Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?

நாம் ஏன் கூட்டங்களுக்கு வரவேண்டும்?

‘ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களை . . . தவறவிடாமல் ஒன்றுகூடிவருவோமாக.’ —எபி. 10:24, 25.

பாடல்கள்: 20, 119

1-3. (அ) ஒன்றுகூடி வருவதென்றால் கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று எப்படி சொல்லலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) இந்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?

அப்போது கொரினாவுக்கு 17 வயதுதான். அவளுடைய அம்மாவைக் கைதுசெய்து கட்டாய வேலை முகாமுக்கு அனுப்பிவிட்டார்கள். பிறகு கொரினாவை, பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சைபீரியாவுக்கு நாடுகடத்தினார்கள். அவளை ஒரு அடிமையைப் போல் நடத்தினார்கள். சிலசமயம் கடுமையான குளிரில் அவளை வேலை செய்ய சொன்னார்கள். குளிரிலிருந்து தப்பிப்பதற்கு அவளிடம் போதுமான துணிமணிகூட இல்லை. இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாலும் கொரினாவும் இன்னொரு சகோதரியும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கூட்டங்களுக்கு போவார்கள்.

2 “சாயங்காலம் வேலையெல்லாம் முடிச்சிட்டு 25 கி.மீ. (15 மைல்) தூரத்துல இருந்த ரயில் நிலையத்துக்கு நடந்தே போவோம். விடியற்காலை 2 மணிக்கு ரயில் கிளம்பும். ரயில் போய் சேர 6 மணிநேரம் ஆகும். அதுக்கு அப்புறம் 10 கி.மீ. (6 மைல்) நடந்துபோய் கூட்டங்கள்ல கலந்துக்குவோம்” என்று கொரினா சொன்னாள். கூட்டங்களுக்கு போவதற்காக அந்தளவு முயற்சி எடுத்ததை நினைத்து கொரினா ரொம்ப சந்தோஷப்பட்டாள். “கூட்டங்கள்ல நாங்க காவற்கோபுரத்தை படிச்சோம். ராஜ்ய பாடல்களை பாடுனோம். அது எங்களுக்கு ரொம்ப உற்சாகமா இருந்துச்சு, எங்க விசுவாசத்தை பலப்படுத்துச்சு” என்றார் கொரினா. மூன்று நாள் கழித்து அவர்கள் திரும்பவும் வேலைக்கு வருவார்கள். அவர்கள் அங்கே இல்லாதது அந்த பண்ணையின் மேனேஜருக்கு தெரியவே தெரியாது.

3 யெகோவாவின் மக்களுக்கு ஒன்றுகூடி வருவது என்றால் ரொம்ப பிடிக்கும். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் ஆர்வமாக ஒன்றுகூடி வந்து யெகோவாவை வணங்கினார்கள், அவரைப் பற்றி கற்றுக்கொண்டார்கள். (அப். 2:42) அவர்களைப் போலவே நீங்களும் கூட்டங்களுக்கு போக ரொம்ப ஆர்வமாக இருக்கலாம். இருந்தாலும் மற்ற சகோதர சகோதரிகளைப் போலவே ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்கு போவது உங்களுக்கு சிலசமயம் சவாலாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ‘ஓவர் டைம்’ செய்ய வேண்டியிருக்கலாம், ரொம்ப பிஸியாக இருக்கலாம், அல்லது ரொம்ப களைப்பாக இருக்கலாம். இருந்தாலும், கூட்டங்களை தவறவிடாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்? [1] (பின்குறிப்பு) கூட்டங்களுக்கு தவறாமல் வர நம் பைபிள் மாணாக்கர்களையும் மற்றவர்களையும் நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்? கூட்டங்களுக்கு நாம் வருவதால் (1) நமக்கு என்ன நன்மை, (2) மற்றவர்களுக்கு என்ன நன்மை, (3) யெகோவாவை எப்படி பிரியப்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம். [2]—பின்குறிப்பு.

நமக்கு என்ன நன்மை?

4. கூட்டங்களுக்கு ஒன்றுகூடி வருவதால் நாம் எப்படி யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறோம்?

4 நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நாம் யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, சில வருஷங்களுக்கு முன்பு யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை நாம் சபை பைபிள் படிப்பில் படித்தோம். அதிலிருந்து யெகோவாவுடைய குணங்களைப் பற்றி தெரிந்துகொண்டபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? சகோதர சகோதரிகள் சொன்ன பதிலை கேட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? யெகோவாமீது உங்களுக்கு இருந்த அன்பு இன்னும் அதிகமாகியிருக்கும் இல்லையா? கூட்டங்களில் பைபிளை வாசிக்கும்போது, அங்கு கொடுக்கப்படும் பேச்சுகளை, நடிப்புகளை கவனமாக கேட்கும்போது பைபிளிலிருந்து நாம் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். (நெ. 8:8) ஒவ்வொரு வாரமும் பைபிள் சிறப்பு குறிப்புகளுக்காக தயாரிக்கும்போது நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்கிறோம். மற்றவர்கள் சொல்கிற குறிப்புகளிலிருந்தும் நிறைய கற்றுக்கொள்கிறோம்.

5. பைபிள் நியமங்களை கடைப்பிடிக்கவும் நன்றாக ஊழியம் செய்யவும் கூட்டங்கள் எப்படி உதவுகிறது?

5 பைபிள் நியமங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் கூட்டங்கள் நமக்கு உதவுகிறது. (1 தெ. 4:9, 10) முக்கியமாக, காவற்கோபுர படிப்பு கடவுளுடைய மக்களுக்காக தயாரிக்கப்படுகிறது. நீங்கள் எப்போதாவது ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய ஆசைப்பட்டிருக்கிறீர்களா? சகோதர சகோதரிகளை தாராளமாக மன்னிக்கவும் இன்னும் நன்றாக ஜெபம் செய்யவும் நினைத்திருக்கிறீர்களா? வார நாட்களில் நடக்கும் கூட்டங்களும் நமக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. நன்றாக ஊழியம் செய்யவும், பைபிளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் நமக்கு உதவுகிறது.—மத். 28:19, 20.

6. கூட்டங்கள் எப்படி நம்மை பலப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது?

6 நம்மை உற்சாகப்படுத்துகிறது. சாத்தானின் உலகம் நம்முடைய விசுவாசத்தை பலவீனமாக்குகிறது. நம்மை ரொம்பவே சோர்வடைய செய்கிறது. ஆனால் கூட்டங்கள் நம்மை பலப்படுத்துகிறது; யெகோவாவை தொடர்ந்து சேவிக்க உற்சாகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 15:30-32-ஐ வாசியுங்கள்.) பைபிளில் இருக்கும் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறியிருக்கிறது என்று கூட்டங்களில் நாம் அடிக்கடி படிக்கிறோம். அப்படி படிப்பதால், எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது. கூட்டங்களில் கேட்கும் பேச்சுகள் மட்டுமே நம்மை உற்சாகப்படுத்துவதில்லை. சபையார் சொல்லும் பதில்களும் யெகோவாவைப் புகழ்ந்து அவர்கள் பாடும் பாடல்களும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 கொ. 14:26) கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளோடு பேசுவது நமக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. அவர்கள் நம்மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.—1 கொ. 16:17, 18.

7. கூட்டங்களுக்கு போவது ஏன் ரொம்ப முக்கியம்?

7 கடவுளுடைய சக்தி நமக்கு கிடைக்கிறது. கடவுளுடைய சக்தியை பயன்படுத்தி இயேசு சபைகளை வழிநடத்துகிறார். ‘கடவுளுடைய சக்தி சபைகளுக்குத் தெரிவிப்பதைக் கேட்க வேண்டும்’ என்று அவர் சொன்னார். (வெளி. 2:7) சோதனைகளை சமாளிக்கவும் தைரியமாக பிரசங்கிக்கவும் இந்த சக்தி நமக்கு உதவுகிறது. அதோடு, நல்ல தீர்மானங்களை எடுக்கவும் அது நமக்கு உதவுகிறது. அதனால்தான், கூட்டங்களுக்கு போகவும் கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ளவும் நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன நன்மை?

8. நாம் கூட்டங்களுக்கு போவது, பதில் சொல்வது, பாடல்கள் பாடுவது சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவியாக இருக்கிறது? (“கூட்டங்களுக்கு போனாலே அவர் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்” என்ற பெட்டியை பாருங்கள்.)

8 சகோதர சகோதரிகளை நாம் நேசிப்பதை காட்ட முடியும். நம்முடைய சபையில் இருக்கிற நிறையப் பேர், தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 10:24, 25) அப்படியென்றால், நாம் கூட்டங்களுக்கு வந்து சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும்போது அவர்கள்மீது நமக்கு அக்கறை இருப்பதை காட்டுகிறோம். அதுமட்டுமல்ல, சகோதர சகோதரிகளோடு ஒன்று சேர்ந்து இருக்கவும், அவர்களோடு பேசி பழகவும் நாம் விரும்புவதை காட்டுகிறோம். அவர்களுடைய நலனில் நமக்கு அக்கறை இருப்பதையும் காட்டுகிறோம். அதோடு, பதில்கள் சொல்வதன் மூலமாகவும் பாடல்கள் பாடுவதன் மூலமாகவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறோம்.—கொலோ. 3:16.

9, 10. (அ) கூட்டங்களுக்கு போவது முக்கியம் என்பதை யோவான் 10:16-ல் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து எப்படி தெரிந்துகொள்கிறோம்? (ஆ) நாம் தவறாமல் கூட்டங்களுக்கு போவது எதிர்ப்பை சந்திப்பவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?

9 சபை ஒற்றுமையாக இருக்க நாம் உதவுகிறோம். யோவான் 10:16-ல் இயேசு தன்னை ஒரு மேய்ப்பனுக்கும் அவருடைய சீடர்களை மந்தைக்கும் ஒப்பிட்டார். (வாசியுங்கள்.) இதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: 2 ஆடுகள் மலைமீதும் 2 ஆடுகள் மலை அடிவாரத்திலும் 1 ஆடு வேறு எங்கேயாவதும் நின்றுகொண்டிருந்தால் நாம் அந்த ஆடுகளை ஒரு மந்தை என்று சொல்வோமா? நிச்சயமாக இல்லை. மந்தை என்றால் எல்லா ஆடுகளும் ஒன்றாக இருக்கும், அதன் மேய்ப்பனையே பின்தொடர்ந்து செல்லும். அதேபோல் நாமும் வேண்டுமென்றே நம்மை தனிமைப்படுத்திக்கொண்டால் நம் மேய்ப்பனை பின்தொடர முடியாது. ‘ஒரே மேய்ப்பனின்கீழ் ஒரே மந்தையாக’ இருக்க வேண்டும் என்றால் நம் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்.

10 சபையில் இருப்பவர்கள் ஒரு அன்பான குடும்பத்தைப் போல் ஒற்றுமையாக இருக்க கூட்டங்கள் உதவுகிறது. (சங். 133:1) சபையில் இருக்கிற சிலர் தங்கள் குடும்பத்திலிருந்து பயங்கர எதிர்ப்புகளை சந்திக்கலாம். ஒருவேளை, அவர்களுடைய அப்பா-அம்மாவும் கூடப்பிறந்தவர்களும் அவர்களை ஒதுக்கியிருக்கலாம். இப்படி குடும்பத்தை இழந்தவர்களுக்கு ஒரு குடும்பத்தை கொடுப்பதாக இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். (மாற். 10:29, 30) நீங்கள் கூட்டங்களுக்கு தவறாமல் வந்தால், இப்படி கஷ்டப்படுகிற சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் ஒரு அப்பாவாக, அம்மாவாக, அண்ணனாக, தம்பியாக, அக்காவாக, தங்கையாக இருக்க முடியும். இதை நாம் மனதில் வைத்தால் கூட்டங்களுக்கு போக நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

யெகோவாவை எப்படி பிரியப்படுத்த முடியும்?

11. யெகோவாவுக்கு சேர வேண்டிய புகழை சேர்க்க கூட்டங்கள் நமக்கு எப்படி உதவுகிறது?

11 யெகோவாவுக்கு சேர வேண்டிய புகழை சேர்க்கிறோம். யெகோவாதான் நம்மை படைத்தவர். அவருக்கு நாம் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும். எல்லா புகழையும், மகிமையையும் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 7:12-ஐ வாசியுங்கள்.) கூட்டங்களில் யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது, அவரை புகழ்ந்து பாடும்போது, அவரைப் பற்றி பேசும்போது, அவருக்கு சேர வேண்டிய புகழையும் மகிமையையும் நம்மால் கொடுக்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் யெகோவாவை வணங்குவதற்கு நமக்கு எவ்வளவு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது!

12. யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நாம் கூட்டங்களுக்கு வரும்போது அவர் எப்படி உணர்கிறார்?

12 யெகோவா நம்மை படைத்திருப்பதால் நாம் அவருக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். நாம் கூட்டங்களுக்கு வர வேண்டும் என்று அவர் கட்டளை கொடுத்திருக்கிறார். அதுவும் முடிவு காலத்தில் கூட்டங்களை தவறவிடக் கூடாது என்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த கட்டளைக்கு நாம் மனதார கீழ்ப்படியும்போது யெகோவாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். (1 யோ. 3:22) ஒவ்வொரு கூட்டத்துக்கும் வருவதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார்.—எபி. 6:10.

13, 14. கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலமாக யெகோவாவோடும் இயேசுவோடும் நாம் எப்படி நெருங்கி செல்கிறோம்?

13 யெகோவாவிடமும் அவருடைய மகனிடமும் நெருங்கியிருக்க ஆசைப்படுவதை காட்டுகிறோம். என்ன செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று பைபிள் மூலமாக யெகோவா கூட்டங்களில் நமக்கு கற்றுக்கொடுக்கிறார். (ஏசா. 30:20, 21) யெகோவாவை வணங்காதவர்கள்கூட நம் கூட்டங்களுக்கு வரும்போது, ‘உண்மையாகவே கடவுள் நம் மத்தியில் இருக்கிறார்’ என்பதை புரிந்துகொள்வார்கள். (1 கொ. 14:23-25) யெகோவா அவருடைய சக்தி மூலம் கூட்டங்களை வழிநடத்துகிறார். அங்கு நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் எல்லாம் அவரிடமிருந்துதான் வருகிறது. அதனால் நாம் கூட்டங்களுக்கு போகும்போது யெகோவாவுக்கு நம்மீது எவ்வளவு அன்பிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது; அவரிடம் இன்னும் நெருங்கி போகவும் முடிகிறது.

14 “என் பெயரில் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் நான் அவர்கள் மத்தியில் இருப்பேன்” என்று சபையின் தலைவரான இயேசு சொன்னார். (மத். 18:20) அதோடு, அவர்தான் சபைகளை வழிநடத்துகிறார் என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 1:20–2:1) அப்படியென்றால், கூட்டங்களில் யெகோவாவும் இயேசுவும் நம்மோடு இருக்கிறார்கள், நம்மைப் பலப்படுத்துகிறார்கள். அவர்களோடு நெருங்கி வர நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் பார்க்கும்போது யெகோவாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

15. கூட்டங்களுக்கு போக நாம் முயற்சி எடுப்பதன் மூலம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுவதை எப்படி காட்டுகிறோம்?

15 யெகோவாவுக்குக் கீழ்ப்படிய ஆசைப்படுவதைக் காட்டுகிறோம். கூட்டங்களுக்கு வரவேண்டும் என்று யெகோவா கட்டளை கொடுத்தாலும் அதை செய்யும்படி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. (ஏசா. 43:23) இருந்தாலும், நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது நாம் அவரை நேசிப்பதையும்... நமக்கு எது நல்லது என்று சொல்லும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதையும்... காட்டுகிறோம். (ரோ. 6:17) சிலசமயம், கூட்டங்களுக்கு போகாமல் வேலை செய்யும்படி நம் முதலாளி சொல்லலாம். ஒருவேளை கூட்டங்களுக்கு போகக்கூடாது என்று அரசாங்கம் தடை போடலாம்; அதை மீறினால் ஜெயிலில் போடலாம், அபராதம் கட்ட சொல்லலாம், அல்லது அதைவிட மோசமான தண்டனையை கொடுக்கலாம். சிலசமயம் கூட்டங்களுக்கு போவதற்கு பதிலாக பொழுதுபோக்கில் ஈடுபடலாம் என்று நமக்கே தோன்றலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும். (அப். 5:29) ஆனால், நாம் யெகோவாவுக்கு பிடித்ததை செய்யும்போது அவர் ரொம்ப சந்தோஷப்படுகிறார்.—நீதி. 27:11.

கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்

16, 17. (அ) கூட்டங்களுக்கு போவது ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது என்று எப்படி சொல்கிறோம்? (ஆ) கூட்டங்களுக்கு போவதைப் பற்றி சகோதரர் ஜார்ஜ் கேங்கஸ் எப்படி உணர்ந்தார்?

16 கி.பி. 33-வது வருஷம் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வந்த சமயத்திலிருந்து யெகோவாவை வணங்க அவர்கள் தவறாமல் கூடிவந்தார்கள். “அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்தி வந்தார்கள், தங்களிடம் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 2:42) ரோம அரசாங்கமும் யூத மதத் தலைவர்களும் அவர்களை சித்திரவதை செய்தபோதும் அவர்கள் கூட்டங்களுக்கு போவதை நிறுத்தவே இல்லை. கஷ்டமான சூழ்நிலையிலும் கூட்டங்களுக்கு போக அவர்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தார்கள்.

17 இன்றும் கடவுளுடைய மக்கள் சந்தோஷமாக கூட்டங்களுக்கு போகிறார்கள். கூட்டங்களை ஏற்பாடு செய்ததற்காக யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். 22 வருஷங்களாக ஆளும் குழுவில் சேவை செய்த ஜார்ஜ் கேங்கஸ் என்ற சகோதரர் இப்படி சொன்னார்: “கூட்டங்களுக்கு போகும்போது எனக்கு கிடைக்கிற சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்லவே முடியாது. அங்கதான் எனக்கு உற்சாகம் கிடைக்குது. ராஜ்ய மன்றத்துக்கு முதல்ல போறதும், கடைசியா வர்றதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சகோதர சகோதரிகளோட பேசி பழகுறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அவங்களோட இருக்கும்போது என் சொந்த குடும்பத்தோட இருக்கிற மாதிரி இருக்கும். . . . கூட்டங்களுக்கு போகணும்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

18. கூட்டங்களுக்கு போவதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், என்ன செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 நீங்களும் அந்த சகோதரரைப் போலவே உணர்கிறீர்களா? அப்படியென்றால் கூட்டங்களில் நம் சகோதர சகோதரிகளோடு இருப்பதற்காக உங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுங்கள். கஷ்டமாக இருந்தாலும் கடினமாக முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், “யெகோவாவே, நீங்கள் குடிகொண்டிருக்கிற ஆலயத்தை நெஞ்சார நேசிக்கிறேன்” என்று சொன்ன தாவீது ராஜாவை போலவே நீங்களும் சொல்வீர்கள்.—சங். 26:8, NW.

^ [1] (பாரா 3) சில சகோதர சகோதரிகள், கூட்டங்களுக்கு வர முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். உதாரணத்துக்கு, அவர்களுடைய உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய சூழ்நிலையை யெகோவா நிச்சயம் புரிந்துகொள்வார். அவரை சேவிப்பதற்காக அவர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளையும் உயர்வாக மதிக்கிறார். கூட்டத்தில் கொடுக்கப்படும் விஷயங்களை கேட்க சபை மூப்பர்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஒருவேளை ஃபோன் மூலமாக கூட்டங்களை கேட்க ஏற்பாடு செய்யலாம், அல்லது கூட்டங்களை ஆடியோவில் பதிவு செய்து கொடுக்கலாம்.

^ [2] (பாரா 3) “கூட்டங்களுக்கு ஏன் போகவேண்டும்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.