Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துகிறீர்களா?

கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துகிறீர்களா?

அதன் எடை சுமார் 1.4 கிலோதான். ஆனால், அதுதான் இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே ரொம்ப சிக்கலானது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அது என்ன? அதுதான் நம் மூளை. இது வேலை செய்யும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. யெகோவாவின் படைப்பு எவ்வளவு ‘அதிசயமானது’ என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. (சங். 139:14) மூளை செய்யும் பல வேலைகளில் ஒரு வேலையைப் பற்றி இப்போது பார்க்கலாம். அதுதான் கற்பனைத் திறன்.

கற்பனை என்றால் என்ன? “புதிதான ஒரு விஷயத்தை அல்லது இதுவரை நீங்கள் பார்க்காத ஒரு விஷயத்தை உங்கள் மனக்கண்ணில் தத்ரூபமாக யோசித்துப் பார்ப்பதுதான்” கற்பனை என்று ஒரு டிக்ஷனரி சொல்கிறது. இந்த டிக்ஷனரி சொல்வதுபோல் நாம் எல்லாருமே அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கற்பனை செய்து பார்த்திருப்போம். உதாரணத்துக்கு, நாம் இதுவரை பார்க்காத ஒரு இடத்தைப் பற்றி கேள்விப்படும்போது அல்லது படிக்கும்போது உடனே அந்த இடத்தை கற்பனை செய்திருப்போம். நாம் இதுவரை பார்க்காத, கேட்காத, ருசிக்காத, முகராத, தொட்டுப் பார்க்காத ஒன்றைப் பற்றி யோசிக்கும்போது உடனே கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

மனிதர்களை கடவுள் அவருடைய சாயலில் படைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 1:26, 27) அப்படியென்றால் யெகோவாவும் கற்பனைத் திறனை பயன்படுத்துகிறார் என்று இதிலிருந்து தெரிகிறது இல்லையா? யெகோவா நமக்கு இந்த திறனை கொடுத்திருக்கிறார் என்றால் அதை நாம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் விஷயங்களை பற்றியும் அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை பற்றியும் கற்பனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். (பிர. 3:11) இப்போது, கற்பனைத் திறனை எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்றும் தவறாக பயன்படுத்துவதை எப்படி தவிர்க்கலாம் என்றும் பார்க்கலாம்.

கற்பனைத் திறனை தவறாக பயன்படுத்தாதீர்கள்

(1) தவறான விஷயங்களையோ அல்லது தவறான நேரத்திலோ கற்பனை செய்யாதீர்கள்.

ஒரு விஷயத்தை கற்பனை செய்து பார்ப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இருந்தாலும், “ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று பிரசங்கி 3:1 சொல்கிறது. அதனால் ஒரு விஷயத்தை நாம் எந்த சமயத்தில் கற்பனை செய்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு சபை கூட்டங்கள் நடக்கும்போது, பைபிளை படிக்கும்போது வேறு எதையாவது கற்பனை செய்வது சரியாக இருக்காது. தவறான விஷயங்களைப் பற்றி, அதுவும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி, கற்பனை செய்வது எவ்வளவு ஆபத்தானது என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (மத். 5:28) நாம் யோசிக்கும் சில விஷயங்கள் யெகோவாவுக்கு சுத்தமாக பிடிக்காமல் இருக்கலாம். ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால் நாம் அதை நிஜமாகவே செய்துவிடுவோம். அதனால் யெகோவாவிடமிருந்து உங்களை பிரிக்கிற எந்த விஷயத்தையும் கற்பனை செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருங்கள்.

(2) பணமும் பொருளும் பாதுகாப்பு தரும் என்று நினைக்காதீர்கள்.

நமக்கு பணமும் பொருளும் தேவைதான். ஆனால் அதுதான் நமக்கு சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தரும் என்று நினைத்தால் நாம் ஏமாந்துதான் போவோம். “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்” என்று சாலொமோன் ஞானி சொன்னார். (நீதி. 18:11) செப்டம்பர் 2009-ல் பிலிப்பைன்ஸிலுள்ள மணிலாவில் பலத்த மழை பெய்ததால் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது பணக்காரர்களாக இருந்தவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தார்களா? இல்லவே இல்லை. வெள்ளத்தில் தன் சொத்துபத்துகளை இழந்த ஒரு பணக்காரர் இப்படி சொன்னார்: “ஏழை-பணக்காரங்கனு எந்த வித்தியாசமும் பார்க்காம எல்லாரோட வாழ்க்கையையும் இந்த வெள்ளம் நாசமாக்கிடுச்சு.” அப்படியென்றால், பணமும் பொருளும் நமக்கு உண்மையான பாதுகாப்பை தராது என்பது தெளிவாக தெரிகிறது.

(3) நடக்காத ஒன்றை நினைத்து அநாவசியமாக கவலைப்படாதீர்கள்.

சதா கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் எப்போதும் கற்பனையிலேயே மூழ்கியிருப்பார். நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் ரொம்பவே சோர்ந்துவிடுவோம். கவலைப்படுகிறவர்கள் மனச்சோர்வில் கஷ்டப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:25) அளவுக்கு அதிகமாக “கவலைப்படாதீர்கள்” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். (மத். 6:34) இயேசு சொன்ன ஆலோசனைக்கு கீழ்ப்படிவது எவ்வளவு நல்லது! அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதற்கு பதிலாக அந்தந்த நாளுக்கான கவலைகளை எப்படி சமாளிப்பது என்று நாம் யோசிக்கலாம்.

கற்பனைத் திறனை சரியாக பயன்படுத்துங்கள்

(1) ஆபத்தை தவிர்ப்பதற்கு முன்னதாகவே அதை யோசித்துப் பாருங்கள்

நடக்கப்போகும் விஷயங்களை முன்னதாகவே யோசித்துப் பார்த்து விவேகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 22:3) நாம் எடுக்கும் தீர்மானத்தினால் வரும் பின்விளைவுகளை நம்மால் முன்னதாகவே கற்பனை செய்து பார்க்க முடியும். உதாரணத்துக்கு, உங்களை யாராவது ஒரு பார்ட்டிக்கு அழைத்தால் அதற்கு போகலாமா வேண்டாமா என்று முன்னதாகவே யோசித்து தீர்மானம் எடுக்க முடியும். எப்படி? யாரெல்லாம் அங்கே வருவார்கள், எவ்வளவு பேர் வருவார்கள், எந்த இடத்தில் நடக்கும், எப்போது நடக்கும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, ‘அந்த பார்ட்டியில் என்னவெல்லாம் நடக்கும்? அங்கே பைபிள் நியமங்களுக்கு எதிராக எதுவும் நடக்காமல் இருக்குமா?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். இப்படி செய்யும்போது அந்த பார்ட்டியை உங்களால் கற்பனை செய்ய முடியும். இப்படி கற்பனை செய்து நீங்கள் ஞானமான தீர்மானத்தை எடுக்கும்போது யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் முறிந்துபோகாது.

(2) கஷ்டமான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு பிரச்சினையை எப்படி சரிசெய்யலாம் என்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணத்துக்கு, உங்கள் சபையில் இருக்கும் ஒருவரோடு உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை சரிசெய்து அவரோடு சமாதானமாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? அதற்கு நிறைய விஷயங்களைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்: ‘எந்த சமயத்தில் இந்த பிரச்சினையைப் பற்றி அவரிடம் பேசுவது சரியாக இருக்கும்? எப்படிப்பட்ட வார்த்தைகளை பேசலாம்? அந்த சகோதரர் அல்லது சகோதரி பொதுவாக எப்படி பேசுவார்? நான் எப்படி பேசினால் அவர் காதுகொடுத்து கேட்பார்?’ இப்படி கற்பனை செய்தால் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிறைய வழிகள் கிடைக்கும். அதில் சிறந்த வழியை தேர்ந்தெடுத்தால் அவரோடு திரும்பவும் உங்களால் சமாதானமாக முடியும். (நீதி. 15:28) அதோடு, சபையிலும் சமாதானம் இருக்கும்.

(3) பைபிள் சம்பவங்களை ஆழமாக புரிந்துகொள்ள அதை கற்பனை செய்து பாருங்கள்.

தினமும் பைபிளை படிப்பது ரொம்ப முக்கியம். ஆனால் அதை வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அன்றாட வாழ்க்கைக்கு உதவும் ஆலோசனைகளை கண்டுபிடித்து அதை கடைப்பிடிக்க வேண்டும். பைபிளைப் படிக்க படிக்க யெகோவா கொடுக்கும் ஆலோசனைகள் எவ்வளவு சிறந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதற்கு கற்பனைத் திறன் ரொம்ப உதவியாக இருக்கும். எப்படி? இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் புத்தகத்தை படிக்கும்போது நம் கற்பனை திறன் இன்னும் அதிகமாகும். ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லப்பட்ட விஷயங்களும் அதில் இருக்கும் படங்களும் அந்த சம்பவங்களை மனக்கண்ணில் ஓடவிட நமக்கு உதவும். அதில் விவரிக்கப்படும் காட்சிகளை பார்க்க, சத்தத்தை கேட்க, வாசனையை முகர, அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள அந்த புத்தகம் உதவும். இப்படி கற்பனை செய்து படிக்கும்போது நமக்கு நன்றாக தெரிந்த சம்பவங்களிலிருந்துகூட இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். பைபிளை இப்படி ஆழமாகப் படிக்கும்போது அதிலிருந்து நிறைய பொக்கிஷங்களை தோண்டி எடுக்க முடியும்.

(4) அனுதாபத்தை காட்ட கற்பனைத் திறனை பயன்படுத்துங்கள்.

மற்றவர்கள் படும் கஷ்டத்தை நம் மனதில் உணர்வதுதான் அனுதாபம். அது ஒரு அருமையான குணம். யெகோவாவும் இயேசுவும் இந்த குணத்தைக் காட்டுவதால் நாமும் இந்த குணத்தைக் காட்ட வேண்டும். (யாத். 3:7; சங். 72:13) அனுதாபத்தை காட்டுவதற்கு ஒரு முக்கியமான வழி கற்பனைத் திறனை பயன்படுத்துவது. சிலசமயம் நம்முடைய சகோதர சகோதரிகள் படும் கஷ்டங்களை நாம் அனுபவித்திருக்க மாட்டோம். இருந்தாலும் உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் அவங்க சூழ்நிலையில இருந்தா எனக்கு எப்படி இருக்கும்? அந்த சமயத்துல எனக்கு என்ன தேவைப்படும்?’ இப்படியெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால் மற்றவர்கள்மீது அனுதாபம் காட்ட முடியும். ஊழியத்தில், குடும்பத்தில், சபையில் என எல்லா இடங்களிலும் இந்த குணத்தை காட்ட முடியும்.

(5) புதிய உலகத்தை கற்பனை செய்து பாருங்கள்.

புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நிறைய வசனங்கள் அழகாக விவரிக்கின்றன. (ஏசா. 35:5-7; 65:21-25; வெளி. 21:3, 4) அதோடு, நம்முடைய அமைப்பு வெளியிடும் புத்தகங்களில் புதிய உலகத்தைப் பற்றிய நிறைய படங்கள் இருக்கின்றன. புதிய உலகத்தை கற்பனை செய்து பார்க்கவும் யெகோவா கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களை நாம் அனுபவிப்பது போல் யோசித்துப் பார்க்கவும் இவை உதவுகின்றன. கற்பனைத் திறனுக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்று யெகோவாவுக்குத்தான் நன்றாக தெரியும். ஏனென்றால் அவர்தான் அதை நமக்கு கொடுத்திருக்கிறார். அதனால், அவர் கொடுத்த வாக்குறுதிகளை நாம் கற்பனை செய்து பார்க்கும்போது அதெல்லாம் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல, இன்று நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கடைசிவரை உண்மையாக இருக்க அது நமக்கு உதவும்.

யெகோவாவுக்கு நம்மீது அன்பிருப்பதால்தான் இந்தத் திறனை நமக்கு கொடுத்திருக்கிறார். தினசரி வாழ்க்கையில் அவருக்கு நன்றாக சேவை செய்ய இந்த திறன் நமக்கு உதவும். இந்த திறனை சரியாக பயன்படுத்துவதன் மூலம் யெகோவாவுக்கு நாம் நன்றியோடு இருக்கலாம்.