத்து,’ அந்த பலியின் மதிப்பை யெகோவாவிடமே போய் கொடுத்தார். (எபிரெயர் 9:12, 24-26-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் பலிதான் மனிதர்களின் பாவத்தை என்றென்றைக்குமாக முழுமையாக துடைத்தழிக்கும். நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, ஆன்மீக ஆலயத்தில் யெகோவாவை வணங்கும் வாய்ப்பு எல்லாருக்குமே இருக்கிறது. அதைப் பற்றி அடுத்து பார்க்கலாம்.
பிரகாரங்கள்
15. வழிபாட்டுக் கூடாரத்தின் பிரகாரத்தில் யார் சேவை செய்தார்கள்?
15 நிழல். வழிபாட்டுக் கூடாரத்தில் ஒரு பிரகாரம் இருந்தது. அதை சுற்றி மறைப்புகள் இருந்தன. அந்த பிரகாரத்தில் குருமார்கள் சேவை செய்தார்கள். தகனபலி செலுத்துவதற்கு அங்கே ஒரு பெரிய செம்பு பலிபீடம் இருந்தது; செம்பு தொட்டியில் தண்ணீரும் இருந்தது. குருமார்கள் தங்கள் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த தண்ணீரை பயன்படுத்தி தங்களையே சுத்தம் செய்துகொள்வார்கள். (யாத். 30:17-20; 40:6-8) பிற்பாடு கட்டப்பட்ட ஆலயங்களில், வெளிப்பிரகாரமும் இருந்தது. குருமார்களாக இல்லாதவர்கள் அங்கே இருந்துதான் கடவுளை வணங்குவார்கள்.
16. ஆன்மீக ஆலயத்தின் உட்பிரகாரத்திலும் வெளிப்பிரகாரத்திலும் யார் சேவை செய்கிறார்கள்?
16 நிஜம். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் மீதியாக இருக்கிறவர்கள் பரலோகத்துக்கு போய் இயேசுவோடு சேர்ந்து குருமார்களாக சேவை செய்வதற்கு முன்பு, ஆன்மீக ஆலயத்தின் பூமிக்குரிய உட்பிரகாரத்தில் உண்மையாக சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒழுக்க விஷயங்களிலும், ஆன்மீக விஷயங்களிலும், அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை பிரகாரத்தில் இருக்கிற பெரிய தண்ணீர் தொட்டி அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. சொல்லப்போனால், எல்லா கிறிஸ்தவர்களுக்குமே அப்படித்தான் இருக்க வேண்டும்! கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உண்மையாக ஆதரவு கொடுக்கும் “திரள் கூட்டமான மக்கள்” எங்கிருந்து யெகோவாவை வணங்குகிறார்கள்? அவர்கள் ‘சிம்மாசனத்துக்கு முன்பு நிற்பதை’ அப்போஸ்தலன் யோவான் பார்த்தார். இது எதற்கு அடையாளமாக இருக்கிறது? பூமியில் இருக்கிற வெளிப்பிரகாரத்துக்கு அடையாளமாக இருக்கிறது. அங்கிருந்துதான் திரள் கூட்டமான மக்கள் “இரவும் பகலும் கடவுளுடைய ஆலயத்தில் அவருக்கு பரிசுத்த சேவை செய்கிறார்கள்.” (வெளி. 7:9, 13-15) யெகோவா தூய வணக்கத்துக்காக செய்திருக்கும் ஏற்பாட்டில் நம் ஒவ்வொருவருக்குமே ஒரு இடத்தை கொடுத்திருக்கிறார். அதை நினைக்கும்போது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா?
யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தில் நமக்கு இருக்கும் இடம்
17. பலி கொடுக்கிற வாய்ப்பு இன்றைக்கு நமக்கு இருக்கிறதா? விளக்குங்கள்.
17 இன்று எல்லா கிறிஸ்தவர்களுக்குமே யெகோவாவுக்கு பலி கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய நேரம், சக்தி, வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கடவுளுடைய அரசாங்கத்துக்கு சேவை செய்யும்போது நாம் கடவுளுக்கு பலி கொடுக்கிறோம் என்று அர்த்தம். அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல், ‘நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்தலாம். அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன் மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்தலாம்.’ (எபி. 13:15) மிக சிறந்த பலிகளை செலுத்துவதன் மூலம், ஆன்மீக ஆலயத்தில் யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் இடத்தை பெரிதாக மதிக்கிறோம் என்பதை காட்டலாம்.
18. எபிரெயர் 10:22-25 சொல்கிற மாதிரி நாம் எதை கண்டிப்பாக செய்ய வேண்டும், நாம் எதை மறந்துவிடக் கூடாது?
18 எபிரெயர் 10:22-25-ஐ வாசியுங்கள். எபிரெயர்களுக்கு கடிதத்தை எழுதி முடிக்கும்போது, யெகோவாவின் வணக்கத்தில் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பவுல் எழுதினார். உதாரணத்துக்கு, ஜெபம் செய்வது, நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாரிடமும் சொல்வது, கூட்டங்களுக்கு வருவது, யெகோவாவின் ‘நாள் நெருங்கி வருவதை எந்தளவுக்குப் பார்க்கிறோமோ, அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது,’ போன்றவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று சொன்னார். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முடிவிலும், “கடவுளை வணங்கு” என்று கடவுளுடைய தூதர் இரண்டு தடவை வலியுறுத்தினார். (வெளி. 19:10; 22:9) அதனால், யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயத்தைப் பற்றிய ஆழமான சத்தியத்தை நாம் மறந்துவிட வேண்டாம். நம் அருமையான கடவுள் யெகோவாவை வணங்குவதற்கு நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியத்தையும் மறந்துவிட வேண்டாம்!
பாட்டு 88 வழிகாட்டுங்கள் என் தேவனே!
a யெகோவாவின் மாபெரும் ஆன்மீக ஆலயம் என்றால் என்ன? கடவுளுடைய வார்த்தையில் இருக்கும் ஆழமான சத்தியங்களில் இதுவும் ஒன்று. எபிரெயர் புத்தகத்தில் இந்த ஆலயத்தைப் பற்றி என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவாவை வணங்க அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கு இன்னும் நன்றியோடு இருக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும்.
b எபிரெயர் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள, எபிரெயர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
c கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், எபிரெயர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மட்டும்தான் இயேசு தலைமைக் குரு என்று அழைக்கப்படுகிறார்.
d கி.பி. 70-ல் எருசலேமில் இருந்த ஆலயம் அழிந்தபோது, இஸ்ரவேல் தேசத்தில் அதுவரை கிட்டத்தட்ட 84 தலைமைக் குருக்கள் சேவை செய்திருக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது.
f தூய வணக்கம்—பூமியெங்கும்! என்ற புத்தகத்தில் பக். 240-ஐ பாருங்கள்.
g ஜூலை 15, 2010 காவற்கோபுரம் பக். 22-ல் “ஆன்மீக ஆலயத்தின் அர்த்தத்தைக் கடவுளுடைய சக்தி வெளிப்படுத்திய விதம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.