Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோஹானஸ் ராவுத்தே ஊழியம் செய்கிறார், ஒருவேளை 1920-ஆக இருக்கலாம்

நம் வரலாற்றுச் சுவடுகள்

“யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்”

“யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்”

“இப்போது ஐரோப்பாவில் அதிகமாகிக்கொண்டு வரும் கொந்தளிப்போடு ஒப்பிடும்போது, இதற்கு முன்பு நடந்த போர்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை” என்று செப்டம்பர் 1, 1915-ல் வெளிவந்த காவற்கோபுரம் சொன்னது. முதல் உலகப் போரைப் பற்றித்தான் அது சொன்னது. கிட்டத்தட்ட 30 நாடுகள் இந்தப் போரால் பாதிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் பயங்கர எதிர்ப்பு இருந்ததால், “ஊழிய வேலை ஓரளவு பாதிக்கப்படும், முக்கியமாக, ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஓரளவு பாதிக்கப்படும்” என்று அந்தக் காவற்கோபுரம் சொன்னது.

உலகம் முழுவதும் கடும் சண்டை சச்சரவு இருந்த அந்தச் சமயத்தில், கிறிஸ்தவ நடுநிலைமையைப் பற்றி பைபிள் மாணாக்கர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும், நற்செய்தியைச் சொல்ல அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். அதற்காக, வில்ஹெல்ம் ஹில்டாபிராண்ட் என்ற சகோதரர், த பைபிள் ஸ்டூடன்ட்ஸ் மன்த்லி என்ற துண்டுப்பிரதியை, பிரென்ச் மொழியில் நிறைய ஆர்டர் செய்தார். அந்தச் சமயத்தில், அவர் பிரான்சில் ஒரு பயனியராகச் சேவை செய்யவில்லை, ஜெர்மன் படையைச் சேர்ந்த ஒரு போர்வீரராக இருந்தார். எதிரியாகக் கருதப்பட்ட இவர், ராணுவ உடையைப் போட்டுக்கொண்டு தெருவில் நடக்கும் பிரென்ச் மொழி மக்களிடம் சமாதானத்தின் செய்தியைச் சொன்னார். இது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நிறைய பைபிள் மாணாக்கர்கள் ராணுவத்தில் இருந்தாலும், நற்செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்தது. காவற்கோபுரத்தில் வெளிவந்த கடிதங்கள் மூலம் இது தெளிவாகத் தெரிந்தது. கப்பல் படையிலிருந்த சகோதரர் லெம்கி, பைபிளில் ஆர்வம் காட்டிய 5 பேரைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார். அந்த 5 பேரும் அவரோடு வேலை செய்தவர்கள். “நான் இந்த கப்பல்ல பயணம் செஞ்சிக்கிட்டு இருந்தாக்கூட யெகோவாவோட புகழ பத்தி மத்தவங்ககிட்ட பேசுறேன்” என்று அவர் சொன்னார்.

கேயார்க் கேஸர் என்ற சகோதரர் ஆரம்பத்தில் போர்வீரராக இருந்தார். ஆனால், கடவுளுடைய ஊழியனாக வீடு திரும்பினார். அவர் அப்படி மாறுவதற்கு என்ன காரணம்? அவருக்கு எப்படியோ பைபிள் மாணாக்கர்களின் பிரசுரம் கிடைத்திருக்கிறது! கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகளை அவர் மனதார ஏற்றுக்கொண்டதால், போரில் கலந்துகொள்ளக்கூடாது என்று அவர் தீர்மானித்தார். அதனால், சண்டையில் ஈடுபடாத ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்தார். போருக்குப் பிறகு, பல வருடங்கள் பயனியர் ஊழியத்தை மும்முரமாகச் செய்தார்.

நடுநிலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு முழுமையாகப் புரியாமல் இருந்தாலும், அவர்களுடைய எண்ணங்களும் செயல்களும் போரை ஆதரித்தவர்களைப் போல் இருக்கவில்லை. அரசியல் தலைவர்களும் சர்ச் தலைவர்களும் தங்கள் நாட்டுக்கு ஆதரவாகக் கொடி பிடித்தார்கள். ஆனால் பைபிள் மாணாக்கர்கள், ‘சமாதானப்பிரபுவாகிய’ இயேசுவுக்கு ஆதரவு காட்டினார்கள். (ஏசா. 9:6) நடுநிலை சம்பந்தமாக யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை என்றாலும், பைபிள் மாணாக்கரான சகோதரர் கான்ராட் மார்ட்டருக்கு இருந்த அடிப்படையான நம்பிக்கையை இவர்களும் பின்பற்றினார்கள். “கிறிஸ்தவங்களாக இருக்குற யாரும் மத்தவங்களை கொல்லக் கூடாதுனு பைபிள்ல இருந்து தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்” என்று அவர் சொன்னார்.—யாத். 20:13. *

ஹான்ஸ் ஹோல்டாஃப் தள்ளுவண்டியைப் பயன்படுத்தி த கோல்டன் ஏஜ் பத்திரிகையைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறார்

மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்தவர்களுக்கு ஜெர்மனி நாட்டு சட்டம் எந்த விதிவிலக்கும் கொடுக்காதபோதும், 20-க்கும் அதிகமான பைபிள் மாணாக்கர்கள் ராணுவத்தில் சேர மறுத்தார்கள். சிலரை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லி மனநல மருத்துவமனையில் சேர்த்து, மயக்க மருந்துகளைக் கொடுத்தார்கள். அதில் குஸ்டாவ் குயோத் என்ற சகோதரரும் ஒருவர். ஹான்ஸ் ஹோல்டாஃப் என்ற சகோதரரும் ராணுவத்தில் சேர மறுத்ததால் சிறைக்குப் போனார். அங்கே, போர் சம்பந்தப்பட்ட வேலைகளை அவர் மறுத்ததால், கை கால்கள் மரத்துப்போகும் அளவுக்கு காவலர்கள் அவரை இறுக்கமாகக் கட்டிப்போட்டார்கள். ஆனால், அதற்கெல்லாம் அவர் அசரவில்லை. அவரைக் கொலை செய்யப்போவதாக பயமுறுத்துவதற்கு, ஒருவரைத் தூக்கில் போடுவதுபோல் நடித்தும் காட்டினார்கள். இருந்தாலும், போர் முடியும்வரை அவர் உறுதியுடன் இருந்தார்.

ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட மற்ற சகோதரர்கள் போர்க் கருவிகளைப் பயன்படுத்த மறுத்தார்கள். சண்டை சம்பந்தப்படாத மற்ற வேலைகளைக் கேட்டு வாங்கினார்கள். * யோஹானஸ் ராவுத்தே, போர்க் கருவிகளைப் பயன்படுத்த மறுத்ததால் ரயில் துறைக்கு அனுப்பப்பட்டார். கான்ராட் மார்ட்டர், மருத்துவ வேலையில் நியமிக்கப்பட்டார். ரின்ஹோல்ட் வெபர், நர்சாக வேலை செய்தார். தன்னை போர்க்களத்துக்கு அனுப்பாததால் ஆகஸ்ட் க்ரோஃப்ஷிக் ரொம்ப நன்றியோடு இருந்தார். இந்த பைபிள் மாணாக்கர்களும் இவர்களைப் போன்ற மற்றவர்களும் யெகோவாவுக்குச் சேவை செய்வதில் தீர்மானமாக இருந்தார்கள். யெகோவாமீது அன்பையும் விசுவாசத்தையும் காட்டுவது சம்பந்தமாக அவர்களுக்கு என்ன புரிந்திருந்ததோ, அதன்படி செயல்பட்டார்கள்.

பைபிள் மாணாக்கர்கள் போரில் கலந்துகொள்ளாததால் அதிகாரிகள் அவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அடுத்து வந்த சில வருஷங்களில், ஜெர்மனியில் பிரசங்க வேலை செய்த பைபிள் மாணாக்கர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகள் போடப்பட்டன. ஜெர்மனியில் இருந்த கிளை அலுவலகம், அவர்களுக்கு உதவி செய்வதற்காக சட்டம் சம்பந்தப்பட்ட ஒரு டிபார்ட்மெண்ட்டை மாக்டபர்க்கில் ஆரம்பித்தது.

நடுநிலை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் படிப்படியாகத்தான் புரிந்துகொண்டார்கள். இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தபோது ராணுவத்திலிருந்து முழுமையாக விலகியிருந்தார்கள். அதனால், ஜெர்மனி அவர்களை எதிரிகளாகப் பார்த்தது, அவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியது. இந்த விஷயத்தைப் பற்றி அடுத்து வரும் இந்தத் தொடர் கட்டுரைகளில் பார்க்கலாம்.—மத்திய ஐரோப்பாவில் உள்ள வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.

^ பாரா. 7 முதல் உலகப் போரின்போது பிரிட்டனில் வாழ்ந்த பைபிள் மாணாக்கர்களுடைய அனுபவத்தை, மே 15, 2013 காவற்கோபுரத்தில் வரலாற்றுச் சுவடுகள்—‘சோதனை நேரத்தில்’ நிலைத்திருந்தார்கள்” என்ற கட்டுரையில் பாருங்கள்.

^ பாரா. 9 1904-ல் வெளிவந்த ஆயிரமாண்டு உதயம் (Millennial Dawn) என்ற தொடர் புத்தகத்தின் 6-வது தொகுதியிலும், ஜெர்மன் மொழியில் ஆகஸ்ட் 1906-ல் வெளிவந்த சீயோனின் காவற்கோபுரத்திலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. செப்டம்பர் 1915-ல் வெளியான காவற்கோபுரம் நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றியது. பைபிள் மாணாக்கர்கள் ராணுவத்தில் சேரக்கூடாது என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. இருந்தாலும், இந்தக் கட்டுரை ஜெர்மன் இதழில் வெளிவரவில்லை.