உங்கள் ஊழியம் பனித்துளியைப் போல் இருக்கிறதா?
நாம் செய்யும் ஊழியம் ரொம்ப முக்கியமானது, மதிப்புள்ளது. ஆனால், நிறைய மக்கள் இதை புரிந்துகொள்வதில்லை. பைபிள் சொல்லும் விஷயங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் நம்மோடு சேர்ந்து பைபிளை படிப்பது அவ்வளவு முக்கியம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
காவின் என்பவரின் அனுபவத்தை கவனியுங்கள். அவர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தாலும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்: “பைபிளை பத்தியெல்லாம் எனக்கு அதிகமா தெரியாது. அதை மறைக்கத்தான் நான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கல. பைபிளை படிச்சா நான் மதம் மாற வேண்டியிருக்குமோனு நினைச்சு பயந்தேன். அதுமட்டுமில்ல அவங்க என்னை ஏமாத்திடுவாங்களோனு நினைச்சு பயந்தேன்.” காவனுக்கு உதவி செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பைபிள் விஷயங்களை தெரிந்துகொள்ளும்போது ஒருவர் எந்தளவு நன்மையடைகிறார் என்று யோசித்துப் பாருங்கள். “பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்” என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (உபா. 31:19, 30; 32:2) இப்போது நாம் பனித்துளியைப் பற்றியும் அது எப்படி ஊழியத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம். ஊழியத்தில் நாம் பார்க்கிற எல்லா ஜனங்களுக்கும் நற்செய்தியை இன்னும் நன்றாக சொல்ல இது நமக்கு உதவும்.—1 தீ. 2:3, 4.
ஊழியம் எப்படி பனித்துளியைப் போல் இருக்கிறது?
பனித்துளி மென்மையாக இருக்கிறது. காற்றில் இருக்கிற ஈரப்பதம் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பனித்துளிகளாக மாறுகிறது. யெகோவா சொன்ன விஷயங்கள் “பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல” இருந்தது என்று எப்படி சொல்லலாம்? யெகோவா தன் ஜனங்களிடம் அன்பாக, அக்கறையாக, மென்மையாக பேசினார். நாமும் அவரைப் போல் நடந்துகொள்ள வேண்டுமென்றால் மற்றவர்களுடைய மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். பைபிள் விஷயங்களை அவர்களாகவே யோசித்துப் பார்த்து சொந்தமாக தீர்மானம் எடுக்க உற்சாகப்படுத்த வேண்டும். இப்படி அவர்கள்மீது அக்கறை காட்டினால் நாம் சொல்வதை கேட்க அவர்கள் தயாராக இருப்பார்கள். அதேசமயம், நாம் செய்யும் ஊழியத்துக்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.
பனித்துளி புத்துணர்ச்சி கொடுக்கிறது. பைபிள்மீது ஆர்வத்தை வளர்க்க மற்றவர்களுக்கு என்னென்ன வழிகளில் உதவி செய்யலாம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், நாம் சொல்லும் நற்செய்தி அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். முதலில் காவினை சந்தித்த கிறிஸ் என்ற சகோதரர் பைபிள் படிப்பு படிக்க அவரை கட்டாயப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக பைபிளைப் பற்றி காவினே ஆர்வமாக பேசுவதற்கு வித்தியாசமான விதங்களில் முயற்சி செய்தார். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை பைபிளில் ஒரேவொரு முக்கியமான விஷயம்தான் இருக்கிறது என்றும் அதைப் பற்றி தெரிந்துகொண்டால் கூட்டங்களில் சொல்லும் விஷயங்களை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் சொன்னார். பைபிள் உண்மை என்று நம்புவதற்கு அதிலிருக்கும் தீர்க்கதரிசனங்கள்தான் தனக்கு உதவியது என்று கிறிஸ் சொன்னார். இதனால், அவர்கள் இருவரும் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றி பலமுறை பேசினார்கள். இப்படி பேசியது காவினுக்கு ரொம்ப பிடித்திருந்தது. கடைசியாக, காவின் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
பனித்துளி வாழ்வுக்கு வழிநடத்துகிறது. இஸ்ரவேலில் வெயில் காலம் ரொம்ப வறட்சியாக இருக்கும், பல மாதங்களுக்கு மழை இருக்காது. பனித்துளி ஏற்படுத்தும் ஈரப்பதம் இல்லாதபோது செடிகொடிகள் வாடிவிடும். நம்முடைய காலத்திலும் இதேபோன்ற வறட்சி இருக்கும் என்று யெகோவா சொன்னார். அதாவது, “யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம் இருக்கும்” என்று சொன்னார். (ஆமோ. 8:11, NW) ‘வேறே ஆடுகளின்’ உதவியோடு நற்செய்தியை பிரசங்கிக்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் “கர்த்தராலே வருகிற பனியைப்போல” இருக்கிறார்கள் என்று யெகோவா சொன்னார். (மீ. 5:7; யோவா. 10:16) கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஏங்கும் மக்களுக்கு நாம் சொல்லும் நற்செய்தி உயிர்காக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த நற்செய்தியை நாம் உயர்வாக மதிக்கிறோமா?
பனித்துளி யெகோவாவின் ஆசீர்வாதமாக இருக்கிறது. (உபா. 33:13) நாம் செய்யும் ஊழியம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது. காவினுக்கும் அப்படித்தான் இருந்தது. ஏனென்றால், அவருக்கு இருந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் படிப்பு மூலமாக பதில் கிடைத்தது. அவர் நன்றாக முன்னேற்றம் செய்து ஞானஸ்நானம் எடுத்தார். இப்போது அவருடைய மனைவி ஜாய்ஸோடு சேர்ந்து நற்செய்தியை பிரசங்கிக்கிறார்.
ஊழியத்தை உயர்வாக மதியுங்கள்
ஊழியத்தை பனித்துளிக்கு ஒப்பிடும்போது நாம் ஒவ்வொருவரும் செய்யும் ஊழியம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படி? ஒரேயொரு பனித்துளியால் அதிக பிரயோஜனம் இல்லாததுபோல் நமக்கு தோன்றலாம். ஆனால், சிறுதுளி பெருவெள்ளமாக ஆவதுபோல் பல பனித்துளிகள் ஒன்றுசேரும்போது நிலத்தில் ஈரப்பதம் ஏற்படும். அதேபோல், நாம் ஒவ்வொருவரும் செய்யும் ஊழியத்தால் பெரிதாக எதுவும் சாதிக்காதது போல் நமக்கு தோன்றலாம். ஆனால், யெகோவாவுடைய மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து உழைப்பதால்தான் “எல்லாத் தேசத்தாருக்கும்” நற்செய்தியை சொல்ல முடிகிறது. (மத். 24:14) நாம் சொல்லும் நற்செய்தி மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமா? நிச்சயமாக இருக்கும்! அந்த செய்தி பனித்துளியைப் போல் மென்மையாக, புத்துணர்ச்சி அளிப்பதாக, உயிர்காக்கும் செய்தியாக இருக்கும்போது அது அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.