படிப்புக் கட்டுரை 33
தானியேலிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
“கடவுளுக்கு நீ மிகவும் பிரியமானவன்.”—தானி. 9:23.
பாட்டு 73 தைரியத்தைத் தாருங்கள்
இந்தக் கட்டுரையில்... a
1. பாபிலோன் அதிகாரிகளுக்கு தானியேலை ஏன் பிடித்துப்போய்விட்டது?
தானியேலை ஒரு போர்க் கைதியாக பாபிலோனியர்கள் பிடித்துக்கொண்டு போனபோது அவருக்குச் சின்ன வயதுதான். அவருடைய சொந்த ஊரைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருந்த பாபிலோனுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனார்கள். அவர் இளைஞராக இருந்தாலும், பாபிலோன் அதிகாரிகளுக்கு அவரை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. ஏன்? அவர்கள் தானியேலின் “வெளித்தோற்றத்தை” பார்த்தார்கள். (1 சா. 16:7) அதாவது, அவர் ‘எந்தக் குறையும் இல்லாமல், அழகாக’ இருப்பதைப் பார்த்தார்கள். அதோடு, அவர் செல்வாக்கான குடும்பத்திலிருந்து வந்ததையும் பார்த்தார்கள். அதனால்தான், ராஜாவின் அரண்மனையிலேயே சேவை செய்வதற்காக அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள்.—தானி. 1:3, 4, 6.
2. தானியேலைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார்? (எசேக்கியேல் 14:14)
2 யெகோவாவுக்கும் தானியேலைப் பிடித்திருந்தது. ஆனால், அவர் அழகாக இருந்ததாலோ அரண்மனையில் சேவை செய்ததாலோ அல்ல, அவருடைய மனதையும் குணத்தையும் பார்த்துதான் யெகோவாவுக்கு அவரைப் பிடித்திருந்தது. சொல்லப்போனால், நோவாவையும் யோபுவையும் போலவே தானியேல் நீதியாக நடப்பதாக யெகோவா சொன்னபோது தானியேலுக்குக் கிட்டத்தட்ட 20 வயதுதான். ஆனாலும், எத்தனையோ வருஷங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த நோவாவுக்கும் யோபுவுக்கும் சமமாக தானியேலைப் பற்றி யெகோவா பேசினார். (ஆதி. 5:32; 6:9, 10; யோபு 42:16, 17; எசேக்கியேல் 14:14-ஐ வாசியுங்கள்.) அந்த வயதில் மட்டுமல்ல, தானியேல் வாழ்ந்த காலமெல்லாம் யெகோவா அவரை உயிருக்கு உயிராக நேசித்தார்.—தானி. 10:11, 19.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
3 எந்த இரண்டு குணங்களைக் காட்டியதால் தானியேல் யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், அந்த ஒவ்வொரு குணத்தைப் பற்றியும், எந்தெந்த சூழ்நிலைகளில் அவர் அந்தக் குணங்களைக் காட்டினார் என்பதைப் பற்றியும் பார்ப்போம். அதன் பிறகு, அந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள தானியேலுக்கு எது உதவியது என்று பார்ப்போம். கடைசியாக, நாம் எப்படி அவரைப் போலவே நடந்துகொள்ளலாம் என்று பார்ப்போம். இந்தக் கட்டுரை முக்கியமாக இளைஞர்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருந்தாலும், நாம் எல்லாருமே தானியேலின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
தானியேலைப் போல் தைரியமாக நடந்துகொள்ளுங்கள்
4. தானியேல் எப்படித் தைரியத்தைக் காட்டினார்? ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
4 தைரியமாக இருப்பவர்களுக்குப் பயமே வராது என்று சொல்ல முடியாது. பயமாக இருந்தாலும், அவர்கள் சரியானதைச் செய்வார்கள். தானியேலுக்கு சின்ன வயதாக இருந்தாலும், அவர் ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார். அப்படிப்பட்ட இரண்டு சம்பவங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம். முதல் சம்பவம், எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நடந்திருக்கலாம். பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு, பிரமாண்டமான ஒரு சிலையைப் பற்றிய பயங்கரமான ஒரு கனவு வந்தது. அந்தக் கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் எல்லா ஞானிகளையும் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டினார், தானியேலையும் சேர்த்துதான்! (தானி. 2:3-5) தானியேல் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால், நிறைய பேருடைய உயிரே போய்விடும் ஆபத்து இருந்தது! “அதனால் தானியேல் ராஜாவிடம் போய், கனவை விளக்குவதற்கு அவகாசம் கேட்டார்.” (தானி. 2:16) அதற்கு நிறைய தைரியமும் விசுவாசமும் அவருக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால், அதற்கு முன்பு தானியேல் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதாக பைபிளில் எந்தவொரு பதிவும் இல்லை. அதனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ b ஆகிய நண்பர்களிடம் போய், “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (தானி. 2:18) யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். யெகோவாவின் உதவியோடு நேபுகாத்நேச்சாரின் கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார். அதனால், தானியேலும் அவருடைய நண்பர்களும் உயிர்தப்பினார்கள்.
5. தானியேலின் தைரியத்துக்கு வேறு என்ன சோதனை வந்தது?
5 பிரமாண்டமான சிலை பற்றிய கனவுக்கு தானியேல் அர்த்தம் சொல்லி கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, அவருடைய தைரியத்துக்கு மறுபடியும் சோதனை வந்தது. நேபுகாத்நேச்சாருக்கு இன்னொரு பயங்கரமான கனவு வந்தது. அந்தக் கனவில் ரொம்பப் பெரிய ஒரு மரத்தை அவர் பார்த்தார். அந்தக் கனவின் அர்த்தத்தை தானியேல் ரொம்பத் தைரியமாக ராஜாவிடம் சொன்னார். அதுவும், கொஞ்ச நாளுக்கு ராஜா பைத்தியமாக இருப்பார்... அவருடைய ஆட்சி பறிபோகும்... என்றெல்லாம்கூடச் சொன்னார். (தானி. 4:25) தானியேல் சதி செய்கிறார் என்று நினைத்து ராஜா அவரைக் கொன்றுபோடுவதற்கு ரொம்ப நேரம் ஆகியிருக்காது. ஆனால், தானியேல் அதற்கெல்லாம் பயப்படாமல் கனவின் அர்த்தத்தைத் தைரியமாகச் சொன்னார்.
6. வாழ்நாளெல்லாம் தைரியமாக இருக்க தானியேலுக்கு எது உதவி செய்திருக்கலாம்?
6 தைரியமாக இருக்க தானியேலுக்கு எதுவெல்லாம் உதவி செய்திருக்கலாம்? சின்ன வயதில், அவருடைய அப்பாவும் அம்மாவும் வைத்த முன்மாதிரி அவருக்குக் கண்டிப்பாக உதவி செய்திருக்கும். இஸ்ரவேலில் இருந்த பெற்றோருக்கு யெகோவா கொடுத்த கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து, அவருடைய சட்டங்களைத் தங்கள் பிள்ளைக்குச் சொல்லித்தந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. (உபா. 6:6-9) தானியேல், பத்துக் கட்டளைகள் போன்ற முக்கியமான சில கட்டளைகளை மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டளைகளையுமே நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருந்தார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று தெரிந்து வைத்திருந்தார். c (லேவி. 11:4-8; தானி. 1:8, 11-13) கடவுளுடைய மக்களின் வரலாறும் தானியேலுக்கு அத்துப்படியாக இருந்தது. அதனால், யெகோவாவின் சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது என்ன நடந்தது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. (தானி. 9:10, 11) அதுமட்டுமல்ல, யெகோவாவும் அவருடைய பலம்படைத்த தூதர்களும் எப்போதுமே தனக்கு உதவி செய்வார்கள் என்பதை தானியேல் தன் வாழ்க்கையில் நிறைய தடவை கண்கூடாகப் பார்த்திருந்தார்.—தானி. 2:19-24; 10:12, 18, 19.
7. தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேறு எதுவெல்லாம் தானியேலுக்கு உதவியது? (படத்தையும் பாருங்கள்.)
7 கடவுளுடைய தீர்க்கதரிசிகள் எழுதிய விஷயங்களை தானியேல் ஆழமாகப் படித்தார், எரேமியா எழுதிய தீர்க்கதரிசனங்களைக்கூடப் படித்தார். அதனால்தான், பல வருஷங்களாக பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்குச் சீக்கிரத்தில் விடுதலை கிடைக்கப்போகிறது என்ற விஷயத்தை அவர் பிற்பாடு புரிந்துகொண்டார். (தானி. 9:2) பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப் பார்த்தது, யெகோவாமேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை! கடவுள்மேல் பலமான நம்பிக்கை வைப்பவர்களால் அசாதாரணமான தைரியத்தைக் காட்ட முடியும்! (ரோமர் 8:31, 32, 37-39-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) எல்லாவற்றையும்விட முக்கியமாக, தானியேல் அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (தானி. 6:10) தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டார், தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி யெகோவாவிடம் உதவி கேட்டார். (தானி. 9:4, 5, 19) தானியேலும் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனுஷராகத்தான் இருந்தார். அதனால், பிறக்கும்போதே அவர் தைரியத்தோடு பிறக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும்... அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமும்... அவர்மேல் நம்பிக்கை வைப்பதன் மூலமும்... அந்தக் குணத்தை அவர் வளர்த்துக்கொண்டார்.
8. நாம் எப்படித் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம்?
8 தைரியத்தை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? தைரியமாக இருக்கச் சொல்லி நம் அப்பா அம்மா நமக்குச் சொல்லலாம். ஆனால், ஏதோவொரு பரம்பரை சொத்துபோல் அந்தக் குணத்தை அவர்களால் நமக்குக் கொடுக்க முடியாது. தைரியத்தை வளர்த்துக்கொள்வது ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வதைப் போன்றது. சொல்லித்தருபவர் ஒரு விஷயத்தை எப்படிச் செய்கிறார் என்பதை நன்றாகப் பார்த்து அவரைப் போலவே செய்வதன் மூலம் நாம் ஒரு திறமையைக் கற்றுக்கொள்ளலாம். அதேபோல், மற்றவர்கள் எப்படித் தைரியத்தை காட்டுகிறார்கள் என்பதை நன்றாகக் கவனித்து அவர்களைப் போலவே நடந்துகொள்வதன் மூலம் நாமும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். அப்படியென்றால், தானியேலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? அவரைப் போலவே நாமும் கடவுளுடைய வார்த்தையை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவிடம் அடிக்கடி மனம்விட்டுப் பேசுவதன் மூலம் அவரோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு உதவி செய்வாரா என்று சந்தேகப்படாமல் எப்போதும் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான், நம் விசுவாசம் சோதிக்கப்படும்போது நம்மால் தைரியத்தைக் காட்ட முடியும்.
9. தைரியமாக இருப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
9 தைரியமாக நடந்துகொள்வதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பென் (Ben) என்ற இளைஞருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். ஜெர்மனியில் அவர் படித்த ஸ்கூலில் இருந்த எல்லாருமே பரிணாமத்தை நம்பினார்கள். கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் சொல்வது வெறும் கட்டுக்கதை என்று அவர்கள் நினைத்தார்கள். ஒருநாள், கடவுள்தான் உயிரைப் படைத்தார் என்று பென் ஏன் நம்புகிறார் என்பதை க்ளாஸுக்கு முன்னால் நின்று விளக்கும்படி அவருடைய டீச்சர் சொன்னார். பென் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி எல்லாருக்கும் முன்னால் தைரியமாகப் பேசினார். அதனால் என்ன நடந்தது? “நான் சொன்னதையெல்லாம் என் டீச்சர் நன்றாகக் கவனித்துக் கேட்டார். அதன் பிறகு, நான் வைத்திருந்த குறிப்புகளை வாங்கி, அதை ஜெராக்ஸ் எடுத்து, க்ளாஸில் இருந்த ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்” என்று பென் சொல்கிறார். அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள்? “நிறைய பேர் நான் சொன்னதை நியாயமாக யோசித்துப் பார்த்தார்கள், சொல்லப்போனால் என்னைப் பாராட்டினார்கள்” என்று பென் சொல்கிறார். பென்னின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? தைரியமாக நடந்துகொள்கிறவர்கள் மற்றவர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பார்கள். அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் நெருங்கிவர நல்மனம் உள்ளவர்களுக்கு அவர்களால் உதவி செய்யவும் முடியும். தைரியத்தை வளர்த்துக்கொள்வதால் எவ்வளவு நன்மைகள், பார்த்தீர்களா?
தானியேலைப் போல் உண்மையாக இருங்கள்
10. உண்மைத்தன்மை என்றால் என்ன?
10 பைபிளில், “உண்மைத்தன்மை” அல்லது “மாறாத அன்பு” என்பதற்கான எபிரெய வார்த்தை அன்பான, பாசமான ஒரு பிணைப்பைக் குறிக்கிறது. தன்னை வணங்குபவர்கள்மேல் கடவுள் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்வதற்காக இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுளை வணங்குபவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டும் அன்பைப் பற்றிச் சொல்வதற்காகவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (2 சா. 9:6, 7) காலம் போகப்போக நம் உண்மைத்தன்மை அதிகமாகலாம். தானியேலின் விஷயத்தில் இது எப்படி நடந்தது என்று பார்க்கலாம்.
11. வயதான காலத்தில் தானியேலின் உண்மைத்தன்மைக்கு என்ன சோதனை வந்தது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)
11 தானியேல் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாரா மாட்டாரா என்பதைக் காட்ட வேண்டிய சூழ்நிலைகள் அவருடைய வாழ்க்கையில் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் 90 வயதைத் தாண்டியிருந்த சமயத்தில்தான் எல்லாவற்றையும்விட பெரிய சோதனை ஒன்று வந்தது. அப்போது, மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனைக் கைப்பற்றியிருந்தார்கள். தரியு ராஜாதான் அதை ஆட்சி செய்துகொண்டிருந்தார். ராஜாவின் உயர் அதிகாரிகளுக்கு தானியேலை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் வணங்கிய கடவுளையும் அவர்கள் மதிக்கவில்லை. அதனால், தானியேலைக் கொலை செய்ய ஒரு சதி செய்தார்கள். ஒரு கட்டளையைப் பிறப்பித்து அதில் கையெழுத்துப் போடச் சொல்லி ராஜாவிடம் சொன்னார்கள். அந்தச் சோதனையில், தானியேல் கடவுளுக்கு உண்மையாக இருப்பாரா அல்லது ராஜாவுக்கு உண்மையாக இருப்பாரா என்பதைக் காட்ட வேண்டியிருந்தது. ராஜாவுக்கு உண்மையாக இருப்பதற்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கும் தானியேல் ஒரேவொரு விஷயத்தைத்தான் செய்ய வேண்டியிருந்தது. 30 நாட்களுக்கு அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்யாமல் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், தானியேல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. யெகோவாவுக்குத்தான் அவர் உண்மையாக இருந்தார். அதனால், அவரை சிங்கக் குகையில் போட்டார்கள். ஆனால், சிங்கங்களின் வாயிலிருந்து யெகோவா தானியேலைக் காப்பாற்றினார். இப்படி, தானியேல் தனக்கு உண்மையாக இருந்ததற்குப் பலன் கொடுத்தார். (தானி. 6:12-15, 20-22) தானியேலைப் போலவே நாமும், எல்லா சந்தர்ப்பத்திலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட உண்மைத்தன்மையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
12. தானியேல் எல்லா சந்தர்ப்பத்திலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததற்கு என்ன காரணம்?
12 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் அவரை நாம் உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். தானியேல் அசைக்க முடியாத உண்மைத்தன்மையைக் காட்டியதற்குக் காரணம், அவர் யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தார். தானியேல் எப்படி அந்தளவு அன்பை யெகோவாமேல் வளர்த்துக்கொண்டார்? யெகோவாவின் குணங்களைப் பற்றியும் அந்தக் குணங்களை அவர் எப்படியெல்லாம் காட்டினார் என்பதைப் பற்றியும் தானியேல் யோசித்துப் பார்த்தார் என்பதில் சந்தேகமே இல்லை. (தானி. 9:4) யெகோவா அவருடைய மக்களுக்காகவும் தனக்காகவும் செய்த எல்லா நல்ல விஷயங்களையும் பற்றிக்கூட தானியேல் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்.—தானி. 2:20-23; 9:15, 16.
13. (அ) இளைஞர்களின் உண்மைத்தன்மைக்கு என்னென்ன சோதனைகள் வருகின்றன? ஒரு உதாரணம் சொல்லுங்கள். (படத்தையும் பாருங்கள்.) (ஆ) வீடியோவில் நாம் பார்த்தபடி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களை யெகோவாவின் சாட்சிகள் ஆதரிப்பார்களா என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
13 தானியேல் இருந்த அதே சூழ்நிலையில்தான் இன்று இருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றியிருக்கும் நபர்கள் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. கடவுள்பக்தி இருக்கும் யாரையுமே அந்த நபர்களுக்குப் பிடிப்பதில்லை. அவர்களில் சிலர், நம் இளைஞர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிரேயம் என்ற இளைஞரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அவருடைய டீச்சர் க்ளாஸில் இருந்த எல்லாரிடமும் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘ஒரு ஃப்ரெண்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக உங்களிடம் வந்து சொன்னால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். அதன் பிறகு, ‘அந்த ப்ரெண்டுக்கு யாரெல்லாம் சப்போர்ட் பண்ணுவீர்களோ அவர்கள் எல்லாரும் க்ளாஸுக்கு ஒரு பக்கம் நில்லுங்கள். யாரெல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டீர்களோ அவர்கள் எல்லாரும் இன்னொரு பக்கம் நில்லுங்கள்’ என்று டீச்சர் சொன்னார். கிரேயமும், சாட்சியாக இருந்த இன்னொரு பையனும் தவிர, மற்ற எல்லாருமே அந்த ப்ரெண்டுக்கு சப்போர்ட் செய்யும் பக்கத்தில் போய் நின்றார்கள். அடுத்து நடந்ததுதான் கிரேயமுக்கு ஒரு பெரிய சோதனையாக இருந்தது. அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பாரா மாட்டாரா என்பதைக் காட்ட வேண்டியிருந்தது. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “அந்த ஒருமணிநேர க்ளாஸ் முடியும்வரை, மற்ற பசங்களும் டீச்சரும் சேர்ந்து எங்கள் இரண்டு பேரையும் கேவலமாகப் பேசி அசிங்கப்படுத்தினார்கள். என்னுடைய நம்பிக்கையைப் பற்றி அமைதியாகவும் நியாயமாகவும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நான் ரொம்ப முயற்சி செய்தேன். ஆனால் நான் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்கவில்லை” என்று சொல்கிறார். இந்தச் சோதனை வந்தபோது கிரேயமுக்கு எப்படி இருந்தது? “எல்லாரும் சேர்ந்து என்னைக் கண்டபடி பேசியது எனக்குப் பிடிக்கவில்லைதான். ஆனால், நான் யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததையும் என் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் அதைப் பற்றி அவர்களிடம் பேசியதையும் நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று அவர் சொல்கிறார். d
14. எல்லா சந்தர்ப்பத்திலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு உதவும் ஒரு விஷயம் என்ன?
14 தானியேலைப் போலவே நாமும் யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தால், எல்லா சந்தர்ப்பத்திலும் அவருக்கு உண்மையாக இருப்போம். அப்படிப்பட்ட அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்வதற்கு யெகோவாவின் குணங்களைப் பற்றி நாம் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, அவருடைய படைப்புகளைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். (ரோ. 1:20) யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் அதிகமாக வேண்டுமென்றால், “யாருடைய கைவண்ணம்?” என்ற தலைப்பில் வரும் சின்னச் சின்னக் கட்டுரைகளைப் படிக்கலாம் அல்லது அந்தத் தலைப்பில் வரும் வீடியோக்களைப் பார்க்கலாம். உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறு புத்தகத்தையும், உயிர் படைக்கப்பட்டதா? என்ற ஆங்கில சிறு புத்தகத்தையும்கூட நீங்கள் பார்க்கலாம். டென்மார்க்கில் இருக்கும் எஸ்தர் என்ற இளம் சகோதரி இந்தப் பிரசுரங்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “அதிலெல்லாம் விஷயங்களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள். அந்தச் சின்ன புத்தகங்களில், இதைத்தான் நம்ப வேண்டும் என்று அவர்கள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, உண்மைகளை மட்டும் சொல்கிறார்கள், அவற்றை நம்புவதா வேண்டாமா என்று நாமே முடிவு செய்ய விட்டுவிடுகிறார்கள்.” முன்பு நாம் பார்த்த பென் இப்படிச் சொல்கிறார்: “இதெல்லாமே என் விசுவாசத்தை ரொம்பப் பலப்படுத்தியது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை ஆதாரத்தோடு எனக்குப் புரிய வைத்தது.” இந்தப் பிரசுரங்களை நீங்களும் ஆராய்ந்து பார்த்தால், பைபிள் சொல்லும் இந்த வார்த்தைகள் உண்மை என்பதைக் கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள்: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்.”—வெளி. 4:11. e
15. யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள இன்னொரு வழி என்ன?
15 யெகோவாமேல் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொள்ள இன்னொரு வழி, அவருடைய மகன் இயேசுவின் வாழ்க்கையை நன்றாக ஆராய்ந்து பார்ப்பதுதான். ஜெர்மனியில் இருக்கும் சமீரா என்ற இளம் சகோதரி இதைத்தான் செய்தார். “இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்வதன் மூலமாக நான் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார். சின்னப் பிள்ளையாக இருந்தபோது, யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதையும், அவருடைய நண்பராக முடியும் என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இயேசுவை ஒரு நிஜமான நபராக அவரால் பார்க்க முடிந்தது. “எனக்கு இயேசுவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அவர் எல்லாரோடும் அன்பாகப் பழகினார், பிள்ளைகள்மேல் பாசத்தைக் கொட்டினார்” என்று அவர் சொல்கிறார். இயேசுவைப் பற்றித் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, யெகோவாவிடம் அவர் நெருங்கிப் போனார். அது எப்படி? சமீரா இப்படிச் சொல்கிறார்: “இயேசு எல்லா விஷயத்திலும் தன் அப்பாவைப் போலவே நடந்துகொள்கிறார் என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன். குணத்தில் அவர்கள் இரண்டு பேரும் ஒரே மாதிரி. சொல்லப்போனால், இயேசுவை யெகோவா இந்தப் பூமிக்கு அனுப்பியதற்கு ஒரு காரணமே, இயேசு மூலமாக மனிதர்கள் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்று புரிந்துகொண்டேன்.” (யோவா. 14:9) யெகோவாவோடு இன்னும் நெருக்கமாவதற்கு நீங்கள் ஆசைப்பட்டால், இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஏன் நிறைய நேரம் செலவு செய்யக் கூடாது? அப்படிச் செய்தால், யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும், அவருக்கு எப்போதுமே உண்மையாகவும் இருப்பீர்கள்.
16. உண்மையாக இருப்பவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? (சங்கீதம் 18:25; மீகா 6:8)
16 ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருப்பவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள், அதுவும் எப்போதுமே அப்படி இருப்பார்கள்! (ரூத் 1:14-17) யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு மனநிம்மதியும் மனசமாதானமும் கிடைக்கும். ஏன்? ஏனென்றால், அவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்கு அவரும் உண்மையாக இருப்பார் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 18:25-ஐயும் மீகா 6:8-ஐயும் வாசியுங்கள்.) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எல்லாவற்றையும் படைத்த சர்வவல்லமையுள்ள கடவுளே நம்முடைய நெருங்கிய நண்பராக இருக்க ஆசைப்படுகிறார்! அவர் நம் நண்பராக இருக்கும்போது, எந்தப் பிரச்சினையாலும்... எந்த எதிரியாலும்... அந்த நட்பை முறிக்க முடியாது; சாவே வந்தாலும் அந்த நட்பை முறிக்க முடியாது. (தானி. 12:13; லூக். 20:37, 38; ரோ. 8:38, 39) அப்படியென்றால், தானியேலைப் போல நாமும் எப்போதுமே யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம்!
தானியேலிடமிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்
17-18. தானியேலிடமிருந்து நாம் வேறு எதையெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?
17 இந்தக் கட்டுரையில், தானியேலின் இரண்டு குணங்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்தோம். ஆனால், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, தானியேலுக்கு யெகோவா நிறைய தரிசனங்களையும் கனவுகளையும் தந்தார். அதோடு, தீர்க்கதரிசனங்களுக்கு அர்த்தம் சொல்லும் திறமையைக் கொடுத்தார். அதில் நிறைய தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. மற்ற தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சில விவரங்களைச் சொல்கின்றன. பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களுமே அந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
18 அடுத்த கட்டுரையில், தானியேல் எழுதிய இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் பார்ப்போம். நாம் சிறியவர்களோ பெரியவர்களோ, அந்தத் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொண்டால் இப்போது ஞானமான முடிவுகளை எடுக்க முடியும். அதுமட்டுமல்ல, அந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் தைரியத்தையும் உண்மைத்தன்மையையும் பலப்படுத்தும். அதனால், சீக்கிரத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சந்திக்க நம்மால் தயாராக இருக்க முடியும்.
பாட்டு 119 நமக்குத் தேவை விசுவாசம்
a யெகோவாவை வணங்கும் இளம் பிள்ளைகளுக்கு நிறைய சவால்கள் வருகின்றன. அந்தச் சமயங்களில் அவர்கள் தைரியமாக இருக்க வேண்டியிருக்கிறது, யெகோவாவுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவதால் அவர்களோடு படிப்பவர்கள் அவர்களைக் கிண்டல் செய்யலாம். கடவுளை வணங்குவதாலும் அவர் சொல்வதுபோல் வாழ்வதாலும்கூட மற்ற பிள்ளைகள் அவர்களைக் கேலி செய்யலாம். ஆனால், தானியேல் தீர்க்கதரிசியைப் போல் தைரியமாகவும் உண்மையாகவும் யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்கள்தான் நிஜமாகவே புத்திசாலிகள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள்.
b இந்தப் பெயர்கள், பாபிலோனியர்கள் அவர்களுக்கு வைத்தது.
c பாபிலோனியர்களின் உணவை தானியேல் அசுத்தமாக நினைத்ததற்கு மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம்: (1) திருச்சட்டம் தடை செய்த விலங்குகளின் கறியாக அது இருந்திருக்கலாம். (உபா. 14:7, 8) (2) அதன் இரத்தம் சரியாக நீக்கப்படாமல் இருந்திருக்கலாம். (லேவி. 17:10-12) (3) அந்த உணவைச் சாப்பிடுவது ஒரு பொய்த் தெய்வ வணக்கத்தின் பாகம் என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம்.—லேவியராகமம் 7:15-ஐயும், 1 கொரிந்தியர் 10:18, 21, 22-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
d “உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும்” என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.
e யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பை இன்னும் அதிகமாக்க, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தையும் நீங்கள் படித்துப் பார்க்கலாம். யெகோவாவின் குணங்களைப் பற்றியும், அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவும்.