படிப்புக் கட்டுரை 35
எப்போதும் பொறுமையாக இருங்கள்
‘பொறுமையைக் காட்டுங்கள்.’—கொலோ. 3:12.
பாட்டு 114 பொறுமை—ஒரு அருமையான குணம்
இந்தக் கட்டுரையில்... a
1. பொறுமையாக இருப்பவர்களை உங்களுக்கு ஏன் பிடிக்கும்?
பொறுமையாக இருப்பவர்களை நம் எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். ஏன்? எரிச்சல்படாமல் ஏதோவொரு விஷயத்துக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறவர்களைப் பார்க்கும்போது அவர்கள்மேல் நமக்கு மரியாதை வரும். அதேபோல், நாம் தவறு செய்யும்போது மற்றவர்கள் நம்மிடம் பொறுமையாக நடந்துகொண்டால் நமக்கு சந்தோஷமாக இருக்கும். நமக்கு பைபிள் படிப்பு நடத்தியவர் காட்டிய பொறுமைக்காகவும் நாம் நன்றியோடு இருக்கிறோம். பைபிள் விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் அவர்கள் எவ்வளவு பொறுமையாக நமக்கு உதவி செய்திருக்கிறார்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா நம்மிடம் பொறுமையாக நடந்துகொள்வதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம்.—ரோ. 2:4.
2. என்னென்ன சூழ்நிலைகளில் பொறுமையாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?
2 மற்றவர்கள் பொறுமையாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருந்தாலும், நாம் பொறுமையாக இருப்பது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, நாம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டால் பொறுமை காட்டுவது கஷ்டமாக இருக்கலாம். அதுவும், நாம் எங்கேயாவது அவசரமாகப் போய்க்கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்! யாராவது நம்மை எரிச்சல்படுத்தினாலும் நமக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடலாம். சிலசமயம், புதிய உலகத்துக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுகூட நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். நீங்கள் இன்னும் அதிகப் பொறுமையோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? பொறுமையாக இருப்பது என்றால் என்ன... பொறுமையாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்... அந்தக் குணத்தை நாம் எப்படி இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ளலாம்... என்றெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
பொறுமையாக இருப்பது என்றால் என்ன?
3. பொறுமையாக இருக்கும் ஒருவர், மற்றவர்கள் தன் கோபத்தைத் தூண்டினாலும் எப்படி நடந்துகொள்வார்?
3 நாம் எப்படிப் பொறுமையாக இருக்கலாம் என்பதற்கு நான்கு வழிகளை இப்போது பார்க்கலாம். முதலில், பொறுமையாக இருக்கும் ஒருவர் சீக்கிரத்தில் கோபப்பட மாட்டார். யாராவது அவருடைய கோபத்தைத் தூண்டினால்கூட அவர் அமைதியாக, நிதானமாக இருப்பார். அவர் டென்ஷனாக இருக்கும்போதுகூட மற்றவர்கள்மேல் எரிந்துவிழ மாட்டார். “சீக்கிரத்தில் கோபப்படாதவர்” என்ற வார்த்தைகள், யெகோவாவைப் பற்றிச் சொல்லும்போதுதான் முதலில் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்” என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது.—யாத். 34:6.
4. பொறுமையாக இருக்கும் ஒருவர், ஏதோவொன்றுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் எப்படி நடந்துகொள்வார்?
4 இரண்டாவதாக, பொறுமையாக இருக்கும் ஒருவர் அமைதியாகக் காத்திருப்பார். அவர் எதிர்பார்த்திருக்கும் ஒரு விஷயம் உடனடியாக நடக்கவில்லை என்றால்கூட அவர் பொறுமையை இழந்துவிட மாட்டார், எரிச்சல்பட மாட்டார். (மத். 18:26, 27) நிறைய சூழ்நிலைகளில் நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, யாராவது பேசிக்கொண்டிருந்தால் நாம் குறுக்கே பேசாமல் பொறுமையாகக் கேட்க வேண்டும். (யோபு 36:2) அதுமட்டுமல்ல, நாம் ஒருவருக்கு பைபிளைச் சொல்லித்தரும்போது, அவர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்வரை அல்லது ஒரு கெட்ட பழக்கத்தை விடும்வரை நாம் பொறுமையைக் காட்ட வேண்டியிருக்கிறது.
5. நாம் பொறுமையைக் காட்டுவதற்கு இன்னொரு வழி என்ன?
5 மூன்றாவதாக, பொறுமையாக இருக்கும் ஒருவர் முன்பின் யோசிக்காமல் அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டார். சில சூழ்நிலைகளில் நாம் வேகமாக செயல்பட வேண்டும்தான். ஆனால், பொறுமையாக இருக்கும் ஒருவர் ஒரு முக்கியமான வேலையை அவசரப்பட்டு ஆரம்பிக்கவும் மாட்டார், அதை அவசர அவசரமாகச் செய்து முடிக்கவும் மாட்டார். அதற்குப் பதிலாக, என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதற்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவார். அதன் பிறகு, நேரம் எடுத்து அந்த வேலையை நிதானமாகவும் நல்லபடியாகவும் செய்து முடிப்பார்.
6. பொறுமையாக இருக்கும் ஒருவர், சோதனைகளோ கஷ்டங்களோ வரும்போது எப்படி நடந்துகொள்வார்?
6 நான்காவதாக, பொறுமையாக இருக்கும் ஒருவர் சோதனைகள் வரும்போது முறுமுறுக்காமல் சகித்திருப்பார். இந்த அர்த்தத்தில்தான் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. நமக்கு வந்திருக்கும் ஒரு சோதனையைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்று நம் நெருங்கிய நண்பரிடம் மனம்விட்டுப் பேசுவது தவறு இல்லைதான். ஆனால், பொறுமையாக இருக்கும் ஒருவர் நம்பிக்கையான மனநிலையோடு தொடர்ந்து சகித்திருக்க தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார். (கொலோ. 1:11) கிறிஸ்தவர்களாக, இந்த எல்லா வழிகளிலும் நாம் பொறுமையைக் காட்ட வேண்டும். ஏன்? அதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.
பொறுமை ஏன் ரொம்ப முக்கியம்?
7. யாக்கோபு 5:7, 8 சொல்வதுபோல், பொறுமையாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்? (படத்தையும் பாருங்கள்.)
7 நம் மீட்புக்குப் பொறுமை ரொம்பத் தேவை. முன்பு வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களைப் போலவே, யெகோவா தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை நாமும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். (எபி. 6:11, 12) நம் சூழ்நிலை ஒரு விவசாயியின் சூழ்நிலையைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 5:7, 8-ஐ வாசியுங்கள்.) ஒரு விவசாயி கஷ்டப்பட்டு விதை விதைப்பார், தண்ணீரும் ஊற்றுவார். ஆனால், பயிர் எப்போது வளரும் என்று அவருக்குத் தெரியாது. இருந்தாலும், ஒருநாள் கண்டிப்பாக விளைச்சலை அறுவடை செய்வார் என்ற நம்பிக்கையோடு அவர் பொறுமையாகக் காத்திருப்பார். அதேபோல், ‘நம் எஜமான் எந்த நாளில் வருவார் என்பது நமக்குத் தெரியவில்லை’ என்றால்கூட, ஆன்மீக விஷயங்களை நாம் சுறுசுறுப்பாகச் செய்துவருகிறோம். (மத். 24:42) யெகோவா தன்னுடைய நேரத்தில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு நாம் பொறுமையாகக் காத்திருக்கிறோம். நாம் பொறுமையை இழந்துவிட்டால், காத்திருப்பது நமக்குக் கஷ்டமாகிவிடும். அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகச் சத்தியத்தைவிட்டே போய்விடுவோம். அதுமட்டுமல்ல, இப்போதைக்கு சந்தோஷம் தரும் காரியங்களைத் தேடியும் போய்விடுவோம். ஆனால், நாம் பொறுமையாக இருந்தால் கடைசிவரை சகித்திருப்போம், மீட்பையும் பெறுவோம்.—மீ. 7:7; மத். 24:13.
8. மற்றவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்வதற்குப் பொறுமை எப்படி நமக்கு உதவும்? (கொலோசெயர் 3:12, 13)
8 மற்றவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்வதற்குப் பொறுமை நமக்கு உதவி செய்யும். மற்றவர்கள் பேசும்போது நன்றாகக் கவனித்துக் கேட்க அது நமக்கு உதவும். (யாக். 1:19) மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்குக்கூடப் பொறுமை நமக்கு உதவும். நமக்குப் பொறுமை இருந்தால், டென்ஷனாக இருக்கும்போதுகூட அவசரப்பட்டு எதையும் செய்துவிட மாட்டோம், மற்றவர்களைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் எதையும் சொல்லிவிடவும் மாட்டோம். அதோடு, மற்றவர்கள் நம் மனதைக் காயப்படுத்தும்போதுகூட சட்டென்று கோபப்பட மாட்டோம். பதிலுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்காமல், ‘தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்வோம், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருப்போம்.’—கொலோசெயர் 3:12, 13-ஐ வாசியுங்கள்.
9. முடிவுகளை எடுக்கும்போது பொறுமை எப்படி நமக்கு உதவி செய்யும்? (நீதிமொழிகள் 21:5)
9 நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் பொறுமை நமக்கு உதவி செய்யும். நாம் பொறுமையாக இருந்தால், அவசரப்பட்டு அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை எடுக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, நேரமெடுத்து எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து, ஒவ்வொன்றிலும் இருக்கும் நல்லது கெட்டதை யோசித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகுதான் ஒரு முடிவை எடுப்போம். (நீதிமொழிகள் 21:5-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, நாம் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம். நாம் பொறுமையாக இல்லாவிட்டால், நமக்குக் கிடைக்கும் முதல் வேலையையே ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலைக்குப் போனால் சில கூட்டங்களுக்குப் போக முடியாது, ஊழியத்துக்கும் தவறாமல் போக முடியாது என்று தெரிந்திருந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாம் பொறுமையாக இருந்தால், வேறு சில விஷயங்களையும் யோசித்துப் பார்த்து முடிவெடுப்போம். உதாரணத்துக்கு, வேலைக்காக எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கும்... எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்... அந்த வேலை நம் குடும்பத்தையும் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தையும் எப்படிப் பாதிக்கும்... என்றெல்லாம் யோசித்துப் பார்ப்போம். இப்படி, நாம் பொறுமையாக இருந்தால் தவறான முடிவை எடுக்காமல் இருப்போம்.
நாம் எப்படி இன்னும் பொறுமையாக நடந்துகொள்ளலாம்?
10. பொறுமையை வளர்த்துக்கொள்ளவும் அதைக் காத்துக்கொள்ளவும் நாம் என்ன செய்யலாம்?
10 இன்னும் அதிக பொறுமைக்காக ஜெபம் செய்யுங்கள். பொறுமை என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அதனால், யெகோவாவின் சக்தியைக் கேட்டு நாம் ஜெபம் செய்யலாம். அந்தச் சக்தியால் உண்டாகிற இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டும் ஜெபம் செய்யலாம். நம் பொறுமையைச் சோதிக்கும் ஒரு சூழ்நிலை வந்தால், கடவுளுடைய சக்திக்காக நாம் “கேட்டுக்கொண்டே” இருக்க வேண்டும். (லூக். 11:9, 13) ஒரு விஷயத்தை யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்க உதவி செய்யும்படியும் நாம் அவரிடம் கேட்கலாம். ஜெபம் செய்த பிறகு, ஒவ்வொரு நாளும் பொறுமையாக இருப்பதற்கு நம் பங்கில் செய்ய வேண்டியதையும் நாம் செய்ய வேண்டும். பொறுமைக்காக எந்தளவுக்கு ஜெபம் செய்கிறோமோ, எந்தளவுக்கு அதைக் காட்ட முயற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு இந்தக் குணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், நம் சுபாவத்தோடும் கலந்துவிடும்.
11-12. யெகோவா எப்படியெல்லாம் பொறுமையைக் காட்டியிருக்கிறார்?
11 பைபிள் உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். பொறுமையாக இருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது. அவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எப்படியெல்லாம் பொறுமை காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம். அவர்களில் சிலரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, பொறுமை காட்டுவதில் தலைசிறந்த உதாரணமாக இருக்கும் யெகோவாவைப் பற்றிப் பார்க்கலாம்.
12 ஏதேன் தோட்டத்தில் சாத்தான் யெகோவாவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான். யெகோவா நீதியான, அன்பான ஆட்சியாளர்தானா என்ற சந்தேகத்தை ஏவாளின் மனதில் அவன் விதைத்தான். அதற்காக அவனை உடனடியாக அழிப்பதற்குப் பதிலாக யெகோவா பொறுமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் காட்டினார். ஏனென்றால், அவருடைய ஆட்சிதான் சிறந்தது என்பதை நிரூபிக்க காலம் எடுக்கும் என்று அவருக்குத் தெரியும். அதற்காக அவர் காத்திருக்கும் சமயத்தில், தன்னுடைய பெயருக்கு வந்திருக்கும் களங்கத்தைச் சகித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் இவ்வளவு காலம் பொறுமையாகக் காத்திருப்பதற்கு இன்னொரு காரணம், முடிவில்லாமல் வாழும் வாய்ப்பு நிறைய பேருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்! (2 பே. 3:9, 15) அதனால், லட்சக்கணக்கான மக்களால் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. யெகோவாவின் பொறுமையால் எவ்வளவு நன்மைகள் என்பதை நாம் யோசித்துப் பார்க்கும்போது, அவருடைய நேரத்தில் அவர் முடிவைக் கொண்டுவரும்வரை காத்திருப்பது நமக்குச் சுலபமாக இருக்கும்.
13. இயேசு எப்படி யெகோவாவைப் போலவே பொறுமையாக நடந்துகொண்டார்? (படத்தையும் பாருங்கள்.)
13 இயேசு தன் அப்பாவைப் போலவே ரொம்பப் பொறுமையாக நடந்துகொள்கிறார். பூமியில் இருந்தபோதும் அவர் இந்தக் குணத்தைக் காட்டினார். ஆனால், பொறுமையாக இருப்பது எல்லா சமயத்திலும் அவருக்குச் சுலபமாக இருந்திருக்காது. அதுவும், வெளிவேஷம் போட்ட வேத அறிஞர்களிடமும் பரிசேயர்களிடமும் பொறுமையாக நடந்துகொள்வது ரொம்பக் கஷ்டமாக இருந்திருக்கும். (யோவா. 8:25-27) ஆனாலும், இயேசு சட்டென்று கோபப்படாமல் தன் அப்பாவைப் போலவே பொறுமையாக இருந்தார். மற்றவர்கள் அவரை அவமானப்படுத்தியபோது அல்லது அவருடைய கோபத்தைத் தூண்டியபோது பதிலுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. (1 பே. 2:23) கஷ்டங்கள் வந்தபோது, முறுமுறுக்காமல் பொறுமையோடு சகித்துக்கொண்டார். அதனால்தான், “பாவிகள் . . . பேசிய கேவலமான பேச்சுகளையெல்லாம் சகித்துக்கொண்ட அவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 12:2, 3) யெகோவாவின் உதவியோடு நம்மாலும் எப்படிப்பட்ட சோதனையையும் பொறுமையோடு சகித்துக்கொள்ள முடியும்.
14. ஆபிரகாம் காட்டிய பொறுமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (எபிரெயர் 6:15) (படத்தையும் பாருங்கள்.)
14 நாம் எதிர்பார்த்த நேரத்தில் முடிவு வராமல் போயிருந்தால் என்ன செய்வது? ஒருவேளை, முடிவு ரொம்ப நாளுக்கு முன்பே வரும் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இப்போது, முடிவைப் பார்ப்பதற்கு உயிரோடு இருக்க மாட்டோமோ என்று நினைத்து நாம் பயப்படலாம். அப்படியென்றால், தொடர்ந்து பொறுமையாகக் காத்திருக்க எது நமக்கு உதவி செய்யும்? ஆபிரகாமின் உதாரணத்தைப் பார்க்கலாம். 75 வயதிலும் அவர் குழந்தை இல்லாமல் இருந்தார். அப்போது யெகோவா அவரிடம், “நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்” என்று வாக்குக் கொடுத்தார். (ஆதி. 12:1-4) அந்த வாக்கு நிறைவேறுவதை ஆபிரகாம் பார்த்தாரா? முழுமையாகப் பார்க்கவில்லை. யூப்ரடிஸ் ஆற்றைத் தாண்டிப்போய், 25 வருஷங்கள் பொறுமையாகக் காத்திருந்த பிறகு, ஆபிரகாமுக்கு அற்புதமாக ஈசாக்கு பிறந்தார். 60 வருஷங்களுக்குப் பிறகு அவருடைய பேரப்பிள்ளைகளான ஏசாவும் யாக்கோபும் பிறந்தார்கள். (எபிரெயர் 6:15-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவருடைய சந்ததி ஒரு மாபெரும் தேசமாவதையோ, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போவதையோ அவர் கடைசிவரை பார்க்கவில்லை. இருந்தாலும், ஆபிரகாம் யெகோவாவுக்கு விசுவாசமாக இருந்தார், யெகோவாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். (யாக். 2:23) அவர் புதிய உலகத்தில் உயிரோடு வரும்போது, தன்னுடைய விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் எல்லா தேசத்தாருக்கும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதைப் பார்த்து எவ்வளவு புல்லரித்துப்போவார், இல்லையா? (ஆதி. 22:18) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? யெகோவாவின் எல்லா வாக்குறுதிகளுமே நிறைவேறுவதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போது நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், ஆபிரகாமைப் போலவே நாம் பொறுமையாக இருந்தால், யெகோவா இப்போதும் நம்மை ஆசீர்வதிப்பார், புதிய உலகத்தில் இன்னும் அதிகமாகவும் ஆசீர்வதிப்பார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—மாற். 10:29, 30.
15. தனிப்பட்ட படிப்பில் நாம் யாரைப் பற்றியெல்லாம் படிக்கலாம்?
15 பொறுமையாக நடந்துகொண்ட இன்னும் நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (யாக். 5:10) அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் ஆராய்ச்சி செய்து பார்க்கக் கூடாது? b உதாரணத்துக்கு, இஸ்ரவேலின் ராஜாவாக ஆவதற்காக தாவீது சின்ன வயதிலேயே அபிஷேகம் செய்யப்பட்டார். ஆனால், ஆட்சி செய்ய ஆரம்பிக்க அவர் நிறைய வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சிமியோனும் அன்னாளும்கூட, மேசியா வருவதற்காக நிறைய வருஷங்கள் காத்திருந்தார்கள். ஆனால், அதுவரை யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார்கள். (லூக். 2:25, 36-38) இப்படிப்பட்ட பதிவுகளைப் படிக்கும்போது உங்களையே சில கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, ‘பொறுமையாக இருக்க எது இவருக்கு உதவி செய்திருக்கும்? பொறுமையாக இருந்ததால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? இவரைப் போலவே நானும் எப்படிப் பொறுமையாக நடந்துகொள்ளலாம்?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பொறுமை காட்டாதவர்களைப் பற்றிப் படிப்பதும்கூட உங்களுக்கு உதவியாக இருக்கலாம். (1 சா. 13:8-14) அவர்களைப் பற்றிப் படிக்கும்போது, ‘இவர்கள் பொறுமை காட்டாததற்கு எது காரணமாக இருந்திருக்கும்? அதனால் என்னென்ன பின்விளைவுகள் அவர்களுக்கு வந்தது?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள்.
16. பொறுமையாக நடந்துகொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
16 பொறுமையாக நடந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள். நாம் பொறுமையாக இருந்தால், இன்னும் சந்தோஷமாகவும் மன சமாதானத்தோடும் இருப்போம். அதனால், நம் மனதும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொண்டால் அவர்களோடு நமக்கு நல்ல பந்தம் இருக்கும். நம் சபையும் இன்னும் ஒற்றுமையாக இருக்கும். யாராவது நம் கோபத்தைத் தூண்டினால்கூட நாம் அமைதியாக இருந்தால், பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். (சங். 37:8, அடிக்குறிப்பு; நீதி. 14:29) எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் பொறுமையாக இருந்தால் யெகோவா அப்பாவைப் போலவே நடந்துகொள்வோம், அவரிடம் இன்னும் அதிகமாக நெருங்கிப்போவோம்.
17. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்கலாம்?
17 பொறுமை என்பது உண்மையிலேயே ஒரு அழகான குணம். அது எத்தனையோ நன்மைகளைத் தருகிறது. பொறுமையாக நடந்துகொள்வது எப்போதுமே சுலபம் கிடையாதுதான். ஆனால், யெகோவாவின் உதவியோடு தொடர்ந்து அந்தக் குணத்தை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். புதிய உலகத்துக்காக நாம் பொறுமையோடு காத்திருக்கும் இந்தச் சமயத்தில், “யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும், அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (சங். 33:18) அதனால், நாம் எல்லாருமே தொடர்ந்து பொறுமையாக இருக்கத் தீர்மானமாக இருக்கலாம்.
பாட்டு 41 நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
a சாத்தானின் உலகத்தில், பொறுமையாக இருப்பவர்களைப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால், பொறுமை காட்டும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது. இந்தக் கட்டுரையில், பொறுமை காட்டுவது ஏன் முக்கியம் என்றும், நாம் எப்படி இன்னும் பொறுமையாக நடந்துகொள்ளலாம் என்றும் தெரிந்துகொள்வோம்.