வாழ்க்கை சரிதை
சோதனைகளைச் சகித்ததால் கிடைத்த ஆசீர்வாதங்கள்
“நீயெல்லாம் ஒரு அப்பாவா, உனக்கு கொஞ்சம்கூட ஈவிரக்கமே இல்ல” என்று கேஜிபி அதிகாரி என்னைத் திட்டினார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “கர்ப்பமா இருக்குற உன் மனைவியையும் உன் பெண் குழந்தையையும் அப்படியே விட்டுட்டு வந்துட்ட. யாரு அவங்களுக்கு சாப்பாடு போடுவாங்க, யாரு அவங்கள கவனிச்சுக்குவாங்க? நீ செய்றதயெல்லாம் நிறுத்திட்டு பேசாம வீட்டுக்கு போ” என்று அவர் சொன்னார். அதற்கு, “நான் ஒண்ணும் என் குடும்பத்த விட்டுட்டு வரல. நீங்கதான் என்னை கைது பண்ணியிருக்கீங்க. எதுக்கு கைது பண்ணுனீங்க?” என்று கேட்டேன். “வேறெந்த குற்றத்தயும்விட யெகோவாவின் சாட்சியா இருக்குறதுதான் பெரிய குற்றம்” என்று அவர் கோபமாகச் சொன்னார்.
1959-ல், ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரத்திலிருந்த சிறையில்தான் இது நடந்தது. நானும் என் மனைவி மரியாவும் ‘நீதிக்காக கஷ்டப்பட’ எப்படித் தயாரானோம் என்றும், தொடர்ந்து உண்மையாக இருந்ததால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன என்றும் சொல்கிறேன், கேளுங்கள்.—1 பே. 3:13, 14.
1933-ல், உக்ரைனில் இருக்கிற ஸோலோட்னிக்கி என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். 1937-ல், சாட்சிகளாக இருந்த என் சித்தியும் சித்தப்பாவும் பிரான்சிலிருந்து எங்களைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் திரும்பிப்போனபோது, உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட அரசாங்கம் என்ற புத்தகத்தையும், விடுதலை என்ற புத்தகத்தையும் கொடுத்தார்கள். என் அப்பா அவற்றைப் படித்தபோது, அவருக்கு மறுபடியும் கடவுள் நம்பிக்கை வந்தது. ஆனால், 1939-ல் அவருடைய உடல்நிலை ரொம்பவே மோசமானது. அவர் இறப்பதற்கு முன்பு, “இதுதான் சத்தியம். பிள்ளைங்களுக்கு இதை சொல்லிக்கொடு” என்று அம்மாவிடம் சொன்னார்.
சைபீரியா—பிரசங்க வேலைக்கான ஒரு புதிய இடம்
ஏப்ரல் 1951-ல், சாட்சிகளை அதிகாரிகள் மேற்கு சோவியத் யூனியனிலிருந்து சைபீரியாவுக்கு நாடுகடத்தினார்கள். அம்மாவோடும், தம்பி க்ரிகரியோடும் நான் மேற்கு உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டேன். ரயிலில் 6,000 கிலோமீட்டருக்கும் அதிகமான (3,700 மைல்) தூரம் பயணம் செய்த பிறகு, சைபீரியாவில் இருக்கிற டுலுன் என்ற நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்குப் பக்கத்தில் அன்கார்ஸ்க் என்ற நகரம் இருந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அங்கே இருந்த முகாமுக்கு என் அண்ணன் போக்டன் வந்து சேர்ந்தார். அவருக்கு 25 வருஷ சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது. சிறையில் அவர் கடினமாக வேலை செய்ய வேண்டியிருந்தது.
அம்மாவும், க்ரிகரியும், நானும் டுலுனைச் சுற்றியிருந்த குடியிருப்புப் பகுதியில் பிரசங்கித்தோம். ஆனால், நாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. நாங்கள் அந்த மக்களிடம், “மாடு விக்கிறவங்க யாராவது இங்க இருக்காங்களா?” என்று கேட்போம். மாடு விற்கிறவர்களைப் பார்க்கும்போது, மாடு எவ்வளவு அற்புதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி பேசுவோம். கொஞ்ச நேரத்திலேயே, படைப்பாளரைப் பற்றி பேச ஆரம்பிப்போம். அதனால், ஒரு செய்தித்தாள் இப்படிக் குறிப்பிட்டது: “மாடு இருக்கிறதா என்று சாட்சிகள் விசாரிப்பார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் செம்மறியாடுகளைத்தான் தேடுகிறார்கள்!’ உண்மைதான், நாங்கள் செம்மறியாடுகள் போன்ற ஆட்களைக் கண்டுபிடித்தோம்! நியமிக்கப்படாத அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்தவர்கள் தாழ்மையுள்ளவர்களாக, உபசரிக்கும் குணமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படித்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இன்று, டுலுனில் ஒரு சபை இருக்கிறது; அதில், 100 க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்.
மரியாவின் விசுவாசத்துக்கு வந்த சோதனை
உக்ரைனில், இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த மத்திய காலப் பகுதியில் மரியா சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். அவளுடைய 18 வயதில், ஒரு கேஜிபி அதிகாரி, அவளுக்குத் தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்தார். தன்னோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படி அவளைக் கட்டாயப்படுத்த முயற்சி செய்தார். ஆனால், அதற்கு இணங்கிவிடக் கூடாது என்பதில் மரியா உறுதியாக இருந்தாள். ஒரு நாள், மரியா தன் வீட்டுக்கு வந்தபோது, தன் படுக்கையில் அந்த அதிகாரி படுத்திருப்பதைப் பார்த்தாள். உடனே அங்கிருந்து தப்பித்து ஓடினாள். கோபமடைந்த அந்த அதிகாரி, அவள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைக் காரணங்காட்டி, அவளை ஜெயிலில் போடப்போவதாக மிரட்டினார். 1952-ல், மரியாவுக்கு 10 வருஷ சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. உத்தமத்தோடு இருந்ததற்காக சிறைத் தண்டனை அனுபவித்த யோசேப்பின் நிலைமைதான் தனக்கும் வந்திருப்பதாக மரியா நினைத்தாள். (ஆதி. 39:12, 20) மரியாவை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கூட்டிக்கொண்டுபோன டிரைவர், “நிறைய பேர் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காங்க; இருந்தாலும் அவங்களோட மதிப்பு மரியாதை ஒண்ணும் குறைஞ்சிடல. அதனால நீங்க பயப்படாதீங்க” என்று அவளிடம் சொன்னார். அது மரியாவைப் பலப்படுத்தியது.
1952-லிருந்து 1956 வரை, ரஷ்யாவிலுள்ள கோர்க்கி (இப்போது, நிஜினி நோவ்கோராட்) என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இருந்த கட்டாய வேலை முகாமுக்கு மரியா அனுப்பப்பட்டாள். அங்கே, மரங்களை வேரோடு வெட்டிச் சாய்க்கும் வேலை அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உறைய வைக்கும் குளிரில்கூட அவள் அதைச் செய்ய வேண்டியிருந்தது. அவளுடைய உடல்நிலை மோசமானது. ஆனால் 1956-ல், அவள் விடுதலையானாள்; அங்கிருந்து அவள் டுலுனுக்குப் போனாள்.
மனைவியையும் பிள்ளைகளையும்விட்டு ரொம்பத் தூரம் தள்ளியிருந்தேன்
ஒரு சகோதரி டுலுனுக்கு வருவதாக அங்கிருந்த ஒரு சகோதரர் சொன்னார். அதனால், அந்தச் சகோதரியைப் பார்ப்பதற்காகவும், அவருடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு வருவதற்காகவும் என் சைக்கிளில் பஸ் ஸ்டாப்புக்குப் போனேன். முதல் சந்திப்பிலேயே அவளை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவளுடைய இதயத்தில் இடம்பிடிப்பதற்காக நிறைய முயற்சிகள் எடுத்தேன்; கடைசியில் அதில் ஜெயித்தேன். 1957-ல், நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். ஒரு வருஷத்துக்குப் பிறகு, எங்களுடைய மகள் ஐரினா பிறந்தாள். ஆனால், அவளோடு இருக்கும் அந்தச் சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஏனென்றால், பைபிள் பிரசுரங்களை அச்சடித்ததற்காக, 1959-ல் நான் கைது செய்யப்பட்டேன். தனிச் சிறையில் ஆறு மாதங்கள் இருந்தேன். அந்தச் சமயத்தில், மன அமைதிக்காக விடாமல் ஜெபம் செய்தேன், ராஜ்ய பாடல்களைப் பாடினேன், விடுதலை செய்யப்பட்டால் எப்படிப் பிரசங்கிப்பது என்று கற்பனை செய்தேன்.
சிறையில் நான் விசாரிக்கப்பட்டபோது, “சுண்டெலிய தரையில போட்டு நசுக்குற மாதிரி உங்க எல்லாரையும் சீக்கிரத்துல நசுக்கப்போறோம்” என்று ஒரு விசாரணை அதிகாரி கத்தினார். அதற்கு நான், “எல்லா தேசத்துலயும் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படும்னு இயேசு சொல்லியிருக்கார். அதை யாராலயும் தடுக்க முடியாது” என்றேன். பிறகு, நான் விசுவாசத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவர் வேறு விதமாக முயற்சி செய்தார்; என்னிடம் நைசாகப் பேசினார். இதைப் பற்றித்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். பயமுறுத்தலுக்கும், நைசான பேச்சுக்கும் நான் மசியவில்லை என்று தெரிந்ததும், ஏழு வருஷங்களுக்கு சாரன்ஸ்க் நகரத்துக்குப் பக்கத்திலிருந்த கட்டாய வேலை முகாமுக்கு நான் அனுப்பப்பட்டேன். போகும் வழியில், என்னுடைய இரண்டாவது மகள் ஓல்கா பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டேன். என் மனைவி மரியாவும் என் மகள்களும் தூரத்தில் இருந்தாலும், நானும் மரியாவும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறோம் என்ற விஷயம் எனக்கு ஆறுதலைத் தந்தது.
டுலுனிலிருந்து சாரன்ஸ்க் நகரத்துக்கு வந்துபோவதற்கு, ரயிலில் 12 நாட்கள் பயணம் செய்ய வேண்டும். இருந்தாலும், வருஷத்துக்கு ஒரு தடவை மரியா என்னைத் தவறாமல் பார்க்க வருவாள். வருஷாவருஷம் எனக்கு புது ‘பூட்ஸ்’ வாங்கி வருவாள். பூட்ஸின் அடிப்பகுதியில் சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை ஒளித்து வைத்திருப்பாள். ஒரு தடவை, என் இரண்டு குட்டிப் பெண்களையும் மரியா கூட்டிக்கொண்டு வந்ததை என்னால் மறக்கவே முடியாது. பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களோடு நேரம் செலவிட்டதும் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
புதிய இடங்களும் புதிய சவால்களும்
1966-ல், கட்டாய வேலை முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். பிறகு, நாங்கள் நான்கு பேரும் கருங்கடலுக்குப் பக்கத்தில் இருக்கும் அர்மவிர் என்ற நகரத்துக்குக் குடிமாறினோம். அங்கே, என்னுடைய மகன்கள் யாரெஸ்லவ் மற்றும் பேவல் பிறந்தார்கள்.
சீக்கிரத்திலேயே, கேஜிபி அதிகாரிகள் எங்கள் வீட்டைச் சோதனை செய்ய ஆரம்பித்தார்கள். பைபிள் பிரசுரங்கள் ரோ. 12:21.
இருக்கிறதா என்று வீட்டின் எல்லா பக்கத்திலும் தேடினார்கள்; மாட்டுத் தீவனத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. அப்படி ஒரு தடவை சோதனை செய்தபோது, சூடு தாங்காமல் அவர்கள் வேர்த்து விறுவிறுத்துப்போனார்கள். அதோடு, அவர்களுடைய ‘கோட்’ முழுவதும் தூசியாகிவிட்டது. அவர்களைப் பார்க்கவே மரியாவுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின்படிதான் அவர்கள் செய்வதாக மரியா நினைத்தாள். அவர்களுக்கு ‘ஜூஸ்’ கொடுத்தாள்; பின்பு, அவர்களுடைய துணிகளிலிருந்த தூசியைத் துடைப்பதற்கு ஒரு ‘பிரஷ்’ கொடுத்தாள். அதோடு, ஒரு பாத்திரம் நிறைய தண்ணீரையும், துண்டையும் கொண்டுவந்து கொடுத்தாள். பிறகு, கேஜிபியின் தலைமை அதிகாரி அங்கே வந்தபோது, தாங்கள் அன்பாக நடத்தப்பட்டதைப் பற்றி அந்த அதிகாரிகள் அவரிடம் சொன்னார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டபோது, அந்தத் தலைமை அதிகாரி புன்னகையோடு கையசைத்தார். ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்வதற்கு’ முயற்சி செய்யும்போது நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்த்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.—சோதனைகள் நடத்தப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து அர்மவிரில் பிரசங்கித்தோம். பக்கத்து ஊரான குர்கானின்ஸ்க்கில் கொஞ்சம் பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; அவர்களையும் நாங்கள் பலப்படுத்தினோம். இன்று அர்மவிரில் ஆறு சபைகளும், குர்கானின்ஸ்க்கில் நான்கு சபைகளும் இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இத்தனை வருஷங்களில், நாங்கள் ஆன்மீக ரீதியில் பலவீனமாக இருந்த சமயங்களும் உண்டு! ஆனால், விசுவாசமுள்ள சகோதரர்களைப் பயன்படுத்தி யெகோவா எங்களைத் திருத்தினார்; ஆன்மீக ரீதியிலும் எங்களைப் பலப்படுத்தினார். அதற்காக நாங்கள் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். (சங். 130:3) எங்களுக்குத் தெரியாமலேயே சபைக்குள் கேஜிபி ஆட்கள் ஊடுருவியிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து சேவை செய்ததும் எங்களுக்குப் பெரிய சோதனையாக இருந்தது. பார்ப்பதற்கு அவர்கள் பக்திவைராக்கியமுள்ளவர்களைப் போலவும், சுறுசுறுப்பான ஊழியர்களைப் போலவும் தெரிந்தார்கள். சிலர், நம்முடைய அமைப்பில் பொறுப்பான ஸ்தானங்களில்கூட இருந்தார்கள். காலப்போக்கில், அவர்கள் யாரென்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
1978-ல், மரியாவுக்கு 45 வயது இருந்தபோது, அவள் மீண்டும் கர்ப்பமானாள். அவளுக்கு ரொம்ப நாட்களாகவே இதயத்தில் கோளாறு இருந்ததால், அவளுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், கருக்கலைப்பு செய்யச்சொல்லி மருத்துவர்கள் அவளைச் சம்மதிக்க வைக்கப் பார்த்தார்கள். ஆனால், மரியா மறுத்துவிட்டாள். அதனால், ஆஸ்பத்திரியில் அவள் எங்கே போனாலும் சில டாக்டர்கள் ஊசியோடு அவள் பின்னாலேயே போனார்கள். எப்படியாவது ஊசி போட்டு அவளுக்குக் குறைப்பிரசவம் ஆகும்படி செய்வதற்கு முயற்சி செய்தார்கள். கருவில் இருந்த குழந்தையைக் காப்பாற்ற மரியா ஆஸ்பத்திரியைவிட்டு தப்பித்து வந்துவிட்டாள்.
நாங்கள் இருந்த நகரத்தை காலிசெய்யும்படி கேஜிபி உத்தரவு போட்டது. எஸ்டோனியாவிலுள்ள டல்லின் என்ற நகரத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிராமத்துக்கு நாங்கள் குடிமாறினோம். அப்போது, அது சோவியத் யூனியனின் பாகமாக இருந்தது. டாக்டர்கள் நினைத்ததற்கு நேர்மாறாக, மரியாவுக்கு ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தை பிறந்தது! அந்தக் குழந்தைக்கு விட்டலி என்று பெயர் வைத்தோம்.
பிறகு, எஸ்டோனியாவிலிருந்து ரஷ்யாவின் தெற்குப் பகுதியிலிருந்த நிஸ்லோப்னயா குடியிருப்புப் பகுதிக்குக் குடிமாறினோம். பக்கத்திலிருந்த சுற்றுலா நகரங்களுக்கு ரஷ்யா முழுவதிலுமிருந்து மக்கள் வருவார்கள். அங்கே நாங்கள் ஜாக்கிரதையாகப் பிரசங்கித்தோம். மக்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக அங்கே வந்தார்கள். ஆனால், அவர்களில் சிலர், முடிவில்லாத வாழ்க்கை வாழும் நம்பிக்கையோடு திரும்பிப்போனார்கள்.
யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தோம்
யெகோவாவை நேசிக்கவும், அவருக்குச் சேவை செய்வதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ளவும் எங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அவர்கள் நல்ல முன்னேற்றம் செய்வதற்கு உதவிய சகோதரர்களை வீட்டுக்கு அடிக்கடி கூப்பிட்டோம். என் தம்பி க்ரிகரியும் அடிக்கடி வீட்டுக்கு வருவான். 1970-லிருந்து 1995 வரை அவன் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்தான். அவன் எப்போதும் கலகலவென்று இருப்பான்; நகைச்சுவையாகப் பேசுவான். அதனால், அவன் வந்தபோதெல்லாம், நாங்கள் எல்லாருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். விருந்தாளிகளோடு இருந்தபோது, நாங்கள் அடிக்கடி பைபிள் விளையாட்டுகள் விளையாடுவோம். எங்கள் பிள்ளைகள், பைபிளில் இருக்கிற சரித்திரப் பதிவுகளை நேசிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
1987-ல், லாட்வியாவில் இருக்கும் ரிகா என்ற நகரத்துக்கு எங்கள் மகன் யாரெஸ்லவ் குடிமாறினான்; அவனால் அங்கே ரொம்ப சுதந்திரமாகப் பிரசங்கிக்க முடிந்தது. ஆனால், ராணுவ சேவையை மறுத்ததால், அவனுக்கு ஒன்றரை வருஷம் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த ஒன்றரை வருஷத்தில், மொத்தம் ஒன்பது சிறைகளுக்கு அவன் மாற்றப்பட்டான். என் சிறை அனுபவத்தைப் பற்றி அவனிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தேன்; சகித்திருக்க அது அவனுக்கு உதவியாக இருந்தது. பிற்பாடு, அவன் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தான். 1990-ல், எங்கள் மகன் பேவல், அவனுடைய 19 வயதில், ஜப்பானுக்கு வடக்கே இருக்கும் சகாலின் என்ற தீவில் பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்பட்டான். அந்தத் தீவில் மொத்தம் 20 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். நாங்களோ அந்தத் தீவிலிருந்து 9,000 கிலோமீட்டருக்கும் (5,500 மைல்) அதிகமான தூரத்தில் இருந்தோம். அதனால், அவனை அங்கே அனுப்ப, ஆரம்பத்தில் எங்களுக்கு இஷ்டம் இல்லை. இருந்தாலும், அவன் போவதற்கு கடைசியில் நாங்கள் ஒத்துக்கொண்டோம்; எங்கள் முடிவு சரியாகத்தான் இருந்தது! அங்கிருந்த மக்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை ஆர்வமாகக் கேட்டார்கள். சில வருஷங்களுக்குள் அங்கே ஒன்பது சபைகள் உருவாயின. 1995 வரை சகாலின் தீவில் பேவல் சேவை செய்தான். அந்தச் சமயத்தில் எங்கள் கடைசிப் பையன் விட்டலி மட்டும்தான் எங்களோடு வீட்டில் இருந்தான். சின்ன வயதிலிருந்தே, பைபிளைப் படிப்பதென்றால் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். 14 வயதில் அவன் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து நான் இரண்டு வருஷம் பயனியர் ஊழியம் செய்தேன். அந்த நாட்கள் ரொம்ப அருமையான நாட்கள்! 19 வயதில், விசேஷ பயனியர் ஊழியம் செய்வதற்காக அவன் போனான்.
“ஒண்ணு விசுவாசத்த விட்டுடு, இல்லன்னா 10 வருஷம் சிறையில இரு. நீ வெளியில வர்றப்போ உனக்கு வயசாயிடும், உனக்கு யாருமே இருக்க மாட்டாங்க” என்று ஒரு கேஜிபி அதிகாரி 1952-ல் மரியாவிடம் சொன்னார். ஆனால், விஷயங்கள் வேறு விதமாக நடந்தன. உண்மையுள்ள நம் கடவுளாகிய யெகோவாவின் அன்பை நாங்கள் ருசித்திருக்கிறோம். அதோடு, எங்கள் பிள்ளைகளுடைய அன்பையும், நாங்கள் யாருக்கெல்லாம் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தோமோ, அவர்களுடைய அன்பையும் அனுபவித்திருக்கிறோம். எங்கள் பிள்ளைகள் சேவை செய்யும் இடங்களுக்கு மரியாவும் நானும் போயிருக்கிறோம்; அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எங்கள் பிள்ளைகளிடம் பைபிளைக் கற்றுக்கொண்டவர்கள் நன்றியோடு இருப்பதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
யெகோவா செய்த நன்மைகளுக்காக நன்றியோடு இருக்கிறோம்
1991-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அதனால், பிரசங்க வேலை புத்துயிர் பெற்றது. ஒவ்வொரு வார இறுதியிலும் பக்கத்து ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் ஊழியம் செய்வதற்காக, சபையிலிருந்த நாங்கள் ஒரு பஸ்கூட வாங்கினோம்.
யாரெஸ்லவ்வும் அவனுடைய மனைவி அல்யோனாவும், பேவலும் அவனுடைய மனைவி ரயாவும் பெத்தேலில் சேவை செய்கிறார்கள். விட்டலியும் அவனுடைய மனைவி ஸ்வெட்லனாவும் வட்டார சேவை செய்கிறார்கள். மூத்த மகள் ஐரினாவுடைய குடும்பம் ஜெர்மனியில் இருக்கிறது. அவளுடைய கணவன் விளாடிமிரும் அவர்களுடைய மூன்று மகன்களும் மூப்பர்களாகச் சேவை செய்கிறார்கள். என்னுடைய இன்னொரு மகள் ஓல்கா எஸ்டோனியாவில் இருக்கிறாள்; அவள் எனக்குத் தவறாமல் ஃபோன் செய்வாள். இவர்கள் எல்லாரும் யெகோவாவுக்குச் சேவை செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 2014-ல், என் அன்பு மனைவி மரியா இறந்தது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவளை உயிர்த்தெழுதலில் பார்ப்பதற்காக நான் ஆசையாகக் காத்திருக்கிறேன். இப்போது, நான் பெல்கோராட் என்ற நகரத்தில் வாழ்கிறேன். இங்கே இருக்கும் சகோதரர்கள் எனக்கு ரொம்பவே உதவுகிறார்கள்.
யெகோவாவுக்குச் செய்த இத்தனை வருஷ சேவையில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். உத்தமத்தோடு இருப்பதற்காக நாம் சிலவற்றை இழக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக யெகோவா நமக்கு ஈடிணையில்லாத ஒரு சொத்தைக் கொடுப்பார். அதாவது, மன அமைதியைக் கொடுப்பார். மரியாவும் நானும் உண்மையோடு நிலைத்திருந்ததற்காக, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கிறோம். 1991-ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்பு, வெறும் 40,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆனால் இன்று, சோவியத் யூனியனின் பாகமாக இருந்த நாடுகளில் மட்டுமே 4,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். இப்போது எனக்கு 83 வயது; நான் தொடர்ந்து மூப்பராகச் சேவை செய்கிறேன். சகித்திருப்பதற்கான பலத்தை எனக்கு யெகோவா எப்போதுமே கொடுத்திருக்கிறார். யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார்!—சங். 13:5, 6.
^ பாரா. 4 கேஜிபி [KGB] என்பது சோவியத் நாட்டுப் பாதுகாப்புக் குழுவை அடையாளப்படுத்துகிற ரஷ்ய பெயரின் சுருக்கம்.