Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 42

பாட்டு 103 மேய்ப்பர்கள் —கடவுள் தரும் பரிசு

‘மனிதர்களில் பரிசுகள்’—நன்றி காட்டுங்கள்!

‘மனிதர்களில் பரிசுகள்’—நன்றி காட்டுங்கள்!

“[இயேசு] மேலே ஏறிப்போனபோது, . . . மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்.”எபே. 4:8.

என்ன கற்றுக்கொள்வோம்?

உதவி ஊழியர்களும் மூப்பர்களும் வட்டாரக் கண்காணிகளும் நமக்கு எப்படி உதவுகிறார்கள் என்றும், அவர்களுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. இயேசு நமக்காக என்னென்ன பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்?

 மற்றவர்களுக்குத் தாராளமாக உதவி செய்வதில் இயேசுவை மாதிரி வேறெந்த மனிதரும் இதுவரை இருந்ததில்லை. பூமியில் வாழ்ந்தபோது, அற்புதம் செய்ய தனக்கு இருந்த சக்தியைத் தாராளமாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவினார். (லூக். 9:12-17) எல்லாவற்றுக்கும் மேல், தன்னுடைய உயிரையே மனிதர்களுக்காகக் கொடுத்தார். (யோவா. 15:13) உயிர்த்தெழுந்த பிறகும்கூட, மற்றவர்களுக்குத் தாராளமாக உதவினார். வாக்கு கொடுத்த மாதிரியே, யெகோவாவிடம் கேட்டு அவருடைய சக்தி நமக்குக் கிடைக்கும்படி செய்தார். அந்தச் சக்தி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, நம்மை ஆறுதல்படுத்துகிறது. (யோவா. 14:16, 17, அடிக்குறிப்பு; 16:13) சீஷராக்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய சபைக் கூட்டங்கள் மூலமாக இயேசு பயிற்சி கொடுத்துக்கொண்டு வருகிறார்.—மத். 28:18-20.

2. எபேசியர் 4:7, 8 சொல்வதுபோல் யாரெல்லாம் ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிறார்கள்?

2 இயேசு கொடுத்த இன்னொரு பரிசைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர் பரலோகத்துக்குப் போன பிறகு “மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபேசியர் 4:7, 8-ஐ வாசியுங்கள்.) வித்தியாசமான விதங்களில் சபைக்கு உதவி செய்ய இயேசு இவர்களைப் பரிசுகளாகக் கொடுத்திருக்கிறார் என்று பவுல் விளக்கினார். (எபே. 1:22, 23; 4:11-13) உதவி ஊழியர்கள், சபை மூப்பர்கள் மற்றும் வட்டாரக் கண்காணிகள் இன்று ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிறார்கள். a இவர்கள் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்கள்; அதனால், சில தவறுகளைச் செய்யலாம். (யாக். 3:2) ஆனால், நமக்கு உதவி செய்ய நம் எஜமான் இயேசு கிறிஸ்து இவர்களைப் பயன்படுத்துகிறார். இவர்கள் எல்லாரும் இயேசு நமக்காகக் கொடுத்த பரிசுகள்!

3. ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிறவர்கள் செய்கிற வேலைகளுக்கு நாம் எப்படி ஆதரவு கொடுக்கலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

3 ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருப்பவர்களுக்குச் சபையைப் பலப்படுத்தும் பொறுப்பை இயேசு கொடுத்திருக்கிறார். (எபே. 4:12) அவர்கள் இந்த முக்கியமான பொறுப்பைச் செய்ய நாமும் உதவலாம். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் நம்மில் சிலர் நேரடியாக ஈடுபடலாம். ஆனால் வேறுசிலர், அந்த வேலைக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். சாப்பாடு மற்றும் கட்டுமான பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள்; மற்ற விதங்களிலும் உதவுகிறார்கள். அதேபோல், உதவி ஊழியர்கள், மூப்பர்கள், வட்டாரக் கண்காணிகள் செய்கிற வேலைகளுக்கு நம்மாலும் ஆதரவு கொடுக்க முடியும்; நம்முடைய சொல்லாலும் செயலாலும் அதைக் கொடுக்க முடியும். ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிறவர்கள் கடினமாக உழைப்பதால் நமக்கு என்ன நன்மை என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவர்களுக்கும் இயேசுவுக்கும் எப்படி நன்றி காட்டலாம் என்றும் பார்ப்போம்.

உதவி கரம் நீட்டும் உதவி ஊழியர்கள்

4. முதல் நூற்றாண்டில் உதவி ஊழியர்கள் என்ன மாதிரியான “உதவிகள்” செய்தார்கள்?

4 முதல் நூற்றாண்டில் சில சகோதரர்கள் உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட்டார்கள். (1 தீ. 3:8) மற்றவர்களுக்கு “உதவிகள் செய்கிறவர்கள்” என்று 1 கொரிந்தியர் 12:28-ல் பவுல் எழுதியபோது, இவர்களை மனதில் வைத்து எழுதியிருக்கலாம். அன்றிருந்த உதவி ஊழியர்கள், நிறைய முக்கியமான விஷயங்களில் உதவினார்கள் என்று தெரிகிறது. உதாரணத்துக்கு, வேதவசனங்களை நகல் எடுப்பதற்கு அல்லது அதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு உதவியிருக்கலாம். அதனால், மூப்பர்களால் கற்றுக்கொடுப்பதிலும் ஆடுகளைக் கவனித்துக்கொள்வதிலும் முழு கவனம் செலுத்த முடிந்திருக்கும்.

5. இன்று உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள்?

5 உங்கள் சபையில் இருக்கிற உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். (1 பே. 4:10) சபையின் கணக்கு வழக்குகளைக் கவனித்துக்கொள்வது... ஊழியப் பகுதியை ஒழுங்கமைப்பது... பிரசுரங்களை ஆர்டர் செய்வது... அதைப் பிரஸ்தாபிகளுக்குக் கொடுப்பது... ஆடியோ வீடியோ இலாக்காவில் வேலை செய்வது... அட்டன்டண்டுகளாக வேலை செய்வது... ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பது... போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். இந்த வேலைகள் சபை ஒழுங்காகச் செயல்படுவதற்குக் கைகொடுக்கிறது. (1 கொ. 14:40) சில உதவி ஊழியர்கள் வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் பகுதிகளை நடத்துகிறார்கள்; பொது பேச்சுகளைக் கொடுக்கிறார்கள். வேறுசிலர், தொகுதி கண்காணிகளுக்கு உதவி செய்ய நியமிக்கப்படுகிறார்கள். சிலசமயங்களில், தகுதிபெற்ற உதவி ஊழியர்கள் மூப்பர்களோடு சேர்ந்து மேய்ப்பு சந்திப்புகளுக்கும் போகிறார்கள்.

6. கடினமாக உழைக்கிற உதவி ஊழியர்களுக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்கிறோம்?

6 உதவி ஊழியர்கள் செய்கிற வேலைகளால் சபையில் இருக்கிறவர்கள் எப்படி நன்மையடைகிறார்கள்? பொலிவியாவில் இருக்கிற பெபர்லி b என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “உதவி ஊழியர்களுக்கு நான் நன்றியோடு இருக்கிறேன். அவர்கள் செய்கிற வேலைகளால் கூட்டங்களை என்னால் முழுமையாக அனுபவிக்க முடிகிறது. என்னால் பாட்டு பாட முடிகிறது, பதில்களைச் சொல்ல முடிகிறது, பேச்சுகளைக் கேட்க முடிகிறது, வீடியோக்களையும் படங்களையும் பார்த்து கற்றுக்கொள்ள முடிகிறது. ராஜ்ய மன்றம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலமாகக் கூட்டங்களில் கலந்துகொள்ள உதவுகிறார்கள். கூட்டங்கள் முடிந்த பிறகு, ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறார்கள். சபையின் கணக்கு வழக்குகளைப் பார்க்கிறார்கள். நம் எல்லாருக்கும் பிரசுரங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இவர்கள் செய்கிற எல்லா வேலைகளுக்கும் நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்!” கொலம்பியாவில் இருக்கிற லெஸ்லி என்ற சகோதரியின் கணவர் மூப்பராகச் சேவை செய்கிறார். லெஸ்லி சொல்கிறார்: “நிறைய வேலைகளைச் செய்வதற்கு உதவி ஊழியர்களைத்தான் என் கணவர் நம்பியிருக்கிறார். அவர்கள் மட்டும் இல்லையென்றால், என்னுடைய கணவர் இன்னும் பிஸியாக இருந்திருப்பார். உதவி ஊழியர்கள் மனசார உதவி செய்வதற்காக நான் அவர்களுக்கு நன்றியோடு இருக்கிறேன்.” நீங்களும் இவர்களைப் போலத்தானே உணர்கிறீர்கள்?—1 தீ. 3:13.

7. உதவி ஊழியர்களுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)

7 உதவி ஊழியர்கள் செய்கிற வேலைகளைப் பற்றி நினைக்கும்போது நம்முடைய மனதில் நன்றி பொங்கலாம். ஆனால், “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (கொலோ. 3:15) பின்லாந்தில் இருக்கிற கிறிஸ்டாஃப் என்ற மூப்பர் நன்றியோடு இருப்பதை எப்படிக் காட்டுகிறார் என்று பாருங்கள்: “நான் அவர்களுக்கு ஒரு கார்டை அல்லது மெசேஜை அனுப்புவேன். அதில் ஒரு வசனத்தை எழுதுவேன். அவர்கள் எந்த விதத்தில் எனக்கு உதவியாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பாகச் சொல்வேன். அல்லது, அவர்கள் செய்கிற வேலைகளைப் பாராட்டுவதாகச் சொல்வேன்.” நியூ கலிடோனியாவில் வாழ்கிற பாஸ்கல்-ஜேயல் தம்பதி உதவி ஊழியர்களுக்காகக் குறிப்பாக ஜெபம் செய்கிறார்கள். பாஸ்கல் சொல்கிறார்: “இப்போதெல்லாம், சபையில் பொறுப்பில் இருக்கிற சகோதரர்களுக்காக நாங்கள் ஜெபத்தில் மன்றாடுகிறோம். அவர்களுக்காக நன்றி சொல்கிறோம்.” இந்த மாதிரி ஜெபங்களை யெகோவா கண்டிப்பாகக் கேட்பார். அதனால் முழு சபையும் பிரயோஜனமடையும்.—2 கொ. 1:11.

‘கடினமாக உழைக்கும்’ மூப்பர்கள்

8. முதல் நூற்றாண்டிலிருந்த மூப்பர்கள் ‘கடினமாக உழைத்தார்கள்’ என்று பவுல் ஏன் எழுதினார்? (1 தெசலோனிக்கேயர் 5:12, 13)

8 முதல் நூற்றாண்டிலிருந்த மூப்பர்கள் சபைக்காகக் கடினமாக உழைத்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ வாசியுங்கள்; 1 தீ. 5:17) அவர்கள் சபையை ‘வழிநடத்தினார்கள்,’ அதாவது சபை கூட்டங்களை நடத்தினார்கள். மூப்பர் குழுவாக முடிவுகளை எடுத்தார்கள். சபையில் இருந்த சகோதர சகோதரிகளுக்கு ‘புத்திசொன்னார்கள்,’ அதாவது சபையைப் பாதுகாக்கக் குறிப்பாகச் சில ஆலோசனைகளை அன்பாகக் கொடுத்தார்கள். (1 தெ. 2:11, 12; 2 தீ. 4:2) அதேசமயத்தில், இந்த மூப்பர்கள் தங்கள் குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும் ஆன்மீக விதத்தில் தங்களையே பலமாக வைத்துக்கொள்ளவும் கடினமாக உழைத்தார்கள்.—1 தீ. 3:2, 4; தீத். 1:6-9.

9. இன்று மூப்பர்கள் என்னென்ன பொறுப்புகளையெல்லாம் செய்கிறார்கள்?

9 இன்று மூப்பர்கள் பம்பரமாகச் சுற்றுகிறார்கள். அவர்கள் நற்செய்தியாளர்களாக இருக்கிறார்கள். (2 தீ. 4:5) ஊழியம் செய்வதில் நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். ஊழிய வேலைகளை ஒழுங்கமைக்கிறார்கள். ஊழியம் செய்வதற்கும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் நமக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். பாரபட்சம் பார்க்காத இரக்கமுள்ள நீதிபதிகளாகவும் மூப்பர்கள் சேவை செய்கிறார்கள். ஒரு கிறிஸ்தவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால், அவருக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்தைச் சரிசெய்ய மூப்பர்கள் உதவுகிறார்கள். அதேசமயத்தில், சபை சுத்தமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றையும் செய்கிறார்கள். (1 கொ. 5:12, 13; கலா. 6:1) முக்கியமாக, மூப்பர்கள் மேய்ப்பர்களாக இருக்கிறார்கள். (1 பே. 5:1-3) நன்றாகத் தயாரித்து பைபிள் அடிப்படையில் பேச்சுகளைக் கொடுக்கிறார்கள். சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கிறார்கள், மேய்ப்பு சந்திப்புகளைச் செய்கிறார்கள். சில மூப்பர்கள் ராஜ்ய மன்ற கட்டுமான மற்றும் பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள், மாநாடு சம்பந்தப்பட்ட வேலைகளை ஒழுங்கமைக்கிறார்கள், மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுக்களிலும், நோயாளி சந்திப்பு குழுக்களிலும் வேலை செய்கிறார்கள். இன்னும் நிறையப் பொறுப்புகளும் மூப்பர்களுக்கு இருக்கின்றன. மூப்பர்கள் உண்மையிலேயே நமக்காகக் கடினமாக உழைக்கிறார்கள், இல்லையா?

10. கடினமாக உழைக்கிற மூப்பர்களுக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்கிறோம்?

10 மேய்ப்பர்கள் நம்மை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள் என்றும் நாம் ‘பயமோ திகிலோ இல்லாமல் நிம்மதியாக இருப்போம்’ என்றும் யெகோவா முன்பே சொல்லியிருந்தார். (எரே. 23:4) யெகோவா சொன்னது எவ்வளவு உண்மை என்பதை பின்லாந்தில் இருக்கிற யொஹன்னா என்ற சகோதரி உணர்ந்தார். அவருடைய அம்மா ஒரு வியாதியால் ரொம்பக் கஷ்டப்பட்டார். யொஹன்னா இப்படிச் சொல்கிறார்: “பொதுவாக, என் மனதில் இருப்பதைச் சீக்கிரத்தில் சொல்லிவிட மாட்டேன். ஆனால், எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாத ஒரு மூப்பர் என்னிடம் ரொம்பப் பொறுமையாக இருந்தார். நான் அவரிடம் பேசும்போது அவர் கவனித்துக் கேட்டார். என்னோடு சேர்ந்து ஜெபம் செய்தார். யெகோவாவுக்கு உண்மையிலேயே என்மேல் அன்பு இருக்கிறது என்பதைப் புரிய வைத்தார். அந்தச் சமயத்தில், அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், அப்போது நான் ரொம்பப் பாதுகாப்பாக உணர்ந்தேன். அது எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. எனக்கு உதவி செய்ய யெகோவாதான் சரியான நேரத்தில் அவரை அனுப்பினார் என்று நம்புகிறேன்.” உங்கள் சபையில் இருக்கிற மூப்பர்கள் உங்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்கள்?

11. நாம் எப்படி மூப்பர்களுக்கு நன்றி காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)

11 மூப்பர்கள் நமக்காக ‘உழைப்பதால்’ நாம் அவர்களுக்கு நன்றி காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 தெ. 5:12, 13) பின்லாந்தில் இருக்கிற ஹென்ரிட்டா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “மூப்பர்கள் ஓடி ஓடி உதவி செய்வது உண்மைதான். அதற்காக, அவர்களுக்கு நிறைய நேரமும் சக்தியும் இருக்கிறது... வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லை... என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. சிலசமயத்தில் அவர்களிடம் போய், ‘நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல மூப்பர்! இதை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன்’ என்று நான் சொல்வேன்.” துருக்கியில் இருக்கிற செரா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “தொடர்ந்து ஓடுவதற்கு மூப்பர்களுக்கும் ‘பெட்ரோல்’ தேவை. அதனால் நாம் அவர்களுக்கு கார்டு எழுதிக் கொடுக்கலாம். அவர்களைச் சாப்பிட கூப்பிடலாம். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம்.” யாராவது ஒரு மூப்பரை நீங்கள் குறிப்பாகப் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், அவரைப் பாராட்ட என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.—1 கொ. 16:18.

நியமிக்கப்பட்ட சகோதரர்கள் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தேவையான உற்சாகத்தை நாம் கொடுக்கலாம் (பாரா 7, 11, 15)


பலப்படுத்தும் வட்டாரக் கண்காணிகள்

12. முதல் நூற்றாண்டில் சபைகளைப் பலப்படுத்துவதற்கு என்ன ஏற்பாடு இருந்தது? (1 தெசலோனிக்கேயர் 2:7, 8)

12 சபைக்கு வேறு விதத்தில் உதவ இயேசு சிலரை நியமித்திருக்கிறார். இயேசுவின் வழிநடத்துதலின் கீழ், எருசலேமிலிருந்த மூப்பர்கள், பவுலையும் பர்னபாவையும் இன்னும் சிலரையும் பயணக் கண்காணிகளாக அனுப்பினார்கள். (அப். 11:22) ஏன்? உதவி ஊழியர்களும் மூப்பர்களும் எதற்காக நியமிக்கப்பட்டார்களோ அதே காரணத்துக்காகத்தான். அதாவது, சபைகளைப் பலப்படுத்துவதற்காகத்தான்! (அப். 15:40, 41) இந்த ஆண்கள் தங்களுடைய சவுகரியங்களைத் தியாகம் செய்தார்கள். மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் உயிரைக்கூட பணயம் வைத்தார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8 வாசியுங்கள்.

13. வட்டாரக் கண்காணிகளுக்கு இருக்கும் சில பொறுப்புகள் என்ன?

13 வட்டாரக் கண்காணிகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து சபைகளைச் சந்திக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும், வட்டாரக் கண்காணி நிறையப் பேச்சுகளைக் கொடுக்கிறார், மேய்ப்பு சந்திப்புகளைச் செய்கிறார், பயனியர்களோடும் மூப்பர்களோடும் கூட்டம் நடத்துகிறார், ஊழியக் கூட்டங்களை நடத்துகிறார். அதுமட்டுமல்ல, அவர் நிறையப் பேச்சுகளைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது. வட்டார மாநாடுகளையும் மண்டல மாநாடுகளையும் ஒழுங்கமைக்கிற வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பயனியர் ஊழியப் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார். வட்டாரத்தில் இருக்கிற பயனியர்களுக்காக விசேஷக் கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். அதோடு, கிளை அலுவலகம் அவருக்குக் கொடுக்கும் வேலைகளை, சிலசமயங்களில் அவசரமாக செய்ய வேண்டிய வேலைகளையும் செய்கிறார்.

14. கடினமாக உழைக்கிற வட்டாரக் கண்காணிகளுக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்கிறோம்?

14 வட்டாரக் கண்காணிகள் செய்யும் வேலைகளிலிருந்து சபைகள் எப்படி நன்மையடைகின்றன? இதைப் பற்றி துருக்கியில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சகோதர சகோதரிகளோடு நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும் என்ற என்னுடைய ஆசை வட்டாரக் கண்காணியின் சந்திப்பு வரும்போது அதிகமாகிறது. நான் நிறைய வட்டாரக் கண்காணிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒருவர்கூட ரொம்ப பிஸியாக இருக்கிற மாதிரியோ தங்களிடம் பேச முடியாத மாதிரியோ நடந்துகொண்டது இல்லை.” நாம் முன்பு பார்த்த யொஹன்னா, வட்டாரக் கண்காணியோடு ஊழியம் செய்தார்; ஊழியத்தில் அவர்கள் ஒருவரைக்கூட சந்திக்கவில்லை. ஆனால், அந்த நாளைப் பற்றி யொஹன்னா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளை நான் மறக்கவே மாட்டேன். என்னுடைய இரண்டு சகோதரிகள் அப்போதுதான் ரொம்பத் தூரமாகக் குடிமாறி போயிருந்தார்கள். அது எனக்குக் கஷ்டமாக இருந்தது. வட்டாரக் கண்காணி என்னை உற்சாகப்படுத்தினார். ‘நம் குடும்பத்தில் இருக்கிறவர்களோடு இப்போது ஒன்றாக இருக்க முடியாமல் போகலாம். ஆனால் புதிய உலகத்தில், அவர்களோடு காலங்காலமாக வாழ்வோம்’ என்று சொன்னார்.” வட்டாரக் கண்காணிகளோடு இதுபோன்ற இனிமையான நினைவுகள் உங்களுக்கும் கண்டிப்பாக இருக்கும்!—அப். 20:37–21:1.

15. (அ) 3 யோவான் 5-8 சொல்கிற மாதிரி, நாம் எப்படி வட்டாரக் கண்காணிகளுக்கு நன்றி காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) பொறுப்பில் இருக்கிற சகோதரர்களுடைய மனைவிகளுக்கு நாம் ஏன் நன்றியோடு இருக்க வேண்டும், நம்முடைய நன்றியை எப்படிக் காட்டலாம்? (“ அவர்களுடைய மனைவிகளை மறந்துவிடாதீர்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 அப்போஸ்தலன் யோவான் காயுவிடம் சபையைச் சந்திக்க வந்த சகோதரர்களை உபசரிக்க சொன்னார். அவர்களை “கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வழியனுப்பி” வைக்கவும் சொன்னார். (3 யோவான் 5-8-ஐ வாசியுங்கள்.) இதை நாம் எப்படிச் செய்யலாம்? ஒரு வழி, வட்டாரக் கண்காணியைச் சாப்பிடக் கூப்பிடலாம். இன்னொரு வழி, அவருடைய சந்திப்பு சமயத்தில் ஊழியத்துக்காகச் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கலாம். நாம் முன்பு பார்த்த சகோதரி லெஸ்லி வட்டாரக் கண்காணிக்கு மற்ற விதங்களிலும் நன்றி காட்டுகிறார். அவர் சொல்கிறார்: “அவர்களுடைய தேவைகளைப் பார்த்துக்கொள்ள சொல்லி நான் யெகோவாவிடம் ஜெபம் பண்ணுவேன். நானும் என்னுடைய கணவரும் அவர்களுக்குக் கடிதங்களை எழுதி கொடுத்திருக்கிறோம். அவர்களுடைய சந்திப்புகள் எங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கின்றன என்பதை அதில் சொல்லியிருக்கிறோம்.” வட்டாரக் கண்காணிகள் சூப்பர் ஹீரோக்கள் கிடையாது; நம்மை மாதிரி சாதாரண ஆட்கள்தான்! அதனால், அவர்களுக்கும் உடம்பு முடியாமல் போகலாம், கவலை வரலாம், சிலசமயங்களில் சோர்ந்துகூட போய்விடலாம். நாம் பேசும் அன்பான வார்த்தைகள் அல்லது கொடுக்கும் ஒரு சின்ன அன்பளிப்பு அவர்களுடைய ஜெபத்துக்குப் பதிலாக இருக்கலாம்!—நீதி. 12:25.

நமக்கு ‘மனிதர்களில் பரிசுகள்’ தேவை

16. நீதிமொழிகள் 3:27 சொல்கிற மாதிரி, சகோதரர்கள் எதைப் பற்றியெல்லாம் யோசிக்கலாம்?

16 உலகம் முழுவதும் ‘மனிதர்களில் பரிசுகளாக’ சேவை செய்ய நிறையச் சகோதரர்கள் தேவை. நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரராக இருந்தால், ‘உதவி செய்ய சக்தி இருக்கும்போதே’ பொறுப்புகளை எடுத்துச் செய்வதைப் பற்றி ஏன் யோசித்துப் பார்க்கக் கூடாது? (நீதிமொழிகள் 3:27-ஐ வாசியுங்கள்.) உதவி ஊழியராக ஆவதற்கு முயற்சி எடுப்பதைப் பற்றி யோசியுங்கள். ஏற்கெனவே நீங்கள் ஒரு உதவி ஊழியராக இருந்தால், மூப்பராக ஆகி சகோதரர்களுக்கு உதவி செய்வதைப் பற்றி யோசியுங்கள். c ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கு ஏற்றமாதிரி உங்கள் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். இயேசு உங்களை இன்னும் நன்றாகப் பயன்படுத்துவதற்கு அந்தப் பள்ளி பயிற்சி கொடுக்கும். ஒருவேளை, இதற்கெல்லாம் தகுதியில்லை என்று உங்களுக்குத் தோன்றினால், யெகோவாவிடம் ஜெபம் பண்ணுங்கள். உங்களுக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதை நல்லபடியாக செய்ய அவருடைய சக்தியைக் கேளுங்கள்.—லூக். 11:13; அப். 20:28.

17. ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிற சகோதரர்களைப் பார்க்கும்போது எதைப் புரிந்துகொள்ள முடிகிறது?

17 இந்தக் கடைசி நாட்களில் நம்மை வழிநடத்துவதற்கு ‘மனிதர்களில் பரிசுகளை’ இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர்கள் கடினமாக உழைப்பதைப் பார்க்கும்போது, இயேசுதான் நம்மை வழிநடத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (மத். 28:20) அன்புள்ள, தாராள குணமுள்ள ஒரு ராஜா நமக்குக் கிடைத்திருக்கிறார். நம்மைப் பார்த்துப் பார்த்து வழிநடத்துவதற்காகத் தகுதியுள்ள சகோதரர்களையும் அவர் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! கடினமாக உழைக்கிற இந்தச் சகோதரர்களுக்கு நன்றியைக் காட்ட நாம் வாய்ப்புகளைத் தேட வேண்டும். அதேசமயத்தில், யெகோவாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” அவரிடமிருந்துதான் வருகின்றன.—யாக். 1:17.

பாட்டு 99 மாபெரும் ஒரு குடும்பம்

a ஆளும் குழு அங்கத்தினர்கள், ஆளும் குழுவின் உதவியாளர்கள், கிளை அலுவலக குழு அங்கத்தினர்கள், வேறுசில நியமிப்புகளைச் செய்யும் மூப்பர்களும்கூட ‘மனிதர்களில் பரிசுகளாக’ இருக்கிறார்கள்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

c ஒரு உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்வதற்குத் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள, நவம்பர் 2024 காவற்கோபுரத்தில் இருக்கும் “சகோதரர்களே, உதவி ஊழியர்களாகச் சேவை செய்ய முயற்சி எடுக்கிறீர்களா?” மற்றும் “சகோதரர்களே, மூப்பர்களாகச் சேவை செய்ய முயற்சி எடுக்கிறீர்களா?” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.