Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 33

பாட்டு 130 மன்னியுங்கள்

படுமோசமான பாவத்தை ஒருவர் செய்யும்போது சபை எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?

படுமோசமான பாவத்தை ஒருவர் செய்யும்போது சபை எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?

“நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால் . . . இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்.”1 யோ. 2:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

முதல் நூற்றாண்டு கொரிந்து சபையில், படுமோசமான ஒரு பாவத்தைக் கையாண்ட விதத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம்.

1. எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்?

 யெகோவா மனிதர்களைப் படைத்தபோது, சொந்தமாக முடிவெடுக்கும் திறமையைக் கொடுத்தார். அந்தத் திறமையைப் பயன்படுத்திதான், நாம் தினம் தினம் நிறைய முடிவுகளை எடுக்கிறோம். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கும் ரொம்ப முக்கியமான முடிவு எது? யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆவதுதான்! எல்லாருமே இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். ஏனென்றால், அவர் மக்களை நேசிக்கிறார், அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அவர்கள் தன்னோடு ஒரு நல்ல நட்பை வைத்துக்கொள்ள வேண்டும்... என்றென்றும் வாழ வேண்டும்... என்றெல்லாம் ஆசைப்படுகிறார்.—உபா. 30:19, 20; கலா. 6:7, 8.

2. மனம் திருந்தாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்? (1 யோவான் 2:1)

2 இருந்தாலும், தன்னை வணங்க வேண்டும் என்று யெகோவா யாரையுமே கட்டாயப்படுத்துவதில்லை; ஒவ்வொருவரும் சொந்தமாக முடிவெடுக்க அவர் அனுமதிக்கிறார். ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவுக்குச் சேவை செய்து வரும் ஒரு கிறிஸ்தவர், யெகோவாவுடைய கட்டளைகளை மீறி படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால் என்ன செய்வது? அவர் மனம் திருந்தவில்லை என்றால், அவரைச் சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். (1 கொ. 5:13) ஆனாலும், தவறு செய்தவர் தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று யெகோவா ஆசை ஆசையாக எதிர்பார்க்கிறார்! சொல்லப்போனால், அவர் மீட்புவிலையைக் கொடுத்ததற்கான காரணமே மனம் திருந்தும் பாவிகளை மன்னிப்பதற்குத்தான்! (1 யோவான் 2:1-ஐ வாசியுங்கள்.) நம்முடைய பாசமான கடவுள், பாவம் செய்தவர்கள் மனம் திருந்த வேண்டுமென்று அவர்களை அன்பாகத் தூண்டுகிறார்.—சக. 1:3; ரோ. 2:4; யாக். 4:8.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?

3 பாவத்தைப் பற்றியும் பாவம் செய்தவரைப் பற்றியும், அவர் யோசிப்பதுபோல் நாமும் யோசிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் படிப்போம். இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்: (1) முதல் நூற்றாண்டு கொரிந்து சபையிலிருந்த ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்தபோது, அந்தப் பிரச்சினையை எப்படிக் கையாண்டார்கள், (2) பாவம் செய்தவர் மனம் திருந்தியபோது, அவரை எப்படி நடத்த வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை கொடுத்தார், (3) படுமோசமான பாவம் செய்த நபரைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்.

முதல் நூற்றாண்டில் படுமோசமான பாவத்தைச் சபை எப்படிக் கையாண்டது?

4. முதல் நூற்றாண்டில் இருந்த கொரிந்து சபையில் என்ன நடந்தது? (1 கொரிந்தியர் 5:1, 2)

4 1 கொரிந்தியர் 5:1, 2-ஐ வாசியுங்கள். கொரிந்து சபை அப்போதுதான் உருவாகியிருந்தது. பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது, அந்தச் சபையிலிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டார். ஒரு சகோதரர் தன்னுடைய அப்பாவின் மனைவியோடு, அதாவது தன்னுடைய மாற்றாந்தாயோடு, தவறான உறவு வைத்திருந்தார். இந்த மாதிரி ஒரு சம்பவம் “மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை” என்று பவுல் சொன்னார். அது அந்தளவுக்குப் படுகேவலமான விஷயமாக இருந்தது. சபையில் இருந்தவர்கள் அவர்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாங்கள் யெகோவா மாதிரியே இரக்கம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருவேளை பெருமைப்பட்டிருக்கலாம். ஆனால், தன்னுடைய மக்கள் மத்தியில் பாவத்தை யெகோவா கொஞ்சம்கூட பொறுத்துக்கொள்வதில்லை. இந்தத் துணிகரமான செயலால், பாவம் செய்தவர் சபையின் நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, அவர் தொடர்ந்து சபையிலேயே இருந்தால், அவரோடு பழகிக்கொண்டிருந்த மற்றவர்களும் அவரைப் பார்த்து கெட்டுப்போய்க்கொண்டு இருந்திருக்கலாம். அதனால், அவரை என்ன செய்ய வேண்டும் என்று பவுல் சபைக்குச் சொன்னார்?

5. சபை என்ன செய்ய வேண்டும் என்று பவுல் சொன்னார், அதற்கு என்ன அர்த்தம்? (1 கொரிந்தியர் 5:13) (படத்தையும் பாருங்கள்.)

5 1 கொரிந்தியர் 5:13-ஐ வாசியுங்கள். கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு பவுல் அந்தச் சபைக்கு ஒரு கடிதத்தை எழுதினார். மனம் திருந்தாத பாவியைச் சபையிலிருந்து நீக்கச் சொன்னார். சபையிலிருந்த மற்ற உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அவரை எப்படி நடத்த வேண்டும்? அவரோடு “பழகுவதை விட்டுவிட வேண்டும்” என்ற கட்டளையை பவுல் கொடுத்தார். அதற்கு என்ன அர்த்தம்? “அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது” என்று விளக்கினார். (1 கொ. 5:11) பொதுவாக, ஒருவரோடு சேர்ந்து சாப்பிடுவது, அவரோடு பேசிப் பழகுவதற்கு வாய்ப்பை உருவாக்கும். அப்படியென்றால், சபையில் இருக்கிறவர்கள் அந்த நபரோடு எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதைத்தான் பவுல் இங்கே தெளிவாகச் சொல்ல வருகிறார். இப்படிச் செய்வதால், சபை சுத்தமாக இருக்கும், அந்த நபருடைய கெட்ட செயல் மற்றவர்களைக் கெடுக்காது. (1 கொ. 5:5-7) அதுமட்டுமல்ல, பாவம் செய்தவரோடு சபையில் இருக்கிறவர்கள் நெருங்கிப் பழகாமல் இருக்கும்போது, இன்னொரு நன்மையும் இருக்கும். யெகோவாவுடைய வழிகளைவிட்டு எவ்வளவு தூரமாகப் போயிருக்கிறார் என்பதைப் பாவம் செய்தவர் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். தன்னுடைய செயலை நினைத்து வெட்கப்பட்டு, மனம் திருந்துவதற்கும் அவர் தூண்டப்படலாம்.

கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு பவுல் எழுதிய கடிதத்தில், மனம் திருந்தாத பாவியை சபையிலிருந்து நீக்கச் சொன்னார் (பாரா 5)


6. பவுல் எழுதிய கடிதம் கிடைத்த பிறகு சபையில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள், பாவம் செய்தவர் என்ன செய்தார்?

6 கொரிந்து சபைக்குக் கடிதம் எழுதிய பிறகு, அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் பவுலுடைய மனதில் ஓடியிருக்கும். ஆனால், தீத்து கொண்டுவந்த செய்தி அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. கொரிந்து சபையில் இருந்தவர்கள் பவுலுடைய கடிதத்தை ஏற்றுக்கொண்டார்கள், பாவம் செய்தவரைச் சபையிலிருந்து நீக்கினார்கள். (2 கொ. 7:6, 7) அதுமட்டுமல்ல, பவுல் கடிதம் எழுதிய பிறகு, அடுத்து வந்த மாதங்களில், தவறு செய்தவர் மனம் திருந்தியிருந்தார். தன்னுடைய நடத்தையையும் மனப்பான்மையையும் மாற்றிக்கொண்டு, யெகோவாவுடைய நீதியான ஒழுக்கநெறிகளின்படி வாழவும் ஆரம்பித்திருந்தார். (2 கொ. 7:8-11) சபைக்கு இப்போது பவுல் என்ன சொல்வார்?

மனம் திருந்திய நபரைச் சபையிலிருந்தவர்கள் எப்படி நடத்த வேண்டியிருந்தது?

7. பாவம் செய்தவரை சபையிலிருந்து நீக்கியதால் என்ன பலன் கிடைத்தது? (2 கொரிந்தியர் 2:5-8)

7 2 கொரிந்தியர் 2:5-8-ஐ வாசியுங்கள். “அவனை உங்களில் பெரும்பான்மையோர் கண்டித்திருப்பதே போதும்” என்று பவுல் சொன்னார். அதாவது, அந்த நபருக்கு எதற்காகக் கண்டிப்பு கொடுக்கப்பட்டதோ அதற்கான பலன் கிடைத்துவிட்டது. என்ன பலன்? அவர் மனம் திருந்திவிட்டார்!—எபி. 12:11.

8. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சபையில் இருந்தவர்களுக்கு பவுல் சொன்னார்?

8 ‘அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்துங்கள் . . . நீங்கள் அவன்மேல் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்’ என்று சபையில் இருந்தவர்களுக்கு பவுல் எழுதினார். அந்த நபரை சபையில் திரும்பவும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே பவுல் சொல்லவில்லை. இன்னும் அதிகத்தைச் செய்ய சொன்னார். அவரை உண்மையிலேயே மன்னித்துவிட்டதையும், அவர்மேல் அன்பு வைத்திருப்பதையும் தங்களுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் காட்டும்படி சொன்னார். அப்படிச் செய்யும்போது, தான் திரும்பி வந்ததை நினைத்து சபையில் இருக்கிறவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பதை அந்த நபரால் உணர முடியும்.

9. மனம் திருந்திய நபரை மன்னித்து ஏற்றுக்கொள்வது ஏன் சிலருக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம்?

9 மனம் திருந்திய நபரை திரும்பவும் சபையில் ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கஷ்டமாக இருந்திருக்குமா? பைபிள் அதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஆனால், அதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அவருடைய செயல், ஒரு சபையாக அவர்கள் எல்லாரையுமே பாதித்திருந்தது. குறிப்பிட்ட சிலருக்கு அது அவமானத்தைக்கூட கொண்டுவந்திருக்கலாம். வேறுசிலர் இப்படிக்கூட யோசித்திருக்கலாம்: ‘ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதற்கு நாம் இவ்வளவு பாடுபடுகிறோம். ஆனால், இவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவரை மறுபடியும் அன்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்!’ (லூக்கா 15:28-30-ஐ ஒப்பிடுங்கள்.) இருந்தாலும், மனம் திருந்தி வந்தவர்மேல், சபையிலிருந்த சகோதர சகோதரிகள் உண்மையான அன்பைக் காட்டுவது ரொம்ப முக்கியம். ஏன்?

10-11. மனம் திருந்திய ஒருவரை மூப்பர்கள் மன்னிக்க மறுத்துவிட்டால் என்ன நடக்கலாம்?

10 இப்படி யோசித்துப் பாருங்கள்: மனம் திருந்தி வருகிற ஒருவரை சபையில் திரும்பவும் சேர்த்துக்கொள்ள மூப்பர்கள் மறுத்துவிட்டால் என்ன ஆகலாம்? அல்லது, ஒருவர் சபைக்குள் திரும்பிவந்த பிறகு சபையில் இருக்கிறவர்கள் அவர்மேல் அன்பு காட்ட மறுத்துவிட்டால் என்ன ஆகலாம்? ‘அவர் ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கிவிட’ வாய்ப்பிருக்கிறது. திரும்பவும் சபையில் ஒருவராக ஆகவே முடியாது என்று அவர் நினைத்துவிடலாம். யெகோவாவோடு தனக்கு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்ய முயற்சி எடுக்காமலேகூட போய்விடலாம்.

11 ஆனால், இதைவிட மோசமான விஷயம் ஒன்றிருக்கிறது. மனம் திருந்தி சபைக்குள் வருகிறவர்களை சகோதர சகோதரிகள் மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்துக்கே பெரிய ஆபத்து வந்துவிடலாம்! ஏனென்றால், மனம் திருந்தி வருகிறவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிற யெகோவா மாதிரி நடந்துகொள்ளாமல் போய்விடுவார்கள். சாத்தான் மாதிரி கொடூரமாக, இரக்கமில்லாமல் நடந்துகொள்கிறவர்களாக ஆகிவிடுவார்கள். ஒருவிதத்தில், சாத்தானுடைய கையில் கருவிகள் ஆகிவிடுவார்கள். மனம் திருந்திய நபர் யெகோவாவுக்கு மறுபடியும் சேவை செய்ய முடியாத மாதிரி தடுத்துவிடுவார்கள்.—2 கொ. 2:10, 11; எபே. 4:27.

12. சபை எப்படி யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்?

12 அப்படியென்றால், கொரிந்து சபையில் இருந்தவர்கள் எப்படி சாத்தான் மாதிரி இல்லாமல் யெகோவா மாதிரி நடந்துகொள்ளலாம்? மனம் திருந்தி வருகிற பாவிகளை யெகோவா எப்படி நடத்துகிறாரோ அதேமாதிரி நடத்துவதன் மூலம்தான்! யெகோவாவைப் பற்றி பைபிள் எழுத்தாளர்கள் என்ன சொன்னார்கள் என்று கவனியுங்கள். யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று தாவீது சொன்னார். (சங். 86:5) “உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை. . . . குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்” என்று மீகா எழுதினார். (மீ. 7:18) ஏசாயா இப்படி எழுதினார்: “கெட்டவர்கள் கெட்ட வழிகளையும், கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு, நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும். அவர் இரக்கம் காட்டி அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.”—ஏசா. 55:7.

13. மனம் திருந்திய நபரைத் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்வது ஏன் சரியாக இருந்தது? (“ கொரிந்து சபையிலிருந்த அந்த நபர் எப்போது திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

13 கொரிந்து சபையில் இருந்தவர்கள் யெகோவா மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்றால், மனம் திருந்திய அந்த நபரை வரவேற்க வேண்டியிருந்தது; அவர்மேல் அன்பு வைத்திருப்பதைக் காட்ட வேண்டியிருந்தது. பவுல் சொன்ன அறிவுரையைக் கேட்டு அவரை வரவேற்பதன் மூலமாக, ‘எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறவர்களாக’ இருப்பதை சபையில் இருந்தவர்களால் காட்ட முடியும். (2 கொ. 2:9) உண்மைதான், சபையிலிருந்து அவர் நீக்கப்பட்டு ஒருசில மாதங்கள்தான் ஆகியிருந்தது. ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த கண்டிப்பை அவர் ஏற்றுக்கொண்டு மனம் திருந்தியிருந்தார். அதனால், அவரைத் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்வதற்கு மூப்பர்கள் காலத்தைத் தள்ளிப்போட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

யெகோவாவைப் போல் நீதியோடும் இரக்கத்தோடும் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

14-15. கொரிந்து சபையிலிருந்த பிரச்சினையைக் கையாண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (2 பேதுரு 3:9) (படத்தையும் பாருங்கள்.)

14 “நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே” கொரிந்து சபையிலிருந்த பிரச்சினை எப்படிக் கையாளப்பட்டது என்பதை யெகோவா பதிவுசெய்து வைத்திருக்கிறார். (ரோ. 15:4) படுமோசமான பாவம் செய்துவிட்டு மனம் திருந்தாமல் இருக்கும் ஒருவரை, தொடர்ந்து சபையில் இருக்க யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பதை இந்தப் பதிவு காட்டுகிறது. ஒருவேளை சிலர், ‘யெகோவா இரக்கமுள்ளவராக இருப்பதால், மனம் திருந்தாதவர்களையும் தொடர்ந்து சபையில் இருப்பதற்கு அனுமதிப்பார்’ என்று நினைக்கலாம். ஆனால், யெகோவா காட்டும் இரக்கம் அது கிடையாது. அவர் இரக்கமுள்ளவர் என்பதற்காக, ஒருவர் எப்படி நடந்துகொண்டாலும் அவரை ஏற்றுக்கொள்வார் என்று அர்த்தம் கிடையாது. தன்னுடைய நெறிமுறைகளை யெகோவா குறைத்துக்கொள்ள மாட்டார். (யூ. 4) மனம் திருந்தாத பாவிகளை சபையிலேயே இருக்க யெகோவா விட்டுவிட்டால், அது உண்மையிலேயே இரக்கம் கிடையாது. ஏனென்றால், சபையில் இருக்கிற மற்றவர்களை அது பாதிக்கும்.—நீதி. 13:20; 1 கொ. 15:33.

15 இருந்தாலும், யாரும் அழிந்துபோக வேண்டும் என்று யெகோவா நினைப்பதில்லை. முடிந்தவரை எல்லாரையும் காப்பாற்றத்தான் நினைக்கிறார். மனதை மாற்றிக்கொண்டு, தன்னோடு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்துகொள்ள நினைக்கிறவர்களுக்கு யெகோவா இரக்கம் காட்டுகிறார். (எசே. 33:11; 2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், கொரிந்து சபையிலிருந்த அந்த நபர் தன்னுடைய பாவ வழிகளைவிட்டு மனம் திருந்தி வந்தபோது, அவரை மன்னித்து சபையில் ஏற்றுக்கொள்ளும்படி பவுல் மூலமாக யெகோவா சொன்னார்.

திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களை அன்போடும் இரக்கத்தோடும் நடத்தும்போது நாம் யெகோவா மாதிரியே நடந்துகொள்கிறோம் (பாராக்கள் 14-15)


16. கொரிந்து சபையிலிருந்த பிரச்சினை கையாளப்பட்ட விதத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

16 கொரிந்து சபையிலிருந்த பிரச்சினை எப்படிக் கையாளப்பட்டது என்பதைப் பார்க்கும்போது, யெகோவா எவ்வளவு அன்பானவர், நீதியானவர், நியாயமானவர் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. (சங். 33:5) இதையெல்லாம் தெரிந்துகொண்டதால், யெகோவாவை இன்னும் அதிகமாகப் போற்றிப் புகழ வேண்டும் என்று தோன்றுகிறது, இல்லையா? இன்று யார்தான் பாவம் செய்யவில்லை? நம் ஒவ்வொருவருக்குமே யெகோவாவுடைய மன்னிப்பு தேவை. யெகோவா மீட்புவிலையின் அடிப்படையில் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! யெகோவா அவருடைய மக்களை உண்மையிலேயே நேசிக்கிறார்; அவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இது மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக, எவ்வளவு இதமாக இருக்கிறது!

17. அடுத்த கட்டுரைகளில் எதைப் பற்றிப் பேசுவோம்?

17 இன்று சபையில் ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால், அதை எப்படிக் கையாள வேண்டும்? மூப்பர்கள் எப்படி யெகோவா மாதிரியே அன்பு காட்டி, பாவம் செய்தவர் மனம் திருந்துவதற்கு உதவலாம்? ஒருவரை சபையிலிருந்து நீக்குவதற்கு மூப்பர்கள் முடிவு செய்யும்போது அல்லது அவரை திரும்பவும் சேர்த்துக்கொள்வதற்கு முடிவு செய்யும்போது, சபையில் இருக்கிற மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அடுத்து வரும் கட்டுரைகள் இதைப் பற்றி பேசும்.

பாட்டு 109 ஊக்கமாக அன்பு காட்டுங்கள்