Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கல்யாணம்—அதன் ஆரம்பமும் நோக்கமும்

கல்யாணம்—அதன் ஆரம்பமும் நோக்கமும்

“பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.”—ஆதி. 2:18.

பாடல்கள்: 36, 11

1, 2. (அ) கல்யாணம் எப்படி ஆரம்பமானது? (ஆ) ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கல்யாண ஏற்பாட்டைப் பற்றி என்ன தெரிந்திருக்கும்? (ஆரம்பப் படம்)

கல்யாணம் நம் வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது. ஆனால், அது எப்படி ஆரம்பமானது? என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது? இதைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது இந்த ஏற்பாட்டை நம்மால் மதிக்க முடியும். அதனால் வரும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க முடியும். இப்போது, நாம் பூமியில் நடந்த முதல் கல்யாணத்தைப் பற்றி பார்க்கலாம். முதல் மனிதனான ஆதாமைப் படைத்த பிறகு மிருகங்களுக்குப் பெயர் வைக்கும் வேலையை யெகோவா அவனுக்குக் கொடுத்தார். எல்லா மிருகங்களுக்கும் துணை இருந்தது. ஆனால், ‘ஆதாமுக்கு ஏற்ற துணை’ இருக்கவில்லை. அதனால், கடவுள் அவனுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்தார். பின்பு, அவனுடைய விலா எலும்பை எடுத்து ஒரு பெண்ணைப் படைத்தார். அவளை ஆதாமிடம் கொண்டுவந்தார், அவள் அவனுடைய மனைவியானாள். (ஆதியாகமம் 2:20-24-ஐ வாசியுங்கள்.) அதனால், கல்யாணத்தை யெகோவா கொடுத்த பரிசு என்று சொல்லலாம்.

2 “ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்” என்று ஏதேன் தோட்டத்தில் யெகோவா சொல்லியிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இயேசு அதை மறுபடியும் சொன்னார். (மத். 19:4, 5) ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் எந்தளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கணவனும் மனைவியும் விவாகரத்து செய்வதையோ நிறைய பேரைக் கல்யாணம் செய்வதையோ யெகோவா ஒருபோதும் விரும்பவில்லை.

யெகோவாவின் நோக்கத்தில் கல்யாணத்தின் பங்கு

3. கல்யாண ஏற்பாட்டின் முக்கியமான நோக்கம் என்ன?

3 தன் அன்பு மனைவியைப் பார்த்த சந்தோஷத்தில் ஆதாம் துள்ளிக் குதித்தான். பிறகு, அவளுக்கு ஏவாள் என்று பெயர் வைத்தான். அவள் ஆதாமுக்கு ஏற்ற துணையாகவும் உதவியாளாகவும் இருந்தாள். கணவன் மனைவியாக, அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள். (ஆதி. 2:18) பூமி முழுவதும் மனிதர்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் கல்யாண ஏற்பாட்டின் முக்கியமான நோக்கம். (ஆதி. 1:28) பெற்றோர்மீது பிள்ளைகளுக்கு அன்பிருந்தாலும், கல்யாணம் செய்துகொள்வதற்கும் அவர்களுக்கென்று ஒரு குடும்பத்தை ஆரம்பிப்பதற்கும் பிள்ளைகள் கடைசியில் பெற்றோரைவிட்டுப் பிரிய வேண்டியிருந்தது. பிள்ளைகளைப் பெற்று பூமியை நிரப்புவதோடு, இந்த முழு பூமியையும் அவர்கள் அழகிய தோட்டமாகவும் மாற்ற வேண்டியிருந்தது.

4. ஆதாம் ஏவாளின் கல்யாண வாழ்க்கை என்ன ஆனது?

4 ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை நாசமானது. எப்படி? “பழைய பாம்பாகிய” பிசாசான சாத்தான் ஏவாளை ஏமாற்றினான். ‘நன்மை தீமையை அறியும்’ மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால் விசேஷ அறிவு கிடைக்கும் என்றும், எது சரி எது தவறு என்று அவர்களே தீர்மானிக்க முடியும் என்றும் ஏவாளை நம்ப வைத்தான். இதைப் பற்றி ஆதாமிடம் பேசாமலேயே அந்தப் பழத்தைச் சாப்பிட அவள் முடிவெடுத்ததால், அவனுடைய தலைமை ஸ்தானத்துக்கு அவள் மதிப்பு கொடுக்கவில்லை என்பது தெரிகிறது. அவள் கொடுத்த பழத்தை ஆதாமும் சாப்பிட்டதால், அவன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனான்.—வெளி. 12:9; ஆதி. 2:9, 16, 17; 3:1-6.

5. ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கொடுத்த பதிலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 செய்த தவறுக்கான காரணத்தை யெகோவா ஆதாமிடம் கேட்டபோது, அவன் தன் மனைவிமீது பழிபோட்டான். “தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று சொன்னான். ஏவாளும் தன்னை ஏமாற்றிய பாம்பின்மீது பழிபோட்டாள். (ஆதி. 3:12, 13) கீழ்ப்படியாமல் போனதற்கு ஆதாமும் ஏவாளும் நொண்டி சாக்கு சொன்னார்கள். இந்தக் கலகக்காரர்களை யெகோவா தண்டித்தார். இவர்களுடைய வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், கணவனும் மனைவியும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதோடு, அவர்களுடைய செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

6. ஆதியாகமம் 3:15-ஐ எப்படி விளக்குவீர்கள்?

6 ஏதேன் தோட்டத்தில் சாத்தான் இப்படிச் செய்திருந்தும், மனிதர்களுக்கு ஓர் அருமையான எதிர்கால நம்பிக்கை கிடைக்கும்படி யெகோவா செய்தார். இந்த நம்பிக்கையைப் பற்றி பைபிளின் முதல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள்.) ‘ஸ்தீரியின் வித்துவால்’ சாத்தான் நசுக்கப்படுவான் என்பதை அந்தத் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தியது. பரலோகத்தில் சேவை செய்யும் நிறைய நீதியுள்ள ஆவி சிருஷ்டிகள் கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவுக்கு மனைவியைப் போல் இருக்கிறார்கள். சாத்தானை ‘நசுக்க’ அந்த ஆவி சிருஷ்டிகளில் ஒருவரை அவர் அனுப்புவார். கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள், ஆதாமும் ஏவாளும் இழந்ததை அனுபவிப்பதற்கு அந்த வித்து வழி செய்யும். யெகோவாவுடைய நோக்கத்தின்படி, இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.—யோவா. 3:16.

7. (அ) ஆதாம் ஏவாள் தவறு செய்ததிலிருந்து கல்யாண வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்பட்டது? (ஆ) கணவனும் மனைவியும் எப்படி இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

7 ஆதாம் ஏவாள் செய்த தவறால் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை மட்டுமல்ல, அதன்பின் வந்த எல்லாருடைய கல்யாண வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. உதாரணத்துக்கு, ஏவாளும் அவளுக்குப்பின் வரும் எல்லா பெண்களும் பிரசவ சமயத்தில் பயங்கர வேதனையை அனுபவிப்பார்கள். கணவர்களின் அன்புக்காக மனைவிகள் ஏங்குவார்கள். ஆனால், கணவர்கள் மனைவிகளை அடக்கி ஆளுவார்கள்; இன்று நாம் பார்ப்பது போல் அவர்களைக் கொடுமைப்படுத்துவார்கள். (ஆதி. 3:16) கணவர்கள் அன்பான குடும்பத் தலைவர்களாக இருக்க வேண்டும் என்றும், மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். (எபே. 5:33) கடவுள் பயமுள்ள கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது, நிறைய பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும்.

கல்யாணம்–ஆதாம் முதல் பெருவெள்ளம் வரை

8. ஆதாம் முதல் பெருவெள்ளம் வரை இருந்த கல்யாண வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்.

8 ஆதாமும் ஏவாளும் சாவதற்கு முன்பு, அவர்களுக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள். (ஆதி. 5:4) அவர்களுடைய முதல் மகனான காயீன், தன் சொந்தக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். முதல்முதலில், காயீனின் வம்சத்தில் வந்த லாமேக்கு என்பவருக்குத்தான் இரண்டு மனைவிகள் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (ஆதி. 4:17, 19) ஆதாம் முதல் நோவா வரை, சிலர் மட்டுமே யெகோவாவை வணங்கினார்கள். ஆபேல், ஏனோக்கு, நோவா, நோவாவுடைய குடும்பத்தார் ஆகியவர்கள் அவர்களில் சிலர். நோவாவின் காலத்தில், “தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதனால், “அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.” இது இயற்கைக்கு மாறாக இருந்ததால், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இராட்சதர்களாக இருந்தார்கள். நெஃபிலிம் என்பதுதான் அவர்களுடைய பெயர். அந்தச் சமயத்தில், ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது, அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக இருந்தது’ என்று பைபிள் சொல்கிறது.—ஆதி. 6:1-5.

9. நோவாவின் காலத்தில் வாழ்ந்த பொல்லாத ஜனங்களை யெகோவா என்ன செய்தார், அந்தக் காலப்பகுதியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 பொல்லாதவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக யெகோவா ஒரு பெரிய வெள்ளத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொன்னார். “நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா” வரப்போகும் அந்த வெள்ளத்தைப் பற்றி சொன்னார். (2 பே. 2:5) ஆனால், கல்யாணம் செய்வது உட்பட தங்கள் சொந்த வாழ்க்கையிலேயே அவர்கள் மூழ்கிப் போயிருந்தார்கள். அதனால், நோவா சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. நம்முடைய காலத்தை நோவாவின் காலத்தோடு இயேசு ஒப்பிட்டார். (மத்தேயு 24:37-39-ஐ வாசியுங்கள்.) இந்தப் பொல்லாத உலகம் அழிவதற்கு முன்பு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை நாம் எல்லாருக்கும் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான ஜனங்கள் நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கல்யாணம், பிள்ளை வளர்ப்பு போன்ற விஷயங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், யெகோவாவின் நாள் நெருங்கி வருவதை நாம் மறந்துவிடுவோம்.

கல்யாணம்–பெருவெள்ளம் முதல் இயேசுவின் காலம் வரை

10. (அ) நிறைய கலாச்சாரங்களில் எது சர்வசாதாரணமாக இருந்தது? (ஆ) ஆபிரகாமும் சாராளும் எப்படி நல்ல முன்மாதிரிகளாக இருந்தார்கள்?

10 நோவாவுக்கும் அவருடைய மூன்று மகன்களுக்கும் ஒன்றுக்கும் அதிகமான மனைவிகள் இருக்கவில்லை. ஆனால், வெள்ளத்துக்குப் பிறகு, நிறைய ஆண்களுக்கு ஒன்றுக்கும் அதிகமான மனைவிகள் இருந்தார்கள். நிறைய கலாச்சாரங்களில், பாலியல் முறைகேடு சர்வசாதாரணமாக இருந்தது. மத பழக்கவழக்கங்களிலும் அது கலந்திருந்தது. உதாரணத்துக்கு, ஆபிரகாமும் அவருடைய மனைவி சாராளும் கானானுக்குப் போனபோது, அங்கிருந்த ஜனங்கள் ஒழுக்கங்கெட்ட பழக்கவழக்கங்களில் மூழ்கிப்போயிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். கல்யாண ஏற்பாட்டையும் அவர்கள் மதிக்கவில்லை. சோதோம், கொமோராவில் இருந்த மக்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்ததால் அந்த நகரங்களை யெகோவா அழித்தார். அந்த மக்களிலிருந்து ஆபிரகாம் ரொம்பவே வித்தியாசமாக இருந்தார். அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவராக இருந்தார். சாராளும் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் நல்ல முன்மாதிரியாக இருந்தாள். (1 பேதுரு 3:3-6-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய மகன் ஈசாக்கு, யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யும்படி ஆபிரகாம் பார்த்துக்கொண்டார். ஈசாக்கும் தன்னுடைய மகன் யாக்கோபுக்கு அப்படித்தான் செய்தார். யாக்கோபுடைய பிள்ளைகள்தான் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களாக ஆனார்கள்.

11. திருச்சட்டம் இஸ்ரவேலர்களை எப்படிப் பாதுகாத்தது?

11 அதன் பின்பு, இஸ்ரவேல் தேசத்தோடு யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்தார். அவர்களுக்கு மோசேயின் திருச்சட்டத்தைக் கொடுத்தார். கணவர்களும் மனைவிகளும் தங்களை ஆன்மீக ரீதியில் பாதுகாத்துக்கொள்வதற்கு இது உதவியாக இருந்தது. உதாரணத்துக்கு, நிறைய பேரைக் கல்யாணம் செய்வது உட்பட கல்யாணம் சம்பந்தப்பட்ட வழக்கங்களைப் பற்றி திருச்சட்டத்தில் கட்டளைகள் இருந்தன. பொய் கடவுள்களை வணங்கியவர்களைக் கல்யாணம் செய்ய இஸ்ரவேலர்களுக்குத் தடை இருந்தது. (உபாகமம் 7:3, 4-ஐ வாசியுங்கள்.) அவர்களுக்குக் கல்யாண வாழ்க்கையில் பெரிய பிரச்சினைகள் வந்தபோது மூப்பர்கள் உதவி செய்தார்கள். மணத்துணைக்கு துரோகம், பொறாமை, சந்தேகம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக சட்டங்கள் இருந்தன. விவாகரத்து அனுமதிக்கப்பட்டாலும் மணத்துணையைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, ஒருவன் தன் மனைவியிடம் ஏதாவது ‘இலச்சையான [அதாவது, கேவலமான] காரியத்தைக் கண்டால்’ அவளை விவாகரத்து செய்யலாம். (உபா. 24:1) அந்தக் கேவலமான காரியத்தைப் பற்றி பைபிள் சொல்லவில்லை என்றாலும், சின்ன சின்ன தவறுகளைக் காரணங்காட்டி ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது.—லேவி. 19:18.

துணைக்குத் துரோகம் செய்யாதீர்கள்!

12, 13. (அ) மல்கியாவின் காலத்தில் சில ஆண்கள் தங்கள் மனைவிகளை எப்படி நடத்தினார்கள்? (ஆ) இன்று, ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் துணைக்குத் துரோகம் செய்வதால் ஏற்படும் விளைவு என்ன?

12 தீர்க்கதரிசியான மல்கியாவின் காலத்தில், யூத ஆண்கள் நிறைய பேர் ஏதேதோ சாக்குச் சொல்லி தங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். இளம் பெண்களை அல்லது யெகோவாவை வணங்காத பெண்களைக் கல்யாணம் செய்வதற்காகத் தங்களுடைய மனைவிகளை அவர்கள் விவாகரத்து செய்தார்கள். இயேசு வாழ்ந்த காலத்திலும், அவர்கள் எதற்கெடுத்தாலும் தங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்தார்கள். (மத். 19:3) இப்படிப்பட்ட விவாகரத்தை யெகோவா வெறுத்தார்.மல்கியா 2:13-16-ஐ வாசியுங்கள்.

13 மணத்துணைக்குத் துரோகம் செய்வதை இன்று யெகோவாவின் மக்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இப்படிப்பட்ட தவறு எப்போதாவது நடந்து விடுகிறது. பின்வரும் இந்தச் சூழ்நிலையைக் கவனியுங்கள். கல்யாணமான ஒரு யெகோவாவின் சாட்சி தன் துணைக்குத் துரோகம் செய்துவிடுகிறார். பின்பு, வேறொருவரைக் கல்யாணம் செய்வதற்காக, அவரிடமிருந்து விவாகரத்து வாங்கிவிடுகிறார். துணைக்குத் துரோகம் செய்த அந்த நபர் மனம்திரும்பவில்லை என்றால், அவர் சபைநீக்கம் செய்யப்படுவார். சபை சுத்தமாக இருப்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. (1 கொ. 5:11-13) ஆனால், அவர் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்றால் மனம்திரும்பியதை அவர் செயலில் காட்ட வேண்டும். (லூக். 3:8; 2 கொ. 2:5-10) தவறு செய்தவர் மறுபடியும் நிலைநாட்டப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் கடந்திருக்க வேண்டும் என்பது கிடையாது. அவர் உண்மையிலேயே மனம்திருந்திவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கும் சபையில் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கும் ஒருவேளை ஒரு வருடமோ அதற்கும் அதிகமாகவோ ஆகலாம். அவர் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும் யெகோவாவுடைய “நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக” அவர் நிச்சயம் கணக்குக் கொடுக்க வேண்டும்.—ரோ. 14:10-12; நவம்பர் 15, 1979 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 31-32-ஐப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களும் கல்யாணமும்

14. திருச்சட்டம் எதற்காகக் கொடுக்கப்பட்டது?

14 மோசேயின் திருச்சட்டம் 1,500-க்கும் அதிகமான வருடங்களுக்கு இஸ்ரவேலர்களை வழிநடத்தியது. இந்தத் திருச்சட்டம் அவர்களுக்கு நிறைய வழிகளில் உதவியாக இருந்தது. உதாரணத்துக்கு, குடும்பப் பிரச்சினைகளை சரிசெய்ய இது அவர்களுக்கு உதவியது. அதோடு, ‘கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசானாகவும் இருந்தது.’ (கலா. 3:23, 24) ஆனால், இயேசுவின் மரணத்தோடு திருச்சட்டம் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு, கடவுள் ஒரு புதிய ஏற்பாட்டை செய்தார். (எபி. 8:6) இந்த ஏற்பாட்டில், திருச்சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சில விஷயங்கள் முழுவதுமாக தடை செய்யப்பட்டன.

15. (அ) கல்யாணம் சம்பந்தமாகக் கிறிஸ்தவ சபையில் இருக்கும் தாராதரம் என்ன? (ஆ) விவாகரத்து சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவர் என்னென்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

15 ஒரு நாள் பரிசேயர்கள், கல்யாணம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை இயேசுவிடம் கேட்டார்கள். மோசேயின் திருச்சட்டத்தின்படி, விவாகரத்து செய்ய இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் அனுமதி கொடுத்திருந்தாலும், “ஆரம்பத்திலிருந்து அப்படி இருக்கவில்லை” என்று இயேசு சொன்னார். (மத். 19:6-8) கல்யாணம் சம்பந்தமாக ஆரம்பத்தில் யெகோவா வைத்திருந்த அதே தராதரம்தான் இன்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது என்பதை இயேசுவின் பதில் காட்டியது. (1 தீ. 3:2, 12) கணவனும் மனைவியும் “ஒரே உடலாக” இருப்பதால் அவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து வாழ வேண்டும். கடவுள்மீது இருக்கும் அன்பும் ஒருவர்மீது ஒருவருக்கு இருக்கும் அன்பும் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ உதவும். பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காவது ஒருவர் விவாகரத்து செய்தால், அவரால் இன்னொரு கல்யாணம் செய்ய முடியாது. (மத். 19:9) ஆனால், துரோகம் செய்த துணை மனம்திரும்பி வரும்போது, தவறு செய்யாத துணை ஒருவேளை அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். ஓசியா தீர்க்கதரிசி, விபச்சாரம் செய்த தன் மனைவி கோமேரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதேபோல், பொய் கடவுள்களை வணங்கிய இஸ்ரவேலர்கள் மனம்திரும்பி வந்தபோது யெகோவாவும் அவர்களை ஏற்றுக்கொண்டார். (ஓசி. 3:1-5) தன்னுடைய துணை தனக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று தெரிந்தும் ஒருவர் அந்தத் துணையோடு மறுபடியும் உடலுறவு வைத்துக்கொண்டால், அவர் தன் துணையை மன்னித்துவிட்டார் என்று அர்த்தம். அதற்குப் பிறகு, அவரை விவாகரத்து செய்ய பைபிளின்படி எந்தக் காரணமும் கிடையாது.

16. கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

16 பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தவொரு காரணத்துக்காகவும் உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் துணையை விவாகரத்து செய்யக்கூடாது என்று இயேசு சொன்னார். பிறகு, கல்யாணம் செய்யாமல் இருப்பதை ஒரு “வரம்” என்றும், “அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என்றும் சொன்னார். (மத். 19:10-12) எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக நிறைய பேர் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

17. கல்யாணம் செய்வதா வேண்டாமா என்று தீர்மானிக்க ஒரு கிறிஸ்தவருக்கு எது உதவும்?

17 கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்ற தீர்மானத்தை எடுக்க எது உதவும்? கல்யாணம் செய்யாமலேயே தன்னால் வாழ முடியுமா முடியாதா என்று ஒருவர் தீர்மானிக்க வேண்டும். தனியாக இருப்பது நல்லது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதோடு, “பாலியல் முறைகேடு எங்கும் பரவி இருப்பதால் அவனவன் தன்னுடைய சொந்த மனைவியோடும் அவளவள் தன்னுடைய சொந்த கணவனோடும் வாழ வேண்டும்” என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, “அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனென்றால், காமத் தீயில் பற்றியெரிவதைவிடத் திருமணம் செய்துகொள்வதே மேல்” என்றும் சொன்னார். ஒருவர் கல்யாணம் செய்யும்போது, கட்டுப்படுத்த முடியாத பாலியல் ஆசைகளால் சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடுவதையோ பாலியல் முறைகேட்டில் விழுந்துவிடுவதையோ தவிர்க்க முடியும். கல்யாணம் செய்ய நினைப்பவர்கள், தங்களுக்கு உண்மையிலேயே கல்யாண வயது வந்துவிட்டதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “ஒருவன் தன்னுடைய காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதிருந்தால், இளமை மலரும் பருவத்தைக் கடந்திருந்தால், திருமணம் செய்துகொள்வதுதான் தனக்கு நல்லதென்று நினைத்தால், அவன் தன் விருப்பப்படியே செய்யட்டும்; அதில் பாவம் இல்லை. அப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும்.” (1 கொ. 7:2, 9, 36; 1 தீ. 4:1-3) நிறைய பேருக்கு, இளமை பருவத்தில் பாலியல் ஆசைகள் வருகிறது. அந்த ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்காகக் கல்யாணம் செய்யும்படி ஒருவரிடம் சொல்லக்கூடாது. ஏனென்றால், கல்யாண வாழ்க்கையில் வரும் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அவருக்குப் பக்குவம் இல்லாமல் இருக்கலாம்.

18, 19. (அ) கிறிஸ்தவர்கள் யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

18 யெகோவாவுக்கு அர்ப்பணித்து அவரை முழுமனதோடு நேசிக்கிற ஒருவரைத்தான் கிறிஸ்தவர்கள் கல்யாணம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்ய வேண்டுமென்ற ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்ததால் யெகோவா அவர்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். (1 கொ. 7:39) கல்யாணத்துக்குப் பிறகும் பைபிள் தரும் ஆலோசனைகளுக்கு அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும். அப்போதுதான், அவர்களுடைய கல்யாண வாழ்க்கையில் சந்தோஷம் பூத்துக் குலுங்கும்.

19 இன்று நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம். கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான குணங்கள் நிறைய பேரிடம் இல்லை. (2 தீ. 3:1-5) தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்சினைகள் மத்தியிலும் வெற்றிகரமான, சந்தோஷமான கல்யாண வாழ்க்கையை அனுபவிக்க சில அருமையான பைபிள் ஆலோசனைகள் இருக்கின்றன. அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். முடிவில்லாத வாழ்க்கைக்கு வழிநடத்தும் பாதையில் தொடர்ந்து நடக்க இது அவர்களுக்கு உதவும்.—மத். 7:13, 14.