வாசகர் கேட்கும் கேள்விகள்
ஜூன் 2020 காவற்கோபுரத்தில் வந்த “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்ற கட்டுரை, யெகோவாவின் பெயரைப் பற்றியும் அவருடைய உன்னதப் பேரரசாட்சியைப் பற்றியும் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவி செய்தது?
அந்தக் கட்டுரையில் வந்த புதிய விளக்கத்தின்படி, இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்றுதான்: யெகோவாவின் உன்னதமான பெயர் பரிசுத்தப்பட வேண்டும்! எல்லா மனிதர்களும் தேவதூதர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சிறந்ததா... மனிதர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பார்களா... என்ற இரண்டு விவாதங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவையும் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவை இரண்டும், யெகோவாவின் உன்னதமான பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்ற ஒரே முக்கியமான விஷயத்தின் இரண்டு அம்சங்கள்தான்.
இந்தப் பிரபஞ்சத்திலேயே ரொம்ப முக்கியமான விஷயம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதுதான் என்று இப்போது ஏன் சொல்கிறோம்? அதற்கான மூன்று காரணங்களைப் பார்க்கலாம்.
முதல் காரணம், ஏதேன் தோட்டத்தில் சாத்தான் யெகோவாவின் பெயரை, அதாவது அவருக்கு இருந்த நல்ல பெயரை, கெடுத்தான். சாத்தான் ஏவாளிடம் கேட்ட தந்திரமான கேள்வியை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது, அவன் உண்மையிலேயே என்ன சொல்ல வந்தான் என்பது நமக்குப் புரிகிறது. அதாவது, யெகோவா தாராளமாகக் கொடுக்க விரும்பாத கடவுள்... அவர் மனிதர்களுக்குக் கொடுத்த கட்டளைகள் நியாயமே இல்லாதவை... என்றெல்லாம் அவன் மறைமுகமாகச் சொன்னது நமக்குப் புரிகிறது. அதுமட்டுமல்ல, யெகோவா சொன்ன விஷயத்துக்கு நேர்மாறாக சாத்தான் பேசினான். இப்படி, யெகோவா பொய் சொல்வதாக மறைமுகமாகச் சொன்னான். இப்படியெல்லாம் சொல்லி யெகோவாவின் பெயரை அவன் கெடுத்தான். அதனால்தான், அவனுக்கு “பிசாசு” என்ற பெயர் வந்தது. அதன் அர்த்தம், “அவதூறு பேசுகிறவன்” அல்லது “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்.” (யோவா. 8:44) ஏவாள் சாத்தானுடைய பொய்களையெல்லாம் நம்பி, கடவுளுடைய பேச்சை மீறி, அவருடைய உன்னதப் பேரரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்துவிட்டாள். (ஆதி. 3:1-6) இன்றுவரை சாத்தான் கடவுளுடைய பெயரைக் கெடுக்கிறான், அவரைப் பற்றி நிறைய பொய்களைப் பரப்புகிறான். அந்தப் பொய்களை நம்புகிறவர்கள் பெரும்பாலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவார்கள். அதனால் கடவுளுடைய மக்களைப் பொறுத்தவரை, அவருடைய பரிசுத்தமான பெயரை சாத்தான் களங்கப்படுத்தியிருப்பது அநியாயத்திலும் அநியாயமான ஒரு விஷயம். சொல்லப்போனால், இந்த விஷயம்தான் இன்று உலகத்தில் நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஆணிவேர்.
இரண்டாவது காரணம், யெகோவா தன்னுடைய படைப்புகளின் நலனை மனதில் வைத்து, தன் பெயரை நியாயநிரூபணம் செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். அதாவது, அவருடைய பெயருக்கு வந்த களங்கத்தை நீக்குவதில் உறுதியாக இருக்கிறார். இதுதான் அவருக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம். அதனால்தான், “என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்” என்று அவர் சொல்கிறார். (எசே. 36:23) “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று நாம் ஜெபம் செய்ய வேண்டுமென்று இயேசுவும் சொல்லிக்கொடுத்தார். அப்படியென்றால், யெகோவாவின் உண்மை ஊழியர்கள் எல்லாரும் இதைப் பற்றித்தான் ரொம்ப முக்கியமாக ஜெபம் செய்ய வேண்டுமென்று சொன்னார். (மத். 6:9) யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்று பைபிள் மறுபடியும் மறுபடியும் சொல்கிறது. சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம். “யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.” (1 நா. 16:29; சங். 96:8) “அவருடைய மகிமையான பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.” (சங். 66:2) “உங்களுடைய பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.” (சங். 86:12) ஒரு தடவை, இயேசு எருசலேம் ஆலயத்தில் இருந்தபோது, “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அதற்கு யெகோவா, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்” என்று சொன்னார். யெகோவா பரலோகத்திலிருந்து நேரடியாகப் பேசிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.—யோவா. 12:28. a
மூன்றாவது காரணம், தன்னுடைய பரிசுத்தமான பெயர் என்றென்றும் புகழப்பட வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கம். முதலில் இந்தக் கேள்வியைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் வரப்போகும் கடைசி சோதனைக்குப் பிறகு, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்ற
முக்கியமான விஷயத்தைப் பற்றி தேவதூதர்களும் மனிதர்களும் எப்படி உணருவார்கள்? இந்தக் கேள்விக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதோடு சம்பந்தப்பட்ட இரண்டு அம்சங்களைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, மனிதர்களுடைய உத்தமத்தன்மையைப் பற்றியும் யெகோவாவின் உன்னதப் பேரரசாட்சியைப் பற்றியும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். கடைசி சோதனையில் உண்மையாக இருக்கும் மனிதர்கள் மறுபடியும் தங்களுடைய உத்தமத்தன்மையை நிரூபிக்க வேண்டுமென்ற அவசியம் இருக்குமா? இல்லை! ஏனென்றால், அவர்களிடம் எந்தக் குறையும் இருக்காது, அவர்கள் முழுமையாகச் சோதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு என்ற பரிசும் கிடைத்திருக்கும். யெகோவாவின் உன்னதப் பேரரசாட்சியைப் பற்றி மனிதர்களும் தேவதூதர்களும் அதன் பிறகும் விவாதம் செய்துகொண்டு இருப்பார்களா? இல்லை! ஏனென்றால், யெகோவா ஆட்சி செய்யும் விதம்தான் சரி, அதுதான் சிறந்தது என்பது அப்போது மறுபேச்சுக்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கும். யெகோவாவின் பெயரைப் பற்றி என்ன சொல்லலாம்?அந்தச் சமயத்தில் யெகோவாவின் பெயர் எந்தக் களங்கமும் இல்லாமல் முழுமையாகப் பரிசுத்தமாகியிருக்கும். அதன் பிறகும், பரலோகத்திலும் சரி, பூமியிலும் சரி, யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய பெயரைத்தான் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயமாக நினைப்பார்கள். ஏன்? ஏனென்றால், யெகோவா தொடர்ந்து அற்புதமான விஷயங்களைச் செய்வதை அவர்கள் பார்ப்பார்கள். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: இயேசு மனத்தாழ்மையோடு தன்னுடைய ஆட்சியை யெகோவாவிடம் ஒப்படைத்த பிறகு, யெகோவாதான் “எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்.” (1 கொ. 15:28) அதன் பிறகு, பூமியில் இருக்கும் மனிதர்கள், “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” சந்தோஷமாக அனுபவிப்பார்கள். (ரோ. 8:21) அப்போது, யெகோவாவின் நீண்டநாள் கனவு நனவாகும். அதாவது, பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் தன் பிள்ளைகளை ஒற்றுமையான ஒரே பெரிய குடும்பமாகக் கூட்டிச்சேர்க்க வேண்டுமென்ற அவருடைய ஆசை நிறைவேறும்.—எபே. 1:10.
இதெல்லாம் நடந்த பிறகு, பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் யெகோவாவின் குடும்பத்தார் எப்படி உணருவார்கள்? யெகோவாவின் அழகான பெயரைத் தொடர்ந்து புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசை அவர்களுக்குள் தீயாய்ப் பற்றியெரியும்! தாவீது கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் இப்படி எழுதினார்: “யெகோவா புகழப்படட்டும். . . . அவருடைய மகிமையான பெயர் என்றென்றும் புகழப்படட்டும்.” (சங். 72:18, 19) அதன்படி, யெகோவாவின் பெயரை என்றென்றும் புகழ நமக்குப் புதுப் புதுக் காரணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்; அதெல்லாம் நம்மைப் புல்லரிக்க வைக்கும்!
யெகோவாவின் பெயர் அவருடைய அருமையான குணங்களையெல்லாம் படம்பிடித்துக் காட்டுகிறது. முக்கியமாக, யெகோவா எவ்வளவு அன்பானவர் என்பதை அது நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (1 யோ. 4:8) நாம் என்றென்றும் வாழும்போது, அன்பினால்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார் என்பதையும்... அன்பினால்தான் நமக்காக மீட்புப் பலியைக் கொடுத்திருக்கிறார் என்பதையும்... அன்பினால்தான் அவர் ஆட்சி செய்யும் விதம் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறார் என்பதையும் எப்போதுமே ஞாபகம் வைத்திருப்போம். அதுமட்டுமல்ல, யெகோவா நம்மேல் அன்பையும் பாசத்தையும் கொட்டுவதை நாம் பார்த்துக்கொண்டே இருப்போம். நாம் என்றென்றும் நம் அன்பான அப்பா யெகோவாவிடம் நெருங்கிப்போய்க்கொண்டே இருப்போம், அவருடைய அற்புதமான பெயரைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்போம்.—சங். 73:28.
a யெகோவா ‘தன்னுடைய பெயருக்காக’ அல்லது ‘தன் பெயரை மனதில் வைத்து’ நிறைய விஷயங்களைச் செய்வதாகவும் பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, அவர் தன் மக்களை வழிநடத்துகிறார்... அவர்களுக்கு உதவி செய்கிறார்... அவர்களைக் காப்பாற்றுகிறார்... அவர்களை மன்னிக்கிறார்... அவர்களுடைய உயிரைப் பாதுகாக்கிறார். இவை எல்லாவற்றையும் தன்னுடைய மகத்தான பெயருக்காகச் செய்கிறார்.—சங். 23:3; 31:3; 79:9; 106:8; 143:11.