Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடவுள் தரும் ‘உத்தரவாதமும்,’ ‘முத்திரையும்’ எதை குறிக்கிறது?—2 கொ. 1:21, 22.

பூர்வகாலத்தில், ஒரு பத்திரத்துக்கு அதிகாரப்பூர்வ சான்றை அளிப்பதற்கு களிமண்ணை அல்லது மெழுகை பயன்படுத்தி முத்திரை மோதிரத்தால் முத்திரைப் போட்டார்கள்

உத்தரவாதம்: 2 கொரிந்தியர் 1:22-ல் “உத்தரவாதம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை “சட்டத்துறையிலும் வியாபார துறையிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை” என்று ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. “ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே கொடுக்கப்படும் முதல் தவணையை, டெப்பாஸிட்டை, முன்பணத்தை இது குறிக்கிறது. இதன் மூலம் அந்த பொருள் அதை வாங்கியவருக்கு சட்டப்படி சொந்தம் என்ற உத்தரவாதத்தை தருகிறது. அல்லது, ஒருவர் செய்திருக்கும் ஒப்பந்தத்தை செல்லுபடியாக்குகிறது.” அதேபோல், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசை பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசை பற்றி 2 கொரிந்தியர் 5:1-5 சொல்கிறது. அழிக்க முடியாத பரலோக உடல் அவர்களுக்கு பரிசாக கிடைக்கப்போகிறது. அதோடு, சாவாமையுள்ள வாழ்க்கையும் அவர்களுக்கு கிடைக்கப்போகிறது.—1 கொ. 15:48-54.

நவீன கிரேக்க மொழியில், நிச்சயதார்த்த மோதிரத்தை குறிப்பதற்கு இதேபோன்ற ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அடையாள அர்த்தத்தில் கிறிஸ்துவுக்கு மனைவியாக ஆகப்போகிறவர்களுக்கு இந்த வார்த்தை ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.—2 கொ. 11:2; வெளி. 21:2, 9.

முத்திரை: பூர்வகாலத்தில், ஏதோவொன்று ஒருவருக்கு சொந்தம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு அல்லது அவருக்கு அதன்மீது உரிமை இருக்கிறது என்று காட்டுவதற்கு முத்திரை போடப்பட்டது. இது கையெழுத்துப் போடுவதற்கு சமமாக இருந்தது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை. அவர்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்பதை காட்டுவதற்காக கடவுளுடைய சக்தியின் மூலம் முத்திரை போடப்பட்டிருக்கிறார்கள். (எபே. 1:13, 14) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் சாவதற்கு கொஞ்சம் முன்பு, அல்லது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்புதான் இந்த முத்திரை அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும்.—எபே. 4:30; வெளி. 7:2-4.