Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 34

பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

“விவேகம் உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.”—தானி. 12:10.

பாட்டு 98 வேதம்—நம் தேவன் தந்த பரிசு

இந்தக் கட்டுரையில்... a

1. பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆசையோடு படிக்க நமக்கு எது உதவும்?

 “பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று முந்தின கட்டுரையில் நாம் பார்த்த பென் சொல்கிறார். உங்களுக்கும் அப்படித்தானா? அல்லது, தீர்க்கதரிசனங்களைப் படித்தாலே தலை சுற்றும் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை, ‘தீர்க்கதரிசனங்களைப் படிப்பதெல்லாம் சுத்த போர்’ என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், யெகோவா எதற்காக பைபிளில் தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றை நீங்கள் ஆசையோடு படிக்க ஆரம்பித்துவிடலாம்.

2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?

2 இந்தக் கட்டுரையில், பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, எப்படிப் படிக்க வேண்டும் என்றும் பார்ப்போம். அதுமட்டுமல்ல, தானியேல் புத்தகத்தில் இருக்கும் இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பற்றிப் பார்ப்போம். அந்தத் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வது இப்போது நமக்கு எப்படி உதவும் என்றும் தெரிந்துகொள்வோம்.

பைபிள் தீர்க்கதரிசனங்களை ஏன் படிக்க வேண்டும்?

3. பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

3 பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள நாம் உதவி கேட்க வேண்டும். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: முன்பின் தெரியாத ஒரு இடத்துக்கு நீங்கள் போகிறீர்கள். ஆனால், உங்களோடு வரும் ஒரு ஃப்ரெண்டுக்கு அந்த ஏரியா ரொம்ப நன்றாகத் தெரியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்... ஒவ்வொரு ரோடும் எங்கே போகிறது... என்றெல்லாம் அவருக்குத் தெரியும். அவர் உங்களோடு வந்ததற்காக நீங்கள் எவ்வளவு சந்தோஷப்படுவீர்கள், இல்லையா? யெகோவா அந்த நண்பர் மாதிரி! கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்று அவருக்குத் தெரியும். இனி வரப்போகும் காலத்தைப் பற்றியும் அவருக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். அதனால், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள, நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்.—தானி. 2:28; 2 பே. 1:19, 20.

பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிப்பது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைச் சந்திக்க நம்மைத் தயார்படுத்தும் (பாரா 4)

4. யெகோவா எதற்காக பைபிளில் தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்திருக்கிறார்? (எரேமியா 29:11) (படத்தையும் பாருங்கள்.)

4 பாசமான ஒரு அப்பா அம்மா, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். யெகோவாவும் அப்படித்தான்! (எரேமியா 29:11-ஐ வாசியுங்கள்.) அதேசமயத்தில், எந்த மனிதப் பெற்றோராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை யெகோவாவினால் செய்ய முடியும். அதாவது, எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அவரால் சரியாகச் சொல்ல முடியும். முக்கியமான சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் பைபிளில் தீர்க்கதரிசனங்களைப் பதிவு செய்திருக்கிறார். (ஏசா. 46:10) அந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் அன்பான அப்பா யெகோவா கொடுத்திருக்கும் பரிசுகள் என்று நாம் சொல்லலாம். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதெல்லாம் உண்மையிலேயே நடக்கும் என்று நாம் எதை வைத்து நம்பலாம்?

5. மாக்ஸ் என்ற சகோதரரின் அனுபவத்திலிருந்து இளம் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 சாட்சிகளாக இருக்கும் நம் பிள்ளைகள் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால், ஸ்கூலில் அவர்களைச் சுற்றியிருக்கும் நிறைய பேர் பைபிளை மதிப்பதே கிடையாது. அவர்கள் பேசுவதையும் நடந்துகொள்வதையும் பார்க்கும்போதெல்லாம் நம் பிள்ளைகளின் மனதில் சில சந்தேகங்கள் வந்துவிடுகின்றன. மாக்ஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். “நான் டீனேஜ் வயதில் இருந்தபோது, என் அப்பாவும் அம்மாவும் உண்மையான மதத்தைப் பற்றித்தான் எனக்குச் சொல்லித்தருகிறார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பைபிள் உண்மையிலேயே கடவுள் கொடுத்த புத்தகம்தானா என்ற சந்தேகமும் எனக்கு வந்துவிட்டது. ஆனால், என் அப்பா அம்மா ரொம்பப் பொறுமையாக, அமைதியாக என்னிடம் பேசினார்கள். ஆனாலும், மனசுக்குள் என்னை நினைத்துக் கவலைப்பட்டார்கள் என்று எனக்குத் தெரியும்” என்று அவர் சொல்கிறார். அவருடைய அப்பாவும் அம்மாவும் அவருடைய எல்லா கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதில் காட்டினார்கள். அதேசமயத்தில், மாக்ஸ் தன்னுடைய பங்கில் ஒரு விஷயத்தைச் செய்தார். “பைபிள் தீர்க்கதரிசனங்களை நானே சொந்தமாகப் படித்துப் பார்த்தேன். படித்த விஷயங்களைப் பற்றியெல்லாம் மற்ற பிள்ளைகளிடமும் பேசினேன்” என்று அவர் சொல்கிறார். அதனால், என்ன பலன் கிடைத்தது? “பைபிள் கடவுள் கொடுத்த புத்தகம்தான் என்று நான் முழுமையாக நம்ப ஆரம்பித்துவிட்டேன்!” என்று அவர் சொல்கிறார்.

6. உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏன்?

6 பைபிள் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று மாக்ஸ் மாதிரியே உங்களுக்கும் சந்தேகம் வந்துவிட்டால், அதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை. அதேசமயத்தில், அந்தச் சந்தேகத்தை விரட்டியடிக்க நீங்கள் உடனடியாக முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், சந்தேகம் என்பது துரு மாதிரி! அதை அப்படியே விட்டுவிட்டால், விலைமதிப்புள்ள ஒன்றை அது மெதுமெதுவாக அரித்துவிடும். உங்கள் விசுவாசத்தில் படிந்திருக்கும் “துருவை” எடுத்துப்போடுவதற்கு, ‘எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நான் நம்புகிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். நம்புவதா வேண்டாமா என்று உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால், ஏற்கெனவே நிறைவேறியிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்?

பைபிள் தீர்க்கதரிசனங்களை எப்படிப் படிக்க வேண்டும்?

தானியேலைப் போலவே நாமும் யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், பைபிள் தீர்க்கதரிசனங்களை மனத்தாழ்மையாகப் படிக்க வேண்டும், நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்க வேண்டும், சரியான உள்நோக்கத்தோடு படிக்க வேண்டும் (பாரா 7)

7. தீர்க்கதரிசனங்களைப் படிக்கும் விஷயத்தில் தானியேல் எப்படி ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? (தானியேல் 12:10) (படத்தையும் பாருங்கள்.)

7 தீர்க்கதரிசனங்களைப் படிக்கும் விஷயத்தில் தானியேல் ஒரு அருமையான முன்மாதிரியாக இருக்கிறார். உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற சரியான உள்நோக்கத்தோடு அவர் தீர்க்கதரிசனங்களைப் படித்தார். அவர் மனத்தாழ்மையையும் காட்டினார். எப்படி? யெகோவா தனக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும் தன்னோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கும் தீர்க்கதரிசனங்களைப் புரிய வைப்பார் என்று தானியேல் நம்பினார். (தானி. 2:27, 28; தானியேல் 12:10-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் உதவி கேட்பதன் மூலமாகவும் தானியேல் மனத்தாழ்மையைக் காட்டினார். (தானி. 2:18) தானியேல் வேதவசனங்களை நன்றாக ஆராய்ச்சி செய்தும் படித்தார். அந்தக் காலத்தில் தன் கைக்குக் கிடைத்த சுருள்களையெல்லாம் அவர் ஆழமாக ஆராய்ச்சி செய்தார். (எரே. 25:11, 12; தானி. 9:2) நீங்கள் எப்படி தானியேலைப் போலவே நடந்துகொள்ளலாம்?

8. பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் என்று சிலர் ஏன் நம்புவதில்லை, ஆனால் நாம் ஏன் நம்ப வேண்டும்?

8 உங்களுக்குச் சரியான உள்நோக்கம் இருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தீவிரமான ஆசை இருப்பதால்தான் நீங்கள் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார். (யோவா. 4:23, 24; 14:16, 17) சிலர் வேறு காரணங்களுக்காக பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்கிறார்கள். உதாரணத்துக்கு, பைபிள் கடவுளுடைய சக்தியால் எழுதப்படவில்லை என்று நிரூபிப்பதற்காக அவற்றைப் படிக்கிறார்கள். அப்படி நிரூபித்துவிட்டால், எது சரி, எது தவறு என்று அவர்களே முடிவு செய்வது நியாயமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் சரியான உள்நோக்கத்தோடு தீர்க்கதரிசனங்களைப் படிக்க வேண்டும். அதோடு, பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான குணத்தை நாம் காட்ட வேண்டும்.

9. பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள நமக்கு என்ன குணம் தேவை? விளக்குங்கள்.

9 மனத்தாழ்மை காட்டுங்கள். மனத்தாழ்மை காட்டுகிறவர்களுக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (யாக். 4:6) அதனால், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள நாம் அவரிடம் உதவி கேட்கலாம். அதேசமயத்தில், சரியான நேரத்தில் சரியான ஆன்மீக உணவை நமக்குக் கொடுப்பதற்காக அவர் பயன்படுத்துகிற உண்மையுள்ள அடிமையின் உதவியையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். (லூக். 12:42) யெகோவா குழப்பத்தின் கடவுள் அல்ல, ஒழுங்கின் கடவுள்; அதனால், அவருடைய வார்த்தையில் இருக்கும் உண்மைகளை நமக்குப் புரிய வைப்பதற்காக அவர் ஒரேவொரு தொகுதியைத்தான் பயன்படுத்துவார் என்று நாம் நம்பலாம்.—1 கொ. 14:33; எபே. 4:4-6.

10. எஸ்தர் என்ற சகோதரியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

10 நன்றாக ஆராய்ந்து பாருங்கள். முதலில், உங்களுக்குப் பிடித்த ஒரு தீர்க்கதரிசனத்தைத் தேர்ந்தெடுத்து அதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். இதைத்தான், முந்தின கட்டுரையில் நாம் பார்த்த எஸ்தர் என்ற சகோதரி செய்தார். மேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்க்க அவர் ஆசைப்பட்டார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “எனக்கு 15 வயதாக இருந்தபோது, உண்மையிலேயே இயேசுவின் காலத்துக்கு முன்புதான் இந்தத் தீர்க்கதரிசனங்களை எழுதினார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதனால், அதற்கான அத்தாட்சிகளைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு, சவக்கடல் சுருள்களைப் பற்றி அவர் படித்த விஷயங்கள் அவருடைய சந்தேகத்தைத் தீர்த்தன. “அவற்றில் சில சுருள்கள் இயேசுவின் காலத்துக்கு முன்பே எழுதப்பட்டவை. அதனால், அவற்றில் இருக்கும் தீர்க்கதரிசனங்களைக் கடவுள்தான் சொல்லியிருக்க வேண்டும்” என்று அவர் சொல்கிறார். அதுமட்டுமல்ல, “அவற்றைப் புரிந்துகொள்வதற்கு நான் நிறைய தடவை அவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டியிருந்தது” என்றும் அவர் சொல்கிறார். ஆனால், அப்படி முயற்சி எடுத்ததை நினைத்து இப்போது ரொம்ப சந்தோஷப்படுகிறார். நிறைய தீர்க்கதரிசனங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்த பிறகு, “பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்று இப்போது என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று சொல்கிறார்.

11. பைபிள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று நாம் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது ஏன் நல்லது?

11 ஏற்கெனவே நிறைவேறியிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் படித்துப் பார்க்கும்போது, யெகோவா மீதும் அவர் நம்மை வழிநடத்தும் விதத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, இப்போது நமக்கு என்ன பிரச்சினைகள் வந்தாலும் சரி, எதிர்காலம் சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்பதற்கு பைபிள் தீர்க்கதரிசனங்கள் நமக்கு உதவி செய்யும். தானியேல் எழுதிய இரண்டு தீர்க்கதரிசனங்களைப் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம். இன்று நிறைவேறிவரும் அந்தத் தீர்க்கதரிசனங்களை நாம் புரிந்துகொண்டால் நம்மால் ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியும்.

இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களைப் பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

12. ‘ஈரமான களிமண்ணும் இரும்பும் கலந்த’ பாதங்கள் எதைக் குறிக்கின்றன? (தானியேல் 2:41-43)

12 தானியேல் 2:41-43-ஐ வாசியுங்கள். நேபுகாத்நேச்சார் ராஜா கனவில் பார்த்த சிலையின் பாதங்கள் ‘ஈரமான களிமண்ணும் இரும்பும் கலந்ததாக’ இருந்தன. இந்தத் தீர்க்கதரிசனத்தை, தானியேல் புத்தகத்திலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் இருக்கும் மற்ற தீர்க்கதரிசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்தப் பாதங்கள் இன்று இருக்கும் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த உலக வல்லரசைப் பற்றிச் சொல்லும்போது, “அந்த ராஜ்யம் கொஞ்சம் உறுதியானதாகவும் கொஞ்சம் உறுதியற்றதாகவும் இருக்கும்” என்று தானியேல் சொல்லியிருக்கிறார். அது ஏன் கொஞ்சம் உறுதியற்றதாக இருக்கும்? ஏனென்றால், ஈரமான களிமண்ணுக்கு அடையாளமாக இருக்கும் பொது மக்கள், இரும்புபோன்ற உறுதியோடு செயல்பட முடியாதபடி இந்த உலக வல்லரசைப் பலவீனமாக்கிவிடுகிறார்கள். b

13. இந்தத் தீர்க்கதரிசனத்திலிருந்து என்ன முக்கியமான விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்?

13 அந்தக் கனவில் வந்த சிலையையும், முக்கியமாக அதன் பாதங்களையும் பற்றி தானியேல் கொடுத்த விளக்கங்களிலிருந்து நாம் நிறைய முக்கியமான விஷயங்களைப் புரிந்துகொள்கிறோம். முதலில், தானியேல் சொன்னது போலவே ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு அதன் பலத்தைச் சில விதங்களில் காட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் உலகப் போரிலும் இரண்டாவது உலகப் போரிலும் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் பெரிய வெற்றி கிடைத்தது. அதேசமயத்தில், இந்த உலக வல்லரசின் குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்வதாலும் போராட்டங்கள் செய்வதாலும் அதன் பலம் குறைந்திருக்கிறது, இனிமேலும் குறைந்துகொண்டேதான் இருக்கும். இரண்டாவதாக, எல்லா மனித அரசாங்கங்களையும் கடவுளுடைய அரசாங்கம் அழிப்பதற்கு முன்பு இருக்கப்போகிற கடைசி உலக வல்லரசு இதுதான். இந்த உலக வல்லரசை மற்ற தேசங்கள் எதிர்க்கலாம், ஆனால் ஒருநாளும் அதன் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. எப்படிச் சொல்லலாம்? “ஒரு கல்” அந்தச் சிலையின் பாதங்களில் மோதி அதைச் சுக்குநூறாக்கியதாக தானியேல் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கம்தான் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைச் சுக்குநூறாக்கப்போகிறது.—தானி. 2:34, 35, 44, 45.

14. இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களைப் பற்றிப் புரிந்துகொள்வது, ஞானமான தீர்மானங்களை எடுக்க நமக்கு எப்படி உதவி செய்யும்?

14 இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களைப் பற்றி தானியேல் சொன்ன தீர்க்கதரிசனம் உண்மை என்று நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் வாழும் விதத்தில் அது தெளிவாகத் தெரியும். சீக்கிரத்தில் சின்னாபின்னமாகப்போகும் இந்த உலகத்தில் பொருள் வசதிகளோடு சொகுசாக வாழ வேண்டுமென்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். (லூக். 12:16-21; 1 யோ. 2:15-17) அதுமட்டுமல்ல, இந்தத் தீர்க்கதரிசனத்தை நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டால், பிரசங்கிக்கும் வேலையும் கற்பிக்கும் வேலையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். (மத். 6:33; 28:18-20) இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிப் படித்த பிறகு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் சீக்கிரத்தில் அழிக்கப்போவதை நான் முழுமையாக நம்புகிறேனா, என் தீர்மானங்கள் அதைக் காட்டுகிறதா?’

‘வடதிசை ராஜாவையும்’ ‘தென்திசை ராஜாவையும்’ பற்றி நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

15. இன்று “வடதிசை ராஜா” யார், “தென்திசை ராஜா” யார்? (தானியேல் 11:40)

15 தானியேல் 11:40-ஐ வாசியுங்கள். இரண்டு ராஜாக்களைப் பற்றி, அதாவது அரசாங்கங்களைப் பற்றி, தானியேல் 11-வது அதிகாரம் சொல்கிறது. அந்த இரண்டு ராஜாக்களுமே, இந்த உலகத்தை ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதற்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று அது சொல்கிறது. பைபிளில் இருக்கும் மற்ற தீர்க்கதரிசனங்களோடு இந்தத் தீர்க்கதரிசனத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இரண்டு ராஜாக்களும் யார் என்று நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. ரஷ்யாவும் அதன் கூட்டணி நாடுகளும்தான் “வடதிசை ராஜா.” ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுதான் “தென்திசை ராஜா.” c

‘வடதிசை ராஜாவும்’ ‘தென்திசை ராஜாவும்’ காட்டும் எதிர்ப்பு பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான் என்பதை நாம் புரிந்துகொண்டால், தேவையில்லாமல் கவலைப்பட மாட்டோம், நம் விசுவாசமும் பலமாகும் (பாராக்கள் 16-18)

16. “வடதிசை ராஜா” தன்னுடைய ஆட்சியின் கீழ் வாழும் கடவுளுடைய மக்களை எப்படி நடத்துகிறான்?

16 “வடதிசை ராஜா” தன்னுடைய ஆட்சியின் கீழ் வாழும் கடவுளுடைய மக்களைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டு இருக்கிறான். அவர்களில் சிலரை அவன் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறான், சிறையிலும் போட்டிருக்கிறான். “வடதிசை ராஜா” இப்படித் துன்புறுத்துவதைப் பார்த்து நம் சகோதரர்கள் பயந்துபோகவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய விசுவாசம் இன்னும் பலமாகியிருக்கிறது. ஏன்? ஏனென்றால், கடவுளுடைய மக்கள் இதுபோல் துன்புறுத்தப்படுவது தானியேல் சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்தான் என்பது அவர்களுக்குத் தெரியும். d (தானி. 11:41) இதைத் தெரிந்துகொள்வது, நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளவும் உத்தமத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கவும் நமக்கு உதவி செய்கிறது.

17. ‘தென்திசை ராஜாவின்’ ஆட்சியின் கீழ் வாழும் கடவுளுடைய மக்களுக்கு என்னென்ன சோதனைகள் வந்திருக்கின்றன?

17 முன்பு, ‘தென்திசை ராஜாவும்’ யெகோவாவின் மக்களைத் தாக்கியிருக்கிறான். உதாரணத்துக்கு, முதல் உலகப் போர் மற்றும் இரண்டாவது உலகப் போர் நடந்த சமயங்களில், நடுநிலையாக இருந்ததால் நிறைய சகோதரர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். அதே காரணத்துக்காக, சில சாட்சிகளுடைய பிள்ளைகள் ஸ்கூலிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆனால் சமீப காலமாக, ‘தென்திசை ராஜாவின்’ ஆட்சியின் கீழ் வாழும் கடவுளுடைய மக்களுக்கு மறைமுகமான வேறு சில சோதனைகள் வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு, தேர்தல் சமயங்களில் ஒரு கிறிஸ்தவர், ‘இந்தக் கட்சி அந்தக் கட்சியைவிட பரவாயில்லை’ என்று யோசிக்கலாம். அல்லது, ‘இந்தக் கட்சி ஜெயித்தால் நன்றாக இருக்கும்’ என்று யோசிக்கலாம். ஓட்டுப் போடும் அளவுக்கு அவர் போக மாட்டார் என்றாலும், மனதளவில் ஒரு கட்சியின் பக்கம் அல்லது ஒரு வேட்பாளரின் பக்கம் சாய்ந்துவிடலாம். அப்படியென்றால், நம் செயல்களில் மட்டுமல்ல, நம் யோசனைகளிலும் உணர்ச்சிகளிலும்கூட நடுநிலையாக இருப்பது எவ்வளவு முக்கியம்!—யோவா. 15:18, 19; 18:36.

18. ‘வடதிசை ராஜாவும்’ ‘தென்திசை ராஜாவும்’ சண்டை போட்டுக்கொள்வதைப் பார்க்கும்போது நமக்கு எப்படி இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

18 ‘தென்திசை ராஜா வடதிசை ராஜாவோடு சண்டைக்கு நிற்பதை’ பார்க்கும்போது, பைபிள் தீர்க்கதரிசனங்கள்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் பயத்திலும் கவலையிலும் மூழ்கிப்போய்விடலாம். (தானி. 11:40) ஏனென்றால், இந்தப் பூமியிலுள்ள எல்லா உயிர்களையும் அழிக்கும் அளவுக்குச் சக்தியுள்ள அணு ஆயுதங்களை இரண்டு ராஜாக்களுமே குவித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு யெகோவா விட மாட்டார் என்று நமக்குத் தெரியும். (ஏசா. 45:18) அதனால், ‘தென்திசை ராஜாவும் வடதிசை ராஜாவும் சண்டைக்கு நிற்பதை’ பார்த்து, என்னாகுமோ ஏதாகுமோ என்று நாம் கவலைப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, நம் விசுவாசம் இன்னும் பலமாகிறது. ஏனென்றால், இந்த உலகத்தின் முடிவு ரொம்பப் பக்கத்தில் வந்துவிட்டதை அது உறுதிப்படுத்துகிறது.

தீர்க்கதரிசனங்களுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்

19. பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றி நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?

19 சில பைபிள் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும் என்று நமக்குத் தெரியாது. தானியேல் தீர்க்கதரிசிக்குக்கூட அவர் எழுதிய எல்லா விஷயங்களுமே புரியவில்லை. (தானி. 12:8, 9) ஆனால், ஒரு தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும் என்று நமக்குப் புரியவில்லை என்பதற்காக அது நிறைவேறாது என்று சொல்லிவிட முடியாது. நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை யெகோவா சரியான சமயத்தில் தெரியப்படுத்துவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், இவ்வளவு காலமாக யெகோவா அதைத்தான் செய்துவந்திருக்கிறார்.—ஆமோ. 3:7.

20. ஆர்வத்தைத் தூண்டும் என்னென்ன பைபிள் தீர்க்கதரிசனங்கள் சீக்கிரத்தில் நிறைவேறப்போகின்றன? அதுவரை நாம் என்ன செய்ய வேண்டும்?

20 சீக்கிரத்தில், “இதோ! சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு செய்யப்படும். (1 தெ. 5:3) அடுத்து, இந்த உலகத்திலுள்ள அரசாங்கங்கள் பொய் மதங்களைத் தாக்கி ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். (வெளி. 17:16, 17) அதன் பிறகு, அந்த அரசாங்கங்கள் யெகோவாவின் மக்களைத் தாக்கும். (எசே. 38:18, 19) அப்போதுதான், கடைசிப் போரான அர்மகெதோன் ஆரம்பிக்கும். (வெளி. 16:14, 16) இதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுவரை, பைபிள் தீர்க்கதரிசனங்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலமாகவும், அப்படிச் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாகவும் நம் பரலோக அப்பாவுக்கு நாம் தொடர்ந்து நன்றியோடு இருக்க வேண்டும்.

பாட்டு 95 வெளிச்சம் அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது

a இந்த உலக சூழ்நிலை எவ்வளவு மோசமானாலும் சரி, ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். பைபிள் தீர்க்கதரிசனங்களை நாம் படிக்கப் படிக்க, அந்த நம்பிக்கை அதிகமாகும். என்னென்ன காரணங்களுக்காக நாம் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் படிக்க வேண்டுமென்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதுமட்டுமல்ல, தானியேல் பதிவு செய்திருக்கும் இரண்டு தீர்க்கதரிசனங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம். அந்தத் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை என்றும் தெரிந்துகொள்வோம்.

b ஜூன் 15, 2012 காவற்கோபுரத்தில் வந்த, “‘சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை’ யெகோவா வெளிப்படுத்துகிறார்” என்ற கட்டுரையில் பாராக்கள் 7-9-ஐப் பாருங்கள்.

c மே 2020 காவற்கோபுரத்தில் வந்த, “இன்று ‘வடதிசை ராஜா’ யார்?” என்ற கட்டுரையில் பாராக்கள் 3-4-ஐப் பாருங்கள்.

d மே 2020 காவற்கோபுரத்தில் வந்த, “இன்று ‘வடதிசை ராஜா’ யார்?” என்ற கட்டுரையில் பாராக்கள் 7-9-ஐப் பாருங்கள்.