Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷமான கல்யாண வாழ்க்கை!

சந்தோஷமான கல்யாண வாழ்க்கை!

“உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.” —எபே. 5:33.

பாடல்கள்: 87, 3

1. கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பித்தாலும் தம்பதிகள் எதை எதிர்பார்க்கலாம்? (ஆரம்பப் படம்)

கல்யாண நாளன்று, அழகான மணமகளை மணமகன் பார்க்கிறார். அந்தச் சமயத்தில், அவர்கள் இரண்டு பேருக்கும் இருக்கிற சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அவர்கள் காதலித்துக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் இருந்த அன்பு அதிகமானது. இரண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கப்போவதாக வாக்குக் கொடுத்தார்கள். கல்யாணத்துக்குப் பிறகு, அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறார்கள். அவர்கள் கடைசிவரை ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்றும், கல்யாண வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றும் கல்யாணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவா விரும்புகிறார். அதனால்தான், அவருடைய வார்த்தையான பைபிளில் ஞானமான ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார். (நீதி. 18:22) இருந்தாலும், தவறு செய்யும் இயல்புடைய இரண்டு பேர் கல்யாணம் செய்துகொள்ளும்போது பிரச்சினைகள் வரும், அல்லது “வாழ்க்கையில் உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 கொ. 7:28) முடிந்தளவு அந்தப் பிரச்சினைகளை அவர்கள் எப்படிக் குறைக்கலாம்? கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?

2. தம்பதிகள் காட்ட வேண்டிய 4 விதமான அன்பு என்ன?

2 அன்பு காட்டுவது ரொம்ப முக்கியம் என்று பைபிள் சொல்கிறது. கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க, கணவனும் மனைவியும் 4 விதமான அன்பைக் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, கணவனும் மனைவியும் கனிவான பாசத்தை (கிரேக்கில், ஃபீலியா) காட்ட வேண்டும், காதலை (ஈராஸ்) வெளிப்படுத்த வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் இருந்தால், குடும்பத்தில் இருக்கிறவர்கள் ஒருவருக்கொருவர் பாசம் (ஸ்டார்கே) காட்டுவது ரொம்பவே முக்கியம். எல்லாவற்றையும்விட, நியமங்களின் அடிப்படையிலான அன்பை (அகாப்பே) காட்டுவது ரொம்ப முக்கியம். அப்போதுதான் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இந்த அன்பைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “உங்களில் ஒவ்வொருவனும் தன்மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”—எபே. 5:33.

கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் பொறுப்புகள்

3. கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் எந்தளவுக்கு அன்பு காட்ட வேண்டும்?

3 “கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று பவுல் எழுதினார். (எபே. 5:25) இயேசு தன்னுடைய சீடர்கள்மீது அன்பு காட்டியது போலவே கிறிஸ்தவர்களும் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும். (யோவான் 13:34, 35; 15:12, 13-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவ கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு காட்ட வேண்டும். கல்யாண வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சினைகள் வரும்போது, தங்களுக்குள் இருக்கும் அன்பு அந்தளவு பலமாக இல்லை என்று சிலர் நினைக்கலாம். அப்போது அவர்கள் என்ன செய்யலாம்? அகாப்பே அன்பைக் காட்டலாம். அந்த அன்பு “எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்” என்று பைபிள் சொல்கிறது. அப்படிப்பட்ட “அன்பு ஒருபோதும் ஒழியாது.” (1 கொ. 13:7, 8) கல்யாணத்தின்போது சொன்ன உறுதிமொழியை தம்பதிகள் மறந்துவிடக்கூடாது. ஒருவரை ஒருவர் நேசிப்பதாகவும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதாகவும் அவர்கள் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதை ஞாபகத்தில் வைத்திருக்கும்போது, எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் கிறிஸ்தவ கணவன் மனைவியால் சமாளிக்க முடியும்.

4, 5. (அ) குடும்பத் தலைவராக ஒரு கணவனுடைய பொறுப்பு என்ன? (ஆ) கணவனுடைய தலைமை ஸ்தானத்தைப் பற்றி மனைவி எப்படிக் கருத வேண்டும்? (இ) ஒரு தம்பதி என்ன மாற்றங்களைச் செய்தார்கள்?

4 கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “மனைவிகளே, நம்முடைய எஜமானருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்.” (எபே. 5:22, 23) கணவனைவிட மனைவி தாழ்வானவள் என்று இந்த வசனம் அர்த்தப்படுத்தவில்லை. மனைவியுடைய முக்கியமான பொறுப்பைப் பற்றி யெகோவா இப்படிச் சொன்னார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்.” (ஆதி. 2:18) அப்படியென்றால், கணவன் ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருக்க மனைவி உதவ வேண்டும். ‘சபையின் தலைவரான’ இயேசுவின் முன்மாதிரியைக் கணவர் பின்பற்ற வேண்டும். இப்படிச் செய்யும்போது, மனைவி பாதுகாப்பாக உணர்வாள். அதோடு, கணவனுக்கு மரியாதை காட்டுவதும் ஆதரவாக இருப்பதும் அவளுக்குச் சுலபமாக இருக்கும்.

5 ஃப்ரெட் என்பவருடைய மனைவி கேத்தி [1] (பின்குறிப்பு) இப்படிச் சொல்கிறார்: “கல்யாணத்துக்கு முன்னாடி நான் எல்லாத்தையும் என்னோட இஷ்டத்துக்குத்தான் செய்வேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட கணவரை நம்பி இருக்குறதுக்கு கத்துக்கிட்டேன். அப்படி செய்றது எப்பவுமே சுலபமா இருந்தது கிடையாது. ஆனா, யெகோவா எதிர்பார்க்கிற மாதிரி செய்றதுனால நானும் என் கணவரும் இப்போ ரொம்ப நெருக்கமா இருக்கோம்.” ஃப்ரெட் இப்படிச் சொல்கிறார்: “தீர்மானம் எடுக்குறதுனாலே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம், எங்க ரெண்டு பேரையும் மனசுல வைச்சு தீர்மானம் எடுக்குறது அதைவிட கஷ்டமா இருந்துச்சு. ஆனா, யெகோவாகிட்ட உதவி கேட்டு ஜெபம் செய்றதும் என் மனைவி சொல்ற விஷயங்களை காதுகொடுத்து கேட்குறதும் ஒவ்வொரு நாளும் எனக்கு உதவியா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் இப்ப சூப்பர் டீம்!”

6. கல்யாண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அன்பு எப்படி நமக்கு உதவுகிறது?

6 கணவனும் மனைவியும் ‘ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு, தாராளமாக மன்னிக்கும்போது’ திருமண பந்தம் பலமாக இருக்கும். கணவனும் மனைவியும் தவறு செய்கிற இயல்புடையவர்களாக இருப்பதால், அவர்கள் தவறு செய்வது சகஜம்தான். அப்படி ஏதாவது தவறு செய்துவிட்டால், அந்தத் தவறிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம், மன்னிப்பதற்கும் கற்றுக்கொள்ளலாம். அதோடு, பைபிள் நியமங்களின் அடிப்படையில் அன்பு காட்டலாம். எல்லாவற்றையும் “பரிபூரணமாகப் பிணைப்பது” இப்படிப்பட்ட அன்புதான். (கொலோ. 3:13, 14) கணவனும் மனைவியும் பொறுமையாகவும், பாசமாகவும், தவறைக் கணக்கு வைக்காமலும் இருப்பதன் மூலம் இப்படிப்பட்ட அன்பைக் காட்டலாம். (1 கொ. 13:4, 5) ஒருவேளை, தங்களுக்குள் கருத்துவேறுபாடு வந்தால், அந்த நாள் முடிவதற்குள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், அதைச் சரிசெய்துகொள்ள அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். (எபே. 4:26, 27) “என்னை மன்னிச்சிடு(ங்க), நான் உன்(ங்க) மனசை கஷ்டப்படுத்திட்டேன்” என்று சொல்வதற்கு மனத்தாழ்மையும் தைரியமும் தேவை. கணவனும் மனைவியும் அப்படிச் சொல்லும்போது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும், இரண்டு பேரும் நெருங்கி இருக்கவும் முடியும்.

மென்மையாக நடந்துகொள்ளுங்கள்

7, 8. (அ) தாம்பத்திய கடனைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆ) தம்பதிகள் ஏன் ஒருவரை ஒருவர் மென்மையாக நடத்த வேண்டும்?

7 தாம்பத்திய கடனைச் செலுத்தும் விஷயத்தில் தம்பதிகள் சரியான கண்ணோட்டத்தோடு இருக்க, பைபிள் நல்ல ஆலோசனைகளைத் தருகிறது. (1 கொரிந்தியர் 7:3-5-ஐ வாசியுங்கள்.) கணவனும் மனைவியும் தங்கள் துணையின் உணர்ச்சிகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்திய கடனை செலுத்தும் விஷயத்தில் மனைவியிடம் கணவன் மென்மையாக நடந்துகொள்ளவில்லை என்றால் மனைவியால் அதைச் சந்தோஷமாக அனுபவிக்க முடியாது. அதனால்தான், கணவன் தன்னுடைய ‘மனைவியை நன்கு புரிந்துகொண்டு அவளுடன் வாழ’ வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:7) பாலியல் ஆசைகளைத் திருப்திசெய்ய கணவனோ மனைவியோ தன் துணையைக் கட்டாயப்படுத்தவும் கூடாது, அதைக் கேட்டு வாங்கவும் கூடாது. அது இயல்பாகவே வர வேண்டும். பொதுவாக, உடலுறவு கொள்ள பெண்களைவிட ஆண்கள் உணர்ச்சி ரீதியில் சீக்கிரம் தயாராகிவிடுவார்கள். ஆனால், இரண்டு பேரும் உணர்ச்சி ரீதியில் தயாராக இருக்கும்போது உடலுறவு வைத்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

8 கணவனும் மனைவியும் காதல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும், எந்தளவு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு பைபிள் திட்டவட்டமான ஆலோசனைகளைக் கொடுப்பதில்லை. ஆனால், அப்படிப்பட்ட உணர்வுகளைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. (உன். 1:2; 2:6) கிறிஸ்தவ கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மென்மையாக நடத்த வேண்டும்.

9. தன் துணையைத் தவிர வேறொருவரிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஏன் தவறு?

9 கடவுள்மீதும் மணத்துணையின்மீதும் நமக்குப் பலமான அன்பு இருந்தால், திருமண பந்தத்தைக் கெடுத்துப்போட யாரையும் எதையும் அனுமதிக்க மாட்டோம். சிலர் ஆபாச படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானதால் தங்கள் கல்யாண வாழ்க்கையைப் பலவீனப்படுத்தி இருக்கிறார்கள், ஏன், அதை நாசமாக்கியும் இருக்கிறார்கள். ஆபாசத்தைப் பார்க்க தூண்டுகிற விஷயத்தையோ தவறான பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற விஷயத்தையோ நாம் எதிர்த்து நிற்க வேண்டும். தன் கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறொருவரிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்ற எந்த அன்பற்ற செயலையும் நாம் செய்யக்கூடாது. நாம் என்ன யோசிக்கிறோம், என்ன செய்கிறோம் என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்யவும், மணத்துணைக்கு உண்மையாக இருக்கவும் இது உதவியாக இருக்கும்.மத்தேயு 5:27, 28; எபிரெயர் 4:13-ஐ வாசியுங்கள்.

பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கலாம்?

10, 11. (அ) விவாகரத்து எந்தளவு சர்வசாதாரணமாக இருக்கிறது? (ஆ) பிரிந்துபோவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (இ) பிரச்சினைகள் வரும்போது உடனே பிரிந்துபோகாமல் இருக்க தம்பதிகளுக்கு எது உதவும்?

10 பெரிய பெரிய பிரச்சினைகள் தீராததால் சில தம்பதிகள் பிரிந்துபோவதற்கோ விவாகரத்து செய்துகொள்வதற்கோ முடிவு செய்கிறார்கள். சில நாடுகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் விவாகரத்தில்தான் முடிகின்றன. ஆனால், இந்தளவுக்குக் கிறிஸ்தவ சபையில் நடப்பதில்லை. இருந்தாலும், நிறைய கிறிஸ்தவ தம்பதிகளுடைய வாழ்க்கையிலும் பெரிய பெரிய பிரச்சினைகள் வருகின்றன.

11 “மனைவி தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது; அப்படியே பிரிந்துபோனாலும், அவள் மறுமணம் செய்யாதிருக்க வேண்டும் அல்லது மறுபடியும் தன் கணவனோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும்; கணவனும் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது” என்று பைபிள் ஆலோசனை தருகிறது. (1 கொ. 7:10, 11) பிரச்சினைகள் அதிகமாக இருப்பதால் பிரிந்துபோவதுதான் சரி என்று சில தம்பதிகள் நினைக்கலாம். பிரிந்துபோவதை லேசான விஷயமாக நினைக்கக்கூடாது என்பதைக் காட்டுவதற்காக, கல்யாணத்தைப் பற்றி கடவுள் சொன்ன அதே விஷயத்தை இயேசு மறுபடியும் சொன்னார். அதோடு, “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்றும் சொன்னார். (மத். 19:3-6; ஆதி. 2:24) கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா விரும்புகிறார். (1 கொ. 7:39) நாம் என்ன செய்தாலும் சரி, யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். பிரச்சினைகள் பெரிதாவதற்கு முன்பே அதைச் சீக்கிரமாகத் தீர்க்க இது உதவியாக இருக்கும்.

12. பிரிந்துபோவதைப் பற்றி ஒருவர் ஏன் யோசிக்கலாம்?

12 பெரிய பிரச்சினைகள் வருவதற்கு எது காரணமாக இருக்கலாம்? திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போல இல்லாததால் தம்பதிகள் ஏமாற்றமடையலாம் அல்லது கோபப்படலாம். நிறைய சமயங்களில், அவர்கள் வளர்ந்த சூழலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசப்படுவதால் பிரச்சினைகள் வரலாம். சிலசமயம், சொந்தபந்தங்களோடு ஒத்துப்போவது, பணத்தைச் செலவு செய்வது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற விஷயங்களாலும் பிரச்சினைகள் வரலாம். ஆனால், யெகோவா கொடுத்த ஆலோசனைகளின்படி செய்ததால் நிறைய தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை நன்றாகச் சமாளித்திருக்கிறார்கள்.

13. பிரிந்துபோவதற்கான நியாயமான காரணங்கள் எவை?

13 கணவனும் மனைவியும் பிரிந்துபோவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனிக்காமல் இருப்பது, பயங்கரமாக அடித்துக் கொடுமைப்படுத்துவது, யெகோவாவை வணங்குவதற்கு ஒரேயடியாகத் தடை போடுவது போன்ற காரணங்களுக்காக ஒருவர் பிரிந்துபோகலாம். பெரிய பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் தம்பதிகள் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதோடு, பைபிளில் இருக்கிற ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க அவர்களால் தம்பதிகளுக்கு உதவ முடியும். கடவுளுடைய சக்திக்காகத் தம்பதிகள் ஜெபம் செய்யும்போது, பைபிள் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கவும் கிறிஸ்தவ குணங்களைக் காட்டவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.—கலா. 5:22, 23. [2] (பின்குறிப்பு)

14. யெகோவாவை வணங்காத தன் துணையோடு வாழும் ஒரு கிறிஸ்தவர் எதை மனதில் வைக்க வேண்டும்?

14 கணவனோ மனைவியோ யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும் தம்பதிகள் சந்தோஷமாக இருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:12-14-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், சத்தியத்தில் இல்லாத கணவன் அல்லது மனைவியின் துணை ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தால், சத்தியத்தில் இல்லாத அந்தத் துணை ‘பரிசுத்தமாக்கப்படுகிறார்’ என்று பைபிள் சொல்கிறது. அவர்களுடைய இளம் பிள்ளைகளும் ‘பரிசுத்தமானவர்களாக’ கருதப்படுவதால் அவர்களுக்குக் கடவுளுடைய பாதுகாப்பு இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவ தம்பதிகளைப் பவுல் இப்படி உற்சாகப்படுத்தினார்: “மனைவியே, உன்னால் உன் கணவன் மீட்படையலாம் அல்லவா? கணவனே, உன்னால் உன் மனைவி மீட்படையலாம் அல்லவா?” (1 கொ. 7:16) கிறிஸ்தவ சபையில் இருக்கும் நிறைய பேர், தங்களுடைய துணை ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு உதவி செய்திருக்கிறார்கள்.

15, 16. (அ) யெகோவாவை வணங்காத தன் கணவனிடம் மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது? (ஆ) யெகோவாவை வணங்காத தன் துணை பிரிந்துபோகத் தீர்மானித்தால் என்ன செய்யலாம்?

15 கிறிஸ்தவ மனைவிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். “அப்போது, [உங்கள் கணவர்] கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதவராக இருந்தாலும், உங்கள் கற்புள்ள நடத்தையையும் நீங்கள் காட்டுகிற ஆழ்ந்த மரியாதையையும் பார்த்து உங்கள் நடத்தையினாலேயே விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்; ஆம், நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே அவர் விசுவாசியாவதற்குத் தூண்டப்படலாம்” என்று சொன்னார். மனைவி தன்னுடைய மத நம்பிக்கைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, கடவுளுடைய பார்வையில் மிகவும் மதிப்புள்ளதாக இருக்கும் ‘அமைதியையும் சாந்த குணத்தையும்’ காட்ட வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவருடைய கணவரும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள ஆசைப்படலாம்.—1 பே. 3:1-4.

16 யெகோவாவை வணங்காத தன் துணை பிரிந்துபோகத் தீர்மானித்தால் என்ன செய்வது? இதற்கு பைபிள் இப்படிப் பதில் சொல்கிறது: “கணவன் மனைவி ஆகிய இருவரில் விசுவாசியாக இல்லாத ஒருவர் பிரிந்துபோக முற்பட்டால் பிரிந்துபோகட்டும்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசுவாசியாக இருக்கிற கணவனுக்கோ மனைவிக்கோ சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை; என்றாலும், சமாதானமாக இருப்பதற்கே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்.” (1 கொ. 7:15) பிரிந்துபோவது ஓரளவுக்கு நிம்மதியைத் தந்தாலும், பைபிளின்படி சத்தியத்தில் இருக்கும் துணையால் வேறொருவரைக் கல்யாணம் செய்ய முடியாது. அதேசமயத்தில், பிரிந்துபோக நினைக்கும் தன் துணையை தன்னோடு இருக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சில காலத்துக்குப் பிறகு, பிரிந்துபோன அந்தத் துணை மறுபடியும் அவரோடு சேர்ந்து வாழ விரும்பலாம். காலப்போக்கில் அவரும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகலாம்.

எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?

யெகோவாவின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது உங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் (பாரா 17)

17. தம்பதிகள் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?

17 நாம் ‘கடைசி நாட்களின்’ முடிவில் வாழ்வதால், ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களை’ அனுபவிக்கிறோம். (2 தீ. 3:1-5) அதனால், நாம் பாதுகாப்பாக இருப்பதற்கு யெகோவாவோடு பலமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது” என்றும் “அதனால் மனைவி உள்ளவர்கள் இனி மனைவி இல்லாதவர்கள் போலவும் . . .  உலகத்தைப் பயன்படுத்துகிறவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தாதவர்கள் போலவும் இருக்கட்டும்” என்றும் பவுல் எழுதினார். (1 கொ. 7:29-31) தம்பதிகள் தங்கள் துணையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்ற அர்த்தத்தில் பவுல் அப்படிச் சொல்லவில்லை. நாம் கடைசி நாட்களில் வாழ்வதால் யெகோவாவின் சேவைக்கு நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.—மத். 6:33.

18. சந்தோஷமான கல்யாண வாழ்க்கையை அனுபவிக்க முடியுமென்று நாம் ஏன் சொல்லலாம்?

18 இந்தக் கஷ்டமான காலத்தில் நிறைய பேருடைய கல்யாண வாழ்க்கை முறிந்துபோகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும்! அதற்கு, யெகோவாவோடும் அவருடைய மக்களோடும் நெருங்கி இருக்க வேண்டும். யெகோவா கொடுக்கிற ஆலோசனைகளின்படி நடக்க வேண்டும். அதோடு, கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், யெகோவா செய்த கல்யாண ஏற்பாட்டுக்கு நாம் மதிப்பு கொடுப்போம்.—மாற். 10:9.

^ [1] (பாரா 5) பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ [2] (பாரா 13) ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-253-ல் “விவாகரத்து, பிரிந்துவாழ்வது—பைபிளின் கருத்து” என்ற பிற்சேர்க்கையைப் பாருங்கள்.