1924—நூறு வருஷங்களுக்கு முன்பு
“ஞானஸ்நானம் எடுத்த ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் புதிய வருஷத்தின் ஆரம்பம் ஒரு நல்ல சமயம். . . . [ஏனென்றால்] யெகோவாவுடைய சேவையில் நிறையச் செய்வதற்கு வாய்ப்புகளைத் தேட முடியும்” என்று ஜனவரி 1924-ல் வெளிவந்த புலட்டின் a சொன்னது. இந்த ஆலோசனையை பைபிள் மாணாக்கர்கள் கடைப்பிடித்தார்கள்; தைரியமாகப் புதுப்புது விதங்களில் பிரசங்கித்தார்கள்.
ரேடியோ மூலம் பிரசங்க வேலை
பெத்தேலில் இருந்த சகோதரர்கள் WBBR என்ற வானொலி நிலையத்தின் கட்டுமான வேலைகளை ஒரு வருஷத்துக்கும் மேல் செய்துகொண்டிருந்தார்கள். நியு யார்க் நகரத்தில் இருந்த ஸ்டேட்டன் தீவில் கட்டினார்கள். நிலத்தில் இருந்த மரங்களை வெட்டிவிட்டு, வேலை செய்கிறவர்கள் தங்க ஒரு பெரிய கட்டிடத்தையும், கருவிகள் வைப்பதற்கு இன்னொரு கட்டிடத்தையும் கட்டினார்கள். கட்டிட வேலைகள் முடிந்த பிறகு, ஒலிபரப்புவதற்குத் தேவையான கருவிகளைத் தயார்படுத்தினார்கள். ஆனால், நிறையத் தடைக்கற்களை அவர்கள் தாண்டி வர வேண்டியிருந்தது.
ஒலிபரப்புவதற்கு முக்கியமாக தேவைப்பட்ட ஆண்டெனாவைப் பொருத்துவது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தது. ஏனென்றால், அந்த ஆண்டெனா 91 மீட்டர் (300 அடி) நீளமாக இருந்தது. அதை 61 மீட்டர் (200 அடி) நீளம் இருந்த இரண்டு மரக் கம்பங்களுக்கு நடுவில் பொருத்த வேண்டியிருந்தது. இதையெல்லாம் பொருத்துவதற்குச் செய்த முதல் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. யெகோவாவை நம்பி மறுபடியும் முயற்சியில் இறங்கினார்கள்; இந்தச் சமயம் வெற்றி கிடைத்தது. அந்த ப்ராஜெக்ட்டில் வேலை செய்த கால்வின் ப்ராஸர் அதைப் பற்றி இப்படிச் சொன்னார்: “முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்திருந்தால் நாங்கள் எங்களுடைய தோளைத் தட்டி, ‘பரவாயில்லையே, சாதித்துவிட்டோம்!’ என்று நினைத்திருப்போம்.” யெகோவாதான் தங்களுக்கு வெற்றி கொடுத்தார் என்பதைச் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால், பிரச்சினைகள் இதோடு முடிந்துவிடவில்லை.
வானொலியில் ஒலிபரப்புவது அப்போதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதனால், அதற்குத் தேவைப்பட்ட கருவிகள் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் தயாரித்திருந்த 500-வாட் டிரான்ஸ்மிட்டர் கிடைத்தது. அதைத்தான் அவர்கள் பயன்படுத்தினார்கள். மைக் வாங்குவதற்குப் பதிலாக சாதாரண டெலிஃபோனில் இருந்த மைக்கைப் பயன்படுத்தினார்கள். பிப்ரவரி மாதத்தில், ஒருநாள் ராத்திரி இந்தக் கருவிகளையெல்லாம் சோதித்துப் பார்க்க முடிவு செய்தார்கள். ஒலிபரப்புவதற்கு அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி தேவைப்பட்டது. அதனால், சகோதரர்கள் எல்லாரும் சேர்ந்து ராஜ்ய b ஃபோன் வந்தது. சகோதரர்கள் பாடியதை, 25 கிலோமீட்டர் தள்ளி புருக்லினில் இருந்த அவர் ரேடியோவில் கேட்டிருக்கிறார்.’
பாடல்களைப் பாட நினைத்தார்கள். அப்போது நடந்த ஒரு காமெடியைப் பற்றி அங்கிருந்த சகோதரர் எர்னஸ்ட் லோ சொன்னார்: ‘சகோதரர்கள் பாட்டு பாடும்போது ஜட்ஜ் ரதர்ஃபோர்ட்டிடமிருந்து“முதலில் அந்தச் சத்தத்தை நிறுத்துங்கள். பூனைகள் கத்துகிற மாதிரி இருக்கிறது!” என்று அவர் சொன்னார். உடனே டிரான்ஸ்மிட்டரை ஆஃப் செய்துவிட்டார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. இருந்தாலும், டிரான்ஸ்மிட்டர் நன்றாக வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்கள்; முதல் ஒலிபரப்புக்குத் தயாரானார்கள்.
பிப்ரவரி 24, 1924-ல் முதல் ஒலிபரப்பு நடந்தது. “மேசியானிய அரசாங்கத்தின் வேலைகளைச் செய்வதற்கு” சகோதரர் ரதர்ஃபோர்ட் அந்த வானொலி நிலையத்தை அர்ப்பணித்தார். “எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லாரும் பைபிள் வெளிச்சத்தைத் தெளிவாகப் பார்ப்பதற்கும், எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும்” இந்த வானொலி நிலையம் உதவி செய்யும் என்று சொன்னார்.
முதல் ஒலிபரப்பு வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து 33 வருஷங்களுக்கு ரேடியோ மூலம் நல்ல செய்தியைச் சொல்ல WBBR கைகொடுத்தது.
கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு எதிரான கண்டன செய்தி
ஜூலை 1924-ல், கொலம்பஸ், ஒஹாயோவில் நடந்த ஒரு மாநாட்டுக்காக உலகம் முழுவதிலிருந்தும் பைபிள் மாணாக்கர்கள் வந்திருந்தார்கள். அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கு, ஹங்கேரியன், இத்தாலியன், லித்துவேனியன், போலிஷ், ரஷ்யன், ஸ்கான்டினேவிய மொழிகள் மற்றும் உக்ரேனியன் மொழிகளில் பேச்சுகளைக் கேட்டார்கள். மாநாட்டு நிகழ்ச்சியின் சில பகுதிகள் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது. ஒஹாயோ ஸ்டேட் ஜர்னல் என்ற உள்ளூர் செய்தித்தாளில் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரைகள் தினமும் வெளிவருவதற்குச் சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
ஜூலை 24, வியாழக்கிழமை அன்று, மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 5,000-த்துக்கும் அதிகமானவர்கள் ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட 30,000 புத்தகங்களை விநியோகித்தார்கள். ஆயிரக்கணக்கில் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள். அந்த நாள்தான் “மாநாட்டிலேயே சந்தோஷமான நாள்” என்று காவற்கோபுரம் சொன்னது.
ஜூலை 25, வெள்ளிக்கிழமை அன்று, மாநாட்டில் இன்னொரு முக்கியமான விஷயம் நடந்தது. மதத் தலைவர்களுக்கு எதிரான கண்டன செய்தியைச் சகோதரர் ரதர்ஃபோர்ட் ஒரு ஆவணத்திலிருந்து தைரியமாக வாசித்தார். அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகப் பெரும் புள்ளிகள் ஆகியவர்களுக்கு எதிரான கண்டன செய்தி அதில் இருந்தது. “வாழ்வு கொடுப்பதற்காக கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியாதபடி, [அவர்கள்] மக்களை இருளிலேயே வைத்திருக்கிறார்கள்” என்றும், “சர்வதேச சங்கம் ‘கடவுளுடைய அரசாங்கத்தின் பூமிக்குரிய பாகம்’ என்று சொல்லி அதை ஆதரித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றும்
வாசித்தார். இந்தக் கண்டன செய்தியை மக்களிடம் சொல்ல பைபிள் மாணாக்கர்களுக்குக் கண்டிப்பாக தைரியம் தேவைப்பட்டிருக்கும்.மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைப் பற்றி காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “கொலம்பஸ் மாநாட்டுக்கு வந்திருந்த எஜமானுடைய சிறிய படை விசுவாசத்தில் பலம் பெற்று சென்றது. . . . எதிரிகள் எப்படிப்பட்ட அம்புகளை எய்தாலும் அது தங்களைத் தோற்கடிக்காது என்பதில் உறுதியாக இருந்தது.” அந்த மாநாட்டில் கலந்துகொண்ட லியோ கிளாஸ் இப்படிச் சொன்னார்: “கண்டன செய்தியை எங்கள் ஊரிலும் சொல்ல நாங்கள் ஆர்வமாக இருந்தோம்.”
கண்டனச் செய்தியின் அச்சடிக்கப்பட்ட பிரதியின் பெயர் எக்லீஸியாஸ்டிக் இன்டிக்டட் (குருமார் குற்றஞ்சாட்டப்படுதல்). அக்டோபர் மாதத்தில், அதன் லட்சக்கணக்கான பிரதிகளை பைபிள் மாணாக்கர்கள் விநியோகித்தார்கள். ஓக்லகாமாவில் இருந்த கிளீவ்லாண்ட் என்ற ஒரு சின்ன டவுனில் ஃபிராங்க் ஜான்சன் இந்தத் துண்டுப்பிரதியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஊழியத்தை முடித்த பிறகு, அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்குச் சகோதரர்கள் வர இன்னும் 20 நிமிஷங்கள் இருந்தது. மற்றவர்கள் கண்ணில் படுகிற மாதிரி அவரால் காத்திருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த ஊரில் அவர் பிரசங்க வேலை செய்ததால் ஊர்மக்கள் அவர்மேல் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். அதனால், சகோதரர் ஜான்சன் பக்கத்திலிருந்த ஒரு சர்ச்சில் ஒளிந்துகொள்ள முடிவு பண்ணினார். அந்த சர்ச் காலியாக இருந்ததால், பாதிரியாருடைய பைபிளிலும் அங்கே இருந்த ஒவ்வொரு இருக்கையிலும் துண்டுப்பிரதியை வைத்தார். பிறகு, சர்ச்சை விட்டு வேக வேகமாக வெளியே வந்தார். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது! அதனால் பக்கத்தில் இருந்த இரண்டு சர்ச்சுகளுக்குப் போய் அதேமாதிரி செய்தார்.
அவரைக் கூட்டிக்கொண்டு போவதற்குச் சகோதரர்கள் வர சொல்லியிருந்த இடத்துக்கு ஜான்சன் அவசர அவசரமாக வந்தார். அங்கே வந்த பிறகு ஒரு பெட்ரோல் பங்க்குக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். அவரைத் தேடிக்கொண்டிருந்த ஊர்மக்கள் அந்த இடத்தில் இருக்கிறார்களா என்று கவனமாகப் பார்த்தார். அந்த ஆட்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். ஆனால் அவரைக் கவனிக்கவில்லை. அவர்கள் போன பிறகு, பக்கத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த சகோதர சகோதரிகள் ஜான்சனைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “டவுனைவிட்டு கிளம்பும்போது அந்த மூன்று சர்ச்சுகளைத் தாண்டி வந்தோம். ஒவ்வொரு சர்ச்சுக்கு முன்பும் 50-க்கும் மேல் ஆட்கள் நின்றுகொண்டிருந்தார்கள். சிலர் துண்டுப்பிரதியைப் படித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அதைப் பாதிரியாரிடம் காட்டிக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை, நாங்கள் சரியான நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். இல்லையென்றால், பெரிய பிரச்சினையில் மாட்டியிருப்போம்! யெகோவா எங்களைப் பாதுகாத்ததற்காகவும் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஞானத்தைத் தந்ததற்காகவும் நன்றி சொன்னோம்.”
மற்ற நாடுகளிலும் தைரியமாகப் பிரசங்கித்தார்கள்
மற்ற நாடுகளில் இருந்த பைபிள் மாணாக்கர்களும் ரொம்பத் தைரியமாகப் பிரசங்கித்தார்கள். பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் சகோதரர் யோசஃப் க்ரெட் ஊழியம் செய்தார். போலந்து நாட்டிலிருந்து குடிமாறி வந்திருந்த சுரங்கத் தொழிலாளர்களிடம் அவர் பிரசங்கித்தார். “உயிர்த்தெழுதல் சீக்கிரத்தில்!” என்ற தலைப்பில் ஒரு பேச்சைக் கொடுப்பதற்கு அவர் முடிவு செய்தார். அந்தப் பேச்சுக்கான அழைப்பிதழ் அந்த ஊரிலிருந்த எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது. உள்ளூர் பாதிரியார் ஒருவர், தன்னுடைய சர்ச் அங்கத்தினர்கள் யாரும் அந்தப் பேச்சைக் கேட்க போகக் கூடாது என்று சொல்லியிருந்தார். ஆனால் 5,000-க்கும் அதிகமானவர்கள் வந்திருந்தார்கள். அந்தப் பாதிரியாரும் வந்திருந்தார்! தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி வாதாட பாதிரியாரைச் சகோதரர் க்ரெட் கூப்பிட்டார். ஆனால் அவர் வரவில்லை. அந்த ஊரிலிருந்த மக்களுக்குக் கடவுளுடைய வார்த்தைமேல் இருந்த ஆர்வத்தைப் பார்த்து, சகோதரர் க்ரெட் தன்னிடம் இருந்த எல்லா பிரசுரங்களையும் கொடுத்தார்.—ஆமோ. 8:11.
ஆப்பிரிக்காவில் இருந்த கோல்ட் கோஸ்டில், அதாவது இன்றைக்கு கானா என்று அழைக்கப்படுகிற இடத்தில், சகோதரர் க்லாட் ப்ரவுன் நல்ல செய்தியை முதல்முதலில் பிரசங்கித்தார். அவர் கொடுத்த பேச்சுகளும் விநியோகித்த பிரசுரங்களும், அந்த நாட்டில் சத்தியம் மடமடவென்று பரவுவதற்கு உதவியது. அவர் கொடுத்த ஒரு பேச்சை ஜாண் பிலாங்க்சன் என்ற ஒரு மாணவர் கேட்டார். அவர் மருந்தாளராக (pharmacist) ஆவதற்குக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். இதுதான் சத்தியம் என்பதை ஜாண் சீக்கிரமாகவே புரிந்துகொண்டார். “சத்தியத்தைத் தெரிந்துகொண்டதால் நான் பூரித்துப் போனேன். அதைப் பற்றி என்னுடைய கல்லூரியில் இருந்த மற்றவர்களிடம் பேசினேன்” என்று ஜாண் சொன்னார்.
திரித்துவ கோட்பாட்டை பைபிள் ஆதரிப்பதில்லை என்பதை ஜாண் தெரிந்துகொண்டார். அதனால், பாதிரியாரிடம் கேள்வி கேட்பதற்காக ஒருநாள் சர்ச்சுக்குப் போனார். ஆனால், அந்தப் பாதிரியாருக்குப் பயங்கர கோபம் வந்தது. “நீ ஒரு கிறிஸ்தவனே கிடையாது. நீ சாத்தானின் ஆள்! முதலில் இங்கிருந்து வெளியே போ!” என்று கத்தினார்.
வீட்டுக்கு வந்த பிறகு, திரித்துவத்தைப் பற்றி வாதாடுவதற்காக அந்தப் பாதிரியாரைப் பொது இடத்துக்கு வரச்சொல்லி ஜாண் கடிதம் எழுதினார். ஆனால் அந்தப் பாதிரியார், ஜாணைக் கல்லூரியின் முதன்மைப் பேராசிரியரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். ஜாண் போய் அவரைப் பார்த்தபோது, “நீ உண்மையிலேயே பாதிரியாருக்கு இப்படி எழுதினாயா?” என்று அவர் கேட்டார்.
“ஆமாம் எழுதினேன், சார்” என்று ஜாண் சொன்னார்.
அந்தப் பாதிரியாருக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதச் சொல்லி ஜாணிடம் அந்தப் பேராசிரியர் சொன்னார். அதனால், ஜாண் இப்படி எழுதினார்:
“ஐயா, என்னுடைய பேராசிரியர் உங்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதச் சொன்னார். ஆனால், நீங்கள் பொய்ப் போதனைகளைக் கற்பிக்கிறீர்கள் என்பதை ஒத்துக்கொண்டால்தான் நான் மன்னிப்பு கடிதம் எழுதுவேன்.”
அந்தப் பேராசிரியர் அதிர்ச்சியடைந்தார். “ஜாண், என்ன இப்படி எழுதியிருக்கிறாய்?” என்று கேட்டார்.
“ஆமாம் சார், என்னால் இதைத்தான் எழுத முடியும்.”
“உன்னைக் கல்லூரியை விட்டே அனுப்ப வேண்டியிருக்கும்! அரசாங்கத்துடைய சர்ச்சின் பாதிரியாருக்கு எதிராகப் பேசிவிட்டு உன்னால் எப்படி அரசாங்கக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியும்?”
“ஆனால், சார், . . . நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்தும்போது, எங்களுக்கு ஏதாவது புரியவில்லை என்றால் நாங்கள் உங்களிடம் கேள்வி கேட்கலாம் தானே?”
“ஆமாம், கேட்கலாம்.”
“அதுதான் இங்கேயும் நடந்தது. அந்தப் பாதிரியார் பைபிளிலிருந்து சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. அதனால் கேள்வி கேட்டேன். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்காக, நான் ஏன் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும்?”
ஜாணைக் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பவில்லை. அவர் மன்னிப்புக் கடிதமும் எழுதவில்லை.
ஆர்வத்துடிப்போடு இருந்த பைபிள் மாணாக்கர்கள்
1924-ல் நடந்த எல்லா வேலைகளையும் பற்றி காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “தாவீது மாதிரியேதான் நாமும் உணர்கிறோம். ‘போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்’ என்று அவர் சொன்னார். (சங். 18:39) இந்த வருஷத்தில் உண்மையிலேயே நமக்கு அதிக உற்சாகம் கிடைத்தது. கர்த்தருடைய கரம் நம்மோடு இருந்ததைப் பார்க்க முடிந்தது. . . . அவருடைய ஊழியர்கள் . . . சந்தோஷமாகச் சாட்சி கொடுத்து வருகிறார்கள்.”
வருஷத்தின் கடைசியில், ரேடியோ வழியாகச் செய்த ஊழியத்தை இன்னும் அதிகமாக்க சகோதரர்கள் திட்டம் போட்டார்கள். சிகாகோவுக்குப் பக்கத்தில் இன்னொரு வானொலி நிலையத்தைக் கட்டினார்கள். அதன் பெயர் “வெர்ட்” (WORD). அதன் அர்த்தம், வார்த்தை. இந்தப் பெயர் உண்மையிலேயே பொருத்தமானதாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்து கடவுளுடைய வார்த்தை பிரசங்கிக்கப்பட்டது. 5,000-வாட் டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு, வடக்கில் இருந்த கனடா வரைக்கும்கூட நல்ல செய்தியை ஒலிபரப்ப முடிந்தது.
1925-ல் ஆன்மீக ஒளி இன்னும் பிரகாசிக்கவிருந்தது. பைபிள் மாணாக்கர்கள் வெளிப்படுத்துதல் 12-வது அதிகாரத்தில் இருந்த விஷயங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவிருந்தார்கள். இந்தப் புதிய புரிந்துகொள்ளுதல் சிலரை இடறிப்போகச் செய்யலாம். ஆனால், நிறையப் பேர் இந்தச் சத்தியங்களைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். பரலோகத்தில் நடந்த விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்; அதற்கும் பூமியில் இருக்கிற கடவுளுடைய மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் புரிந்துகொள்வார்கள். உண்மைகளைத் தெரிந்துகொண்டதை நினைத்து சந்தோஷப்படுவார்கள்.
a இப்போது அதை நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் என்று சொல்கிறோம்.
b அந்தச் சமயத்தில், சகோதரர் ஜே.எஃப். ரதர்ஃபோர்ட்தான் பைபிள் மாணாக்கர்களுடைய வேலைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். அவர் ஜட்ஜ் ரதர்ஃபோர்ட் என்று அழைக்கப்பட்டார். பெத்தேலில் சேவை செய்வதற்கு முன்பு அவர் மிஸ்சௌரியில் இருந்த எட்டாவது வட்டார நீதிமன்றத்தில் அவ்வப்போது விசேஷ நீதிபதியாக வேலை செய்தார்.