1923—நூறு வருஷங்களுக்கு முன்பு
“1923-ம் வருஷம் ரொம்ப விறுவிறுப்பாக இருக்கப்போகிறது” என்று ஜனவரி 1, 1923 காவற்கோபுரம் சொன்னது. “வேதனைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சீக்கிரத்தில் ஒரு அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது . . . என்று அறிவிக்கிற பெரிய பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது” என்றும் அந்த காவற்கோபுரம் சொன்னது. 1923-ல் பைபிள் மாணாக்கர்கள் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் ஊழிய வேலையிலும் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்தார்கள். அதனால், அவர்களுக்குள் இருந்த ஒற்றுமை இன்னும் அதிகமானது.
ஒற்றுமையைப் பலப்படுத்திய கூட்டங்கள்
பைபிள் மாணாக்கர்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமையை அதிகப்படுத்துவதற்காக அந்த வருஷத்தில் அமைப்பு சில மாற்றங்களைச் செய்தது. வாராவாரம் நடந்த ‘ஜெபம், துதி, சாட்சி கூட்டத்தில்’ படித்த வசனங்களுக்கான விளக்கம், காவற்கோபுரத்தில் வெளிவர ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் ஒரு காலண்டரையும் வெளியிட்டார்கள். ஒவ்வொரு வாரத்திலும் அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒரு வசனமும், தனிப்பட்ட படிப்பிலும் குடும்ப வழிபாட்டிலும் பாடுவதற்கான ஒரு பாடலும் அதில் இருந்தன.
ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களை பைபிள் மாணாக்கர்கள் தங்களுடைய கூட்டங்களில் பகிர்ந்துகொண்டார்கள். அதை “சாட்சி சொல்வது” என்று சொன்னார்கள். பிறகு, யெகோவாவுக்கு நன்றி சொல்ல ஏதாவது இருந்தால் அதையும் சொன்னார்கள். அதன் பிறகு, ஒரு பாட்டும் ஜெபமும் இருக்கும். 1923-ல், 15 வயதில் ஞானஸ்நானம் எடுத்த ஈவா பார்னி இப்படிச் சொல்கிறார்: “சாட்சி சொல்ல ஆசைப்படும் ஒருவர் முதலில் எழுந்து நிற்பார். பிறகு, ‘ஆண்டவர் எனக்காக செய்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி’ என்று சொல்லி பேச ஆரம்பிப்பார்.” சில சகோதரர்களுக்கு சாட்சி சொல்வது ரொம்பவே பிடித்திருந்தது. “காட்வின் என்ற வயதான சகோதரர், நிறைய விஷயங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லிக்கொண்டே போவார். ஆனால், கூட்டத்தை நடத்தும் சகோதரரின் முகத்தில், ‘நேரம் ஆகிறதே’ என்ற கவலை தெரிந்தபோது காட்வினின் மனைவி அவருடைய கோட்டைப் பிடித்து இழுப்பார். உடனே சகோதரர் காட்வின் பேசுவதை நிறுத்திவிட்டு உட்கார்ந்துவிடுவார்” என்கிறார் சகோதரி பார்னி.
மாதத்துக்கு ஒரு தடவை, ஒரு விசேஷ ‘ஜெபம், துதி, சாட்சி கூட்டத்தை’ ஒவ்வொரு சபையும் நடத்தியது. அந்தக் கூட்டத்தைப் பற்றி ஏப்ரல் 1, 1923 காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களைச் சாட்சியாகச் சொல்வதற்கும் ஊழியக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்கு இந்தக் கூட்டத்தின் பாதி நேரத்தை ஒதுக்க வேண்டும். . . . பலப்படுத்தும் இந்தக் கூட்டங்கள், நண்பர்களாக நெருங்கிவர சபையில் இருக்கும் எல்லாருக்கும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
19 வயதான சார்ல்ஸ் மார்ட்டின் என்ற ஒரு பிரஸ்தாபி, இந்தக் கூட்டங்களிலிருந்து நிறைய பயன் அடைந்திருக்கிறார். அவர் கனடாவில் இருக்கும் வான்கோவரைச் சேர்ந்தவர். பிற்பாடு அவர் இப்படிச் சொன்னார்: “ஊழியத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பதை முதன்முதலில் நான் இந்தக் கூட்டங்களிலிருந்துதான் கற்றுக்கொண்டேன். ஏனென்றால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கிடைத்த ஏதோவொரு அனுபவத்தைப் பற்றி அடிக்கடி அங்கே சொல்வார்கள். என்னவெல்லாம் பேச வேண்டும்... யாராவது கேள்வி கேட்டால் எப்படிப் பதில் சொல்ல வேண்டும்... என்றெல்லாம் நான் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டேன்.”
ஒற்றுமையைப் பலப்படுத்திய ஊழியம்
“ஊழிய நாட்கள்” என்ற ஏற்பாடுகூட ஒற்றுமைக்கு கைகொடுத்தது. ஏப்ரல் 1, 1923 காவற்கோபுரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது: “ஒரே வேலையைச் செய்வதில்
எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக . . . மே 1, 1923, செவ்வாய்க்கிழமையைப் பொது ஊழிய நாளாக நாங்கள் அறிவிக்கிறோம். இதேபோல், ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையும் ஊழிய நாளாக இருக்கும். . . . சபையில் இருக்கும் எல்லாருமே எப்படியாவது அந்த வேலையில் கலந்துகொள்ள வேண்டும்.”பைபிள் மாணாக்கர்களாக இருந்த இளம் பிள்ளைகள்கூட இந்த வேலையில் கலந்துகொண்டார்கள். அந்தச் சமயத்தில் 16 வயதாக இருந்த சகோதரி ஹேசல் பர்ஃபோர்ட் இப்படிச் சொன்னார்: “நாங்கள் மனப்பாடம் பண்ணி ஊழியத்தில் பேசுவதற்காகச் சில அறிமுகங்களை (இப்படி பேசலாம் பகுதியைப் போன்றது) புலட்டினில் கொடுத்திருப்பார்கள். a நான் என் தாத்தாவோடு சேர்ந்து இந்த வேலைகளைப் பயங்கர ஆர்வமாக செய்துவந்தேன்.” ஆனால், எதிர்பார்க்காத ஓர் இடத்திலிருந்து சகோதரி பர்ஃபோர்டுக்கு எதிர்ப்பு வந்தது. அதைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “நான் ஊழியம் செய்ய கூடாதென்று வயதான ஒரு சகோதரர் சொன்னார். ‘இளம் ஆண்கள், இளம் பெண்கள்’ உட்பட எல்லா பைபிள் மாணாக்கர்களும், படைப்பாளரைப் புகழும் வேலையைச் செய்ய வேண்டும் என்பதை அன்றிருந்த சிலர் புரிந்துகொள்ளவில்லை.” (சங். 148:12, 13) ஆனால், சகோதரி பர்ஃபோர்ட் விடாமல் ஊழியம் செய்தார். கிலியட் பள்ளியின் இரண்டாவது வகுப்பில் கலந்துகொண்டார்; பிறகு, பனாமாவில் மிஷனரியாகச் சேவை செய்தார். காலம் போகப்போக, இளம் பிள்ளைகள் ஊழியம் செய்யக் கூடாதென்று நினைத்த சகோதரர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள்.
ஒற்றுமையைப் பலப்படுத்திய மாநாடுகள்
உள்ளூர் மாநாடுகளும் மண்டல மாநாடுகளும் சகோதரர்களுக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்தின. இதுபோன்ற நிறைய மாநாடுகளில் ஊழிய நாட்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். உதாரணத்துக்கு, மார்ச் 31 அன்று, கனடாவிலுள்ள வின்னிபெக்கில், மாநாட்டில் கலந்துகொண்ட எல்லாரும் ஊழியம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற ஏற்பாடுகள்தான் பைபிள் மாணாக்கர்களின் வளர்ச்சிக்கு உரமானது. ஆகஸ்ட் 5 அன்று வின்னிபெக்கில் நடந்த இன்னொரு மாநாட்டுக்கு கிட்டத்தட்ட 7,000 பேர் வந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் கனடாவில் நடந்த மாநாடுகளிலேயே இந்த மாநாட்டுக்குத்தான் நிறைய பேர் வந்திருந்தார்கள்.
யெகோவாவின் மக்களுடைய ஒரு முக்கியமான மாநாடு 1923-ல் நடந்தது. ஆகஸ்ட் 18-26 வரை கலிபோர்னியாவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் அது நடந்தது. மாநாடு நடப்பதற்கு முந்தைய வாரங்களில், மாநாட்டுக்கான விளம்பரம் நிறைய நியூஸ்பேப்பர்களில் வெளிவந்தது. பைபிள் மாணாக்கர்கள் கிட்டத்தட்ட 5,00,000 அழைப்பிதழ்களைக் கொடுத்தார்கள். வாகனங்களில் விளம்பர பேனர்களையும் ஒட்டியிருந்தார்கள்.
ஆகஸ்ட் 25, சனிக்கிழமை அன்று, “செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபோர்ட் வெளி. 18:2, 4) கொஞ்ச நாளிலேயே, இந்த உறுதிமொழி அச்சடிக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான துண்டுப்பிரதிகளை உலகம் முழுவதும் இருந்த பைபிள் மாணாக்கர்கள் விநியோகித்தார்கள்.
பேச்சு கொடுத்தார். அதில், பூஞ்சோலை பூமியில் வாழப்போகும் நல்மனமுள்ள ஆட்கள்தான் “செம்மறியாடுகள்” என்று சகோதரர் ரதர்ஃபோர்ட் சொன்னார். அதுமட்டுமல்ல, “ஓர் எச்சரிக்கை” என்ற உறுதிமொழியை எல்லார் முன்பாகவும் வாசித்தார். அந்த உறுதிமொழி கிறிஸ்தவமண்டலத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது. நேர்மையுள்ளவர்கள் ‘மகா பாபிலோனைவிட்டு’ வெளியே வரவும் அது உற்சாகப்படுத்தியது. (“பலப்படுத்தும் இந்தக் கூட்டங்கள், நண்பர்களாக நெருங்கிவர சபையில் இருக்கும் எல்லாருக்கும் உதவும்”
மாநாட்டின் கடைசி நாளில், கிட்டத்தட்ட 30,000-க்கும் அதிகமான மக்கள் சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்த பொதுப் பேச்சைக் கேட்டார்கள். அதன் தலைப்பு: “தேசங்களெல்லாம் அர்மகெதோனை நோக்கிச் செல்கின்றன, ஆனால் இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை.” ஒரு பெரிய கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து, புதிதாகக் கட்டப்பட்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். எல்லாருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக ஸ்டேடியத்தின் லவுட்ஸ்பீக்கர் சிஸ்டமை பயன்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் வந்திருந்த ஒரு புதிய தொழில்நுட்பம் அது. நிகழ்ச்சியை இன்னும் நிறைய பேர் ரேடியோ வழியாகவும் கேட்டார்கள்.
உலகம் முழுவதும் பரவிய வேலை
1923-ல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, இந்தியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், பிரசங்க வேலை பயங்கரமாக வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் ஏ. ஜே. ஜோசஃப் என்பவர் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது போன்ற மொழிகளில் பிரசுரங்களைத் தயாரிக்கும் வேலையைக் கவனித்துக்கொண்டார். தன் மனைவியையும் ஆறு பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டே இந்த வேலையையும் செய்தார்.
சியர்ரா லியோனில் ஆல்ஃப்ரெட் ஜோசெஃப், லெனர்ட் ப்ளாக்மேன் என்ற பைபிள் மாணாக்கர்கள், ஊழியம் செய்ய உதவி கேட்டு நியு யார்க், புருக்லினில் இருந்த உலகத் தலைமையகத்துக்கு எழுதினார்கள். ஏப்ரல் 14, 1923-ல் அவர்களுக்குப் பதில் கிடைத்தது. “ஒரு சனிக்கிழமை ராத்திரி திடீரென்று ஒரு ஃபோன்கால் வந்தது” என்று ஆல்ஃப்ரெட் சொன்னார். கணீர் குரலில் ஒருவர், “ஊழியக்காரர்கள் வேண்டும் என்று நீங்கள்தான் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதியிருந்தீர்களா?” என்று கேட்டார். “ஆமாம்” என்று ஆல்ஃப்ரெட் சொன்னார். அப்போது அந்த நபர், “அவர்கள் என்னைத்தான் அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். அந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் வில்லியம் ஆர். ப்ரவுன். அவர் அன்று கரீபியனிலிருந்து தன் மனைவியையும் இரண்டு சின்னப் பெண் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அங்கே வந்திருந்தார். அவருடைய மனைவி பெயர் அன்டோனியா, பிள்ளைகளின் பெயர்கள் லூயிஸ் மற்றும் லூசி. அவர்கள் வந்ததுமே சகோதரர்கள் அவர்களை வரவேற்றார்கள்.
ஆல்ஃப்ரெட் தொடர்ந்து இப்படிச் சொன்னார்: “அடுத்த நாள் காலையில் நானும் லெனர்டும் ஒவ்வொரு வாரமும் செய்வது போல் பைபிளைப் பற்றிக் கலந்துபேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, திடீரென்று எங்கள் வாசலில் வாட்டசாட்டமான ஒருவர் வந்து நின்றார். அவர்தான் சகோதரர் ப்ரவுன். சத்தியத்தின்மேல் அவருக்குப் பயங்கர ஆர்வம் இருந்தது;
அடுத்த நாளே மக்களுக்காக ஒரு பேச்சு கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.” சகோதரர் ப்ரவுன் வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை, அதற்குள் அவர் கொண்டுவந்திருந்த எல்லா பிரசுரங்களையும் ஊழியத்தில் கொடுத்துவிட்டார். மறுபடியும் 5,000 புத்தகங்களை வாங்கி அதையும் கொடுத்து முடித்துவிட்டார். பிறகு, இன்னும் நிறைய புத்தகங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. இருந்தாலும், அவர் புத்தகங்களை விற்கிறவர் என்று பிரபலமாகவில்லை. பைபிள் வசனங்களைப் பயன்படுத்தாமல் அவர் எந்தப் பேச்சையும் கொடுக்கவில்லை. அதனால் ‘பைபிள் ப்ரவுன்’ என்ற பெயரை மக்கள் அவருக்கு வைத்தார்கள். கடைசிவரை அவர் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்தார்.ஜெர்மனியில், பார்மெனிலிருந்த கிளை அலுவலகத்தில் நம் வேலைகளையெல்லாம் செய்வதற்கு இடம் போதவில்லை. அதேசமயத்தில், பிரான்சு நாட்டுப் படை இந்த நகரத்தின்மேல் தாக்குதல் நடத்தப்போகிறது என்ற செய்தியும் வந்துகொண்டே இருந்தது. அப்போது, மாக்டபர்க் என்ற இடத்திலிருந்த ஒரு கட்டிடத்தை பைபிள் மாணாக்கர்கள் கண்டுபிடித்தார்கள். ப்ரிண்டிங் வேலைகளைச் செய்வதற்கு அந்த இடம் வசதியாக இருக்கும் என்று சகோதரர்கள் நினைத்தார்கள். ஜூன் 19 அன்று, ப்ரிண்டிங் மெஷின்களையும் மற்ற பொருள்களையும் பேக் செய்து, பழைய இடத்திலிருந்து மாக்டபர்கிலிருந்த புதிய பெத்தேலுக்குக் கொண்டுபோனார்கள். புதிய இடத்துக்கு மாறி போய்விட்டோம் என்ற செய்தி உலகத் தலைமையகத்துக்குப் போய்ச் சேர்ந்த அதே நாளில், பிரான்சு நாட்டுப் படை பார்மென் நகரத்தைக் கைப்பற்றிவிட்டது என்ற செய்தியும் செய்தித்தாள்களில் வெளிவந்தது. புது பெத்தேலுக்கு மாறியது யெகோவாவின் வழிநடத்துதல்தான் என்பதையும், அவருடைய பாதுகாப்பு தங்களுக்கு இருந்ததையும் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள்.
பிரேசிலில், ஒரு புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டு, போர்ச்சுகீஸ் மொழியில் காவற்கோபுரம் பிரசுரிக்கப்பட்டது. நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காக நிறைய இடங்களுக்குப் பயணம் செய்த ஜார்ஜ் யங் இந்த வேலைகளை செய்தார். ஒருசில மாதங்களிலேயே, 7,000-க்கும் அதிகமான பிரசுரங்களை ஊழியத்தில் அவர் கொடுத்தார். அவர் பிரேசிலுக்கு வந்ததால், சாரா ஃபர்கசன் என்ற பெண்ணுக்கு ஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. அவர் 1899-லிருந்து காவற்கோபுர பத்திரிகைகளை தொடர்ந்து படித்துவந்திருந்தார். ஆனால், ஞானஸ்நானம் எடுக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஜார்ஜ் யங் வந்து ஒருசில மாதங்களிலேயே சாரா ஃபர்கசனும் அவருடைய நான்கு பிள்ளைகளும் ஞானஸ்நானம் எடுக்க முடிந்தது.
“யெகோவாவுக்குச் சந்தோஷத்தோடு சேவை செய்யலாம்”
கூட்டங்களில், ஊழியத்தில், மற்றும் மாநாடுகளில் செய்த மாற்றங்களால் பைபிள் மாணாக்கர்களுக்குக் கிடைத்த நல்ல பலன்களைப் பற்றி அந்த வருஷத்தின் கடைசியில் வந்த காவற்கோபுரம் (டிசம்பர் 15, 1923) சொன்னது: “சபையில் . . . பலமான விசுவாசத்தை எங்களால் பார்க்க முடிகிறது. . . . கவசத்தைப் போட்டுக்கொண்டு சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் அடுத்த வருஷத்தில் காலடி எடுத்து வைக்கலாம். எப்போதும்போல் யெகோவாவுக்குச் சந்தோஷத்தோடு சேவை செய்யலாம்.”
அடுத்த வருஷம் பைபிள் மாணாக்கர்களுக்கு ரொம்ப முக்கியமான வருஷமாக இருந்தது. பெத்தேலில் இருந்த சகோதரர்கள், ஸ்டேட்டன் தீவில் ஒரு நிலத்தை வாங்கி சில கட்டுமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த இடம், புருக்லினிலிருந்த நம் தலைமையகத்துக்குக் கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது. 1924-ன் ஆரம்பத்தில், கட்டடங்களும் அங்கே கட்டி முடிக்கப்பட்டன. இந்த புதிய கட்டடங்கள், உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களின் ஒற்றுமைக்கும், யோசித்தே பார்க்காத விதங்களில் நல்ல செய்தி சொல்லப்படுவதற்கும் உதவின.
a தற்போது நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்.