Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

அன்றிருந்த இஸ்ரவேல் தேசத்தில் இசை எந்தளவு முக்கியமாக இருந்தது?

அன்றிருந்த இஸ்ரவேலர்களுடைய கலாச்சாரம், இசையைச் சுற்றித்தான் இருந்தது. பைபிளில் நிறைய இடங்களில் இசைக் கருவிகளைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், பைபிளில் கிட்டத்தட்ட பத்து சதவீதம் பாடல்கள்தான்! உதாரணத்துக்கு, சங்கீதம், உன்னதப்பாட்டு, புலம்பல் புத்தகங்களைச் சொல்லலாம். “இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கையில் இசை பின்னிப்பிணைந்து இருந்ததை பைபிள் ரொம்ப அழகாகக் காட்டுகிறது” என்று மியூசிக் இன் பிப்ளிக்கல் லைஃப் புத்தகம் சொல்கிறது.

அன்றாட வாழ்க்கையில் இசை. இஸ்ரவேலர்கள் இசை கருவிகள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் மனதில் இருக்கிற உணர்ச்சிகளை வெளிக்காட்டினார்கள். (ஏசா. 30:29) ஒரு ராஜா முடிசூட்டப்படும்போது, போரில் வெற்றி கிடைத்தபோது, மற்ற பண்டிகைகளின்போது பெண்கள் கஞ்சிராவை வாசித்தார்கள், சந்தோஷமாக ஆடிப்பாடினார்கள். (நியா. 11:34; 1 சா. 18:6, 7; 1 ரா. 1:39, 40) ஒருவர் இறக்கும்போது, தங்களுடைய அடிமனதின் வேதனையை வெளிப்படுத்துவதற்கு இஸ்ரவேலர்கள் புலம்பல் பாடல்களைப் பாடினார்கள். (2 நா. 35:25) “எபிரெயர்கள் இசைப்பிரியர்கள்” என்பதில் சந்தேகமே இல்லை என்று மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங்-ன் சைக்ளோப்பீடியா சொல்கிறது.

அரண்மனையில் இசை. இஸ்ரவேல் ராஜாக்களும் இசையை ரொம்ப நேசித்தார்கள். சவுல் ராஜா, தாவீதை இசைக் கலைஞராக வேலை செய்ய தன்னுடைய அரண்மனைக்குக் கூப்பிட்டார். (1 சா. 16:18, 23) தாவீது ராஜாவாக ஆன பிறகு, அவரே புதிய இசைக் கருவிகளை உருவாக்கினார், இனிமையான பாடல்களை எழுதினார், யெகோவாவுடைய ஆலயத்தில் பாடல்களைப் பாடுவதற்கு இசைக் குழுக்களையும் ஒழுங்கமைத்தார். (2 நா. 7:6; ஆமோ. 6:5) சாலொமோன் ராஜாவும் தன்னுடைய அரண்மனையில் பாடகர்களையும் பாடகிகளையும் வைத்திருந்தார்.—பிர. 2:8.

வணக்கத்தில் இசை. எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவாவை வணங்குவதற்காக இஸ்ரவேலர்கள் இசையைப் பயன்படுத்தினார்கள். சொல்லப்போனால், எருசலேம் ஆலயத்தில் 4,000 இசைக் கலைஞர்கள் இருந்தார்கள். (1 நா. 23:5) அவர்கள் ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் எக்காளங்களையும் வாசித்தார்கள். (2 நா. 5:12) வெறும் இசைக் கலைஞர்கள் மட்டுமல்ல, மற்ற ஜனங்களும் பாடல்களைப் பாடி யெகோவாவை வணங்கினார்கள். எருசலேமில் நடந்த பண்டிகைகளுக்காக பயணம் செய்த சமயங்களில் நிறைய இஸ்ரவேலர்கள் பாடல்களைப் பாடினார்கள் என்று தெரிகிறது; அது “ஏறுதலின் பாடல்” என்று சொல்லப்படுகிறது. (சங். 120–134) அதுமட்டுமல்ல, பஸ்கா உணவைச் சாப்பிடுகிற சமயத்தில் இஸ்ரவேலர்கள் அல்லேல் சங்கீதங்களை a பாடினார்கள் என்று யூத புத்தகங்கள் சொல்கின்றன.

இன்றைக்கும் யெகோவாவின் மக்களுக்கு இசை ரொம்ப முக்கியம். (யாக். 5:13) யெகோவாவை வணங்குவதற்காக நாம் பாடல்களைப் பாடுகிறோம். (எபே. 5:19) சகோதர சகோதரிகளாக நம் எல்லாரையுமே இசை ஒன்றிணைக்கிறது. (கொலோ. 3:16) கஷ்டங்களைச் சமாளிப்பதற்கும் அது பலத்தைக் கொடுக்கிறது. (அப். 16:25) யெகோவாமேல் இருக்கும் விசுவாசத்தையும் அன்பையும் இசை மூலமாக நம்மால் காட்ட முடிகிறது.

a சங்கீதம் 113-118-ஐ அல்லேல் சங்கீதங்கள் என்று யூதர்கள் சொன்னார்கள். யெகோவாவைப் புகழ்வதற்காக அதைப் பாடினார்கள்.