படிப்புக் கட்டுரை 36
தேவையானதைச் சுமந்துகொண்டு, மற்றதை உதறித்தள்ளுங்கள்
“பாரமான எல்லாவற்றையும் . . . உதறித்தள்ளிவிட்டு நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக.”—எபி. 12:1.
பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு
இந்தக் கட்டுரையில்... a
1. எபிரெயர் 12:1 சொல்வதுபோல், வாழ்க்கை என்ற ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்தவர்களாக நம் வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயத்தைப் போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. வெற்றிக்கோட்டை அடைகிறவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு என்ற பரிசு கிடைக்கும். (2 தீ. 4:7, 8) நாம் தொடர்ந்து இந்த ஓட்டத்தில் ஓடுவதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஏனென்றால், வெற்றிக்கோடு ரொம்பப் பக்கத்தில் இருக்கிறது. வாழ்க்கை என்ற ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று இந்த ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடி முடித்த அப்போஸ்தலன் பவுல் சொல்லியிருக்கிறார். அதாவது, “பாரமான எல்லாவற்றையும் . . . உதறித்தள்ளிவிட்டு நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையோடு ஓடுவோமாக” என்று சொல்லியிருக்கிறார்.—எபிரெயர் 12:1-ஐ வாசியுங்கள்.
2. ‘பாரமான எல்லாவற்றையும் . . . உதறித்தள்ளுவது’ என்றால் என்ன?
2 ‘பாரமான எல்லாவற்றையும் . . . உதறித்தள்ள’ வேண்டும் என்று பவுல் எழுதியபோது, ஒரு கிறிஸ்தவர் எந்தச் சுமையையும் சுமக்கக் கூடாதென்று சொல்லவந்தாரா? இல்லை! அதற்குப் பதிலாக, தேவையில்லாத பாரங்கள் எல்லாவற்றையும்தான் தூக்கியெறியச் சொன்னார். இதுபோன்ற பாரங்கள் நமக்குத் தடையாக இருக்கலாம், நம்மைச் சோர்ந்துபோக வைத்துவிடலாம். நாம் சகித்திருக்க வேண்டுமென்றால், தேவையில்லாத பாரங்கள் நம்மிடம் ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடித்து அதை உடனடியாகத் தூக்கியெறிய வேண்டும். அதேசமயத்தில், நாம் சுமக்க வேண்டிய சுமைகளை ஒதுக்கித்தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தப் பந்தயத்தில் ஓடும் தகுதியை நாம் இழந்துவிடுவோம். (2 தீ. 2:5) அப்படியென்றால், நாம் என்னென்ன சுமைகளைச் சுமக்க வேண்டும்?
3. (அ) கலாத்தியர் 6:5 சொல்வதுபோல், நாம் எதைச் சுமக்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம், ஏன்?
3 கலாத்தியர் 6:5-ஐ வாசியுங்கள். நாம் சுமக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி பவுல் சொன்னார். “ஒவ்வொருவனும் அவனவன் பாரத்தை சுமப்பான்” என்று அவர் சொன்னார். கடவுளுக்குமுன் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பைப் பற்றி பவுல் பேசிக்கொண்டிருந்தார். இதை அவரவர்தான் சுமக்க வேண்டும். ‘அவரவர் சுமக்க வேண்டிய பாரத்தில்’ என்னவெல்லாம் இருக்கின்றன என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதை நாம் எப்படிச் சுமக்கலாம் என்றும் பார்ப்போம். அதோடு, தேவையில்லாத பாரங்களை நாம் சுமந்துகொண்டிருக்கிறோமா என்று கண்டுபிடித்து, அவற்றை எப்படி உதறித்தள்ளலாம் என்று தெரிந்துகொள்வோம். சுமக்க வேண்டிய சுமைகளைச் சுமந்து, தேவையில்லாத பாரங்களை உதறித்தள்ளுவது, வாழ்க்கை என்ற ஓட்டத்தை நல்லபடியாக ஓடி முடிக்க நமக்கு உதவும்.
நாம் சுமக்க வேண்டிய சுமைகள்
4. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது நாம் கொடுத்த உறுதிமொழி ஏன் ஒரு பாரம் அல்ல? (படத்தையும் பாருங்கள்.)
4 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது நாம் கொடுத்த உறுதிமொழி. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது, அவரைத்தான் வணங்குவோம்... அவருடைய விருப்பத்தைத்தான் செய்வோம்... என்று அவருக்கு உறுதிமொழி கொடுத்திருக்கிறோம். அந்த உறுதிமொழியை நாம் காப்பாற்ற வேண்டும். அதைக் காப்பாற்றுவது உண்மையிலேயே ஒரு பெரிய பொறுப்புதான். ஆனால், அது ஒரு பாரம் கிடையாது. சொல்லப்போனால், நாம் யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். (வெளி. 4:11) யெகோவா நமக்குள் ஆன்மீகத் தேவையை வைத்திருக்கிறார். அதோடு, தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார். அதனால், அவரிடம் நம்மால் நெருங்கிப்போக முடியும், அவருடைய விருப்பத்தைச் சந்தோஷமாகச் செய்ய முடியும். (சங். 40:8) எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவின் விருப்பத்தைச் செய்து அவருடைய மகன் காட்டும் வழியில் நடந்தால், நமக்கு “புத்துணர்ச்சி கிடைக்கும்.”—மத். 11:28-30.
5. அர்ப்பணிப்பின்போது கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? (1 யோவான் 5:3)
5 இந்தச் சுமையை நீங்கள் எப்படிச் சுமக்கலாம்? இதற்கு இரண்டு விஷயங்கள் உதவி செய்யும். முதலில், யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பைத் தொடர்ந்து அதிகமாக்குங்கள். இதுவரை யெகோவா உங்களுக்கு என்னென்ன நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார், எதிர்காலத்தில் என்னென்ன ஆசீர்வாதங்களைத் தரப்போகிறார் என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். அப்போது, அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும். அந்த அன்பு அதிகமாக அதிகமாக, அவருக்குக் கீழ்ப்படிவது உங்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும். (1 யோவான் 5:3-ஐ வாசியுங்கள்.) இரண்டாவதாக, இயேசுவைப் போலவே நடந்துகொள்ளுங்கள். இயேசு யெகோவாவின் விருப்பத்தை முழுமையாகச் செய்து முடித்தார். ஏனென்றால், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். அதோடு, தனக்குக் கிடைக்கப்போகும் பலனை எப்போதும் தன் கண்முன் வைத்திருந்தார். (எபி. 5:7; 12:2) இயேசுவைப் போலவே நீங்களும் யெகோவாவிடம் பலம் கேட்டு ஜெபம் செய்யுங்கள். அதோடு, முடிவில்லாத வாழ்வு என்ற நம்பிக்கையை எப்போதும் உங்கள் கண்முன் வையுங்கள். யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பு அதிகமாகும்போதும், அவருடைய மகனைப் போலவே நீங்கள் நடந்துகொள்ளும்போதும், அர்ப்பணிப்பின்போது யெகோவாவுக்குக் கொடுத்த உறுதிமொழியை உங்களால் காப்பாற்ற முடியும்.
6. குடும்பத்தில் நமக்கு இருக்கும் பொறுப்புகளை நாம் ஏன் செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
6 நம் குடும்பப் பொறுப்புகள். வாழ்க்கை என்ற ஓட்டத்தில், நம் குடும்பத்தில் இருப்பவர்களைவிட யெகோவாவையும் இயேசுவையும்தான் நாம் அதிகமாக நேசிக்க வேண்டும். (மத். 10:37) அதற்காக, நம் குடும்பப் பொறுப்புகள் யெகோவாவையும் இயேசுவையும் சந்தோஷப்படுத்துவதற்கு ஏதோ தடையாக இருப்பதுபோல் நினைத்துக்கொண்டு அந்தப் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிடலாம் என்ற அர்த்தம் கிடையாது. உண்மையில், யெகோவாவும் இயேசுவும் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், குடும்பப் பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும். (1 தீ. 5:4, 8) அப்படிச் செய்யும்போது, நாம் இன்னும் அதிக சந்தோஷமாக இருப்போம். ஏனென்றால், கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளும்போது... பெற்றோர் பிள்ளைகள்மேல் பாசம் காட்டி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போது... பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியும்போது... குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கும் என்று யெகோவாவுக்குத் தெரியும்!—எபே. 5:33; 6:1, 4.
7. குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை நீங்கள் எப்படிச் செய்யலாம்?
7 இந்தச் சுமையை நீங்கள் எப்படிச் சுமக்கலாம்? நீங்கள் கணவனோ, மனைவியோ, பிள்ளையோ, யாராக இருந்தாலும் சரி, பைபிள் கொடுக்கும் ஞானமான ஆலோசனைகளை நம்புங்கள். உங்கள் மனதுக்கு அப்போதைக்குத் தோன்றுவது போலவோ, உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் போலவோ, குடும்ப நல ஆலோசகர்கள் சொல்வது போலவோ செய்தால் போதும் என்று நினைக்காதீர்கள். (நீதி. 24:3, 4) பைபிள் பிரசுரங்களை நன்றாகப் பயன்படுத்துங்கள். பைபிள் நியமங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதற்கான நடைமுறையான ஆலோசனைகள் அவற்றில் இருக்கும். உதாரணத்துக்கு, “குடும்ப ஸ்பெஷல்” என்ற தொடர் கட்டுரைகளில் தம்பதிகளுக்கு... பெற்றோருக்கு... டீனேஜர்களுக்கு... என்று விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் இருக்கின்றன. இன்று அவர்களுக்கு வரும் பிரச்சினைகளை அவர்கள் எப்படிச் சமாளிக்கலாம் என்று அவை சொல்கின்றன. b பைபிள் சொல்கிறபடி செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருங்கள், உங்கள் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அப்படிச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை! நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும், யெகோவாவும் உங்களை ஆசீர்வதிப்பார்.—1 பே. 3:1, 2.
8. நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை எப்படியெல்லாம் பாதிக்கலாம்?
8 நாம் எடுக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வது. சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தை யெகோவா நமக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். நல்ல தீர்மானங்களை எடுப்பதால் வரும் நன்மைகளை நாம் அனுபவிக்க வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதேசமயத்தில், கெட்ட தீர்மானங்களால் வரும் பின்விளைவுகளிலிருந்து யெகோவா நம்மைக் காப்பாற்றுவது இல்லை. (கலா. 6:7, 8) அதனால், தவறான முடிவுகளாலோ, யோசிக்காமல் பேசுவதாலோ, அவசரப்பட்டு எதையாவது செய்வதாலோ வரும் பின்விளைவுகளை நாம் சந்தித்தாக வேண்டும். நாம் செய்யும் தவறுகளால் நம் மனசாட்சி குத்தலாம். ஆனால், நாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால், நாம் செய்த தவறுகளை ஒத்துக்கொள்வோம்... அவற்றைச் சரிசெய்துகொள்வோம்... மறுபடியும் அதே தவறுகளைச் செய்யாதபடி பார்த்துக்கொள்வோம். இதையெல்லாம் செய்தால், வாழ்வுக்கான ஓட்டத்தில் நாம் எப்போதுமே நிலைத்திருப்போம்.
9. நீங்கள் தவறான ஒரு முடிவை எடுத்திருந்தால் என்ன செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)
9 இந்தச் சுமையை நீங்கள் எப்படிச் சுமக்கலாம்? நீங்கள் எடுத்த தவறான முடிவை உங்களால் மாற்ற முடியாது என்றால், இப்போது இருக்கும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள். நடந்ததை உங்களால் மாற்ற முடியாது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்தது சரிதான் என்று நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் எடுத்த தவறான முடிவுக்கு உங்கள் மீதோ மற்றவர்கள் மீதோ பழிபோடாதீர்கள். இதெல்லாம் உங்கள் நேரத்தையும் சக்தியையும்தான் வீணடிக்கும். அதோடு, உங்கள் மனதை ரொம்பவே சோர்வடைய வைத்துவிடும். அதற்குப் பதிலாக, நீங்கள் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களால் என்ன செய்ய முடியுமென்று யோசித்துப் பாருங்கள். குற்ற உணர்வு உங்கள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தால் மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்... உங்கள் தவறை ஒத்துக்கொள்ளுங்கள்... மன்னிப்புக் கேட்டு அவரிடம் கெஞ்சுங்கள். (சங். 25:11; 51:3, 4) வேறு யாரையாவது நீங்கள் காயப்படுத்தியிருந்தால், அவர்களிடமும் போய் மன்னிப்புக் கேளுங்கள். தேவைப்பட்டால், மூப்பர்களிடம் உதவி கேளுங்கள். (யாக். 5:14, 15) உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள், மறுபடியும் மறுபடியும் அதே தவறுகளைச் செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்தால், யெகோவா உங்களுக்கு இரக்கம் காட்டுவார் என்பதிலும், தேவையான உதவிகளைச் செய்வார் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—சங். 103:8-13.
நாம் ‘உதறித்தள்ள’ வேண்டிய பாரங்கள்
10. நியாயமில்லாத எதிர்பார்ப்புகள் நமக்கு ஏன் ஒரு பெரிய பாரமாகிவிடலாம்? (கலாத்தியர் 6:4)
10 நியாயமில்லாத எதிர்பார்ப்புகள். மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், நியாயமில்லாத எதிர்பார்ப்புகளால் நம்மீதே தேவையில்லாத பாரத்தைப் போட்டுக்கொள்வோம். (கலாத்தியர் 6:4-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால் நமக்குப் பொறாமையும் வயிற்றெரிச்சலும் வந்துவிடலாம், அவர்களோடு நாம் போட்டி போடவும் ஆரம்பித்துவிடலாம். (கலா. 5:26) நம் சூழ்நிலைகளும் திறமைகளும், ஓரளவு செய்வதற்குத்தான் நம்மை அனுமதிக்கும். ஆனால், மற்றவர்கள் செய்வதையெல்லாம் நாமும் செய்ய வேண்டுமென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டால், நம்மை நாமே வருத்திக்கொள்வோம். ‘எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானாலே நெஞ்சம் நொந்துபோகும்’ என்றால், நம்மால் எட்டவே முடியாத எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டால் இன்னும் எந்தளவுக்கு நொந்துவிடுவோம்! (நீதி. 13:12) அப்படிச் செய்வது நம் சக்தியையெல்லாம் உறிஞ்சிவிடும், வாழ்க்கை என்ற ஓட்டத்தில் நம் வேகத்தையும் குறைத்துவிடும்.—நீதி. 24:10.
11. நியாயமில்லாத எதிர்பார்ப்புகளை வைக்காமல் இருக்க எது உங்களுக்கு உதவி செய்யும்?
11 இந்தப் பாரத்தை நீங்கள் எப்படி உதறித்தள்ளலாம்? யெகோவா உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைவிட அதிகமாக நீங்கள் உங்களிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்களால் கொடுக்க முடியாததை அவர் ஒருபோதும் எதிர்பார்ப்பது கிடையாது. (2 கொ. 8:12) யெகோவா உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவே மாட்டார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். (மத். 25:20-23) முழு மனதோடு நீங்கள் செய்யும் சேவையையும், உங்கள் விசுவாசத்தையும், உங்கள் சகிப்புத்தன்மையையும் யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார். உங்கள் வயது, ஆரோக்கியம், அல்லது சூழ்நிலை காரணமாக சில விஷயங்களை உங்களால் செய்ய முடியாது என்பதை அடக்கத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். பர்சிலாவைப் போல் உடல்நிலை காரணமாகச் சில நியமிப்புகளை உங்களால் செய்ய முடியாது என்றால், அதைச் சொல்வதற்குத் தயாராக இருங்கள். (2 சா. 19:35, 36) அதேசமயத்தில், மோசேயைப் போல் மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள், பொருத்தமான சமயங்களில் உங்கள் பொறுப்புகளை மற்றவர்களுக்குப் பிரித்தும் கொடுங்கள். (யாத். 18:21, 22) இப்படி நீங்கள் அடக்கத்தைக் காட்டினால், நியாயமில்லாத எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு வாழ்க்கை என்ற ஓட்டத்தில் சோர்ந்துபோக மாட்டீர்கள்.
12. மற்றவர்கள் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்கு நம்மேல் பழி போட்டுக்கொள்ள முடியுமா? விளக்குங்கள்.
12 மற்றவர்கள் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்காக நம்மேல் பழி போட்டுக்கொள்வது. மற்றவர்களுக்காக நாம் தீர்மானம் எடுக்க முடியாது. அதேபோல், அவர்கள் எடுக்கும் தவறான தீர்மானங்களால் வரும் பின்விளைவுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் முடியாது. உதாரணத்துக்கு, ஒரு மகனோ மகளோ, யெகோவாவுக்கு இனி சேவை செய்யப்போவதில்லை என்று முடிவெடுக்கலாம். அந்த முடிவு பெற்றோருக்கு சொல்ல முடியாத வேதனையைத் தரும். ஆனால், பிள்ளை எடுக்கும் தவறான முடிவுக்குத் தாங்கள்தான் காரணம் என்று நினைத்தால், தங்கள்மீதே பெரிய பாரத்தை அவர்கள் சுமத்திக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பாரத்தை அவர்கள் சுமக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதே இல்லை.—ரோ. 14:12.
13. பிள்ளை ஒரு தவறான முடிவை எடுத்தால், பெற்றோர் என்ன செய்யலாம்?
13 இந்தப் பாரத்தை நீங்கள் எப்படி உதறித்தள்ளலாம்? சொந்தமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தை யெகோவா நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். அவரவரே யோசித்து முடிவுகள் எடுக்க அவர் விட்டுவிடுகிறார். அவரை வணங்கலாமா வேண்டாமா என்ற முடிவையும் அவரவரே எடுப்பதற்கு விட்டுவிடுகிறார். நீங்கள் பரிபூரணமான ஒரு பெற்றோர் கிடையாது என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்தால் போதும் என்று அவர் நினைக்கிறார். உங்கள் பிள்ளை எடுக்கும் முடிவுக்கு உங்கள் பிள்ளைதான் பொறுப்பு, நீங்கள் அல்ல! (நீதி. 20:11) இருந்தாலும், பெற்றோராக நீங்கள் செய்த தவறுகளை நினைத்து ஒருவேளை நீங்கள் கவலைப்படலாம். அப்படியென்றால், உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள், அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் கடந்தகாலத்துக்குப் போய், எல்லாவற்றையும் மாற்றி, தவறுகளைச் சரிசெய்ய முடியாது என்று யெகோவாவுக்குத் தெரியும். அதேசமயத்தில், உங்கள் பிள்ளை எடுத்த முடிவினால் வரும் பின்விளைவுகளிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்று யெகோவா உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. இந்த விஷயத்தையும் ஞாபகம் வையுங்கள்: உங்கள் பிள்ளை யெகோவாவிடம் திரும்பிவர முயற்சி எடுத்தால், அவர் சந்தோஷமாக அவனை ஏற்றுக்கொள்வார்!—லூக். 15:18-20.
14. அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சி நாம் உதறித்தள்ள வேண்டிய ஒரு பாரம் என்று ஏன் சொல்லலாம்?
14 அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சி. நாம் ஏதாவது பாவம் செய்துவிட்டால், நமக்குக் குற்றவுணர்ச்சி வருவதில் தவறு இல்லைதான். ஆனால், அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சி ஒரு பெரிய பாரம்! அந்தப் பாரத்தை நாம் சுமக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. அதற்குப் பதிலாக, அந்தப் பாரத்தை நாம் உதறித்தள்ள வேண்டும். ஆனால், நமக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சி அளவுக்கு அதிகமானதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது? நம் பாவத்தை யெகோவாவிடம் ஒத்துக்கொண்டு, மனம்திருந்தி, அந்தப் பாவத்தை மறுபடியும் செய்யாமல் இருக்க முயற்சி எடுத்தால், யெகோவா நம்மை மன்னித்துவிட்டார் என்று நாம் முழுமையாக நம்பலாம். (அப். 3:19) இதையெல்லாம் செய்த பிறகும் நாம் குற்றவுணர்ச்சியில் வாட வேண்டுமென்று யெகோவா நினைப்பதில்லை. குற்றவுணர்ச்சியில் புழுங்கிக்கொண்டே இருந்தால் நமக்கு எவ்வளவு பாதிப்பு வரும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். (சங். 31:10) நாம் சோகத்திலேயே மூழ்கிவிட்டால், வாழ்க்கை என்ற ஓட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட வாய்ப்பு இருக்கிறது.—2 கொ. 2:7.
15. அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தால் எது உங்களுக்கு உதவி செய்யும்? (1 யோவான் 3:19, 20) (படத்தையும் பாருங்கள்.)
15 இந்தப் பாரத்தை நீங்கள் எப்படி உதறித்தள்ளலாம்? அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் நீங்கள் புழுங்கிக்கொண்டிருந்தால் யெகோவா ‘மனதார மன்னிக்கிறார்’ என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். (சங். 130:4) உண்மையிலேயே மனம் திருந்துகிறவர்களை யெகோவா மன்னிக்கும்போது, “அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்” என்று சொல்கிறார். (எரே. 31:34) அப்படியென்றால், முன்பு நீங்கள் செய்த பாவங்களுக்காக இனி எப்போதும் யெகோவா உங்களிடம் கணக்குக் கேட்க மாட்டார். அதனால், முன்பு செய்த பாவத்தின் பின்விளைவுகளை நீங்கள் அனுபவித்துக்கொண்டிருந்தால், யெகோவா இன்னும் உங்களை மன்னிக்கவில்லை என்று தப்புக்கணக்குப் போட்டுவிடாதீர்கள். சபையில் சில பொறுப்புகளை நீங்கள் இழந்திருந்தால், அதற்காக உங்கள்மீதே கோபப்பட்டுக்கொள்ளாதீர்கள். யெகோவா உங்கள் பாவங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பதில்லை, நீங்களும் அப்படிச் செய்யக் கூடாது.—1 யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள்.
பரிசை வெல்லும் விதத்தில் ஓடுங்கள்!
16. ஓட்டப் பந்தய வீரர்களாக நாம் எதைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்?
16 வாழ்க்கை என்ற ஓட்டத்தில், ‘பரிசைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் நாம் ஓட’ வேண்டும். (1 கொ. 9:24) அதற்கு, நாம் சுமக்க வேண்டிய சுமைகளுக்கும் உதறித்தள்ள வேண்டிய பாரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், அப்படிப்பட்ட சுமைகளுக்கும் பாரங்களுக்கும் சில உதாரணங்களை நாம் பார்த்தோம். அதற்கு வேறு சில உதாரணங்களும் இருக்கின்றன. ‘பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் நம் இதயம் பாரமடையலாம்’ என்று இயேசு சொன்னார். (லூக். 21:34) இந்த வசனங்களும் மற்ற வசனங்களும், வாழ்க்கை என்ற ஓட்டத்தில் என்னென்ன மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமென்று கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும்.
17. வாழ்க்கை என்ற ஓட்டத்தில் நாம் கண்டிப்பாக ஜெயிப்போம் என்று ஏன் நம்பலாம்?
17 வாழ்க்கை என்ற ஓட்டத்தில் நாம் ஜெயிப்போம் என்று உறுதியாக நம்பலாம். ஏனென்றால், நமக்குத் தேவைப்படும் பலத்தை யெகோவா கொடுப்பார். (ஏசா. 40:29-31) அதனால், உங்கள் வேகத்தைக் கொஞ்சமும் குறைக்காதீர்கள்! அப்போஸ்தலன் பவுல், தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த பரிசை வெல்வதற்காகத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்; நீங்களும் அதேபோல் செய்யுங்கள். (பிலி. 3:13, 14) இந்தப் பந்தயத்தில் உங்களுக்காக வேறு யாரும் ஓட முடியாது. ஆனால், யெகோவாவின் உதவியோடு உங்களால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்! சுமக்க வேண்டிய சுமைகளைச் சுமப்பதற்கும் தேவையில்லாத பாரங்களை உதறித்தள்ளுவதற்கும் யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். (சங். 68:19) அவர் உங்கள் பக்கம் இருக்கும்போது, உங்களால் சகிப்புத்தன்மையோடு இந்த ஓட்டத்தில் ஓட முடியும், ஜெயிக்கவும் முடியும்!
பாட்டு 65 முன்னே செல்வோமே!
a வாழ்க்கைக்கான ஓட்டத்தில் ஓடுவதற்கு இந்தக் கட்டுரை நமக்கு உதவி செய்யும். இந்த ஓட்டத்தில் நாம் சில சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது கொடுத்த உறுதிமொழி, குடும்பப் பொறுப்பு, நாம் எடுக்கும் முடிவுகளுக்கான பொறுப்பு போன்றவற்றைச் சுமக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நம் வேகத்தைக் குறைக்கும் எந்தவொரு பாரத்தையும் நாம் உதறித்தள்ள வேண்டும். எதுவெல்லாம் அப்படிப்பட்ட பாரங்களாக இருக்கின்றன? இந்தக் கட்டுரை அதற்குப் பதில் சொல்லும்.
b jw.org-ல் “குடும்ப ஸ்பெஷல்” என்ற தொடர் கட்டுரைகளில் இருக்கும் சில கட்டுரைகளைப் பாருங்கள். தம்பதிகளுக்கு: “பாசத்தைக் காட்டுவது எப்படி?,” “மனதார பாராட்டுங்கள்.” பெற்றோருக்கு: “ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்,” “டீனேஜ் பிள்ளையிடம் எப்படிப் பேசுவது?” டீனேஜர்களுக்கு: “தனிமை உணர்வை சமாளிக்க...,” “கெட்ட ஆசையை தவிர்க்க...”