படிப்புக் கட்டுரை 31
பாட்டு 12 ஈடில்லா தேவன் யெகோவா
பாவத்திலிருந்து மனிதர்களை மீட்க யெகோவா என்ன செய்திருக்கிறார்?
“கடவுள் தன்னுடைய ஒரே . . . [மகனை] தந்து இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவா. 3:16.
என்ன கற்றுக்கொள்வோம்?
பாவத்துக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவ, யெகோவாவே எப்படி முதல்படி எடுத்துவைக்கிறார் என்பதைப் பற்றியும், நாம் பாவத்திலிருந்து விடுதலையாகி என்றென்றும் வாழ அவர் என்ன ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) பாவம் என்றால் என்ன, பாவத்தை எதிர்த்துப் போராடி நாம் எப்படி ஜெயிக்கலாம்? (“வார்த்தையின் விளக்கம்” என்பதையும் பாருங்கள்.) (ஆ) இந்தக் கட்டுரையிலும் இந்த காவற்கோபுரத்தில் இருக்கும் மற்ற கட்டுரைகளிலும் எதைப் பற்றிப் பார்ப்போம்? (இந்த இதழில் “வாசகருக்குக் குறிப்பு” என்ற பகுதியையும் பாருங்கள்.)
யெகோவாவுக்கு உங்கள்மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள, உங்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பதற்கு அவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிப் படித்துப் பாருங்கள். பாவம் a என்பது கொடூரமான ஒரு எதிரி! உங்கள் சொந்த பலத்தால் அதைத் தோற்கடிக்கவே முடியாது. நாம் தினம் தினம் பாவம் செய்கிறோம்; பாவத்தால்தான் இறந்துபோகிறோம். (ரோ. 5:12) நல்ல விஷயம் என்னவென்றால், யெகோவாவின் உதவியோடு பாவம் என்ற அந்தக் கொடூர எதிரியை நம்மால் தோற்கடிக்க முடியும். நமக்கு வெற்றி நிச்சயம்!
2 கிட்டத்தட்ட 6,000 வருஷங்களாக பாவத்தை எதிர்த்து போராடுவதற்கு யெகோவா மனிதர்களுக்கு உதவி செய்துவருகிறார். ஏன்? ஏனென்றால், அவர் நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அவர் மனிதர்களை ரொம்ப ரொம்ப நேசித்திருக்கிறார். அதனால்தான், பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நிறைய உதவிகளை செய்துவருகிறார். பாவத்தால்தான் நாம் இறந்துபோகிறோம் என்பது அவருக்குத் தெரியும். யாரும் சாக வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை. எல்லாரும் என்றென்றும் வாழவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். (ரோ. 6:23) நீங்களும் என்றென்றும் வாழவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை! இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்: (1) பாவமுள்ள மனிதர்களுக்கு யெகோவா என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்? (2) பைபிள் காலங்களில் வாழ்ந்த பாவமுள்ள மனிதர்கள் யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்க என்ன செய்தார்கள்? (3) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களை மீட்க இயேசு என்ன செய்தார்?
யெகோவா என்ன நம்பிக்கை கொடுத்தார்?
3. ஆதாம் ஏவாள் எப்படிப் பாவிகளாக ஆனார்கள்?
3 ஆதாம் ஏவாளைப் படைத்தபோது அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா நினைத்தார். அவர்களுக்கு ஒரு அழகான வீட்டைக் கொடுத்தார்; கல்யாணம் பண்ணி வைத்தார்; சந்தோஷமான ஒரு வேலையைக் கொடுத்தார். அவர்கள் நிறைய பிள்ளைகளைப் பெற்றெடுத்து இந்தப் பூமியை நிரப்ப வேண்டியிருந்தது. அழகான ஏதேன் தோட்டம் மாதிரியே, இந்த பூமியை அவர்கள் மாற்ற வேண்டியிருந்தது. அதேசமயத்தில், யெகோவா அவர்களுக்கு ஒரேவொரு சின்ன கட்டுப்பாட்டையும் வைத்தார். அந்தக் கட்டுப்பாட்டை அவர்கள் மீறினால், அதாவது அவருக்கு எதிராக வேண்டுமென்றே கலகம் செய்தால், அந்தப் பாவத்தால் அவர்களுக்கு மரணம் வந்துவிடும் என்று எச்சரித்தார். பிறகு என்ன நடந்தது என்று நமக்கே தெரியும். ஒரு கெட்ட தேவதூதன் நடுவில் புகுந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டான். அவனுக்குக் கடவுள்மேலும் அன்பில்லை, ஆதாம் ஏவாள்மேலும் அன்பில்லை. பாவம் செய்ய அவன் ஆதாம் ஏவாளைத் தூண்டினான். அவர்களும் அவனுடைய வலையில் விழுந்துவிட்டார்கள். அவர்களைப் படைத்த அன்பான அப்பா யெகோவாவை நம்புவதற்குப் பதிலாக அவர்கள் பாவம் செய்துவிட்டார்கள். இப்போது, யெகோவா சொன்னதெல்லாம் அப்படியே நடக்க ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து பாவத்தின் விளைவுகளை அவர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வயதாகி, கடைசியில் இறந்தே போனார்கள்.—ஆதி. 1:28, 29; 2:8, 9, 16-18; 3:1-6, 17-19, 24; 5:5.
4. யெகோவா ஏன் பாவத்தை வெறுக்கிறார், அதை எதிர்த்துப் போராட நமக்கு ஏன் உதவுகிறார்? (ரோமர் 8:20, 21)
4 நம்முடைய நன்மைக்காகத்தான் இந்தச் சம்பவத்தை யெகோவா பதிவுசெய்து வைத்திருக்கிறார். பாவத்தை யெகோவா எந்தளவுக்கு வெறுக்கிறார் என்பதை இது நமக்குப் புரிய வைக்கிறது. பாவம், நம்மை நம்முடைய அப்பாவிடமிருந்து பிரிக்கிறது. நாம் இறந்துபோவதற்கும் அதுதான் காரணம். (ஏசா. 59:2) அதனால்தான் சாத்தான்—இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமானவன்—பாவத்தை நேசிக்கிறான். மனிதர்கள் எல்லாரையும் பாவம் செய்ய தூண்டுகிறான். ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, மனிதர்களுக்காக யெகோவா வைத்திருந்த நோக்கத்தைக் கெடுத்துவிட்டதாக அவன் நினைத்திருக்கலாம். பெரிய வெற்றி கிடைத்துவிட்டதாகவும் நினைத்திருக்கலாம். ஆனால், யெகோவா எவ்வளவு அன்பானவர் என்பதை அவன் புரிந்துகொள்ளவில்லை. ஆதாம் ஏவாளுடைய வம்சத்துக்காக யெகோவா என்ன நோக்கம் வைத்திருந்தாரோ, அதை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. மனிதர்களை யெகோவா நேசிக்கிறார். அதனால்தான் அப்போதே, அந்தச் சமயத்திலேயே, அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தார். (ரோமர் 8:20, 21-ஐ வாசியுங்கள்.) ஆதாம் ஏவாளுடைய வம்சத்தில் வருகிற சிலர் தன்னை நேசிப்பார்கள் என்றும், பாவத்துக்கு எதிரான போராட்டத்தில் தன்னிடம் உதவி கேட்பார்கள் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். அதனால் ஒரு அப்பாவாக, படைப்பாளராக மனிதர்களைப் பாவத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கும், தன்னிடம் அவர்கள் நெருங்கி வருவதற்கும் ஏற்பாடு செய்தார். என்ன அது?
5. யெகோவா மனிதர்களுக்கு எப்போது நம்பிக்கையைக் கொடுத்தார்? விளக்குங்கள். (ஆதியாகமம் 3:15)
5 ஆதியாகமம் 3:15-ஐ வாசியுங்கள். சாத்தானுக்குத் தண்டனை தீர்ப்பை யெகோவா கொடுத்தபோது, மனிதர்களுக்கான நம்பிக்கை ஒளி தெரிய ஆரம்பித்தது. மனிதர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு “சந்ததி” தோன்றுவார் என்று யெகோவா அப்போதே சொன்னார். ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்த எல்லா பிரச்சினைகளையும் அந்தச் சந்ததிதான் சரிசெய்வார். கடைசியில், சாத்தானுடைய தலையையும் நசுக்குவார். (1 யோ. 3:8) ஆனால் இடைப்பட்ட காலத்தில், அவர் கஷ்டத்தையும் அனுபவிப்பார். சாத்தான் அவரைத் தாக்குவான். அவருடைய மரணத்துக்குக் காரணமாக இருப்பான். அது யெகோவாவுக்குப் பயங்கர வேதனையைக் கொடுக்கும். ஆனால், லட்சக்கணக்கான மனிதர்களைப் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்பதற்காக இந்த வலியைத் தாங்கிக்கொள்ள யெகோவா முடிவு செய்தார்.
பாவமுள்ள மனிதர்கள் அன்று எப்படி யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதித்தார்கள்?
6. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு ஆபேல், நோவா மாதிரியான உண்மையுள்ள ஆட்கள் என்ன செய்தார்கள்?
6 காலங்கள் போகப்போக, பாவமுள்ள மனிதர்கள் தன்னிடம் எப்படி நெருங்கி வரலாம் என்பதை யெகோவா தெளிவாகக் காட்டினார். ஏதேன் தோட்டத்தில் நடந்த பிரச்சினைக்குப் பிறகு யெகோவாமேல் முதல்முதலில் விசுவாசம் வைத்த நபர் ஆபேல். இவர் ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகன். ஆபேல், யெகோவாவை நேசித்தார். யெகோவாவுடைய பிரியத்தைச் சம்பாதிக்க வேண்டும்... அவரிடம் நெருங்கிப் போக வேண்டும்... என்று நினைத்தார். அதனால், யெகோவாவுக்குப் பலி செலுத்தினார். அவர் ஒரு மேய்ப்பராக இருந்ததால், தன்னுடைய ஆடுகளின் முதல் குட்டிகளில் சிலவற்றை யெகோவாவுக்குப் பலியாகக் கொடுத்தார். அப்போது யெகோவா என்ன செய்தார்? “ஆபேலையும் அவன் காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 4:4) அதேபோல், தன்மேல் அன்பையும் நம்பிக்கையையும் வைத்த மற்ற ஆட்கள் கொடுத்த பலிகளையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். அவர்களில் நோவாவும் ஒருவர். (ஆதி. 8:20, 21) இந்த மாதிரி பலிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், பாவமுள்ள மனிதர்கள்கூட தன்னைப் பிரியப்படுத்த முடியும், தன்னிடம் நெருங்கி வர முடியும் என்பதை யெகோவா காட்டினார். b
7. தன்னுடைய சொந்த மகனைப் பலியாகக் கொடுக்க ஆபிரகாம் தயாராக இருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 விசுவாசத்துக்குப் பேர்போன ஒருவராக இருந்த ஆபிரகாமிடம், ரொம்ப ரொம்பக் கஷ்டமான ஒரு விஷயத்தை யெகோவா செய்ய சொன்னார். அவருடைய சொந்த மகன் ஈசாக்கைப் பலியாகக் கொடுக்கச் சொன்னார். அது ஆபிரகாமுக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்கும். இருந்தாலும், அவர் கீழ்ப்படியத் தயாராக இருந்தார். கடைசி நிமிஷத்தில், ஆபிரகாமை யெகோவா தடுத்தார். இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லிக்கொடுக்கிறது. யெகோவா தன்னுடைய சொந்த மகனையே பலியாகக் கொடுக்கத் தயாராக இருந்ததைக் காட்டுகிறது. மனிதர்கள்மேல் எந்தளவுக்கு அன்பு இருந்தால் யெகோவா இதைச் செய்வார்!—ஆதி. 22:1-18.
8. திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட பலிகள் எதற்கு அடையாளமாக இருந்தது? (லேவியராகமம் 4:27-29; 17:11)
8 பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்குத் திருச்சட்டத்தை கொடுத்தார். பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் பலிகள் செலுத்தப்பட வேண்டும் என்பதை அந்தச் சட்டம் காட்டியது. (லேவியராகமம் 4:27-29; 17:11-ஐ வாசியுங்கள்.) இந்த எல்லா பலிகளும், பிற்பாடு கொடுக்கப்படவிருந்த ஒரு மிகப்பெரிய பலிக்கு அடையாளமாக இருந்தது. அந்தப் பலிதான் மனிதர்களைப் பாவத்திலிருந்து முழுமையாகக் காப்பாற்றும். கடவுள் தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலமாக, வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி கஷ்டத்தை அனுபவிப்பார், கடைசியில் கொல்லப்படுவார் என்று விளக்கினார். அவர் பலியாடு மாதிரி கொல்லப்படுவார். (ஏசா. 53:1-12) அந்தச் சந்ததி, கடவுளுடைய விசேஷமான ஒரு மகனாக இருந்தார். யோசித்துப் பாருங்கள்: மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றுவதற்காக யெகோவா தன்னுடைய சொந்த மகனை... அன்பு மகனை... பலியாகக் கொடுத்திருக்கிறார்—உங்களைக் காப்பாற்றுவதற்காகக் கொடுத்திருக்கிறார்!
மனிதர்களைக் காப்பாற்ற இயேசு என்ன செய்தார்?
9. இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகர் என்ன சொன்னார்? (எபிரெயர் 9:22; 10:1-4, 12)
9 முதல் நூற்றாண்டில், யோவான் ஸ்நானகர் நாசரேத்தூர் இயேசுவைப் பார்த்து இப்படிச் சொன்னார்: “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” (யோவா. 1:29) இந்த வார்த்தைகள், இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்ட சந்ததி என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியது. அவர்தான் தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுக்கவிருந்தார். முன்பு இருந்ததைவிட, மனிதர்களுடைய நம்பிக்கை ஒளி இப்போது இன்னும் பிரகாசமாக ஆனது! பாவத்திலிருந்து மனிதர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கப்போகிறது!—எபிரெயர் 9:22; 10:1-4, 12-ஐ வாசியுங்கள்.
10. ‘பாவிகளை அழைக்க’ வந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?
10 தங்களுடைய பாவங்களால் நொந்துபோய் இருந்த ஆட்களுக்கு இயேசு விசேஷ கவனம் செலுத்தினார். தன்னுடைய சீஷர்களாக அவர்கள் ஆவதற்கு அழைப்பு கொடுத்தார். மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பாவம்தான் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால், பாவிகள் என்று மக்களால் முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு இயேசு விசேஷமாக உதவி செய்தார். “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் தேவை” என்ற உதாரணத்தைப் பயன்படுத்தி, “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று விளக்கினார். (மத். 9:12, 13) இயேசு சொன்ன மாதிரியே செய்தார். ஒருதடவை, இயேசுவின் பாதங்களை ஒரு பெண் தன்னுடைய கண்ணீரால் துடைத்தாள். அவளிடம் இயேசு மென்மையாகப் பேசினார். அவளுடைய பாவங்களை மன்னித்தார். (லூக். 7:37-50) ஒரு சமாரியப் பெண்ணுக்கு, ரொம்ப முக்கியமான விஷயங்களை இயேசு சொல்லிக்கொடுத்தார்; அவள் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்திருந்தும் அவர் அப்படிச் செய்தார். (யோவா. 4:7, 17-19, 25, 26) பாவத்தின் விளைவாக வரும் மரணத்தையும் ஒழித்துக்கட்ட, யெகோவா இயேசுவுக்குச் சக்தி கொடுத்திருந்தார். அது நமக்கு எப்படித் தெரியும்? ஆண்-பெண், பிள்ளைகள்-பெரியவர்கள் என வித்தியாசப்பட்ட ஆட்களை இயேசு உயிர்த்தெழுப்பினார்.—மத். 11:5.
11. பாவிகளால் ஏன் இயேசுவோடு சகஜமாகப் பழக முடிந்தது?
11 பாவத்தின் பிடியில் ஆழமாகச் சிக்கியிருந்த மக்கள்கூட இயேசுவிடம் நெருங்கி வந்தார்கள். அவரோடு பழகுவதற்கு அவர்கள் தயங்கவில்லை. இயேசு அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு கருணையோடு நடந்துகொண்டார். (லூக். 15:1, 2) அவர்கள் காட்டிய விசுவாசத்துக்காக அவர்களைப் பாராட்டினார்; அதற்கான பலனையும் கொடுத்தார். (லூக். 19:1-10) தன்னுடைய அப்பா யெகோவா எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதை இயேசு ரொம்ப அழகாகக் காட்டினார். (யோவா. 14:9) இரக்கமுள்ள தன்னுடைய அப்பா, மக்களை எவ்வளவு நேசிக்கிறார்... பாவத்தோடு போராடுகிறவர்களுக்கு உதவ எவ்வளவு ஆசைப்படுகிறார்... என்பதைத் தன்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாகக் காட்டினார். பாவிகள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்வதற்கும், தன்னைப் பின்பற்றி வருவதற்கும் இயேசு உதவினார்.—லூக். 5:27, 28.
12. தன்னுடைய மரணத்தைப் பற்றி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்?
12 தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுக்கப்போவது இயேசுவுக்கு முன்பே தெரியும். தன்னைக் காட்டிக் கொடுப்பார்கள்... மரக்கம்பத்தில் கொலை செய்வார்கள்... என்பதை இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு நிறைய தடவை சொன்னார். (மத். 17:22; 20:18, 19) தன்னுடைய பலி, இந்த உலகத்தின் பாவத்தை நீக்கும் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். யோவான் ஸ்நானகரும், தீர்க்கதரிசிகளும் அதைப் பற்றித்தான் முன்பே சொல்லியிருந்தார்கள். தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுத்த பிறகு, “எல்லா விதமான மக்களையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (யோவா. 12:32) பாவமுள்ள மனிதர்கள், இயேசுவை எஜமானாக ஏற்றுக்கொண்டு, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, யெகோவாவைப் பிரியப்படுத்த முடியும். அப்படி அவர்கள் செய்தால், ‘பாவத்திலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள்!’ (ரோ. 6:14, 18, 22; யோவா. 8:32) அதனால்தான், மிகக் கொடூரமான மரணத்தைச் சந்திப்பதற்கு இயேசு தயாராகவும், தைரியமாகவும் இருந்தார்!—யோவா. 10:17, 18.
13. இயேசு எப்படி இறந்தார், அவருடைய மரணம் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது? (படத்தையும் பாருங்கள்.)
13 இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார். கைது செய்யப்பட்டார். வார்த்தைகளால் குத்திக் கிழிக்கப்பட்டார். பழித்துப் பேசப்பட்டார். குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். சித்திரவதைச் செய்யப்பட்டார். கொல்லப்படும் இடத்துக்குப் படைவீரர்களால் இழுத்துக் கொண்டுபோகப்பட்டார். மரக்கம்பத்தில் வைத்து ஆணி அடிக்கப்பட்டார். வார்த்தைகளால் விவரிக்க முடியாத இவ்வளவு வலியையும், வேதனையையும் இயேசு உண்மையோடு சகித்துக்கொண்டார்! அந்தச் சமயத்தில், இன்னொருவரும் பயங்கரமான வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்தார். அவர்தான் யெகோவா! எல்லையில்லாத சக்தி தனக்கு இருந்தபோதிலும், அத்தனை சக்தியையும் அந்தச் சமயத்தில் கட்டுப்படுத்திக்கொண்டார்; அவர் அதிலெல்லாம் தலையிடவில்லை. ஏன்? ஒரு அன்பான அப்பா ஏன் அந்தச் சமயத்தில் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டார்? அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேண்டுமென்றால், அன்புதான்! இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவா. 3:16.
14. இயேசுவின் பலியிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
14 ஆதாம் ஏவாள் வம்சத்தில் வந்த மனிதர்கள்மேல் யெகோவா எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய அத்தாட்சிதான் இயேசுவின் பலி! உங்கள்மேல் யெகோவாவுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை அது நிரூபித்துக் காட்டுகிறது! பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் உங்களை மீட்பதற்கு அவர் கொடுமையான வலியைத் தாங்கிக்கொண்டார். உங்களுக்காக அவர் எவ்வளவு தூரம் போயிருக்கிறார், பார்த்தீர்களா? (1 யோ. 4:9, 10) பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், அதை ஜெயிப்பதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் உதவ அவர் ஆசையாக இருக்கிறார்.
15. கடவுள் கொடுத்த மீட்புவிலை என்ற பரிசிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
15 கடவுள் தன்னுடைய ஒரே மகனை மீட்பு பலியாக நமக்குக் கொடுத்தது, நமக்குக் கிடைத்த ஒரு பெரிய பரிசு. இந்தப் பரிசால் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கிறது. ஆனால், கடவுள் நம்முடைய பாவங்களை மன்னிக்க வேண்டுமென்றால், நாமும் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. அது என்ன? அதை யோவான் ஸ்நானகரும் இயேசுவுமே சொன்னார்கள்: “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்றார்கள். (மத். 3:1, 2; 4:17) அப்படியென்றால், பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் நம்முடைய அன்பான அப்பா யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கும் மனம் திருந்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். மனம் திருந்துவது என்றால் என்ன? பாவமுள்ள மனிதர்கள் யெகோவாவைப் பிரியப்படுத்த அது எப்படி உதவும்? அடுத்த கட்டுரை பதில் சொல்லும்.
பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!
a வார்த்தையின் விளக்கம்: பைபிளில், “பாவம்” என்ற வார்த்தை நாம் செய்கிற தவறுகளைக் குறிக்கலாம். அதாவது, யெகோவாவுடைய சட்டங்களின்படி வாழாதபோதும், அதை மீறும்போதும் நாம் செய்கிற தவறுகளைக் குறிக்கலாம். அதோடு, “பாவம்” என்ற வார்த்தை, ஆதாமிடமிருந்து வந்த பாவ இயல்பையும், அதாவது தவறு செய்கிற இயல்பையும், குறிக்கலாம். ஆதாமிடமிருந்து வந்த இந்தப் பாவத்தால்தான் நாம் எல்லாருமே சாகிறோம்.