Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீர்களா?

மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறீர்களா?

“நான் உங்களுக்கு நல்ல அறிவுரைகளைத் தருவேன்.”—நீதி. 4:2, NW.

பாடல்கள்: 93, 96

1, 2. சபை பொறுப்புகளைச் செய்வதற்கு நாம் ஏன் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்?

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதுதான் இயேசுவின் முக்கிய வேலையாக இருந்தது. இருந்தாலும், சீடர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக அவர் நிறைய நேரம் செலவு செய்தார். மற்றவர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கடவுளுடைய மக்களை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். ஆடுகளை நன்றாகக் கவனித்துக்கொள்ளும் மேய்ப்பர்களைப் போல் இருக்க வேண்டுமென்று சீடர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். (மத். 10:5-7) பிலிப்பு பிரசங்க வேலையை மும்முரமாக செய்துகொண்டிருந்தாலும் தன்னுடைய மகள்களும் அந்த வேலையை மும்முரமாகச் செய்வதற்குப் பயிற்சி கொடுத்தார். (அப். 21:8, 9) இன்று நாமும் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். இது ஏன் முக்கியம்?

2 உலகம் முழுவதும் இருக்கிற சபைகளில், புதியவர்கள் நிறைய பேர் இன்னும் ஞானஸ்நானம் எடுக்காமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்க வேண்டும். பைபிளை நன்றாகப் படிப்பது எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நாம் உதவி செய்ய வேண்டும். நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் அதைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள், உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் சேவை செய்ய பயிற்சி தேவைப்படுகிறது. அதனால், சபையில் இருக்கிற எல்லாராலும் புதியவர்களுக்கு உதவி செய்ய முடியும்.—நீதி. 4:2.

பைபிளை எப்படிப் படிப்பதென்று புதியவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்

3, 4. (அ) பைபிள் வாசிப்பிற்கும் பலன் தரும் ஊழியத்துக்கும் இருக்கிற தொடர்பைப் பற்றி பவுல் எப்படி விளக்கினார்? (ஆ) பைபிளை நன்றாகப் படிக்கச் சொல்லி மற்றவர்களிடம் சொல்வதற்கு முன்பு, நாம் என்ன செய்ய வேண்டும்?

3 யெகோவாவுக்குச் சேவை செய்யும் ஒவ்வொருவரும் பைபிளை நன்றாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். இதைப் பற்றி கொலோசே சபையிலிருந்த சகோதர சகோதரிகளுக்குப் பவுல் இப்படிச் சொன்னார்: “உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம் . . . கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவினால் நிரப்பப்பட வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம்.” கொலோசே சபையிலிருந்தவர்கள் ஏன் பைபிளை நன்றாகப் படிக்க வேண்டியிருந்தது? அப்படிப் படித்தால்தான், அவர்களுக்கு ஞானம் கிடைக்கும். அதோடு, ‘யெகோவாவுக்கு ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவது’ எப்படி என்றும் அவர்கள் புரிந்துகொள்வார்கள். யெகோவா விரும்பும் விதத்தில், ‘எல்லா நற்செயல்களும்’ செய்ய, முக்கியமாக நற்செய்தியைப் பற்றி பிரசங்கிக்க அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். (கொலோ. 1:9, 10) நாம் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தால், பைபிளைத் தவறாமல் படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நாம் உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்.

4 பைபிள் வாசிப்பு எவ்வளவு பிரயோஜனமானது என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் நாம் பைபிளை நன்றாகப் படிக்க வேண்டும். பைபிளைத் தினமும் படித்து, அதை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, நம் வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும் பிரயோஜனமாக இருக்கும். உதாரணத்துக்கு, ஊழியத்தில் யாராவது நம்மிடம் ஒரு கஷ்டமான கேள்வியைக் கேட்கும்போது, நம்மால் பைபிளிலிருந்து பதில் சொல்ல முடியும். பிரச்சினைகள் வந்தபோதும் ஊழியத்தை விடாமல் செய்த இயேசு, பவுல், மற்றும் சிலரைப் பற்றி வாசிக்கும்போது, ஊழியத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் நாமும் அதை விடாமல் செய்வோம். அதோடு, பைபிள் வாசிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்றும், அது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது என்றும் மற்றவர்களிடம் சொல்லும்போது, அவர்களும் பைபிளை ஆழமாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்போது, நம்மைப் போல் அவர்களுக்கும் நிறைய பலன்கள் கிடைக்கும்.

5. புதியவர்கள் பைபிளைத் தவறாமல் படிக்க என்ன வழியில் உதவி செய்யலாம்?

5 ‘பைபிளை தவறாம படிக்க என்னோட பைபிள் மாணவருக்கு நான் எப்படி சொல்லித்தர்றது?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், முதலில் பைபிள் படிப்புக்கு எப்படித் தயாரிக்கலாம் என்று அவருக்குச் சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலிருந்து நீங்கள் பைபிள் படிப்பு எடுத்தால் பிற்சேர்க்கையில் இருக்கிற விஷயத்தையும் படிக்கச் சொல்லி அவரிடம் சொல்லலாம். அதோடு, அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்களையும் எடுத்துப் பார்க்கச் சொல்லலாம். பிறகு, சபைக்கூட்டங்களுக்கு எப்படித் தயாரிப்பது என்றும் எப்படிப் பதில் சொல்வது என்றும் சொல்லிக்கொடுக்கலாம். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையின் ஒவ்வொரு இதழையும் படிக்கச் சொல்லி அவரை உற்சாகப்படுத்தலாம். உவாட்ச்டவர் லைப்ரரியை அல்லது உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியை பயன்படுத்தி பைபிள் கேள்விகளுக்கு எப்படிப் பதில் கண்டுபிடிக்கலாம் என்றும் அவருக்குச் சொல்லிக்கொடுக்கலாம். அவர் இந்த எல்லா வழிகளையும் பயன்படுத்தும்போது, அவருக்கு பைபிள் படிப்பு சுவாரஸ்யமாக இருக்கும். இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுவார்.

6. (அ) பைபிள்மீது ஆர்வத்தை வளர்க்க உங்கள் பைபிள் மாணவருக்கு நீங்கள் எப்படி உதவலாம்? (ஆ) பைபிள்மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் ஒருவர் என்ன செய்ய ஆசைப்படுவார்?

6 பைபிள் எந்தளவு மதிப்புள்ளது என்பதை நம்மோடு சேர்ந்து பைபிள் படிப்பவர் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள அது அவருக்கு உதவியாக இருக்கும். பைபிளைக் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக அதை எப்படிச் சுவாரஸ்யமாகப் படிக்கலாம் என்று அவருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பைபிளைப் படிக்க படிக்க, ‘எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம். கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்’ என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே அவரும் உணர்வார். (சங். 73:28) யெகோவாவிடம் நெருங்கிப் போக விரும்பும் ஒருவருக்கு அவருடைய சக்தி நிச்சயம் உதவி செய்யும்.

பிரசங்கிக்கவும் கற்றுக்கொடுக்கவும் புதியவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்

7. சீடர்களுக்கு இயேசு எப்படிச் சொல்லிக்கொடுத்தார்? (ஆரம்பப் படம்)

7 இயேசு தன் சீடர்களுக்குச் சொல்லிக்கொடுத்த விதத்திலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இயேசு ஊழியத்துக்குப் போனபோது சீடர்களையும் கூட்டிக்கொண்டு போனார். அவர் மக்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தார் என்று சீடர்கள் கவனித்தார்கள். அவர்கள் எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்பதற்கு சில திட்டவட்டமான ஆலோசனைகளையும் அவர் கொடுத்தார். (மத்தேயு, 10-வது அதிகாரம்) [1] (பின்குறிப்பு) கொஞ்ச நாட்களிலேயே பைபிளில் இருக்கும் உண்மைகளை எப்படிப் போதிப்பது என்று அப்போஸ்தலர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். (மத். 11:1) நற்செய்தியைப் பிரசங்கிக்க, நாம் புதியவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் இரண்டு விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

8, 9. (அ) இயேசு தனிநபர்களிடம் எப்படிப் பேசினார்? (ஆ) இயேசுவைப் போல் மக்களிடம் பேச புதியவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்?

8 மக்களிடம் பேசுங்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி கூட்டமாக இருந்த மக்களிடம் மட்டுமே இயேசு எப்போதும் பேசவில்லை. நிறைய சமயங்களில் தனிநபர்களிடமும் பேசினார், அதுவும் நட்பாகப் பேசினார். உதாரணத்துக்கு, சீகார் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு சமாரியப் பெண்ணிடம் இயேசு சுவாரஸ்யமாகப் பேசினார். (யோவா. 4:5-30) வரி வசூலிப்பவனாகிய மத்தேயுவிடமும் பேசினார். தன்னுடைய சீடராக ஆகும்படி அவருக்கு அழைப்பு கொடுத்தார். மத்தேயு அதை ஏற்றுக்கொண்டு இயேசுவையும் மற்றவர்களையும் தன்னுடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும்படி அழைத்தார். அங்கே கூடிவந்திருந்த நிறைய மக்களிடம் இயேசு பேசினார்.—மத். 9:9; லூக். 5:27-39.

9 நாசரேத் ஊரிலிருந்த மக்களைப் பற்றி நாத்தான்வேல் தவறாகப் பேசியிருந்தாலும் இயேசு அவரிடம் நட்பாகப் பேசினார். அதனால், நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைப் பற்றிய தவறான எண்ணத்தை நாத்தான்வேல் மாற்றிக்கொண்டார். அதோடு, அவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆசைப்பட்டார். (யோவா. 1:46-51) அப்படியென்றால், இயேசுவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மக்களிடம் நட்பாகவும் அன்பாகவும் பேசும்போது, நாம் சொல்வதைக் கேட்க அவர்கள் விரும்புவார்கள்.  [2] (பின்குறிப்பு) இப்படிப் பேச புதியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் ஊழியத்தை இன்னும் சுவாரஸ்யமாகச் செய்வார்கள்.

10-12. (அ) இயேசு எப்படி மற்றவர்களுடைய ஆர்வத்தை அதிகமாக்கினார்? (ஆ) பைபிள் உண்மைகளைக் கற்றுக்கொடுப்பதில் திறமையை வளர்த்துக்கொள்ள புதியவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்?

10 ஆர்வத்தை அதிகமாக்குங்கள். இயேசு நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும், மக்கள் அவருடைய செய்தியைக் கேட்க ஆர்வமாக இருந்தபோது, அவர்களுக்காக நேரம் செலவு செய்தார், அவர்களுக்கு நிறைய விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, அவர் சொல்வதைக் கேட்பதற்காக மக்கள் ஒரு கூட்டமாகக் கடற்கரையில் கூடிவந்திருந்தார்கள். அப்போது, ஒரு படகிலிருந்துகொண்டு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பிறகு, பேதுருவுக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். பேதுருவுக்கு நிறைய மீன்கள் கிடைக்கும்படி இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தார். பிறகு பேதுருவிடம், “இதுமுதல் நீ மனிதர்களை உயிருடன் பிடிப்பாய்” என்று சொன்னார். உடனே பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் “தங்களுடைய படகுகளைக் கரை சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு” இயேசுவைப் பின்பற்றிப் போனார்கள்.—லூக். 5:1-11.

11 நிக்கொதேமுவும், இயேசுவிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், தான் யூத உயர்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருப்பதால் இயேசுவிடம் பேசுவதைப் பார்த்து, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்தார். அதனால், அவர் ராத்திரியில் இயேசுவைச் சந்தித்துப் பேசினார். அவர் ராத்திரியில் வந்தார் என்பதற்காக இயேசு அவரை விரட்டிவிடவில்லை. அதற்குப் பதிலாக, அவரோடு நேரம் செலவு செய்து, பைபிளில் இருக்கிற முக்கியமான உண்மைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தார். (யோவா. 3:1, 2) மக்களுக்கு உண்மைகளைச் சொல்லிக்கொடுக்கவும் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் நேரம் செலவிடுவதற்கு அவர் எப்போதும் தயாராக இருந்தார். அதேபோல், மக்கள் வீட்டில் இருக்கும் சமயத்தில் அவர்களைச் சந்தித்துப் பேச நாமும் தயாராக இருக்க வேண்டும். அதோடு, பைபிளில் இருக்கிற விஷயங்களைப் புரிந்துகொள்ள அவர்களோடு நேரம் செலவு செய்ய வேண்டும்.

12 நாம் புதியவர்களோடு ஊழியம் செய்யும்போது, செய்தியை ஆர்வமாகக் கேட்டவர்களை மறுபடியும் போய் சந்திக்க புதியவர்களுக்கு உதவி செய்யலாம். அதோடு, நம்முடைய மறுசந்திப்புகளுக்கும் பைபிள் படிப்புகளுக்கும் அவர்களைக் கூட்டிக்கொண்டு போகலாம். இப்படிச் செய்யும்போது, மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் யெகோவாவைப் பற்றிய உண்மைகளைச் சொல்லிக்கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அப்போது, ஆர்வமாகக் கேட்டவர்களை மறுபடியும் சந்தித்து அவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்க புதியவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். அதோடு ஊழியத்தில் சந்தித்தவர்களை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியவில்லை என்றால், பொறுமையாக இருக்க வேண்டும் என்பதையும் முயற்சியை விட்டுவிடக்கூடாது என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.—கலா. 5:22; “ அவர் முயற்சியைக் கைவிடவே இல்லை” என்ற பெட்டியைப் பாருங்கள்.

சகோதர சதோதரிகளுக்குச் சேவை செய்ய புதியவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்

13, 14. (அ) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகப் பெரிய பெரிய தியாகங்களைச் செய்தவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (ஆ) சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய புதிய பிரஸ்தாபிகளுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் நாம் எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

13 தன்னுடைய ஊழியர்கள், சபையில் இருக்கிறவர்களைத் தங்கள் சொந்த சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் நினைத்து அவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும் என்றும், அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் யெகோவா விரும்புகிறார். (1 பேதுரு 1:22; லூக்கா 22:24-27-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய மகனாகிய இயேசு எல்லாவற்றையும், ஏன் அவருடைய உயிரையும்கூட, மற்றவர்களுக்காகக் கொடுத்தார். (மத். 20:28) தபீத்தாள், “நற்செயல்களையும் தானதர்மங்களையும் நிறையச் செய்து வந்தாள்.” (அப். 9:36, 39) மரியாள், ரோமில் இருந்த சகோதர சகோதரிகளுக்காக ‘கஷ்டப்பட்டுப் பல வேலைகளை’ செய்தார். (ரோ. 16:6) சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள புதியவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்?

சகோதர சகோதரிகள்மீது அன்பு காட்ட புதியவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள் (பாராக்கள் 13, 14)

14 வயதான அல்லது உடல்நிலை சரியில்லாத சகோதர சகோதரிகளைப் பார்க்கப் போகும்போது, புதியவர்களையும் நம்மோடு கூட்டிக்கொண்டு போகலாம். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போகலாம். வயதானவர்களுக்கு உணவு கொடுப்பதற்காகவோ அவர்களுடைய வீட்டைப் பராமரிப்பதற்காகவோ மூப்பர்கள் போகும்போது, புதியவர்களையும் கூட்டிக்கொண்டு போகலாம். சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் எப்படிக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை இளம் பிள்ளைகளும் புதியவர்களும் பார்க்கும்போது, அதேபோல் செய்ய வேண்டும் என்று அவர்களும் கற்றுக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, ஒரு மூப்பர் கிராமப் பகுதியில் ஊழியம் செய்தபோதெல்லாம், அங்கே இருக்கும் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களைத் தவறாமல் போய் பார்ப்பார். மற்ற சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று யோசித்துப் பார்க்க, அவரோடு அடிக்கடி போன ஒரு இளம் சகோதரருக்கு அது உதவியாக இருந்தது.—ரோ. 12:10.

15. சபையிலுள்ள சகோதரர்கள் முன்னேற்றம் செய்ய மூப்பர்கள் எப்படி உதவி செய்யலாம்?

15 சபையில் இருக்கிறவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைப் போதிக்கும் பொறுப்பை யெகோவா ஆண்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதனால் பேச்சுகள் கொடுக்கும்போது, நன்றாகப் போதிக்க சகோதரர்கள் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், உதவி ஊழியர் ஒருவர் தன்னுடைய பேச்சை ஒத்திகை பார்க்கும்போது அவர் எப்படிப் பேசுகிறார் என்று கவனிக்கலாம். அவர் முன்னேறுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம்.—நெ. 8:8. [3] (பின்குறிப்பு)

16, 17. (அ) தீமோத்தேயு முன்னேற்றம் செய்வதற்குப் பவுல் எப்படி உதவி செய்தார்? (ஆ) எதிர்காலத்தில் மேய்ப்பர்களாக ஆகப்போகிறவர்களுக்கு மூப்பர்கள் எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

16 சபையில் மேய்ப்பர்களாகச் சேவை செய்ய நிறைய சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. பவுல் தீமோத்தேயுவுக்குப் பயிற்சி கொடுத்ததோடு மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுக்கும்படி தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார். “இயேசுவோடு ஒன்றுபட்டிருப்பதால் கிடைக்கும் அளவற்ற கருணையின் மூலம் நீ வலிமை பெற்றுக்கொண்டே இரு; என்னிடமிருந்து நீ கேட்டறிந்ததும் பலர் சாட்சி அளித்திருக்கிறதுமான விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்பிக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்” என்று பவுல் சொன்னார். (2 தீ. 2:1, 2) மூப்பராகவும் அப்போஸ்தலராகவும் இருந்த பவுலிடமிருந்து தீமோத்தேயு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அதாவது, பிரசங்கிப்பதில் என்ன முன்னேற்றம் செய்வது என்றும், சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவுவது என்றும் கற்றுக்கொண்டார்.—2 தீ. 3:10-12.

17 பவுல் தீமோத்தேயுவுக்கு நன்றாகப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று விரும்பினார். அதனால், அவரோடு நிறைய நேரம் செலவு செய்தார். (அப். 16:1-5) மூப்பர்களும் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். தகுதியுள்ள உதவி ஊழியர்களைச் சில மேய்ப்பு சந்திப்புகளுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம். இப்படிச் செய்யும்போது, மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும், பொறுமையாகவும் அன்பாகவும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அதோடு, யெகோவாவுடைய மந்தையைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில், யெகோவாவை எப்படி நம்பியிருக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்வார்கள்.—1 பே. 5:2.

மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது ரொம்ப முக்கியம்

18. யெகோவாவுடைய சேவையில் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

18 இந்தக் கடைசி காலத்தில், பிரசங்க வேலையைத் திறமையாகச் செய்ய புதியவர்கள் நிறைய பேருக்குப் பயிற்சி தேவைப்படுகிறது. அதோடு, சபையைக் கவனித்துக்கொள்ள சகோதரர்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. தன்னுடைய ஊழியர்கள் எல்லாரும் நன்றாகப் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். புதியவர்களுக்கு உதவி செய்யும் பெரிய வாய்ப்பை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். இயேசுவும் பவுலும் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்தது போல் நாமும் மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க கடினமாக உழைக்க வேண்டும். முடிவு வருவதற்குள் பிரசங்க வேலை பெரிய அளவில் செய்யப்பட வேண்டியிருப்பதால் நம்மால் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும்.

19. மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும் என்பதில் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கலாம்?

19 புதியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க நேரமும் முயற்சியும் அவசியம். அவர்களுக்கு எப்படிச் சிறந்த விதத்தில் பயிற்சி கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள யெகோவாவும் இயேசுவும் நமக்கு உதவி செய்வார்கள். நம்மிடமிருந்து பயிற்சி பெற்றவர்கள், சபையிலோ ஊழியத்திலோ ‘கடினமாகவும் தீவிரமாகவும் உழைத்து வருவதை பார்க்கும்போது’ நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! (1 தீ. 4:10) அதேசமயம், நாம் ஆன்மீக முன்னேற்றம் செய்ய, கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ள, யெகோவாவிடம் நெருங்கி போக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

^ [1] (பாரா 7) உதாரணத்துக்கு, (1) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்லுங்கள், (2) உணவுக்காகவும் உடைக்காகவும் கடவுளை நம்பியிருங்கள், (3) மக்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள், (4) மக்கள் உங்களைக் கொடுமைப்படுத்தும்போது கடவுளையே நம்பியிருங்கள், (5) மக்கள் என்ன செய்துவிடுவார்களோ என்று பயப்படாதீர்கள் என்று இயேசு சீடர்களிடம் சொன்னார்.

^ [2] (பாரா 9) தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில் பக். 62-64-ல், ஊழியத்தில் மக்களிடம் பேச சில அருமையான ஆலோசனைகள் இருக்கின்றன.

^ [3] (பாரா 15) சகோதரர்கள் சபையில் பேச்சு கொடுப்பதில் முன்னேறுவதற்கு உதவும் ஆலோசனைகளுக்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில் பக்கங்கள் 52-61 வரை பாருங்கள்.