Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான விடுதலை—அடைவது எப்படி?

உண்மையான விடுதலை—அடைவது எப்படி?

“மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்.”—யோவா. 8:36.

பாடல்கள்: 65, 52

1, 2. (அ) சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் என்ன செய்கிறார்கள்? (ஆ) அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன?

சம உரிமை! சுதந்திரம்!! இதைப் பற்றிய பேச்சுதான் உலகின் பல பகுதிகளில் இன்று பரவலாக இருக்கிறது. அநீதி... தப்பெண்ணம்... ஏழ்மை... இவற்றிலிருந்து விடுதலை வேண்டுமென்று சிலர் ஆசைப்படுகிறார்கள். இன்னும் சிலர், மனதில் தோன்றுவதையெல்லாம் பேச வேண்டும்... நினைப்பதையெல்லாம் செய்ய வேண்டும்... மனம்போன போக்கில் வாழ வேண்டும்... என்று ஆசைப்படுகிறார்கள். இப்படி, எல்லாருமே சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறார்கள்.

2 அதற்காக, போராட்டங்களை நடத்துகிறார்கள், ஏன், புரட்சியும் செய்கிறார்கள்! ஆனால், அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கிறதா? இல்லை! கஷ்டங்கள் இன்னும் அதிகமாகத்தான் செய்கிறது, சிலசமயங்களில், சாவில்கூட போய் முடிகிறது. பிரசங்கி 8:9 சொல்வது போல், ‘மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது!’ சாலொமோன் ராஜாவின் இந்த வார்த்தைகள் மறுக்க முடியாத உண்மை, இல்லையா?

3. உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

3 உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்க நாம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. சீஷராகிய யாக்கோபு இப்படிச் சொன்னார்: “விடுதலை தருகிற பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன் . . . சந்தோஷமாக இருக்கிறான்.” (யாக். 1:25) பரிபூரணமான சட்டம், யெகோவாவிடமிருந்து வருகிறது. சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆதாம் ஏவாளுக்கு யெகோவா உண்மையான சுதந்திரத்தைக் கொடுத்தார்; சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் தந்தார்.

மனிதர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்தபோது...

4. ஆதாம் ஏவாளுக்கு எப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தது? (ஆரம்பப் படம்)

4 ஆதியாகமப் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களைப் படிக்கும்போது, ஆதாம் ஏவாளுக்கு எப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தது என்பது நமக்குப் புரிகிறது. அவர்களுக்கு ஒரு குறையும் இருக்கவில்லை, எதைப் பார்த்தும் அவர்கள் பயப்படவில்லை, யாரும் அவர்களை அநியாயமாக நடத்தவும் இல்லை. உணவு, வேலை, நோய், மரணம் ஆகியவற்றை நினைத்து அவர்கள் கவலைப்படவில்லை. (ஆதி. 1:27-29; 2:8, 9, 15) ஆனால், அப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பற்றி மக்கள் இன்று கனவுதான் காண முடியும். அப்படியென்றால், ஆதாம் ஏவாளுக்கு இருந்த சுதந்திரத்துக்கு வரம்பே இல்லையென்று அர்த்தமா? இப்போது பார்க்கலாம்.

5. நிறையப் பேர் நினைப்பது போலில்லாமல், உண்மையான சுதந்திரத்துக்கு எது தேவை?

5 பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நினைத்ததையெல்லாம் செய்வதுதான் உண்மையான சுதந்திரம் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். “என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்கும், அதைச் செய்வதற்குமான திறன்தான்” சுதந்திரம் என்று த வேர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா சொல்கிறது. அதோடு, முறையற்ற, அநாவசியமான, அநியாயமான வரம்புகளை அரசாங்கம் விதிக்காமல் இருந்தால்தான் மக்களால் சுதந்திரமாக இருக்க முடியும் என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எல்லாருக்குமே சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றால், சில வரம்புகள் தேவை! ஆனால், அந்த வரம்புகள் முறையானவையா, அவசியமானவையா, நியாயமானவையா என்பதை முடிவு செய்யும் உரிமை யாருக்கு இருக்கிறது?

6. (அ) எல்லையில்லாத சுதந்திரம் யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று ஏன் சொல்லலாம்? (ஆ) மனிதர்களுடைய சுதந்திரம் எப்படிப்பட்டது, ஏன்?

6 எல்லையில்லாத சுதந்திரம் யெகோவாவுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைப்பது முக்கியம். ஏனென்றால், அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார்; அவர்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசர்; அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள். (1 தீ. 1:17; வெளி. 4:11) யெகோவாவுடைய ஸ்தானத்தை தாவீது ராஜா ரொம்ப அருமையாக விவரித்தார். (1 நாளாகமம் 29:11, 12-ஐ வாசியுங்கள்.) பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லா படைப்புகளுக்கும் வரம்புகள் இருக்கின்றன. அதைத்தான் வரம்புக்குட்பட்ட சுதந்திரம் என்று சொல்கிறோம். அந்த வரம்புகள் முறையானவையா, அவசியமானவையா, நியாயமானவையா என்பதை முடிவு செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது; இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். ஆரம்பத்திலிருந்தே, தன்னுடைய படைப்புகளுக்கு யெகோவா சில வரம்புகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

7. எவையெல்லாம் நமக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன?

7 ஆதாம் ஏவாளுக்கு நிறையச் சுதந்திரம் இருந்தாலும், அவர்களுக்கு சில வரம்புகளும் இருந்தன. அவற்றில் சில வரம்புகளுக்கு அவர்கள் இயல்பாகவே கட்டுப்பட்டுதான் நடந்தார்கள். உதாரணத்துக்கு, உயிரோடு இருப்பதற்கு அவர்கள் சுவாசிக்க வேண்டியிருந்தது, சாப்பிட வேண்டியிருந்தது, தூங்க வேண்டியிருந்தது. இதையெல்லாம் செய்ய வேண்டியிருந்ததால், அவர்களுக்குச் சுதந்திரம் இல்லையென்று சொல்ல முடியுமா? இல்லை. சொல்லப்போனால், இவையெல்லாம் அவர்களுக்குச் சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். (சங். 104:14, 15; பிர. 3:12, 13) சுத்தமான காற்றைச் சுவாசிப்பது... சுவையான உணவைச் சாப்பிடுவது... நன்றாகத் தூங்குவது... நமக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. இவையெல்லாம் நம்மைக் கட்டுப்படுத்துவதாக நாம் நினைப்பதில்லை. ஆதாம் ஏவாளும் அப்படி நினைக்கவில்லை.

8. ஆதாம் ஏவாளுக்குக் கடவுள் என்ன கட்டளை கொடுத்தார்?

8 ஆதாம் ஏவாளுக்கு யெகோவா ஒரு கட்டளை கொடுத்தார். அதாவது, பிள்ளைகளைப் பெற்று, பூமியை நிரப்பும்படியும், அதைப் பண்படுத்தும்படியும் சொன்னார். (ஆதி. 1:28) இந்தக் கட்டளையால் ஆதாம் ஏவாளுடைய சுதந்திரம் பறிபோனதா? இல்லவே இல்லை! முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்றி, தங்களுடைய பரிபூரணப் பிள்ளைகளோடு என்றென்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது; இதுதான் கடவுளுடைய விருப்பம்! (ஏசா. 45:18) ஆனால் இன்று, கல்யாணம் செய்துகொள்ளாமல் அல்லது பிள்ளைகளைப் பெற்றெடுக்காமல் இருக்க சிலர் விரும்புகிறார்கள்; அதற்காக, அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் என்று அர்த்தம் கிடையாது. கல்யாண வாழ்க்கையில் சில கஷ்டங்கள் வருமென்பது உண்மையென்றாலும், சிலர் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்; பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். (1 கொ. 7:36-38) ஏனென்றால், கல்யாண வாழ்க்கை தங்களுக்குச் சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். (சங். 127:3) ஆதாம் ஏவாள் மட்டும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர்களுடைய கல்யாண வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் ரொம்பச் சந்தோஷமாக இருந்திருக்கும், இல்லையா?

உண்மையான சுதந்திரம் எப்படிப் பறிபோனது?

9. ஆதியாகமம் 2:17-ல் இருக்கிற கடவுளுடைய கட்டளை முறையற்றது, அநாவசியமானது, அநியாயமானது என்று ஏன் சொல்ல முடியாது?

9 ஆதாம் ஏவாளுக்குக் கடவுள் இன்னொரு கட்டளை கொடுத்தார்; அதற்குக் கீழ்ப்படியவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதையும் தெளிவாகச் சொன்னார். “நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்று சொன்னார். (ஆதி. 2:17) அந்தக் கட்டளை முறையற்றதா, அநாவசியமானதா, அநியாயமானதா? ஆதாம் ஏவாளின் சுதந்திரத்தை அது பறித்துவிட்டதா? இல்லவே இல்லை. சொல்லப்போனால், கடவுளுடைய கட்டளை ரொம்ப ஞானமானது என்றும், அர்த்தம் பொதிந்தது என்றும் பைபிள் அறிஞர்கள் நிறையப் பேர் நினைக்கிறார்கள். இந்தக் கட்டளை ஒரு விஷயத்தைப் புரியவைப்பதாக அந்த அறிஞர்களில் ஒருவர் சொன்னார். அதாவது, “மனிதர்களுக்கு . . . எது நல்லதென்று கடவுளுக்குத்தான் தெரியும் . . .  எது நல்லதல்ல என்பதும் அவருக்குத்தான் தெரியும். ‘நல்லதை’ அனுபவிக்க வேண்டுமென்றால், மனிதர்கள் கடவுளை நம்ப வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் கீழ்ப்படியவில்லை என்றால், எது நல்லது . . .  எது நல்லதல்ல என்று அவர்களாகவே முடிவெடுக்க வேண்டியிருக்கும்.” ஆனால் அப்படி முடிவெடுப்பது, மனிதர்களுக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டம்!

ஆதாம் ஏவாள் தேர்ந்தெடுத்த விஷயம், அழிவைத்தான் கொண்டுவந்திருக்கிறது (பாராக்கள் 9-12)

10. சுயமாகத் தீர்மானிக்கும் உரிமைக்கும், நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் உரிமைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று ஏன் சொல்லலாம்?

10 நினைத்ததையெல்லாம் செய்ய ஆதாமுக்கு கடவுள் சுதந்திரம் தரவில்லை என்று சிலர் சொல்லலாம். அப்படிச் சொல்கிறவர்கள், சுயமாகத் தீர்மானிக்கும் உரிமைக்கும், அதாவது தங்கள் வாழ்க்கையில் என்ன செய்வதென்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும், நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் உரிமைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவதா வேண்டாமா என்று தீர்மானிக்கும் சுதந்திரம் ஆதாம் ஏவாளுக்கு இருந்தது. ஆனால், நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை; அது யெகோவாவுக்குத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தைத்தான், ‘நன்மை தீமை அறிவதற்கான மரம்’ அடையாளப்படுத்தியது. (ஆதி. 2:9) நம்முடைய தீர்மானங்களால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று எப்போதுமே நம்மால் சரியாகச் சொல்ல முடியுமா? முடியாது. எப்போதுமே நல்லதுதான் நடக்கும் என்றும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அதுவும் முடியாது. அதனால்தான், மக்கள் நல்ல எண்ணத்தோடு சில தீர்மானங்கள் எடுத்தாலும், பிற்பாடு கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறார்கள். (நீதி. 14:12) இதிலிருந்து மனிதர்களுக்கு வரம்புகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது, இல்லையா? மரத்தின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டளையை ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்ததன் மூலம், உண்மையான சுதந்திரம் வேண்டுமென்றால், தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற பாடத்தை யெகோவா கற்றுக்கொடுத்தார். ஆனால், ஆதாம் ஏவாள் என்ன முடிவெடுத்தார்கள்?

11, 12. ஆதாம் ஏவாளின் தீர்மானம் ஏன் அழிவில் போய் முடிந்தது? உதாரணம் கொடுங்கள்.

11 யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போவதென்று ஆதாமும் ஏவாளும் முடிவெடுத்தது, வருத்தமான ஒரு விஷயம். “உங்கள் கண்கள் திறக்கப்படும் . . .  நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள்” என்று சாத்தான் உறுதியளித்தான்; அவனுடைய பேச்சைக் கேட்பதென்று ஏவாள் தீர்மானித்தாள்! (ஆதி. 3:5) அப்படிச் செய்ததால், சாத்தான் சொன்னது போல், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறையச் சுதந்திரம் கிடைத்ததா? இல்லை. சொல்லப்போனால், யெகோவாவின் கட்டளையை மீறுவது, அழிவில்தான் கொண்டுபோய்விடும் என்பதை அவர்கள் அனுபவத்தில் பார்த்தார்கள். (ஆதி. 3:16-19) ஏனென்றால், நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் சுதந்திரத்தை மனிதர்களுக்கு யெகோவா கொடுக்கவில்லை.நீதிமொழிகள் 20:24-ஐயும், எரேமியா 10:23-ஐயும் வாசியுங்கள்.

12 விமானம் ஓட்டுகிற ஒரு விமானியைப் பற்றி யோசித்துப்பாருங்கள். போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு விமானத்தைக் கொண்டுபோக வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட விமானப் பாதையில் அவர் போக வேண்டும். அதற்கு, விமானம் ஓட்டுவதற்கான கருவிகளை அவர் பயன்படுத்த வேண்டும். அதோடு, கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்களோடு தொடர்புகொள்ளவும் வேண்டும். ஆனால், வழிநடத்துதலைப் பின்பற்றாமல், மனம்போன போக்கில் விமானத்தை ஓட்டினால் என்ன ஆகும்? விபத்தில்தான் போய் முடியும்! ஆதாமும் ஏவாளும் அந்த விமானியைப் போல மனம்போன போக்கில் போனார்கள், கடவுளுடைய வழிநடத்துதலை ஒதுக்கித்தள்ளினார்கள். விளைவு? அழிவுதான்! அவர்களுடைய தீர்மானத்தால், அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகள் எல்லாருக்கும் பாவமும் மரணமும் வந்தது. (ரோ. 5:12) நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் உரிமையைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிறையச் சுதந்திரம் கிடைத்ததா? இல்லை. யெகோவா கொடுத்த உண்மையான சுதந்திரத்தை இழந்ததுதான் மிச்சம்!

உண்மையான சுதந்திரம்—எப்படிப் பெற்றுக்கொள்வது?

13, 14. உண்மையான சுதந்திரத்தை நாம் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?

13 சுதந்திரத்துக்கு வரம்புகள் இல்லையென்றால் நன்றாக இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையா? சுதந்திரத்தால் நிறைய நன்மைகள் கிடைப்பது உண்மைதான்; அதற்காக, எதற்குமே வரம்புகள் இல்லையென்றால், இந்த உலகம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்! த வேர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா இப்படிச் சொல்கிறது: ‘ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயத்தில் இருக்கிற சட்டங்கள் சிக்கலானவை. ஏனென்றால், அந்தச் சட்டங்கள் மக்களைப் பாதுகாக்கவும் வேண்டும், அதேசமயத்தில் மக்களுடைய சுதந்திரத்துக்கு வரம்புகளை ஏற்படுத்தவும் வேண்டும்.’ இதைச் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அதனால்தான், இவ்வளவு சட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ளவும், நடைமுறைப்படுத்தவும், இவ்வளவு வக்கீல்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள்.

14 உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார். “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று அவர் சொன்னார். (யோவா. 8:31, 32) நமக்கு உண்மையான சுதந்திரம் வேண்டுமென்றால், இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, இயேசு கற்றுக்கொடுத்த சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னொன்று, நாம் அவருடைய சீஷர்களாக ஆகவேண்டும். இதைச் செய்யும்போது, நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும், அதாவது விடுதலை கிடைக்கும். ஆனால், எதிலிருந்து விடுதலை? “பாவம் செய்கிற ஒவ்வொருவனும் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறான்” என்று இயேசு சொன்னார். அதோடு, “மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்” என்றும் சொன்னார்.—யோவா. 8:34, 36.

15. இயேசு வாக்குக் கொடுத்த சுதந்திரம் நம்மை எப்படி ‘உண்மையிலேயே விடுதலையாக்குகிறது’?

15 இன்று மக்கள் ஆசைப்படுகிற சுதந்திரத்தைவிட, இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு வாக்குக் கொடுத்த சுதந்திரம் பல மடங்கு சிறந்தது. “மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள்” என்று இயேசு சொன்னபோது, பாவத்துக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுதலையாவதைப் பற்றிச் சொன்னார். பாவத்துக்கு அடிமையாக இருப்பது, மனிதர்கள் இதுவரை அனுபவித்திருக்கும் எல்லா அடிமைத்தனத்தையும்விட ரொம்பக் கொடூரமானது! நாம் எந்த விதத்தில் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறோம்? கெட்ட விஷயங்களைச் செய்ய பாவம் நம்மைத் தூண்டுகிறது. நமக்குச் சரியென்று தெரிந்த ஒரு விஷயத்தைச் செய்வதற்கு அல்லது நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்வதற்கு, பாவம் ஒரு தடையாக இருக்கிறது. அதனால், வேதனையும் வலியும் துன்பமும் கடைசியில் மரணமும் நமக்கு ஏற்படுகிறது. (ரோ. 6:23) பாவத்துக்கு அடிமையாக இருப்பது எவ்வளவு வேதனையானது என்பதை அப்போஸ்தலன் பவுல் உணர்ந்தார். (ரோமர் 7:21-25-ஐ வாசியுங்கள்.) பாவம் முழுமையாக நீக்கப்படும்போதுதான், ஆதாம் ஏவாள் ஆரம்பத்தில் அனுபவித்த அந்த உண்மையான சுதந்திரத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.

16. நாம் எப்படி உண்மையிலேயே விடுதலையாகலாம்?

16 “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் . . .” என்று இயேசு சொன்னதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அதாவது, அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக, நம்மையே நாம் துறக்க வேண்டும்; தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு ஏற்படுத்தியிருக்கிற வரம்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். (மத். 16:24) மீட்புப் பலியால் கிடைக்கும் எல்லா பலன்களையும் நாம் எதிர்காலத்தில் அனுபவிக்கும்போது, இயேசு வாக்குக் கொடுத்த உண்மையான சுதந்திரம் நமக்குக் கிடைக்கும்.

17. (அ) உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் நாம் எப்படி அனுபவிக்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்க வேண்டுமென்றால், இயேசுவின் சீஷர்களாகிய நாம், அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதையெல்லாம் செய்தால், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் கடைசியில் நமக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். (ரோமர் 8:1, 2, 20, 21-ஐ வாசியுங்கள்.) அடுத்த கட்டுரையில், இப்போது நமக்கு இருக்கிற சுதந்திரத்தை நாம் எப்படி ஞானமாகப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். அப்போது, உண்மையான சுதந்திரத்தைத் தரும் நம் கடவுளாகிய யெகோவாவை நம்மால் என்றென்றும் மகிமைப்படுத்த முடியும்.