வாசகர் கேட்கும் கேள்விகள்
சாலொமோனின் ஆலயத்தின் நுழைவு மண்டபம் எவ்வளவு உயரமாக இருந்தது?
ஆலயத்தின் பரிசுத்த அறைக்கு முன்பு நுழைவு மண்டபம் இருந்தது. 2024-க்கு முன்பு வெளிவந்த புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்களில், இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “ஆலயத்துக்கு முன்னால் இருந்த நுழைவு மண்டபத்தின் உயரம் 120, நீளம் 20 முழம். நுழைவு மண்டபத்தின் நீளமும் ஆலயத்தின் அகலமும் சரிசமமாய் இருந்தது.” (2 நா. 3:4) வேறுசில மொழிபெயர்ப்புகளிலும் நுழைவு மண்டபத்தின் உயரம் “120 முழம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 120 முழம் என்று சொல்லும்போது, அந்தக் கோபுரம் 53 மீட்டர் (175 அடி) உயரத்துக்கு இருந்திருக்க வேண்டும்!
ஆனால், புதிய உலக மொழிபெயர்ப்பின் 2024-ன் பதிப்பில், அந்த நுழைவு மண்டபத்தைப் பற்றி இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “[அதன்] உயரம் 20 முழம்,” அதாவது கிட்டத்தட்ட 9 மீட்டர் (30 அடி). a இந்த மாற்றத்தை செய்ததற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.
நுழைவு மண்டபத்தின் உயரத்தைப் பற்றி 1 ராஜாக்கள் 6:3 எதுவும் சொல்லவில்லை. எரேமியா இந்த வசனத்தில், நுழைவு மண்டபத்தின் நீளத்தையும் அகலத்தையும் பற்றி சொல்கிறாரே தவிர, அதன் உயரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த அதிகாரத்தில், ஆலயத்தின் மற்ற அம்சங்களை அவர் விவரமாக விளக்குகிறார். உதாரணத்துக்கு, செம்பு கடல், பத்து தள்ளுவண்டிகள், நுழைவு மண்டபத்துக்கு முன்பு இருந்த இரண்டு செம்பு தூண்கள் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார். (1 ரா. 7:15-37) ஒருவேளை, நுழைவு மண்டபம் 50 மீட்டருக்கும் மேல் உயரமாக பிரம்மாண்டமாக இருந்திருந்தால், அதன் உயரத்தைப் பற்றியும் அவர் கண்டிப்பாகச் சொல்லியிருப்பார், இல்லையா? சொல்லப்போனால், சாலொமோனின் ஆலயத்தில் இருந்த மற்ற அம்சங்களைவிட நுழைவு மண்டபம் உயரமாக இல்லை என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுகூட யூத எழுத்தாளர்கள் எழுதியிருந்தார்கள்.
120 முழ உயர நுழைவு மண்டபத்தை ஆலயத்தின் சுவர்களால் தாங்கியிருக்க முடியுமா என்ற கேள்வியை அறிஞர்கள் எழுப்புகிறார்கள். பூர்வ காலங்களில், கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்ட ரொம்ப உயரமான கட்டிடங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, எகிப்தின் கோவில் நுழைவாசல்களைச் சொல்லலாம். ஆனால், அதன் அடிப்பகுதி அகலமாகவும் மேல்பகுதி குறுகலாகவும் இருந்தது. சாலொமோனுடைய ஆலயத்தின் வடிவமைப்போ வித்தியாசமாக இருந்தது. அதைப் பற்றி அறிஞர்கள் சொல்லும்போது, ஆலயச் சுவர்களின் தடிமன் 6 முழத்துக்குள்தான், அதாவது 2.7 மீட்டருக்குள்தான் (9 அடி) இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கட்டிடக் கலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற தியோடார் புசிங் என்ற சரித்திராசிரியர் இப்படிச் சொல்கிறார்: “[ஆலயத்தின் நுழைவுப் பகுதியில்] இருக்கும் சுவரின் தடிமனை வைத்துப் பார்க்கும்போது, நுழைவு மண்டபம் 120 முழம் [உயரத்துக்கு] இருந்திருக்க வாய்ப்பில்லை.”
2 நாளாகமம் 3:4 தவறாக நகல் எடுக்கப்பட்டிருக்கலாம். சில பூர்வகால கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனத்தில் “120” என்று இருந்தாலும், மற்ற நம்பகமான பதிவுகளில், அதாவது ஐந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ் மற்றும் ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த கோடெக்ஸ் அம்ப்ரோசியானஸ் மாதிரியான பதிவுகளில் “20 முழம்” என்றுதான் இருக்கிறது. நகல் எடுத்தவர் ஏன் தவறாக “120” என்று எழுதியிருக்கலாம்? எபிரெய மொழியில் “நூறு” என்ற வார்த்தையும் “முழம்” என்ற வார்த்தையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால், “முழம்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “நூறு” என்று போட்டிருக்கலாம்.
சாலொமோனுடைய ஆலயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... அதன் விவரங்களைத் துல்லியமாகக் காட்ட வேண்டும்... என்று நாம் முயற்சி செய்வது உண்மைதான். ஆனால், அந்த ஆலயம் எதற்கு முன்னிழலாக இருந்ததோ, அதைத்தான் நாம் முக்கியமாக நினைக்கிறோம். அதாவது, மாபெரும் ஆன்மீக ஆலயத்தை நாம் முக்கியமாக நினைக்கிறோம். அந்தப் பிரம்மாண்டமான ஆலயத்தில் தன்னை வணங்குவதற்கு யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பதை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம்!—எபி. 9:11-14; வெளி. 3:12; 7:9-17.
a வசனத்தின் அடிக்குறிப்பு இப்படி விளக்குகிறது: “பழமையான சில கையெழுத்துப் பிரதிகளில் ‘120’ என்றும், மற்ற கையெழுத்துப் பிரதிகளிலும் மொழிபெயர்ப்புகளிலும் ‘20 முழம்’ என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.”