Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

சங்கீதம் 144:12-15, கடவுளுடைய மக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறதா அல்லது 11-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற பொல்லாத மற்ற தேசத்தாரைப் பற்றிக் குறிப்பிடுகிறதா?

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன. இந்த வசனத்தின் சரியான கருத்தைப் புரிந்துகொள்வதற்கு பின்வரும் குறிப்புகள் நமக்கு உதவியாக இருக்கும்.

  1. இந்தச் சங்கீதத்தில் இருக்கிற மற்ற வசனங்களைக் கவனியுங்கள். பொல்லாதவர்களின் பிடியிலிருந்து தங்களை ‘காப்பாற்றும்படி’ நீதிமான்கள் கேட்பதாக 11-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 12-ம் வசனம், “அப்போது” என்ற வார்த்தையோடு தொடங்குகிறது. இதிலிருந்து, 12-14 வரையிலான வசனங்கள் நீதிமான்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கருத்துதான் 15-ம் வசனத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வசனத்தில், “சந்தோஷமானவர்கள்” என்ற வார்த்தையை இரண்டு தடவை பார்க்க முடிகிறது. அந்த இரண்டு தடவையுமே அது நீதிமான்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது, “யெகோவாவைக் கடவுளாக வணங்குகிற” மக்களை பற்றிக் குறிப்பிடுகிறது.

  2. இந்தப் புரிந்துகொள்ளுதல், கடவுளுக்கு உண்மையாக இருக்கிற மக்களுக்குக் கிடைக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கிற மற்ற வசனங்களோடு ஒத்துப்போகிறது. எதிரிகளிடமிருந்து இஸ்ரவேல் தேசத்தை விடுதலை செய்த பிறகு, கடவுள் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவார் என்றும், செழிப்பாக வாழ வைப்பார் என்றும் தாவீது உறுதியாக நம்பினார். இந்தச் சங்கீதத்தில் அவருடைய நம்பிக்கை பளிச்சென்று தெரிகிறது. (லேவி. 26:9, 10; உபா. 7:13; சங். 128:1-6) உதாரணத்துக்கு, “உங்களுடைய குழந்தைகுட்டிகளும் வயல்களின் விளைச்சலும் ஆடுமாடுகளின் குட்டிகளும் கன்றுகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று உபாகமம் 28:4-ல் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீதின் மகனான சாலொமோனின் ஆட்சியில், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு சமாதானத்தையும் செழிப்பையும் அந்தத் தேசம் அனுபவித்தது. சாலொமோனின் ஆட்சியில் நிலவிய சூழ்நிலை, மேசியாவின் ஆட்சியில் வரப்போகிற சூழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டியது.—1 ரா. 4:20, 21; சங். 72:1-20.

இதையெல்லாம் வைத்துதான், சங்கீதம் 144:12-15-ல் இருக்கிற வசனங்கள் கடவுளுடைய மக்களைப் பற்றிப் பேசுகின்றன என்ற முடிவுக்கு வருகிறோம். பொல்லாதவர்களை அழித்துவிட்டு, நீதிமான்களைச் சமாதானமாகவும் செழிப்பாகவும் கடவுள் வாழ வைப்பார் என்ற யெகோவாவின் ஊழியர்களுடைய நம்பிக்கையை, இந்தப் புரிந்துகொள்ளுதல் தெளிவாகக் காட்டுகிறது.—சங். 37:10, 11.