Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?

நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?

‘கடவுளுக்குரியதைக் கடவுளுக்கு செலுத்துங்கள்.’—மத். 22:21.

பாடல்கள்: 33, 137

1. நாம் எப்படி மனித அரசாங்கங்களுக்கும் கடவுளுக்கும் கீழ்ப்படியலாம்?

மனித அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. அதேசமயம், மனிதர்களுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக யெகோவாவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொல்கிறது. (அப். 5:29; தீத். 3:1) அப்படியென்றால், நாம் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? “அரசனுக்குரியதை அரசனுக்கும் கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 22:21) அரசாங்கம் போடும் சட்டங்களுக்கு கீழ்ப்படியும்போது... அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்துகொள்ளும்போது... சரியாக வரி கட்டும்போது... நாம் “அரசனுக்குரியதை அரசனுக்கு” கொடுக்கிறோம். (ரோ. 13:7) ஆனால், கடவுளுக்கு பிடிக்காததை மனித அரசாங்கங்கள் செய்ய சொன்னால் நாம் அதை செய்ய மாட்டோம் என்பதை மரியாதையான விதத்தில் அவர்களிடம் சொல்வோம்.

2. அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதை நாம் எப்படி காட்டுகிறோம்?

2 அரசியல் விவகாரங்களில் நாம் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் இருக்கும்போது நம்மால் “கடவுளுக்குரியதைக் கடவுளுக்கு” கொடுக்க முடியும். (ஏசா. 2:4) மனிதர்களை ஆட்சி செய்ய யெகோவாதான் அனுமதித்திருக்கிறார், அதனால் நாம் மனித அரசாங்கங்களை எதிர்ப்பதில்லை. அதேசமயம் தேசப்பற்றை உற்சாகப்படுத்தும் எந்தவொரு விஷயத்திலும் நாம் கலந்துகொள்வதில்லை. (ரோ. 13:1, 2) நாம் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதோ, ஓட்டு போடுவதோ இல்லை. அதுமட்டுமல்ல, அரசியல்வாதியாக ஆவதும் இல்லை, ஆட்சியை மாற்ற நாம் முயற்சி எடுப்பதும் இல்லை.

3. அரசியல் விவகாரங்களில் நாம் ஏன் கலந்துகொள்ள கூடாது?

3 அரசியல் விவகாரங்களில் நாம் தலையிட கூடாது என்று யெகோவா எதிர்பார்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். அவர் “இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” அரசியலிலும் போரிலும் அவர் யாருக்கும் ஆதரவு காட்டவில்லை. (யோவா. 6:15; 17:16) மற்றொரு காரணம், நாம் கடவுளுடைய அரசாங்கத்துக்குத்தான் முழு ஆதரவு கொடுக்கிறோம். அதனால்தான், கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கொண்டுவரப்போகிறது என்பதை சுத்தமான மனசாட்சியோடு பிரசங்கிக்கிறோம். பொய் மதங்கள் அரசியல் அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதால் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுகிறது. ஆனால் நாம் அரசியல் விவகாரங்களில் தலையிடாததால், உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளோடு ஒற்றுமையாக இருக்க முடிகிறது.—1 பே. 2:17.

4. (அ) வரப்போகும் நாட்களில் யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும் என்று எப்படி சொல்லலாம்? (ஆ) யெகோவாவின் பக்கம் இருக்க நாம் ஏன் இப்போதே தயாராக வேண்டும்?

4 நாம் வாழும் இடத்தில் யாரும் நம்மை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு காட்டும்படி வற்புறுத்தாமல் இருக்கலாம். ஆனால், சாத்தானின் உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க யெகோவாவின் பக்கம் இருப்பதும் அரசியலில் தலையிடாமல் இருப்பதும் நமக்கு கஷ்டமாக இருக்கும். இன்று உலகில் இருக்கிற ஜனங்கள் ஏற்கெனவே “அடங்காதவர்களாக,” “எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக” இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் மோசமாகத்தான் ஆவார்கள். அவர்களுக்குள் இருக்கிற பிரிவினை இன்னும் அதிகமாகும். (2 தீ. 3:3, 4) அதுமட்டுமல்ல சில இடங்களில் அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இப்போதே நம் சகோதரர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் கஷ்டமான சூழ்நிலையிலும் நாம் யெகோவாவின் பக்கம் இருக்க வேண்டுமென்றால் இப்போதே நாம் அதற்கு தயாராக வேண்டும். தயாராவதற்கு உதவும் 4 குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மனித அரசாங்கங்களை யெகோவா பார்ப்பதுபோல் பாருங்கள்

5. மனித அரசாங்கங்களை பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்?

5 முதலாவதாக, மனித அரசாங்கங்களை யெகோவா பார்ப்பதுபோல் பார்த்தால் யெகோவாவின் பக்கம் இருக்க நம்மால் தயாராக முடியும். மனிதர்களை மனிதர்களே ஆட்சி செய்யும் விதத்தில் யெகோவா படைக்கவில்லை. (எரே. 10:23) மனிதர்கள் எல்லாரையும் ஒரே குடும்பமாகத்தான் அவர் பார்க்கிறார். ஆனால், ‘நம் நாடுதான் சிறந்தது’ என்ற எண்ணத்தை மனித அரசாங்கங்கள் மக்கள் மனதில் விதைக்கிறார்கள். அதனால், மக்களுக்குள் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கங்கள் மக்களுக்கு நல்லதை செய்தாலும் அவர்களால் மனிதர்களுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல 1914-ல் ஆரம்பமான கடவுளுடைய அரசாங்கத்துக்கு மனித அரசாங்கங்கள் எதிரிகளாக ஆகிவிட்டன. சீக்கிரத்தில் இந்த மனித அரசாங்கங்களை எல்லாம் கடவுளுடைய அரசாங்கம் அழிக்கப்போகிறது.சங்கீதம் 2:2, 7-9-ஐ வாசியுங்கள்.

6. அரசாங்க அதிகாரிகளிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

6 இன்று உலகில் ஒரளவு சமாதானமும் ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் யெகோவா மனித அரசாங்கங்களை அனுமதித்திருக்கிறார். சட்டமும் ஒழுங்கும் இருப்பதால்தான் நம்மால் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல முடிகிறது. (ரோ. 13:3, 4) அதுமட்டுமல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபம் செய்யும்படி யெகோவா சொல்கிறார். அப்போதுதான் நம்மால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவரை வணங்க முடியும். (1 தீ. 2:1, 2) யாராவது நமக்கு பிரச்சினை கொடுத்தாலும் அரசாங்க அதிகாரிகளிடம் நாம் உதவி கேட்கலாம். பவுலும் அப்படித்தான் செய்தார். (அப். 25:11) மனித அரசாங்கங்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவரும் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. (லூக். 4:5, 6) அதனால் எந்தவொரு அதிகாரியும் சாத்தானுடைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக நாம் சொல்ல கூடாது. சொல்லப்போனால், “யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாதென்று” பைபிள் சொல்கிறது.—தீத். 3:1, 2.

7. நாம் எப்படி யோசிக்க கூடாது?

7 எந்தவொரு அரசியல் தலைவருக்கும் அல்லது கட்சிக்கும் ஆதரவு காட்டாமல் இருப்பதன் மூலம் நாம் கடவுளுக்கு கீழ்ப்படிவதை காட்டுகிறோம். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் நமக்கு நன்மையாக இருந்தாலும்கூட நாம் அவர்களுக்கு ஆதரவு காட்டுவதில்லை. சிலசமயம் இது நமக்கு சுலபமாக இருக்காது. உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அதிக கஷ்டத்தை கொடுத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களோடு சேர்ந்து போராடாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி போராடுவது சரியென்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அவர்களுடைய போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (எபே. 2:2) சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல மனதிலும் நாம் எப்போதுமே யெகோவாவின் பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும், எந்தவொரு மனித அரசாங்கத்துக்கும் ஆதரவு காட்ட கூடாது.

ஜாக்கிரதையாகவும் கபடமில்லாமலும் நடந்துகொள்ளுங்கள்

8. யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு கஷ்டமாக இருந்தாலும் நாம் எப்படி ஜாக்கிரதையாகவும் கபடமில்லாமலும் நடந்துகொள்ளலாம்?

8 இரண்டாவதாக, “பாம்புகளைப் போல் ஜாக்கிரதையானவர்களாகவும், புறாக்களைப் போல் கபடமில்லாதவர்களாகவும்” நடந்துகொள்வதன் மூலம் நம்மால் தயாராக இருக்க முடியும். (மத்தேயு 10:16, 17-ஐ வாசியுங்கள்.) நமக்கு சீக்கிரத்தில் வரப்போகும் கஷ்டங்களை முன்னதாகவே யோசித்துப் பார்ப்பதன் மூலம் நாம் “ஜாக்கிரதையானவர்களாக” நடந்துகொள்கிறோம். அந்த கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் “கபடமில்லாதவர்களாக” நடந்துகொள்கிறோம். அப்படிப்பட்ட கஷ்டமான சில சூழ்நிலைகளை பற்றியும் அந்த சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும் இப்போது பார்க்கலாம்.

9. மற்றவர்களிடம் பேசும்போது நாம் எதை குறித்து கவனமாக இருக்க வேண்டும்?

9 மற்றவர்களிடம் பேசும்போது. அரசியல் விஷயங்களைப் பற்றி நம்மிடம் யாராவது பேசும்போது நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் யாரிடமாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் ஒரு அரசியல் கட்சியை பற்றியோ அரசியல் தலைவர்களை பற்றியோ ஏதாவது பேசலாம். அந்த சமயத்தில் நாம் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசக்கூடாது அவர்களுக்கு எதிராகவும் பேசக்கூடாது. நம் பிரச்சினைகளை மனித அரசாங்கங்கள் எப்படி தீர்க்க வேண்டும் என்று பேசுவதற்கு பதிலாக கடவுளுடைய அரசாங்கம் அதை எப்படி நிரந்தரமாக தீர்க்க போகிறது என்று பைபிளிலிருந்து காட்டுங்கள். ஒருவேளை ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் நம்மிடம் வாக்குவாதம் செய்யலாம். உதாரணத்துக்கு, அரசாங்கத்தில் நடக்கும் ஊழலைப் பற்றி வாக்குவாதம் செய்யலாம், அல்லது ஒரு மதத்தை தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி பேசலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்று சொல்லுங்கள். பைபிள் சொல்வதை உங்கள் வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள். நாம் இருக்கும் நாட்டிலுள்ள சில சட்டங்களை நீக்கவேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்று சிலர் நம்மிடம் சொல்லலாம். அப்போது நாம் அவர்களுக்கு ஆதரவாக பேசவும் மாட்டோம், நம்முடைய கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவும் மாட்டோம்.

10. செய்திகளை பார்க்கும்போது நாம் எதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்?

10 செய்திகளை பார்க்கும்போது. சிலசமயம் ஒரு சம்பவத்தைப் பற்றி செய்திகளில் விவரிக்கும்போது அந்த சம்பவத்தின் ஒரு பக்கத்தை மட்டும் அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம். அதுவும் சில நாடுகளில் ஒரு ‘நியூஸ் சேனல்’ ஒரு அரசியல் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் இப்படி நடப்பது சகஜமாக இருக்கலாம். இதுபோன்ற செய்திகளை கேட்டால் நாமும் அவர்களை போலவே யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அதனால் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மையே இப்படி கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எனக்கு பிடிச்ச ரிப்போட்டர் சொல்ற செய்திகள்னா நான் ஆர்வமா கேட்குறேனா? அரசியல் விவகாரங்களை பத்தி அவர் சொல்ற எல்லா விஷயங்களையும் நான் நம்புறேனா?’ நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்க ஆசைப்பட்டால், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் செய்திகளை பார்க்காதீர்கள். அதற்கு பதிலாக, யாருக்கும் சாதகமாக இல்லாத செய்திகளை பாருங்கள். நீங்கள் கேட்கும் விஷயங்களை பைபிளிலிருக்கும் ‘பயனளிக்கும் வார்த்தைகளோடு’ எப்போதும் ஒப்பிட்டு பாருங்கள்.—2 தீ. 1:13.

11. பணமும் பொருளும் நமக்கு முக்கியமாக இருந்தால் யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு ஏன் கஷ்டமாக இருக்கும்?

11 பொருளாசை. பணம், பொருள் சேர்ப்பதிலேயே நாம் ஆர்வமாக இருந்தால் யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு 1970-களில் மலாவியில் நிறைய சாட்சிகள் அரசியல் கட்சியில் சேராததால் தங்கள் சொத்துசுகங்களை விட்டுவிட்டு அகதிகளாக போக வேண்டியிருந்தது. ஆனால் சிலருக்கு அது கஷ்டமாக இருந்தது. அதைப் பற்றி சகோதரி ரூத் இப்படி சொல்கிறார்: “எங்ககூட அகதிகளா வந்த சில சகோதரர்கள் அரசியல் கட்சியில அப்புறம் சேர்ந்துகிட்டாங்க. அகதிகள் முகாம்ல எந்த வசதியும் இல்லாம வாழ்றது அவங்களுக்கு கஷ்டமா இருந்தது. அதனால அவங்க திரும்பவும் சொந்த வீட்டுக்கே போயிட்டாங்க.” கடவுளுடைய மக்களில் நிறையப் பேர் இப்படி நடந்துகொள்வதில்லை. பணக் கஷ்டம் வந்தாலும் சரி அவர்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருக்கிறார்கள்.—எபி. 10:34.

12, 13. (அ) மனிதர்களை பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? (ஆ) ‘என்னோட நாடுதான் சிறந்தது’ என்ற எண்ணம் நமக்குள் இருக்கிறதா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்?

12 பெருமை. நிறையப் பேர் அவர்களுடைய நாட்டை, இனத்தை, கலாச்சாரத்தை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறார்கள். மற்றவர்களைவிட அவர்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். நமக்குள் எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் யெகோவா நம் எல்லாரையும் சமமாகத்தான் பார்க்கிறார். அவர் யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ பார்ப்பதில்லை. அதனால், நம்மையும் நம் கலாச்சாரத்தையும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைக்கக் கூடாது என்று அவர் எதிர்பார்க்கிறார்.—ரோ. 10:12.

13 ‘என்னோட நாடுதான் சிறந்தது’ என்று நாம் பெருமைப்பட்டால் நம்மால் யெகோவாவின் பக்கம் இருக்க முடியாது. முதல் நூற்றாண்டில் இருந்த சிலர் இந்த மாதிரியான பெருமையை காட்டினார்கள். உதாரணத்துக்கு, எபிரெய மொழி பேசிய சில சகோதரர்கள் கிரேக்க மொழி பேசிய விதவைகளிடம் நியாயமாக நடக்கவில்லை. (அப். 6:1) நமக்குள்ளும் இந்த மாதிரியான பெருமை தலைதூக்குகிறதா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்? வேறொரு ஊரைச் சேர்ந்த சகோதரரோ சகோதரியோ ஒரு விஷயத்தை செய்வதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது ஆலோசனை சொன்னால் உடனே நீங்கள், ‘உங்களைவிட நாங்க இதை இன்னும் நல்லா செய்வோம்’ என்று நினைக்கிறீர்களா? அதனால் அதை செய்யாமல் விட்டுவிடுகிறீர்களா? அப்படியென்றால், “எதையும் . . . மனத்தாழ்மையினால் செய்யுங்கள்; மற்றவர்களை உங்களைவிட மேலானவர்களாகக் கருதுங்கள்” என்ற அறிவுரையை ஞாபகத்தில் வையுங்கள்.—பிலி. 2:3.

யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்

14. யெகோவாவின் பக்கம் இருக்க ஜெபம் எப்படி உதவும்? இதற்கு பைபிளிலிருந்து ஒரு உதாரணம் கொடுங்கள்.

14 மூன்றாவதாக, நாம் யெகோவாவிடம் உதவி கேட்பதன் மூலம் அவர் பக்கம் இருக்க நம்மால் தயாராக முடியும். யெகோவாவுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். பொறுமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் வளர்க்க அந்த சக்தி நமக்கு உதவும். அரசியல் அதிகாரிகள் நம்மிடம் அநியாயமாக நடந்துகொண்டால் அதை தாங்கிக்கொள்ள இந்த குணங்கள் நமக்கு உதவும். எந்தெந்த சூழ்நிலைகளில் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ஞானம் தரும்படி அவரிடம் கேளுங்கள். அந்த சூழ்நிலையில் சரியானதை செய்ய உதவும்படியும் கேளுங்கள். (யாக். 1:5) யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால் உங்களை ஜெயிலில் போடலாம் அல்லது உங்களுக்கு வேறு ஏதாவது தண்டனை கொடுக்கலாம். அந்த மாதிரி சமயங்களில் தைரியத்தை தரும்படி ஜெபம் செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் ஏன் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும். அதுமட்டுமல்ல, எந்தவொரு கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்.அப்போஸ்தலர் 4:27-31-ஐ வாசியுங்கள்.

15. யெகோவாவின் பக்கம் இருப்பதற்கு பைபிள் எப்படி நமக்கு உதவும்? (“பைபிள் இவர்களுக்கு உதவியது” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

15 பைபிள் மூலமாக யெகோவா நம்மை பலப்படுத்துகிறார். கஷ்டமான சூழ்நிலையிலும் யெகோவாவின் பக்கம் இருக்க உங்களுக்கு உதவும் பைபிள் வசனங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். அந்த வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். ஏனென்றால் உங்களிடம் ஒருவேளை பைபிள் இல்லாமல் போனாலும் இந்த வசனங்கள் உங்களுக்கு தெம்பளிக்கும். எதிர்காலத்தை பற்றி யெகோவா சொல்லியிருக்கும் விஷயங்களை இன்னும் உறுதியாக நம்புவதற்கு பைபிள் உங்களுக்கு உதவும். இந்த நம்பிக்கை இருந்தால்தான் துன்புறுத்தல்களை நம்மால் சகித்துக்கொள்ள முடியும். (ரோ. 8:25) புதிய உலகத்தில் நீங்கள் செய்ய ஆசைப்படும் விஷயங்களையும் அது சம்பந்தமான வசனங்களையும் யோசித்துப் பாருங்கள். புதிய உலகத்தில் அதை நீங்கள் செய்வதுபோல் கற்பனை செய்தும் பாருங்கள்.

யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

16, 17. கஷ்டமான சூழ்நிலையிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

16 நான்காவதாக, யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் பக்கம் இருக்க நம்மால் தயாராக முடியும். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஞானத்தையும் தைரியத்தையும் கொடுக்கும். உதாரணத்துக்கு, பாபிலோன் அரசாங்கத்தை அடையாளப்படுத்திய ஒரு பெரிய சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்க மறுத்தார்கள். (தானியேல் 3:16-18-ஐ வாசியுங்கள்.) இந்த பைபிள் பதிவு நிறையப் பேரை பலப்படுத்துகிறது. தங்கள் நாட்டு கொடியை வணங்காமல் இருக்க தைரியத்தைக் கொடுக்கிறது. இயேசு பூமியில் இருந்தபோது அரசியலிலும் சண்டைச் சச்சரவுகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவருடைய உதாரணம் சீடர்களுக்கு தெம்பளிக்கும் என்று அவருக்கு தெரியும். அதனால், “தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று சொன்னார்.—யோவா. 16:33.

17 நம்முடைய காலத்திலும் நிறையப் பேர் யெகோவாவின் பக்கம் இருந்திருக்கிறார்கள். அதற்காக சிலர் சித்திரவதை அனுபவித்திருக்கிறார்கள், ஜெயிலில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள், கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு தைரியத்தைக் கொடுக்கிறது. துருக்கியை சேர்ந்த ஒரு சகோதரர் இப்படி சொன்னார்: “ஃபிரான்ஸ் ரீட்டர் என்ற இளம் சகோதரர் ஹிட்லரோட ராணுவத்துல சேராததுனால கொலை செய்யப்பட்டார். அவர் சாகுறதுக்கு முன்னாடி நாள் ராத்திரி அவரோட அம்மாவுக்கு ஒரு லெட்டர் எழுதுனார். அவருக்கு யெகோவா மேல எந்தளவு நம்பிக்கையும் விசுவாசமும் இருந்துச்சுனு அந்த லெட்டர்ல இருந்து தெரிஞ்சிக்க முடிஞ்சது. அவருக்கு வந்த கஷ்டம் எனக்கு வந்தா நானும் அவரை போலவே இருக்கணும்னு ஆசைப்படுறேன்.” [1]—பின்குறிப்பு.

18, 19. (அ) யெகோவாவின் பக்கம் இருக்க சபையில் இருப்பவர்கள் உங்களுக்கு எப்படி உதவலாம்? (ஆ) எதை செய்ய நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 நீங்கள் யெகோவாவின் பக்கம் இருப்பதற்கு சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளும் உங்களுக்கு உதவி செய்வார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அதை மூப்பர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு பைபிளிலிருந்து நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்கள். அதோடு, சபையில் இருக்கிறவர்களுக்கு உங்கள் சூழ்நிலை தெரிந்தால் அவர்களும் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். உங்களுக்காக ஜெபம் செய்யும்படி அவர்களிடம் கேளுங்கள். அதேசமயம் நீங்களும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபம் செய்யுங்கள், அவர்களை பலப்படுத்துங்கள். (மத். 7:12) ஜெயிலில் இருக்கிற நம்முடைய சகோதரர்களுடைய பெயரை jw.org ஆங்கில வெப்சைட்டில் நீங்கள் பார்க்கலாம். [2] (பின்குறிப்பு) ஜெயிலில் இருக்கும் அந்த சகோதரர்களுடைய பெயரை சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அவர்களுக்கு தைரியம் கொடுக்கும்படியும் உண்மையாக இருக்க உதவும்படியும் கேளுங்கள்.—எபே. 6:19, 20.

19 முடிவு நெருங்க நெருங்க யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு சவாலாக இருக்கலாம். மனித அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி நாம் வற்புறுத்தப்படலாம். அதனால், யெகோவாவின் பக்கம் இருப்பதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.

^ [1] (பாரா 17) யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் (Proclaimers) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 662-ஐயும் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது (God’s Kingdom Rules!) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 150-ல் “கடவுளுடைய மகிமைக்காக அவர் இறந்தார்” என்ற பெட்டியையும் பாருங்கள்.

^ [2] (பாரா 18) “ஜெகோவாஸ் விட்னஸஸ் இம்பிரிசின்ட் ஃபார் தெயர் ஃபெயித்—பை லோக்கேஷன்” (“Jehovah’s Witnesses Imprisoned for Their FaithBy Location”) என்ற கட்டுரையை நியூஸ்ரூம் > லீகள் டெவலப்மென்ட்ஸ் (NEWSROOM > LEGAL DEVELOPMENTS) என்ற பகுதியில் பாருங்கள்.