Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 33

இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள்

இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள்

“ஆசைப்பட்டதை அடைவதற்காக அலைந்து திரிவதைவிட கண் முன்னால் இருப்பதை அனுபவிப்பது நல்லது.”—பிர. 6:9.

பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1. இன்றைக்கு நிறைய பேர் எப்படி யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்கிறார்கள்?

 உலகத்தின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தச் சமயத்தில் யெகோவாவின் சேவையில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. (மத். 24:14; லூக். 10:2; 1 பே. 5:2) அதைச் செய்ய வேண்டும் என்று நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். சிலர், பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மற்றவர்கள், பெத்தேல் சேவை அல்லது கட்டுமான வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சகோதரர்கள் நிறைய பேர் உதவி ஊழியர்களாகவோ, மூப்பர்களாகவோ ஆவதற்கு முயற்சி செய்கிறார்கள். (1 தீ. 3:1, 8) தன்னுடைய மக்கள் தனக்கு நிறைய சேவை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவதைப் பார்க்கும்போது, யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!—சங். 110:3; ஏசா. 6:8.

2. நினைத்த குறிக்கோளை அடைய முடியாவிட்டால் நம் மனதுக்கு எப்படி இருக்கலாம்?

2 ரொம்ப நாளாகியும், யெகோவாவின் சேவையில் நீங்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடியவில்லையா? அப்படியென்றால், நீங்கள் சோர்ந்துபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருடைய விஷயத்தில் வயதாகிவிட்டதாலோ, சூழ்நிலைகள் சரியில்லாததாலோ சில குறிக்கோள்களை அடைய முடியாமல் போகலாம். (நீதி. 13:12) மெலிசாவின் * விஷயத்தில் இதுதான் நடந்தது. பெத்தேலில் சேவை செய்ய வேண்டும் அல்லது ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். “ஆனா அந்த வயச எல்லாம் நான் தாண்டிட்டேன். இப்போ அத நெனச்சு என்னால கனவுதான் காண முடியும். அதனால சில சமயங்கள்ல நான் சோர்ந்து போயிடுவேன்” என்று அவர் சொல்கிறார்.

3. யெகோவாவுக்கு அதிகமாகச் செய்வதற்கு எப்படிப்பட்ட குணங்களைச் சிலர் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம்?

3 இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் சிலர் இன்னும் கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், அந்தப் பொறுப்புகள் கிடைப்பதற்கு முன்பு அவர்கள் சில குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஒருவேளை, அவர்களுக்கு நிறைய அறிவு இருக்கலாம், உடனடியாக முடிவுகள் எடுக்கிற திறமையும் ஆர்வமும் இருக்கலாம். ஆனால், இன்னும் அவர்கள் பொறுமையாக இருப்பதற்கு... ஒரு விஷயத்தைக் கவனமாகச் செய்வதற்கு... அல்லது மற்றவர்களிடம் இன்னும் மரியாதையாக நடந்துகொள்வதற்கு... கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த மாதிரி ஏதாவது குணத்தை நீங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா? அப்படி வளர்த்துக்கொண்டால், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். அதுவும், நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்கூட உங்களைத் தேடி வரலாம். இப்போது, சகோதரர் நிக்கின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருக்கு 20 வயது இருந்தபோது, உதவி ஊழியராக நியமிக்கப்படாததை நினைத்து ரொம்ப ஏமாந்துபோனார். “என்கிட்ட ஏதோ தப்பு இருக்குதுனு நான் நெனச்சேன்” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், அவர் சோர்ந்துவிடவில்லை. சபையிலும் ஊழியத்திலும் அவரால் என்ன முடியுமோ அதை நன்றாகச் செய்தார். இன்றைக்கு அவர் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார்.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

4 நீங்கள் ஆசைப்பட்ட குறிக்கோளை அடைய முடியாததை நினைத்து சோர்ந்துபோயிருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் மனதில் இருக்கிற கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள். (சங். 37:5-7) அதோடு, யெகோவாவின் சேவையை எப்படி இன்னும் நன்றாகச் செய்யலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அனுபவமுள்ள சகோதர சகோதரிகளிடம் பேசுங்கள். அவர்கள் கொடுக்கிற ஆலோசனையின்படி செய்யுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் குறிக்கோளை அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், முன்பு பார்த்த மெலிசாவைப்போல், சூழ்நிலை காரணமாக சில குறிக்கோள்களை நம்மால் அடைய முடியாமல் போகலாம். அந்த மாதிரி சமயத்தில் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும். அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். ஆனால், அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (1) சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (2) அந்தச் சந்தோஷத்தை அதிகமாக்க என்ன செய்ய வேண்டும்? (3) நீங்கள் எப்படிப்பட்ட குறிக்கோள்களை வைக்கலாம்?

சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

5. சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (பிரசங்கி 6:9)

5 சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்கிறது. (பிரசங்கி 6:9அ-வை வாசியுங்கள்.) “கண் முன்னால் இருப்பதை” அனுபவிப்பதற்குப் பழகிக்கொள்பவர்கள் அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்படுவார்கள். ஆனால், ஆசைப்பட்டதை அடைவதற்காக அலைந்து திரிபவர்கள் இல்லாததை நினைத்து கவலைப்படுவார்கள். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், நம்மிடம் என்ன இருக்கிறதோ அதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். அதே சமயத்தில், எதார்த்தமான குறிக்கோள்களை வைக்க வேண்டும்.

6. எந்த உவமையைப் பற்றி நாம் பார்ப்போம், அதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

6 நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதை ரொம்ப காலத்துக்குச் சந்தோஷமாக செய்வது கஷ்டம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஏனென்றால், புதுப் புது விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே நமக்கு இருக்கிறது. இருந்தாலும், நம் “கண் முன்னால்” என்ன இருக்கிறதோ அதை நினைத்து நாம் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படி? மத்தேயு 25:14-30-ல் இயேசு சொன்ன தாலந்தைப் பற்றிய உவமை நமக்கு உதவும். அதைப் பற்றிப் படிக்கும்போது, யெகோவாவின் சேவையில் இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதை எப்படிச் சந்தோஷமாகச் செய்யலாம் என்பதையும் அந்தச் சந்தோஷத்தை எப்படி அதிகமாக்கலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

உங்கள் சந்தோஷத்தை எப்படி அதிகமாக்கலாம்?

7. இயேசு சொன்ன உவமையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

7 இயேசு சொன்ன உவமையில், ஒருவர் தூர தேசத்துக்குப் போகிறார். போவதற்கு முன்பு, தன்னுடைய அடிமைகளைக் கூப்பிட்டு அவரவருடைய திறமைக்குத் தகுந்தபடி ஓர் அடிமைக்கு ஐந்து தாலந்தும், இன்னொரு அடிமைக்கு இரண்டு தாலந்தும், மூன்றாவது அடிமைக்கு ஒரு தாலந்தும் கொடுக்கிறார். * அதை வைத்து வியாபாரம் செய்யச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். முதல் இரண்டு அடிமைகள் அதை வைத்து இன்னும் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். மூன்றாவது அடிமை எதுவுமே செய்யவில்லை. அதனால், அந்த எஜமான் திரும்பி வந்தவுடனே அந்த அடிமையை வேலையைவிட்டு தூக்கிவிடுகிறார்.

8. முதலாம் அடிமை எதை நினைத்து சந்தோஷப்பட்டிருக்கலாம்?

8 முதலாம் அடிமை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான். ஏனென்றால், எஜமான் அவனுக்கு ஐந்து தாலந்து கொடுத்தார். அது ஒரு பெரிய தொகை. எஜமான் அவன்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது. இரண்டாவது அடிமையோ, ‘எஜமான் அவனுக்கு ஐந்து தாலந்து கொடுத்தாரு, எனக்கு இரண்டு தாலந்துதான் கொடுத்திருக்காரு’ என்று நினைத்து சோர்ந்துபோயிருக்கலாம். ஆனால், அவன் அப்படி நினைத்தானா? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இயேசுவின் உவமையில் வரும் இரண்டாவது அடிமையிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (1) அந்த அடிமைக்கு எஜமான் இரண்டு தாலந்தைக் கொடுத்தார். (2) எஜமானுக்காகக் கடினமாக உழைக்கிறான். (3) எஜமானுடைய தாலந்தை இரண்டு மடங்கு ஆக்குகிறான் (பாராக்கள் 9-11)

9. இரண்டாவது அடிமை என்ன நினைத்ததாக இயேசு சொல்லவில்லை? (மத்தேயு 25:22, 23)

9 மத்தேயு 25:22, 23-ஐ வாசியுங்கள். ‘எனக்கு மட்டும் இரண்டு தாலந்துதானா, எனக்கு என்ன திறமை இல்லயா? என் எஜமான் என்னை மதிக்கவே இல்ல, அப்புறம் எதுக்கு நான் அவருக்கு சம்பாதிச்சு தரணும்? பேசாம இத கொண்டு போய் நிலத்தில புதைச்சுட்டு என் வேலைய பாக்கறேன்’ என்று அந்த இரண்டாவது அடிமை நினைத்ததாகவோ சோர்ந்துபோனதாகவோ இயேசு சொல்லவே இல்லை.

10. தனக்குக் கிடைத்த தாலந்தை வைத்து இரண்டாவது அடிமை என்ன செய்தான்?

10 முதல் அடிமையைப் போலவே இரண்டாவது அடிமையும் எஜமான் கொடுத்த வேலையைக் கண்ணும்கருத்துமாகச் செய்தான். எஜமானுக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தான், அந்த தாலந்தை இரண்டு மடங்கு ஆக்கினான். அவனுடைய உழைப்பையும் திறமையையும் பார்த்து எஜமான் ரொம்ப சந்தோஷப்பட்டார். சபாஷ்! என்று சொல்லி பாராட்டியது மட்டுமல்லாமல் அவனுக்கு இன்னும் அதிகமான பொறுப்புகளையும் கொடுத்தார்.

11. உங்களுடைய சந்தோஷத்தை எப்படி அதிகப்படுத்தலாம்?

11 யெகோவாவின் சேவையில் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதில் மூழ்கிவிடுங்கள். அப்போது உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். பிரசங்க வேலையை “முழுமூச்சோடு” செய்யுங்கள், சபை வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். (அப். 18:5; எபி. 10:24, 25) நன்றாகத் தயாரித்துவிட்டு கூட்டத்துக்குப் போங்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பதில்களைச் சொல்லுங்கள். வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில், உங்களுக்கு மாணவர் நியமிப்பு கிடைத்தால் அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சபையில் ஏதாவது வேலையைச் செய்யச் சொல்லி உங்களிடம் சொன்னால் அதை நேரத்துக்குள் செய்யுங்கள். மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதியுங்கள். எந்த நியமிப்பையுமே, ‘இது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்ல. இதுக்கெல்லாம் இவ்வளவு நேரம் செலவு பண்ண வேண்டியது இல்ல’ என்று நினைக்காதீர்கள். உங்களுடைய திறமைகளை மெருகேற்றிக்கொண்டே இருங்கள். (நீதி. 22:29) யெகோவாவின் சேவையில் உங்களுக்கு இருக்கிற வேலைகளையும் நியமிப்புகளையும் முழுமூச்சோடு செய்யுங்கள். இதையெல்லாம் நீங்கள் எந்தளவுக்கு நன்றாகச் செய்கிறீர்களோ அந்தளவுக்குச் சீக்கிரம் முன்னேறுவீர்கள், உங்கள் சந்தோஷமும் அதிகமாகும். (கலா. 6:4) இப்படிச் செய்தால், மற்றவர்களுக்குப் பொறுப்பு கிடைக்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.—ரோ. 12:15; கலா. 5:26.

12. தங்களுடைய சந்தோஷத்தை அதிகமாக்குவதற்காக மெலிசாவும் நிக்கும் என்ன செய்தார்கள்?

12 மெலிசா என்ற சகோதரி பெத்தேல் சேவை செய்யவோ ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ளவோ ஆசைப்பட்டார் என்று நாம் முன்பு பார்த்தோம். ஆனால், தன்னுடைய ஆசை நிறைவேறாதபோது அவர் சோர்ந்துவிட்டாரா? “நான் செஞ்சுகிட்டிருந்த பயனியர் ஊழியத்த இன்னும் நல்லா செஞ்சேன். எல்லாவிதமான ஊழியத்தயும் செஞ்சேன். அப்படி செஞ்சதால என்னோட சந்தோஷம் அதிகமாச்சு” என்று அவர் சொல்கிறார். நிக் என்ற சகோதரர், உதவி ஊழியராக நியமிக்கப்படாததை நினைத்து ஏமாந்துபோனார் என்று பார்த்தோம். அப்போது அவர் என்ன செய்தார்? “என்னால என்ன செய்ய முடியுமோ அத நல்லா செஞ்சேன். நிறைய ஊழியம் செஞ்சேன். கூட்டங்களுக்கு நல்லா தயாரிச்சிட்டு போய் பதில் சொன்னேன். பெத்தேல் சேவைக்கும் விண்ணப்பிச்சேன். அடுத்த வருஷமே என்னை கூப்பிட்டாங்க” என்று அவர் சொல்கிறார்.

13. இப்போது செய்துகொண்டிருக்கிற வேலையை நீங்கள் நன்றாகச் செய்யும்போது உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? (பிரசங்கி 2:24)

13 யெகோவாவின் சேவையில் இப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதை நன்றாகச் செய்யும்போது உங்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் கிடைக்குமா? கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். நிக்குக்குக் கிடைத்தது. ஆனால், மெலிசாவுக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, உங்களுக்குப் பொறுப்புகள் கிடைக்காவிட்டாலும் நீங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்க முடியும். யெகோவாவுக்கு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதில் திருப்தியாகவும் இருக்க முடியும். (பிரசங்கி 2:24-ஐ வாசியுங்கள்.) அதோடு, நம்முடைய எஜமானர் இயேசுவை திருப்திப்படுத்துகிறீர்கள் என்ற சந்தோஷமும் உங்களுக்குக் கிடைக்கும்.

சந்தோஷத்தை அதிகரிக்க என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்?

14. குறிக்கோள்களை வைக்கும்போது நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?

14 இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைச் சந்தோஷமாகச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது கூடுதல் பொறுப்புகளுக்காக ஆசைப்படக் கூடாது என்று அர்த்தமா? இல்லை. ஊழியத்தை நல்லபடியாகச் செய்வதற்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்கும் நம்மால் குறிக்கோள்களை வைக்க முடியும். சொல்லப்போனால், அப்படிப்பட்ட குறிக்கோள்களை நிச்சயம் நாம் வைக்க வேண்டும். நம்மைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு ஞானமாக... மனத்தாழ்மையாக... நடந்துகொண்டால் அப்படிப்பட்ட குறிக்கோள்களை அடைய முடியும்.—நீதி. 11:2; அப். 20:35.

15. உங்கள் சந்தோஷத்தை அதிகமாக்குவதற்கு நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்?

15 நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்? உங்களால் என்ன முடியும் என்று எதார்த்தமாக யோசித்துப்பார்க்க உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். (நீதி. 16:3; யாக். 1:5) என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம் என்பதற்கு  முதல் பாராவில் சில உதாரணங்களைப் பார்த்தோம். அதாவது, ஒரு துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ பெத்தேல் ஊழியராகவோ கட்டுமான ஊழியராகவோ உங்களால் சேவை செய்ய முடியுமா? அல்லது ஒரு புது மொழியைக் கற்றுக்கொண்டு அந்த மொழி பேசும் இடத்தில் போய் ஊழியம் செய்ய முடியுமா? இதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். பின்பு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு புத்தகத்தில் 10-வது அதிகாரத்தைப் படியுங்கள், உங்கள் சபை மூப்பர்களிடமும் பேசுங்கள். * இப்படி, ஒரு குறிக்கோளை வைத்து, அதை அடைவதற்காக உழைக்கும்போது உங்கள் முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும், உங்கள் சந்தோஷமும் அதிகமாகும்.

16. சில குறிக்கோள்களை இப்போது உங்களால் அடைய முடியாவிட்டால் என்ன செய்யலாம்?

16 முந்தைய பாராவில் பார்த்த எந்தக் குறிக்கோள்களையும் இப்போதைக்கு உங்களால் அடைய முடியாது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், வேறு குறிக்கோள்களை வையுங்கள். நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்? பதிலுக்கு அடுத்த பாராவைப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்? (பாரா 17) *

17. ஒன்று தீமோத்தேயு 4:13, 15 சொல்கிறபடி, நன்றாகப் பேச்சு கொடுப்பதற்கு ஒரு சகோதரர் என்ன செய்யலாம்?

17 ஒன்று தீமோத்தேயு 4:13, 15-ஐ வாசியுங்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த சகோதரராக இருந்தால், பேச்சுத்திறமையை இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நன்றாக போதிக்க வேண்டும் என்றும் குறிக்கோள்களை வைக்கலாம். ஏனென்றால், வாசிப்பதிலும் பேச்சு கொடுப்பதிலும் போதிப்பதிலும் நீங்கள் ‘மூழ்கியிருக்கும்போது’ மற்றவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். அதற்கு, வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் என்ற சிற்றேட்டில் இருக்கிற ஒவ்வொரு படிப்பையும் படித்து அதன்படி செய்வதற்கு ஒரு குறிக்கோளை வையுங்கள். ஒரு சமயத்தில் ஒரு படிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக வீட்டில் பயிற்சி செய்துபாருங்கள். பேச்சுக் கொடுக்கும்போது, நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள். பின்பு, இன்னொரு படிப்பை எடுத்து அதைப் பயிற்சி செய்யுங்கள். “பேசுவதிலும் கற்றுக்கொடுப்பதிலும் கடுமையாக உழைக்கிற” மூப்பர்களிடமோ துணை ஆலோசகரிடமோ நீங்கள் ஆலோசனை கேட்கலாம். * (1 தீ. 5:17) நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்வது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது. மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதும் அவர்களைச் செயல்படத் தூண்டுவதும் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, உங்களுடைய சந்தோஷமும் அதிகமாகும், மற்றவர்களுடைய சந்தோஷமும் அதிகமாகும்.

நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்? (பாரா 18) *

18. ஊழியத்தில் உங்களுடைய திறமைகளைப் பட்டை தீட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

18 நம் எல்லாருக்குமே ஒரு நியமிப்பு இருக்கிறது. பிரசங்கிப்பதும் மற்றவர்களைச் சீஷராக்குவதும்தான் அது. (மத். 28:19, 20; ரோ. 10:14) எல்லாவற்றையும்விட இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியமான வேலை. இந்த வேலையில் உங்களுடைய திறமைகளைப் பட்டை தீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கற்றுக்கொடுப்பது சிற்றேட்டைக் கவனமாகப் படியுங்கள். அதிலிருக்கிற எந்த விஷயத்தைப் பின்பற்றலாம் என்று ஒரு குறிக்கோள் வையுங்கள். அதற்குப் பின்பு, ஊழியத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதைச் செய்வதற்கு முயற்சி எடுங்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்திலும் “இப்படிப் பேசலாம்” பகுதியில் வருகிற வீடியோக்களிலும் சில ஆலோசனைகள் இருக்கின்றன. இந்த எல்லா ஆலோசனைகளையும் செய்து பார்த்து, உங்களுக்கு எது ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். இப்படியெல்லாம் செய்தால், ஊழியத்தை நீங்கள் இன்னும் திறமையாகச் செய்ய முடியும், உங்களுடைய சந்தோஷமும் அதிகமாகும்.—2 தீ. 4:5.

நீங்கள் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம்? (பாரா 19) *

19. யெகோவாவுக்குப் பிடித்த குணங்களை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

19 குறிக்கோள்கள் வைப்பதைப் பற்றி யோசிக்கும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள். அதாவது, யெகோவாவுக்குப் பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு குறிக்கோளையும் வையுங்கள். (கலா. 5:22, 23; கொலோ. 3:12; 2 பே. 1:5-8) இதை எப்படிச் செய்யலாம்? உதாரணத்துக்கு, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைக்க நீங்கள் ஆசைப்படலாம். அதற்காக, நீங்கள் என்ன செய்யலாம்? விசுவாசத்தைப் பற்றி நம்முடைய பிரசுரங்களில் வந்திருக்கிற கட்டுரைகளைப் படிக்கலாம். எத்தனையோ சோதனைகள் வந்தாலும், தொடர்ந்து விசுவாசத்தோடு இருந்த நம்முடைய சகோதர சகோதரிகளின் அனுபவங்கள் JW பிராட்காஸ்டிங்கில் வந்திருக்கின்றன. அவற்றையும் நீங்கள் பார்க்கலாம். பின்பு, அவர்களைப் போலவே நீங்களும் எப்படியெல்லாம் விசுவாசத்தைக் காட்டலாம் என்று யோசித்துப்பாருங்கள்.

20. சந்தோஷத்தை அதிகமாக்கவும் ஏமாற்றத்தைச் சமாளிக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்?

20 நாம் எல்லாருமே யெகோவாவின் சேவையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ, அதைவிட இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அந்த ஆசை புதிய உலகத்தில் நிச்சயம் நிறைவேறும். அதுவரை, நம்மால் என்ன முடியுமோ அதை ரொம்ப நன்றாகச் செய்வதற்கு முயற்சி செய்தால் நம்முடைய சந்தோஷம் அதிகமாகும், ஏமாற்றத்தையும் சமாளிக்க முடியும். எல்லாவற்றுக்கும்மேல் ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கிற யெகோவாவுக்குப் புகழ் சேர்க்க முடியும். (1 தீ. 1:11) அதனால், இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைச் சந்தோஷமாகச் செய்யலாம்!

பாட்டு 82 ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’

^ பாரா. 5 நாம் எல்லாருமே யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். அவருக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால், ஊழியத்தை நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். சபையில் இன்னும் நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கலாம். ஆனால், எவ்வளவுதான் முயற்சி எடுத்தும் நாம் நினைக்கும் குறிக்கோள்களை அடைய முடியாவிட்டால் என்ன செய்வது? நம்முடைய சந்தோஷத்தை இழந்துவிடாமல் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்வதற்கு என்ன செய்யலாம்? தாலந்து பற்றி இயேசு சொன்ன உவமையில் இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.

^ பாரா. 2 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 7 வார்த்தைகளின் விளக்கம்: ஒரு தாலந்து என்பது கிட்டத்தட்ட ஒரு கூலியாளின் 20 வருஷ சம்பளத்துக்குச் சமம்.

^ பாரா. 15 ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்கள் உதவி ஊழியர்களாகவோ மூப்பர்களாகவோ ஆவதற்கு குறிக்கோள்களை வைக்கலாம். அதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்று தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு புத்தகத்தில் 5-வது அதிகாரத்தையும் 6-வது அதிகாரத்தையும் படியுங்கள்.

^ பாரா. 17 வார்த்தைகளின் விளக்கம்: ஒரு மூப்பர்தான் துணை ஆலோசகராக இருப்பார். மற்ற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பேச்சு நியமிப்பு செய்யும்போதோ வாசிக்கும்போதோ அதில் ஏதாவது ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தால், அவர்களைத் தனியாகச் சந்தித்துக் கொடுப்பார்.

^ பாரா. 64 படவிளக்கம்: ஒரு சகோதரர், இன்னும் நன்றாகப் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிக்கோள்களை வைக்கிறார். அதை அடைவதற்காக பிரசுரங்களை ஆராய்ச்சி செய்கிறார்.

^ பாரா. 66 படவிளக்கம்: ஒரு சகோதரி, இன்னும் நன்றாகச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வேண்டும் என்று குறிக்கோள் வைக்கிறார். அதை எட்ட, ஹோட்டலில் வேலை செய்கிற ஒரு பெண்ணிடம் கான்டாக்ட் கார்டு கொடுக்கிறார்.

^ பாரா. 68 படவிளக்கம்: ஒரு சகோதரி, தாராள குணத்தைக் காட்ட வேண்டும் என்று குறிக்கோள் வைக்கிறார். பின்பு, இன்னொரு சகோதரியின் வீட்டுக்குப் போய் அவருக்குப் பரிசு கொடுக்கிறார்.