Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்தேன்

கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவித்தேன்

மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு, விலைமதிக்க முடியாத ஒன்று என்னிடம் இருப்பதை 12-வது வயதில் நான் புரிந்துகொண்டேன். ஒரு வட்டார மாநாட்டில், ஊழியம் செய்ய எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று ஒரு சகோதரர் கேட்டார். இதற்கு முன்பு நான் ஊழியத்துக்குப் போனதே இல்லை. இருந்தாலும், உடனே ‘சரி’ என்று சொன்னேன். ஊழியத்துக்குப் போன இடத்தில், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சில சிறு புத்தகங்களைக் கொடுத்து, “நீ அந்த தெருவுல போய் செய், நான் இந்த தெருவுல செய்றேன்” என்று அவர் சொன்னார். நான் பயந்துகொண்டே ஒவ்வொரு வீடாகப் போனேன். கடைசியில், என்னிடம் இருந்த எல்லா புத்தகங்களையும் கொடுத்து முடித்துவிட்டேன். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய பேர் ஆசைப்பட்டார்கள் என்பது அதிலிருந்து தெரிந்தது.

1923-ல் இங்கிலாந்தில் இருக்கிற கெண்ட் மாகாணத்தில் இருக்கும் சாத்தம் (Chatham) என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். அங்கிருந்தவர்கள் விரக்தியில் இருந்தார்கள். முதல் உலகப் போருக்குப் பிறகு நிலைமைகள் சரியாகும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பாப்டிஸ்ட் சர்ச் பாதிரிகள் சுயநலவாதிகளாக இருந்ததைப் பார்த்து என் அப்பாவும் அம்மாவும் ரொம்ப நொந்துபோயிருந்தார்கள். எனக்கு 9 வயது இருந்தபோது, என் அம்மா சர்வதேச பைபிள் மாணாக்கர்களின் சங்கத்துடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். அப்போதுதான் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்பட்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு சகோதரி, என்னுடைய வயதிலிருந்த பிள்ளைகள் சிலருக்கு பைபிளையும் கடவுளுடைய சுரமண்டலம் (The Harp of God) என்ற புத்தகத்தையும் வைத்து சொல்லிக்கொடுத்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

வயதான சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்

என்னுடைய டீனேஜ் வயதில் பைபிளில் இருக்கும் நம்பிக்கையான செய்தியை மற்றவர்களுக்குச் சொன்னது, எனக்குச் சந்தோஷமாக இருந்தது. நிறைய தடவை, தனியாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தேன். ஆனால், மற்றவர்களோடு சேர்ந்து செய்தபோதுதான் நிறைய கற்றுக்கொண்டேன். உதாரணத்துக்கு, ஒருநாள் நானும் ஒரு சகோதரரும் சைக்கிளில் ஊழியத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாதிரியார் அங்கே போவதைப் பார்த்து, “இதோ வெள்ளாடு போகுது” என்று சொன்னேன். உடனே அந்தச் சகோதரர் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கே இருந்த ஒரு மரக்கட்டையின் மீது தன்னோடு உட்காரும்படி சொன்னார். “அவரை வெள்ளாடுனு நியாயந்தீர்க்கிற அதிகாரத்தை யார் உனக்கு கொடுத்தாங்க? மத்தவங்களுக்கு சந்தோஷமா நற்செய்தியை சொல்லு, நியாயந்தீர்க்கிற வேலையை யெகோவாகிட்ட விட்டுடு” என்று சொன்னார். கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை நான் சிறு வயதிலேயே ருசிக்க ஆரம்பித்தேன்.—மத். 25:31-33; அப். 20:35.

கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு, சிலசமயங்களில் பொறுமையாகச் சகித்திருக்க வேண்டும் என்பதை மற்றொரு சகோதரரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவருடைய மனைவிக்கு யெகோவாவின் சாட்சிகள் என்றாலே பிடிக்காது. ஒருநாள் அந்தச் சகோதரர் என்னை அவருடைய வீட்டுக்கு டீ சாப்பிட கூப்பிட்டார். அவர் ஊழியத்துக்குப் போய்விட்டு வந்ததால் அவருடைய மனைவி பயங்கர கோபமாக இருந்தார். அதனால் எங்கள்மீது டீ பாக்கெட்டுகளை வீச ஆரம்பித்தார். ஆனால், அவருடைய மனைவியை அவர் திட்டவில்லை, அந்த டீ பாக்கெட்டுகளை எடுத்து வைத்தார். அவருடைய பொறுமைக்குப் பலன் கிடைத்தது. அவருடைய மனைவி பல வருடங்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சியாக ஆனார்.

எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாகிக்கொண்டே போனது. நானும் என் அம்மாவும் மார்ச் 1940-ல் டோவர் என்ற இடத்தில் ஞானஸ்நானம் எடுத்தோம். செப்டம்பர் 1939-ல் ஜெர்மனியோடு பிரிட்டன் போர் செய்யப்போவதாக அறிவித்தது. அப்போது எனக்கு 16 வயது. ஜூன் 1940-ல், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் லாரிகளில் போவதை என் வீட்டு வாசலில் இருந்து பார்த்தேன். டன்கார்க்கில் நடந்த போரில் அவர்கள் உயிர் தப்பியிருந்தார்கள். அவர்களுடைய கண்களில் எந்த நம்பிக்கையும் இல்லை. அவர்களுக்குக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்று ஏங்கினேன். சில மாதங்களுக்குப் பிறகு, பிரிட்டன் குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியில், ஒவ்வொரு நாள் ராத்திரியும் குண்டுகள் நிறைந்த ஜெர்மன் போர் விமானங்கள் பறந்தன. குண்டுகள் கீழே விழுகிற சத்தத்தைக் கேட்கும்போது நாங்கள் கதிகலங்கிப்போவோம். அடுத்த நாள் காலையில் வீடுகள் இடிந்து நாசமாகியிருப்பதைப் பார்ப்போம். இந்த எல்லா கஷ்டங்களுக்கும் கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் ஒரே தீர்வு என்பது என் மனதில் ஆழமாகப் பதிந்தது.

கொடுப்பதில் சந்தோஷப்பட்டேன்

1941-ல் என் சந்தோஷம் இன்னும் அதிகமானது. அந்தச் சமயத்தில், சாத்தமில் இருந்த ராயல் டாக்யார்ட் என்ற கப்பல் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய சலுகைகள் கிடைக்கிற கவுரவமான வேலை அது. கிறிஸ்தவர்கள் இன்னொரு நாட்டுக்கு எதிராகச் சண்டை போடக்கூடாது என்பதை யெகோவாவின் சாட்சிகள் புரிந்துவைத்திருந்தார்கள். ஆனால் 1941-ல், போர்க் கருவிகளை தயாரிக்கிற வேலையையும் செய்யக்கூடாது என்பதை நாம் தெரிந்துகொண்டோம். (யோவா. 18:36) நான் வேலை செய்கிற கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டதால், அந்த வேலையை விட்டுவிட்டு முழுநேர சேவையை ஆரம்பிக்க அதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்தேன். காட்ஸ்வோல்ட்ஸ் என்ற ஊரில் இருந்த சைரன்செஸ்டர் என்ற அழகான இடத்தில்தான் முதல்முதலில் நியமிக்கப்பட்டேன்.

எனக்கு 18 வயதானபோது நான் ராணுவ சேவையை மறுத்தேன். அதனால், 9 மாதங்களுக்கு நான் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். என்னை ஜெயிலில் தள்ளி கதவை வேகமாக மூடினார்கள், நான் தன்னந்தனியாக விடப்பட்டேன். அது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் காவல்காரர்களும் சிறைக்கைதிகளும், ‘நான் ஏன் இங்கே வந்தேன்’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் என் நம்பிக்கையைப் பற்றி சந்தோஷமாகப் பேசினேன்.

நான் ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகு, சகோதரர் லெனார்ட் ஸ்மித்தோடு * சேர்ந்து கெண்ட் மாகாணத்தில் உள்ள பல ஊர்களில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். 1944-லிருந்து கெண்ட் மாகாணத்தின்மீது, வெடிகுண்டுகள் நிறைந்த ஆளில்லாத ஜெட் விமானங்கள் ஆயிரக்கணக்கில் விழ ஆரம்பித்தன. குண்டுகள் நிறைந்த இந்த விமானங்களை டூடுல்பக்ஸ் (doodlebugs) என்று சொன்னார்கள். நாசி கைப்பற்றியிருந்த ஐரோப்பாவுக்கும் லண்டனுக்கும் நடுவில் இருந்த விமானப் பாதையில்தான் நாங்கள் இருந்தோம். அது எங்களுக்கு திகில் நிறைந்த அனுபவமாக இருந்தது. ஏனென்றால், வானத்தில் பறக்கிற விமானத்தின் இன்ஜின் நின்றுவிடுகிற சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே, அது கீழே விழுந்து வெடிக்கும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட சூழலில், 5 பேர் இருந்த ஒரு குடும்பத்துக்கு நாங்கள் பைபிள் படிப்பு நடத்தினோம். வீடு இடிந்து விழுந்தாலும் உயிர் தப்புவதற்காக நாங்கள் ஒரு இரும்பு மேஜையின் கீழ் உட்கார்ந்து படிப்போம். அந்த முழு குடும்பமும் கடைசியில் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.

வெளி நாடுகளில் போய் பிரசங்கித்தோம்

அயர்லாந்தில் நான் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தபோது ஒரு மாநாட்டைப் பற்றி விளம்பரப்படுத்துகிறேன் (கீழே)

போருக்குப் பிறகு, தென் அயர்லாந்தில் இரண்டு வருடங்களுக்கு நான் பயனியர் ஊழியம் செய்தேன். இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. வீடு வீடாகப் போய், நாங்கள் மிஷனரிகள் என்று சொல்லி தங்குவதற்கு இடம் தேடினோம். தெருக்களில் நம் பத்திரிகைகளைக் கொடுத்தோம். கத்தோலிக்க நாட்டில் நாங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! ஒருசமயம், ஒரு ஆள் எங்களை அடிப்பதாக மிரட்டியபோது, நான் போலீசிடம் புகார் செய்தேன். அதற்கு அந்த போலீஸ், “அதுக்கு நான் என்ன செய்றது?” என்று கேட்டார். பாதிரியார்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கொடுத்த புத்தகங்களை யாராவது வாங்கினால் அவர்களை வேலையை விட்டே நீக்கிவிடுவார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து எங்களை விரட்டியடித்தார்கள்.

ஒரு புது இடத்துக்குப் போகும்போது, தங்கியிருக்கிற இடத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளி ஊழியம் செய்வதுதான் நல்லது என்றும், வேறொரு பாதிரி இருக்கிற இடத்தில் மட்டும்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொண்டோம். கடைசியில்தான், பக்கத்தில் இருக்கும் பகுதிகளில் ஊழியம் செய்தோம். ரவுடிகள் கூட்டத்தின் கடுமையான எதிர்ப்புகள் மத்தியிலும் கில்கெனி என்ற இடத்தில் நாங்கள் ஒரு இளைஞனுக்கு வாரத்தில் 3 முறை பைபிள் படிப்பு நடத்தினோம். பைபிளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் மிஷனரியாகப் பயிற்சி பெறுவதற்கு, கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள நான் விண்ணப்பித்தேன்.

சிபியா என்ற பாய்மரக் கப்பல்

நியு யார்க்கில் 5 மாத கிலியட் பள்ளியை முடித்த பிறகு, கரீபியன் கடலில் இருந்த சின்ன சின்ன தீவுகளில் பிரசங்கிக்க என்னையும் இன்னும் 3 பேரையும் நியமித்தார்கள். நவம்பர் 1948-ல் நியு யார்க்கிலிருந்து நாங்கள் கிளம்பினோம். சிபியா என்ற 59 அடி நீளமுள்ள ஒரு பாய்மரக் கப்பலில் பயணம் செய்தோம். அதுவரை நான் கப்பலில் போனதே இல்லை. அதனால் எனக்கு ரொம்ப குஷியாக இருந்தது. எங்களோடு மிஷனரியாக வந்த கஸ்ட் மாக்கி, அனுபவமுள்ள கப்பல் கேப்டனாக இருந்தார். அந்தக் கப்பலைப் பற்றிய சில அடிப்படையான விஷயங்களை அவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். கப்பற்பாயை எப்படித் தூக்க வேண்டும், இறக்க வேண்டும், திசைமானியை (compass) எப்படிப் பயன்படுத்த வேண்டும், காற்றடிக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்லிக்கொடுத்தார். பயங்கரமான புயல் வீசியபோதும் கஸ்ட் திறமையாக அந்தப் பாய்மரக் கப்பலை ஓட்டியதால் 30 நாட்களில் நாங்கள் பஹாமாசுக்கு வந்து சேர்ந்தோம்.

‘தொலைதூரத்தில் இருக்கிற தீவுகளில் அறிவித்தோம்’

பஹாமாசில் இருந்த சின்ன தீவுகளில் சில மாதங்கள் பிரசங்கித்த பிறகு, லீவேர்ட் மற்றும் வின்ட்வேர்ட் தீவுகளுக்குக் கப்பலில் போனோம். இந்தத் தீவுகள், பியூர்டோ ரிகோவுக்கு பக்கத்தில் இருந்த விர்ஜின் தீவு தொடங்கி ட்ரினிடாட் வரை கிட்டத்தட்ட 800 கிலோ மீட்டர் தூரம் நீண்டிருந்தது. முக்கியமாக, சாட்சிகள் இல்லாத ஒதுக்குப்புறமான தீவுகளில்தான் நாங்கள் 5 வருடங்கள் பிரசங்கித்தோம். சிலசமயம், பல வாரங்களுக்கு நாங்களும் கடிதம் அனுப்ப முடியாது, மற்றவர்களிடமிருந்தும் எங்களுக்கு எந்தக் கடிதமும் வராது. இருந்தாலும், ‘தீவுகளிலும்’ யெகோவாவுடைய வார்த்தையைப் பற்றி சொன்னது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.—எரே. 31:10.

சிபியாவில் பயணம் செய்த மிஷனரிகள் (இடமிருந்து வலம்): ரோன் பார்க்கின், டிக் ரைடு, கஸ்ட் மாக்கி, ஸ்டான்லி கார்ட்டர்

ஒரு தீவில் நங்கூரம் போட்ட உடனே, எங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, எங்களுடைய கப்பல் இருக்கிற இடத்துக்கே ஜனங்கள் வந்துவிடுவார்கள். நிறைய பேர் பாய்மரக் கப்பலையோ வெள்ளைக்காரர்களையோ அதற்கு முன்பு பார்த்ததில்லை. அதனால், அவர்கள் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்த ஜனங்கள் ரொம்ப அன்பாகப் பழகுவார்கள். அவர்களுக்குக் கடவுள் பக்தியும் பைபிள் அறிவும் இருந்தது. அவர்கள் எங்களுக்கு அடிக்கடி மீன்களையும், பழங்களையும், வேர்க்கடலையையும் கொடுப்பார்கள். தூங்குவதற்கும், சமைப்பதற்கும், துவைப்பதற்கும் எங்களுடைய கப்பலில் சின்ன இடம்தான் இருந்தது. இருந்தாலும் நாங்கள் அதைச் சமாளித்தோம்.

கரையோரமாகவே கப்பலை ஓட்டிக்கொண்டு போய், பகல் முழுவதும் மக்களைப் பார்ப்போம். நாங்கள் ஒரு பைபிள் பேச்சு கொடுக்கப்போவதாக அவர்களிடம் சொல்வோம். சாயங்காலத்தில், எங்கள் கப்பலில் இருக்கும் மணியை அடிப்போம். உடனே அந்த ஊர் மக்கள் மலைகளில் இருந்து இறங்கி வருவார்கள். அவர்கள் விளக்குகளை எடுத்து வருவதைப் பார்க்கும்போது, மினுமினுக்கும் நட்சத்திரங்கள் மலைகளில் இருந்து கீழே இறங்கி வருவது போல் இருக்கும். சிலசமயம், 100 பேர் வருவார்கள். இரவு ரொம்ப நேரம் இருந்து நிறைய கேள்விகள் கேட்பார்கள். பாட்டு பாடுவதும் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் ராஜ்ய பாடல்களை நாங்கள் ‘டைப்’ செய்து அவர்களுக்குக் கொடுப்போம். நாங்கள் நான்கு பேரும் இசையோடு சேர்ந்து பாடுவோம். எங்களோடு சேர்ந்து அவர்களும் பாடுவார்கள். கேட்பதற்கு அது ரொம்ப ரம்மியமாக இருக்கும். அது ஒரு சந்தோஷமான அனுபவம்!

ஒரு வீட்டில் பைபிள் படிப்பு நடத்திய பிறகு, அவர்களில் சிலர் எங்களுடைய அடுத்த பைபிள் படிப்புக்கும் வருவார்கள். ஒரு தீவில் சில வாரங்கள் இருந்த பிறகு, அடுத்த தீவுக்குப் புறப்படுவோம். நாங்கள் திரும்பி வரும்வரை மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுக்கும்படி எங்களோடு ஆர்வமாகப் படித்தவர்களிடம் சொல்வோம். நாங்கள் சொன்னதை சிலர் அப்படியே செய்தார்கள். அதைப் பார்த்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

நாங்கள் போன நிறைய தீவுகளில், வெறும் நீல நிற ஏரிகளும், மணல் சூழ்ந்த கடற்கரையும், பனை மரங்களும்தான் இருந்தன. ஆனால் இன்று, அவை சுற்றுலா ஸ்தலங்களாக மாறியிருக்கின்றன. ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குப் பொதுவாக ராத்திரியில்தான் பயணம் செய்வோம். அப்போது, கப்பலுக்குப் பக்கத்தில் டால்ஃபின்கள் செய்யும் சாகசங்களைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்! அந்த அமைதியான சூழலில் கப்பல் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு போகும் சத்தம் மட்டும்தான் கேட்கும். அமைதியான கடலில் நிலா வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

5 வருடங்கள் இந்தத் தீவில் ஊழியம் செய்த பிறகு, பாய்மரக் கப்பலுக்குப் பதிலாக மோட்டார் கப்பலை வாங்க பியூர்டோ ரிகோவுக்குப் போனோம். அப்போதுதான் மாக்ஸென் பாய்ட் என்ற அழகான மிஷனரி சகோதரியைப் பார்த்தேன். உடனே அவளைக் காதலிக்க ஆரம்பித்தேன். சின்ன வயதிலிருந்தே மாக்ஸென் ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்து வந்தாள். பிறகு டொமினிகன் குடியரசில் மிஷனரியாகச் சேவை செய்தாள். ஆனால் 1950-ல் கத்தோலிக்க அரசாங்கம் அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டது. நான் கப்பல் பணியாளாக இருந்ததால் பியூர்டோ ரிகோவில் தங்குவதற்கு எனக்கு ஒரு மாதம்தான் அனுமதி கிடைத்தது. நான் அங்கிருந்து வேறு தீவுகளுக்குப் போனால் சில வருடங்களுக்கு அங்கேதான் இருக்க வேண்டும். ‘ரொனால்ட், இந்த பொண்ணு வேணும்னா சீக்கிரமா ஏதாவது செய்’ என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். மூன்று வாரங்கள் கழித்து நான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். ஆறு வாரத்துக்குப் பிறகு நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். பியூர்டோ ரிகோவிலேயே நாங்கள் மிஷனரிகளாக சேவை செய்தோம். அதற்குப் பிறகு, அந்தப் புதிய கப்பலில் போகும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை.

1956-ல் நான் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். நம் சகோதரர்கள் நிறைய பேர் ஏழைகளாக இருந்தார்கள். அவர்களைச் சந்திப்பதென்றால் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஒருசமயம் நாங்கள் போட்டாலா பாஸ்ட்டில்லோ என்ற கிராமத்துக்குப் போனோம். அங்கே சாட்சிகளாக இருந்த இரண்டு குடும்பங்களைப் பார்த்தோம். அவர்களுக்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்காக நான் புல்லாங்குழல் ஊதுவேன். அப்போது ஹில்டா என்ற ஒரு குட்டிப் பிள்ளையிடம், ‘எங்ககூட ஊழியத்துக்கு வர்றியா’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘நான் வருவேன், ஆனா என்கிட்ட ஷூ இல்லையே’ என்று சொன்னாள். நாங்கள் அவளுக்குப் புதிதாக ஷூ வாங்கிக்கொடுத்த பிறகு அவள் எங்களோடு ஊழியத்துக்கு வந்தாள். பல வருடங்களுக்குப் பிறகு, 1972-ல் நானும் மாக்ஸெனும் புருக்லினுக்குப் போனபோது ஒரு இளம் பெண் எங்களைப் பார்க்க ஓடி வந்தாள். அவள் அப்போதுதான் கிலியட் பள்ளியை முடித்து ஈக்வடாருக்கு மிஷனரியாகப் போக இருந்தாள். அவள் எங்களிடம், ‘என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? பாஸ்ட்டில்லோ கிராமத்துல ஒரு குட்டி பொண்ணுக்கு ஷூ வாங்கி கொடுத்தீங்களே, அது நான்தான், ஹில்டா’ என்று சொன்னாள். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது!

1960-ல் எங்களை பியூர்டோ ரிகோ கிளை அலுவலகத்தில் சேவை செய்யச் சொன்னார்கள். சான் ஜானில் இருந்த சான்ட்ரூசே என்ற இடத்தில் ஒரு சின்ன இரண்டு மாடி கட்டிடத்தில் அந்தக் கிளை அலுவலகம் இருந்தது. ஆரம்பத்தில் நானும் லெனார்ட் ஜான்சனும்தான் எல்லா வேலைகளையும் செய்தோம். லெனார்டும் அவருடைய மனைவியும்தான் முதல் முதலில் டொமினிகன் குடியரசில் சாட்சிகளாக ஆனார்கள். அவர்கள் 1957-ல் பியூர்டோ ரிகோவுக்கு வந்தார்கள். சந்தா எடுத்தவர்களுக்கு பத்திரிகைகளை அனுப்பும் வேலையை மாக்ஸென் செய்தாள். ஒரு வாரத்தில், 1000-க்கும் அதிகமான சந்தாக்களுக்குப் பத்திரிகைகளை அனுப்பி வைப்பாள். அந்த வேலை அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால், அவர்கள் எல்லாருமே பைபிள் சத்தியங்களை தெரிந்துகொள்ளப் போவதை நினைத்து மாக்ஸென் சந்தோஷப்பட்டாள்.

பெத்தேலில் நாம் மற்றவர்களுக்காகச் சேவை செய்வதால், பெத்தேல் சேவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே சமயத்தில், பெத்தேல் சேவையில் நிறைய சவால்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, 1967-ல் பியூர்டோ ரிகோவில் முதல் முறையாக சர்வதேச மாநாடு நடந்தது. அந்த மாநாட்டு வேலைகளை நினைத்து நான் திக்குமுக்காடிப் போய்விட்டேன். அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளை வழிநடத்தி வந்த சகோதரர் நேதன் நார் பியூர்டோ ரிகோவுக்கு வந்தார். மிஷனரிகள் தங்குவதற்கு நான் ஏற்பாடு செய்திருந்தும், நான் எதுவுமே செய்யவில்லை என்று அவர் தவறாக நினைத்துக்கொண்டார். அதனால், திட்டமிட்டு வேலை செய்வதைப் பற்றி எனக்குக் கடுமையான ஆலோசனை கொடுத்தார். நான் அவருக்கு ஏமாற்றம் அளித்துவிட்டதாகவும் சொன்னார். இருந்தாலும், நான் அவரோடு வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டதாக நினைத்தேன். அதனால், கொஞ்ச நாட்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அடுத்த முறை நானும் மாக்ஸெனும் சகோதரர் நேதனைப் பார்த்தபோது, அவர் எங்களை அவருடைய அறைக்குக் கூட்டிக்கொண்டு போய் எங்களுக்குச் சமைத்துக் கொடுத்தார்.

பியூர்டோ ரிகோவில் இருந்தபோது நான் அடிக்கடி இங்கிலாந்துக்குப் போய் என் குடும்பத்தைப் பார்த்துவிட்டு வருவேன். நானும் அம்மாவும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டோம். ஆனால், அப்பா ஏற்றுக்கொள்ளவில்லை. பேச்சு கொடுப்பதற்காக பெத்தேலிலிருந்து சகோதரர்கள் வரும்போதெல்லாம், என் அம்மா அவர்களை எங்கள் வீட்டில் தங்க வைப்பார். பல வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு வெறுப்பை ஏற்படுத்திய சர்ச் பாதிரிமார்களுக்கும், அந்த பெத்தேல் கண்காணிகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அப்பா பார்த்தார். அந்தக் கண்காணிகள் ரொம்ப மனத்தாழ்மையாக இருந்தார்கள். கடைசியாக, 1962-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தார்.

பியூர்டோ ரிகோவில் கல்யாணமான புதிதில் நானும் மாக்ஸெனும். 2003-ல் எங்களுடைய 50-வது கல்யாண நாளில்

என் அன்பு மனைவி மாக்ஸென் 2011-ல் இறந்துவிட்டாள். உயிர்த்தெழுதலில் அவளைப் பார்க்க நான் ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அதை நினைக்கும்போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 58 வருடங்களாக நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தபோது, பியூர்டோ ரிகோவில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை சுமார் 650-லிருந்து 26,000-மாக உயர்ந்ததை பார்த்தோம். பிறகு, 2013-ல் பியூர்டோ ரிகோ கிளை அலுவலகம் அமெரிக்க கிளை அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. அதனால், என்னை நியு யார்க்கில் உள்ள வால்கில்லில் சேவை செய்யச் சொன்னார்கள். 60 வருடங்களாக பியூர்டோ ரிகோவில் நான் ஊழியம் செய்ததால் அங்கு இருக்கும் ஒரு வகையான கொகீ என்ற மரத் தவளையைப் போல் உணர்ந்தேன். இந்தப் பிரபலமான சின்ன தவளை சாயங்காலத்தில் கொ-கீ, கொ-கீ என்று பாடும். ஆனால், நான் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்தது.

“சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்”

பெத்தேலில் கடவுளுக்குச் சேவை செய்வதை நினைத்து நான் இன்னும் சந்தோஷப்படுகிறேன். இப்போது எனக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. பெத்தேலில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதுதான் என்னுடைய வேலை. வால்கில்லுக்கு வந்த பிறகு, 600-க்கும் அதிகமான பேரிடம் நான் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர், சொந்த பிரச்சினை அல்லது குடும்பப் பிரச்சினையைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். பெத்தேல் சேவையில் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம் என்று சிலர் கேட்பார்கள். புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள், கல்யாண வாழ்க்கையைப் பற்றி என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். பெத்தேலில் சேவை செய்த சிலர், பயனியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் நான் பொறுமையாகக் கேட்பேன். பொருத்தமான சமயங்களில் அவர்களிடம் இப்படிச் சொல்வேன்: “‘சந்தோஷமா கொடுக்குறவங்களதான் கடவுள் நேசிக்கிறார்.’ அதனால, சந்தோஷமா சேவை செய்யுங்க. நீங்க யெகோவாவுக்காக செய்றீங்க.”—2 கொ. 9:7.

பெத்தேலில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வது சவாலாகத்தான் இருக்கும். அதனால், நீங்கள் செய்யும் வேலை ஏன் ரொம்ப முக்கியம் என்பதில்தான் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். பெத்தேலில் நாம் செய்யும் எல்லா வேலைகளும் பரிசுத்த சேவைதான். உலகம் முழுவதும் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக உணவைக் கொடுக்கிற ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ நீங்கள் உதவி செய்கிறீர்கள். (மத். 24:45) எந்த இடத்திலிருந்து யெகோவாவுக்கு நாம் சேவை செய்தாலும் சரி, அவரைப் புகழ்வதற்கு நம் எல்லாருக்குமே வாய்ப்பு இருக்கிறது. அதனால் கடவுள் சொல்வதை நாம் சந்தோஷமாகச் செய்யலாம். ஏனென்றால், ‘சந்தோஷமாகக் கொடுப்பவரையே அவர் நேசிக்கிறார்.’

^ பாரா. 13 லெனார்ட் ஸ்மித்தின் வாழ்க்கை சரிதை ஏப்ரல் 15, 2012 காவற்கோபுரத்தில் வெளிவந்தது.