உங்கள் துணை ஆபாசத்தைப் பார்க்கும்போது...
-
“என் கணவர் மறுபடியும் மறுபடியும் எனக்குத் துரோகம் செய்துவிட்ட மாதிரி தோன்றியது.”
-
“எனக்கு ஒரே அவமானமாக இருந்தது. என்னிடம் அழகும் கவர்ச்சியும் இல்லை, நான் சரியான தண்டம் என்றெல்லாம் நினைத்தேன்.”
-
“என்னால் யாரிடமும் இதைப் பற்றிப் பேச முடியவில்லை. மனதுக்குள்ளேயே குமுறிக்கொண்டு இருந்தேன்.”
-
“என்னைப் பற்றியெல்லாம் யெகோவாவுக்குக் கவலை இல்லை என்று யோசித்தேன்.”
ஒரு கணவர் ஆபாசத்தைப் பார்க்கும்போது அவருடைய மனைவி எந்தளவு வேதனைப்படுவார் என்பதை மேலே இருக்கும் வார்த்தைகள் காட்டுகின்றன. அதுவும், கணவர் மாதக்கணக்காக அல்லது வருஷக்கணக்காக ஆபாசத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்துவந்திருந்தால், மனைவி அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிடும். ஒரு மனைவி இப்படிச் சொன்னார்: “‘என் கணவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்று இவ்வளவு நாள் நான் புரிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கிறேனே. இன்னும் என்னவெல்லாம் எனக்குத் தெரியாமல் செய்கிறாரோ!’ என்றெல்லாம் யோசித்தேன்.”
ஆபாசத்தைப் பார்ப்பவர்களுடைய மனைவிகளுக்காக இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டிருக்கிறது. a இதிலுள்ள பைபிள் ஆலோசனைகள் அவர்களுக்கு ஆறுதல் தரும்... யெகோவா தங்களுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும்... கவலையிலேயே மூழ்கிவிடாமல் இருப்பதற்கும் யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கும் உதவி செய்யும். b
தவறு செய்யாத துணை என்ன செய்யலாம்?
உங்கள் கணவர் செய்யும் எல்லாவற்றையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனாலும், உங்கள் கவலையைக் குறைத்து ஓரளவு நிம்மதியாக இருக்க நீங்கள் சில விஷயங்களைச் செய்யலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
உங்கள்மீதே பழியைப் போட்டுக்கொள்ளாதீர்கள். கணவர் ஆபாசத்தைப் பார்ப்பதற்கு தான்தான் ஏதோவொரு விதத்தில் காரணம் என்று மனைவி நினைத்துக்கொள்ளலாம். அதற்கு ஒரு உதாரணம் ஆலிஸ். c ‘என் கணவர் என்னை விட்டுவிட்டு மற்ற பெண்களை ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறார்?’ என்று அவர் யோசித்தார். கடைசியில், தன்னிடம்தான் ஏதோ குறை இருப்பதாக முடிவு செய்தார். இன்னும் சில மனைவிகள், இந்த சூழ்நிலைமையில் தாங்கள் நடந்துகொள்ளும் விதம் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுமோ என்று பயந்து தங்கள்மீது பழிபோட்டுக்கொள்கிறார்கள். டேனியலா என்ற ஒரு மனைவி, “எனக்கு ஒரே கடுப்பாக இருந்தது, கோபம் கோபமாக வந்தது. அதனால், என் கல்யாண வாழ்க்கையை நானே கெடுக்கிறேனோ என்று யோசித்தேன்” என்று சொல்கிறார்.
நீங்களும் அவர்களைப் போலவே யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் கணவர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பு என்று யெகோவா நினைப்பதே இல்லை. யாக்கோபு 1:14 இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.” (ரோ. 14:12; ) அதனால், யெகோவா உங்களைக் குறை சொல்வதில்லை. நீங்கள் அவருக்கு உண்மையாக இருப்பதைப் பார்த்து அவர் பெருமைதான் படுகிறார்!— பிலி. 2:122 நா. 16:9.
இன்னொரு விஷயத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்களிடம் ஏதோ குறை இருப்பதால்தான் உங்கள் கணவர் ஆபாசத்தைப் பார்க்கிறார் என்று சொல்ல முடியாது. நிபுணர்கள் சொல்வதுபோல், ஆபாசத்தைப் பார்ப்பவர்களின் மனதில் காமத்தீ பயங்கரமாகப் பற்றியெரியும், அதை எந்தப் பெண்ணாலுமே தணிக்க முடியாது.
அளவுக்கு அதிகமாகக் கவலைப்படாதீர்கள். தன் கணவர் ஆபாசத்தைப் பார்க்கிறார் என்ற ஒரே யோசனைதான் எந்நேரமும் தன்னைப் பாடாய்ப் படுத்தியதாக கேத்தரின் சொல்கிறார். அதேபோல், ஃபிரான்சினா என்ற மனைவி சொல்லும்போது, “என் கணவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டால் அவ்வளவுதான், என் டென்ஷன் எகிறிவிடும். நாள் முழுக்க பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிடும்” என்று சொல்கிறார். இன்னும் சில மனைவிகள், தங்களுடைய கணவருடைய பிரச்சினையைப் பற்றித் தெரிந்த சகோதர சகோதரிகளோடு சேர்ந்து இருக்கும்போது ரொம்ப தர்மசங்கடமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். வேறு சில மனைவிகள், தங்களுக்கென்று யாருமே இல்லாத மாதிரி தோன்றுவதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால், யாருமே தங்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வதில்லை என்று நினைக்கிறார்கள்.
இப்படியெல்லாம் யோசிப்பது இயல்புதான். ஆனால், அந்த நினைப்பாகவே இருந்தால் உங்கள் கவலைதான் அதிகமாகும். அதற்குப் பதிலாக, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தின்மேல் உங்கள் கவனத்தைப் பதிய வையுங்கள். அப்போது, உங்கள் மனவலிமை அதிகமாகும்.—சங். 62:2; எபே. 6:10.
வேதனையில் இருந்த சில பெண்கள் எப்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள் என்றும், அவர்களுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது என்றும் பைபிளில் படித்துப் பாருங்கள். அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். அது உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். அவர்களுடைய சூழ்நிலையை யெகோவா மாற்றவில்லை, ஆனால் அவர்களுக்கு மனசமாதானத்தைக் கொடுத்தார். உதாரணத்துக்கு, அன்னாள் தன்னுடைய சூழ்நிலையை நினைத்து ‘ரொம்பவே மனமுடைந்துபோயிருந்தார்.’ ஆனாலும், “ரொம்ப நேரம் யெகோவாவிடம் ஜெபம்” செய்த பிறகு அவருக்கு மனசமாதானம் கிடைத்தது. தன்னுடைய சூழ்நிலை எப்படி மாறும் என்று தெரியாவிட்டாலும் அவருக்கு நிம்மதி கிடைத்தது.—1 சா. 1:10, 12, 18; 2 கொ. 1:3, 4.
சபை மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். அவர்கள் ‘காற்றுக்கு ஒதுங்கும் இடமாகவும் . . . புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாகவும் இருப்பார்கள்.’ (ஏசா. 32:2) ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட சகோதரியிடம் பேசும்படி மூப்பர்கள் உங்களிடம் சொல்லலாம். ஏனென்றால், அவரிடம் மனம்விட்டுப் பேசும்போது உங்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.—நீதி. 17:17.
உங்களால் உங்கள் கணவருக்கு உதவ முடியுமா?
ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட உங்கள் கணவருக்கு உங்களால் உதவ முடியுமா? அதற்கு வாய்ப்பு இருக்கிறது! ஒரு பிரச்சினையை சரிசெய்ய அல்லது பயங்கரமான ஒரு எதிரியை ஜெயிக்க, “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 4:9-12) ஆராய்ச்சிகள் காட்டுகிறபடி, கணவனும் மனைவியும் சேர்ந்து உழைக்கும்போது ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து கணவரால் விடுபட முடிந்திருக்கிறது, மனைவியால் மறுபடியும் அவர்மேல் நம்பிக்கை வைக்க முடிந்திருக்கிறது.
2 கொ. 4:7; யாக். 5:14, 15) ஆபாசத்தைப் பார்க்காமல் இருப்பதற்கு அவர் முன்ஜாக்கிரதையாக ஏதாவது திட்டங்களை வைத்திருக்கிறாரா? உதாரணத்துக்கு, எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தவறு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் யோசித்து வைத்திருக்கிறாரா? (நீதி. 27:12) உங்கள் உதவியை ஏற்றுக்கொள்ளவும், எதையும் மூடிமறைக்காமல் எல்லாவற்றையும் உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லவும் அவர் தயாராக இருக்கிறாரா? ஆம் என்றால், உங்களால் ஒருவேளை அவருக்கு உதவ முடியும்!
ஆனால், பலன் கிடைக்குமா கிடைக்காதா என்பது பெரும்பாலும் உங்கள் கணவர் கையில்தான் இருக்கிறது. ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விட்டொழிக்க அவர் தீர்மானமாக இருக்க வேண்டும், அதற்காக அவர் கடினமாக உழைக்கவும் வேண்டும். பலத்துக்காக யெகோவாவிடம் அவர் கெஞ்சிக் கேட்டிருக்கிறாரா? மூப்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறாரா? (எப்படி? ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். பெலிசியாவின் கணவர் ஈத்தன், சின்ன வயதிலிருந்தே ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தார். ஆபாசத்தைப் பார்க்கும் ஆசை அவருக்கு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் பெலிசியாவிடம் அவரால் மனம்விட்டுப் பேச முடிகிறது. ஏன் என்று அவரே சொல்கிறார்: “கெட்ட ஆசையை அடக்க என் மனைவி ரொம்ப அன்பாக எனக்கு உதவி செய்கிறாள். இந்த விஷயத்தில் நான் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறேன் என்று அவ்வப்போது விசாரிக்கிறாள். இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நேரத்தை நான் குறைத்துக்கொள்ளவும் அவள் எனக்கு உதவி செய்கிறாள். அதனால், அவளிடம் என்னால் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேச முடிகிறது.” ஈத்தன் ஆபாசத்தைப் பார்க்க ஆசைப்படும் விஷயம் பெலிசியாவுக்கு ரொம்ப வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனாலும், பெலிசியா இப்படிச் சொல்கிறார்: “நான் கோபப்படுவதாலோ அழுவதாலோ அவர் திருந்தப்போவது கிடையாது. அதனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து, அவருக்கு எதுவெல்லாம் பிரச்சினையாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுவோம். அதன் பிறகு, என் வேதனையைக் குறைக்க என்னோடு அவர் ஒத்துழைப்பார்.”
கணவனும் மனைவியும் இப்படி வெளிப்படையாகப் பேசுவது, ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கணவருக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, கணவர்மேல் மறுபடியும் நம்பிக்கை வைக்க மனைவிக்கும் உதவுகிறது. எப்படி? கணவர் தனக்கு வரும் கெட்ட ஆசைகளைப் பற்றியும், தான் எங்கே போகிறார், என்ன செய்கிறார் என்பதைப் பற்றியும் சொல்லும்போது அவர்களுக்குள் ஒளிவுமறைவே இருக்காது. அதனால், மனைவிக்கு அவர்மேல் மறுபடியும் நம்பிக்கை வந்துவிடும்.
இதேபோல் நீங்களும் உங்களுடைய கணவருக்கு உதவ முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் ஏன் அவரோடு சேர்ந்து இந்தக் கட்டுரையை வாசித்து, இதைப் பற்றிக் கலந்துபேசக் கூடாது? இனி ஆபாசத்தைப் பார்க்கக் கூடாது என்பதும், உங்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்கும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்பதும்தான் உங்கள் கணவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது அவர் கோபப்படுவதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினை உங்களுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு கொடுப்பதும், உங்கள் நம்பிக்கையைச் சம்பாதிக்க அவருக்கு வாய்ப்பைக் கொடுப்பதும்தான் உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். என்ன காரணங்களால் ஒருவர் ஆபாசம் என்ற வலையில் விழலாம், அதிலிருந்து எப்படி விடுபடலாம் என்றெல்லாம் நீங்கள் இரண்டு பேருமே தெரிந்துகொள்ள வேண்டும். d
நீங்களும் உங்கள் கணவரும் பேச ஆரம்பித்தால் சண்டைதான் வரும் என்று நீங்கள் பயந்தால், ஆரம்பத்தில் ஒரு மூப்பரின் உதவியை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? நீங்கள் பேசும்போது, உங்கள் இரண்டு பேருக்குமே நல்ல ஃப்ரெண்டாக இருக்கும் மூப்பரை உங்களோடு நீங்கள் உட்காரச் சொல்லலாம். நீங்கள் இரண்டு பேரும் சுமுகமாகப் பேசுவதற்கு அந்த மூப்பர் உங்களுக்கு உதவுவார். உங்கள் கணவர் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலும், அவர்மேல் மறுபடியும் நீங்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். அதனால், சோர்ந்துபோய்விடாதீர்கள்! உங்கள் உறவில் துளிர்க்கும் சின்னச் சின்ன மொட்டுகளைப் பார்த்துக்கூட சந்தோஷப்படுங்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், காலம் போகப்போக உங்கள் கல்யாண வாழ்க்கையில் சந்தோஷ மலர்கள் மறுபடியும் பூத்துக் குலுங்கும் என்று நம்புங்கள்!—அவர் திரும்பத் திரும்ப சேற்றில் விழுந்தால்...
உங்கள் கணவர் ஆபாசம் என்ற சேற்றில் திரும்பவும் விழுந்துவிட்டால், அவர் திருந்தவே இல்லை என்றோ, இனி எப்போதுமே திருந்த மாட்டார் என்றோ அர்த்தமா? அப்படி இல்லை! முக்கியமாக, அவர் ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால், அதிலிருந்து விடுபட வாழ்நாள் முழுவதும் அவர் போராட வேண்டியிருக்கலாம். நிறைய வருஷங்களாக அவர் ஆபாசத்தின் பக்கமே போகாமல் இருந்தாலும் திடீரென்று அந்தச் சேற்றில் அவர் மறுபடியும் விழுந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அது நடக்காமல் இருப்பதற்கு, அவர் பயங்கர உறுதியோடு போராட வேண்டியிருக்கும். அந்தப் பழக்கத்தை விட்ட பிறகுகூட, ஏற்கெனவே முன்ஜாக்கிரதையாகப் போட்டு வைத்திருந்த திட்டங்களின்படி அவர் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். (நீதி. 28:14; மத். 5:29; 1 கொ. 10:12) அவர் தன் “மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை” புதிதாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். அதோடு, ‘கெட்ட காரியங்களை வெறுக்க’ கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, ஆபாசத்தையும், சுய இன்பப் பழக்கம் போன்ற அசுத்தமான பழக்கங்களையும் வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். (எபே. 4:23; சங். 97:10; ரோ. 12:9) இதையெல்லாம் செய்ய அவருக்கு விருப்பம் இருக்கிறதா? அப்படியென்றால், ஒருநாள் இந்தப் பழக்கத்திலிருந்து அவரால் கண்டிப்பாக விடுபட முடியும்! e
இந்தப் பழக்கத்தை எதிர்த்துப் போராட உங்கள் துணைக்கு விருப்பமே இல்லை என்றால் என்ன செய்வது? அப்படியென்றால், உங்களுக்குத் திரும்பத் திரும்ப ஏமாற்றமாக இருக்கலாம்... கோபம் கோபமாக வரலாம்... அவர் உங்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மாதிரிகூட தோன்றலாம். இது இயல்புதான். அதுபோன்ற சமயங்களில், பிரச்சினையை யெகோவாவின் கையில் விட்டுவிட்டு மன சமாதானத்தோடு இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். (1 பே. 5:7) பைபிளை படிப்பதன் மூலமாகவும், படிப்பதை ஆழமாக யோசிப்பதன் மூலமாகவும், ஜெபம் செய்வதன் மூலமாகவும் யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப்போய்க்கொண்டே இருங்கள். அப்படிச் செய்யும்போது யெகோவாவும் உங்களிடம் நெருங்கிவருவார் என்பதில் சந்தேகமே இல்லை! ஏசாயா 57:15-ல் நாம் பார்க்கிறபடி, “நெஞ்சம் நொறுங்கியவர்களோடும் துவண்டுபோனவர்களோடும்” குடியிருப்பதாக யெகோவா சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு அவர் புத்துயிர் தருகிறார். உங்களால் முடிந்தளவுக்கு ஒரு சிறந்த கிறிஸ்தவராக வாழுங்கள். மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். உங்கள் கணவர் ஏதோவொரு கட்டத்தில் கண்டிப்பாகத் திருந்துவார் என்பதில் நம்பிக்கையாக இருங்கள்!—ரோ. 2:4; 2 பே. 3:9.
a கட்டுரையை எளிமையாக்குவதற்காக, கணவர் ஆபாசத்தைப் பார்ப்பதுபோல் சொல்லியிருக்கிறோம். ஆனால், சில மனைவிகளும் ஆபாசத்தைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கணவர்களுக்குக்கூட இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் நிறைய ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.
b துணை ஆபாசத்தைப் பார்க்கிறார் என்பதற்காக அவரை விவாகரத்து செய்வதற்கு பைபிள் அனுமதிப்பது இல்லை.—மத். 19:9.
c பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
d jw.org வெப்சைட்டிலும் நம் பிரசுரங்களிலும் பிரயோஜனமான தகவல்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, jw.org-ல் “ஆபாசம் உங்கள் திருமண வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிவிடலாம்”; ஜூலை 1, 2014 காவற்கோபுரம், பக். 9-11-ல் “கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட முடியும்!”; jw.org-ல் “ஆபாசம்—விளையாட்டா விஷமா?” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
e ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் ஒருவரை அடிமையாக்கிவிடும் என்பதால் சில தம்பதிகள் மூப்பர்களிடம் உதவி கேட்பது மட்டுமல்லாமல், டாக்டரையும் போய்ப் பார்க்கிறார்கள். இது அவரவருடைய தனிப்பட்ட முடிவு.