Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

இயேசுவின் ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் ஏன் வித்தியாசப்படுகின்றன?

இயேசுவின் பிறப்பு மற்றும் அவருடைய ஆரம்பக் கால வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் வித்தியாசப்படுவதற்குக் காரணம், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபருடைய யோசனைகளையும் அனுபவங்களையும் பற்றி எழுதியிருப்பதுதான்.

மத்தேயுவின் பதிவு யோசேப்பைப் பற்றிய சம்பவங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. மரியாள் கர்ப்பமானது தெரிந்தவுடன் யோசேப்பு நடந்துகொண்ட விதம்... அவருடைய கனவில் ஒரு தேவதூதர் அந்தச் சூழ்நிலையைப் பற்றி விளக்கியது... அந்தத் தேவதூதரின் அறிவுரைகளின்படி யோசேப்பு நடந்துகொண்டது... ஆகியவற்றைப் பற்றி மத்தேயுவின் பதிவு சொல்கிறது. (மத். 1:19-25) அதோடு, எகிப்துக்குத் தப்பித்துப் போகும்படி தேவதூதர் ஒரு கனவில் யோசேப்பை எச்சரித்தது... அதன்படியே யோசேப்பு செய்தது... இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பும்படி இன்னொரு கனவில் தேவதூதர் யோசேப்பிடம் சொன்னது... அவர் திரும்பி வந்தது... குடும்பமாக நாசரேத்தில் குடியிருக்க முடிவு எடுத்தது... ஆகிய சம்பவங்களைப் பற்றியும் மத்தேயுவின் பதிவு சொல்கிறது. (மத். 2:13, 14, 19-23) முதல் இரண்டு அதிகாரங்களில், யோசேப்பின் பெயரை மத்தேயு ஒன்பது தடவை குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் மரியாளின் பெயரை ஆறு தடவை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

லூக்காவின் பதிவு மரியாளைப் பற்றிய சம்பவங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. காபிரியேல் தூதர் மரியாளைச் சந்தித்தது... மரியாள் தன் சொந்தக்காரப் பெண்ணாகிய எலிசபெத்தைப் பார்க்கப்போனது... யெகோவாவைப் புகழ்ந்து பேசியது... ஆகிய சம்பவங்களைப் பற்றி லூக்காவின் பதிவு சொல்கிறது. (லூக். 1:26-56) எதிர்காலத்தில் இயேசு அனுபவிக்கப்போகும் கஷ்டங்களைப் பற்றி சிமியோன் மரியாளிடம் சொன்னதைப் பற்றியும் லூக்காவின் பதிவு குறிப்பிடுகிறது. அதோடு, இயேசுவுக்கு 12 வயது இருந்தபோது, அவர் குடும்பமாக எருசலேம் ஆலயத்துக்குப் போனதைப் பற்றியும் லூக்காவின் பதிவு சொல்கிறது. இந்தப் பதிவிலும்கூட, மரியாளின் வார்த்தைகளைத்தான் லூக்கா பதிவு செய்திருக்கிறார், யோசேப்பின் வார்த்தைகளை அல்ல. இந்த எல்லா சம்பவங்களும் மரியாளின் மனதை ஆழமாகப் பாதித்ததைப் பற்றியும் லூக்கா சொல்கிறார். (லூக். 2:19, 34, 35, 48, 51) முதல் இரண்டு அதிகாரங்களில், மரியாளின் பெயரை லூக்கா 14 தடவை குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் யோசேப்பின் பெயரை மூன்று தடவை மட்டும் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மத்தேயுவின் பதிவு, யோசேப்பு என்ன யோசித்தார் என்பதையும், என்ன செய்தார் என்பதையும் முக்கியமாகச் சொல்கிறது. ஆனால் லூக்காவின் பதிவு, மரியாளின் யோசனைகளையும் அனுபவங்களையும் பற்றி முக்கியமாகச் சொல்கிறது.

இயேசுவின் வம்சாவளிப் பட்டியலைக்கூட மத்தேயுவும் லூக்காவும் வித்தியாசமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். மத்தேயு, யோசேப்பின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். யோசேப்பின் வளர்ப்பு மகனான இயேசு, தாவீதின் அரச பரம்பரையில் வந்த சட்டப்பூர்வ வாரிசு என்பதை அதில் காட்டியிருக்கிறார். எப்படி? யோசேப்பு, தாவீது ராஜாவின் மகனான சாலொமோனுடைய வம்சாவளியில் வந்தவர் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் அதைக் காட்டியிருக்கிறார். (மத். 1:6, 16) ஆனால் லூக்கா, மரியாளின் வம்சாவளியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு “தாவீதின் சந்ததியில் மனிதனாகப் பிறந்தார்” என்பதால் தாவீதின் அரச பரம்பரையில் வந்த இயற்கை வாரிசு என்பதை அதில் காட்டியிருக்கிறார். (ரோ. 1:4) எப்படி? மரியாள், தாவீதின் மகனான நாத்தானுடைய வம்சாவளியில் வந்தவர் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் அதைக் காட்டியிருக்கிறார். (லூக். 3:31) ஆனால், மரியாளின் வம்சாவளியைப் பற்றிச் சொல்லும்போது, மரியாளை ஹேலியின் மகள் என்று லூக்கா ஏன் குறிப்பிடவில்லை? ஏனென்றால், அதிகாரப்பூர்வமான வம்சாவளிப் பட்டியல் பொதுவாக ஆண்களை வைத்துதான் குறிப்பிடப்பட்டது. அதனால், யோசேப்பைப் பற்றிக் குறிப்பிட்டபோது, அவரை ஹேலியின் மகன் என்று லூக்கா சொன்னார். யோசேப்பு ஹேலியின் மருமகன் என்பதைத்தான் லூக்கா அர்த்தப்படுத்தினார்.—லூக். 3:23.

மத்தேயு, லூக்காவின் சுவிசேஷப் பதிவுகளில் இருக்கிற இயேசுவின் வம்சாவளிப் பட்டியல், இயேசுதான் கடவுளால் முன்னறிவிக்கப்பட்ட மேசியா என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தாவீது ராஜாவின் வம்சாவளியில் இயேசு வந்தது ஊரறிந்த உண்மையாக இருந்ததால்தான், பரிசேயர்களாலும் சதுசேயர்களாலும்கூட அதை மறுக்க முடியவில்லை. மத்தேயுவும் லூக்காவும் பதிவு செய்திருக்கிற இயேசுவின் வம்சாவளிப் பட்டியல் இன்று நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. அதோடு, கடவுளுடைய மற்ற வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.