Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள்

முன்பு கன்னியாஸ்திரீகள் இப்போது சாட்சிகள்

“என்கிட்ட இனிமே பேசவே பேசாத. உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. உன் மதத்தை பத்தி தெரிஞ்சிக்க எனக்கு இஷ்டமே இல்ல. அதை பத்தி நீ பேசுனா எனக்கு எரிச்சலா இருக்கு” என்று ரொம்ப வருஷங்களுக்கு முன்பு என் தங்கை அராசிலீ கோபமாக என்னை திட்டினாள். அவள் பேசியது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு இப்போது 91 வயதானாலும் அவள் சொன்ன வார்த்தைகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆனால், பிரசங்கி 7:8 சொல்வதுபோல் “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது” என்று சொல்லுவேன்.—ஃபெலீசா.

ஃபெலீசா: ஸ்பெயினில் நான் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தேன். என் அப்பா இரும்பு வேலையையும், என் அம்மா வயல் வேலையையும் செய்தார்கள். நாங்கள் மொத்தம் 8 பிள்ளைகள். நான்தான் வீட்டில் மூத்தவள். நாங்கள் கடவுள் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள். எங்கள் சொந்தக்காரர்களில் 13 பேர் பாதிரிகளாகவும் சர்ச்சில் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்கள். என் அம்மாவின் அத்தை மகன் பாதிரியாகவும் கத்தோலிக்க ஸ்கூலில் டீச்சராகவும் இருந்தார். அவர் இறந்த பிறகு, போப் ஜான் பால் II அவருக்கு அருளாளர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

எனக்கு 12 வயது இருக்கும்போது ஸ்பெயினில் உள்நாட்டு போர் நடந்தது. ஜனங்களை அடக்கியொடுக்கிய அரசாங்கத்துக்கு எதிராக என் அப்பா பேசியதால், போர் முடிந்த பிறகு அவரை ஜெயிலில் போட்டார்கள். எங்கள் எல்லாரையும் பார்த்துக்கொள்வது அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சாப்பாட்டுக்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அதனால் என் தங்கைகள் அராசிலீ, லொரீ, ரமோனியை அம்மா பில்பாவோவில் கன்னியாஸ்திரீகள் இருந்த கான்வென்ட்டுக்கு அனுப்பினார். அவர்களாவது நன்றாக சாப்பிடுவார்கள் என்று நினைத்து அப்படி செய்தார்.

அராசிலீ: அப்போது எனக்கு 14 வயது, லொரீக்கு 12 வயது, ரமோனிக்கு 10 வயது. வீட்டில் இருந்தவர்களை பிரிந்திருந்தது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்த கான்வென்ட்டில் எங்களுக்கு சுத்தம் செய்யும் வேலையை கொடுத்தார்கள். 2 வருஷங்களுக்கு பிறகு, வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் ஒரு பெரிய கான்வென்ட்டுக்கு எங்களை அனுப்பினார்கள். அது ஜராகோஷா என்ற இடத்தில் இருந்தது. அங்கு சமையல் அறையை சுத்தம் செய்யும் வேலையை எங்களுக்கு கொடுத்தார்கள். அந்த வேலையை செய்து நாங்கள் ரொம்பவே களைத்துப்போய்விட்டோம்.

ஃபெலீசா: அந்த கான்வென்ட்டுக்கு என் தங்கைகள் போன பிறகு என்னையும் அங்கு அனுப்ப பாதிரியாக இருந்த என் மாமாவும் என் அம்மாவும் யோசித்தார்கள். என் பின்னாடி சுற்றிக்கொண்டு இருந்த ஒரு பையனிடம் இருந்து என்னை பாதுகாப்பதற்காக அப்படி யோசித்தார்கள். எனக்கும் கான்வென்ட்டுக்கு போக ஆசையாக இருந்தது. ஏனென்றால் எனக்கு கடவுளை ரொம்ப பிடிக்கும். தினமும் நான் சர்ச்சுக்கு போவேன். ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க மிஷனரியாக இருந்த என் பெரியம்மா பையனைப் போல் நானும் மிஷனரியாக ஆசைப்பட்டேன்.

ஸ்பெயினில் இருக்கும் ஜராகோஷாவிலுள்ள கான்வென்ட் (இடது) நேக்கர்-கொலுங்கா மொழிபெயர்ப்பு பைபிள் (வலது)

மற்ற நாடுகளுக்கு போய் கடவுளுக்கு சேவை செய்ய நான் ஆசைப்பட்டேன். ஆனால், அப்படி செய்ய அங்கிருந்த கன்னியாஸ்திரீகள் என்னை உற்சாகப்படுத்தவில்லை. அந்த கான்வென்ட்டில் இருந்தது எனக்கு ஜெயிலில் இருந்த மாதிரி இருந்தது. அதனால், ஒரு வருஷத்துக்கு பிறகு நான் வீட்டுக்கு திரும்பி போய்விட்டேன். பாதிரியாக இருந்த என் மாமாவை கவனித்துக்கொண்டேன். அவருக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்தேன். தினமும் சாயங்காலத்தில் நானும் அவரும் ஜெபமாலையை வைத்து ஜெபம் செய்வோம். சர்ச்சில் பூக்களை அடுக்குவது, மரியாள் மற்றும் ‘புனிதர்களுடைய’ சிலைகளை அலங்கரிப்பது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அராசிலீ: ஜராகோஷாவில் இருந்தபோது நான் கன்னியாஸ்திரீயாக ஆவதற்கான முதல் உறுதிமொழியை எடுத்தேன். அதற்கு பிறகு அங்கிருந்த கன்னியாஸ்திரீகள் என்னையும் என் தங்கைகளையும் வேறு வேறு இடத்துக்கு மாற்றினார்கள். என்னை மாட்ரிட்டில் இருந்த கான்வென்ட்டுக்கும் லொரீயை வாலென்சியாவில் இருந்த கான்வென்ட்டுக்கும் அனுப்பினார்கள். ரமோனி மட்டும் ஜராகோஷாவிலே இருந்தாள். மாட்ரிட்டில் நான் கன்னியாஸ்திரீயாக ஆவதற்கு இரண்டாவது முறையாக உறுதிமொழியை எடுத்தேன். நான் இருந்த கான்வென்ட்டில் மாணவர்கள், வயதானவர்கள் என்று நிறையப் பேர் வந்து தங்குவார்கள். அதனால், அங்கு நிறைய வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். அங்கிருந்த மருத்துவமனையில் நான் வேலை செய்தேன்.

ஒரு கன்னியாஸ்திரீயாக என் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்தேன். பைபிளை படிக்கவும், அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் நிறைய நேரம் கிடைக்கும் என்று கனவு கண்டேன். ஆனால் நான் ஆசைப்பட்ட எதுவுமே நடக்கவில்லை. அங்கு யாருமே பைபிளை படிக்கவில்லை. கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும்கூட பேசவில்லை. நான் அங்கு மரியாளை மட்டும் வணங்கினேன். கொஞ்சம் லத்தீன் மொழியையும், புனிதர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் கற்றுக்கொண்டேன். ஆனால், எப்போதும் எனக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும்.

அதனால் நான் ரொம்ப களைத்துப்போனேன். ‘அந்த கான்வென்ட்டில் இருக்கிறவர்கள் பணக்காரர்களாக ஆவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும், அதற்கு பதிலாக என் குடும்பத்துக்காவது உழைக்கலாமே’ என்று நினைத்தேன். அதனால், அங்கிருக்க இஷ்டம் இல்லை என்று மதர் சுப்பீரியரிடம் சொன்னேன். ஆனால், நான் மனதை மாற்றிக்கொள்வதற்காக மதர் சுப்பீரியர் என்னை ஒரு ரூமில் வைத்து பூட்டிவிட்டார்.

அங்கிருந்த கன்னியாஸ்திரீகள் என்னை அந்த ரூமில் இருந்து வெளியேவிட்டார்கள். ஆனால் என் முடிவை நான் மாற்றிக்கொள்ளாததால் அவர்கள் என்னை திரும்பவும் ரூமில் வைத்து பூட்டிவிட்டார்கள். இதேமாதிரி மூன்று முறை செய்தார்கள். நான் அங்கிருந்து வரவேண்டும் என்றால், “எனக்கு கடவுளை சேவிக்க இஷ்டம் இல்ல, நான் சாத்தானுக்கு சேவை செய்ய விரும்புறேன்” என்று எழுதி கொடுக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு அங்கிருக்க கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. அதேசமயம் அவர்கள் கேட்டதை எழுதிக்கொடுக்கவும் நான் தயாராக இல்லை. கடைசியாக, நான் பாதிரியாரை பார்க்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்ன பிறகு என்னை ஜராகோஷாவுக்கு திருப்பி அனுப்ப அவருக்கு பிஷப்பிடமிருந்து அனுமதி கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு என்னை வீட்டுக்கு போக அனுமதித்தார்கள். சீக்கிரத்திலேயே லொரீயும் ரமோனியும்கூட கான்வென்ட்டில் இருந்து வந்துவிட்டார்கள்.

சண்டைக்கு காரணமாக இருந்த புத்தகம்

ஃபெலீசா

ஃபெலீசா: கொஞ்ச நாளைக்கு பிறகு எனக்கு கல்யாணமாகி ஸ்பெயினில் இருக்கும் கண்டாஃபிரியா (Cantabria) என்ற இடத்துக்கு போய்விட்டேன். அங்கேயும் வாரம் தவறாமல் சர்ச்சுக்கு போனேன். ஒருநாள் சர்ச்சில் பாதிரி ரொம்ப கோபத்தோடு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை காட்டி, “என் கையில இருக்கிற இந்த புத்தகத்தை எல்லாரும் பாருங்க. இதை யாராவது உங்களுக்கு கொடுத்தா, அதை கொண்டுவந்து என்கிட்ட கொடுத்திடுங்க, இல்லனா தூக்கி வீசிடுங்க” என்று சொன்னார்.

அந்த புத்தகம் என்னிடம் இல்லை. ஆனால், அதை படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. கொஞ்ச நாளைக்குப் பிறகு இரண்டு யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வந்து அந்த புத்தகத்தை கொடுத்தார்கள். அன்று இரவே அதை முழுவதுமாக படித்தேன். பிறகு அவர்கள் திரும்பவும் வந்து பைபிள் படிப்பைப் பற்றி சொன்னார்கள். உடனே படிக்க ஒத்துக்கொண்டேன்.

நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்

எப்போதும் கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ நான் ஆசைப்படுவேன். யெகோவாவைப் பற்றி நான் தெரிந்துகொண்டதால் அவர்மீது இருக்கும் அன்பு இன்னும் அதிகமானது. அவரைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல ஆசைப்பட்டேன். 1973-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் என் குடும்பத்தில் இருந்தவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசினேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக என் தங்கை அராசிலீ, நான் நம்புவதெல்லாம் சுத்தப் பொய் என்று சொன்னாள்.

அராசிலீ: கான்வென்ட்டில் என்னை ரொம்ப மோசமாக நடத்தியதால், என் மதத்தையே நான் வெறுத்தேன். இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சர்ச்சுக்கு போனேன், ஜெபமாலையை வைத்து தினமும் ஜெபம் செய்தேன். பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை மட்டும் எனக்கு குறையவே இல்லை, அதற்கு உதவி செய்யும்படி கடவுளிடம் கேட்டேன். அப்போதுதான் பைபிளில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை ஃபெலீசா என்னிடம் சொன்னாள். அவள் அவ்வளவு ஆர்வமாக சொன்னதால் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நான் நினைத்தேன். அவள் சொன்னதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அராசிலீ

சில வருஷங்களுக்கு பிறகு, நான் வேலைக்காக மாட்ரிட்டுக்கே திரும்பவும் போனேன். பிறகு எனக்கு கல்யாணம் ஆனது. சர்ச்சுக்கு போகிற எல்லாரும் இயேசு சொல்வதுபோல் வாழ்வது இல்லை என்று நான் போகப் போக புரிந்துகொண்டேன். அதனால், நான் சர்ச்சுக்கு போவதையே நிறுத்திவிட்டேன். அதற்கு பிறகு நான் புனிதர்களை நம்பவில்லை. எரிநரகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, பாதிரிகளால் பாவங்களை மன்னிக்க முடியும் என்பதையும் நான் நம்பவில்லை. என்னிடம் இருந்த சிலைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டேன். நான் செய்ததெல்லாம் சரியா என்றுகூட எனக்கு தெரியவில்லை. ஆனால் மதத்தின்மீது இருந்த நம்பிக்கையே எனக்கு போய்விட்டது. “உங்களை பத்தி தெரிஞ்சுக்க எனக்கு உதவி செய்யுங்க” என்று கடவுளிடம் தொடர்ந்து ஜெபம் செய்தேன். எத்தனையோ முறை யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டு கதவை தட்டியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் எந்த மதத்தையும் நான் நம்பாததால் நான் கதவை திறக்கவே இல்லை.

என் தங்கை லொரீ பிரான்சிலும் ரமோனி ஸ்பெயினிலும் இருந்தார்கள். 1980-களின் ஆரம்பத்தில் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிக்க ஆரம்பித்தார்கள். ஃபெலீசாவைப் போலவே இவர்களும் ஏமாந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். அதற்கு பிறகு ஆன்ஜிலீனஸ் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி என் வீட்டு பக்கத்தில் இருந்தார். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். அவளும் அவளுடைய கணவரும் நிறைய முறை என்னிடம் பைபிள் படிப்பை பற்றி சொன்னார்கள். எனக்கு மதத்தின்மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை என்றாலும் பைபிளை பற்றி தெரிந்துகொள்ள ஆசை இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் நான் அவர்களிடம், “சரி, நான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கிறேன். ஆனா நான் என் பைபிள்ல இருந்துதான் படிப்பேன்” என்று சொன்னேன். அப்போது என்னிடம் நேக்கர்-கொலுங்கா மொழிபெயர்ப்பு பைபிள் இருந்தது.

நாங்கள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகள் ஆனோம்

ஃபெலீசா: 1973-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது கண்டாஃபிரியாவின் தலைநகரமான சன்டான்டரில் 70 யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தார்கள். அங்கிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் பிரசங்கிக்க நாங்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கொஞ்ச தூரம் பஸ்சிலும் பிறகு காரிலும் போய் நாங்கள் ஒவ்வொரு கிராமங்களாக பிரசங்கித்தோம்.

நான் நிறையப் பேருக்கு பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறேன். அதில் 11 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். என்னிடம் பைபிளை படித்த நிறையப் பேர் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் நான் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், அவர்கள் நம்பிக்கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தவறு என்று புரிந்துகொள்வதற்கு என்னைப் போலவே அவர்களுக்கும் கொஞ்ச காலம் எடுத்தது. கடவுளை பற்றிய உண்மைகளை தெரிந்துகொள்ள... மாற்றங்கள் செய்ய... பைபிளும் கடவுளுடைய சக்தியும்தான் ஒருவருக்கு உதவ முடியும் என்று எனக்கு தெரியும். (எபி. 4:12) போலீஸாக இருந்த என் கணவர் 1979-ல் ஞானஸ்நானம் எடுத்தார். என் அம்மாவும் இறந்துபோவதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தார்.

அராசிலீ: யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தபோது அவர்கள் சொன்ன விஷயங்களை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் போக போக நான் எல்லாவற்றையும் சரியாக புரிந்துகொண்டேன். யெகோவாவின் சாட்சிகள் பைபிளை பற்றி கற்றுக்கொடுப்பவர்கள் மட்டுமல்ல, அதன்படி வாழ்பவர்கள் என்றும் புரிந்துகொண்டேன். பிறகு, யெகோவாமீதும் பைபிள்மீதும் இருந்த நம்பிக்கை எனக்கு இன்னும் அதிகமானது, நான் ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். நான் இப்படி மாறிவிட்டதை அக்கம்பக்கத்தில் இருந்த சிலர் கவனித்தார்கள். “அராசிலீ, நீ போற வழி சரிதான். அந்த வழியில தொடர்ந்து போயிட்டே இரு!” என்று சொன்னார்கள்.

ஜெபத்தில் யெகோவாவிடம், “பைபிள்ல இருக்கிற உண்மைகளை தெரிஞ்சிக்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன். நீங்க என்னை அப்படியே விட்டுடாம உங்களை பத்தி தெரிஞ்சிக்க நிறைய வாய்ப்பு கொடுத்தீங்க. அதுக்காக ரொம்ப நன்றி” என்று சொன்னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. என் அக்கா ஃபெலீசாவை கோபமாக திட்டியதால் அவளிடம் நான் மன்னிப்பு கேட்டேன். அன்று முதல் நாங்கள் இருவரும் சண்டைபோடுவதற்கு பதிலாக பைபிளைப் பற்றி பேசுவோம். 1989-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 61 வயது.

ஃபெலீசா: இப்போது எனக்கு 91 வயதாகிறது. என் கணவர் இறந்துவிட்டார். முன்புபோல் இப்போது என்னால் யெகோவாவுக்கு நிறைய செய்ய முடிவதில்லை. இருந்தாலும் நான் தினமும் பைபிளை படிக்கிறேன். என்னால் முடிந்தபோதெல்லாம் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகிறேன்.

அராசிலீ: நான் ஒரு கன்னியாஸ்திரீயாக இருந்ததால் ஊழியத்தில் பார்க்கிற எல்லா பாதிரிகளிடமும் கன்னியாஸ்திரீகளிடமும் பேசுவது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களில் சிலரோடு பைபிளைப் பற்றி ரொம்ப சுவாரஸ்யமாக பேசியிருக்கிறேன். இன்னும் நிறையப் பேர் நம் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாங்கிக்கொண்டார்கள். ஒரு பாதிரியோடு பேசியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இரண்டு மூன்று முறை சந்தித்து பேசிய பிறகு நான் சொன்ன விஷயங்களை அவர் உண்மையென்று ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் அவர் என்னிடம், “இந்த வயசுல என்னால கூட்டங்களுக்கெல்லாம் எப்படி வரமுடியும்? அப்படியே வந்தாலும் என் சர்ச்சுக்கு வர்றவங்களும் என் குடும்பத்துல இருக்கிறவங்களும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க?” என்று சொன்னார். அதற்கு நான், “ஆனா கடவுள் என்ன நினைப்பார்?” என்று அவரிடம் கேட்டேன். நான் சொல்வது சரி என்று அவர் புரிந்துகொண்டார், அவர் ரொம்பவே கவலைப்பட்டார். இருந்தாலும் மாற்றங்களை செய்வதற்கு அவருக்கு தைரியம் இல்லை.

என்னோடு கூட்டங்களுக்கு வர விரும்புவதாக என் கணவர் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. அவர் முதல் முதலில் கூட்டத்துக்கு வந்தபோது அவருக்கு 80 வயது. அதற்கு பிறகு ஒருநாள்கூட அவர் கூட்டங்களை தவறவிட்டதே இல்லை. பைபிள் படிப்பு படித்து, ஊழியத்துக்கும் வர ஆரம்பித்தார். நாங்கள் இரண்டு பேரும் ஊழியம் செய்தபோது மறக்க முடியாத நிறைய அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தது. ஞானஸ்நானம் எடுப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

ஃபெலீசா: யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டு அவரை சேவிக்க ஆரம்பித்தபோது என் மூன்று தங்கைகளும் என்னை எதிர்த்தார்கள். ஆனால், அதற்கு பிறகு அவர்களும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். இதுதான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்து மிகப்பெரிய சந்தோஷம். பிறகு, நாங்கள் எல்லாரும் யெகோவாவைப் பற்றியும் அவருடைய வார்த்தையான பைபிளை பற்றியும் அடிக்கடி பேசினோம். இப்போது நாங்கள் எல்லாரும் சந்தோஷமாக யெகோவாவை வணங்குகிறோம். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

^ பாரா. 29 இப்போது ஃபெலீசாவுக்கு 91 வயது, அராசிலீக்கு 87 வயது, ரமோனிக்கு 83 வயது. இவர்கள் இன்னும் யெகோவாவை சேவிக்கிறார்கள். ஆனால் லொரீ 1990-ல் இறந்துவிட்டார், கடைசிவரை அவரும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்.