Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

சீடர்கள் கை கழுவாததைப் பற்றி இயேசுவின் எதிரிகள் ஏன் குறை சொன்னார்கள்?

இயேசுவின் எதிரிகள், அவரிடமும் அவருடைய சீடர்களிடமும் கண்டுபிடித்த குறைகளில் இதுவும் ஒன்று. எவையெல்லாம் ஒருவரைத் தீட்டுப்படுத்தும் என்பதைப் பற்றி மோசேயின் திருச்சட்டத்தில் இருந்தது. உதாரணத்துக்கு, ஆண் அல்லது பெண்ணுடைய பிறப்புறுப்புகளில் கசிவு ஏற்பட்டாலோ, தொழுநோய் வந்தாலோ, மனிதருடைய அல்லது மிருகங்களுடைய பிணங்களைத் தொட்டாலோ ஒருவர் தீட்டுப்படலாம். சுத்தமாவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதும் திருச்சட்டத்தில் இருந்தது. பலிகளைக் கொடுப்பது, கழுவுவது அல்லது தெளிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது.—லேவி. அதிகாரங்கள் 11-15; எண். அதிகாரம் 19.

யூத மத ரபீக்கள், இந்தச் சட்டங்களில் இருந்த ஒவ்வொரு நுணுக்கமான விவரங்களுக்கும் புதுப்புது சட்டங்களைப் போட்டார்கள். ஒருவரை எது தீட்டுப்படுத்தலாம், அந்த நபர் மற்றவர்களை எப்படித் தீட்டுப்படுத்திவிடலாம் என்பதைப் பற்றி அவர்கள் கூடுதலான சட்டங்களைச் சேர்த்துக்கொண்டதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எந்த மாதிரியான பாத்திரங்களும் பொருள்களும் ஒருவரைத் தீட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றியும், மக்கள் மறுபடியும் சுத்தமாவதற்குச் செய்ய வேண்டிய சடங்குகளைப் பற்றியும் அவர்கள் சட்டங்கள் போட்டார்கள்.

இயேசுவின் எதிரிகள் அவரிடம், “உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காமல் ஏன் தீட்டான கைகளால் சாப்பிடுகிறார்கள்?” என்று கேட்டார்கள். (மாற். 7:5) கை கழுவாமல் சாப்பிடுவது சுகாதாரமாக இருக்காது என்ற அர்த்தத்தில் அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. சடங்காச்சார முறைப்படி, சாப்பிடுவதற்கு முன்பு கைகள்மீது தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று யூத மத ரபீக்கள் சொல்லியிருந்தார்கள். “எந்தப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும், எப்படிப்பட்ட தண்ணீர் ஊற்ற வேண்டும், யார் தண்ணீர் ஊற்ற வேண்டும், எதுவரை கைகளில் தண்ணீர் ஊற்ற வேண்டும்” என்பதைப் பற்றியும் அவர்கள் விவாதம் செய்ததாக இங்கே சொல்லப்பட்ட ஆராய்ச்சி சொல்கிறது.

இஷ்டத்துக்குச் சட்டங்களைப் போட்ட யூத மதத் தலைவர்களிடம் இயேசு என்ன சொன்னார்? “வெளிவேஷக்காரர்களான உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்; ‘இந்த மக்கள் தங்களுடைய உதடுகளால் என்னைப் போற்றிப் புகழ்கிறார்கள், இவர்களுடைய இருதயமோ என்னைவிட்டுத் தூரமாய் விலகியிருக்கிறது. இவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனென்றால் மனிதர்களுடைய கட்டளைகளைக் கடவுளுடைய கோட்பாடுகளாக இவர்கள் கற்பிக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார்; அதன்படியே, நீங்கள் கடவுளுடைய கட்டளையை விட்டுவிட்டு மனிதர்களுடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொள்கிறீர்கள்” என்று சொன்னார்.—மாற். 7:6-8.