Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா?

நீங்கள் இன்னும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய வேண்டுமா?

“சபையார்முன் வாசிப்பதிலும், அவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும், கற்பிப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிரு.”—1 தீ. 4:13.

பாடல்கள்: 45, 70

1, 2. (அ) இந்த முடிவு காலத்தில், ஏசாயா 60:22 எப்படி நிறைவேறி வருகிறது? (ஆ) யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் இன்று என்ன தேவை இருக்கிறது?

“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” என்ற தீர்க்கதரிசனம் இந்தக் கடைசி நாட்களில் நிறைவேறி வருகிறது. (ஏசா. 60:22) கடந்த வருடத்தில் 82,20,105 யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். தன்னுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” அதனால், நாட்கள் போகப்போக செய்வதற்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. அப்படியென்றால், மற்றவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோமா? ஏற்கெனவே, நிறைய சகோதர சகோதரிகள் ஒழுங்கான பயனியர்களாக அல்லது துணைப் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். சிலர் தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்கிறார்கள். இன்னும் சிலர் ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் கடினமாக உழைக்கிறார்கள்.

2 ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 2000 புதிய சபைகள் உருவாகின்றன. இந்தச் சபைகளை வழிநடத்த மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உதவி ஊழியர்கள் மூப்பர்களாக ஆவதற்குத் தகுதிபெற வேண்டியிருக்கிறது. அதனால், ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உதவி ஊழியர்களாக ஆவதற்கு தகுதிபெற வேண்டும். ‘நம் எஜமானருடைய வேலையில் அதிகத்தை’ செய்ய சகோதரர்களுக்கு மட்டுமல்ல சகோதரிகளுக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன.—1 கொ. 15:58.

ஆன்மீக முன்னேற்றம் செய்ய என்ன தேவை?

3, 4. ஆன்மீக முன்னேற்றம் செய்வது எதை அர்த்தப்படுத்துகிறது?

3 ஒன்று தீமோத்தேயு 3:1-ஐ வாசியுங்கள். கண்காணியாவதற்கு ‘தகுதிபெற முயற்சி செய்கிற’ சகோதரர்களை அப்போஸ்தலன் பவுல் பாராட்டினார். ‘தகுதிபெற முயற்சி செய்’ என்ற கிரேக்க வார்த்தைக்கு எட்டிப்பிடி என்று அர்த்தம். அதாவது தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை எடுக்க அதிக முயற்சி செய்வதை இது அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, உதவி ஊழியராக ஆவதற்கு விரும்புகிற ஒரு சகோதரரை எடுத்துக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ குணங்களை வளர்க்க தான் இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். உதவி ஊழியராக ஆன பிறகு, ஒரு மூப்பராக ஆவதற்கு அவர் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்கிறார்.

4 யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய சில சகோதர சகோதரிகள் தங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணத்துக்கு பயனியராகச் சேவை செய்யவும், பெத்தேலில் சேவை செய்யவும், ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் உதவி செய்யவும் அவர்கள் விரும்புகிறார்கள். நாம் எல்லாரும் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய, பைபிள் நமக்கு எப்படி உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம்.

ஆன்மீக முன்னேற்றம் செய்ய கடினமாக முயற்சி செய்யுங்கள்

5. இளைஞர்கள் தங்களுடைய சக்தியை எப்படி யெகோவாவுடைய சேவையில் பயன்படுத்துகிறார்கள்?

5 இளைஞர்களுக்கு நல்ல உடல் பலமும் ஆரோக்கியமும் இருப்பதால் அவர்களால் யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய முடியும். (நீதிமொழிகள் 20:29-ஐ வாசியுங்கள்.) பெத்தேலில் சேவை செய்யும் சில இளைஞர்கள், புத்தகங்களையும் பைபிள்களையும் அச்சடித்து, அதை ‘பைன்டிங்’ செய்ய உதவி செய்கிறார்கள். நிறைய இளைஞர்கள், ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு அல்லது அதைப் பழுதுபார்ப்பதற்கு உதவி செய்கிறார்கள். இன்னும் சிலர், இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது வாலண்டியர்களாகச் சேவை செய்கிறார்கள். நிறைய இளம் பயனியர்கள், ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் சேவை செய்கிறார்கள்.

6-8. (அ) யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய ஒரு இளைஞனுக்கு எது உதவியது? அதனால் என்ன பலன்கள் கிடைத்தன? (ஆ) யெகோவா நல்லவர் என்று நாம் எப்படி ருசித்துப்பார்க்கலாம்?

6 நாம் யெகோவாவை நேசிப்பதால் அவருக்கு மிகச்சிறந்த விதத்தில் சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இருந்தாலும், ஆரோன் என்ற சகோதரரைப் போல நாமும் உணரலாம். அவர் யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்ய நினைத்தாலும் அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சிறு வயதில் இருந்தே அவர் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போயிருக்கிறார். இருந்தாலும், “சபை கூட்டத்துக்கும் ஊழியத்துக்கும் போறது எனக்கு அவ்ளோ சுவாரஸ்யமா இல்ல” என்று அவர் சொல்கிறார். அதற்காக அவர் என்ன செய்தார்?

7 ஆரோன் தொடர்ந்து பைபிளைப் படித்தார், கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரித்தார், உற்சாகமாகப் பதில்கள் சொன்னார். அதோடு, யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்யவும் ஆரம்பித்தார். ஆன்மீக முன்னேற்றம் செய்ய இதெல்லாம் அவருக்கு உதவியது. யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொண்டதால் அவரை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார். இது ஆரோனுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு, அவர் பயனியராகச் சேவை செய்தார், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போய் ஊழியம் செய்தார். இப்போது, அவர் மூப்பராக இருக்கிறார், பெத்தேலில் சந்தோஷமாகச் சேவை செய்கிறார். இதையெல்லாம் நினைத்து, ஆரோன் எப்படி உணர்கிறார்? “‘யெகோவா நல்லவர்னு நான் ருசிச்சு’ பார்த்திருக்கேன். அவர் என்னை அதிகமா ஆசீர்வதிச்சு இருக்குறதால நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கேன், அவருக்கு இன்னும் நிறைய சேவை செய்யணும்னு ஆசைப்படறேன். அதனால எனக்கு இன்னும் நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்குது” என்று அவர் சொல்கிறார்.

8 “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்று சங்கீதக்காரன் சொன்னார். அதோடு, “கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்றும் சொன்னார். (சங்கீதம் 34:8-10-ஐ வாசியுங்கள்.) நம்முடைய மிகச்சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது அவருக்குப் பிடித்ததைச் செய்கிறோம் என்ற திருப்தியும் சந்தோஷமும் நமக்குக் கிடைக்கும். அதோடு, அவர் நம்முடைய தேவைகளையும் கவனித்துக்கொள்வார்.

சோர்ந்து போய்விடாதீர்கள்

9, 10. ‘காத்திருப்பது’ ஏன் நல்லது?

9 யெகோவாவுக்கு நாம் இன்னும் அதிகமாகச் சேவை செய்ய விரும்பலாம். ஆனால், சபையில் பொறுப்பு கிடைப்பதற்காக ரொம்ப காலம் காத்திருந்தாலோ அல்லது நம்முடைய சூழ்நிலைமை மாறுவதற்காகக் காத்திருந்தாலோ நாம் என்ன செய்யலாம்? நாம் பொறுமையாக இருக்க வேண்டும். (மீ. 7:7) ஒருவேளை, யெகோவா இந்தச் சூழ்நிலையை அனுமதித்தாலும் அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார். இதை ஆபிரகாமுடைய உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆபிரகாமுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று யெகோவா வாக்குக் கொடுத்தார். ஆனால், ஈசாக்கு பிறக்கும்வரை ஆபிரகாம் நிறைய வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவர் பொறுமையாக இருந்தார், யெகோவாமீது இருந்த நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடவில்லை.—ஆதி. 15:3, 4; 21:5; எபி. 6:12-15.

10 ஆனால், காத்திருப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. (நீதி. 13:12) நம்முடைய சூழ்நிலையைப் பற்றியோ நமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பற்றியோ நாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால், நாம் சோர்ந்து போய்விடுவோம். அப்படி யோசிப்பதற்குப் பதிலாக, சபை பொறுப்புகளை எடுத்து செய்வதற்குத் தேவையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள அந்தச் சமயத்தைப் பயன்படுத்தலாம்.

11. என்னென்ன ஆன்மீக குணங்களை நாம் வளர்க்க வேண்டும், அது ஏன் முக்கியம்?

11 ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். பைபிளைப் படித்து அதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள். அப்போதுதான், உங்களால் ஞானமாக நடந்துகொள்ள முடியும், தெளிந்த புத்தியோடு யோசிக்க முடியும், சரியான தீர்மானங்கள் எடுக்க முடியும். சபை பொறுப்புகளை நன்றாகச் செய்ய சகோதரர்களுக்கு இந்தக் குணங்கள் ரொம்ப முக்கியம். (நீதி. 1:1-4; தீத். 1:7-9) பைபிளைப் படிக்கும்போது, ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்போது, ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நாம் தீர்மானங்கள் எடுப்போம். உதாரணத்துக்கு, மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பணத்தை எப்படிச் செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். அதோடு, பொழுதுபோக்கு மற்றும் உடையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்வோம்.

12. சபையில் இருக்கிற எல்லாரும் எப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்ளலாம்?

12 நீங்கள் நம்பகமானவர்கள் என்பதைக் காட்டுங்கள். சகோதரர்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி, நமக்குக் கிடைத்திருக்கும் எந்தவொரு வேலையையும் சிறந்த விதத்தில் செய்ய வேண்டும். கடவுளுடைய மக்கள் எருசலேம் ஆலயத்தைத் திரும்பவும் கட்ட ஆரம்பித்தபோது அங்கிருந்த வேலைகளைச் செய்ய நெகேமியாவுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். அப்போது அவர் யாரைத் தேர்ந்தெடுத்தார்? கடவுள்பக்தி உள்ளவர்களை, உண்மையானவர்களை, நம்பகமானவர்களை அவர் தேர்ந்தெடுத்தார். (நெ. 7:2; 13:12, 13) இன்றும், “நிர்வாகிகள் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்” (1 கொ. 4:2) நாம் உண்மையோடு செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாமல் போகாது.1 தீமோத்தேயு 5:25-ஐ வாசியுங்கள்.

13. அநியாயமாக நடத்தப்படும்போது யோசேப்பின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?

13 யெகோவாவை நம்புங்கள். சகோதர சகோதரிகள் யாராவது உங்களை அநியாயமாக நடத்தினால் என்ன செய்யலாம்? அதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களிடமே சொல்லுங்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் எந்தத் தவறுமே செய்யவில்லை, நீங்கள் சொல்வதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருந்தால் பிரச்சினை இன்னும் மோசமாகத்தான் ஆகும். இதற்கு யோசேப்புடைய உதாரணத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யோசேப்புடைய சகோதரர்கள் அவரை மோசமாக நடத்தினார்கள். அதோடு, அவர் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் அவர் யெகோவாவை நம்பியிருந்தார். யெகோவா கொடுத்த வாக்குறுதியை நினைத்துப் பார்த்தார், யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தார். (சங். 105:19) அந்தக் கஷ்டமான சமயங்களில், அவர் நல்ல குணங்களை வளர்த்துக்கொண்டார். மிக முக்கியமான பொறுப்பைச் செய்ய இது அவருக்கு உதவியாக இருந்தது. (ஆதி. 41:37-44; 45:4-8) ஒருவேளை, உங்களிடம் யாராவது அநியாயமாக நடந்துகொண்டால் ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். பொறுமையாக இருக்கவும், அவர்களிடம் பேசும்போது அன்பாக நடந்துகொள்ளவும் அது உங்களுக்கு உதவும்.1 பேதுரு 5:10-ஐ வாசியுங்கள்.

ஊழியத்தில் தொடர்ந்து முன்னேற்றம் செய்யுங்கள்

14, 15. (அ) பிரசங்கிக்கிற விதத்துக்கு நாம் ஏன் “எப்போதும் கவனம் செலுத்த” வேண்டும்? (ஆ) மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற விதத்தில் நாம் எப்படி ஊழியம் செய்யலாம்? (ஆரம்பப் படத்தையும் “ வித்தியாசமான விதங்களில் ஊழியம் செய்கிறீர்களா?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

14 வேதவசனங்களை விளக்கிச் சொல்வதில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். அதோடு, “உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து” என்றும் சொன்னார். (1 தீ. 4:13, 16) தீமோத்தேயு ஏற்கெனவே பல வருடங்களாகப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். அப்படியென்றால், அவர் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தது? மக்களுடைய சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று தீமோத்தேயுவுக்குத் தெரிந்திருந்தது. அவர் சொல்லும் விஷயங்களை மக்கள் தொடர்ந்து ஆர்வமாகக் கேட்க வேண்டுமென்றால் கற்பிக்கும் விதத்தில் அவர் முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தது. இன்று, நாமும் அதே போல் செய்ய வேண்டும்.

15 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, மக்களை அவ்வளவாக வீட்டில் பார்க்க முடிவதில்லை. இன்னும் சில இடங்களில், மக்கள் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கிறார்கள், அவர்களைப் பார்ப்பதற்கு நமக்கு அனுமதியும் கிடைப்பதில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலும் இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தால், நீங்கள் ஏன் வித்தியாசமான விதங்களில் ஊழியம் செய்யக்கூடாது?

16. நற்செய்தியைச் சொல்ல பொது ஊழியம் ஒரு சிறந்த வழி என்று ஏன் சொல்லலாம்?

16 நிறைய சகோதர சகோதரிகள் இன்று சந்தோஷமாகப் பொது ஊழியம் செய்கிறார்கள். உதாரணத்துக்கு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மார்க்கெட்டுகள் என்று நிறைய இடங்களில் மக்களிடம் நற்செய்தியைச் சொல்கிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு செய்தியைச் சொல்லி பேச்சை ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளையைப் பாராட்டி பேசுகிறார்கள் அல்லது அவர்களுடைய வேலையைப் பற்றி கேட்கிறார்கள். ஒருவேளை அந்த நபர் ஆர்வமாகப் பேசினால், பைபிளில் இருக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லி அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கிறார்கள். இந்த விதத்தில் பேசும்போது, மக்கள் பைபிளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

17, 18. (அ) பொது ஊழியத்தில் நாம் எப்படித் தைரியமாகப் பேசலாம்? (ஆ) ஊழியம் செய்வதன் மூலம் தாவீது உணர்ந்ததைப் போலவே நாமும் எப்படி உணரலாம்?

17 முன்பின் தெரியாத மக்களிடம் பேச்சை ஆரம்பிப்பது சிலசமயம் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், ஒருபோதும் சோர்ந்துவிடாதீர்கள். நியு யார்க்கில் இருக்கிற எடி என்ற பயனியர் சகோதரருக்குத் தைரியமாக ஊழியம் செய்வது கஷ்டமாக இருந்தது. ஆனால், அவருக்கு எது உதவியது? அவர் இப்படிச் சொல்கிறார்: “எங்க குடும்ப வழிபாட்டு சமயத்துல, எதிர்ப்பு தெரிவிக்கிற ஆட்கள்கிட்டயும் தங்களோட கருத்தை சொல்ற ஆட்கள்கிட்டயும் எப்படி பதில் சொல்றதுனு நானும் என் மனைவியும் ஆராய்ச்சி செய்வோம். அதோட, மத்த சகோதர சகோதரிகள்கிட்டயும் ஆலோசனை கேட்போம்.” இப்போது, எடி சந்தோஷமாகப் பொது ஊழியம் செய்கிறார்.

18 ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்யும்போதும், நற்செய்தியைப் பற்றி மற்றவர்களிடம் பேசும் விதத்தில் முன்னேற்றம் செய்யும்போதும், நம்முடைய ஆன்மீக முன்னேற்றம் எல்லாருக்கும் தெரிய வரும். (1 தீமோத்தேயு 4:15-ஐ வாசியுங்கள்.) “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்” என்று சங்கீதக்காரனான தாவீது சொன்னார். (சங். 34:1, 2) ஒருவர் யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு உதவி செய்வதன் மூலம் தாவீது யெகோவாவைப் புகழ்ந்தது போலவே நாமும் யெகோவாவைப் புகழ்வோம்.

முன்னேற்றம் செய்வதன் மூலம் யெகோவாவுக்குப் புகழ் சேருங்கள்

19. கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்களால் ஏன் சந்தோஷமாக இருக்க முடியும்?

19 “கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்” என்றும் தாவீது பாடினார். (சங். 145:10-12) யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறவர்களும் அவருக்கு உண்மையாக இருக்கிறவர்களும் அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல அதிகமாக ஆசைப்படுகிறார்கள். ஆனால், வியாதி அல்லது முதிர்வயதின் காரணமாக உங்களால் அதிகமாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களைச் சுற்றி இருக்கிற நர்ஸ் மற்றும் டாக்டர் போன்றவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசும்போது நீங்கள் யெகோவாவைப் புகழ்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததன் காரணமாக நீங்கள் ஒருவேளை சிறையில் இருந்தாலும், உங்களால் மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்ல முடியும். அப்படிச் செய்யும்போது, யெகோவா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். (நீதி. 27:11) ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டும் யெகோவாவைச் சேவிக்கலாம். அதைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். (1 பே. 3:1-4) கஷ்டமான சூழ்நிலைகளிலும் உங்களால் யெகோவாவைப் புகழ முடியும், அவரோடு நெருங்கியிருக்க முடியும், ஆன்மீக முன்னேற்றமும் செய்ய முடியும்.

20, 21. யெகோவாவின் அமைப்பில் உங்களுக்கு நிறைய பொறுப்புகள் கிடைத்திருந்தால் நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்?

20 நீங்கள் தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்யும்போது, யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வாழும் விதத்திலோ உங்களுடைய அட்டவணையிலோ சில மாற்றங்கள் செய்தால் யெகோவா கொடுத்திருக்கும் அருமையான வாக்குறுதிகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதோடு, சகோதர சகோதரிகளுக்கும் இன்னும் அதிகமாக உதவி செய்ய முடியும். நீங்கள் சபையில் கடினமாக உழைப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் உங்களை அதிகமாக நேசிப்பார்கள்!

21 நாம் யெகோவாவுக்கு எத்தனை வருடங்களாகச் சேவை செய்திருந்தாலும் சரி, நம்மால் அவரிடம் இன்னும் நெருங்கிப்போக முடியும். அதோடு, ஆன்மீக முன்னேற்றமும் செய்ய முடியும். மற்றவர்களும் ஆன்மீக முன்னேற்றம் செய்ய நாம் எப்படி உதவி செய்யலாம் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.