Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?

இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?

“நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு. அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.”—நீதி. 16:3.

பாடல்கள்: 89, 24

1-3. (அ) எல்லா இளைஞர்களும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள், அதை எதனோடு ஒப்பிடலாம்? (ஆரம்பப் படம்) (ஆ) இந்தச் சூழ்நிலையில் இருக்கும் இளம் கிறிஸ்தவர்களுக்கு எது உதவும்?

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நீங்கள் ஊருக்குப் போக வேண்டும். அதற்காக பஸ் நிலையத்துக்குப் போகிறீர்கள். அங்கே கூட்டம் அலைமோதுகிறது, பஸ்களும் ஏராளமாக இருக்கின்றன. அதனால், ஆரம்பத்தில் உங்களுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆனால், எங்கே போக வேண்டுமென்பதும், எந்த பஸ்சில் ஏற வேண்டுமென்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால், நீங்கள் ஏதோவொரு பஸ்சில் ஏறிவிட மாட்டீர்கள்; ஏனென்றால், அது உங்களை வேறெங்காவது கொண்டுபோய் விட்டுவிடும்.

2 வாழ்க்கையும் ஒரு பயணம்தான்! இளம் பிள்ளைகளாகிய நீங்கள், அந்த பஸ் நிலையத்தில் இருக்கிற மக்களைப் போல இருக்கிறீர்கள்! சிலசமயங்களில், ஏகப்பட்ட வாய்ப்புகள் உங்கள் முன்னால் இருக்கும்போது, எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் நீங்கள் திணறலாம். என்ன செய்ய வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், சரியானதைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. அப்படியென்றால், நீங்கள் எந்தப் பாதையில் போக வேண்டும்?

3 இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். அதோடு, யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழவும் உங்களை உற்சாகப்படுத்தும். யெகோவாவுக்குப் பிரியமாக வாழ்வது எதைக் குறிக்கிறது? என்ன படிப்பது, எந்த வேலையைச் செய்வது, கல்யாணம் செய்வதா வேண்டாமா, பிள்ளைகளைப் பெற்றெடுப்பதா வேண்டாமா என எல்லா தீர்மானங்களையும் யெகோவாவின் அறிவுரைப்படி எடுப்பதைக் குறிக்கிறது. அதோடு, ஆன்மீக இலக்குகளை அடைவதற்காகக் கடினமாக உழைப்பதையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட இலக்குகள் யெகோவாவிடம் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவும். யெகோவாவுக்குச் சேவை செய்வதிலேயே நீங்கள் கவனமாக இருந்தால், அவர் உங்களை ஆசீர்வதிப்பார், வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவார்.நீதிமொழிகள் 16:3-ஐ வாசியுங்கள்.

ஆன்மீக இலக்குகள் வைப்பது ஏன் முக்கியம்?

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 ஆன்மீக இலக்குகள் வைப்பது ஏன் நல்லது என்பதற்கான மூன்று காரணங்களை பார்க்கலாம். ஆன்மீக இலக்குகளுக்காக உழைக்கும்போது யெகோவாவோடுள்ள பந்தம் இன்னும் பலமாகும் என்பதைப் புரிந்துகொள்ள முதல் இரண்டு காரணங்கள் உதவும். சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போதே ஆன்மீக இலக்குகள் வைப்பது ஏன் நல்லது என்பதைப் புரிந்துகொள்ள மூன்றாவது காரணம் உதவும்.

5. ஆன்மீக இலக்குகள் வைப்பதற்கான மிக முக்கியக் காரணம் என்ன?

5 யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்புக்கும், அவர் நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றி காட்டுவதற்காகத்தான் நாம் ஆன்மீக இலக்குகளை வைக்கிறோம்; இதுதான், ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கான மிக முக்கியக் காரணம். சங்கீதப் புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “யெகோவாவே, உங்களுக்கு நன்றி சொல்வது நல்லது . . . யெகோவாவே, உங்கள் செயல்களால் என்னைப் பூரித்துப்போக வைத்தீர்கள். உங்கள் கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பார்த்து நான் சந்தோஷ ஆரவாரம் செய்கிறேன்.” (சங். 92:1, 4) யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர் உங்களுக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவி செய்திருக்கிறார். பைபிளையும் சபையையும் கொடுத்திருக்கிறார். அதோடு, பூஞ்சோலையில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். ஆன்மீக இலக்குகளை வைப்பதன் மூலம், இவற்றுக்கெல்லாம் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காட்டலாம். யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போக இந்த இலக்குகள் உங்களுக்கு உதவும்.

6. (அ) யெகோவாவிடம் நெருங்கிப் போக ஆன்மீக இலக்குகள் எப்படி உதவும்? (ஆ) சின்னப் பிள்ளைகள் என்னென்ன இலக்குகளை வைக்கலாம்?

6 ஆன்மீக இலக்குகளை அடைய முயற்சி செய்யும்போது, யெகோவாவுக்குப் பிரியமான செயல்களை நீங்கள் செய்கிறீர்கள். இப்படிச் செய்வது, அவரிடம் நெருங்கிப் போக உங்களுக்கு உதவும். இதுதான், ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கான இரண்டாவது காரணம். “உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது” என்று அப்போஸ்தலன் பவுல் உறுதியளித்தார். (எபி. 6:10) சின்னப் பிள்ளைகள்கூட ஆன்மீக இலக்குகளை வைக்கலாம். உதாரணத்துக்கு, 10 வயது கிறிஸ்டீனா, விசுவாசமுள்ள சாட்சிகளின் வாழ்க்கை சரிதைகளைத் தவறாமல் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். 12 வயது டோபி, ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு முழு பைபிளையும் படித்து முடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தான். 11 வயதில் ஞானஸ்நானம் எடுத்த மாக்ஸிம் மற்றும் 10 வயதில் ஞானஸ்நானம் எடுத்த அவனுடைய தங்கை நோயிமைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்கள் இரண்டு பேரும் பெத்தேலில் சேவை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்தார்கள். அதை எப்போதும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, பெத்தேல் விண்ணப்பம் ஒன்றை தங்கள் வீட்டு சுவரில் ஒட்டி வைத்தார்கள். நீங்களும் இதேபோல் ஏதாவது இலக்கு வைத்து, அதை அடைவதற்காக உழைக்கலாம், இல்லையா?பிலிப்பியர் 1:10, 11-ஐ வாசியுங்கள்.

7, 8. (அ) இலக்குகள் வைப்பது, தீர்மானங்களை எடுக்க எப்படி உதவுகிறது? (ஆ) பல்கலைக்கழகத்தில் சேர வேண்டாம் என்று ஒரு டீனேஜ் சகோதரி ஏன் முடிவெடுத்தார்?

7 சின்ன வயதிலேயே ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கான மூன்றாவது காரணம் என்ன? இளம் வயதில், நீங்கள் நிறைய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். என்ன படிப்பது, எந்த வேலை செய்வது போன்ற பல விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். இதை, சாலை சந்திப்பில் நின்றுகொண்டு, எந்தப் பாதையில் போக வேண்டும் என்று முடிவெடுக்கும் விஷயத்தோடு ஒப்பிடலாம். எங்கே போக வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், எந்தப் பாதையில் போக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. அதேபோல, உங்களுடைய இலக்கு என்ன என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், சரியான முடிவுகளை எடுப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்” என்று நீதிமொழிகள் 21:5 சொல்கிறது. எவ்வளவு சீக்கிரத்தில் நல்ல இலக்குகளை வைக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் வெற்றி பெற முடியும். டாமரிஸ் என்ற சகோதரியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. டீனேஜ் வயதில், முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு வந்தது.

8 பள்ளிப் படிப்பை முடித்த சமயத்தில் அவர் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தார். பணம் கட்டாமலேயே பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், பயனியர் சேவை செய்ய வேண்டும் என்று சின்ன வயதிலேயே அவர் தீர்மானித்திருந்ததால் பகுதிநேர வேலையைத் தேர்ந்தெடுத்தார். “பகுதிநேர வேலை செஞ்சாதான், பயனியர் ஊழியம் செய்ய முடியும். பல்கலைக்கழகத்துல சட்டம் படிச்சிருந்தா, கைநிறைய சம்பாதிச்சிருக்கலாம். ஆனா, பகுதிநேர வேலை கிடைச்சிருக்காது” என்று அவர் சொல்கிறார். 20 வருஷங்களாக டாமரிஸ் பயனியர் ஊழியம் செய்கிறார். நல்ல இலக்கை வைத்ததாகவும், டீனேஜில் சரியான தீர்மானம் எடுத்ததாகவும் அவர் நினைக்கிறாரா? கண்டிப்பாக! அவர் வேலை செய்கிற இடத்தில், வக்கீல்கள் நிறையப் பேரைச் சந்திக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. டாமரிஸ் ஒருவேளை சட்டம் படித்திருந்தால், அந்த வக்கீல்கள் செய்கிற வேலையைத்தான் அவரும் செய்திருப்பார். அவர்களில் நிறையப் பேருக்கு அந்த வேலையில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்றும், ஆனால் இத்தனை வருஷங்களாக தான் செய்யும் பயனியர் சேவையில் தனக்குச் சந்தோஷம் கிடைத்திருப்பதாகவும் டாமரிஸ் சொல்கிறார்.

9. நம்முடைய இளைஞர்களை நினைத்து நாம் ஏன் பெருமைப்படுகிறோம்?

9 உலகம் முழுவதும் இருக்கிற நம்முடைய இளைஞர்களில் ஆயிரக்கணக்கானவர்கள், இந்த விஷயத்தில் நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சபாஷ்! யெகோவாவோடு தங்களுக்கு இருக்கிற பந்தத்துக்கும் தங்களுடைய ஆன்மீக இலக்குகளுக்கும் அவர்கள் முதலிடம் கொடுக்கிறார்கள். இந்த இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். அதேசமயத்தில், படிப்பு, வேலை, குடும்பம் என எல்லா விஷயங்களிலும் யெகோவா சொல்கிறபடி நடக்கக் கற்றுக்கொள்கிறார்கள். “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு . . .  எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்” என்று சாலொமோன் சொன்னார். (நீதி. 3:5, 6) இளம் பிள்ளைகளே, யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! உங்களைப் பொக்கிஷமாக நினைக்கிறார்! அவர் நிச்சயம் உங்களைப் பாதுகாப்பார், வழிநடத்துவார், ஆசீர்வதிப்பார்.

சாட்சி கொடுக்க நன்றாகத் தயாரியுங்கள்

10. (அ) பிரசங்க வேலையை நாம் ஏன் மிக முக்கியமானதாக நினைக்க வேண்டும்? (ஆ) உங்கள் நம்பிக்கைகளை இன்னும் நன்றாக விளக்குவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

10 யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதிலேயே நீங்கள் கவனமாக இருந்தால், அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நீங்கள் ஆசைப்படுவீர்கள். “நல்ல செய்தி முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மாற். 13:10) அதனால், பிரசங்க வேலையை நாம் அவசர உணர்வோடு செய்ய வேண்டும்; அதை மிக முக்கியமானதாக நினைக்க வேண்டும். ஊழியத்தில் அடிக்கடி கலந்துகொள்ள வேண்டுமென்ற இலக்கை உங்களால் வைக்க முடியுமா? பயனியர் சேவை செய்ய முடியுமா? ஆனால், பிரசங்கிப்பதில் உங்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லையென்றால் என்ன செய்வது? உங்கள் நம்பிக்கைகளை இன்னும் நன்றாக விளக்குவதற்கு நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? இரண்டு விஷயங்கள் உங்களுக்கு உதவும். ஒன்று: நன்றாகத் தயாரியுங்கள். இரண்டு: யெகோவாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இருங்கள். இப்படிச் செய்தால், பிரசங்க வேலை உங்களுக்கு ரொம்பப் பிடித்துவிடும்.

சாட்சி கொடுக்க நீங்கள் எப்படித் தயாரிக்கிறீர்கள்? (பாராக்கள் 11, 12)

11, 12. (அ) யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நீங்கள் எப்படித் தயாரிக்கலாம்? (ஆ) யெகோவாவைப் பற்றிப் பள்ளியில் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பை ஒரு சகோதரர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்?

11 கூடப் படிக்கிற பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலைத் தயாரியுங்கள். உதாரணத்துக்கு, “நீ ஏன் கடவுள நம்புற?” என்று அவர்கள் கேட்கலாம். அதற்கான பதிலைத் தயாரிப்பதற்கு, jw.org வெப்சைட்டில் இருக்கிற கட்டுரைகளைப் படியுங்கள். பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் என்ற பகுதியில், “கடவுள் இருக்கிறார் என்று நான் ஏன் நம்புகிறேன்?” என்ற ஒர்க் ஷீட் இருக்கிறது. அதைப் படித்து, பதிலைத் தயாரியுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் எபிரெயர் 3:4, ரோமர் 1:20, சங்கீதம் 139:14 ஆகிய வசனங்களை நீங்கள் பயன்படுத்தலாம். அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற ஒர்க் ஷீட்களைப் பயன்படுத்தி, வேறு சில கேள்விகளுக்கும் பதில்களைத் தயாரியுங்கள்.1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.

12 கூடப் படிக்கிற பிள்ளைகளிடம் jw.org வெப்சைட்டைப் பார்க்கும்படி சொல்லுங்கள். லூக்கா என்ற இளைஞன் அதைத்தான் செய்தான். அவனுடைய வகுப்பில் இருந்த எல்லாரும் வெவ்வேறு மதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பாடப்புத்தகத்தில், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தவறான தகவல்கள் இருப்பதை லூக்கா கவனித்தான். அது தவறான தகவல் என்பதை வகுப்பில் இருந்தவர்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தான். அவனுக்குப் படபடப்பாக இருந்தாலும், ஆசிரியையிடம் அனுமதி கேட்டான். அவனுடைய நம்பிக்கைகளைப் பற்றி விளக்குவதற்கு ஆசிரியை அனுமதி கொடுத்தார். நம்முடைய வெப்சைட்டை லூக்கா எல்லாருக்கும் காட்டினான். அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது, வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு வரும்படி வகுப்பில் இருந்த எல்லாரிடமும் ஆசிரியை சொன்னார். யெகோவாவைப் பற்றிப் பள்ளியில் பேசியதை நினைத்து லூக்கா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

13. கஷ்டங்கள் வந்தாலும் நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?

13 கஷ்டங்கள் வந்தாலும், சோர்ந்துவிடாமல் உங்கள் இலக்கை அடைவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். (2 தீ. 4:2) கேத்ரீனா என்ற பெண் அதைத்தான் செய்தாள். அவளுடைய 17 வயதில், தன்னோடு வேலை செய்கிற எல்லாரிடமும் சாட்சி கொடுக்க வேண்டும் என்று இலக்கு வைத்தாள். அவளுடன் வேலை செய்த ஒருவர் பல தடவை அவளை அவமானப்படுத்தினார். ஆனாலும், அவள் தன்னுடைய இலக்கை எப்போதும் மனதில் வைத்திருந்தாள். அவள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து, அவளுடன் வேலை செய்த ஹான்ஸ் என்பவர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். அவர் நம்முடைய பிரசுரங்களைப் படிக்க ஆரம்பித்தார், பிறகு பைபிளைப் படித்து ஞானஸ்நானமும் எடுத்தார். இதெல்லாம் கேத்ரீனாவுக்குத் தெரியாது. ஏனென்றால், அவள் வேறொரு இடத்துக்கு மாறிப் போய்விட்டாள். 13 வருஷங்களுக்குப் பிறகு, அவள் தன்னுடைய குடும்பத்தோடு ஒரு சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, அங்கே பேச்சு கொடுக்க ஹான்ஸ் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் அவளுக்குப் பயங்கர ஆச்சரியம்! தன்னோடு வேலை செய்கிறவர்களுக்குச் சாட்சி கொடுக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ததை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டாள்.

உங்கள் இலக்குகளை மறந்துவிடாதீர்கள்!

14, 15. (அ) தாங்கள் செய்வதை நீங்களும் செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது நீங்கள் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? (ஆ) மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது நீங்கள் எப்படி உறுதியாக இருக்கலாம்?

14 யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழவும், ஆன்மீக இலக்குகளை வைக்கவும் இதுவரை பார்த்த விஷயங்கள் உங்களை உற்சாகப்படுத்தியிருக்கும். உங்கள் வயதில் இருக்கிற பிள்ளைகள் நிறையப் பேர் ஜாலியாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். தங்களோடு சேர்ந்துகொள்ளும்படி அவர்கள் உங்களையும் கூப்பிடலாம். ஆனால், இலக்குகளை அடைவதுதான் உங்களுக்கு ரொம்ப முக்கியம் என்பதை என்றாவது ஒருநாள் நீங்கள் அவர்களுக்குக் காட்ட வேண்டியிருக்கும். மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு உங்கள் இலக்குகளை மறந்துவிடாதீர்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட உதாரணத்தை மறுபடியும் யோசித்துப்பாருங்கள். பஸ் நிலையத்தில் நிற்கிற ஒரு பஸ்ஸில் எல்லாரும் ஜாலியாக இருக்கிறார்கள் என்பதற்காக, நீங்களும் அதில் ஏறிவிடுவீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள்!

15 தாங்கள் செய்வதை நீங்களும் செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது, நீங்கள் எப்படி உறுதியாக இருக்கலாம்? அதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடுங்கள். (நீதி. 22:3) தப்பு செய்வதால் வரும் மோசமான விளைவுகளை யோசித்துப்பாருங்கள். (கலா. 6:7) உங்களுக்கு நல்ல ஆலோசனை தேவை என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய அப்பா அம்மாவும் சபையில் இருக்கிற அனுபவமுள்ள சகோதர சகோதரிகளும் சொல்வதைக் கேளுங்கள்.1 பேதுரு 5:5, 6-ஐ வாசியுங்கள்.

16. மனத்தாழ்மையாக இருப்பது முக்கியம் என்பதை சகோதரர் கிறிஸ்டோப்பின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?

16 மற்றவர்கள் கொடுத்த நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்ள மனத்தாழ்மை என்ற குணம் சகோதரர் கிறிஸ்டோப்புக்கு உதவியது. ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவர் தவறாமல் ஒரு ஜிம்முக்குப் போக ஆரம்பித்தார். அங்கே இருந்த இளைஞர்கள் தங்களுடைய ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்துகொள்ளும்படி அவரைக் கூப்பிட்டார்கள். கிறிஸ்டோப் இதைப் பற்றி ஒரு மூப்பரிடம் பேசினார். அதில் சேர்வதால் வரும் ஆபத்துகளைப் பற்றி யோசித்துப்பார்க்கும்படி அந்த மூப்பர் அவருக்கு ஆலோசனை கொடுத்தார். உதாரணத்துக்கு, போட்டி மனப்பான்மை வந்துவிடுவதற்கான ஆபத்து இருப்பதைப் பற்றி அந்த மூப்பர் அவரிடம் சொன்னார். ஆனாலும், அந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கிறிஸ்டோப் சேர்ந்தார். சீக்கிரத்திலேயே, அங்கிருந்த விளையாட்டுகள் முரட்டுத்தனமாகவும் ரொம்ப ஆபத்தானதாகவும் இருந்ததைப் புரிந்துகொண்டார். அதனால், மறுபடியும் மூப்பர்களிடம் பேசினார். அவர்கள் பைபிளிலிருந்து அவருக்கு ஆலோசனை கொடுத்தார்கள். “யெகோவா எனக்கு நல்ல ஆலோசகர்கள கொடுத்தார். அந்த ஆலோசனைய என்னால உடனடியா ஏத்துக்க முடியலங்கிறது உண்மைதான். இருந்தாலும் யெகோவா சொன்னபடி நான் செஞ்சேன்” என்று கிறிஸ்டோப் சொல்கிறார். நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு மனத்தாழ்மை இருக்கிறதா?

17, 18. (அ) இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்? (ஆ) உங்கள் தீர்மானங்களை நினைத்து பிற்பாடு வருத்தப்படாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.

17 “இளைஞனே, [அல்லது, இளம் பெண்ணே] இளமைக் காலத்தில் சந்தோஷமாக இரு. வாலிப வயதில் உன் இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கட்டும்” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 11:9) இளமைக் காலத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். அப்படிச் சந்தோஷமாக இருப்பதற்கு, ஆன்மீக இலக்குகளிலேயே கவனமாக இருக்க வேண்டும். திட்டங்கள் போடும்போதும், தீர்மானங்கள் எடுக்கும்போதும் யெகோவாவின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத்தான் இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொண்டீர்கள். இதை எவ்வளவு சீக்கிரம் நீங்கள் செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் யெகோவாவின் வழிநடத்துதலும் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். தன்னுடைய வார்த்தையில் அவர் கொடுத்திருக்கிற அருமையான ஆலோசனைகளை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். “உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை” என்ற அறிவுரையைக் கடைப்பிடியுங்கள்.—பிர. 12:1.

18 பிள்ளைகள் சீக்கிரத்தில் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள். சின்ன வயதில் தவறான இலக்குகள் வைத்ததையும், இலக்குகளே வைக்காமல் இருந்ததையும் நினைத்து நிறையப் பேர் பிற்பாடு வருத்தப்படுகிறார்கள். ஆனால், ஆன்மீக இலக்குகளிலேயே நீங்கள் கவனமாக இருந்தால், உங்களுடைய தீர்மானங்களை நினைத்து பிற்பாடு சந்தோஷப்படுவீர்கள். மீர்யானா என்ற சகோதரியின் அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. டீனேஜ் பருவத்தில், அவர் விளையாட்டில் கெட்டிக்காரியாக இருந்தார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்குக்கூட அவருக்கு அழைப்பு கிடைத்தது. ஆனால், அவர் முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுத்தார். 30 வருஷங்களுக்கும் மேல் முழுநேர ஊழியத்தைச் செய்துவருகிறார். இப்போது, தன்னுடைய கணவரோடு சேர்ந்து அவர் ஊழியம் செய்கிறார். பேர்புகழ், பணம், அந்தஸ்து, செல்வாக்கு ஆகியவற்றை அடைய ஆசைப்படுகிறவர்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைப்பதில்லை என்று அவர் சொல்கிறார். கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புவதும், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதும்தான் வாழ்க்கையில் மிகச் சிறந்த இலக்குகள் என்றும் அவர் சொல்கிறார்.

19. இளம் வயதில், ஆன்மீக இலக்குகளில் கவனமாக இருப்பது ஏன் நல்லது?

19 இளைஞர்களே, உங்களுக்கு எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலேயே நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். அதற்காக உங்களைப் பாராட்டுகிறோம். நீங்கள் ஆன்மீக இலக்குகளை வைக்கிறீர்கள். பிரசங்க வேலைக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் தருகிறீர்கள். மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு உங்கள் இலக்குகளை நீங்கள் மறந்துவிடுவதில்லை. உங்களுடைய கடின உழைப்பு நிச்சயம் வீண்போகாது. அன்பும் ஆதரவும் காட்டுவதற்கு சகோதர சகோதரிகள் நிறையப் பேர் உங்களுக்கு இருக்கிறார்கள். அதனால், ‘நீங்கள் எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடுங்கள். அப்போது, உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.’